‘திருமணம் என்பது இப்போதெல்லாம் படிப்புக்கு படிப்பு, வேலைக்கு வேலை, வசதிக்கு வசதிக்குந்தான் நடக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க மனசுக்கு மனசுக்கும் நடக்கிறதில்லை. அதனால் விவாகரத்து வழக்குகள் நீதி மன்றத்தில் அதிகரித்து விட்டன’ என பக்கத்து வீட்டு நண்பர் முகுந்தன் பேசிய போது, தானும் ‘மனம் பார்க்காமல் பணம் பார்த்து தன் மகனுக்கு மணம் முடித்ததால் மருமகள் தங்கள் மீதும், தன் மகனான அவள் கணவன் மீதும் விரும்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லையோ…?’ என வருந்தினார் ரகுவரன்.
“நம்ம அடுத்த தெரு நாராயணன் பொண்ணுக்கு அமைஞ்ச மாப்பிள்ளை இருக்காரே…. சூப்பரோ, சூப்பர். கெடைச்சா அப்படியொரு மாப்பிள்ளை கெடைக்கனம். இல்லேன்னா கல்யாணமே பண்ணாம இருந்துக்கனம். அவரப்போல கட்டினவ மேல கசிந்துருக முடியுமான்னு தெரியல…? அப்படியே தன் பொண்டாட்டிய தாங்கறாரு பாரு. பார்க்கறவங்கள ஏங்க வைக்கிறாரு. ‘மாப்பிள்ளைக்கு என்ன வசதி இருக்க வேண்டும்?’னு யாராவது என்னைக்கேட்டா, ‘மனைவி மேல் காதலால் கசிந்துருகும் மனம் இருக்க வேண்டும்’ னு சொல்லறது சரியான பதிலா இருக்கும்’ என முகுந்தன் தன் மேலான விருப்பத்தை வெளியிட்டார்.
தானும் தன் மனைவி வசந்தியுடன் அன்பால் வாழ்க்கை வாழாமல் காலத்தை வீண் விரையம் செய்து விட்டதாகவும், தன் மகனையும் தம்மைப்போலவே வாழ்வை வீணடிக்க விட்டுவிடக்கூடாது என மனதில் உறுதி தோன்ற மகன் தன் மனைவியுடன் குடியிருக்கும் வீட்டிற்கு தனது காரைத்திருப்பினார் ரகுவரன்.
திருமணமானதும் இரண்டு மாதங்களிலேயே தனிக்குடித்தனம் வைத்து விட்ட மாமனார் ரகுவரன், வீடு குடி புகுந்து ஒரு வருடமாக இங்கு வராதவர், திடீரென இன்று வந்திருப்பதைக்கண்டு மகிழ்ச்சியோடு வரவேற்றாள் மகன் வசந்தனின் மனைவி நிறைமாத கற்பிணியான வைதேகி.
தன் மகள் வீட்டிற்குச்செல்லும் பெற்றோர் அக்கரையுடன் கேட்பது போல், ‘நீ சந்தோசமா இருக்கயாம்மா? என் பையன் உன்னை சந்தோசமா இப்ப பார்த்துக்கிறானா? கல்யாணமாகி நீங்க ஒத்துமையா இல்லாமப்போனதுனால தான் தனிக்குடித்தனம் போனா ஒத்துமை வரும்னு நெனைச்சித்தான் இப்படி தனிக்குடித்தனம் வெச்சமே தவிர உன்னைப்பிடிக்காம இல்லே…’ சொல்லிக்கண்ணீர் வடித்தவரின் கண்களில் வடிந்த கண்ணீரை ஒரு மகளைப்போல சென்று தன் ஆட்காட்டி விரலில் மருமகள் வைதேகி சுண்டி விட்ட போது, தன் மகனும் நாராயணனின் மருமகனைப்போலவே தன் மருமகளோடு காதலால் கசிந்துருகி குடும்பம் நடத்துவதைப்புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தார் ரகுவரன்.