கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 22,543 
 
 

அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன்.

தெரிந்த முகங்கள் யாருமே கண்ணில் படவில்லை. எல்லோரும் புதியவர்களாக தெரிந்தார்கள்.

“”க்ளார்க் சபேசன், சிவராமனை பார்த்துப் புன்னகையுடன் அவரை நோக்கி வந்தார்.

“”சார், நல்லா இருக்கீங்களா. பார்த்து ரொம்ப நாளாச்சு. இப்ப தர்மபுரி ப்ராஞ்சில்தான் இருக்கீங்களா?”

“”ஆமாம் சபேசன். லோன் விஷயமாக என் நண்பர் மானேஜரை பார்க்க வந்தாரு. அவருடன் வந்தேன். எல்லாரும் மாற்றலாகி போயிட்டாங்க போலிருக்கு. புதுமுகங்களாக தெரியறாங்க.”

“”ஆமாம் சார். நம்ப வேதாசலம் சாரும், நானும் தான் பழைய ஸ்டாப். மத்தவங்களெல்லாம் வேறு வேறு இடத்துக்கு டிரான்ஸ்பரில் போயாச்சு.”

வேதாசலம் அவர் கண் முன் வந்தார். சாந்தமான குணம். அதிர்ந்து பேசாதவர். அனைவரிடமும் நட்புமுறையில் அன்புடன் பழகுவார். அவரை எப்படி மறந்து போனேன் நினைத்தவராக,

“”வேதாசலம் எங்கே இருக்காரு.”

“”சார், அவருக்கு ஹார்ட்அட்டாக் வந்து, ரொம்ப முடியாம போயி, ஆஸ்பத்திரியில் இருந்து, இப்பதான் வீட்டிற்கு வந்திருக்காரு. டூட்டியில் ஜாயின் பண்ண இன்னும் பத்து நாள் ஆகும். நல்ல மனுஷன் சார். அவருக்கு வாய்ச்ச புள்ளைதான் சரியில்லை. மகனோட கவலையே அவரைப் படுக்கையில் போட்டுடுச்சு.”

“”மோகன், வேலாயுதம் என் பழைய நண்பர், முடியாம இருக்காரு. அவரை வீட்டில் போய் பார்த்துட்டு கிளம்பலாமா?”

“”தாராளமாக போகலாம் சார். எனக்காக நீங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. போயிட்டு போவோம் சார்.”

கதவைத் திறந்த அவர் மனைவி, கண்களில் சோகம் தெரிய அவர்களைப் பார்த்தாள்.

வேதாசலம் படுத்திருந்த அறைக்கு, அவர் மனைவியை பின்தொடர்ந்து போனார்கள்.

படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

“”வாங்க சிவராமன், எப்படி இருக்கீங்க. இவ்வளவு தூரம் என்னைத் தேடிப் பார்க்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.”

உடல் மெலிந்து, தளர்ந்து காணப்படும் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“”வேதாசலம், இது என் நண்பர் மோகன். அவருடன் ஒரு வேலையாக வந்தேன். உங்களுக்கு உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். உங்ககிட்டே எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. உடம்பையும் நல்லபடியா வச்சுப்பீங்க. உங்களுக்கு ஹார்ட்அட்டாக் வந்ததுன்னு கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டுப் போனேன். பல விஷயங்களை மனதில் போட்டு குழம்பி, உடம்பை கெடுத்திட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். அப்படித்தானே.”

கண்கலங்க நண்பரைப் பார்த்தார் வேதாசலம். “”ஒரே மகன்னு, அதிக செல்லம் கொடுத்து வளர்த்து, இப்ப அவன் நல்வாழ்க்கைக்காக அவனோடு போராடிட்டு இருக்கேன். என் கவலையெல்லாம் என் மகன் தான். சரியான முறையில் படிச்சு பாஸ் பண்ணாம, இன்னும் அரியர்ஸ் எழுதிட்டு இருக்கான். இப்ப இருக்கிற காம்படிஷனில் இவனோட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோன்னு பயமா இருக்கு. எவ்வளவோ எதிர்பார்ப்புகள் வச்சிருந்தேன். எல்லாத்தையும் நாசமாக்கிட்டான்.”

அவர் பேசட்டும் என மௌனமாக இருந்தவர், வேதாசலத்தைப் பார்த்தார்.

“”வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருக்கணும்னு கனவு காண்கிறோம். எல்லாம் நடக்குதா. பாக்கியம் செய்தவங்களுக்குத்தான் நினைச்சபடி எல்லாம் நடக்குது. நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலி. என் கனவுகள் எதுவுமே நிறைவேறலை. என் மகனைப் பொறுத்தவரை, என் எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணாகி, ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கு. ஹார்ட்அட்டாக் வந்து புழைச்சுட்டேன். இன்னும் நான் இந்த உலகில் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கோ, அதையெல்லாம் அனுபவிச்சு தானே போகணும்.”

“”ஏன் இப்படி விரக்தியாக பேசறீங்க வேதாசலம். இப்ப என்ன நடந்ததுன்னு இவ்வளவு கவலைப்படறீங்க. எதுவும் உங்களை விட்டுப் போகலை கவலைப்படாதீங்க.”

“”என் மனசை ஆறுதல்படுத்த, நீங்க சொல்ற வார்த்தைகள்னு எனக்கு நல்லா புரியுது. என் கஷ்டம் இருக்கட்டும். உங்க பையன் எப்படி இருக்கான்?”

“”நல்லா இருக்கான்.”

“”இப்ப ப்ளஸ்டூ முடிச்சிருப்பானே. காலேஜில் சேர்த்தாச்சா. என்னை மாதிரி ஏமாந்து போகாம, ஆரம்பத்திலேயே கண்டிச்சு கவனமாப் பார்த்துக்குங்க சிவராமன்.”

“”வேதாசலம், நீங்க நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. இருந்தாலும் இந்தக் காலத்து பிள்ளைகளின் மனநிலையைப் புரிஞ்சுக்கலை. உங்க மகனுக்கு படிப்பு சரியா வரலை. அதுக்காக அவன் வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போனதாக நீங்க கவலைப்படறது தப்பு. நம்ப பிள்ளைங்க, பெரிய ஆபீசராக, எஞ்சினியராக, டாக்டராக வரணும்னு கனவு காண்கிறோம். எத்தனை பிள்ளைகள் பெத்தவங்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தறாங்க? நம்மோட எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதாலே வாழ்க்கையே முடிஞ்சு போனதா ஏன் நினைக்கிறீங்க. நினைச்சது நடக்காத போது, நடக்கறதுக்கு ஏத்தாற்போல் நம்மை மாத்திக்கிறது தான் நல்லது. மனசில் தேவையில்லாத கவலைகளை வளர்த்துக்காம, எல்லா பிரச்சினைகளும் கடந்து போகும்னு பொறுமையா இருங்க. இந்தக் காலத்து புள்ளைங்க முட்டி, மோதி, எப்படியும் தங்களுக்கான வாழ்க்கையை தேடிப்பாங்க. நம்ப அறிவுரையும், புத்திமதியும் அவங்களுக்குத் தேவையில்லை. அனுபவமே அவங்களுக்கு நல்ல பாடத்தைக் கத்துக் கொடுக்கும். உங்க உடம்பைப் பார்த்துக்குங்க வேதாசலம். நாங்க கிளம்பட்டுமா?”

மோகனுடன் வெளியே வந்தார்.

“”சார், மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பை, துக்கத்தை மறைச்சு, உங்க நண்பருக்கு ஆறுதல் சொன்னீங்க.”

கண்கலங்க மோகனைப் பார்த்தார்.

“”நான் பண்ணின தப்பை, என் நண்பனும் பண்ணக்கூடாது மோகன். என் மகன் ப்ளஸ் டூவில் பெயிலாகிட்டான்னு, அவனை கடுமையாக திட்டிட்டேன். என் மகனும் அதைத் தாங்க முடியாம, தற்கொலை பண்ணிக்கிட்டு, என்னை விட்டுட்டுப் போயிட்டான். அதை நான் அவருக்குத் தெரியப்படுத்த விரும்பலை.
நான்தான் புரியாம, பரீட்சை மார்க்தான், என் பிள்ளையோட வாழ்க்கையையே நிர்ணயிக்குதுன்னு, மன உளைச்சலில், அவனைக் கண்டிச்சேன். விளைவு, இன்னைக்கு என் மகனையே இழந்துட்டு, நடைப்பிணமாக வாழ்ந்துட்டு இருக்கேன். அந்த நிலை என் நண்பருக்கு வரவேண்டாம். தேவையில்லாமல் மனசில் வெறுப்பை வளர்த்துக்கிட்டு, அவர் மகனை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம். அனுக்கான வாழ்க்கை கடவுள் விதிச்சதை அவன் வாழ்ந்துட்டு போகட்டும். அப்பாவுக்கு மகனாக அவன் கடைசி வரை இருக்கட்டும்.”

மகனை இழந்து, துக்கம் தொண்டை அடைக்க, பேசும் அவரை, அனுதாபம் மேலிட பார்த்தான் மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *