(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘இப்போ என்ன செய்றது?’
இது பற்றிய சிந்தனையே மகேந்திரனின் மூளையில் சுழன்று கொண்டிருந்தது. ரொம்ப நேரமாக யோசித்து விட்டான்… முடிவுகள் குழப்பமாகவே இருக்கிறது. ஒரு தெளிவுக்கு வர முடியவில்லை… மனதில் தைரியம் இல்லை. இருட்டை விட்டு வெளிப்பட அச்சம்.
சூழ்நிலைகளின் தாக்குதலுக்கு உட்பட்டு சன்னம் சன்னமாக பின்வாங்கி, விளிம்புக்கு வந்தாகிவிட்டது. இனியும் ஓரடி பின் வாங்கினால்கூட அதல பாதாளம் ; முன்னேற வேண் டுமானால்… மனதில் தடைகள்… குடும்பத்தில் தடங்கல்கள்… சிக்கல்கள்..
“இப்போ என்ன செய்றது?”
உதடு காய்ந்து சொர சொரக்கிறது. அந்த உதட்டில் பீடியை வைத்து உறியும் போது…கீழ் உதட்டின் உள் பக்கம் எரிகிறது. எச்சில்கூட்டி புளிச்சென்று துப்பிக் கொண்டான். கண்கள் எந்தப் பொருளையும் பார்க்காமல் வெறுமனே ‘பார்த்து’க் கொண்டிருக்கின்றன.
‘இனியும் சிந்தனையிலேயே… நாட்களை நகர்த்த முடியாது. இன்னும் இரண்டே நாள்…அதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந் தாகணும், அந்த முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும்…? எதுவாயிருந்தாலும்…முடிவு என்பது எனக்கோர் வீழ்ச்சிதான்! ஒன்னு குடும்பத்துலே குழப்பம், வீழ்ச்சி; அல்லது சமூக வாழ்க் கையோட உள்ள உறவுலே குழப்பம், வீழ்ச்சி!
இதென்ன…. எனக்கு இப்படியோர் கதி ! சமூக உறவும், குடும்பமும் முரண்பட்டு…அம்முரண்பாடு என்னையே நசுக்கி கூழாக்குகிறதே! இம்முரண்பாடு எப்படி முளை விட்டது? இது முளைக்கிற காலத்துலே நா ஏன் விழிச்சுப் பார்க்கலே … ஹும்..
‘இப்போ நா என்ன செய்றது?’
பீடி அணைந்துவிட்டது. எரிச்சலுடன் தரையில் தேவைக் கும் அதிகமாக நசுக்கி தூளாக்கி மன எரிச்சலைக் காட்டிக் கொண்டான். சட்டைப் பைக்குள் மேலும் ஒரு பீடிக்காக துழாவினான். கிடைத்தது. வாயில் வைத்து…அதன் நுனியை பல்லினால் கடித்து வெளியே துப்பி விட்டு தீப்பெட்டியைத் தேடினான். குச்சி இல்லை. தீப்பெட்டியை எரிச்சலுடன் வீசி யெறிந்தான். தெருவில் நின்ற செவலைக் கோழி என்னவோ ஏதோவென்று பதறியடித்துக் கொண்டு சிறகடித்து ஓடியது. அவனுக்கு மனசு குறுகுறுத்தது.
ஒன்றிரண்டு கல்லைப் பொறுக்கி..ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு கோழி மீதும் வீசி எறிந்தான். அவை ஓடியது… இவனுக்கு ரசிக்கவில்லை.
…… சென்ற மாதம் சம்பள தினம். பேக்டரி ஆபிஸில் கையெழுத்துப் போட்டு விட்டு, சம்பளக் கவரை பெற்றுக் கொண்டு வந்தான்.
ஆபிசுக்கு வெளியே மரத்தடியில் சங்கச் செயலாளரும் இன் னும் மூவரும் ஏதோ வசூல் செய்து கொண்டிருந்தனர். சந்தா. வசூலா நன்கொடை வசூலா?
இந்த மாதிரி வசூலிலெல்லாம் தான் பங்கெடுத்துக் கொண்ட முந்தைய நாட்களை நினைத்துக் கொண்டான். அதற்காக சம்பளமில்லாத லீ வுகள் எடுத்துக் கொள்வான்.
அந்த சம்பள இழப்புகள் பூக்கச் செய்த பெருமிதத்தின் இனிமை…. இன்னும் நெஞ்சில் ருசி காட்டுகிறது.
அந்த மரத்தைக் கடக்க முயன்றபோது மகேந்திரனை ஒரு குரல் நிறுத்தியது. “தோழர் மகேந்திரன்…எங்க போறீங்க? சந்தா குடுங்க….”
மகேந்திரன் தயங்கினான்…அந்த தயக்கம் அவனுக்கே கூச்சமாக இருந்தது.
“என்ன தயக்கம்…? உங்களுக்கு எத்தினி மாசம் பாக்கி…. மூனுமாசமா? குடுங்க…”
“இப்ப வேண்டாம்னு பார்க்கறேன்” வார்த்தைகள் உதடு களில் மட்டுமே பிறந்து வெளிப்பட்டன.
“ஏன்,வேண்டாம்? அடுத்த மாசம் தாரீங்களா?”
“இல்லே வேண்டாம்… இனிமே நா சந்தா குடுக்கப் போறதில்லே”
“வேற சங்கத்துக்குப் போறீங்களா?” செயலாளர் முகத்தில் ஒரு நிழல் கருப்பாக விழுந்தது. கண்ணில் கோபம் மின்னீயது.
“எந்த சங்கமும் வேண்டாம்…”
“என்ன காரணம்…? நீங்க நம்ம சங்கத்துலே நிர்வாகக் கமிட்டி மெம்பர்… உங்களுக்கு யூனியன் மேலே ஏதாச்சும் கோபமா? கோபம்னா சொல்லுங்க பேசித் தீர்த்துக் கொள்வோம்…”
“அதுக்கில்லே….அதெல்லாம் பெறகு பார்த்துக்குவோம். இப்ப எனக்கு வேண்டாம்”
இதைச் சொல்லி முடிப்பதற்குள் மகேந்திரன் தவித்துப் போனான். ஏதோ ஒரு நிர்ப்பந்தம் அவனுக்கே எதிராக அவனை பேச வைப்பதை உணர்ந்து… உள்ளுக்குள் புழுங்கினான்.
செயலாளரின் பார்வையில் தெரிந்த கத்தி… அவனை அறுத் தது. நிர்வாணப்படுத்தப்பட்ட மன அவஸ்தை. நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் பார்வையைத் தவிர்த்தான். மனசு வெட்கிக் கூசியது. கூனிக் குறுகினான்.
முள்ளின் மீது நிற்பது போன்ற தர்மசங்கட உணர்வில் நெளிந்தான். நழுவி ஓடிவிடமாட்டோமா தலைதெறிக்க ஓடி விடமாட்டோமா….என்று மனக்சுகுள் ஏங்கினான்.
செயலாளர் முகத்தின் ஏளனம் அவனை வதைத்தது.
“சரி போங்க..”
நடந்தான். நடையில் ஒரு சோர்வு. பஞ்சத்துக்கு திருடி விட்டு, கையும் மெய்யுமாய் பிடிபட்டு, அடிபட்டவனைப் போல மனம் அவமானப்பட்டு கசந்தது.
கோழிகளை குறிக்கோள் எதுவுமில்லாமல் விரட்டிக் கொண் டிருந்த மகேந்திரனின் நெஞ்சில் நினைவுகள் நெளிந்தன.
மேகத்தின் முதுகை விட்டு விலகிய சூரியன், வெயிலின் உஷ்ணத்தை விதைத்தான். கிராமத்தின் வீதி மனிதவாடை எதுவுமில்லாமல் வெறுமையாக இருந்தது. இந்நேரம் காட்டில் இருப்பார்கள்…
இவனுக்கு இப்போது தனிமையே ஒரு தொல்லையாகி விட்டது. இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த அவல மான நினைவுகள், உயிர் பெற்று பூதாகரமாக்கிக் கொண்டே வருகின்றன…
இந்தக் கிராமத்தில் முதன் முதலாக கொடியேற்றியதை நினைத்துப் பார்த்தான். அன்று…கொடி தைக்கும் செலவை தானே ஏற்றுக் கொண்டதை நினைத்தான்…
தானே முன்னின்று கொடியேற்றியதையும்…கூட இருந்த தோழர்கள் கோஷித்து ஆனந்தமாக கை தட்டியதையும்… சாதிக்க முடியாத மகத்தான காரியத்தை சாதித்துவிட்ட பெரு மித உணர்வு நெஞ்சில் பொங்கி வழிந்ததையும்…
“உயரட்டும்.உயரட்டும்
வானில் செங்கொடி உயரட்டும்….
மலரட்டும் மலரட்டும்…
சோசலிசம் பூமியில் மலரட்டும்…”
அன்றைய உற்சாகக் கோஷங்கள் இன்னும் மனதில் ஒலிப்பது போன்ற பிரமை ! அன்று மனதில் பொங்கிப் பூரித்த சந்தோஷ உணர்வுகள், அதன் குளுமை மாறாமல் இன்னும் நெஞ்சுக்குள் தவழ்கிறபோது… இன்றைய மனசின் வெறுமை.. நெருப்பாக தகிக்கிறது.
தனக்குரிய இடத்தைவிட்டு அநியாயமாக தொலை தூரத் துக்கு தூக்கியெறியப்பட்டு… எழ முடியாமல் தவிப்பதை உணர்கின்றான்…
கல்யாணத்துக் முன்பு வரை-
அவன் அப்படித்தானே இருந்தான். தொழிற் சங்கத்தில் முன்னணி ஊழியனாக இருந்தானே! சங்கத்துக்காக உழைப் பதில் எத்தனை ஆர்வம் கொண்டிருந்தான். தனது நியாயங் களை – லட்சியங்களை மனிதர்கள் குழுமியிருக்கும் இடத்திலெல்லாம் பேசி…விவாதித்து… தர்க்கித்து…சண்டை கூட போடு வதில்… எத்தனை சந்தோஷப்பட்டான்.
தான் வாழும் கிராமத்திலும் தனது நியாயத்தை பரப்பி… அதன் கிளையாக ஒரு கொடியையும் ஏற்றி வைத்தானே…
அந்த ஆர்வம்… உத்வேகம் எல்லாம் இப்போது எங்கே போய் புதைந்து போய்விட்டது…? புதைந்து மட்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது?
இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்!
கல்யாணம்!
”எப்பா….எப்பா.. வருவியாம்…”
நான்கு வயதிருக்கும் – நல்லசிவப்பு – ரொம்ப மெலிவு – முகத்தில் மலர்ச்சியின்மை. ஒரு வறட்சி – மூத்தவன் நின்றிருந்தான்.
மகேந்திரன் திரும்பினான். வெயில் கண்ணை கூசச் செய்தது.
“என்னடா?”
“அம்மா கூப்ட்டா”
”போ… நாவாரேன்”
”அம்மா கூப்ட்டா…”
“சரிடா….போடா… பெரிய அம்மா…”
சிறுவன் சிணுங்கிக் கொண்டே நகன்றான். மகேந்திரன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மனம் வீட்டுக்குப் போனது.
‘இந்நேரம் கமலம் என்ன பண்ணிக்கிட்டிருப்பா……சமையலை முடிச்சிருப்பாளோ இல்லே. தலைவலின்னோ…கால் கை உளைச்சல்னோ படுத்திருப்பாளோ..!
ஏனோ தெரியவில்லை… 5 வருஷத்திற்கு பிறகு இப்போது கமலத்தை நினைக்கிறபோது ‘எப்படியோ’ இருக்கிறது! ‘எப்படி யோன்னா.. கசப்பா? சலிப்பா? எரிச்சலா? தெரியலே. இனம் புரியாத குருட்டுக் கோபம் நெஞ்சுக்குள் முட்டுகிறது.
இவளாலே…நா எம்புட்டு கேவலமாயிட்டேன். சே! நாலு பேரு பாத்து கைகொட்டி சிரிக்காங்களே! பொண்டாட்டி முந்தானைக்கு பயப்படுற சுத்த வீரன்னு கண்ணாலேயே கிண்டல் பண்றாங்களே…இந்தளவுக்கு இறங்கிப்போக என்னாலே எப்படி முடிஞ்சது! அந்தளவுக்கா நாபுத்தி மழுங்கிப் போனேன்!…
ஆனா, அவளும் நல்லவாதான்! ஒரு மனுஷனாகக்கூட மதிக்காத இந்த ஊர்க்காரங்க மத்தியிலே என்னை புருஷனாகவே ஏத்துக்கிட்டு மதிப்போட குடும்பம் நடத்துறாளே…’
வீட்டுக்குப் போகலாம் போலிருந்தது கமலம் நெஞ்சுக்குள் அழைத்தாள், பீடி பத்தவைக்க வேண்டும்போல மார்புக்குள் ‘பக பக’ வென்ற உணர்வு.
அவன் வீட்டை நோக்கி நடந்தான். இப்போதும் அந்தக் கேள்வி விசுவரூபமெடுத்து, மனம் கனத்தது.
”இப்போ நா என்ன செய்றது ?”
கமலம் அடுக்களைப் புகையின் முற்றுகைக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருந்தாள். வாய்க்குள் புகை பாய்ந்து நெஞ்சை சுரீரிட்டது. செருமினாள். செருமலே இருமலாகி அவஸ்தைப்படுத்தியது.
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பிள்ளை ‘சிலு சிலு’ வென்று நீரை விட்டுவிட்டு, லேசாக திமிறி.. சிணுங்கி… அழ ஆரம்பித்துவிட்டது அவளுக்கு சங்கடமாக இருந்தது.
‘புள்ளையைப் பாக்க வா’ சமையலை கவனிக்கவா?!
“இந்தச் சனியனோட பெரிய தொல்லையா போச்சு… நேரம் காலம் தெரியாமெ தொண்டையை தொறக்கு பாரு.. என்ன சத்தம்….ஜீவனுக்குத் தக்கவா இரையுது..”
சள்ளையுடன் முணு முணுத்துக் கொண்ட கமலம்…
“ஏலே…. ஏலே…” கோபத்துடன் கத்தினாள், மூத்தவன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தவன்… திடுக்கிட்டு ஒடி வந்தான்.
“என்னம்மா…”
”போயி… உங்கப்பாவை கூட்டிட்டு வா..”
அவன் போய் விட்டான். தொட்டிலில் குழந்தையின் கத றல் அவள் நெஞ்சை என்னவோ செய்தது. அடுப்பும்… புகை யும்… அவளை எழவிடாமல் தடுத்தது.
”நம்ம பொழைப்புக்கு என்னிக்குத்தான் நல்ல காலமோ…” என்று சம்பந்தமில்லாமல் அங்கலாய்த்துக் கொண்டாள்.
இந்த மனுஷனுக்கும் ஒரு பொறுப்பு கிடையாது… பொம் பளை ஒத்தையிலே சீரழியிறாளேகைக்கு உதவியாரெண்டு காரியம் பண்ணுவோம்னு பக்கத்துலே நிக்கிறாா? அது இல்லை எப்பப் பாரு… பேச்சு, பேப்பர் வாசிப்பு தான்…
பேப்பர் வாசிச்சு வாசிச்சு…என்ன பெரீசா கிழிக்க போறாரு? உண்டான வேலையை பாத்துக் கிட்டு இருக்கு வேண்டியது தானே! தெருக் காட்டிலேயே ஒரு ஆம்பளைக்கு என்ன வேலை? பேசிப் பேசிப் பொழுது போனது தான் மிச்சம் உப்புக்கல்லுக்கூட ஆகாத பேச்சு…
உஷ்ணத்துடன் ஓடிக்கொண்டிருந்த அவள் நினைவு ‘சடக்’ கென்று நின்றது. தான் அநியாயமாக சிந்தித்து விட்டதாக ஒரு சுய விமர்சனம் மனசில் படவே நிதானமாகி…நிதானமாக பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.
‘அவரைக் குற்றம் சொல்றதுவும் பாவம்…’என்று நினைத்துக் கொண்டாள்.
‘இந்த அஞ்சு வருஷத்திலே…?
அவள் நினைவில் திடுமென தனது கல்யாண காலம் வந்தது.
அப்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்! இதெல்லாம் தனக்குக் கிடைக்கக்கூடிய மாப்பிள்ளையா? யார் செய்த புண்ணியமோ – நமக்கு இப்படியோர் வாழ்க்கை அமையப் போகிறது என்று நிறையவே பெருமிதப்பட்டுப் போனாள்…
சாதாரண ஏழைக் குடும்பம். அப்பா எங்கோ தொலைதூர நகரத்தில் கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார் இங்கு அம்மாவும் தானும் கூலி வேலை செய்து கஷ்டஜீவனம் நடத்திக் கொண்டிருந்தசமயம்.
இருக்கிற துண்டு நிலமும் எந்த விளைச்சலையும் எதிர் பார்க்க முடியாத வானம் பார்த்த பூமி. இப்படி இருந்த தனக்கு….
“நகை நட்டெல்லாம் வேண்டாம்….எங்களுக்கு பொண்ணு தான் வேணும் … அதுவும் தாயில்லாக் குடும்பத்துலே பூசல் இல்லாமெ நல்லபடியா – லட்சணமா நடத்திப் போனா போதும்” என்று கேட்டபோது
தனக்கும் திருமணம் ஆகுமா….‘நகை நட்டுக்கு எங்கே போவது? எப்போ சம்பாரித்து…. எப்போ கல்யாணமாவது? என் றெல்லாம் ஏங்கிப் போய் கிடந்த அந்த ஏழைக் குடும்பம், எவ்வளவு அக மகிழ்ந்து போயிற்று!
வகையான பருவத்திற்கு, பெய்த மழையில் நனைந்து குளிர்ந்து போன வானம் பார்த்த பூமிபோல!
அதுவும் எப்படிப்பட்ட மாப்பிள்ளை… பேக்டரியில் வேலை 400க்கு மேலே சம்பளம்…. இந்தக் கிராமத்தில் இந்தச் சம்பளம் ரொம்ப உசத்திதான். மத்யதர விவசாயிகள் கூட பொறாமைப்படக் கூடிய அளவுக்கு பெரியசம்பளம்தான்…
தனக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கையா…
அந்த வயதின் கனவுகளுக்கேற்ப அமைந்துவிட்ட வாழ்வி னால் மனசில் ஊறிப்பாய்ந்த இன்ப ஊற்றுகள்….
“வண்ண வண்ணமாய் பூத்துச்” சொறிந்த ஆனந்த புஷ்பங்கள்….
இந்த இன்பத் திகட்டலே…. அவள் குணத்தில் ஒரு மாறுதலை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டது. ‘எந்தப் பெண்ணுக்கும் கிடையாத வாழ்வு, தனக்கு’ என்ற உணர்வின் திகட்டல்… அவளை ‘எவரும் தனக்கு ஈடில்லை’ என்று சிந்திக்கச் செய்ய வைத்துவிட்டது.
எல்லாரையும்விட தான் ஒருபடி மேல் என்ற சிந்தனையே கொஞ்சங் கொஞ்சமாக அவளை அந்நியப்படுத்த ஆரம்பித்து விட்டது. சமுத்திரத்திலிருந்து தனித்தெழுந்துவிட்ட ஒரு தனித் தீவாக அவள் மனம் ஆகிவிட்டது.
மாமாவை மதிக்கவில்லை. கொழுந்தன்களை அலட்சியப் படுத்தினாள். குடும்பத்தில் பூசல்….ஆறே மாதத்தில் தனிக் குடித்தனமாகி விட்டாள்….
ஆயிற்று….இந்த அஞ்சு வருஷத்துலே….எத்தனையோ அனுபவங்கள்… ஆயினும் அவர்கள் தாம்பத்யத்தில் தென்றல் மட்டுமே வீசியது…
என்ன நடந்த போதிலும்…. என்ன செய்த போதிலும் மகேந்திரன் ஒரு நாளாவது அவளை கை நீட்டி அடித்திருப்பானா…? அல்லது மனம் நோகும்படி கடிந்தாவது பேசியிருப்பானா? ஊஹும்!
எவ்வளவோ விட்டு கொடுத்திருக்கிறானே, விட்டுக் கொடுக்கிறபோது மனசுக்குள் உளைச்சல் இருந்தாலும்.. அது கண்டு கமலம் முகம் மலர்கிறது என்பதைக் கண்னுற்று, அந்த மலர்ச்சியில் தன் உள்மனக் கசப்பை விழுங்கிக்கொண்டு அகமகிழ்ந்திருக்கின்றானே….
‘அவரையும் குத்தம் சொல்றது பாவம்….’ என்று வருந்துவதுபோல கமலம் மீண்டும் நினைத்துக் கொண்டாள். தொட்டில் தானாகவே அடங்கி அமைதி கொண்டுவிட்டது.
சமையலையும் முடித்துவிட்டாள். வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு வட்டில்களை கழுவி வைத்துவிட்டு… வேர்த்து விறுவிறுத்துக்கிடந்த முகத்தை அலம்பி…. லேசாக பௌடர் அப்பிக்கொண்டு காத்திருந்தாள்..
‘நேரமாச்சே… பசி தாங்கமாட்டாரே…. ஏன் இன்னும் காணலே….’ என்று யோசித்துக் கொண்டாள்.
வாசலுக்கு வந்தாள். வீதியின் முடிவுவரை கண்ணை ஓட விட்டாள். ஓரிரண்டு மனிதர்கள்….(அதோ அந்த மச்சான்’ கஷ்டம்னு சொல்லி 60 ரூபாய் கைமாற்று வாங்கிப்போய் மூன்றுமாதம் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. இவர்களுக் கெல்லாம் கொடுத்தால் திரும்பவா செய்யும்? படித்து படித்துச் சொன்னாலும் இவர் புத்திக்கு எட்டமாட்டேன் என்கிறதே) அதோ செவலை நாய் … மேய்ந்துவிட்டு திரும்பும் எருமைகள்… ஆனால் அவரைக் காணோம்.
‘அவரை குத்தம் சொல்றது ஞாயமில்லே… இவரைப்போல புருஷன் எவளுக்கு அமையும்? எவ்வளவு பொறுத்துப் போறாரு…. எம்பேச்சை எப்படியெல்லாம் மதிக்கிறாரு…எனக் காக விட்டுக் குடுக்குறாரே…. இப்படி எந்த புருஷன் இருப்பான்? ‘பொம்பளை பேச்சை கேக்குறவனா, நா’ என்று அலட்சியப் படுத்தி விடுவார்களே….
அப்படியெல்லாம் ஒரு நாளாச்சும் தூக்கியெறிஞ்சி பேசின தில்லையே…. என் வார்த்தையை மதிச்சு ரொம்பநாள் தயங்கு னாலும்…. சங்கம் கட்சியின்னு அலையுறதை நிறுத்திட்டாரே, நா சொல்றதுக்காக விட்டுக்கொடுக்க முடியாமே தயங்கும் போதுகூட நா லேசா கண்ணீர்விட்டு கலங்கிட்டாபோதுமே…. அப்படியே உருகிப் போயிடுவாரே….! இளகிப்போற மனுஷன். இந்த இளகின மனசைக் கண்டுக்கிட்டுத் தானே…ஒவ்வொருத் தனும் இவருகிட்டே கண்ணைக்கசக்கி 100, 200 என்று கை மாற்று வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க.
கை நிறைய சம்பளம் வாங்கியும் ‘நாளைக்கு வேணும்’னு ரெண்டாயிரம் மூவாயிரம்கூட சேத்து வைக்க முடியலியே. இவரு. இதைப்பத்தியெல்லாம் எப்பத்தான் புரிஞ்சிக்கிடப் போறாரு.. நாமெ தான் சொல்லணும்… கொஞ்சம் கண்டிச்சுச் சொல்லணும்.
இரக்கப்பட்டுக் கொடுத்தாலும் நல்ல மதிப்பா கெடைக் குது? ‘அவளா, மண்டைக்கனம் ஏறுனவளாச்சே’ என்றல்லவா முதுகுக்குப் பின்னாலே பழிப்புக்காட்டிப் பேசிட்டுப் போறாங்க!
இந்த ஊரில் எந்த ஒரு கழுதைக்கும், நாங்க இப்படி நல்லா வாழ்றது பொறுக்கவே மாட்டேங்குது… பொறாமை யிலே வேந்துசாகுதுக… ‘இவளுக்கு இப்படியொருவாழ்க்கை யா’ன்னு மனசுக்குள்ளேயே வெகுதுக. அவுக பொழைப்பு, காடு கரைன்னு நெறைய இருந்தாலும் விளைய மாட்டேங்குது. விளைஞ்சாலும் விலையிருக்காது. கைக்கு எட்டுனா வாய்க்கு எட்டாது. வீடு பூரா கடன் தொல்லை. அதுக்கென்ன செய்றது!
அவுகவுக மனசுக்கேத்த வாழ்க்கைதானே கிடைக்கும்! பொருமைப்பட்டு புலம்பி ஆகப் போறது என்னவாம்! இந்தத் தெருவுலே இருக்குற பொம்பனைகளுக்கெல்லாம்… நான்னா தீயாயிருக்கும். கண்டால், மூஞ்சை மூனுவெட்டு வெட்டி திருப்பிக்கிடுதுக… சிறு சிறு காரணத்துக்காக… தெனம் சண் டைக்கு வருவாக.. வந்துட்டுப் போகட்டுமே! இந்த வக்கத்துப் போன கழுதைகளோட உறவு இல்லேன்னுதான் நான் அழுகு றேனாக்கும்! இவுக சிநேகம் இல்லேன்னா…ஏ வீட்டிலே அடுப்பு புகையாதோ…. போக்கத்த கழுதைகளை போகச் சொல்லு…
என்ன இன்னும் இவரைக் காணலியே கூப்பிடப்போன அந்தப் பயனையும் காணோம்… மதியம் திரும்பி மேற்கே சாய்ஞ் சிருச்சு பொழுது… இன்னுமா… பசிக்கலே ……. ?
அவள் மீண்டும் வீதியின் முடிவு வரை கண்களை ஓட விட்டாள்…
மனசுக்குள் கமலம் அழைத்தாலும்… மனதில் கனத்து நின்ற அந்தக் கேள்வி – இப்போ என்ன செய்றது – அவனது கால்களைப் பிடித்திருந்தது.
வீட்டுக்கு இந்த சமயத்தில் போகக்கூடாது. இருக்கிற மனநிலையிலே…. நிம்மதியாயிருக்க முடியாது… கமலம் வழக்கம் போல ‘அதுஇது’னு சொல்ல ஆரம்பிச்சா…இப்ப தாங்கிக் கொள்ளமுடியாது… ஒரேடியா வெடிச்சிடுவேன்… கோபத்தில் ஏதாவது இசகுபிசகா நடந்தாலும் நடந்துடும். ஊஹூம் வீட்டுக்கு இந்நேரம் போகக்கூடாது… எங்கே போகலாம்? டீக்கடை பக்கம் போகலாமா? பேப்பர்கூட படிக்க முடியாதே…. மனசு ஒட்டாது. மீண்டும் அதே கேள்வி, ‘இப்ப என்ன…’
ஐந்து வருஷத்துக்கு முன்பு-பேக்டரியில் இதே மாதிரி ஸ்டிரைக் நடந்த போது… நான் எல்வளவு இரண்டறப் பிணைந்து வேலைகள் செய்தேன்!
ஸ்டிரைக்குக்கு முன்பு நடந்த பேச்சு வார்த்தைகளின் அது பற்றிய விவாதம் நியாயமான முடிவுகள் வராததால் ஸ்டிரைக் நடத்துவதா, எந்தத் தேதியில் துவங்குவது… எப்படி நடத்துவது என்பது பற்றிய விவாதங்கள் எல்லாம் அவனில்லாமல் நடந்ததில்லையே!
அந்தப் போராட்டத்தை நடத்திய போது… அதற்காக கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்து ஆதரவுப் பிரச்சாரம் செய்தது… சொந்தக் கிராமத்துக்குக்கூட வராமல் அந்த இருபது நாட்கள் முழுவதும் ஆலையிலேயே கிடப்பாய்க் கிடந் தது….சோறு தண்ணீர் பாராமல் அலைந்தது….. சண்டை சச்சரவு வந்த போதிலும்கூட விளைவைப் பற்றிய கவலையின்றி துணிந்து முன்னின்ற அனுபவங்கள்..
கருங்காலிகள் ஆலைக்குள் துழைந்துவிடக்கூடாதே என்ப தற்காக ஆலைவாசலில் சக தொழிலாளர்களுடன் இரவுக் காவல் புரிந்த பொழுதுகள் ஆயுதம் தரித்த காக்கி மனிதர்களின் நெருக்கமான உலாவலுக்கு மத்தியில், நெஞ்சுயர்த்தித் திரிந்த நினைவுகள்….
மறியல் நடத்தி லாரி லாரியாக தொழிலாளர்கள் சிறைக் குச் சென்றபோது…. “நானும் நாளைக் காலை மறியல்லே கலந்துக்கிடுறேன்”
“வேண்டாம் மகேந்திரன். வெளியேயிருந்து வேலைகளை கவனிக்க பொறுப்பான காம்ரேட்ஸ் வேணும். நீங்க இருங்க…”
செயலாளர் இப்படிப் பதிலிறுத்திய போது நெஞ்சு எவ்வளவு நிமிர்ந்தது… அடேயப்பா தான் எத்தனை உயர்வாக மதிக்கப்படுகிறோம்? பொறுப்பான காம்ரேடாமே!
அந்த மதிப்பீட்டுக்கு சொந்தக்காரனாக இருந்த நான்’ இப்போ என்ன செய்றது…?
உல்லாசமாக வான விதானத்தில் சிறகடித்துத் திரிந்த பறவை குண்டடிபட்டது போல மனம் திடும்மென சோர்வுற்றது.
அந்த மதிப்பீட்டின் உயரத்திலிருந்து எப்போது சரிய ஆரம்பித்தேன்? எப்படி சரிய ஆரம்பித்தேன்?… அந்தச் சரிவு எப்படி சாத்தியமாயிற்று? அன்று சந்தா தரத் தயங்கி நழுவிய சமயத்தில் செயலாளர் பார்த்த பார்வை-
இப்போதும் நெஞ்சை ஊடுருவிப் பாய்ந்து கிழிப்பது போன்ற பிரமை!
தான் எவ்வளவு நழுவி வந்து விட்டோம்… இந்தச் சறுக்கல். என் மனதுக்கு என்றும் உடன்பாடானதல்லாவே! ஆனாலும் நழுவினேன்! மனசுக்கு கசப்பாக இருந்த போதிலும்- கசப்பை விழுங்கிக் கொண்டு… ஒரு பேடியைப் போல சரிந் தேனே! அது எப்படி சாத்யமாயிற்று?!
நான் விரும்பாத ஒன்றைச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு நான் எப்படி ஆளானேன்? அந்த நிர்ப்பந்தம் எது? யார்?
கமலம்! கமலம்தான் … அவளே தான்! அந்த பொட்டைக் கழுதையேதான் !
‘ஓ’வென்று கோபத்தில் கத்த வேண்டும் போலிருந்தது. வெடித்துப் போனாள். திடுமென்று மண்டைக்குள் ஒரு பளீர்!
பளாரென்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த நினைவுப் பளீர்… மடையா… சொல்றவா சொல்றா…. உனக்கு சொந்தப் புத்தி எங்கே போச்சு? கேப்பையிலே நெய் வடியுதுன்னு சொன்னா… கேக்குறவனுக்கு மதி எங்கே போச்சு? கிணத்துலே விழுந்து செத்துப் போன்னா…. விழுந்திடுவீயா?’
‘அதானே, நா எப்படி அந்த நிர்ப்பந்தத்திற்குப் பலியா னேன்! எப்படி பணிந்தேன்… ஒவ்வொரு சரிவு நிகழும் சமயத்திலும் நான் பிரக்ஞையுடன்தானே இருந்தேன் அது பற்றிய மறுப்பும் என் மனதுக்குள் குமுறிக் கொண்டேயிருந் ததே! அப்புறமும் பணிந்தேனே சரிந்தேனே…அது எப்படி சாத்யமாயிற்று?
கமலத்தின் வார்த்தைகளை ஏன் மதிச்சேன்..? மீறமுடியாத வரம்பாக – வேதமாக – அவள் பேச்சுக்கு ஏன் மரியாதை கொடுத்தேன்…?
மகேந்திரன் நினைவு, காரணத்தை – மர்மத்தை – தேடி இருட்டுக்குள் கண்ணை மூடிக் கொண்டு அலைந்தது.
கடையில் வாங்கிய தீப்பெட்டியை நகத்தால் கீறி உடைத் ன். விரல் பதிக்கவிடாமல் குச்சிகளின் ஒற்றுமை எதிர்த்தது. எப்படியோ ஒரு குச்சியை உருவினான். பீடி நெருப்பில் விழித்துக் கொள்ள….புகை நெஞ்சுக்குள் இதமாகப் பரவியது. சுகானுபவத்துடன் நாசிவழியே கசியவிட்டான்….
‘என்ன காரணம்…?’ மீண்டும் சிந்தனையின் குருட்டுப் பயணம்.
அவனது கல்யாண காலம் நினைவுக்கு வந்தது. மற்றவர்களைப் போலல்லாமல் என் கல்யாண காலம் மட்டும் ஏன் அப்படி கேவலமாக இருந்தது?
இத்தனைக்கும் நல்ல சம்பளம்… உத்தரவாதமான வேலை. கொஞ்சம் நிலம். ஊரில் குடும்பத்துக்கு மரியாதை. இத்தனை யிருந்தும் இந்த ஊரில் ஏன் பெண்தர மறுத்தார்கள்? பெண் கேட்ட இடத்திலெல்லாம் ரொம்பச் சுலபமாக மறுத்தார்களே!
அப்போது என் மனம் எவ்வளவு வதைபட்டது! அவமானம் தாங்காமல் உள்ளுக்குள்ளேயே வெந்து பஸ்பமாகிக் கொண் டிருந்தேனே!
பெண் பார்த்துவிட்டு, மறுத்துவிட்டுப் போவதை- பெண்ணை அவமதிப்பதை – ஒரு சமூக வழக்கமாக – சாதாரணமாக – எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு ஆணுக்கு இத்தகையதோர் இழிநிலை சம்பவிக்கும்போது..
அந்த அவலம், என்னை ரொம்பக் கிழித்துவிட்டது. ஊரார் முழுதும் என்னைப் பார்த்து கைகொட்டி நகைப்பது போன்ற பயங்கரப் பிரமை… மனதை அவஸ்தைப்படுத்திக் கொண்டேயிருந்தது.
அப்போது தான் -பக்கத்துக் கிராமத்திலிருந்த கமலம் பற்றிய தகவல் கிடைத்து…நாள் பார்த்து…பெண் பார்க்கச் சென்று…
‘மனுஷனாக்கூட மதிக்காத இந்த ஊரார் மத்தியிலே, என்னை புருஷனா ஏத்துக்கிட்டு மதிப்போட வாழ்ந்து காட் டினாள்…! அது ஒன்றுதான். என்மனதில் அவள் மீது இத்தனை மதிப்பை – காதலை – காட்டச் செய்ததா?
செருக்குடன் உலாவரும் வாலிபப் பருவத்தில், எவனுக்கும் ஏற்பாடாக கொடூர அவமதிப்பு ஏன் நெஞ்சை காயப்படுத்தி சீழ் வடியச் செய்து – நித்யரணத்தில் துடிக்க வைத்ததே…. அந்த ரணத்துக்கு மருந்தாகி -ஆறுதலாகி – சுகமாகி – சந்தோச மலராகி நிமிர வைத்தாளே-
அதனால்தான் கமலத்தை தேவதையாக பாவித்து பூஜிக்க ஆரம்பித்து விட்டேனோ..! அவள் வார்த்தைகளுக்கு கட்டுப்பட ஆரம்பித்து விட்டேனோ!
அன்பைப் பொழிந்து இன்பப்படுத்த வேண்டிய நானே, ஆறுதலுக்காக ஏங்கித் தவித்து – அன்பு தந்த அவளை அதீதமாக அடிபணிய முனைந்துவிட்டேனோ!
மகேந்திரனின் மனசிற்குள் வைகறை புலரத் தொடங்கி விட்டது. சிந்தனையின் குருட்டுப் பயணம் நின்று விட்டது. பளிச் சென்று பிரவாகத்தில்… எல்லாமே துல்லியமாக புலப்பட-
அதெல்லாம்சரி… இப்போ என்ன செய்றது? சூழ்நிலைகளின் தாக்குதலுக்கு உட்பட்டு சன்னஞ் சன்னமாக பின் வாங்கி, விளிம்புக்கு வந்தாகி விட்டது. இனி ஓரடி பின் வாங்கினாலும் அதல் பாதாளம்; முன்னேற வேண்டுமானால், மனதில் தடைகள்…குடும்பத்தில் தடங்கல்கள், சிக்கல்கள்.
இதை எப்படி சமாளிப்பது? என்ன செய்றது…?
தேநீர் விடுதி வழக்கம் போல மதியம் இரண்டு மணிக்கு உயிர் பெறத் துவங்கியது. உள்ளே மனிதக் கசகசப்புகள் ஊர் விவகாரம், அரசியல்… பழைய சம்பவ விசாரணைகள்,
மகேந்திரனுக்கு வயிற்றில் என்னவோ ஒரு கபகபப்பு வீட் டுக்குப் போக விருப்பமில்லை.
“ஒரு சாயா போடுப்பா?”
ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனதிற்குள் நிகழ்ந்த உலைச்சல், அவனை எதையும் கவனிக்கவிட மறுத்தது. ஆழ்ந்த யோசனையுடன் மீண்டும் ஒரு பீடி பற்ற வைத்துக் கொண்டான். உதடு சுட்டது.
பத்து நாட்களுக்கு முன்பு-
ஷிப்டு முடிந்து கிராமத்துக்கு திரும்பிய ஒரு தொழிலாளி நடுவழியில் பாம்பு கடித்து இறந்துவிட்டான். செய்தி கிடைத் ததும் தொழிலாளர்கள் பரபரத்தனர்.
”பிரேதத்தை கொண்டு செல்ல வேண்டும்” என்றனர்.
“ஆலைக்குள் விபத்து நடந்தால்தான் கம்பெனி வேன் தரப்படும்’ என்று மனிதாபிமான மற்ற முறையில் சட்ட விதியை நிர்வாகம் பேசியது.
ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் வேலையை அப்படி அப்படியே போட்டபடி ஜி.எம். ஆபிஸ்முன் திரண்டு ஆவேசக் கூச்சல் போடவேன் கிடைத்தது.
பிரேதம் கிராமம் சென்று தொழிலாளர்கள் அனைவரும் பங்கெடுக்க இறுதியடக்கம் செய்யப்பட்டது. இரண்டு ஷிப்ட் நேரம் வேலையில்லாமல் வெறுமையாக நகர- நிர்வாகம்.
”உற்பத்தி பாதிப்பு, ஆகவே சம்பளம் பிடிக்கப்படும்” என்று நோட்டீஸ் ஒட்டியது. தொழிலாளர்கள் கொதிநிலை யடைந்து விட்டனர்.
பறிபோகும் சம்பளத்தைக்கூட பெரிதாக நினைக்கவில்லை- ஒரு தொழிலாளியின் மரணத்தைப் பொருட்படுத்தாமல் சட்ட விதி பேசும் நிர்வாகத்தின் ராட்சஸ மனோபாவத்தை அவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. கொதித்தெழுந்த தொழி லாளர்கள் மீண்டும் ஜி.எம். ஆபிஸ் முன்கூட . . . சங்கச் செயலாளர் உறுதியாகக் கூறிவிட்டார்.
இப்படி அரக்கத்தனமாக நடந்து கொண்ட நிர்வாகத்துக்கு புத்திபுக்கட்டும் கடமை நமக்கு உண்டு. ஆகவே ஜி.எம். இறங்கி வந்து தொழிலாளர்களுடன் சேர்ந்து இரங்கல் கூட்டம் நடத்த சம்மதிக்கும்வரை நாம் ஓரடிகூட நகரக்கூடாது” என்று வெண்கலக் குரலில் முழங்க-
ஜி.எம். (ஜெனரல் மேனேஜர்)முக்கு இது ஒரு பிரஸ்டீஜ் பிரச்னையாகி திணற – நீண்ட நேர உறுதியான போராட்டத்திற்குப்பின் பணிந்தார். இறங்கி வந்தார்.
கொதி நிலையிலிருக்கும் ‘வொர்க்கர்ஸ்’ தன் மீது பாய்ந்து ரசாபாசமாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் உடல் வியர்த்து தள்ளாட…
செயலாளர் அவருக்கு தைரியம் சொன்னார். பாதுகாப் புக்கு உத்தரவாதம் தந்தார். இரங்கல் கூட்டம் நடந்தது. ஜி.எம்,மும் இரங்கினார். அப்போதே ஒரு 12 (3) ஒப்பந்தம் நிறைவேறியது. (அதாவது நடக்காமல் போய்விட்ட ஷிப்டு களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வதில்லை. ஆனால் பண்டிகை நாட்களில் பார்க்கும் ஷிப்டுகளில் இதன் பாதிப்பை சரிகட்டுவது என்று)
மூன்று நாட்களுக்கு முன்பு நிர்வாகம் மறுபடியும் கூடியது. ‘சம்பளம் பிடிக்கப் போவதாக!’ ஆலையே பரபரத்தது. தொழி லாளர்கள் குமுறினர்.
ஷிப்டு கூட்டங்களில் ஆவேச பிரகடனங்கள்…
நாளைக்கு சம்பளதினம். “சம்பளப் பிடித்தம் செய்தால்.. வேலை நிறுத்தம்’ என்ற தொழிலாளர்களின் வைரம் பாய்ந்த முடிவுகள்; அதை அறிவிக்கும் தந்திகள் ‘மேலே’ பறந்து விட்டன. பத்திரிக்கைகள் கூட செய்தி போடுகின்றன…
சுற்று கிராமங்களே பரபரக்கின்றன.
இப்போ நா என்ன செய்றது?
சங்கத்தின் நடவடிக்கையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பின்வாங்கி, ஒரு சமயத்தில் அறவே ஒதுங்கிய பிறகு அவர் களும் தன்னை ஒரு கோழையாகக் கருதி ஏளனப்படுத்தி இழிவு படுத்திஅதனால் தன் மனதிலும் ஒரு பகையுணர்வும் இடைவெளியும் வளர்ந்த பிறகு…
இப்போ என்ன செய்றது . ? போராட்டத்தில் ஈடுபடுவதா, கருங்காலியாவதா?’
மனசில் கல்லாக இந்தக் கேள்வி அழுத்திக் கொண்டே. யிருக்கிறது. இலக்கற்ற குருட்டுப் பயணமாக எண்ணங்கள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன
“இப்போ என்ன செய்ற…”
கமலத்துக்கு மெல்ல நிதானம் கரைந்து, எரிச்சல் தலை தூக்கியது. “நேரம் காலம் தெரியாமே இந்த மனுஷன்…என்ன பண்ணிக்கிட்டிருக்குது … வந்து சாப்பிட்டுட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே”
நேரம் 2க்கு மேலாகி விட்டது. மூத்தவன் சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். இளையவனை குளிப்பாட்டி, பவுடர் போட்டு, பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் தூங்கச் செய்து விட்டாள்.
கமலம் ‘கடைக்குப் போகலாம்’ என்று நினைத்தாள். வீட் டைப் பூட்டி விட்டு புறப்பட்டாள்.
சரக்கு கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர். என்ன நினைத்தாரோ, திடுமெனக் கேட்டார்
“என்ன கமலம் நாளைக்கு மகேந்திரன் என்ன செய்யப் போறான்?”
“என்ன அண்ணாச்சி. திடுதிப்புனு கேக்குறீக… நாளைக்கு என்னவாம்?”
“ஒனக்குத் தெரியாதா சங்கதி… நாளைக்கு ஸ்டிரைக் நடக்கப் போவுது. ஓம் புருஷன் வேலைக்குப் போறானா இல்லே ஸ்டிரைக்லே நிக்கப்போறானா?”
கமலத்தின் வழக்கமான அலட்சியம் வெளிப்பட்டது.
“ஆமா….இந்தச் சங்கத்துக்காரங்களுக்கு வேறை வேலையே கிடையாது. எப்பப் பார்த்தாலும் இதே பொழைப்புத் தான்….?”
“அப்படியில்லேம்மா…இது சங்கத்துக்காரங்க செய்ற ஸ்டிரைக் இல்லே”
“அப்புறம்..?”
அவர் சம்பவத்தை சொல்கிறார்…இடையில் இறுகிய கர்வப் பாறைக்கும் அப்பால், பெண்மைக்குரிய இரக்க சுபாவம், அவளுள் பதைப்பு ஏற்படுத்தியது.
“இதென்ன கொடுமையாயிருக்கே! காலம் பூரா உழைச்ச ஒரு மனுஷன் செத்தா… அதைப் பத்தி கொஞ்சம்கூட கவலைப் படாமே…. இதென்ன பேய்ப் பிறவிகளா…”
அவளிடமும் கண்டனம் வெளிப்பட்டது.
“அதுமட்டுமில்லேம்மா. இந்த ஸ்டிரைக்லே எல்லாருமே கலந்துக்கிடணும்.. இல்லேன்னா அது நல்லதுல்லே ஒரு நாயம்னா அதுக்காக நிக்க வேண்டாமா…? அதானே மனுஷ லட்சணம்?”
அவள் மௌனமானாள். அவளுள் ஏதேதோ எண்ணச் சுளிவுகள். உளைச்சல்கள். வழக்கமான பயணத்தில் ஏதோ ஒரு தடை குறுக்கிட்டு விட்டதை உணர்ந்தாள். விருப்பமில்லா மல் பின் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணரும் சமயத்தில், அவளுக்குள் மறுப்பு தோன்றியது. இருப்பினும்-
எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கும் போது…சிலர் மட்டும் கருங்காலியானால் ஏற்படும் அவமானத்தை- தனது கணவனும் அந்த அவமானத்தில் பங்கெடுப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியுமா?
அதுக்காக ஸ்டிரைக்லே கலந்துகிட்டா…மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்துலே ஏறுன மாதிரி – சங்கம், கட்சி யின்னு சிநேகம் வந்துவிடுமே….
நெஞ்சு சுமையில் அழுத்த…அவள் கடையை விட்டு அகன்றாள்.
மணி மூன்று இருக்கும்
இன்னும் அவர் வரவில்லை. மனசுக்குள் பதைப்பு காணத் தொடங்கியது. என்ன காரணம்? ஏதாச்சும் கோபமா? என்ன கோபம்? இதே மாதிரியான மன உளைச்சலில் அவரும் தவிக்கிறாரோ!
வேலைக்குப்போனால்…ஆலை பூராவும் காறித்துப்புவார்களே என்று கலங்குவாரோ!-இந்த ஊர்லயிருந்து பத்துப்பேரு வேலை பாக்குறாங்க. அத்தனை பேரும் ஸ்டிரைக் செய்ய… இவர் மட்டும் வேலைக்குப்போனா,ஊர் இவரைக் கேலி செய்யாதா?
அதுக்காக பின் வாங்குவதா? சண்டை போட்டவங்களோட மறுபடியும் சங்காத்தம் வைச்சிக்கிடுவதா? இவரை சங்கம் கட்சியின்னு அலையவிடுவதா?
அவள் ஊசலாடினாள். இதயம் பூராவும் உறைந்து கிடந்த கர்வத்தினடியில் எங்கோ ஓர் சிறு கசிவு!
பொழுது முகம் மாறி மஞ்சளாகிக் கொண்டிருந்தது. ஐந்து மணியிருக்கும். தண்ணீரெடுக்கப் போனாள். அங்கும் பெண்கள்….
இறந்துபோன தொழிலாளியைப் பற்றி வருந்தினர். இறப்புக்குக் கூட இரங்க மறுத்து அடம் பிடிக்கும் அயோக்கியர் களை அவர்கள் பாஷையில் திட்டினர். ”இதே வசவு, நாளைக்கு நம்ம புருஷனுக்கும் வருமோ”
ஏனோ… கமலத்துக்கு ‘சுருக்’கென்று குத்தியது. மௌனத் தில் இறுகி தனிமையில் வந்தாள். கசிவு! கசிவு!
வீட்டுக்குள் பானையுடன் நுழையும் போது-
உள்ளே உட்கார்ந்திருந்தான் மகேத்திரன். முகமெல்லாம் கறுத்து. அறுபட்ட கொடியாக வாடிப் போயிருந்தான். குடிகாரனுடையதைப் போல கண்கள் கலங்கியிருந்தன.
கண்டிப்பதற்காக வாயைத் திறந்தவளுக்கு என்னவோ போலிருந்தது. இவன் முகமும் படிந்திருந்த துயரமும் அவள் மனதைப் பிசைந்தது…
“ஏன் இப்படி பசி பட்டினியோட இருக்கணும். உடம்பு என்னத்துக்காகும்?…” பரிவோடு கேட்டாள். ஏறிட்ட்டுப் பார்த்தான். பார்வையில் தீம்பொறிகள் பறந்து மறைந்தன.
“ஒரு நாளையிலே உடம்பு ஒன்னும் சுடுகாட்டுக்கு போயிடாது…”
திகைப்போடு நிமிர்ந்த அவளின் விழிகள் மலர்ந்தன. திடுக்கிட்டுப்போய் கேட்டாள்…
“எதுக்கு இப்படிப் பேசுறீக…”
“சோறா பெரிசு…? மனுஷனா இருக்க வேண்டாம்? நா மனுஷனாகவா இருந்துருக்கேன்…?”
சம்பந்தா சம்பந்தமின்றி அவன் சீறுவதைக் கவனித்தாள். இது நேற்றுவரை இருந்த அவரல்ல…வேறு இவர்!
“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு?”
”எனக்கும் ஒன்னு ஆகலே…”
”சரி… நாளைக்கு என்ன செய்யப் போறீக?”
விருட்டென்று நிமிர்ந்தான். பார்வையில் ஏதேதோ அர்த்தங்கள்! சட்டென்று அர்த்தங்கள் உதிர்ந்து வெறுமையாகிப் போன பார்வை.
“என்ன ஆனாலும் சரி என்னை அடிச்சுக் கொன்னாலும் நா வேலைக்குப் போகத்தான் போறேன்?”
”எதுக்கு? நாடோட நாமோடன்னு… எல்லாரையும் போல நின்னுக்கிட வேண்டியது தானே! எல்லோருக்கும் ஒரு பாதை நமக்கு மட்டும் தனிப் பாதையா?
“போங்கடா உங்க சங்கமும் வேண்டாம், ஒரு மயிரும் வேண்டாம்’னுட்டு விலகி வந்தேனே … நாளை என்ன முகத்தோட அவங்க முன்னாடி போய் நிற்கிறது? என்னையும் சேர்த்துக் கோங்கன்னு…எப்படி வாயைத் திறந்து சொல்றது?”
”இதுலே வெக்கப்பட என்ன இருக்கு? ஆயுசு பூரா பாடு பட்ட மனிஷன் அகாலமா செத்துக் கிடக்க…அதுக்கு வருத்தப் படுவதே தப்புன்னு சொன்னா…அது என்ன ஞாயம்? அதுக்காக சம்பளம் பிடிச்சா…அக்கிரமமில்லே…? இதைத் தட்டிக் கேட்குறப்போ.. நீங்க மட்டும் வேலைக்குப் போனா. என்ன அர்த்தம்…?”
இன்னிக்கு அவுகளுக்கு… நாளை நமக்கு… பக்கத்து வீட்டுத் தீ நம்ம கூரைக்கு வர, எத்தினி நாளாகும்…?’
மகேந்திரனின் கண்கள் திகைத்து மலர்ந்தன.
“என்ன சொல்றே…நீ…?”
“வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்றேன்.”
அவனுக்கு சப்பென்றாகி விட்டது. வழக்கம்போல் பேசுவாள், அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் அடித்தே தீர்த்துவிட வேண்டும் என்று வெறியோடு வந்த அவனுக்கு… இவளுடைய மாறுதல் சப்பென்றாகி விட்டது…அது சரி…
இவள் ஏன் இப்படி பேசுகிறாள்…இவளை இப்படி மாற வைத்தது எது? தன்வீடு, தன் வாழ்வு என்று குறுகிய தன்னலமும் தன்னகங்காரமும் கொண்ட இவள் மனம், எப்படி விரிந்தது… பாதிக்கப்பட்ட சகலருக்கும் பரிவு காட்டும் அளவுக்கு எப்போது விரிந்தது..?
அவனுக்குப் பிரமிப்பாகவும், புதிராகவும் தோன்றினாள். நிஜமாகவே இவள் கமலம் தானா…? இல்லை. வேறு கமலம்!
சூரியன் அஸ்தமித்து…இருள் பரவத் தொடங்கியது. ஆனால் மகேந்திரனுக்கு இப்போதுதான் வைகறை புலர்வது போலிருந்தது.
– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.