பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள் அவளுடைய போதாத காலம் சுமார் ஒரு வருட காலமாக மேலும் அவள் சிலுவையில் தொங்கி உதிரம் கொட்டுகிற நிலைமை. . உள்ளார்ந்த உயிர் பதறுகின்ற சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அது தன்னிச்சையாகவே நடந்தேறும். புருஷலட்சணம் வேலைதான் என்ற நிலையும் போய் அவள் புருஷன் ராகவனுக்கு இப்போது வெறுங்கை வருகிற அரை குறைச் சம்பளமும் நின்று போய் குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லாமல் காசுக்காகக் கையேந்தி அவள் படி தாண்டி வந்து ஒரு யுகம் போலாகிறது படி தாண்ட நேர்ந்தாலும் போட்ட பத்தினி வேஷம் அப்படியேதானிருக்கிறது
அது வேஷமல்ல எப்படிக் கஷ்டப்பட்டுக் கழுவாய் சுமக்க நேர்ந்தாலும் தன் உண்மை இருப்பின் நிலை தவறாத ஒப்பற்ற உயிர்த் தடங்களையே தனது ஒரு ஒளிக் கிரீடமாக அவள் பெருமிதத்துடன் அவள் சுமக்க நேர்ந்தது ஒரு வெறுங்கதையல்ல ராகவன் எந்தக் காலத்திலும் தனது உயிரின் பெறுமதி மிக்க மனதின் ஒரு பாகமாக அவளை ஏற்று அனுசரித்துப் போகிற குண விசேஷம் கொண்டவனாக இருந்ததில்லை மாறாக அவளை வஞ்சம் தீர்த்துப் பழி வாங்குகிற அந்த வரட்டு மிருக சுபாவம் அவனுக்கு இயல்பாக அமைந்த ஒரு குணக் கோளாறல்ல
தனது பிறந்த வீடென்று வரும் போது அவன் நினைப்பு வேறு ஒரு கதியில் இயங்குவதை அவள் கண் கூடாகவே பார்த்து மனம் நொந்து போயிருக்கிறாள் தாய் தாகப்பன் சகோதரங்களென்றால், உயிரை விட இன்னும் ஒரு படி மேல் அவர்களுக்காக அவன் உயிரையும் கொடுப்பான் ஆனால் சுமதி விடயத்தில் உயிர் கொடுக்கவல்ல உயிர் பறித்துக் குழியில் போடவே எமன் போல அவனின் காத்திருப்புக் கணங்கள் அவன் வேலையை விட்டது கூட அதற்காகவும் இருக்கலாம் யார் கண்டது? ஆடிக்கலவரம் நிகழ்ந்த போது அவனுக்குக் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை என்ற இடத்தில் வேலை முழுச் சிங்களக் கிராமம் தானென்றாலும் குடும்பப் பொறுப்பு உள்ளவனுக்குக் கடமையொன்றே கர்ம யோகம் மாதிரி என்ன நிலை வந்தாலும் மனம் தளராமல் அதையே சாதித்துக் கொண்டு அங்கே இருந்திருக்க வேண்டியவன் வேலை துறந்து வீடு வந்து சேரும் போது வீடு மட்டுமல்ல அவள் மனமே முற்றாக ஒளி அணைந்து இருண்டு போனது அவன் அம்பாறையிலிருந்து பஸ்ஸில் வரும் போது வழியில் பால் மட்டும் குடித்து விட்டு வந்திருப்பதாகச் சிறிதும் கவலையற்ற மனோநிலையில் பெருமையுடன் பிதற்றிக் கொண்டதைக் கேட்க வேறொருத்தியாக இருந்தால் அவனுக்குக் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்திருப்பாள்.
அவன் அவ்வாறு சுரணையில்லாத பொறுப்பற்ற ஒரு குடும்பத் தலைவனாக இருந்தும் அதை அனுசரித்துப் போகின்ற அன்பு நிலை தவறாத மிகவும் சகிப்புத் தன்மை கொண்ட அவளுக்கு அவன் மீது அந்த வேளையிலும் கூடக் கோபம் வராமல் அவள் பொறுமை காத்து நின்றது அவன் செய்த புண்னியம் தான்
ஆறு பிள்ளைகளைப் பெற்றும் பொறுப்புகளை விட்டு நழுவிச் செல்கின்ற ஒரு கண் மூடிச்சாமியார் போல் அவனது இவ்வாறான நடத்தைகள் குறித்து அவளுக்கு உள்ளூரப் பெரும் மன உளைச்சல் தான
எண்ணிச் சரியாக ஒரு வருடம். அவன் வேலயைக் கை விட்டு வந்ததற்குப் பின்னர், அவளுக்கு அந்த நாட்கள் செல்லரித்துப் போன ஒரு யுகம் போலாகிறது. அவளும் வீட்டிலிருந்து உறங்கினால்; குடும்ப வண்டி ஓடின மாதிரித்தான். அது சிக்கலில்லாமல் ஓடுவதும் நடு வழியில் சில்லு முறிந்த்து கவிழ்ந்து போவதும் இனி அவள் கையில் தான். அவள் கையோ வெறும் கை. அதாவது இப்பவே அவள் ஒரு பட்ட மரம். ஏன் பட்டாள் என்பது அது ஒரு தனிக் கதை. சொன்னால் நீண்டதொரு சோக வரலாறாக நீளும் என்பதோடு, உங்கள் கண்களிலும் இரத்தம் ஆறாகப் பெருகி வழியுமே. அவள் அப்படிப் பிறரை அழ வைத்து ருசி கண்டவளல்ல. ஆகவே வாய் பேசாத மெளன மொழியே அவள் பாஷை
ஒரு வேளை சாப்பாட்டிற்கே வக்கில்லாத நிலைமையில் அவள் தான் என் செய்வாள். புழுதி பறக்கத் தெருச் சுற்றி அலைகிற வேலைதான் இப்போது அவளுக்கு. அவளை நம்பி யார் கடன் கொடுப்பார்கள். கையிலே கழுத்திலே ஒன்றும் மிஞ்சாமல், கடைந்தெடுத்த பிச்சைக்காரி மாதிரி இருக்கிற அவளைப் பார்தால் , காறி உமிழத்தான் மனம் வரும். ஒரு பயல் காசு கொடுப்பானா? என்றோ ஒரு நாள் நிலா உதித்த பொன்னான வேளையில், கொடுத்தானே ஒரு மகான் மகானென்று அவள் நம்பினாள் போனாள். கை நீட்டினாள் கையில் விழுந்தது பொற் காசுகளல்ல பின் என்ன?
அது ஒரு பெரிய கதை. கிரியைத் தெரியுமோ உங்களுக்கு? சவூதி போய் வந்து களை ஏறிய முக விலாசம் அவனுக்கு . அவளுடைய ஊரிலே கொடி கட்டிப் பறக்கிற உல்லாச நடை அவனுக்கு. சுமதியின் வீட்டிற்குப் பின்புறமாக வளைந்து செல்லும் குச்சொழுங்கையில் அவன் ஒரு பல சரக்குக் கடை புதிதாகப் போட்டிருந்தான். எல்லால் பெயர் விலாசம் எழும்பத்தான் . அவளுக்கு அவனோடு பழக்கமுண்டு. அவன் கடையிலே சமையலுக்கான எல்லாப் பொருள்களுமே வாங்கலாம். அவள் போய்க் கடனாகக் கேட்ட போது ஏதோ பெரிய மனது பண்ணி அவன் கொடுத்த கொடை
சுமதியின் குழந்தைகளின் நெருப்புப் பசியைத் தணிக்க அது போதும். சாப்பாடு சாப்பாடு. இந்தக் கூப்பாடும் பிராணாவஸ்தையாய் தோன்றுகிற அவர்களது அழுகையொலியும் அவள் காதுளில் மட்டும் தான் நாராசமாய் வந்து விழும். ஏனென்றால் நெஞ்சம் பாசக் கடலாய் விரியும் அவள் ஒரு மகத்தான தாய்த் தெய்வம். ராகவனைப் பொறுத்த வரை இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த வீட்டில் யார் அழுதாலும் அவன் கண்டு கொள்வதில்லை . பிள்ளைகள் விடயத்தில் அவன் ஒரு இரும்பு மனிதன். கட்டிய மனைவியே கசக்கும் போது பிள்ளைகள் எந்த மூலைக்கு எடுபடும்?
அவன் பிறந்த வீட்டிற்குத் தான் ஒரு குல விளக்கு. உதாரண புருஷன். சுமதி வீட்டைப் பொறுத்த வரை எல்லாம் தலை கீழ் பாடம். சாத்தான் குடிபுகுந்த மாதிரி அவன் மனக் கோளாறு நடத்தைகள் நடுவே இன்னும் புடம் கண்டு நிமிரவே அவள் அந்த துருப்பிடித்த வாழ்க்கைச் சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. அவள் முதன் முதலாகக் கிரியின் கடை வாசலை மிதிக்கும் போது அவன் முகம் மலர்ந்து சிரித்தபடியே கேட்டான்.
“என்னக்கா வேணும்?”
“கொஞ்சச் சாமான்கள் கடனாய்க் கேட்கிறன் தருவியே?”
“என்னக்கா அப்படிக் கேக்கிறியள் ஓ! தாராளமாகத் தாறனே என்ன வேணும்? சொல்லுங்கோ”
அவன் கொடுத்து அவள் பையில் வாங்கிப் போடும் போது மனச் சுமை குறைந்ததென்னவோ உண்மை தான். ஆனால் காசு மூவாயிரத்துக்கு மேல் வந்து விட்டதே .கொடுக்காமல் போனால் இவன் கழுத்தறுக்கவும் தயங்க மாட்டான். அப்பேர்ப்பட்ட மகா முரடன் .படிப்பறிவும் குறைவு இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
இது நடந்து சரியாக ஒரு கிழமை கூட ஆகவில்லை கிரி கொடுத்த சாமான்களுக்கு வாங்க வேண்டிய கடன் காசை வசூலிக்க வீடு தேடி வந்திருந்தான். அப்போது அதிகாலை நேரம். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்குத் தயார்படுத்தி வழியனுப்பி வைக்கிற அவசரத்தில் அவள் இருந்தாள். கடைசி இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கூடம் இன்னும் போகத் தொடங்கவில்லை. ஐந்தாவது குழந்தைக்கு மூன்று வயதுதானாகிறது/.. மற்றது கைக்குழந்தை. பால்குடி மறவாப் பச்சிளங்குழந்தை.. அதையும் விட்டுவிட்டுத் தான் அவள் கடனுக்கு அலைய வேண்டியிருக்கிறது. இது அவளுடைய கையறு நிலை. என்னவானால் என்ன. வீடு எப்படித்தான் தடம் புரண்டு குட்டிச் சுவராகி அழிய நேர்ந்தாலும் ராகவன் அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்வதில்லை.அவன் பிறந்த வீடு எல்லா நலன்களும் பெற்று உச்சத்துக்கு வந்து களை கட்டிய பின், மனைவி மக்கள் எப்படி மண்ணாகிப் போனாலும் அவனுக்கென்ன உடற்சுகம் பெற மட்டுமே மனைவி என்று நினைக்கிறவனுக்கு இல்லற தர்மமென்ற பண்பு நிலை எப்படிப் புத்தியில் உறைக்கும்?
சுமதி மூத்த பையனுக்குதலை சீவி உடை போடுகிற போது வந்தது வினை. திறந்து கிடந்த ஹால் ஜன்னல் வழியே திரை விலகிக் கிரியின் முகக் கறுப்பு ஒரு கரும் பூதமாய்த் தெரிந்தது. ஏற்கனவே கரி பூசிய நிறம். அவன் கோபக் கனல் வீசும் போது அது இன்னும் கரிய நிறம் கொண்டு ஊழித் தாண்டவம் ஆட வந்து நிற்பதாய்ப் பயம் காட்டும். அதை எதிர் கொள்ள முடியாமல் நிலை சரிந்து குன்றிப் போன சுமதிக்குப் பேச நா எழவில்லை .உயிர் விறைத்து உணர்விழந்து ஜடம் வெறித்து அவள் நிற்கிற போது அவன் குரலில் சூடேறிக் கேட்டான்.
“எங்கையக்கா காசு ?சாமான் வாங்கி எவ்வளவு நாளாகுது. எனக்கு இப்ப காசு வேணும். தாங்கோ”
“கிரி இப்ப என்னட்டை ஒரு சதம் கூட இல்லை. நாளைக்கு எப்படியும் உங்கடை காசைப் புரட்டித் தாறன்”
“உதெல்லாம் சரி. வராது எனக்கு இப்பவே காசு வேணும். அது வரைக்கும் நான் இஞ்சை தான் இந்தப் படியிலை இருக்கப் போறன்”
அவளுக்கு தலை விறைத்தது .வேரோடு சாய்ந்து விழுந்து விட்ட ஒரு பட்ட மரம் போல உயிர்க் கொடியறுந்து கிடக்கிற, அவளை நம்பிப் பணம் கொடுக்கிற உலகமா இது . இந்த இக்கட்டான நிலையில் உற்ற உறவே கை கொடுப்பதில்லை. உறவல்லாத புறம் போக்கு மனிதர்களை நம்பி அவள் கையேந்திக் கொண்டு களம் இறங்க முடியுமா? பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பக் கூட அவளுக்கு அவகாசம் இருக்கவில்லை போட்டது போட்டபடியே கிடக்கத் திறந்த வாசல் கூட மூடாமல் ,அவள் சிவமண்ணரை மனதில் நினைவு கூர்ந்த வண்ணம் அவர் வீடு நோக்கிப் போன போது அவர் முன் வாசலில் நின்றவாறு சுவாமிக்குப் பூப் பறித்துக் கொண்டிருந்தார் இந்தப் பூசை புனஸ்காரம் ஒன்றுக்கும் குறைவில்லை அவர் வீட்டில். தினமும் தவறாது நிகழும். அவர் அவளுக்குச் சொந்த அண்ணன் மாதிரி அவளுடைய பெரியப்பா மகன். அவர் நல்ல வசதியான குடும்பத் தலைவன். முன்பு பாங்க் மனேஜராக இருந்து இப்போது ஓய்வில் இருக்கிறார் சிலசமயங்களில் சுமதி அவரிடம் நூறு இருநூறென்று கடன் வாங்கிய ஞாபகம் அவளுக்கு. அதை மறவாமல் தான் அவர் வீட்டுப் படலை திறந்து அவள் வந்திருப்பது கண்டு பூப்பறித்தபடியே அவர் சரளமாகக் கேட்டார்.
“என்ன சுமதி ஏதும் அவசரமே?இந்த நேரத்திலை வந்திருக்கிறாய்?”
“ஓம் சிவமண்ணை! ஒரு மூவாயிரம் ரூபாய் அவசரமாய்த் தேவைப்படுகுது ஒருத்தருக்குக் கடன் குடுக்க வேணும் தருவியளே?”
அவர் அதைக் கேட்டு முகம் கறுத்து போனார் “என்ன நீ……..என்றார் குரல் குழற அவள் அதை மானமிழந்து கேட்டபடி மனம் வருந்தி நின்று கொண்டிருந்தாள். அவர் எதைச் சொல்ல வருகிறாரென்று புரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருந்த போது அவரே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்
“என்ன இருந்தாலும் நீ இப்படியிருக்கக் கூடாது ஒரு வல்லமை வேணும் இருந்தாலும் நான் உனக்குக் காசு தாறன் என்னட்டை இப்ப காசில்லை செக் எழுதித் தாறன் கொண்டு போய்க் குடு இனி ஒருக்கால் இப்படி வராதை”
அவர் அப்படிச் சொன்ன பிறகுமா இந்தக் காசு வேண்டும் அவளுக்கு கேவலம் வெறும் மூவாயிர்ம் ரூபாய்.அதற்கே இவ்வளவு மனக் கொதிப்பென்றால் லட்சம் கேட்டிருந்தால் அவளைக் கொன்றே போட்டிருப்பார். போன கிழமை தான் மனைவி டிவி பார்க்க இருபத்தையாயிரம் ரூபாய் காசு கொடுத்துக் கலர் டிவி வாங்கிப் போட்ட அவருக்கு அவள் கேட்ட இந்தச் சிறு தொகை கொடுப்பதில் இவ்வளவு வயிற்றெரிச்சல் ஏன் வந்தது என்று புரியாமல், அவளுக்குத் தன் மீதே பெரும் தார்மீகச் சினம் மூண்டது .ஆனால் காசை விடவும் மனம் வரவில்லை
அவர் அரைகுறை மனதோடு செக் எழுதிக் கொடுத்த கையோடு அழுகை நதி பெருக்கெடுத்துப் பாயும் ஓர் அபலைப் பெண்ணாய், அவள் வீடு திரும்பும் போது ராகவன் வாசலில் நின்றவாறு அவளை வழி மறித்துக் கேட்டான்.
வீட்டைப் பூட்டாமல் எங்கை உலாத்திப் போட்டு வாறாய்?
“காலாறப் பூங்கவுக்குப் போய் உலாத்துகிற நிலைமையா எனக்கு? என்று கேட்கத் தோன்றினாலும் இப்படி எத்தனையோ கேள்விப் பொறிகள் அவள் மனதில். கேட்க நினைத்தால் எல்லாம் பற்றிக் கொள்ளும். பூகம்பம் வெடிக்கும். அதற்கு ஆளில்லாமல் போன உயிர் வேதம் மட்டுமே அவள் அறிவாள் ஆகவே மெளனமாகத் தலை குனிந்தவாறு அவள் கிரியிடமே வந்தாள்.
“இந்தாங்கோ உங்கடை காசுக்கான செக்” அவன் அதைக் கொஞ்சமும் மனவருத்தமின்றி வாய் நிறையச் சிரிப்போடு வாங்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போன பின் அவனால் இழக்க நேர்ந்த தனது பெருமைக்குரிய மனதின் மான இழப்பை எண்ணித் தாங்கவொண்ணாப் பெருந்துயரத்துடன் பூசை அறைக்குள் ஓடி வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு அவள் கதறியழுத சப்தம் கடவுளுக்கும் கேட்டிருக்க வேண்டும் பூசை மாடத்திலிருந்து அவர் கண் திறந்து தன்னையே பார்ப்பது போல் உணர்ந்து, அவருக்கான இந்த உயிரின் இரத்தம் தோய்ந்த கருணை மனு அவள் வாயிலிருந்து தானாகவே புறப்பட்டு வந்தது.
“இனி ஒரு பிறவி எனக்கு வேண்டாம் அதிலும் பெண்ணாகப் பிறப்பது பெரும் பாவம். அப்படித் தப்பித் தவறிப் பிறக்க நேர்ந்தாலும், இந்தப் பெண் பிறவி எனக்கு வேண்டவே வேண்டாம் அவ்வளவு சிலுவை சுமந்து உதிரம் கொட்டுகிற மனக் காயங்கள் எனக்கு இந்தக் காயங்கள் ஆற மட்டுமல்ல நான் கதி மோட்சம் பெறவே இந்தக் கருணை மனு உனக்குச் சமர்ப்பணம்”.