கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 9,460 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னக் கோயில் தான். இரும்புக் கிராதிக் கதவுக்குப் பின்னால் பிள்ளையார் சிறைப்பட்டிருந்தார். கதவில் நா தாங்கி போடப்பட்டுப் பெரிய பூட்டுத் தொங்கிற்று.

ராதுவைச் சட்டென்று ஏமாற்றம் தாக்கிற்று. ஒன்பது மணிக்கே கோயில் கதவு சதுரம் சதுரமாய்ப் பிள்ளையாரைக் கூறு போடுகிறதே… பத்தரை மணி வரை திறந்திருக்கும் என்று நந்தினி சொன்னதை நம்பி வெட்டுகிற வெய்யிலில் வந்தது வீண் தானா? ஒருவேளை சன்னிதிக்குப்பின் பக்கம், அந்தக் குருக்கள் பையன், ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கிறானோ?

மெல்ல அடியெடுத்துச் சன்னிதியை வலம் வந்தான்.

ம்ஹும்… பின்னாலும் இல்லை, பிராகாரத்தின் பின் பக்கம் இன்னொரு வழி திறந்திருந்தது. கையில் பிடித்த பையோடு அந்தக் கேட்டைத் தாண்டி வெளியே வந்தான் ராது. ஒரு சின்ன மைதானமும், சற்றுத் தள்ளி வரிசையாய் ஓலை வேய்ந்த வகுப்பு அறைகளும் அதற்கும் பின்னால் புதிதாய் எழும்புகிற கட்டிடமும் தெரிந்தன. விஜயதசமியில் சரஸ்வதியை பரிச்சயம் செய்து கொடுக்க வேண்டிச் சின்னஞ்சிறுசுகளைக் கூட்டி வந்திருந்த நாலைந்து பெரியவர்கள் தென்பட்டார்கள். அவர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்த கூர்க்காவும் தென்பட்டான்.

“கோயிலுக்கு வந்தீங்களா சார்?” என்று கேட்டான் கூர்க்கா.

“ஆமாம்… அந்த பூஜை செய்யற பையன் எங்கே? போய்ட்டானா?”

“அடுத்த தெருவுல காலேஜ் ஹாஸ்டல் இருக்குதுல்ல? அங்க பூஜை பண்ணனும்னு வந்தாங்க… அவரு வரமாட்டேன்னு தான சொன்னாரு …அவங்கதான் ஒரே புடியா புடிச்சு பத்தே நிமிஷம்னு இழுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க. இப்ப வந்துடுவாரு…”

ராது மெளனமாய்க் கோவிலுக்குத் திரும்பி நடந்தான். பேசாமல் வீட்டுக்குப் போய் விடலாமா என்று ஒரு கணம் தோன்றிற்று. உடனே அதை விலக்கினான், நந்தினிக்குத் தாங்காது, ‘ஆரம்பமே அபசகுனமாயிடிச்சே!’ என்று குமுறுவாள், நல்ல நம்பிக்கை! யாரோ பாட்டி சொன்னாளாம். ‘பிள்ளையாருக்கு வாழைப்பழ மாலை போடறேன்னு வேண்டிக்கோ, வாழைப் பழம் மாதிரி குழந்தை வழுக்கிண்டு வெளியே விழும்!’ – அடித்துக் கொண்டு விட்டாள் நந்தினி.

அடையாறின் உள்வாங்கிய அந்த அமைதிக் காட்டில் அவன் கேட்கிற பூவன் பழத்துக்குத் திடீர் பஞ்சம். கடை கடையாய் அலந்தும் கிடைத்தபாடில்லை. பூவன் பழம் தான் விசேஷமாம், மெயின் ரோடுக்கு வந்து தான் பிடிக்க முடிந்தது.

சொன்ன விலைக்கே மறு பேச்சுப் பேசாமல் பதினாறு வாங்கிக் கொண்டான். வீட்டுக்கு வந்து பொறுமையாய் ஒவ்வொன்றாய்ப் பிய்த்துக் கெட்டியான சணல் கயிற்றினால் மாலை யாக்கினான்.

இருபத்தாறு நாள் குழந்தை கையைக் காலை உதைத்துக் கொள்ளாமல் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருக்க, நந்தினி சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

“அப்புறம் வேற என்ன செய்யணும் உங்க சாமிக்கு?”

“ஒரு தேங்கா வாங்கிக்குங்க…”

தட்டித் தட்டிப் பார்த்து வாங்கிக்கொண்டான். மல்லிகைச்சரத்தை அவள் சொல்லாமல் சேர்த்துக் கொண்டான். கோயிலுக்கு வந்து நின்றாயிற்று. ஒவ்வொரு வினாடியும் எட்டி உதைத்தால்தான் நகர்ந்தது.

சர்ரென்று ஒரு கார் டயர் தேய்ந்து கோவில் வாசலில் நின்றது. பட்டு வேஷ்டி யும் மாரை மூடின அங்கவஸ்திரமுமாக ஓர் ஆஜானுபாகு இறங்கினார். டிரைவர் உடன் கதவு திறந்து பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ரோஜா மாலையைக் கையிலேந்திக் கொண்டு பின்னாலேயே வந்தான், சட் டென்று அவர் நெற்றி சுருங்கிற்று.

“கோயில் பூட்டியிருக்கே… குருக்கள் எங்கே ?”

“தோ வந்துடுவாருங்க… பக்கத்துல ஒரு எடத்துக்குப் போயிருக்காரு” என்றான் பக்கத்தில் வந்த கூர்க்கா.

“சரி டிரைவர்… நான் காரெடுத்துண்டு போறேன்….அர்ஜண்டா வேலை இருக்கு. குருக்கள் வந்தவுடனே மாலையைக் கொடுத்துட்டு நீ வீட்டுக்கு நடந்து போய்டு.”

டிரைவர் பவ்யமாகத் தலையசைத்தான்.

கையிலிருந்த பர்ஸைத் திறந்தார். ஐந்து ரூபாய் சலவைத் தாளைக் குறுக்கில் மடித்து உண்டி வாயில் திணித்தார். இடுப்பு அசையாமல் முதுகு மட்டும் குனிய இரண்டு இரண்டு தோப்புக் கரணம்… கார் தூசி கிளப்பிப் பறந்து விட்டது.

ராதுவுக்குக் கை கால்களில் குடைகிற மாதிரி இருந்தது. போய்விடலாம். போய் விடலாம் என்று துடிக்கிற கால்களுக்கு நந்தினியின் ஏமாற்ற முகம் விலங்கிட்டுப் பிடித்தது.

திடீரெனப் பின்புற மைதானத்தில் பர பரபரப்பு ஓடிற்று. ராது பார்த்தால், ஸ்கூல் கேட் வழியே ஒரு அம்பாஸிடர் வந்து நின்றது.

ஸ்லேட்டும் குச்சியுமாய் நிற்கிற பெற்றோர்களோடு சத்தம் போட்ட சிரிப்புகளில் ஈடுபட்டிருந்த கூர்க்கா ஓடோடி வந்து கதவைத் திறந்தான். பின் சீட்டில் முக்காலுக்கு மேல் ஆக்கிரமித்திருந்த அந்த ஐந்தடிப் பெண்மணி சதுரமாய் இறங்கினாள்.

“இறங்ருடா ராஜா…” என்று அவள் குனியாமல் கூப்பிட, சீட்டோடு தேய்ந்து நகர்ந்து வந்து எம்பின சின்னப் பையன் கூர்க்கா தூக்கித்தரையில் இறக்கிவிட்டான். முன் கதவு திறக்க நல்ல உயரமாய் சிவப்பாய் இறங்கின இளவயதுப் பெண் அந்தச் சிறிசுக்கு அம்மாவாக இருக்க வேண்டும். அப்படியே அச்சு… டிரைவர் இறங்கி ஓடிப் போய் டிக்கியைத் திறந்து ஒரு மூங்கில் கூடையை எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் பின்புறமாய் நுழைத்தான். பக்க ஓட்டைகளில் ரோஜாக்கள் எட்டிப் பார்த்தன. குவியலில் மேலே வழிய இருந்த ரோஜாக்கள் மூச்சுத் திணறலில் கடையை விட்டு வெளியேறச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தன. ராதுவுக்குச் சட்டென்று புரிந்தது. ஸ்கூல் ஹெச்.எம்மாய் இருக்க வேண்டும். இந்தக் கோவிலுக்கு டிரஸ்டி. அவள் மெல்ல நடந்து வர, பையன் முன்னால் ஓடி வந்தான். கூர்க்கா தொப்பியைத் தூக்கி மெல்லத் தலையைச் சொறிந்தாள்.

“பாட்டி… கோயில் பூத்தியிருக்கு…”

பையனின் கூவலைக் கேட்டதும் சட்டென்று நிமிர்த்தாள். காத்திருக்கும் அத்தனை பேரையும் பார்த்தாள். பிராகாரத்தில் நுழையாமல் கூர்க்காவைப் பார்த்தாள்.

“எங்கே அந்தப் பையன்.”

“இதோ இப்பத்தாம்மா ரெண்டு நிமிஷம் முன்னாலே பக்கத்து காலேஜ் ஹால்டல்ல கூப்பிட்டாங்கன்னு பூசைக்குப் போனாரு… வர்ர நேரம் தான்…”

அவன் வார்த்தைத் தடுமாற்றத்தில் பொய் படித்தாள் போலும்.

ராதுவைப் பார்த்து வந்தாள்.

“ரொம்ப நேரமாக் காத்திண்டிருக்கேளா?”

“அரை மணி நேரத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கும்….”

“மை காட்… பொறுப்பில்லாத பையன், இதோ நான் ஃபோன்லேயே கூப்பிடறேன், கொஞ்சம் பொறுத்துக்குங்கோ.. ஏன் பொய் சொல்றே?” கடைசி வார்த்தை கூர்க்காவைப் பார்த்து.

“ஆபீல் ரூம் சாவி எடுத்திண்டு வா”

புடவையில் நிறையக் கொசுவம் வைக்க முடியாத அகல இடுப்பு, பணம் பணமாய் விங்கின முகச்சதைகள், வெட்டினபுருவமும், மெலிதான உதட்டுச் சாயமும் வயதை இறக்கி நாற்பதுக்குள் மதிப்பிட வைத்தது. அவளுடைய யானை அடியைப் பின்பற்றிக் கையில் பற்றின சாவியோடு கூர்க்கா கார் பின்னத் தொடர்ந்தான்.

“எங்க போயிட்ட நீர்? எத்தனை பேரு இங்க காத்திண்டிருக்கா பாரு… ” என்று குரல் அறையில் அபாரமாய் வெளியில் பாய்த்தது. ஃபோனை அந்தப் பக்கம் எடுத்தவர்கள் காதுச் சவ்வு கிழித்திருக்கலாம் கூட.

ஐந்தே நிமிடம், கோவில் வாசலுக்கு சைக்கிள் வந்தது. சட்டென்று காலை மாற்றி இறங்கின வேகத்தில் சைக்கிளைச் சுவரோடு சாய்த்து விட்டுக் குருக்கள் பையன் உள்ளே பதறி நுழைந்தான. வாயோரங்கள் அஷ்ட கோணலயாய் நெளிய அசடாய்ச் சிரித்து ‘டேய் கண்ணு’ என்று கார் சிறுவனைக் என் கன்னத்தில் பூ ஒத்தி, அவசரமாய் சன்னிதியின் பூட்டில் சாவியைத் தடுமாறி நுழைத்துத் திறந்து நுழையப் போகிற சமயம் கம்பீரக் குரல் வந்து தாக்கிற்று.

“கை கால் அலம்பிண்டியோ? நேர சன்னிதிக்குள்ள நுழையறே..”

“தோ மாமி…” என்று மறுபடியும் பின்னால் ஓடினான், பம்பு அடிப்படும் சத்தம் கேட்டது. திரும்பவும் ஓடிவந்தான்.

ராது பையை நீட்டினான். உடனே காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டும் போலப் பரபரத்தான்.

“கொஞ்சம் பொறுங்கோ… இவாளை முடிச்சுட்டு வந்துடறேன்.” குனிந்து கடையை எடுத்துக் கொண்டான், பொங்கி வழிகிற பூக்களோடு அதை அந்த அம்மாவிடம் நீட்டினான். அவள் வெறுமனே தொட்டுக் இக்கண்களை மூடிக்கொள்ள பலமாய்க்கரை மோதுகிற குரலில் மந்திரம் சொன்னான்.

“இந்த ஸ்லேட்டை ஸ்வாமி பாதத்திலே வச்சு அர்ச்சனை பண்ணு..”

ராதுவுக்குப் பிள்ளையாரின் பேரிலோ மந்திரங்களின் பேரிவோ சுவனம் செல்லவில்லை. இத்தனநேரமாய்க் காத்துக்காத்துச் சலித்திருக்கையில் நிமிஷம் முன்னால் வந்த வளுக்கு என்ன வாழ்வு என்ற கோபம் உடலெங்கும் ஓடிற்று.

மற்றவர்கள் இந்தப் பாதிப்பு இல்லாத வர்களாகத் தெரித்தார்கள்,

அர்ச்சனை முடிய ஐந்து முக கற்பூரம் ஏற்றப்பட்டு, வெண்கலம் அதிர மணியடித்துப் பிள்ளையாரின் உச்சியிலிருந்து பாதம்வரை மெல்ல இறக்கி வலம் வந்து வெளியே வந்து நீட்ட முதலில் ஹெச். எம். அவன் பேரன், மருமகள் என்று எல்லோரிடமும் கற்பூரம் வந்து போயிற்று.

“அந்த ஸ்லேட்டை எடு…”

எடுத்துக் கொடுத்தான், கையோடு கொண்டு வந்த சாக்பீணைப் பேரன் கையில் கொடுத்து அவன் கையைப் பிடித்துப் பெரிசாய் ஒரு ‘அ’னா எழுதி நமஸ்காரம் செய்து அவள் கிளம்பினாள்.

“மாமா கக்கண்டு…” என்று பேரன் சினுங்கினான்.

“இதோடா கண்ணு …”

ஸ்டூலில் ஏறிப் பரணிலிருந்து ஒரு சின்ன டப்பாலை எடுத்துக் கல்கண்டுக்களைப் பையனிடம் நீட்டினான் அவன்.

“இங்க ஒரு அர்ச்சனை பண்ணனும்” என்றான் ராது கரகரப்பாய்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ, இவா டிரஸ்டி, இவாளை அனுப்பிச்சுட்டு வந்துடறேன்”

ஹெச் எம்மும் பரிவாரமும் பின்புற கேட் வழியே காரை நோக்கி நடக்க, குருக்கள் பையன் பின்னாலேயே அர்ச்சனைக் கூடை. யோடு நடந்தான். கார்க் கதவத் திறந்து பிடித்துக்கொள்ள முதலில் பேரன் அப்புறம் எச்.எம்… கார்க் கதவை அறைந்து சாத்திக் கொண்டாள், மருமகள் முன்னால் ஏறிக்கொள்ள கார் மெல்ல பின் வாங்கிற்று.

அவன் கோயிலைப் பார்த்து நடக்கிற நேரம் கார் சர்ரென்று மீண்டும் முன்னால் வந்து நின்று ‘பீய்ங்க’ என்று அலறிற்று.

“என் செருப்பைக் கோயில் வாசல்லேயே விட்டுட்டேன் பாரு…” என்று குரல் கிழித்தது.

பையன் ஓடிவந்து. செருப்பை எடுத்துக் கொண்டு காரைப் பார்த்து வேகமாய் நடந்தான்.

ராது சட்டென்று பையைத் தூக்கிக் கொண்டு வேகமாய் நடந்து. கையை கட்டி ‘நில்லுங்கள்’ என்று சைகை செய்து காரை நெருங்கினான்.

“அர்ச்சனைதானே… இதோ வந்துட் டேன்…” என்றான் குருக்கள் பையன்.

“நீ நகர்ந்துக்க” என்றான் ராது. “நீங்க ஒரு நிமிஷம் இழே எறங்கறிங்களாம்மா?”

“என்ன விஷயம்?” குழப்பமாய்ப் புரியாமல் கேட்டாள் ஹெச்.எம்.

“நீங்க கொஞ்சம் எறங்குங்க சொல்றேன்”

எல்லோர் கவனமும் இங்கேயே திரும்பிற்று.

அவன் குரலில் இருந்த அழுத்தம் கொடுத்த தூண்டுதலில் ஹெச்.எம். அரை உடம்பை வெளியே கொண்டு வருகிற போது சட்டென்று கையிலிருந்த வாழைப் பழ மாலையை அவள் கழுத்தில் போட்டு விட்டு வாசலைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான் ராது.

– 07-02-1982

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *