கடைசி மூச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 6,745 
 

மாலை நான்கு மணிக்கு என்னை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுவித்தார்கள்.

ஒரு திருட்டு கேஸ்ல ரெண்டு வருஷம் உள்ள போய்ட்டு வெளிய வரேன். எனக்கு வயது இருபது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே வீட்டுக்கு அடங்கியதில்லை. திருட்டு, ஏமாற்று, பொய், குடி, பீடி, மற்றும் காசு கொடுத்து பல பெண்களின் சுகம் என நான் இந்தச் சின்ன வயதில் பார்க்காத அசுத்தங்கள் கிடையாது.

ஏழாவது வரை கார்ப்பரேஷன் பள்ளிக்குச் சென்றேன். ஆனால் படிப்பைத்தவிர அனைத்து கெட்ட வார்த்தைகளும், கெட்ட பழக்கங்களும் என்னிடம் ஒட்டிக் கொண்டன. படிப்பு வரவில்லை. படித்தாலும் ஏறவில்லை. நான் பள்ளிக்கு மூன்று மைல்கள் நடந்து சென்றது, என் தமிழ் டீச்சரின் அழகிய இடுப்பைப் பார்க்கத்தான்.

நான் பிஞ்சிலே பழுத்ததை பார்த்து என் அப்பனும் ஆத்தாளும் என்னைக் காறித்துப்பினர். அதன் பின் தலையெழுத்துப்படி ஆகட்டும் என்று என் தலையில் தண்ணீர் தெளித்து விட்டனர்.

தண்ணீர் தெளித்ததும் சிலிர்ப்பிக்கொண்டு, பத்து வயதில் திருட்டு; பன்னிரெண்டில் சொக்கலால் ராம்சேட் பீடி; பதின்மூன்றில் கட்டிங் கள்ளச்சாராயம்; பதினாலில் பலான செக்ஸ் படம், பதினைந்தில் ஒரு ஒண்டி வீட்டுக்காரியின் முதல் சுகம்; பதினெட்டில் ரத்தக் களரியுடன் அடிதடி, இருபதில் காசு கொடுத்து விதம் விதமாக தேவடியாக்களுடன் விளையாட்டு என்று பொதிகாளை மாதிரி அலைந்தேன்.

தாயும் நல்லவள், தகப்பனும் நல்லவன். தறிகெட்டு போனதென்னவோ நான் மட்டும்தான். வாழைத் தோட்டத்துக்குள் வந்து முளைத்த காட்டுமரம் நான். எல்லா மரங்களும் ஏதாவது ஒரு கனி கொடுக்க, எதுக்கும் உதவாத கருவேல முள்ளு மரம் நான்.

ஏழாவது பெயிலுக்கு ஏட்டு வேலையா கிடைக்கும்?

திருடிப் பிழைப்பதில் ஒரு சுகம் கண்டுவிட்டேன். கையில் பணம் எக்கச்சக்கமாக புரண்டது. எதைத் திருடினாலும் அதை வாங்கிக் கொள்வதற்கு சென்னை முழுவதும் ஆங்காங்கே ஏஜெண்டுகள் ஏராளமாக இருக்கிறார்கள். பணம் புரண்டதால் விதவிதமாக அயல்நாட்டு சரக்கு குடித்தேன். அழகிய பெண்களுடன் அடிக்கடி சரீர ஒத்தாசை செய்து கொண்டேன். அப்படி ஒருநாள் திருடிவிட்டு அதை பணமாக்கி, முட்ட முட்ட குடித்துவிட்டு ஒருத்தியுடன் சல்லாபத்தில் இருந்தபோதுதான் போலீஸ் என்னை முதன் முறையாக பிடித்துவிட்டது. ரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை.

ஜெயில்ல காஞ்சு கிடந்தேன். ஜெயில் வாழ்க்கை என்னைத் திருத்தவில்லை.

எவன் சொல்லியும் திருந்தாமல் எச்சிப்பிழைப்பு நடத்தி ஜெயிலுக்குப் போய்ட்டு வந்த என்னையும், கை மீறிப் போனதென்று கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர் என் பெற்றோர்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தி திருமணம் என்கிற போர்வையில் என்கரம் பிடித்தாள்.

ஐயோ பாவம், நான் மூக்குமுட்ட தின்னவும், எனக்கு முந்தானை விரிக்கவும் மூன்று பவுனுடன், விவரம் தெரியாத ஒருத்தி விளக்கேற்ற வீடு வந்தாள். வயிற்றில் பசித்தாலும், என் வயிற்றுக்கு கீழே பசித்தாலும் வக்கணையாகப் பரிமாறினாள். வேசிக்கு காசு கொடுத்து பழக்கப்பட்ட நான், இவளிடம் அனைத்தையும் ஓசியில் முடித்துக் கொண்டேன். தின்னு கொழுத்தேனே தவிர, மருந்துக்கும் நான் திருந்தவில்லை.

அலுக்க அலுக்க அவளை அனுபவித்தபிறகு அடிக்கடி குடித்துவிட்டு அவளிடம் சண்டையிட்டேன்.

ஒருநாள் அவளை கை நீட்டி அடித்துவிட, கோபித்துக்கொண்டு அப்பாவிடம் சென்றாள். இரண்டு மாதங்கள் சென்றன. அவள் அப்பன், என்னை சமாதானப்படுத்தி, பத்தாயிரம் பணத்துடன் மகளை பவ்யமாக என்னிடம் ஒப்படைத்தான்.

பார்த்து மாதங்களானதால், வயிற்றுக்கு கீழே ஒரே பசி. பசியில் அவளை ஆர்வமுடன் முயங்க உடனே பத்திக்கிச்சி…. காலண்டரைப் பார்த்து நாள் தள்ளிப்போச்சு என்று வெட்கத்துடன் சிரித்தாள்.

அவள் சிரிப்பு எனக்கு ரசிக்கல. இருக்கும் சனி போதாதென்று இன்னொரு சனியா? மசக்கை என்று சொல்லி அடிக்கடி வாந்தி எடுத்தாள். நல்லநாள் பார்த்து அவள் வீட்டிலிருந்து வந்தனர். வளையல் போட்டு கூட்டிச் சென்றனர்.

பழைய குருடி கதவைத் திறடி கதையாக, என் சரீர வேட்டைகளை சந்தோஷமாகத் தொடர்ந்தேன். ஆனால் என் தொடர்பில் இருந்த பழைய பரத்தையர்கள் பலர், என்னிடம் பணம் அதிகம் இல்லாததால் தொட்டாற் சுருங்கிபோல் உடம்பை குறுக்கி, இரு தொடைகளையும் சேர்த்து ஒட்டிக்கொண்டு பம்மாத்து காட்டினர். “ஏண்டி நாய்ங்களா எவ்வளவு பணம் அள்ளி விட்டிருப்பேன், களுத்த சீவிப்புடுவேன்” என்று மிரட்டியதும்தான் மிரண்டுபோய் விரித்தனர்.

அன்று என் பொண்டாட்டியை கார்ப்பரேஷன் ஆஸ்பத்ரியில் சேர்த்துள்ளதாக போன் வந்தது. சுவாரசியமில்லாமல் அடுத்த நாள் கடமைக்காக ஆஸ்பத்திரி சென்று எட்டிப் பார்த்தேன்.

ஏண்டா எட்டிப் பார்த்தோம் என்றாகிவிட்டது. பிறந்தது பொட்டப்புள்ள. எவன் கேட்டான் இந்த மூதேவியை? அதுல வேற என்ன மாதிரியே அட்ட கரி. ஒரு ராஜகுமாரனை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். “கள்ளிப்பால் கொடுப்பியோ, கழுத்தை திருப்புவியோ, எனக்குத் தெரியாது. ஒத்தையாக திரும்பி வருவதானால் ஒரு வாரத்தில் வந்து சேரு” என்று கோபம் காட்டினேன்.

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை…

அவள் கையெழுத்துப் போட்டால் அரசாங்க மானியம் ஒரு ஐயாயிரம் கிடைக்குமென்று யாரோ சொன்னார்கள். சரி அதையேன் விடுவானே என்று, கையெழுத்துக்காக பார்க்கப் போனேன். அவள் வீட்டில் இல்லை. கூலி வேலைக்குப் போயிருந்தாள். அவளை கூட்டிவர பக்கத்துவீட்டுப் பையன் மூக்கில் சளி ஒழுக அரை டவுசரை தூக்கிகிட்டு ஓட, ஆடி நின்ற தூளியில் அழுகுரல் கேட்டது. அழுகுரல் சகிக்க முடியாமல் ஓடிச்சென்று தூக்கினேன். அதே அந்த கரிய பெண் குழந்தை.

கள்ளிப்பாலில் தப்பி வந்த அது இப்போது என் கைகளில். யாரும் இல்லை. கழுத்தை நெறித்து கொன்றுவிடலாமா….? அல்லது சுவற்றில் வீசியடிக்கலாமா? என்று யோசித்தபோது – நான் தூக்கிய வினாடி முதல் அது என்னைப் பார்த்து கண்கள் மின்ன சிரித்தது.

என்னை மாதிரியே இருந்தது. சப்பை மூக்கு, வலது கண்ணில் மச்சம், எல்லாம் என்னைப் போல. என்னைப்போல குஞ்சு மட்டும் இருந்திருந்தால்…! ?

கண்கள் சிமிட்டாமல் என்னையே பார்க்கிறது. அதன் பல்லில்லா பொக்கை வாயில் என் கட்டைவிரலை நுழைத்து சப்புகிறது. கட்டைவிரலை எடுத்தால் பிஞ்சுக் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது. எட்டி விரல் பிடித்து மீண்டும் தொண்டைவரை நுழைக்கிறது.

எனக்குள் ஏதோ ஒன்று மனசுக்குள் கசிகிறது. அது அன்பா, பாசமா….எது? புரியவில்லை.

அவள் அவசரமாக வந்தாள். என் கையில் குழந்தை இருந்ததைப் பார்த்து கண்கள் மின்ன, “பாருடி உன்னிய கொஞ்ச அப்பா வந்திருக்காரு” என்று அதன் கன்னத்தை பாசத்துடன் கிள்ளினாள். இனி எங்கள் இருவரையும் இணைக்கும் பாசக்க்கயிறு இவள்.தான் போலும்……..

அவளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு.. கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்.

முன் சீட்டில் இருந்த குழந்தை..என் மூக்கை மூக்கை எட்டிப் பிடிக்க நெருங்கியும்…
விலகியும் நெடுநேரம் என்னுடன் விளையாடியது. வீடு திரும்பியதும் ஏனோ அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். ஏதேதோ எண்ணங்கள். வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்.

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை என்று பொய் சொல்லி இன்னொரு கையெழுத்து வாங்க மீண்டும் சென்றேன். குழந்தையைப் பார்க்க என்று உண்மையைச் சொல்லவிடாமல் என் வறட்டுக் கெளரவம் தடுத்தது.

அதே கருப்பு, அதே சிரிப்பு; வலது கண்ணில் மச்சம், சப்பை மூக்கு; அதே மாதிரி பல்லில்லா வாயில் கட்டைவிரல் தீனி. அதன் அன்பு என்னைப் புரட்டிப்போட்டது நிஜம். அதை கட்டியணைத்து பாசத்தின் ஸ்பரிசம் உணர்ந்தேன். சிரித்தேன். அட எனக்கும் கூட சிரிக்க வருகிறது.

.அன்றும் கடைசி பஸ்சில்தான் வீடு திரும்பினேன். ஆனால் எந்தக் குழந்தையும் இல்லை. வீடு நோக்கி நடக்கும்போது எதிரில் வந்த அந்த ஒண்டி வீட்டுக்காரி என்னை அழைத்தாள். எனக்குள் ஒரு சின்ன சபலம். ஆனால் அடுத்த கணமே முகத்தை திருப்பிக்கொண்டு நடந்தேன்.

அன்று இரவும் தூங்கவில்லை. கட்டைவிரலை முகர்ந்து பார்த்தேன். இன்பமாய் இருந்தது.

விடிந்ததும் விடியாததுமாய் எனக்கு காய்ச்சல் என்று சொல்லி அவளை ஊருக்கு வரச் சொன்னேன். மறுநாள் விடிகாலை பஸ்ஸில் வருவதாகச் சொன்னாள். அன்றும் நான் தூங்கவில்லை. அவள் வரவுக்காக ஏங்கி, பல்லைக்கூட தேய்க்காமல் பேருந்து நிலையம் ஓடினேன்.

பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி, குழந்தையை தூக்கிக் கொண்டேன். மீண்டும் பல்லில்லா வாயில் என் கட்டைவிரல். இந்தமுறை என் கட்டைவிரலைத் தாண்டி என் மனதுக்குள்ளும் ஈரம் பாரித்தது.

தினமும் என் மீது படுத்துக்கொண்டு பொக்கை வாயில் என்னை கடிப்பாள். அழுக்கிலிருந்து அவளைக் காப்பாற்ற நான் ஒரு நாளைக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு தன் மூக்கைச் சொரிவாள். அத்துடன் பான்பராக் விட்டு விட்டேன் …

சிகரெட் ஒரு முறை வீட்டில் புகைத்தபோது, இருமினாள். அத்துடன் சிகரெட் விட்டு விட்டேன்..

சாராய நெடிக்கு, குமட்டலுடன் வாந்தியெடுத்தாள் …விட்டு விட்டேன்.

அவளுக்கு ஒரு வயதானது. உறவுகளெல்லாம் கூடிநின்று ‘அத்தை சொல்லு’ ‘மாமா சொல்லு’ ‘பாட்டி சொல்லு’ ‘அம்மா சொல்லு’ ‘தாத்தா சொல்லு’ என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்…

எனக்கும் ஆசையாக இருந்தது. ‘அப்பா சொல்லு’ என்று சொல்ல. ஆனால் அப்படிச் சொல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது.

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை…அவள் சொன்ன முதல் வார்த்தையே…

‘அப்பா’தான் !

அவளுக்காக எல்லாவற்றையும் விட்ட எனக்கு அப்பா என்ற அந்த வார்த்தைக்காக. உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது.

அவள் வாயில் இருந்து வந்த. அந்த வார்த்தைக்காக அன்று மீண்டும் நான் பிறந்தேன்,

அவள் வளர்ந்தாள். இந்த சாக்கடையை அன்பாலேயே கழுவினாள்…

அம்மா சொல்லித் திருந்தவில்லை. அப்பா சொல்லித் திருந்தவில்லை. ஆசான் சொல்லித் திருந்தவில்லை. நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை. நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

அவள் வளர, வளர நானும் மனிதனாக வளர்ந்தேன்…

அவள் படித்தாள், என்னையும் படிப்பித்தாள்…

பெண்கள் என்றாலே பாசம்தான். ஆண்கள் அவர்களின் பாசத்தினால்தான் உருப்படுகிறார்கள். அது தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம் அல்லது மகளாகவும் இருக்கலாம். என் விஷயத்தில் அது மகள்.

காலா காலத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்.

நானும்கூட தாத்தாவாகி விட்டேன்.

என்னை மனிதனாக்க எனக்கே மகளாய் பிறந்த அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது என்னுடைய கடைசி மூச்சு. தற்போது ஊரே ஒன்று கூடி எனக்கு உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரியாதா என்ன? யாருடைய பார்வைக்கப்புறம் பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன். திடீரென வாசலில் ஏதோ சலசலப்பு.

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்.

என் கட்டைவிரலை யாரோ தொடுகிறார்கள். அதோ அது அவள்தான். என் அருகே வந்து, மெல்ல குனிந்துகொண்டு என் முகத்தை உற்றுப் பார்க்கிறாள்…

என்னைப் போலவே அவள் வலது கண்ணில் மச்சம், சப்பை மூக்கு, கருப்பு நிறம், நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்.

என் கைகளை எடுத்து தன் முகத்தில் புதைத்துக் கொண்டு ‘அப்பா அப்பா’ என்று குமுறிக் குமுறி அழுகிறாள்.

அழும்போது அவள் எச்சில் என் கட்டைவிரலில் படர்ந்து உடல் முழுவதும் ஈரம் பரவ. என்னுடைய ஒவ்வொரு புலனும் துடித்து ஒரேயடியாக அடங்குகிறது.

இளமையில் தறிகெட்டு வாழ்ந்த நான், இறப்பின்போது என் மகளின் கைபட்டு புனிதமானேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *