ஓரு கணிப்பொறியாளனின் நினைவுப் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 10,173 
 
 

அன்புள்ள வாசகர்களுக்கு,

என் பெயர் இளங்கோ முத்துசாமி; என்னை சுருக்கமாக இளங்கோ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். எனக்கு உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன; நான் இந்த விஷயங்களை எழுதி கிழித்துப்போடவேண்டும் என்று தான் முதலில் எண்ணியிருந்தேன், ஆனால், உண்மையில் எழுதக்கூடாத எழுதப்படாத விஷயங்களை எழுதி தீர்த்துக்கொள்வது என்ற முடிவோடு, எனது கடந்த காலத்தில் என்னை வாட்டி வதைத்து, நெகிழ்ந்த நினைவுகளை முடிந்தவரை எனது ஞாபக அடுக்குகளிருந்து அசைப்போட்டு பார்த்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என் இந்த நினைவுப்பாதையை படித்து முடிக்கும் முன் நான் இந்தியா வந்திருப்பேன்.

இப்படிக்கு

இளங்கோ முத்துசாமி.(கணிப்பொறியாளன்.)

என் நினைவு அலைகளை எங்கிருந்து ஆரம்பிப்பது ?;

அப்பொழுது, தோராயமாக இரவு 8:30 மணி இருக்கும், ஆம் நீயூஜெர்சி,அமெரிக்காவில் என் அலுவலகதில் நான் இருந்ததாக ஞாபகம்,…

அப்பொழுது, என் மனைவியிடமிருந்த வந்த அந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசும்பொழுது எனக்கு சற்று நிம்மதியாக, இருந்தது. அவளிடம் என் அம்மா பேசியதாக சொன்னாள். ஆனால், என் அம்மாவின் குரலை என்னால் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் கலந்த வருத்தம் இருக்கத் தான் செய்தது. நான் அமெரிக்காவுக்கு வேலைக்கு வந்து 15 வருடங்கள் ஒடிவிட்டன. நீயூ ஜெர்சி அழகான அமைதியான நகரம் என்று கேள்விப்பட்டேன்; இதை ரசிப்பதற்கு என் கண்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் நான் சொல்லவேண்டும்.

இந்த வாழ்க்கையில் நான் பெற்றது என்ன? எனக்கு கைநிறைய சம்பளம்,மனைவி, ஒரு குழந்தை இவ்வளவு தான், ஆம்.

என் மாமனார் இந்தியாவில் சிறந்த தொழிலதிபர், ஒரு கார் விபத்தில் என் மாமாவும்,அத்தை இருவரும் இறந்துவிட்டனர். நான் வேலைக்கு போய் சம்பாதித்தது போதாது என்று என் மனைவியும் இப்பொழுது வேலைக்கு போகிறாள்.

நான் ஐந்து வருடங்களுக்கு முன், எவ்வளவோ சொல்லி பார்த்தாகிவிட்டேன், அவள் கேட்பதாக இல்லை, நமக்கு வரும் வருமானம் போதுமானதாக தான் உள்ளது, குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகவில்லை நீ குழந்தையை நன்றாக கவனித்துக்கொள் என்றேன்,

அவள் மாட்டேன், நானும் நன்றாக படித்துள்ளேன், எனக்கும் வேலைக்கு போகும் ஆசை இருக்காதா? என்றாள். “அவள் நீங்கள் எங்கள் சுதந்திரத்தில் தலையிடுகிறீர்கள். பெண்கள் வேலைக்குச் சென்றால் உங்களை போல ஆண்களுக்கு பிடிக்க மாட்டேன்கிறது” என்று பெண்ணியம் பேசுகிறாள்.நீங்கள் வேண்டுமென்றால் இனி வேலைக்குச் செல்லவேண்டாம் எங்கிறாள் எனக்கு உன்னைப்போல் பால் சுரக்காது என்று சொல்ல வாயெடுத்தேன்; சரி நாமே எதற்கு பிரச்சனையை கூட்டிக் கொள்வானேன் என்று விட்டுவிட்டேன்.

என் வேலை காலை 9 மணி முதல் தொடங்கும் நான் எப்போழுது வீட்டுக்கு வருவேன் என்று எனக்கே தெரியாது. என்னை சொல்லி குற்றமில்லை வேலையின் பழு அப்படி. அவள் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்ற நம்பிக்கை முதலில் இருந்தது.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை அவள் மாலை 6 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் பிறகு பின் இரவு 4 மணிக்குத் தான் வருவாள். எங்களுக்கு எங்கள் வசிப்பிடம் ஒரு லாட்ஜ் போலத்தான். நான் வரும்பொழுது அவள் இருக்கமாட்டாள்; அவள் இருக்கும்பொழுது நான் வேலைக்கு கிளம்பி விடுவேன். நாங்கள் ஒன்றாக சந்தித்து பேசி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

என் குழந்தைக்கு இப்பொழுது 6 வயது ஆகிறது என்பது கூட இன்றைக்குத் தான் எனக்குத் தெரியும். அவள் தங்கும் இடம் கலிஃபோர்னியா, ஆனால் வேலை பார்க்கும் இடம் லாஸ் ஏஞ்ச்சலஸ், நான் நீயூ ஜெர்சி எங்கள் குழந்தை சான் ப்ராசிஸ்கொ(காப்பகம்), சனி, ஞாயிறு கூட எங்களால் பார்த்துப் பேசமுடியாது என் குழந்தையை நாங்கள் தங்கி படிக்கும் பள்ளிகூடத்தில் படிக்க வைத்துள்ளோம். காலை எழுந்தால் குறைந்தது 300 லிருந்து 500 மைல் வரை நாங்கள் இருவரும் பிரயாணம் செய்யவேண்டும் . இதைவிட நாங்களும் எங்கள் குழந்தைகளும் சந்தித்துபேச வேண்டும் என்றால் கூட குறைந்தது 1300 மைலுக்கு மேல் பிரயானம் செய்யவேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அவள் லாஸ் ஏஞ்சலஸ்லிருந்து சான்ஃப்ராண்ஸிஸ்கோ சென்று அங்கிருந்து என் குழந்தையை அழைத்துக்கொண்டு மீண்டும் கன்சாஸ்க்கு வந்து சேர்வாள். நாங்கள் கன்சாஸ்க்கு மூவரும் சந்திக்கும் இடமாக மாற்றியுள்ளோம். தூரம் எங்களுக்கு பிரச்சனையே இல்லை, ஆனால் அலைச்சல்;

ம்…..எல்லாமே இப்பொழுது மாறிவிட்டது . எங்களை நாங்களே நவீன வாழ்வுக்குள் எவ்வளவு சிக்க வைக்க முடியுமோ அவ்வளவு சிக்கலுக்குள் மாட்டி வைத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆம், நான் ஒரு கணிப்பொறியாளன், என்னை சுற்றி வேறு வேறு உலகம் இயங்கிக்கொண்டிருப்பதை மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஏன், நாங்கள் குடும்பத்துடன் ஒரு நல்ல படத்துக்கு போய் கூட வெகு நாள் ஆகிறது.

சே என்ன வாழ்க்கை இது! என் படிப்பு என்னை வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்கவில்லை, வாழ்க்கையை ஜெயிக்க கற்றுக் கொடுத்துள்ளது, மற்றவர்களின் ஊண கண்களுக்கு நான் சிம்ம சொப்பனமாக தெரிவேன். ஆனால் என் படிப்பு என்னை காது கேட்காத, வாய் பேசமுடியாத, பார்க்க முடியாத குருடனாக ஆக்குவதில் சாதனை கண்டிருக்கிறது. ஒரு அட்டவணை வாழ்க்கையில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மாணம் செய்துக்கொண்டு வாழும் மனித கூட்டத்தில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் நாங்கள் தத்தளிக்கிறோம்.

ஆம், கணிபொறியாளன் ஆன உடனே சொந்த ஊர், உடன் படித்த நண்பர்கள் ,சொந்த வீடு, தான் அப்பொழுது காதலித்த பெண், தனது இயல்பான அசட்டுதனங்கள், தனது மத நம்பிக்கைகள் அனைத்தையும் சுருட்டி ஒழித்து வைத்துக்கொள்ள தொடங்கினேன். எங்களை போன்ற கணிபொறியாளர்கள் எல்லோரும் எங்களை சுற்றி ஒரு பெரிய கலாச்சார தீவை சிருஷ்டித்துள்ளோம்; ஆம் நாங்கள் எல்லோரும் அதன் பிரதிநிதிகள். நாங்கள் எல்லோரும் எதோ நேரடியாக விண்கலத்திலிருந்து பூமியில் அந்த தீவில் இறங்கியவனைப் போல நடந்துக் கொள்ள ஆசைப் படுகிறோம். இது நாள் வரைக்கும் இது ஒருவித குத்தகைக்கு வரும் வேலை; இந்த குத்தகை ஒரு கொட்டிக்கொடுக்கும் குத்தகை; எனக்கு ரொம்ப நாட்களாக என் மனசை வாட்டி வதைத்த கேள்வி ? கணிபொறி துறையும் எல்லா அறிவு துறையை போல அதுவும் ஒரு துறை தானே!;

பிறகு, ஏன் நான் இந்த துறையில் பாண்டித்யம் அடைந்தவுடன் தன் சொந்த ஊர், கிராமம் எல்லாம் எனக்கு மறந்துப்போய் விடுகிறது. இந்த மேல் நாட்டு கல்வி எனக்கு வாழ கற்றுக்கொடுக்கவில்லை; இவர்களுடைய இரத்த நாளங்களில் ஒரே ஒரு சித்தாந்தம் மட்டுமே ஒடி கொண்டிருக்கிறது; அது எதையுமே வெல்ல வேண்டும்; நாம் முதலிடம் பிடிக்கவேண்டும்; இதையே நம்மவர்களையும் அவர்கள் போல் ஆக்க துடிக்கிறார்கள்; நாங்கள் வேலை செய்யும் இடத்தை சுற்றி எவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றன.. இங்கே வானை தொடும் கட்டிடம், இருக்கிறது, அழகான பூங்காக்கள் இருக்கின்றன, எல்லா பொருட்களும் இந்த ஊரில் கிடைக்கிறது ஆனால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்களா என்ற பதில் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. நான் கடந்துச்செல்லும் வழியில் எவ்வளவு அழகான மனிதர்கள் வாழ்கிறார்கள், என் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துக்கொள்ள ஆசைப்படவில்லையே? ஒருவேளை அவர்களும் அப்படிதானோ என்று யுகிக்க தோண்றுகிறது;

இந்த நாட்டிலே எவ்வளவு அழகான இசை இருக்கிறது, இலக்கியம் இருக்கிறது, நுண்களைகள், விளையாட்டு இருக்கிறது. அதில் ஏன் என் மனதை ஈடு படுத்திக் கொள்ள முடியவில்லை !?! என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது, நான் படிக்கும் இளம் பருவத்தில் இருந்த பத்து சதவித ஈடுபாடு கூட எனக்கு இப்பொழுது இல்லை, என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக உள்ளது. இதற்கு காரணம் விஞ்ஞாணத்தை மற்ற துறைகளைப் விட உயர்வாக நினைக்கும் என் மணோநிலை, மற்றவர்களை விட நிறைய படித்து விட்டோம் என்ற அகம்பாவம், இவை அனைத்தையும் தாண்டி நான் ஈடுபாடு கொண்டிருந்தால் என் பிம்பம் கலைந்து விடும் என்ற பயம், இது என்னை போன்ற கணி பொறியாளனுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் பொருந்தும் இதில் உள்ளூர்,வெளீயூர் என்ற பேதமில்லை.

இன்று என் மேல் அதிகாரி என்னை ஒரு கோப்பை சரி பார்க்கச் சொன்னார் என்ற நினைவு இப்பொழுது தான் வந்தது, அந்த கோப்பை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன், மணி இரவு பத்தை தொட்டது. எனக்கு இப்பொழுது தான் அவள் என்னை தொடர்புக்கொண்டதும் என் நினைவுக்கு வந்தது; என்ன செய்வது இப்பொழுது மறதி வேறு என்னை ஆட்டிப் படைக்கிறது. உடனே அவளை தொடர்பு கொண்டேன்; அவள் இந்தியாவில் உங்கள் அம்மா உடம்பு சரியில்லாமல் இருப்பதாக சொன்னாள்; அந்த நொடியில் என் மனதில் என் மனைவியின் நேரடியான பதிலை நினைத்து லேசாக கோபம் வந்து மறைந்தது “உங்கள் அம்மா என்று சொல்வதற்கு பதிலாக ‘எங்க அல்லது நம்ம அத்தை’ என்று சொல்லியிருந்தால் நாகரிகமாகவும் நன்றாகவும் இருக்குமே என்று நினைத்துக்கொண்டேன், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தொலைபேசியை துண்டித்தேன். சற்று நேரம் மவுனமாக இருந்தேன் , அம்மாவின் நினைவு என்னை வாட்டி வதைத்தது.

என்னுடைய விடுப்பு விண்ணப்பம் எழுதி என் மேனஜரிடம் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

வேறு சில கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவரைச் சென்று பார்க்க எண்ணி இருந்தேன், ஆனால் என் மேனேஜர் என் கேபினுக்கு என் விடுப்பு விண்ணப்பத்தை தூக்கிக்கொண்டு வந்தார், என்னிடம் “ஹெலோ மிஸ்டர்.இளங்கோ யு ஆர் ரீயலி லக்கி யுவர் லிவ் சாங்கசன் வாஸ் கிராண்டட்” என்றார், ,, அவர் ஆங்கிலேயன் ,அவர் முகம் வெளுத்திருந்தது. ரீசிவரை வைத்துவிட்டு உட்காரும் படி சொன்னேன் .அவர் முகத்தில் உள்ள சில கரும்புள்ளி அவர் அழகை கெடுத்தது; அவர் வறட்டு தொண்டையிலிருந்து வரும் குரலை கேட்டு கேட்டு என் மனம் பழகிக் கொண்டது. உங்கள் “லீவ் சங்க்சன் “ லெட்டர் என்னிடம் தான் உள்ளது, எனக்கு ஒன்று புரியவில்லை; நீங்கள் உங்கள் தாயாரை சென்று சந்திப்பதாக கூறினீர்கள். அப்படி என்ன இருக்கிறது அங்கு.என்றார்.

நீங்கள் உங்கள் பெற்றோரை சென்று பார்த்ததுண்டா என்று கேட்டேன், அவர் ஐஅம் சாரி, ஐ டோண்ட் லைக் இட், சேம் டு தேம் ” என்றார். அதாவது அப்படி சென்று பார்ப்பது அவருக்கு அவர்களுக்கும் பிடிக்காதாம்.

எனக்கு என் மேனேஜரை நினைத்து எரிச்சலாக வந்தது, என்ன வாழ்க்கை வாழ்கிறார் இவர் கொஞ்சம் கூட பசையில்லாத வாழ்க்கை,

அவர் சற்று யோசித்துவிட்டு “ இல்லை “ என்றார்.

அவர் நெற்றி புருவம் சுருங்கி குவிந்தது

மீண்டும் அவர் அப்படி சென்று பார்ப்பதால் என்ன இருக்கிறது என்றார்,

நான் உங்களுக்கு சொன்னால் புரியாது ‘பாஸ்’ இதை அனுபவதித்தால் தான் தெரியும் என்றேன்; ஒகே இளங்கோ “ஹேவ் ஏ நைஸ் டிரிப்” உதட்டளவு வார்த்தையால் கூறினார்.நான் தேங்கஸ் ஏ லாட் என்றேன். எனக்கு ஒன்று புரியவில்லை? நாகரிக போர்வையை மாட்டிக்கொண்ட நாம் எல்லோரும் வறட்டு சொற்களுக்கு அடிமையாக தானே இருக்கிறோம். நமக்கு தேவையோ தேவையில்லையோ நாம் இதை ஏற்றுக் கொண்டும் சகித்துக்கொண்டும் வாழ பழகிகொள்கிறோம்…. இதய பூர்வமான உணர்வுக்கு சொற்கள் இல்லை ஆனால் செயல் வேகம் உண்டு.. மற்றவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக எவ்வளவு பகட்டாக நடிக்க வேண்டியுள்ளது இந்த வாழ்க்கையில்….

நானும் பதிலுக்கு தாங்க்ஸ் தாங்க்யு வெரி மச் என்றேன். அவர் என்னை பார்த்து புண்னகைத்து விட்டு அப்படி என்ன இருக்கிறது உங்கள் சொந்த ஊரில் நீ இங்கேயே இருக்கலாமே என்றார். நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு “ நீங்கள் என்றைக்காவது உங்கள் அப்பா அம்மாவை சென்று பார்த்து இருக்கிறீர்களா” என்றேன்.

நான் அவரை விடாமல் எப்பொழுதாவது உங்கள் உறவினர்களை சென்று சந்தித்தது உண்டா என்றேன்

அவர் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்,

கடைசியாக பெற்றோரை எப்பொழுது பார்த்தீர்கள் என்றேன்.

“நோ மிஸ்டர், ஐ ரிமம்பர்”, என்றார்

மேலும் அவர் முன்று மாததிற்கு முன்பு என் தாயாரை அந்த பெட்ரோல் போடும் இடத்தில் பார்த்தேன்; அவள் அவளுடைய மூன்றாவது கணவருடன் எங்கோ சென்று கொண்டிருப்பதாக சொன்னால்.. நான் அவளிடம் வேறு ஒன்றும் பேச முற்படவில்லை ஆனால் அவள் பிறகு சந்திப்பதாக கூறி சென்றாள்.

நான் அவரைப்பார்த்து “ சோ, யூ ஹஅவ் திரி பாதர்ஸ்” என்று நக்கலாக சிரித்துக்கொண்டேன்.

அவரும் வெகுளியாக சிர்த்துக்கொண்டே “யெஸ்” என்றார்

நான் எனக்காக நீங்கள் அவசியம் ஒருமுறையாவது உங்கள் தாயை சென்று பாருங்கள் என்றேன்; அதற்கு அவர் இல்லை அவள்…. ப்ரைவசிய டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே… பிறகு ஏதோ யோசித்துவிட்டு நீங்கள் சொல்வதற்க்காக இந்த வாரம் முயற்சி செய்கிறேன்” என்றார்.

நான் “சரி விடுங்கள் நீங்கள் நான் சொல்வதற்காகவது நாளை போய் பாருங்கள்” என்றேன்.

அவர் “ஓகே, நாளை வீக் எண்ட், நீ சொல்வதற்காக நான் செல்கிறேன்” என்றார்.

அவர் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார், அவர் உட்கார்ந்த இடத்தை பார்த்தேன் அவர் உட்கார்ந்த அந்த குசன் சீட்டீல் சற்றுப் பள்ளம் விழுந்திருந்தது. மீண்டும் என் கோப்பை எடுத்துப் புரட்டினேன், என் மனம் வேலையில் ஒட்ட வைக்க மருத்தது. என் மேஜை மீதிருந்த கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்,

அதன் நொடி முள்‘ டக்..டக்..டக்’ என்று அடித்து சுற்றுவதை கவனித்தேன், இப்பொழுது துல்லியமாக அதன் ஒலியை என்னால் கேட்க முடிந்தது. அந்த கடிகாரத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் பார்த்தால் இந்த கடிகாரத்தின் முட்களும் நானும் ஒன்று; இந்த கடிகாரங்கள்முன்னைவிடவேகமாக எங்களை இயக்குகின்றன, அவற்றுக்கு ஈடுகொடுத்து போட்டி போட்டு கொண்டு வெறியுடன் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம் ஆம், சுற்றிக்கொண்டிருக்கும் இந்த முட்களை மட்டுமே என்னால் பார்க்கமுடிகிறது. அந்த முட்களுக்குக் கூட எதற்காக சுற்றுகிறோம் என்பது அதற்கும் தெரியவில்லை ,எனக்கும் தெரியவில்லை. அதை இயக்கும் ஆயிரக் கணக்கான பாகங்களுடைய கட்டளைக்கு கீழ் படிந்து நடப்பதே அதன் வேலை, ஒரு வகையில் பார்த்தால் நானும் அப்படி தான். எனக்கு தெரியாது யாருக்காக எதற்காக வேலை செய்கிறேன் என்று, என்னை இயக்கும் அவர்களுக்கும் என்னை பொறியாளனாக வடிவமைத்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். இன்னும் அழுத்தமாக சொல்லப்போனால் ஆம் ,இந்த பூமி பந்தில் மேல் நான் ஒரு ஒட்ட வைத்துக் கொண்டுள்ள முட்கள், நான் நொடி,முள்ளா,அல்லது சின்ன முள்ளா, பெரிய முள்ளா என்பது எனக்கே தெரியவில்லை? ஆனால் வாழும் மட்டும் சுழற்சி என் மனதை விட்டு நீங்காத முட்கள்.

கோப்புகளை மூடி வைத்துவிட்டு சற்று அமைதியாக ஆனேன். என் பழைய ஞாயாபங்களை மீட்டு எடுத்தேன், பழைய நினைவுகளை நினைக்கும்பொழுது உண்மையில் நெகிழ்ச்சியாகத் தான் உள்ளது.

எனக்கு மதுரைக்கு பக்கத்தில் சோழவந்தான் தான் சொந்த ஊர். உண்மையில் அது ஊரில்லை அது ஒரு சொர்க்க பூமி, இல்லை இல்லை பூமி பந்தில் மேல் விழுந்த சொர்க்கம், அங்கே இருபக்கமும் தென்னந் தோப்புகள் பக்கத்திலேயே ஆறு ஒடுகிறது. அந்த தோப்பிலிருந்து வீசும் காற்றை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கு ஒன்று புரியும், கடவுள் இங்கு வாழ்பவர்களுக்காவே காற்றையும் சுத்திகரித்து அனுப்புவதாக தோண்றும், அந்த ஈரப்பதம் குலைந்த காற்று உண்மையில் நம்மை அறியாமல் நம்மை ஒரு ஏகாந்த நிலைக்கு இட்டு செல்லும்;

அங்கு நடக்கும் திரெளபதி அம்மன் கோயில்லே பெரிய திருவிழா நடக்கும், ம்…. பத்து நாள் கூட நடக்கும், பக்கத்தூர்லேருந்து எல்லாம் ஜனங்க வருவாங்க, தீ மிதிப்பாங்க,கூத்து கட்டுவாங்க, கரகம் எடுப்பாங்க, அதெல்லாம் நெனைச்சா இப்ப கூட என் காத பொலக்குது; இப்பவும் அங்கு திருவிழா நடக்கும் தான் நினைக்கிறேன்.

அந்த நாட்களில் காலையில் ஆற்றுப் படுக்கையில் பெண்கள் தன் பாவாடையை அக்குளுக்குக் கீழ், மார்புக்குள் மேல் இருக்க கட்டிக்கொண்டு துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள், அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஓற்றைகல் சாமி தூணுக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு ஒட்டு கேட்போம், அவர்கள் சிலேடையாக அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி சிரித்துப் பேசி சிலாகிப்பாங்க, அவர்கள் எங்களை பார்த்துவிட்டால் தலையை குனிந்துக்கொள்வார்கள், சற்று அமைதியாகி ஈனஸ்வரத்தில் முனுமுனுத்துக்கொண்டே, பின்னர் கணீர் குரலில் “ ஏலே, எடுவட்ட பயல்களா, முகம் கழுவாத மூதேவிகளா, பொம்பளைக குளிக்கிற எடத்தில உங்களுக்கு என்ன வேலைடா” என்று கத்தி எங்களை துரத்திவிடுவர். நாங்களும் என் நண்பர்களும் சகாக்களூம் அங்கு ஒன்றும் நடவாதது போல் சரி இன்றைக்கு கதை அவ்வளவு தான் என்று அந்த இடத்திலிருந்து சங்கரக் கோனார் மாந்தோப்புக்கு படையேடுப்போம்.

அங்கு அவருக்கு தெரியாமல் மா மரம் ஏறி மாங்காய் பறித்து திண்போம், சங்கர கோணாரிடம் ஒரு தடவை நான் வசமாக மாட்டிக்கொண்டேன்; என்னையும் என் சகாக்களையும் மரத்தில் கட்டி வைத்துவிட்டார்; பிறகு என்னிடம் என் அப்பா பெயரை விசாரித்துவிட்டு “ முத்துசாமி வாத்தியார் பையனாடா நீ? உனக்கு மாங்காய் வேணும்னு சொல்லியிருந்தால் நானே கொண்டுவந்து கொடுத்திருபேன், இந்தா மாங்காய் என் மடியில் பத்து மாங்காயைத் திணித்துவிட்டு இனிமே இந்தப் பக்கம் வரக்கூடாது” என்று அப்பாவை விசாரித்துவிட்டு என்னையும் என் சகாகளையும் அனுப்பி வைத்தார், அன்று, நல்லவேலை என்னால் என் சகாக்கலும் தப்பினர், அன்று தான் நான் உணர்ந்தேன் கிராமத்து வாத்தியார் மகனாக இருப்பதால் சில சவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் எனக்குள் ஒரு வித புது பயம் தொற்றிக்கொண்டது, எங்கே என் தந்தையிடம் சொல்லிவிடுவாரோ என்று. உண்மையில் சங்கர கோனார் நல்ல மனுசன் என்னை தோப்பில் பார்த்துக்கொண்டதாக அவர் எப்பொழுதுமே காட்டிக்கொள்ளவே இல்லை,அதற்கு பிறகு பலமுறை அவரை வழியில் நான் பார்ப்பேன், ஆனால் அவரிடம் பேச எனக்கு பயமாக இருக்கும்.

ஒரு முறை என் வீட்டிற்கு அவர் மகள் பிருந்தாவதிக்கு சடங்கு என்று சொல்ல வந்தார், அப்பொழுது தான் அவரிடம் நான் தயங்கி தயங்கி பேசினேன். இதற்கு முன்பு அவரை ஒரு காக்கி கால்டவுசர், ஒரு சொக்கலால் பீடி அச்சிடப்பட்ட அரை கை பனியனில், தலையில் ஒரு முண்டாசு கட்டி தான் பார்த்திருந்தேன், அந்த முண்டாசு கட்டியிருப்பது கூட அவர் நெத்தியில் ஒரு பெரிய கட்டி ஒன்று இருக்கும் அதை மறைக்க தான், அவர் முண்டாசு கட்டியிருப்பதாக என் நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டிருந்தேன், எங்கள் சகாக்களும் நானும் கூட அவருடைய தோப்பை ‘ட்வுசர் கோனார் தோப்பு’ என்று தான் கூறுவோம் இப்பொழுது தான் அவரை ஒரு பெரிய மனுசன் தோரணையில் ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டையில் முதல் முறையாகப் பார்த்தேன். அவர் நெத்தியில் ஒரு கட்டி இருப்பது இப்பொழுது தான் உண்மை என்று எனக்கு தெரிந்தது. அவர் அந்த நெற்றியில் சற்று முன்பு தான் விபுதி பூசியிருக்கிறார், அந்த மனம் என் மூக்கை துளைத்தது கூட என்னால் இப்பொழுதும் நினைவுக்குள் கொண்டு வர முடிகிறது.

அன்று, அவர் ஒரு வட்டத் தட்டில் வெத்திலை,பாக்கு, பழம் வைத்து, அதற்கு மேல் ஒரு பத்திரிக்கையும் வைத்து வீட்டில் “பெரியவங்க இருந்தா வரச் சொல்லு, தம்பி” என்றார்,

நானும் சற்று தயங்கி “இல்லை அப்பாவும், அம்மாவும் மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்கு போய் இருக்கிறாங்க, வந்தவுடன் சொல்லிவிடுகிறேன்” என்றேன்.

தன் தோல்பட்டையில் இருந்த பச்சை துண்டை விரித்து சுருட்டி அடிவயிற்றில் கட்டிக்கொண்டார், தான் மடித்துக்கட்டிய வேட்டியை கீழே இறக்கிவிட்டார், பிறகு அவர் “சரி நல்லது தம்பி அவுக இல்லாட்டி என்ன நீங்க இருக்கிறீங்கள்ள, நீங்களும் பெரிய மனுசனா மாறிட்டு இருக்கீங்கள்ள, நீங்களே இதை வாங்கிக்கோங்க என்று சொல்லிவிட்டு “அவுக வந்தவுடன் ஞாயாபகத்தோட சொல்லிடுங்க தம்பி நீங்களும் கட்டாயம் குச்சி கட்டுவதற்கு முன்னாடியே வந்திருங்க, தம்பி ” என்றார்.

“குச்சி கட்டுவது என்பது என்னவாக இருக்கும்! தெரியவில்லையே”,இதை யாரிடம் போய் கேட்பது, என் நண்பன் முருகனிடம் என்று யோசித்தேன்,

சே, அவனிடம் கேட்டால் தப்பான வார்த்தையாக இருந்தால் ஊரை கூட்டி பரப்பிவிடுவான்.அன்று அந்த வார்த்தை என் மூளையை குடைந்துக்கொண்டே இருந்தது, அடுத்தநாள் மாலை என் சித்தப்பா பீதாம்பரனிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டேன்.

பீதாம்பரன் என்னைவிட ஒரு வயது தான் மூப்பு; அது எப்படி என்று கேட்டால் அப்படித்தான்; அவனை நான் என் நண்பனாகத் தான் பார்ப்பேன். என் அப்பாவின் கடைசி தம்பி என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கடைசி மாவில் வழிச்சு சுட்ட தோசையாகப் பிறந்தவன்.

நான் என் அம்மாவிடம் அந்த விஷேசதுக்கு நானும் வருவேன் என்று முறையிட்டேன்; என் அப்பா “அவன ஒழுங்கா படிக்கிற வழிய பார்க்கச்சொல்லு, அங்கெல்லாம் ஒண்ணும் வரவேண்டாம் “ என்று மறுத்துவிட்டார்.

அன்று முழுக்க “ அந்த விஷேசத்தில் என்ன நடந்திருக்கும் “என்று தெரிந்துக்கொள்ள எனக்கு ஆர்வமாக இருந்தது.

உண்மையில் எங்கள் கிராமத்து வாழ்க்கை எனக்கு திருப்தியாகவும், பிடித்த மாதிரியும் தான் இருந்தது. நான் எப்படி வாழவேண்டும் எனற கனவுகள் நிரம்பி தத்தளித்தேன்.

ஆனால் விதி அது தன் இஷ்டத்துக்கு வேலை செய்யும் என்பதை சற்றும் உணராதாவனாக தான் நான் இருந்தேன்; ஆம்,அது நம்மை வேறு ஒரு இடத்துக்கு நகர்த்தி சென்று கைதட்டி நம்மை பார்த்துச் சிரிக்கும், அந்த சிரிப்பை நமது காதுகளால் கேட்க முடியாது, மனசாலத்தான் உணரமுடியும்,

அப்பொழுது தான் எனக்கு இடி மாதிரி அந்த செய்தி வந்திறங்கியது, என்னை தங்கி படிக்கும்(கான்வெண்ட்) பள்ளிக்கு என்னை என் அப்பா சேர்த்துவிட்டார், நான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை “என் அம்மாவிடம் சண்டை போட்டேன், என்னை கேட்காமல் முடிவு பண்ண நீங்கள் யார்?” என்றேன், என்னைப்போன்ற பதின் வயது பையன்கள் யாவரும் இப்பொழுது போல தன் அப்பாவிடம் அப்பொழுது நேரடியாக பேசியதை நான் பார்த்ததில்லை. இன்று இரவுக்குள், எப்படியாவது என் அப்பாவிடம் இந்த விஷயத்தை பேசி ஒரு முடிவு எடுத்தாகவேண்டும் என்று தீர்மாணித்தேன், என் அப்பா இரவு சாப்பிட உட்கார்ந்தவுடன் என் அம்மாவின் முகத்தை பார்த்து விட்டு லேசாக செருமி விட்டு

“ம்…என்ன சொல்கிறான் உன் புத்திரன் போகமாட்டேன் அடம்பிடிக்கிறானொ! ” என்றார்,

என் அம்மா பாவம் வாய் பேசாத மடந்தை; நடுக்கதுடன் தட்டில் பழைய சோற்றையும் சுண்டகரியையும் வைத்துவிட்டு

“இல்லை இல்லை” என்று இழுத்தாள்.

என் அப்பா சோற்றை மோர் ஊற்றி பிசைந்துக் கொண்டே என் அம்மாவிடம் “பிறகேன்ன அந்த கழுதைக்கு நான் வேணா ஒரு ஆறு ஏழு கழுதைகளை வாங்கிகொடுக்கிறேன் அந்த கழுதையோட இவனும் எட்டாவது கழுதையா சேர்ந்து இங்கேயே மேய்த்து மேய்ந்துவிட்டு, இந்த ஊரையே சுத்தி சுத்தி வரட்டுமே” என்றார்.

அதற்கு அப்புறம் இனி அவரிடம் பேசி பயன் இல்லை எனபதை உணர்ந்துக்கொண்டேன்.அன்று முதல் என் அப்பாவை எதிரியாக பார்க்க தொடங்கினேன்; தன் விருப்பங்களை என் வழியாக செயல்படுத்த துடிக்கிறார் என்று எண்ணியிருந்தேன். அந்த வயதில் நான் மட்டும் இல்லை, ஒவ்வொரு பதின் வயது இளைஞனும் தன் அப்பாவை மனதிற்குள் எதிரியாக தான் பார்திருப்பான். அப்பாவைப் முழுவுதும் புரிந்துக்கொள்ள முடியாத வயது அது.

இருந்தாலும் என் வேதனைகளை அதற்கு உரியவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது; அந்த சொல்லற்ற உணர்ச்சிகளை வெளிபடுத்துவது அதைவிட வலிமிகுந்ததாகவே நான் உணர்ந்தேன்.

என் அம்மாவிடம் வந்து பலமுறை அப்பாவை பற்றி முறையிட்டேன்; இந்த வீடு என்பது அவர் கட்டிய கோட்டையாக அவர் கருதுகிறார்; அதில் அவர் தன்னை ராஜாவாக கருதுகிறார்;அவரின் தீர்ப்பு தான் இறுதியானது என்று கருதுகிறார் என்றேன்; பயன் ஏதும் இல்லை; அதனால், என் அப்பாவை நேராகப் பார்ப்பதைக்கூட சில நாட்கள் தவிர்த்து வந்தேன். பலமுறை அப்பாவின் நிழலிருந்து விலகி ஒட முயன்று தோற்றிருக்கிறேன்.

ம்… பிறகு, புதிய வாழ்க்கையை உள்ள படி ஏற்றுக்கொண்டு வாழ பழகிகொண்டேன்; ஆனால் என் அம்மாவால் மட்டும் என் பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை, வாரம் தவறாமல் என்னை வந்து பார்த்துச் செல்வாள்;அவள் என் தந்தையின் நியாயங்களை எடுத்துறைப்பாள்; என்னை ஆறுதல்படுத்துவாள். என்ன இருந்தாலும் அவள் தந்தையின் ஆதரவில் வாழ்பவள், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பாசம் என்ற கயிற்றை பிடித்து தொங்குபவள்; அவள் சென்றவுடன் சற்று மவுனமாக இருப்பேன்; உண்மையில் அந்த மவுனத்தில் வலி என்னது என்பது இப்பொழுது நினைத்தாலும் வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தும் சில கேள்விகளுக்கு எனக்கு அப்பொழுதும்,இப்பொழுதும் விடை கிடைக்கவில்லை…

2

அடுத்த வாரம் திங்கள் கிழமை என் ‘ரீலிவிங் ஆர்டரில்’ கையோப்பம் இடுவதற்காக அவரை மீண்டும் சந்தித்தேன்,வெறும் வார்த்தைக்காக “ஹவ் ஈஸ் யவர் வீக் எண்ட்” என்றேன். நீங்கள் உங்கள் தாயை சந்திதீர்களா என்றேன்,

அவரும் பதிலுக்கு யேஸ்!!..,யேஸ்!!.. என்றார்

,”பட் ஐ ஹாவ் லாஸ்ட் தீஸ் வீக் எண்ட், பிகாஸ் ஆஃப் யூ” என்றார்

நான் சற்று அமைதியானேன்,

அவர் மீண்டும் “பட் ஐ ஹாவ் செட்டில்ட் தி டேபிட்” என்றார்

எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் அவரிடம் நீங்கள் படிப்பிற்காக உங்கள் தாயிடம் எதாவது கடன் வாங்கியிருந்தீர்களா என்றேன்,

அவர் ‘இல்லை’ என்றார்,

‘பிறகு’ என்றேன்.

அவர் நிதானமாக நான் என் தாயுடன் ‘பேயிங் கெஸ்டாக’ இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன், அங்கு தங்கியிருந்ததற்கான தொகையை செலுத்திவிட்டேன் என்றார்.

‘ஒகே,,யூ மே டேக் லீவ், அண்ட் டேக் கேர்’ என்று சொல்லிவிட்டு தன் கோப்பில் தன் கவனத்தை செலுத்தினார்,

நான் வெளியே செல்ல எத்தனித்தேன்; அவர் திரும்பி ஓர கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு, ஒன் மீனிட் இளங்கோ, “யுவர் டேலண்ட் திஸ் கம்பெனி நாட் ரிகுயர்ட்” என்றார்

அதாவது இனிமேல் என் திறமை அந்த நிறுவனத்துக்குத் தேவைப்படாதாம்; அவரைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *