கடிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,417 
 
 

இரவு முழுதும் தூங்கமுடியாமல் அவன் அவஸ்தைப் பட்டான். இடப்பக்கத்தில் உடம்பில் தோள் பட்டையி லிருந்து கழுத்து, நெஞ்சு, விலா, இடுப்புவரை அசாத்திய வலி. குறிப்பாக மார்புக்குள் பயங்கர வேதனை. சரியாகச் சுவாசம் விடக்கூட முடியவில்லை. உள்ளுக்குள்ளே என்னவோ ஒன்று சுண்டிச் சுண்டி இழுப்பது போல் ஒரு கொடும் நோவு…

விழிகளைத் திறக்கும்போது தீயாக எரிந்தது. அப்படி ஜுரம்…

அப்பா, ஐயோ என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தான். கைபட்டால் வேதனை இன்னும் கூடியது. எனிவே தடவ வந்த மனைவி மாலுவை விரட்டியடித்தான்.

அசதியில் கண்ணயர்ந்தது எப்போது என்று அவனுக்குத் தெரியவில்லை . ஆனால், செவியில் கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம், ரோட்டின் வாகனச் சந்தடி, இவையெல்லா வற்றையும் மீறி, வழக்கத்திற்கு விரோதமான ஒருவிதப் பயங்கர நிசப்தம் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பது போல் ஒரு பிரமையை அவன் செவிகள் உணர்த்தியதால் விழிகளை மெல்லத் திறந்தான்.

நேரம் பலபலவென்று வெளுத்துக் கொண்டிருந்தது. எதிரெ சுவரிலிருந்த கடிகாரத்தின் முட்கள் பன்னிரெண்டை தொட்டும் தொடாமலும் நின்றுகொண் டிருந்தன. தேதி பதினெட்டின் கொஞ்சத்தையும், பத்தொன்பதின் கொஞ்சத்தையும் கோணலாய்க் காட்டிய வாறிருந்தது. கிழமையில் வியாழன் முழுதும் மறைய வில்லை, வெள்ளியின் எழுத்துக்கள் எட்டிப் பார்ப்பது தெரிகிறது.

அவனுக்குக் கல்யாணமான புதுசில், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கிய ‘ஸைக்கோ’ டைம் டேட்டர் அது. மாசத்துக்கு ஒருமுறை சாவி கொடுத்தால் போதும். ஸ்மகில்ட் சரக்கு. ஆபிஸில் அதைக் கொண்டு வந்த பியூனை எல்லோரும் மொய்த்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக்கொண்டு இருநூற்றி ஐம்பது ரூபாய் விலை கொடுத்து இதை வாங்கி இங்கே கொண்டுவந்து வைத்தபோது, இவனுக்குப் பெருமை சொல்லி முடியாது. மாலுவுக்கு இவனைவிடப் பூரிப்பு. வீட்டில் யார் வந்தாலும் “இந்த கடிகாரத்தைப் பற்றி எப்பக் கேட்பாங்க…” என்று அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே ஆவலாக இருக்கும்.

அப்போதெல்லாம் எவ்வளவோ ஆரோக்கியமாகத் தான் இருந்தோம்… இந்தக் கடிகாரமும் மக்கர் பண்ண வில்லை .

இப்போ சில மாதங்களாகத்தான்… வலி தன் ஆர்ப்பாட்டத்தை எவ்வளவு அமர்க்கள மாகக் காட்டுது…ஆ…ஐயோ ….

மூத்த குழந்தைகள் இருவரும் அவன் அருகில் வந்து சற்று நேரம் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். பையனுக்கும், கடைசி மகளுக்கும் அவன் வலியில் கௌரவத்தைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு இன்னும் வயசாகவில்லை. எனவே வழக்கம்போல் அவன் நெஞ்சில் படுக்க வேண்டு மென்று இருவரும் ஒன்றாய் ஆரவாரம் செய்தார்கள். அம்மாக்காரி ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். சற்று நேரத்தில் கையில் காப்பியுடன் வந்தாள் அவள். “மணி என்னாச்சு?”

மேஜை இழுப்பறையைத் திறந்து கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, “ஏழுக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு” என்றாள் அவள்.

“காப்பியை அங்கே வச்சுவிட்டு அந்தக் கடிகார பென்டுலத்தை ஆட்டிவிடு” என்றான் அவன் வேதனைக் குரலில்.

“சரி, நீங்க காப்பியைக் குடியுங்கோ , நேற்றைக்கு சாயந்தரத்திலிருந்தே பட்டினி…” என்று அவள் நிர்ப் பந்தித்தபோது, “உங்கிட்டெ சொன்னதை கேக்குறையா, இல்லை நானே எழுந்திரிச்சு ஆட்டிவிடட்டுமா?” என்று அவன் சத்தம் போட்டான். குரலும், வலியும் ஒரே சமயத்தில் மேலே ஏறிக்கொண்டிருந்தன. அவள் காப்பியை மேஜைமீது வைத்துவிட்டு, கடிகாரத்தின் அருகில் ஓடிச் சென்றாள். நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு மேலே ஏறி நின்றவாறு கடிகாரத்தின் சிறு கண்ணாடிக் கதவைத் திறந்தாள்; செத்து நின்ற பென்டுலத்தை அவள் ஆட்டும்போது நாற்காலியும் ஆடியது.

இப்போது டிக்…டிக்…என்ற நாடித் துடிப்புக்கள் செவிகளில் கேட்கும்போது அவனுக்குச் சற்று ஆசுவாச மாக இருந்தது.

அவள் இன்னும் கையை மேலே எட்டி, விறைத்துப் போய்க் கிடந்த சின்ன முள்ளை ஆள்காட்டி விரலால் நகர்த்திப் பன்னிரெண்டுக்குக் கொண்டுவந்தாள்.

விச்ராந்தியாக மணி இப்போது பன்னிரண்டு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது.

அடுத்தது ஆறுக்கு நீக்கிப் பன்னிரண்டரை…பிறகு ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை-இப்படிக் கால வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கி, ஏழில் வந்து சேர்ந்தது.

அவன் நாற்காலியைவிட்டுக் கீழே இறங்கியதும், ‘அந்தத் தெர்மா மீட்டரை எடு’ என்றான். தெர்மா மீட்டரை எடுத்துக்கொண்டு வந்து அவன் நாக்கின் அடியில் வைத்தாள் அவள். சற்றுக் கழிந்து எடுத்துப் பார்த்துவிட்டு, “நூற்றி மூணு இருக்கு. டாக்டரிடம் போகாண்டமா?”என்று கேட்டாள் கவலையோடு.

“போய்த்தான் என்ன பிரயோஜனம்? போன வாரம் தானே போனேன்…”

“அதுக்காக…?”

“நீ பேசாம போ…ஐயோ …”

வலியை ஏகாந்தமாய் அனுபவிக்கவிடாமல் அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது. வேதனை அப்படியேதான் இருக்கிறது. ஆறேழு மாதங்களுக்கு முன்… முதல் முறையாக இப்படி வலி வந்தபோது, பிரபல டாக்டர் ஷேனாயியிடம் போனான். அவர் முழுக்க முழுக்கப் பரிசோதனை செய்தார். எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். ரத்தம், சிறுநீர், கபம் எல்லாம் பரிசோதனை செய்யப்பட்டது.

“ஒண்ணும் இல்லை, ஏதாவது மஸ்குலர் பெயினாக இருக்கலாம், அவ்வளவுதான்’ என்று கொஞ்சம் பில்ஸ் எழுதித் தந்து அனுப்பினார்.

சகிக்க முடியாத அளவுக்கு என்று இல்லாவிட்டாலும், வலி இங்கே இடது நெஞ்சில் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும், “நோய்தான் ஒண்ணும் இல்லையே” என்று தனக்குத் தானே சொல்லி, தெம்பை ஊட்டிக்கொண்டு, ஆபீஸ், வீடு, நண்பர் குழாம் இத்தகைய சுற்று வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். ஆனால் நாள் செல்லச் செல்ல உடம்பு இளைத்துக்கொண்டு போவதை அவனால் உணர முடிந்தது. எப்போதும் ஜுரம். உணவிலும் பெரிய நாட்டம் இல்லை. அடிக்கடி வயிறு வேறு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டபோது, மறுபடியும் டாக்டர் ஷேவாயியிடம் போனான். வயிற்றை எல்லாம் நன்றாகப் பரிசோதித்துவிட்டு, மீண்டும் “உங்களுக்கு ஒண்ணும் இல்லை. ஒரு பத்தியமும் பார்க்க வேண்டாம். வாய்க்கு ருசியுள்ளதெல்லாம் சாப்பிடுங்கோ” என்று ஒரு டானிக்கை எழுதித் தந்து அனுப்பிவிட்டார். அப்போதும் நெஞ்சு வலியைப் பற்றியும் அவரிடம் அவன் சொல்லாமலிருக்க வில்லை. இப்போது மீண்டும் நிசப்தம்..

அவன் விழிகளைத் திறந்து பார்த்தபோது பென்டுலம் நின்றுவிட்டிருந்தது. மணி ஏழு பதினைந்தில் நிற்கிறது.

அவன் புரண்டு படுத்தான். என்னவோ ஒன்று உள்ளே புண்ணாகப் புரளுவதைப்போல் சுளீர் என்று ஒரு வலி.

“மாலூ!” அவன் கத்தினான். அவள் வந்தாள். மணியைச் சுட்டிக் காட்டினான்.

அவள் முகத்தைச் சுளித்துவிட்டு, மீண்டும் நாற்காலி யில் ஏறி கடிகாரத்தை ஏழரையாக ஆக்கிவிட்டு அவன் அருகில் வந்தாள்.

“காப்பியே குடிக்கல்லே, கொஞ்சம் பாலாவது கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்…”

“கொஞ்சம் கொண்டு வரரேனே…”

“எனக்கிப்போ ஒண்ணும் வேண்டாம். அப்பா…”

அவள் போய்விட்டாள்.

டாக்டர் ஷேனாயியிடம் போய் வந்த பிறகும், வலி உறுத்திக்கொண்டே இருந்ததால், ஒரு மாற்றத்திற்காக வேறு சில டாக்டர்களிடம் போய்ப் பார்த்தான். அவர்களும் ஷேனாய் சொன்னதைத்தான் சொன்னார்கள்.

இதையெல்லாம் கண்டு, தான்தான் இல்லாத வியா தியை இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொள்ளும் ஒரு ஹைப்போக் கான்டிரியாக் ஆகிவிட்டோமோ என்று தன் மேலேயே அவனுக்குச் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது.

ஆனால்… சுரீரென்று நெஞ்சின் ஆழத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு கிளம்பும் இந்த வலியை,

தீக்கனலை வாரி இறைத்ததைப்போல, அனலாய் வாட்டும் இந்த ஜுரத்தை,

வெறும் பொய், மனப்பிராந்தி என்று தான் சொல்ல வேண்டுமானால், தன் உடம்பில் உயிர் இல்லாமருக்க வேண்டும்.

அப்பா !…. ஐயோ !… இப்போது மீண்டும் அறைக்குள் நிசப்தம்.

அவன் விழிகளைத் திறந்து பார்த்தபோது மணி ஏழு நாற்பதில் நிற்பது தெரிகிறது. அவளைக் கூப்பிட சத்தம் வெளியே வரவில்லை.

காலம் ஸ்தம்பித்துப் போய்விட்டது போலிருந்தது… பூமியின் அசைவுகள் நின்றுவிட்டதுபோல்…!

“இப்படியே கிடந்தால்…? கோமுவை உங்க வீட்டுக்குச் சொல்லி விடட்டுமா?”

கோமு அவர்கள் வீட்டு வேலைக்காரச் சிறுமி.

“உம்…உம்…என்னமும் செய். முதலில் அந்தக் கடிகாரத்தை ஆட்டிவிடு.”

“இதை ரிப்பயர் பண்ணக் கொடுக்கணும். எத்தனை தடவை ஆட்டி விட்டாச்சு…’

“அதெல்லாம் கொடுக்கலாம். இப்போ ஆட்டிவிடு.”

அவன் சத்தம் போட்டான். மாலு பழையபடி கைக் கடிகாரத்தை மேஜையிலிருந்து எடுத்துப் பார்த்தபின் நாற்காலியில் ஏறி நின்று கடிகார முள்ளை எட்டுக்கு நகர்த்தி விட்டு, பென்டுலத்தை ஆட்டிவிட்டாள்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பரபரப்பு… “அப்பா டாட்டா…”என்று சொல்லிவிட்டு மூத்த புத்திரி கள் இருவரும் ஆயாவுடன் ஸ்கூலுக்குச் சென்றார்கள்.

இப்போது அவன் தம்பி உள்ளே ஏறி வந்தான். “மறுபடியும் வலி வந்துட்டதா? கோமு வந்து சொல்லிச்சே?”

தன்னைவிட ரெண்டு வயசுக்கு இளையவன் இவன். முப்பத்தியொன்று வயசு.

“ஐயோ …நல்ல …வலி.”

“காலம்பற இருந்தே ஒண்ணும் குடிக்கல்லே” என்று ஒரு டம்ளர் பாலுடன் வந்து மாலு புகார் செய்தாள்.

“ஒண்ணும் குடிக்காமெ இருந்தா எப்படி? அதை வாங்கிக் குடி” என்று அவனும் சேர்ந்துகொண்டு கட்டா யப்படுத்த, பால் டம்ளரை வாங்கி கொண்டு இரண்டு மடங்குக் குடித்து விட்டுத் திரும்பக் கொடுத்தான் அவன். வலி குறையவில்லை . மணி எட்டரையில் நின்றுகொண்டு கொட்டுக் கொட்டு வென்று தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல் ஒரு பிரமை..

“சரி..டாக்டர்கிட்டே உடனேயே போயிடுவோம்… டாக்ஸி கொண்டு வாரேன்…” என்ற தம்பி வெளியே போய் டாக்ஸி கொண்டுவந்தான்.

வேதனையால் துடித்தவாறு தட்டுத் தடுமாறி நடந்து சென்று டாக்ஸியில் ஏறுவதற்கிடையில், “கடிகாரத்தை ஆட்டிவிடு, நிக்குது” என்ற மாலுவிடம் சொல்ல அவன் மறக்கவில்லை.

டாக்டர் ஷேனாய் வீட்டில் பெரிய கூட்டம். இப்போதும் அவரிடம்தான் சிகிச்சை. நல்லவேளை டாக்டர் வீட்டுக் கடிகாரம் ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. ஒவவொரு நோயாளியும் உள்ளே போய்விட்டு வர இருபது, முப்பது நிமிஷங்களுக்கு மேலே ஆகிறது. பதினொன்றரை மணிக்கு அவன் முறை வரும்வரை, வேதனையால் துடித்தவாறு காத்துக்கொண்டிருந்தான் அவன்.

“டாக்டர்… மறுபடியும் வலி வந்துவிட்டது…” என்று அவன் சொல்லும்போது, முன்பு பல தடவைகள் எடுத்த எக்ஸ்ரே போட்டோக்கள், ரத்தம், சிறுநீர் பரிசோதனை ரிசல்ட்டுகள், டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் துண்டுக் கட்டு எல்லாவற்றையும் டாக்டர் கையில் கொடுத்தான் அவன் தம்பி .

முதல்முறையாகப் பார்ப்பதுபோல் அந்தத் துண்டுக் காகிதங்கள் எல்லாவற்றையும் கவனமாக வாசித்துப் பார்த்தார் டாக்டர். பிறகு எக்ஸ்ரே போட்டோக்களை லைட்டில் வைத்துத் தீவிரமாகப் பார்வையிட்டார்.

பிறகு, பரிசோதனைக் கட்டிலில் அரை நிர்வாணத்தில் கிடந்த அவனருகில் வந்தார். இடது நெஞ்சு, கழுத்து, பிடரி, முதுகு, விலா, இப்படி வேதனை உறுத்தும் எல்லா இடங்களையும் தொட்டுக் காட்டினான் அவன். “எப்போதும் இருக்குமே அந்த மாதிரி வேதனையா?” “இல்லை, அந்த வேதனை எப்பவும் நெஞ்சில் லேசாய் இருந்து கொண்டேதான் இருக்குது. நேற்றைக்குச் சாயந்திரம் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்தே இந்தப் பயங்கர வலி… தாங்க முடியவில்லை … மூச்சுவிட முடியல்லே… அப்போதிருந்தே நல்ல ஜுரமும் இருக்குது… நூற்றி மூணுக்கும் மேலே இருக்குது…” என்று எல்லா வேதனைகளும் விழிகளில் தெரிய அவன் சொன்னான்.

அவன் முதுகில் தட்டிப் பார்த்தார் அவர். பிறகு, ஸ்டெதெஸ்கோப்பை நெஞ்சு, முதுகு, விலா இங்கெல் லாம் வைத்துப் பார்த்து மிக நிதானமாகப் பரிசோதனை செய்தார். பிறகு ஒன்று, இரண்டு என்று அவனைச் சொல்லச் சொல்லிவிட்டு, அவன் ஒன்று , இரண்டு, மூன்று என்று சொல்லிக் கொண்டிருக்க அவன் முதுகில் ஸ்டெதெஸ்கோப்பை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தார்.

கழுத்து, தொண்டையெல்லாம் அழுத்திப் பார்த்தார். வாயைத் திறக்கச் சொல்லிப் பார்வையிட்டார்.

“இருமல் உண்டா?”

“இல்லை.”

பிறகு, வயிற்றை நன்றாக அழுத்திப் பரிசோதித்தார்.

கடைசியில் வழக்கம்போல் சொன்னார். “உங்களுக்கு ஒண்ணும் இல்லை. எதுக்கும் இந்த காப்ஸுல் ஒரு நாள் நாலு வச்சு மூணு நாட்களுக்குச் சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு “ஹொஸ்டா சைக்கிளின்-12 காப்ஸுல்” என்று எழுதித் தந்தார். “மூணு நாள் கழித்து வலி எப்படியிருக்குதுண்ணு தெரிவியுங்கள்” என்ற கூறி விடை தந்து அனுப்பினார் அவர்.

வழியில் ஒரு மருந்துக் கடையில் அவன் தம்பி இறங்கி காப்ஸுல் வாங்கிக் கொண்டு, அவனை வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

கட்டிலில் படுக்கும்போது, கடிகாரத்தை ஆசையுடன் அவன் பார்த்தான்.

அது பதினொன்றில் நிற்கிறது.

அவனுக்குச் சுள்ளென்று ஆத்திரம் ஏறியது. கூடத் தம்பி இருந்ததால் அடக்கிக் கொண்டான்.

ஒரு காப்ஸுல் அவன் வாயில் போட்டு, கொஞ்சம் பார்லித் தண்ணீரையும் தந்துவிட்டு, “எனக்கு லீவில்லை, ஆபீஸுக்குப் போகணும், சாயந்திரம் வாறேன். அடுத்து காப்ஸுல் ஆறு மணி நேரம் கழிஞ்சு சாப்பிடணும்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.

கதவு, ஜன்னல்களுக்கு வெளியே சுள்ளென்று தெரியும் வெயில் நிலவுபோல் குளுமையாக இருந்தது. அவனுக்கு ஜுரத்தால் உடம்பு வெடவெடத்தது. மாலு கம்பளிப் போர்வையைக் கொண்டு வந்து போர்த்தினாள்.

“ஏன் ஆட்டிவிடல்லே?” அவன் சத்தம் போட்டான்.

“எத்தனை தடவைதான் ஆட்டிவிடறது! அஞ்சு நிமிஷம் கூடச் சேர்ந்தால் போல் ஓடமாட்டேங்குது… ஸ்கூலுக்குச் சோறு கொண்டு போக ஆயா வரமாட்டாளா, சும்மா ஆட்டிக் கொண்டு நிண்ணா போதுமா நான்?”…

அந்தக் கடிகாரத்தைப் பார்க்கும்போது அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருவது போலிருந்தது அவனுக்கு!

“சொன்னாத் தெரிஞ்சா தானே, வீட்டில ஒருத்தன் சொகக் கேடாக் கிடக்கும்போது அபசகுனம் மாதிரி இந்தக் கடிகாரம் இப்படி நிண்ணா …!”

அவள் கடிகார முள்ளைப் பன்னிரண்டுக்கு நகர்த்தி விட்டுப் பென்டுலத்தை ஆட்டி விட்டாள்.

இரவு தூங்காததின் அசதியோ, இல்லை மருந்தின் வேகமோ அவனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.

எவ்வளவு நேரம் தூங்கினானோ தெரியவில்லை. தொண்டையில் ஒரு பயங்கர வறட்சி அனுபவப்பட்டது. அவன் திடீரென்று கண்விழித்தான். போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையையும் மீறி உடம்பு வெட வெட வென்று தூக்கியடித்தது. எதிரில் அவனையே கவலை யுடன் பார்த்தவாறு இருக்கும் மாலுவின் முகம் தென்பட்டது.

“கொஞ்சம் தண்ணீர் எடுக்கட்டுமா?”

அவன் விழிகளைக் கடிகாரத்திடம் திருப்பினான். அது சுகமாக, குஷாலாக ஓடிக்கொண்டிருந்தது. மணி 3-10 ஆகியிருந்தது.

அப்பாடா…தேங்க் காட்!

“நிண்ணுதா?”

“இல்லை …அதுக்குப் பிறகு நிக்கல்லே !…”

“அப்பாடா! இனிக் கொஞ்ச நாளைக்குப் பிழைத்துக் கொள்ளும்…” என்று சொல்லும்போதும், தன் வலி காலையில் இருந்ததைவிட மிக அதிகமாக இருப்பதை அவன் உணர்ந்தான். ஓடிக்கொண்டிருந்த அந்தக் கடிகாரத்தைப் பார்த்தவாறு, நிம்மதியாய்க் காலமாகிக் கொண்டிருந்தான் அவன்.

– ஏப்ரல் 1972

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *