கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 6,103 
 
 

சிந்து, “என்னங்க மின் கட்டணம் செலுத்த இன்றுதான் கடைசி நாள் செலுத்த மறந்துடாதீங்க, ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன், மறந்துட்டேன் என்ற பதிலையே திரும்ப திரும்ப சொல்றீங்க, இன்றும் செலுத்தவில்லை என்றால் அதுக்கு வேற தண்டம் அழனும்”

“சரி நீ எதுக்கு தொண தொணத்துகிட்டே இருக்கே, மறக்கமாட்டேன் போதுமா, அலுவலகம் கிளம்பற வழிய பாரு”

“ஆமா நான் சொல்றது அப்படிதான் இருக்கும், இன்றும் மட்டும் பணம் செலுத்தாம வாங்க, உங்களுக்கு அதுக்கு பிறகு இருக்கு, நீங்க அலுவலகம் போகலயா, நான் சொல்வதைக் கூட காதில் வாங்காமல் கிரிகெட்டையே பார்த்துகிட்டு இருக்கீங்க, அப்படி என்னதான் அந்த கிரிக்கெட்டில் இருக்கோ”

“காலையிலேயே உனக்கு என்ன ஆச்சு, நான் என்ன பண்ணாலும் என் வேலையில் சரியாகதான் இருப்பேன், நான் வண்டியில்தான் போறேன், நீ பஸ் பிடித்து போகனும், பேசிட்டே இருந்து பஸ்ஸை விடப் போறே”

“என் அலுவலகம் தாண்டிதானே போறீங்க, போற வழியில் என்னை விட்டுட்டு போகலாமில்ல, நான் பஸ்ஸில் போய் சேருவதற்குள், போதும் போதும்னு ஆகிடுது”

“உன்னைவிட்டுவிட்டு நான் போகனும்னா சீக்கிரம் கிளம்பனும், உனக்கு ஒன்பது மணிக்கு, எனக்கு பத்து மணிக்குதான், நான் சீக்கிரம் போனால் அங்கு இருக்கிற, அத்தனை வேலையையும் என் தலையில் கட்டுவாங்க, எனக்கு இது தேவையா”

“நீங்க என்ன சும்மாவ பார்க்க போறீங்க, அதுக்கு தனியா சம்பளத்தோட சேர்த்து பணம் கொடுக்கறாங்கதானே, இப்படி வெட்டியா கிரிக்கெட் பார்ப்பதற்கு, அந்த பணம் நமக்கு எதுக்காவது உதவுமில்ல”

“உனக்கு இப்போ பிரச்சினை பணத்தால், நான் கிரிக்கெட் பார்ப்பதாலா, காலைலேயே கடுப்படிக்கிற”

“என்னமோ செய்ங்க போங்க, இதை உட்கார்ந்து நல்லா பார்த்துக் கொண்டே இருங்க, அதுதான் உங்களுக்கு தினமும் சோறு போட போகுது” என்று சிந்து அலுவலகம் கிளம்பினாள்.
அலுவலகத்தில் நிறைய கோப்புகள் முடிக்காம இருக்கு, இது மாதக் கடைசி என்பதால், எல்லாவற்றையும் முடித்துவிட்டு செல்லுங்கள் என்று மேலதிகாரி சொன்னதால், அதை முடித்துவிட்டு கிளம்பினால், காய்கறிக் கடைக்கு போய் வாங்கிவிட்டு, காலை சமையலுக்கும் சமைக்கனும் என்றால் நேரமாகிவிடும் என்று, தன் கணவன் வெங்கட்டை கைபேசியில் அழைத்து என்ன என்ன காய் வாங்கி வைக்கனும் என்றும், தான் வர தாமதமாகும் என்பதால், பிள்ளைகளுக்கு மாலை ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, சிந்து அலுவலக வேலையில் மூழ்கிவிட்டாள்.

மாலை அவள் வேலை முடித்து, வீட்டிற்கு வர மணி ஏழு அடித்தது, வந்து பார்த்தால் பிள்ளைகள் யூனிபார்ம் கூட மாற்றாமல் அப்படியே இருக்க, வெங்கட் வழக்கம் போல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்க, வந்த கோபத்தில் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.

சிந்து, “சிவா, நகுல் காபி குடிச்சீங்களா, எதுவும் சாப்பிட்டீங்களா”

“இல்லைம்மா, இன்னும் எதுவும் சாப்பிடல, அப்பா எதுவும் வாங்கித் தரல” சிந்துவுக்கு இன்னும் கோபம் அதிகமாக, பிள்ளைகளுக்கு உடைகள் எல்லாம் மாற்றிவிட்டு, சமையல் அறைக்குள் சென்று பார்க்க, வாங்கி வரச் சொன்ன காய்கறி எதுவும் வாங்கி வரவில்லை.

“என்னங்க நான் வர தாமதமாகும், காயெல்லாம் வாங்கிட்டு வாங்க என்று சொன்னேன்ல”

“ஆமா சொன்னே வரும் வழியில், வாங்கி வரனும் என்று நினைத்தேன், ஆனால் மறந்துட்டேன்”

“நீங்க காபி குடிச்சீங்களா, எதுவும் சாப்பிட்டீங்களா”

“நீ வர தாமதமாகும் என்று சொன்னதால், நான் வரும் வழியிலேயே காபி குடிச்சிட்டேன்”

“உங்க வேலையை சரியா செய்துடீங்க, இந்த சின்ன பிள்ளைகள் பசியோடு யூனிபார்ம் கூட மாற்றாமல் அப்படி உட்கார்ந்திருக்காங்க, அவங்களுக்கு எதுவும் சாப்பிட வாங்கிக் கொடுக்கனும் என்று கூட உங்களுக்குத் தோணலியா?”

“குழந்தைகளுக்கு வீட்டிற்கு வந்த பிறகு, வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தேன் மறந்துவிட்டேன்”

“மின் கட்டணம் செலுத்திட்டீங்களா, இன்றுதான் கடைசி தேதி என்று சொல்லியிருந்தேனே”

“ஆமா சொன்னே, மதியம் சாப்பிட்ட பிறகு செலுத்தனும் என்று நினைத்தேன் மறந்துவிட்டேன்” என்று தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, சிந்து கேட்பதற்கு பதில் சொல்ல, அவளின் கோபம் அதிகமாக வேகமாக சென்று தொலைக்காட்சிப் பெட்டியை தூக்கி கீழே போட்டு உடைத்தாள்.

“என்ன மனுஷன் நீங்க ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டீங்களா, எதற்கெடுத்தாலும் மறந்துவிட்டேன் என்ற பதிலா, கிரிக்கெட்தான் முக்கியம் என்றால், அதையே கட்டிக் கொண்டு அழ வேண்டியதுதானே, உங்களுக்கு எதுக்கு கல்யாணம், குழந்தைகள், குடும்பம், குடும்ப பொறுப்புள்ள ஆம்பளையா இருக்கீங்களா” என்றதும் சிந்துவை அடிக்க கையை ஓங்க,
“அண்ணா நிறுத்துங்க செய்ற தப்பையெல்லாம் நீங்க செய்துவிட்டு, சிந்துவை அடிக்க போறீங்க, அவள் பேசியது எல்லாத்தையும் கேட்டுக் கொண்டுதானிருந்தேன், அவள் கேட்டதில் என்ன தவறு இருக்கு” என்று பக்கத்து வீட்டில் இருக்கும், சிந்துவுடன் வேலை பார்க்கும் பிரியா கேட்க, எதுவும் பதில் சொல்லாமல் தன் அறையில் போய் படுத்துக் கொண்டான்.

“உனக்கு ஏன் இவ்வளவு கோபம் தொலைக்காட்சியை போட்டு உடைச்சிட்டே, நான் வீட்டில் இருக்கும் காய் கொண்டு வந்து தருகிறேன், அதை நாளைக்கு சமையலுக்கு செய்துக் கொள், நீ கடைக்கு போய் வரனுமென்றால் நேரமாகும், குழந்தைகள் பசியோடு இருப்பாங்க ஏதாவது செய்துக் கொடு” என்று கிளம்ப,

“பிரியா எதுக்கு வந்தே, வந்ததை சொல்லாமல் போறே”, “சத்தம் கேட்டுதே என்றுதான் வந்தேன், வந்த பிறகுதான் தெரிந்தது, நீ சண்டை போடுவது” என்று சென்றாள். குழந்தைகள் பயத்தில் ஒரு பக்கம் அமைதியாக அழுதுக் கொண்டே அமர்ந்திருக்க, அவர்களை சமாதானம் செய்துவிட்டு, அவர்களுக்கு சமைக்கத் தொடங்கினாள்.

இரவு உணவு சாப்பிட குழந்தைகளை அனுப்பி வெங்கட்டை அழைத்து வரச் சொல்ல, சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டான். சிந்து எதுவும் கேட்கவில்லை, மறுநாளும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, மின் கட்டணத்தையும் தன் அலுவலக பியூனிடம் கொடுத்துச் செலுத்தினாள்.

“என்ன சிந்து இன்னும் கோபம் தீரவில்லையா, உங்கள் இருவருக்கும் சொந்த உபயோகத்திற்கு அலுவலக பணியாளர்களை பயன்படுத்த மாட்டே, இன்று எப்படி ஆச்சரியமாயிருக்கே”
“என்ன பண்ண சொல்றே, மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், பியூஸ் புடுங்கிட்டு போயிருவாங்க, ஒரு வாரமா சொல்லியும் நடக்கல, இனிமேலும் எதிர்பார்ப்பது வீண், வேறு வழியில்லாமல் பியூன் அண்ணாவை அனுப்பினேன்”

“உனக்கு திருமணம் முடிந்து பத்து பதினைந்து வருடம் இருக்குமா, இவர் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா?, எப்படி சமாளிக்கிறே, உனக்கு இவ்வளவு கோபம் வருமா?, தொலைக்காட்சிப் பெட்டியை இப்படிப் போட்டு உடைத்துவிட்டாய்”

“எனக்கு கோபம் சட்ன்னு வரும், வந்தால் திட்டுவேன், கத்துவேன் அவ்வளவுதான், அவருக்கு கோபம் எளிதில் வராது, வந்துவிட்டால் இப்படி எதையாவது போட்டு உடைப்பார், ஆனால் நேற்று அதே வேலையை நான் செய்தேன், நான் பேசியது வேற அவர் கோபத்தை அதிகமாக்க, என்னை அடிக்க வந்துவிட்டார்”

“என்ன சொல்றே நீ, உனக்கு சட்னு கோபம் வருமா, நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே, அலுவலகத்தில் அமைதிப் புறாவாக இருப்பே”

“பிரியா வெளியில் நாம் யாரிடமும் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ள முடியாது, நம் கோபத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம், அது வீணான பகையை உருவாக்கும், அதே வீட்டில் நம் உறவுகள் என்ற உரிமை இருக்கு, அதைப் புரிந்தும் கொள்வார்கள், நம் கோபத்தில் தவறு இருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவார்கள், நாம் சரி செய்துக் கொள்ளலாம்”
“சரி இப்போ உன் கணவரின் பொறுப்பில்லாத செயல் தவறுதானே, இத்தனை வருடத்தில் அதை ஏன் நீ அவருக்கு புரியவைக்கவில்லை”

“நான் கோபத்தில்தான் அவரை பொறுப்பில்லாதவர் என்று சொன்னேன், ஆனால் அவர் அப்படிக் கிடையாது ரொம்பவே பொறுப்புள்ள மனிதர்தான், என்ன கிரிக்கெட் பைத்தியம், அந்த நேரத்தில் பூகம்பமே வந்தாலும் அசைய மாட்டார், அதில் அவருக்கு ஆர்வம், வெறி என்று கூடச் சொல்லலாம்”,

“அதுக்காக அவர் செய்தது சரி என்று சொல்றியா”

“அப்படியில்லை, அவர் ஒரு கிரிக்கெட் பைத்தியம் என்று நன்றாக தெரிந்தும், அந்த நேரத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று தெரிந்தும், அவரை எதிர் பார்த்தது என் தவறுதானே, நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் இல்லையா, இப்போது இந்த பிரச்சினை வந்திருக்காதுதானே”

“நீ என்ன வேண்டுமென்றா செய்தாய், உன்னால் எல்லா வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய முடியுமா, உனக்கு வீட்டு வேலை மட்டுமென்றால் பரவாயில்லை, அலுவலக வேலையும் இருக்கு, இரண்டையும் பார்ப்பது எவ்வளவு கஷ்டம் அதை அவர் கொஞ்சம் பகிர்ந்து செய்வதில் தவறில்லையே, இதில் நீ கோபப்பட்டதுதான் தவறு என்கிறாய்”

“ஹா ஹா ஹா என்னுடைய கோபம் உனக்கு புதிது, அதனால் பெரிதாக தெரியவில்லை, ஆனால் அவர் திருமணம் முடிந்ததில் இருந்து அவர் பார்க்கிறார், அந்த கோபத்தை இத்தனை வருடமாக தாங்குகிறார், அவர் என்னிடம் கோபப் பட்டதை எண்ணி சொல்லிவிடலாம், எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றால் உடனே வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுவார், குழந்தைகளையும் தொந்தரவு செய்யவிடமாட்டார்”

“அப்போ உன்னைவிட அவர்தான் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என்கிறாயா?”

“உண்மை அதுதான் பிரியா, நான் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது, ஆனால் அவர் என் மீதும் குழந்தைகள் மீதும் வைத்திருக்கும் அன்பை சொல்ல முடியாது, இப்போ சொல்லு நான் என் கோபத்தை குறைத்து, விட்டுக் கொடுத்திருந்தால், பிரச்சினை இருந்திருக்காது இல்லையா”

“ஹா ஹா ஹா கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசுறே, வா காபி குடித்துவிட்டு போகலாம்”

“பிரியா வீட்டில் அவர் காபி போட்டுவிட்டு எனக்காக காத்திருப்பார்”,

“ஹா ஹா ஹா கோபம் இருக்குமிடத்தில் நல்ல குணங்களும் இருக்கும்னு சொல்வாங்க, அது உனக்கு சரியாகதான் இருக்கு, சிந்து நீ வீட்டில புலி வெளியில எலி சரியா” என்று சிரித்துக் கொண்டே வீடு நோக்கிச் சென்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *