(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும், சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு, அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்டதேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் கம்பை வைத்துக் கொண்டு கூடத் திரிந்தான்.
யார் வீட்டிலாவது களவு போனால், அவனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கே இருப்பான். சின்ன பூதக் கண்ணாடி யுடன், தரையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான். தடயம் தேடுகிறானாம்.
இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு கைரேகை கண்டுபிடிக்கும் ஆசை வந்தது. அதனால் வீட்டில் இருந்த பவுடர் டப்பாவெல்லாம் காலி ஆயிற்று.
பள்ளி இறுதி வகுப்பின் போது ஒரு தெருநாயை வளர்த்து, அதன் கழுத்தின் அவனது பழைய பெல்டைக் கட்டி இழுத்துக் கொண்டு, மோப்ப வேட்டைக்கெல்லாம் போயிருக்கிறான்.
“டே போலீஸ் பாண்டி வராண்டா “ என்று பகடி பேசுவார்கள் அவனது நண்பர்கள்.
எப்படியாவது போலீஸ்ல சேர்ந்து சிஐடி ஆபிசர் ஆவணும்டா.. ” என்று அவன் நண்பர்களோடு கதைத்தபோது, அவர்கள் சிரித்தார்கள்.
“மொதல்ல பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ற வழியப் பாரு.. அப்பால போலிஸ் ஆவலாம்” என்று அவன் தந்தையும் முட்டுக்கட்டை போட்டார்.
பள்ளி படிப்பு முடிக்கும் முன்னரே தந்தை இறந்து போனதும், தாய் ஊரோடு போய் சேர்ந்ததும், அவன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. மனதில் அடித்தளத்தில் நீறு பூத்த நெருப்பாய் இருந்த அவனது கனவைக் கிளறிக் கனலாக்கியவன் பிச்சை. அவனோடு ஒன்றாகப் படித்தவன் பிச்சை. அவன் தந்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். அதனால் அவன் பள்ளிப் படிப்போடு, அந்தப் பத்திரிக்கையில் சேர்ந்து விட்டான்.
பிச்சை பெரிய படைப்பாளி இல்லை. கொஞ்சம் சுத்தமாகத் தமிழ் பேசத் தெரிந்தவன். ஆனால் அந்தப் பத்திரிக்கையில் அவன் எழுத்து வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் பிழை திருத்தல் வேலைதான். ‘பெரிய எழுத்தாளருங்கராங்கறாங்க! ‘ல’ வுக்கெல்லாம் ‘ள’ போட்டுத் தொலைக்கிறான். பலப்பல பெண்களுடன் எழுத வேண்டியதை, பளப்பள பெண்களுடன்னு எழுதினா எப்படி அர்த்தம் மாறுது பாரு! சொல்ல முடியாது. அகாடமி விருது வாங்கிய ஆளாம். மண் வாசனையோட எழுதறானாம். அவனைப் பொதைச்சு, மண் வாசனையை காட்டினாத்தான் நிறுத்துவான்.”
பிச்சைக்கு தமிழின் மேல் வெறி. அதை யாரேனும் குலைத்தால் வரும் கொலை வெறி! இப்பல்லாம் துப்பறியும் வேலையை பத்திரிக்கைங்களே செய்யுதுங்க.. புலனாய்வுப் பத்திரிக்கைன்னு கேள்விப்பட்டிருப்பியே.. நக்கீரன், போலீஸ் செய்தி, ஜூ வி இதமாதிரி.. எங்க பத்திரிக்கையிலும் ஒரு துணைப் பத்திரிக்கையா புலனாய்வுப் பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாங்க. சேர்றியா..? ‘ கையெழுத்து அழகாக, குண்டு குண்டாக இருப்பதால், ஒரு சினிமாகதாசிரியரிடம் உதவியாளனாக இருந்து கொண்டிருக்கிறான் அவன். மூணு வேளை சாப்பாடு, பேட்டா, தங்குமிடம் என்று ஏகத்துக்கு வசதிகள். கி டைக்கும் சொற்ப ஊதியத்தை, ஊருக்கு அம்மா பெயருக்கு அனுப்பி விடுகிறான். அதைத் தொலைத்து விட்டு, இந்த வேலையில் நுழையலாமா? இது நமக்கு ஒத்து வருமா? முடிவில் ஒரு மாதம் முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தான். கதாசிரியரிடம் ஊருக்குப் போவதாகவும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பொய் சொல்லிவிட்டு பிச்சையைத் தேடிப், பத்திரிக்கை ஆபிஸுக்குப் போனான்.
பிச்சை கண்ணாடி மேசையின் மீது அச்சடித்த காகிதங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான். வா அன்பு “ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றான். அவன் என்று இதுவரை அழைக்கப்பட்ட அன்பு என்கிற அன்பரசன் உட்கார்ந்தான்.
“இன்னா தீர்மானிச்சுட்டியா.. சேர்ந்துக்கறயா? “ என்றான் பிச்சை. அன்பு லேசாக தலையை ஆட்டினான். இரு! எடிட்டர் இருக்கறாரான்னு பாக்கறேன்.. “ என்று வெளியேறினான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான். “ இருக்காரு! வெவரம் சொன்னேன். கூப்பிடறேன்னாரு என்னா சாப்டற காபியா டீயா?” தேனீர் குடித்து அரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. இன்னும் எடிட்டர் கூப்பிட்டபாடில்லை.
இன்னேரம் சினிமாக் கம்பெனியாக இருந்தால் ஐந்து பக்கம் வசனம் எழுதியிருக்கலாம். “ அன்பு! சார் கூப்பிடறாரு “ என்ற பிச்சையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. “ ரைட் சைட்ல மூணாவது கேபின்.. தட்டிட்டு உள்ளே போ? “அன்பு குழப்பமாக அவனைப் பார்த்தான். ‘ நான் என்ன ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோவா உட்கார்ந்திருந்தேன்.. தட்டிட்டு உள்ளே போ என்கிறானே? ‘ மூணாவது கதவு தேக்குமர ப்ளைவுட்டால் ஆனது. சராசரி உயரத்தில் ஒரு சதுரக் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அவனையறியாமல் அன்பின் கண்கள் அந்தக் கண்ணாடி சதுரத்தின் வழியாக நோக்கின. உள்ளே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பேசும்போது அவர் செய்யும் சேஷ்டைகளிலிருந்து, அவர் தன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ பேசிக் கொண்டிருக்கவேண்டும். அவர் தொலைபேசியை வைக்கும்வரை காத்திருந்தான்.
“என்னா இங்கேயே நிந்துக்கிட்டிருக்கே.. அவர் அப்படித்தான் போனை எடுத்தா வெக்க மாட்டாரு.. நீ தட்டுன்னேன் இல்ல “ என்று பிச்சை பின்னாலிருந்து குரல் கொடுத்தான். அவனே எட்டி கதவை இரண்டு முறை தட்டினான். பேசிக்கொண்டிருந்த நபர் நிமிர்ந்து பார்த்தார். ‘வா ‘ என்பதுபோல் சைகை காட்டினார். பிச்சையைத் திரும்பிப் பார்த்தான் அன்பு. ‘போ போ என்று வேகமாக தலையாட்டினான் பிச்சை.
அன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள குடியிருப்புகளின் முன்னால் காத்திருந்தான். அவனுக்கு ஐம்பது ரூபாயும் பணிக்கான விவரங்களும் கொடுக்கப் பட்டிருந்தன. பணி கேட்பதற்கு எளிமையாகத்தான் இருந்தது. அந்தப் பத்திரிக்கையின் எடிட்டர் அவினாஷின் காதலி அனிதா இருக்கும் வீடு எதிரில் இருந்தது. பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. அனிதா தனியாகத்தான் இருக்கிறாள். அனிதாவுக்கு இருபத்தி இரண்டு வயது. எடிட்டரின் வயதில் சரிபாதி.. அவினாஷுக்கு அவள் மேல் சந்தேகம். தான் இல்லாத வேளைகளில், அவளுக்கு வேறு ஒரு ஆடவனோடு உறவு இருப்பதாக. அன்புக்கு கொடுக்கப்பட்ட பணி, ஒரு வாரம் அவளைக் கண்காணிப்பதுதான். தினமும் மாலை ஏழு மணிக்கு அவன் வேலையை முடித்துக் கொண்டு பத்திரிக்கை ஆபிசுக்கு வந்து, அவினாஷின் செல்பேசிக்கு விவரங்களைத் தரவேண்டும். மறுநாள் செலவுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு வாரம் அவன் தரும் ரிப்போர்ட்டைப் பார்த்து, அவனுக்கு வேலை உறுதி செய்யப்படும்.
முதல் நாள் கொஞ்சம் பொழுது போவது கடினமாக இருந்தது. சினிமாகம்பெனியில் பேச ஆட்களுக்குப் பஞ்சமில்லை. இங்கே வெயிலில், டீக்கடையோரமோ அல்லது மரத்தடியிலோ, நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, ஒரே வீட்டை வெறித்துப் பார்ப்பது, கடினமாக இருந்தது. ஏழு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்வுதான். மாற்றம் அனிதாவின் உடைகளில் மட்டுமே இருந்தது. அனிதா அழகாக இருந்தாள். ஒரு நாள் புடவையிலும், ஒரு நாள் சுடிதாரிலும், ஒரு நாள் ஜீன்ஸ் பேண்ட் சட்டையிலும் அசத்தினாள். அதே போல மாற்றமில்லாமல் நிகழ்ந்தது கட்டம்போட்ட சட்டையும், கார்டுராய் பேண்டும் தலையில் தொப்பியும், தாடியுமாக ஒருவன் வீட்டினுள் போவதும், பின் மாலை ஆறுமணிக்கு வெளியே வருவதும்தான்.
ரிப்போர்ட்டைப் படித்த அவினாஷ் சிரித்துக் கொண்டான். தன்னுடைய மாறுவேடம் தத்ரூபமாக இருப்பதும், அன்பு அதைக் கண்டுபிடிக்காததும், அவனுக்குத் திருப்தியை அளித்தது. அனிதாவை சந்திக்க செல்லும்போதெல்லாம் மாறுவேடத்தில்தான் அவன் சென்று கொண்டிருந்தான். பிரபல பத்திரிக்கையின் எடிட்டர், ஏற்கனவே திருமணமானவர், அனிதா என்றொரு இளம்பெண்ணை, அதுவும் தன்னுடைய வயதில் பாதி வயது இருக்கும் ஒருத்தியை காதலியாக வைத்திருப்பது, போட்டி பத்திரிக்கைகளுக்கு அவலாகிவிடும் என்ற உண்மை அவருக்குத் தெரிந்தே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படியே கழிந்து கொண்டிருந்தது. இது வெற்றியடைந்திருப்பது அவினாஷுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அடுத்த வாரத்தில் அன்பு அந்தப் பத்திரிக்கையின் நிருபராக பணியில் அமர்த்தப்பட்டான். சினிமா கம்பெனியை விட கூடுதல் சம்பளம். அவன் கனவு கண்டிருந்த வேலை. அவன் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.
“ஆமா யாரோ ஒருத்தியோட வீட்டை கண்காணிச்சேன்னு சொன்னியே யார் வீடுடா அது? “ பிச்சை கேட்டான்.
“அனிதான்னு ஒரு பொண்ணு.. நம்ம அவினாஷ் சாருக்கு சொந்தமாம்.. தனியா இருக்குது. வூட்டுக்கு யார் வராங்க போறாங்கன்னு பாக்க சொன்னாரு. ஏழு நாளும் ஒரே ஒரு தாடிக்காரன் மட்டும்தான் வந்தான். போனான். வேற யாரும் வரல”.
“தாடிக்காரனா யார்ரா அது?”
“நம்ம அவினாஷ் சார்தான் அது.. எத்தினி சினிமா பாத்திருக்கேன். ஒருத்தரு நடையும் உடல் மொழியும் வச்சிக்கிட்டே அவரு யாருன்னு சொல்லிட மாட்டேன். ஆனா சொந்தக் கார பொண்ணு வூட்டுக்கு, அவரு ஏன் மாறு வேசத்துல வந்தாருன்னு புரியல.. அப்புறம் இன்னொண்ணு! ஆறுமணிக்கு வெளியே போயிட்டு, ஆறே காலுக்கு திரும்பவும் லுங்கி கட்டிக்கிட்டு வந்துட்டாரு. எனக்கு தெரியக்கூடாதுன்னு காலை சாய்ச்சு சாய்ச்சு வேற நடந்தாரு.. அதான் என்னான்னே புரியல!“
– ஏப்ரல் 2015
– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.