கணக்கில் சில தப்புகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 1,240 
 
 

கொடிசியாவில் அவ்வளவு கூட்டம்! எள் போட்டால் எண்ணெய்தான் எடுக்க முடியும்.

கொங்கு சீமையில் இந்த மாதிரி கூட்டம் மிகவும் அரிது. வந்தவர்கள் அத்தனை பேரும், குவார்ட்டர், பிரியாணி, 200 ரூபாய்க்காக வந்தவர்களாகத் தோணவில்லை. விசுவாசிகளாகத் தென்பட்டனர். ஆர்வத்துடன் செயல்பட்டனர். கூட்டத்தின் செயல்பாட்டிற்காகப் பொறுமையுடன் காத்திருந்தனர்.

அங்கே அன்றைய தினம் உலக மகளிர் தினம். மிகப் பெரிய அளவில் கொண்டாடப் பட ஏற்பாடு.

வனிதா வந்து போனார். ஜோதிமணியும் வந்து போனார். சரஸ்வதி கன்னையன் வருகைக்காகவும், அனுஷா ரவி வருகைக்காகவும் சிலர் இன்னும் காத்திருப்புப் பட்டியலில் தங்கி இருந்தனர்.

ஊரில் உள்ள அத்தனை நாரிமணிகளும் வசைபாடாமல் வாழ்த்தி வழி நெடுகக் காத்திருந்த அந்த அன்பு மக்களை நேரில் கண்டு, சிற்றுரையாடி… அப்பப்பா! ஒரு சிறந்த நிகழ்வு. மகளிர் நிஜம்மாகவே சந்தோஷத்தின் உச்சத்தில் நின்றனர்.

இத்தனை நிகழ்விற்கும் காரண கர்த்தாவான ஜானகி (வீ.ஜே) மேடையில் ஏறி இறங்கி, நிகழ்ச்சியுடனான தன் இணைப்பை அவ்வப்போது சரிபார்த்துக் கொண்டிருந்தாள். டவர் தப்பித்துப் போகும் சந்தேகம் எழுந்தால், மேலே போய் ஒரு குட்டி கலகலப்பை கிலுகிலுப்பை மாதிரிக் காண்பித்து நேராக்கினாள். இன்றா, நேற்றா, அவள் இதுவரை வாழ்வில் 25 வருடங்களாகக் காணாத மேடைகளா, மண்டபங்களா, ஈவென்ட் மானேஜ்மென்ட்களா? அவள் காண்பிக்காத விளம்பரத் துறைகளா, துரைகளா? சகலமும் அவளின் ஒற்றை மேற்பார்வையில்தான் இயங்கும்…. இயங்கணும்.

அவ்வப்போது அவளுடைய நிகழ்வுகளில் ஓய்வு பெற்ற சில கிழ இளைஞர்கள் தென்படுவர். முறைவாசல் செய்திட!

சிற்சில சமயங்களில் அவளுடைய தோழி சினிமா நடிகை ஜீவிக்கா தென்படுவாள். கலக்கி விடுவாள். வீஜே யின் பலம் அவளுடைய நீண்ட காலத் தொடர்புகள். அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளும் அலாதியான திறமை.

வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டாக்ராம் ஒன்றையும் அவள் பாக்கி வைக்கவில்லை. 25 வருடங்களுக்கும் மேலாக அவளிடம் சிறைப்பட்ட பெரும் புள்ளிகள் அவளை இப்பவும் நிராகரிக்க முடியவில்லை. ஏனென்றால், அவளிடம் ஐம்பதிலும் ஒரு காந்தம் இருந்தது. அவள் கை வைத்தால், அந்த நிகழ்வு பூரணமாகும்.

அவள் பெரிய படிப்பாளி அல்லள். ஆங்கிலம் அரைகுறை …ஆனால் கிணிகிணி ஒலித்து இனிக்கவும் செய்து தொலைக்கும்.

பார்வையில் நடிகை போல இருப்பாள். ஆனால் யாரும் அவளைத் தொட்டதாகக் கிசு கிசு கிடையாது.

சுற்றிலும் ஆண்கள் (பெண்களும்) மொய்த்தாலும் அவளைச் சுற்றி ஒரு சபலக் கதை கூட வெளிவரவில்லை.

பிசினஸ் என்றால் அவள் புத்தியில் கூர்மை. “வெரி ஷார்ப் லேடி”- சொன்னவர் நிதி அமைச்சர். அக்டோபரில் சிறப்பாக நடத்திய வங்கிகள் சம்மேளனத்தில் மத்திய நிதி அமைச்சர் கை குலுக்கிப் பாராட்டினவர்களில் முதல் ஆள்– நம்ம வீ ஜே.

எம் பிஏ, ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஒன்றும் அவளை உரசியது இல்லை. அத்தனை ஆர்வமும் இல்லை.

போதையில் நடனமாடி, கவர்ச்சி காட்டி நாணயம் விற்று, நாணயம் பெறும் மதுக்கூட்டத்தில் இவள் கிடையாது. கூட்டம் முழுக்க குடித்தாலும், குடிக்காமலே தன் நிலையிலிருந்து சற்றும் தளர்ச்சி அடையாத விக்கிரமனைப் போல கர்வமாக நிற்கும் ஜானகி ஒரு தீப் பொறி.

அவள் வெறும் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தில் படியேறி, தன் நம்பிக்கையால் அசைக்கமுடியாத ஒரு கார்பொரேட் கோட்டை கட்டியவள்.

ஓகே! கதை எங்கே போகிறது டோய்???

இன்றையத் தேதியில், ஜானகி முதன் முறையாகத் தன் இழப்புக்களை பட்டியலிடத் தொடங்கினாள். அதற்குக் காரணம் அந்த வித்யா!

எவடி அவ?

ஜானகியின் ஒற்றை மகள்! அம்மாவை விட அழகிலும் அறிவிலும் சுமார்தான். படு சுட்டி என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லை.

அந்த வித்யாவுக்கு 25 வயசு முடிந்தது. ஏதோ ஒரு துறையில் சைக்காலஜி படிக்க முற்பட்டு அதை முடித்தும் விட்டாள்.

வித்யாவின் நிலை சிங்கிள் பேரென்ட்டின் வளர்ப்பு முறை. போன் இல்லாத காலத்தில் பேப்பரில் எழுதி டிமாண்டு நோட்டீஸ் மாதிரி காண்பித்து தன் தேவைகளை நிறைவேற்றிய வித்யா, ஸ்மார்ட் போன் வந்தபின் வாட்ஸ் அப் டிமாண்ட் தான்.

ஆஸ்டல் வேண்டாம். தனியாக பிரண்ட்ஸ் உடன் ரூம் போட வேண்டும். (உள்ளூரிலேயே).

ஆடோமாடிக் ஆடி கார் வேண்டும்.

இடித்த காரை மாற்றி பி எம் டபிள்யூ வாங்க வேண்டும். அதையும் இடிக்க வேண்டும்.

இரவில் சுற்ற வேண்டும். கடலை வாங்க வேண்டும். கடலை போட வேண்டும்.

படித்து முடித்தபின் ஆஸ்திரேலியா போக வேண்டும். அங்கே படித்து வேலை பார்க்க வேண்டும்.

அம்மா எதிலும் தலை இடக் கூடாத எதிரிக்கு நண்பன். நோ என்ட்ரி. நோ விஸா.

தாத்தா பாட்டி, மரியாதை நிமித்தம்தான்.

முதல் மரியாதை ஒரே ஒருவருக்கு மட்டும் தான் அவர்தான் வெங்கி. வெங்கி வீஜேக்கு வலக் கை, அள்ளக் கை, அட்வைஸர்-எல்லாம்தான். இந்த மனுஷனும் குடிபோதையில் வண்டிக்கடியில் போய் சொர்கம் சேர்ந்தார். அதிலிருந்து, வித்யா ரெக்கை கட்டாத பறவைதான்.

வித்யா இப்போது இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம் என்று வாழ்க்கைப் பாடத்தில் பல விநோதங்களைக் கண்டறிந்து வருகிறார். இவளுடைய நண்பர் கூட்டம் பண அழகில் பல்லிளித்துக் கொண்டு, வித்யாவின் முன்னேற்றத்தை ஸ்டே வாங்கி வைத்து விட்டனர்.

ஜானகியின் வாதங்களையும் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் அல்லவா?

வீஜேயின் இழப்பு ஒன்று: இளமையும் அழகும்.

இழப்பு இரண்டு: வெங்கி

இழப்பு மூன்று: மகள்

உலகத்திலுள்ள அத்தனை சோகத்தையும் அள்ளிக் கொட்டி, ஜானகியை மடக்கி கல்யாணப் படுக்கையில் தள்ளி, சில நாட்களிலேயே, ஓடிட்டர்.

இன்று ஜானகி சொல்வது, “அந்த திருட்டு நாய், ஏதோ ஒரு வெறியில் தாலி கட்டி என்னை அனுபவித்தான்- ஒரு த்ரில்லுக்காக; தில்லுக்காக அல்ல!”

இவனுடைய டார்ச்சருக்கு முடிவு கட்ட, ஸ்கூட்டரில் அவனுடன் சென்ற நான், நடு ரோட்டில், ஸ்கூட்டரிலிருந்து குதித்தும் உயிர் போகாமல், முகவாய்க்கட்டை மட்டும் கோணி, அழகு மூன் மூஞ்சி அலங்கோலமானது. கை கால் முறிந்தது. கோடம்பாக்கத்தில் நியூஸ் ஆனது.

கோழையான அந்தத் திருட்டு நாய், வீட்டை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடியும் போனான். நான் அவனைத் தேடவில்லை. போலீஸையும் ஏவ வில்லை. அவன் நிழல் கூட என் மேல் படக் கூடாது என்ற என் முடிவில், ‘கேம் ஓவர்’ திரை விழுந்த சமயத்தில், என் மடியிலிருந்து விழுந்தாள் வித்யா. அப்பனுடைய அதே ஜீன்ஸ். அதே குண நலன்கள். கோணல் புத்தி அழகில்லாத குரூர முகம்.

அப்பா, அம்மா, வெங்கி சொல்ல, நான் வித்யாவை நல்ல முறையில் வளர்த்ததன் காரணம்- கௌதம்மின் ஒரு குணம் கூட வித்யாவை அண்டக் கூடாது என்றுதான்.

என்னைப் பொறுத்தவரை சுயமாக, இழந்த அழகை மீட்டு, அந்தஸ்தை உருவாக்கி, வாழ்க்கையில் வெற்றி காண ஒரு வெறியை உருவாக்கிக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை ஆண்களில் எந்த வயதினரும் நம்பத்தக்கவர்களல்ல.

ஆட்டுக் குட்டியை வேலிக்குள் கட்டிப்போட்டு விட்டு அணு அணுவாக அநுபவிக்க ஆண்கள் போடும் மாஸ்டர் பிளான் : காதல் திருமணம்.


மகளிர் தின நிகழ்வில் அத்தனை பேரும் ஜானகியைப் பாராட்டிய பாங்கு தனி! அவர்கள் எல்லாரும் ஜானகி தினம் கொண்டாடினார்கள் எனலாம்.

ஜானகியின் மனது ஒரு நிலையில் இல்லை. அத்தனை புகழாரங்களுக்கும் பதில் சொல்ல அவளிடம் உண்மையான பதில் இல்லை. அவளுடைய அவலங்கள் அனைவருக்கும் தெரியாத இரகசியம்தான். கசிந்த சில உண்மைகளால் அவளுக்கு நன் மதிப்பு பெருகித்தான் போனது.

தூரத்தில் வித்யாவின் கார் வந்து நின்றது தெரிந்தது.

ஆஹா! இவள் ஏன் இங்கே வருகிறாள்?

காரின் பின் கதவு திறக்கப் பட்டது- வித்யாவால்.

ஒரு வாக்கரின் உதவியுடன் ஜானகியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் கௌதம். அவன் கண்களில் கலக்கம். கைகளில் மலர்க் கொத்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *