கடவுள் இருக்கிறார்

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,335 
 
 

தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன. அதனால், என் கடையில் வியாபாரம் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் பெரிய கடை என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை.
மளிகைக் கடைதான்; ஆனால், நியாயமான விலை, தரமான சரக்கு கிடைக்கும் என்ற பெயர், என் கடைக்கு கிடைத்திருந்தது. அதனால் வருகிறவர்கள் சற்று தாமதமானாலும், காத்திருந்து வாங்கிச் செல்வர்.
நானும் நம் கடையில் தேவையான எல்லா மளிகைப் பொருட்களும் கிடைக்குமென்ற நம்பிக்கையை, மக்களிடம் ஏற்படுத்தி இருந்தேன். அதற்கு மேலே, என் கடையில் விற்கப்படும் பொருட்களின் எடை குறையாதிருக்கும் என்று, மக்கள் பேசிக் கொள்ளவும், அதன் காரணமாக என் கடையைத் தேடி வந்து, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும், நான் மிகவும் உழைத்திருந்தேன்.
கடையை ஒருமுறை, உள்ளே நோட்டம் விட்டேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன், சிறிய பெட்டிக் கடை அளவிற்கு தொடங்கிய கடை. நான் ஒருவனே இருந்து, வியாபாரத்தை கவனித்துக் கொண்ட கடை. கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து, கண்ணாடி அலமாரிகளோடு, மர ஷெல்புகளோடு, எலெக்ட்ரானிக் எடை மிஷின், விலைப் பட்டியலிடும் மிஷின், ஏழெட்டு தொழிலாளர்கள் என்று, பெரிதாகிவிட்டிருந்தது.
தினசரி மளிகை வியாபாரமே, இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபாய் வரை நடக்கும். நல்ல நாள், பண்டிகை, வீட்டில் விசேஷங்கள் போன்ற நாட்களில், வியாபாரம் ஐம்பதாயிரத்தை எட்டிவிடும். அன்று நான், சாப்பாட்டிற்கு வீட்டுக்குப் போகக் கூட முடியாது.
கடவுள் இருக்கிறார்இதோ சில நாட்களில் தீபாவளி வரப் போகிறது. பொது ஜனங்கள் என்று மட்டுமில்லாமல், சிறுசிறு வியாபாரிகள் கூட வந்து, மளிகைப் பொருட்கள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர்.
“”முதலாளி!” என்று சற்று கூட்டம் வடிந்திருந்த போது, கூப்பிட்டபடி என்னிடம் வந்தான் சங்கரலிங்கம்.
கடையில் வேலை செய்பவர்களில், அவனும் ஒருவன். பத்து வருடங்களுக்கு மேலாக, என்னிடம் வேலை செய்கிறான். பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை எதுவும் கிடையாது; கை ரொம்பவும் சுத்தம்.
“”என்ன சமாச்சாரம் சங்கரலிங்கம்? தீபாவளிக்கு ஊருக்கு போக லீவு வேணுமா?” என்றேன்.
“”இல்லை முதலாளி!” என்றான் சங்கரலிங்கம்.
“”தீபாவளிக்கு நான் கொடுக்கிற ஒரு மாத சம்பள போனஸ் போதாதா சங்கரலிங்கம்?”
“”இல்லை முதலாளி!” என்றான் சங்கரலிங்கம்.
“”மெஸ்ல சாப்பாடு நல்லா இல்லையா சங்கரலிங்கம்?”
“”சாப்பாடு நல்லாத்தான் இருக்கு முதலாளி!”
“”பின்னே?”
“”தீபாவளிக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்குது…”
“”ஆமாம்!”
“”நம்ம கடையிலே வியாபாரம் இப்பவே களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு!”
“”சரி!”
“”இருக்கிற ஆளுங்க போதாதுன்னு தோணுது முதலாளி!”
“”வேற ஆட்கள் வேலைக்கு வச்சுக்கிட்டா, நல்லதுன்னு சொல்ல வர்றீயா சங்கரலிங்கம்?”
“”ஆமாம் முதலாளி!”
“”யாராவது வேலைக்கு வர்றாங்கன்னா சொல்லு சங்கரலிங்கம்… வச்சுக்கிடலாம்!”
“”நாலு< நாளா ஒருத்தன் வேலை கேட்டு வந்துக்கிட்டிருக்கான் முதலாளி... வேலை செய்றவன் மாதிரி தெரியுது முதலாளி. அவனை பார்க்கிறீங்களா?'' என்றான் சங்கரலிங்கம். ""வந்திருக்கானா அவன்?'' ""ஆமாம் முதலாளி!'' ""கூப்பிடு!'' என்றேன். சங்கரலிங்கம் கடைக்கு வெளியே தலையை நீட்டி, அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபனை பார்த்து, "குமாரு, இங்க வா... முதலாளி உன்ன பார்க்கணுமாம்!' என்று அழைத்தான். குமார் என்ற அந்த இளைஞன் வந்து, என் முன் பவ்யமாக நின்று, ""முதலாளி, கும்பிடறேங்க!'' என்று இரு கைகளையும் கூப்பினான். சங்கரலிங்கம் வயதுதானிருக்கும் அவனுக்கு. உயரம் கூட அதே அளவுதான்; புஷ்டியான தேகமில்லை. தோற்றத்திலும், முகத்திலும் கஷ்டமும், வறுமையும் தெரிந்தது. ""எந்த ஊரு தம்பி?'' என்றேன். ""திருநெல்வேலி முதலாளி!'' என்றான் குமார். ""அங்கே எங்கே?'' ""பேட்டை!'' ""சந்திப் பிள்ளையார் கோவில் முக்கிலிருந்து போகுமே பேட்டை ரோடு!'' ""அது தாங்க முதலாளி!'' ""என்ன செய்துக்கிட்டிருக்கே!'' ""அப்பா அங்கே கடை வைச்சிருந்தாரு!'' ""என்ன கடை?'' ""மளிகைக் கடை முதலாளி!'' ""பேரு?'' ""சம்முகம் பிள்ளை!'' ""இப்போ கடை இல்லையா?'' ""கடையும் இல்லை; அப்பாவும் இல்லை!'' என்றான் குமார். சொல்லும் போதே கண்கள் கலங்கின; மார்பு ஏறி இறங்கியது. ""என்னாச்சு?'' ""அப்பாவுக்கு இளகின மனசு... ஏமாத்திப்புட்டாங்க எல்லாரும்... போயிட்டாரு மனசொடிஞ்சி!'' ""பாவம்!'' என்றேன். பிறகு, ""நீ அவர் கடையிலே வேலை செஞ்சியா?'' ""ஆமாங்க!'' ""பொட்டலம் எல்லாம் கட்டுவியா?'' ""கட்டுவேங்க!'' ""அவசரத்துக்கு எங்கேயாச்சும் போகச் சொன்னால் போவியா, வருவியா?'' ""போய் வருவேங்க... பத்தாம் வகுப்பு வரை டவுன் மந்திரமூர்த்தி ஹை ஸ்கூல்ல படிச்சிருக்கேங்க!'' ""அரை கிலோ சக்கரை கட்டு பார்க்கலாம்!'' ஒரு பேப்பரை எடுத்து அதை கூம்பு போல உருட்டி, கீழே கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி மடித்து, அதில் சக்கரையைப் போட்டு, தராசில் வைத்து அது காட்டும் எடையைப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையைப் போட்டு, எடை சரியாக தராசு காட்டியதும், இடதுகையில் அதை எடுத்து, வலதுகையில் பிடித்து கூம்பை ஓரிருமுறை சுற்றிவிட்டு, மேல் ஓரங்களை வட்டமாக மடித்து, சணல் கயிற்றை சுற்றி கட்டி, இரு விரல்களால் சணலை திருகி, பிரித்து, அதை விரல் நுனிகளால் சேர்த்து திரித்து, கயிற்றிலேயே செருகினான் குமார். வேலை நேர்த்தியாக இருந்தது. ""உள்ளே வா குமாரு... வேலையிலே சேர்ந்துக்க... வேலைகளை கத்துக்க... அப்பா மளிகை கடை வைச்சிருக்காருன்னு சொன்னே... உனக்கும் ஒரு கடை வைக்கணும்ன்னு ஆசையாயிருக்கும்... தொழில் நல்லா கத்துக்க...'' என்றேன். ""சரிங்க முதலாளி!'' என்று சொல்லிவிட்டு, அன்றே, அப்போதே, அங்கேயே, வேலையில் சேர்ந்து விட்டான் குமார். ஏற்கனவே செய்து பழக்கப்பட்ட வேலைதான் என்பதாலோ, வேலை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியாலோ, சுறுசுறுப்பாக குமார் வேலை செய்வதை பார்த்தேன். தானும் இதுபோன்ற பெரிய கடையை சொந்தமாக நடத்த வேண்டுமென்று அவன் எண்ணக் கூட செய்திருப்பானோ என்னவோ? நான் நினைத்தது சரியாயிற்று. ""குமார் ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்கிற மாதிரி இருக்கே?'' என்று விசாரித்தேன் சங்கரலிங்கத்திடம். ""ஆசை தான் முதலாளி காரணம்!'' என்றான் அவன். ""என்ன ஆசை?'' ""தானும் ஒரு கடை நடத்தி, பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசைதான்... கடையில் வேலை செய்வதோடு, நெளிவு சுளிவுகளையும் தெரிந்து கொள்கிறான். கஸ்டமர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன பொருட்கள், எங்கெங்கு மொத்தமாக என்ன விலைக்கு கிடைக்கும், அதில் குறைந்தபட்ச லாபமாக என்ன விலை விற்கும், ஓரளவுக்கு பணம் கிடைக்கும் என்றெல்லாம் விசாரித்து, அறிந்து கொள்கிறான் குமார். ""விரைவில், தானே சொந்தமாக ஒரு கடையை அவன் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை... அடியே என்பதற்கு ஒரு பெண்டாட்டி கூட இல்லை என்பது போல், ஒரு சின்ன பெட்டிக் கடை வைக்கக் கூட அவனிடம் பணமில்லை முதலாளி!'' என்றான் சங்கரலிங்கம். ""ஆசையும், அதில் தீவிரமும் இருந்தால், காலமும், வேளையும் சேர்ந்து வந்தால், அவன் ஆசை நிறைவேறக் கூடச் செய்யலாம். உனக்கு கூட அப்படிப்பட்ட ஒரு ஆசை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் சங்கரலிங்கம்!'' என்றேன் அவனிடம். ""வெறும் கையால், எப்படி முழம் போடறது முதலாளி?'' என்று சொன்னாலு<ம், சங்கரலிங்கத்தின் மனதில், அப்படி ஒரு ஆசை இருப்பது அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது. அன்று காலையில் கடை திறந்ததும், முதல் நாள் வியாபாரமான பணத்தை எண்ணி, செலானில் அந்த பணத்தின் விபரத்தை, பாங்க் அக்கவுன்ட் எண், தேதி எல்லாம் பூர்த்தி செய்து, தொகையை எழுத்தாலும் எழுதி, கையெழுத்துப் போட்டுவிட்டு, அதை பாங்கில் செலுத்திவிட்டு வர யாரிடம் கொடுத்தணுப்பலாம் என்று நான் யோசித்த போது, குமார் வந்தான். கடையில் அநேகமாக எல்லா வேலைகளையும் செய்ய கற்றுக் கொண்ட அவன், இன்னும் கற்றுக் கொள்ளாதது பேங்கில், எப்படி பணம் போடுவதென்பது தான். அதையும் சொல்லிக் கொடுத்து விடலாமே எண்றெண்ணி, அவனை அழைத்தேன். ""குமார்... பக்கத்து தெருவுல கர்நாடகா பாங்க் இருக்கு... இதோ பாஸ்புக், செலான். இருபத்தையாயிரம் ரூபாய் இருக்கு... எடுத்துட்டுப் போயி பாங்க்ல கட்டிட்டு வா!'' என்றேன். ""முன்னாலே வேலை செஞ்ச இடத்திலே, நான் தான் போயி பாங்க்ல பணம் கட்டுவேன் முதலாளி!'' என்று கூறியபடி, செலான் சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும், பணம் சரியாக இருக்கிறதா என்பதையும் ஒரு முறை எண்ணி பார்த்து விட்டு, கிளம்பிச் சென்றான். நேரம் சென்றது. பாங்குக்குச் சென்ற குமார் திரும்பி வரவில்லை. "திக்' என்றது. சங்கரலிங்கத்திடம் சொன்னேன். "என்ன இப்படி செய்துட்டீங்க முதலாளி... குமார் வேலையிலே சேர்ந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகலே. அதுக்குள்ளே அவனை நம்பி முள்ளங்கி பத்தை மாதிரி, இருபத்தையாயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி இருக்கீங்களே... சே...'' என்று சொல்லியபடி, நான் சொல்லாமலே சைக்கிளை எடுத்துக் கொண்டு, பாங்குக்கு ஓடினான் சங்கரலிங்கம். சிறிது நேரத்தில் சோகத்தோடும், சோர்வுடனும் திரும்பி வந்தான் அவன். ""என்னாச்சு சங்கரலிங்கம்?'' ""பாங்க்ல பாஸ்புக், செலான் எல்லாம் டிரேயிலே கிடந்துச்சு?'' ""நான் கொடுத்தனுப்பிய பணம், குமார்?'' ""பணத்தை பாங்க்ல செலுத்தலே குமார்... பணத்தை எடுத்துக்கிட்டு எங்கேயோ ஓடிப் போயிட்டான் அவன்... தான் சின்னதா ஒரு கடையை ஆரம்பிக்கணும்ன்னு அவன் ஆசைப்பட்டுக் கிட்டிருந்தான்னு சொன்னேனில்லையா முதலாளி. அதுக்காக, நீங்க கொடுத்த பணத்தை எடுத்துக்கிட்டு, அந்த குமார் ஓடிப் போயிட்டான் முதலாளி!'' என்றான் சங்கரலிங்கம். ""நீ சொன்ன மாதிரி அவன் ஒரு கடையை வைப்பானா சங்கரலிங்கம்?'' என்றேன். ""அப்படித்தான் சொல்லிக்கிட்டு, அவன் பணத்தை எதிர்பார்த்துக்கிட்டிருந்தான் முதலாளி... அதனாலே நிச்சயம், அவன் ஒரு கடை வைப்பான், நடத்துவான். ஆனா, நமக்கு முன்னாலே அல்ல, எங்கேயோ?'' என்ற சங்கரலிங்கம், ""ஏன் முதலாளி இப்படி கேக்கறீங்க?'' என்றான். நான் பதில் சொல்லாமல், கடையை பார்த்தேன். இவ்வளவு பெரிய கடையை நான் ஆரம்பத்தில், சின்னதாக நடத்த தேவையான பணத்தை, நான் வேலை செய்யும் கடை முதலாளியிடமிருந்து, குமார் செய்ததைப் போலவே, பண மோசடி செய்து, நம்பின முதலாளியை ஏமாற்றித் தானே, நான் அடைந்தேன்? அதை இப்போது, குமார் செய்து விட்டதால், அவன் மீது நான் கோபமும் கொள்ளவில்லை; போலீசிடமும் போகவில்லை. ஏனென்றால், நான் மோசடி செய்து பணம் பார்த்தது, குமாரின் அப்பாவிடம் தானே? அந்தப் பணம் வட்டியும், முதலுமாக இப்போது குமாரிடமே போய் சேர்ந்திருக்கிறது; சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்துவிட்டது... கடவுள் இருக்கிறார்! - செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *