கண்ணம்மா இறந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 7,465 
 

காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்!

மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா அங்கு புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக் கொண்டிருந்தார்.

ஊர் விட்டு ஊர் வந்து தற்கொலைக்கு முயன்றவளை காப்பாற்றி காவலரிடம் ஒப்படைக்க, அவர்கள் இங்கு கொண்டுவந்து விட்டிருந்தார்கள். காவலர் எவ்வளவோ கேட்டும் வாய் திறக்காதவள் இப்போதும் அதே வெறித்த பார்வையோடு தான் அமர்ந்திருந்தாள்.

“யாரையும் நம்பி வந்து ஏமாந்து தற்கொலைக்கு முயன்றிருப்பாள் மேடம்!” காவலர் இப்படித்தான் கூறிச் சென்றிருந்தார்கள்.

“இங்க பாரம்மா, என்னை உன் அம்மா என்றே நினைத்துக் கொள்!” பரிவோடு புன்னகைத்தபடி கதைக்க ஆரம்பித்தார் கௌசல்யா.

“சொல்லு, உன் பெயரென்ன? சொந்த ஊர் எது?” அன்பும் கனிவுமாகக் கதைப்பவர் எதிரில் சில நிமிடங்கள் இருந்தாலே போதும்; கரும்புகைமூட்டம் தங்கிய உள்ளம் தெளிந்து, சீராகச் சுவாசிக்கத் தொடங்கிவிடும். எதிரில் இருப்பவர் வசியம் செய்யப்பட்டவர் போல் அவர் வழிக்கு வந்து விடுவார்; இப்போதும் அதுவே நடந்தது.

அழுதழுது தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த இவ்விளம்பெண், மேசையில் இருந்த கைபேசி கிணுகிணுக்க, பேச்சை நிறுத்திவிட்டுக் கெளசல்யாவைப் பார்த்தாள்.

“இந்தா இந்த ஜூசை குடி!” அவள் கையில் கிளாசை கொடுத்துவிட்டு அழைப்பை ஏற்றவர் முகத்தில் கணிசமான பரபரப்பு.

“கண்ணம்மா இறந்து விட்டார்!”

படீரென்று அவர் செவிகளைத் தழுவிய சொற்களைக் கிரகிக்கக் கடினப்பட்டு நின்றது அவரிதயம்.

“என்…ன?” சட்டென்று எழுந்தவர், தள்ளாடிய உடலை ஸ்திரப்படுத்த, இடக்கையை மேசையில் ஊன்றினார்; அப்போதும், கிடுகிடுவென்று நடுங்கியது உடல்.

“இப்போ கொஞ்ச முதல் தான்மா…எப்போதுமே அமர்ந்திருப்பதுபோல கண்களை மூடிக்கொண்டு அந்த சீமெந்துக் கட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தார். தேத்தண்ணி குடுக்கச் சென்ற பிள்ளைதான் கண்டுவிட்டுச் சத்தம் போடப் போய்ப் பார்த்தால்…” சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி சொல்லிக்கொண்டே சென்றார்.

இவர் கரத்திலிருந்து கைபேசி நழுவி விழ, தொப்பென்று இருக்கையில் சரிந்தார் கௌசல்யா.

“ஐயோ அம்மா! என்னம்மா?” அந்த இளம்பெண் தன் அனைத்துக் கவலைகளும் விலகிச் செல்ல, பதற்றத்தோடு அலறியபடி நெருங்கிப் பிடித்துக்கொள்ள, அவளின் அலறலில், வெளியில் நின்ற காப்பக உதவியாளர் பெண்களில் ஒருத்தி ஓடி வந்தாள்.

கண்ணம்மாவின் அத்தியாயம் முடிந்திருந்தது.

இருபது ஆண்டுகள் சிறை வாசம்; கொலைகுற்றம்; அதுவும் இரட்டைக் கொலை!

அப்போதே அவரளவில் இறந்துவிட்டார்; இன்று, உடலில் தங்கியிருந்த ஆன்மாவுக்குச் சுதந்திரநாள்; உடலுக்கும்.

“என்ன பெண்ணிவள்? கட்டின புருஷனையும் தவமிருந்து பெற்ற மகனையும் கொல்வாளா? இவளெல்லாம் பெண்ணினத்துக்கே இழுக்கு! ச்சே!

பிள்ளை இல்லையே என்று எத்தனையோ பேர் ஏங்கிக் கிடக்க, பெற்று இருபது வருடங்கள் சீராட்டிப்பாராட்டி அருமை பெருமையாக வளர்த்த மகனையும் கட்டின புருஷனையும் எப்படிக் கொல்ல மனம் வந்திச்சு?

பெரும் பாவி! கொடிய அரக்கி!

நல்ல காலம் இவள் மகள் கௌசல்யா வெளிநாட்டில் இருந்ததால் தப்பினாள்; இல்லையோ, அவளையும் கொன்றிருப்பாள்!”

இப்படி, விதம் விதமான வசைகளை மௌனப்போர்வையோடு வாங்கியிருந்தவர்.

“அம்மா!” அரற்றினார் கௌசல்யா.

சற்றுமுன் தான் காரியங்கள் அனைத்தும் முடிந்திருக்க, வீடு வந்தவர் தலைக்குக் குளித்திருந்தார். உடல் களைப்பைக் களைந்திருந்தது. மனமோ? வாடி வதங்கித் துவண்டு போகிறதே!

“நீங்க வாய்திறந்து உண்மையை உரக்கச் சொல்லியிருக்க, இந்த சிறைவாசம் தேவைப்பட்டிருக்காதும்மா! உங்களுக்கு நீங்களே கொடுத்த தண்டனையும் அநாவசியம் மா!” மீண்டும் மீண்டும் இதையே முணுமுணுத்தார் கௌசல்யா.

பார்வையால் பேசும் தாயிடம் கெஞ்சாத நாட்கள் இல்லை. அவரோ மௌனம் உடைக்கச் சம்மதிக்கவே இல்லை.

அன்று, வீட்டில் நடந்த கோரம் அறிந்து பறந்து வந்திருந்தார் கௌசல்யா.

அவர்களின் மாளிகை வீடு, அதன் வசதி வாய்ப்புகள் போலவே அவர்கள் வாழ்வும் மிகவும் ஜொலிப்பானது. அதில் இப்படி ஒரு விபரீதமா? அமைதியான ஆசிரியை கண்ணம்மா; அவருள் இப்படியொரு குரூரமா? நம்ப முடியவில்லை மகளால்.

செய்த குற்றத்தை மறுக்காது ஏற்றுச் சிறை சென்றுவிட்டார் அவர்.

சிலவருடங்கள் சென்ற பின்னொரு நாள் வாய் திறந்தார் கண்ணம்மா; மகளிடம், மகள் கையிலோ ஒரு மாதக் குழந்தையாக யுவன்.

அவனையே பார்த்திருந்த கண்ணம்மா வார்த்தைகளை நிறுத்தி நிதானித்து வெளியே விட்டார்.

தாழ்ந்து ஒலித்த குரலில் நெருப்புக் கொப்பளித்தது. விழிகளிலோ ஒரு ரௌத்ரம்.

“சுமந்து பெற்றவனை பாலோடு சேர்த்து மனிதமும் சொல்லி வளர். இல்லையோ, நீயும் ஒருநாளைக்கு இங்கு வரவேண்டி வரும்.” என்று ஆரம்பிக்க, அதிர்ந்து போன கௌசல்யா மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவர், சற்றே தள்ளி நின்ற கணவரைப் பார்த்தார்.

“ஊரே சொல்வது போல எனக்குப் பைத்தியம் இல்லை மகளே!” விரக்திச் சிரிப்போடு சொன்னார்.

“அம்மா! நான்…நான் அப்படியெல்லாம் நினைக்க இல்லையம்மா” கண்ணீரோடு தழுதழுத்தார் கௌசல்யா.

“நினைத்தாலும் பிழையில்லை; பெற்ற மகனை, பாராட்டிச் சீராட்டி, அவன் கண்ணால் கேட்டதை வாங்கிக் குவித்து எல்லாவற்றிலும் தரமானதைக் கொடுத்து வளர்த்து விட்டால்…விட்டால்…” ஆவேசமாகச் சொன்னவர் நெஞ்சு அடைத்தது; நிறுத்தினார்.

“அம்மா…!” அதிர்வும் நடுக்கமுமாக வார்த்தை விழுந்தது கெளசல்யாவிடம் இருந்து.

அந்தக் கொலைகளுக்குப் பிறகு முதல் முறையாக சகோதரன் பற்றிய பேச்சு! அனைத்துப் புலன்களும் கூர்மையானது அவருக்கு.

“எங்க அம்மாவின் பிரியாணி போல யாராலுமே செய்யவே முடியாது!” சப்புக்கொட்டிச் சாப்பிடும் சகோதரன் சொல்வது அவரின் காதுகளில் ஒலித்தது.

“பாவிப்பெண்! மாபாதகி! கட்டின புருசனும் பெற்ற மகனும் அம்மாவின் சமையல் என்று ஆசையாகச் சாப்பிட்டதில் நஞ்சு கலப்பாளா!” சுற்றமும் சொந்தமும் தூற்றியதும் கூடவே கேட்டது.

தாயின் குரல், சிந்தனையை அறுத்து அவரை நோக்க வைத்தது.

“காவ்யா …காவ்யா …பத்தே பத்து வயதுடி…அவளைப்போய்… எப்படி அவனால் முடிஞ்சுது?”

அம்மா!” சட்டென்று புரியவில்லை கௌசல்யாவுக்கு. கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது அது. ‘செல்லக்குட்டி காவ்யா!’ இறந்துவிட்டாள்…கசக்கி எறியப்பட்டாள் என்பதையே நம்ப முடியவில்லையே!

“ஐயோ என் மகளை இப்படிக் கசக்கிக் கொன்ற பாதகன் யாரோ?” என்று அவள் அம்மா கதறித் துடித்து மயங்க, “ஆன்ட்டி!” என்று பதற்றத்தோடு ஓடிப் போய்ப் பிடித்தவன் என் வயிற்றில் பிறந்தவன்டி. அந்தச் சின்னக்குழந்தையை சின்னாபின்னமாக்கிக் கொன்றுவிட்டு…எதுவுமே நடவாத பாவனையில்…” மீண்டும் பேச்சு நின்றுவிட்டது.

கிரகித்துக்கொண்ட கௌசல்யாவுக்கோ, விழிகள் தெறித்துவிடுமளவுக்கு விரிய, உடலிலிருந்த சக்தி அத்தனையும் வடிந்து போயிற்று.

“தன் மகன் தான் அத்தனைக்கும் காரணம் என்று அறிந்ததும் உன் அப்பா என்ன செய்தான்? பெற்ற மகனுக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்று வெளிநாடு அனுப்ப முயன்றான். இன்னும் எத்தனை காவ்யாக்களின் உயிரை எடுப்பானோ! பெற்ற வயிறு காந்தியதில் கதையை முடித்துவிட்டேன்.” என்று சொல்கையில், சாட்சாத் காளியம்மனே கண்ணம்மாவின் உருவில் தெரிந்தார் இவருக்கு.

“அவனைச் சுமந்து பெற்றது, தறிகெட்டவனாக வளர விட்டது என்று அத்தனை குற்றமும் என்னுடையதுதானே? அதுக்குத்தான் இந்தத் தண்டனை, அணுவணுவான சித்தரவதை!” சிறைவாசத்தைப் பிராயச்சித்தமாக ஏற்றிருந்தார் அத்தாய்.

அதன்பின் இத்தனை வருடங்களில் அவர் கதைத்த வார்த்தைகளை எண்ணிவிடலாம்.

சூடாக உருண்ட கண்ணீரை பரிவோடு துடைத்துவிட்டான் யுவன்.

“ம்மா! பாட்டி இன்னும் இன்னும் இருந்து கஷ்டப்படாமல்…இது இது…தான் சரிம்மா…நீங்க எழுந்து வாங்க.” வற்புறுத்தி எழச் செய்தான் அவரின் செல்ல மகன் யுவன். மனிதத்தை மறக்காது ஊட்டி வளர்த்திருந்தார் கௌசல்யா.

நீதிகள் தொலைந்ததால்
நியாயங்கள் சிதறிப்போக
மனிதங்கள் மரணித்துக்கொண்டிருக்கிறதே
மாற்றம் வேண்டாமா?
ஆக்கத் தெரிந்தவள்
அழிக்கத் துணிந்தால்
அடங்காதோ அத்துமீறிய ஆட்டங்கள்?!

(கவிதை: எழுத்தாளர் நிதனிபிரபு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *