(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ரவி, மோகன் அங்கிள் வீட்டுக்குப் போய் அம்மா நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு வரச் சொன்னதாகச் சொல்லி சீக்கிரம் போய் பணம் வாங்கிட்டு வா!’ மாலதி தன் மகனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள்.
ராஜனும், மோகனும் இணைபிரியாத உயிருக்குயிரான நண்பர்கள். அது மாதிரியே ராஜனின் மனைவி மாலதியும், மோகனின் மனைவி ஆனந்தியும் சிறந்த தோழிகளாகி விட்டனர்.
அந்த இரு குடும்பங்களுக்கிடையே உள்ள உறவு மிகுந்த பரஸ்பர நோக்கம் கொண்டது. ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொள்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டனர்
இருவரது வீடுகளும் ஒரே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருந்தது. ராஜனும், மோகனும் வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்தனர். இப்படிப்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தான் கடன் வாங்கி வரச் சொன்னாள் மாலதி.
கடன் கேட்டுச் சென்றிருந்த ரவியிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தனுப்பியிருந்தாள் ஆனந்தி. அந்த ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு, தன் கணவன் ராஜன் ஆபீஸ் முடிந்து வீடு வந்ததும், மோகன் வீட்டிலிருந்து ஐம்பது ரூபாய் மட்டும் கொடுத்தனுப்பிய விஷயத்தைச் சொன்னாள் மாலதி.
ராஜன் இதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு, அடுத்த நாள் மோகனை சந்தித்த போது, விஷயத்தை சொன்னான்.
அதைக் கேட்டு மனைவி மேல் கோபமடைந்த மோகன் வீட்டுக்கு வந்து நூறு ரூபாய் கொடுத்தனுப்பாததற்காக ஆனந்தியைத் திட்டிக் கொண்டிருந்தான்.
உங்க நண்பர் வீட்டிலே எதற்கெடுத்தாலும் தடபுடலாக செலவு செய்றாங்களே, அதனாலதான் மாசக் கடைசியிலே கையிலே காசு இல்லாம ரொம்பவும் கஷ்டப்படுறாங்க, நான் நூறு ரூபா கொடுத்தனுப்பியிருந்தா அதையும் இன்னிக்கே செலவு செய்துடுவாங்க. அப்புறம் கஷ்டப்படுவாங்க. உங்க நண்பரின் நலன் கருதி தான் மறைமுகமாக அவங்க செலவுகளைக் குறைக்க வேண்டி, ஐம்பது ரூபாய் கொடுத்தனுப்பினேன். இனிமேலாவது அவங்க செலவுகளைக் குறைச்சு, அவங்க வாழ்க்கையிலே முன்னேறணும்னு நான் நெனச்சது தப்பா?’
ஆனந்தி விளக்கம் சொல்லச் சொல்ல, மோகனின் மனதில் உயர்ந்து கொண்டே போனாள்.
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்