கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 3,701 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மௌன்ட் வெர்னன் தகன மண்டபத்தின் அந்த உயர மான வெள்ளைச் சலவைக்கல் மேடையின்மேல் கருமை நிற நல்லடக்கப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கதிரேசனின் விறைத்துப்போன மெலிந்த உடல் மூடிய கண்கள் மூடியவாறு அந்த மண்டபத்தின் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது .

நீட்டிக் கிடந்த அவர் கால்களுக்கு நேர் எதிரே மூடப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட கருந்திரை, இன்னுஞ் சற்றுநேரத்தில் தன்னை விரியத்திறந்து கொண்டு அவரை வரவேற்கக் காத்திருப்பதுபோன்று மெல்ல அசைந்தாடிற்று.

தம் ஒட்டி உலர்ந்துபோன உடலைக் கடந்த ஓராண் டாக அதீத முயற்சி செய்து முட்டுக் கொடுத்து நிமிர்த்தி மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவர், பதினெட்டு மணி நேரத்திற்கு முன்தான் மூச்சை நிரந்தரமாக நிறுத்திவிட்டு நல்லடக்கப் பெட்டியில் சாய்ந்துவிட்டார்.

அந்த மண்டபத்திற்குள் இருமருங்கிலும் போடப்பட் டிருந்த நீள் இருக்கைகளில் கணிசமான எண்ணிக்கையினர் அமர்ந்திருந்தனர். Just give people what they want, and they will show up’ என்று ஐர்விங் வால்லஸ் ஒரு நாவலில் குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்துவது போலிருந்தது. அங்குக் குழுமியிருந்தோர் எண்ணிக்கை.

மண்டபத்திற்கு வெளியிலும் பெருங்கூட்டம் பலர், எப்போதோ செத்துப் போனவர்களின் கதைகளை யெல்லாம் மீண்டும் நினைவுகூர்ந்து புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

“ஆமா, ஆமா! … சாவு என்ன சொல்லிக்கிட்டாவருது? நம்ம சிவப்பிரகாசம் இருந்தாரே, அவருக்கென்ன சாகுற வயசா? நாற்பத்தெட்டு வயசுதான். நல்லா இருந்த மனுஷன். அவரைப் போனவருஷம், நான் பார்த்து மூணு நாளுகூட ஆகலே; திடீருன்னு தவறிப்போயிட்டாரு.”

“நீங்க என்ன மூணு நாளைக்கு முன்னே பார்த்தவரைப்பத்திச் சொல்றீங்க? நேத்துப் பார்த்தவன் இன்னைக்கு இருக்கமாட்டேங்கிறான்…”

இந்த இருவரோடு மூன்றாவது ஆளாகச் சேர்ந்து கொண்ட ஒருவர், “அதனாலேதானே வள்ளுவரும், ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ன்னு சொன்னாரு!” என்று தமக்கும் கொஞ்சம் திருக்குறள் தெரியும் என்பதைப் புலப்படுத்திக் கொண்டிருந்தார்.

எந்த இடத்தில் எந்தப்பொருள் பற்றிப் பேசவேண்டும் என்பதை நன்கறிந்திருந்த அந்தச் சாவார்கள், செத்தா ரைக் குறித்துத் தொடங்கிய பேச்சு உலக அரசியல், பங்குச் சந்தை, டோடோ குலுக்கு என எங்கெங்கேயோ தாவிக் கொண்டிருந்தது.

நல்லடக்கப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கதிரேசனைப்பற்றி மேற்போக்காக அறிந்திருந்த ஒருசிலர், தங்கள் அசுரத்தனமான கற்பனை வளத்தால் எதை எதையோ பேசி உரையாடலுக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தனர்.

இருந்தவன் அருமை இறந்தால்தானே தெரிகிறது. இந்த அருமை உடன்பாடாகவும் இருக்கலாம்; எதிர்மறையாகவும் இருக்கலாம்.

அந்த மண்டபத்தின் நான்காவது வரிசை நீள் இருக் கையின் கடைசியில் அமர்ந்திருந்த மகாலிங்கம், நல்லடக்கப் பெட்டியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பெட்டியையும் அதனுள் அடக்கமாகியிருந்த வெற்றுடலையும் நினைக்க நினைக்க அவர் நெஞ்சின் குமுறல் கண்ணீராகக் கசிந்து கொண்டிருந்தது.

தம் மூவறை அடுக்குமாடி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் காரராகக் கதிரேசன் குடிவந்த போதுதான் மகாலிங்கம் அவரை முதல் முறையாகப் பார்த்தார்.

கதிரேசன் வந்து ஒரு வாரமாகியும் அவரையும் அவர் குடும்பத்தையும் கண்டு நலம் விசாரிக்காமலிருந்தது மகாலிங்கத்திற்கு ஒரு குறையாகத் தோன்றிற்று.

பெரும்பாலும் எல்லா அடுக்குமாடி வீட்டுக் கதவு களும் தாழிடப்பட்டுக்கிடப்பது போலவே இருவர் வீட்டுக் கதவுகளும் எப்போதும் பூட்டப்பட்டே இருந்ததால் ஒரு வரையொருவர் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை. ஆனால், அவ்வப்போது கதவுத் துவாரத்தின் வழியாக ஒருவர் மற்றவர் வீட்டை உறுத்துப் பார்ப்பது மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

யாரோ ஒருவர் முதலில் பேசியே ஆக வேண்டும். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? மணியைத் தாமே கட்ட முன் வந்தார் மகாலிங்கம்.

அவர் சென்றபோது கதிரேசன் அப்பர் தேவாரத்தில் மூழ்கிப்போயிருந்தார். அதைக் கண்டதும் மகாலிங்கம் வியப்பில் ஆழ்ந்து போனார்.

கதிரேசன் இலக்கியத்தில் ஆர்வமுடையவராக இருப் பார் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. கதிரேசனே பேசினார்:

“எனக்கு இந்தப் பக்தி இலக்கியங்கள் ‘லே கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அதுலேயும் அப்பர் தேவாரம்’ன்னா ரொம்பப் பிடிக்கும்.”

தமக்கும் இலக்கியங்களில் சிறிது பயிற்சி உண்டு என் பதை மகாலிங்கத்தால் அப்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ஆமா…ஆமா!… அப்பர் தேவாரம்’ன்னாலே அதுக்கு ஒரு தனிச் சுவை இருக்கு. அதனாலேதானே அந்தப் பிறவா யாக்கைப் பெரியோன் சிவனே, ‘சம்பந்தன் தன்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்’னு சொன்னதா பழமொழி சொல்லுது” என்று அடித்து விட்டார்.

கதிரேசன் மகிழ்ச்சியால் பூளித்துப் போனார் .

“நான் இப்ப அப்பரோட இந்த ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே’ங்கிற பாடலைத்தான் படிச்சிக் கிட்டிருந்தேன். இந்தப் பாடல் முதலடியிலே ‘கண்ணா’ங் கிறதையும் சேர்த்து இதைச் சினிமாப் பாட்டா மாத்திச் சைவத்தையும் வைணவத்தையும் ஒண்ணாக் கலந்துட்டாங்க!…” என்று சற்றுக் குறைபட்டுக்கொண்டார்.

கதிரேசன் அப்பாடலைப்பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் வாழ்க்கையே மிகக் குரூரமாக ஆட்டுவிக்கப்படப் போகிறது என்பதை மகாலிங்கர் அப்போது உணரவே இல்லை!

வரைபடம் வரையும் அதிகாரியாகப் பணியாற்றிய கதிரேசனுக்குப் பதவி உயர்வு கிடைத்த ஓராண்டிலேயே அவர் நாலறை வீடு வாங்கிக்கொண்டு வேறொரு அடுக்கு மாடிப் பேட்டைக்குப் போய்விட்டார்.

கதிரேசன் வீடு மாறிச் சென்றுவிட்டாலும் அவர்கள் இருவர் குடும்பங்களும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டு தான் இருந்தன. ஆண்டுகள் பலவாகி மறைந்தன.

ஒருநாள் மகாலிங்கம் கதிரேசன் வீட்டுக்குச் சென்ற போது, அவர் தாம் வேலையிலிருந்து ஓய்வுபெறவிருப் பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்:

“இந்த ஆகஸ்ட் மாசம் ஐம்பத்தஞ்சி வயசாயிடும். வருஷம் எப்படி ஓடிப்போச்சின்னு பார்த்தீங்களா?”

மகாலிங்கம், கதிரேசனை விட நான்கு வயது இளைய வர். எனவே, தமக்கு இன்னும் நாலாண்டு இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

“ஆமா…வேலை ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யிறதா முடிவு பண்ணியிருக்கீங்க?” கதிரேசன் மெல்லச் சிரித்துக் கொண்டார்.

“எல்லாரும் இதையேதான் கேட்கிறாங்க. முதல்லே நல்லா ஓய்வெடுத்துக்கப் போறேன். மற்றதையெல்லாம் பிறகு பார்க்கலாம். ஆண்டுக்கணக்கா உழைச்சதுக்கு ஓய்வு ரொம்ப முக்கியம்.”

“சிபி எஃப் எல்லாம்…” என்று மகாலிங்கம் முடிப்பதற்குள் கதிரேசனே முந்திக் கொண்டார்.

“சி பி எஃப்’லே ஓரளவு பணம் இருக்கு. அதை என்ன செய்யலாம்’ன்னு யோசனை செய்து செய்து கடைசியிலே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.”

மகாலிங்கம் சற்றுத் தயங்கினார். கதிரேசன் தம் ஷேமநிதியைக் கொண்டு என்ன செய்யப்போகிறார் என்று கேட்பது அவ்வளவு நய நாகரிகமாகத் தோன்ற வில்லை அவருக்கு. அந்த இக்கட்டான நிலையைக் கதிரேசனே தீர்க்க முனைந்தார்.

“வீடு இருக்கு. அதுக்கு எல்லாப் பணமும் கட்டி முடிஞ்சது. அதனாலே கொஞ்சப் பணத்தை மட்டும் பேங்குலே போட்டுட்டு மற்ற பணம் முழுதையும் வச்சிப் பங்குச் சந்தையிலே பங்குகள் வாங்க முடிவு பண்ணியிருக்கிறேன்.”

அவர் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கப் போவ தாய்க் கூறியதும் மகாலிங்கத்திற்கு 1929ஆம் ஆண்டு அமெரிக்க வால் ஸ்திரிட் பங்குச் சந்தை வீழ்ச்சியும் பேரழிவும் நினைவுக்கு வந்தன.

“பங்குகள் வாங்கப் போறீங்களா?…” அவர் குரலில் கவலை தொனித்தது. “ஆமா! எல்லாப் பணத்தையும் பேங்குலே போட்டு வச்சா வட்டி எவ்வளவு கிடைக்கப் போகுது?பங்குகள்’லே முதலீடு செய்தாலாவது நல்ல லாபம் கிடைக்கும்.”

“பங்குச் சந்தையிலே முதலிடுறதுலே ஆபத்தெல்லாம் இருக்குமே…”

“ஆமா, ஆமா!… அதையெல்லாம் பார்த்தா முடியுமா? கொஞ்சம் துணிச்சலா இறங்கத்தான் வேணும்?”

கதிரேசன் உறுதி மகாலிங்கத்தை வாயடைக்கவைத்து விட்டது.

‘எச்சரிக்கையைக் குறிப்பாகக் காட்டிவிட்டோம்; இனி நம்மால் எதுவும் செய்ய இயலாது’ என்று அவர் பேசாமல் இருந்துவிட்டார்.

கதிரேசன் பணி ஓய்வு பெற்றவுடனேயே மத்திய க்ஷே மநிதி கழகத்திலிருந்து பணத்தை எடுத்துப் பங்குகள் வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டார். சில வேளைகளில் தம் பங்குத் தரகர் அறிவுரையையும் மீறி ஏதேதோ பங்குகளையெல்லாம் வாங்கினார். தம் முதலீட்டில் பெருமையும் மன நிறைவும் கொண்டார் கதிரேசன்.

ஆனால் அவை ஐந்தே மாதத்தில் சிதறிச் சின்னபின்ன மர்கிவிட்டன.

1987 ஆம் ஆண்டு சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பங்குகள் எல்லாம் அடிமட்டத்திற்குப் போய் சரிந்து வீழ்ந்தபோது, கதிரேசன் இதயமும் சரிந்து வீழ்ந்தது. மார்படைப்பால் அவர் முடங்கிப் போனார்.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பேரிழப்பு அவர் வாழ்க் கையையே பாதித்துவிட்டது. பங்குச்சந்தை விவகாரத்தில் சிறிதும் அனுபவம் இல்லாத அவரால் அந்த அடியைக் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. சரிந்த பங்குகள் மீண்டும் ஏற்றம் பெறலாம் என்ற நம்பிக்கை அவருக்கு முற்றாகப் போய்விட்டது.

இழப்பை எண்ணி எண்ணி அவர் ஒரு பித்தன் போலவே மாறிவிட்டார். உள்ளம் நைந்ததோடு உடலும் ஒடுங்கிக்கொண்டே வந்தது.

மகாலிங்கம் அவர் – நிலைக்காகப் பெரிதும் இரங் கினார். ‘எண்ணித் துணிக என்பதை மறந்து இப்போது இந்த நிலைக்குள்ளாகிவிட்டாரே’ என்று மனம் குமுறினார்.

அன்று மகாலிங்கம், கதிரேசன் வீட்டுக்குச் சென்ற போது அவர் அதிர்ந்தே போனார்.

இரண்டு வாரத்திற்கு முன் தான் அவர் கதிரேசனைப் பார்த்து வந்தார்.

அவரை அந்த உருக்குலைந்த நிலையில் பார்க்கப் பார்க்க அவருக்கு வேதனை தாங்க முடியவில்லை.

ம்… என்ன வாழ்க்கை ? சட்ட திட்டங்களுக்கும் விதி முறைகளுக்கும் கட்டுப்பட்டு, விதித்தன செய்து விலக்கியன நீக்கி ஆண்டுக்கணக்கில் உழைத்து, வேலை ஓய்வுக்குப் பின் தான் விரும்பியவாறு இனி எதையும் சுதந்தரத்துடன் செய்து மகிழலாம் என்று ஒருவன் எண்ணிக்கொண்டிருக்கும்போது, அவனுக்கு இப்படியும் ஒரு நிலை வர வேண்டுமா?…

மகாலிங்கம் தம் மனத்துக்குள்ளேயே அழுதார்.

ஒரு வாரத்திற்குப் பின் மகாலிங்கம் வீட்டுக்குச் செய்தி வந்தது. கதிரேசனுக்கு இரண்டாவது மார்படைப்பு. அதுவே அவருக்கு இறுதியாகி விட்டது.

தகன மண்டபத்தின் கருந்திரை விலகிற்று. கதிரேசன் தம் இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் நன்றாக ஓய் வெடுத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னவர் இப்போது நிரந்தர ஓய்வைத் தேடிப் போய்விட்டார்.

மகாலிங்கம் அந்த நல்லடக்கப் பெட்டி எடுத்துச் செல்லப்படுவதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

எரியுலையில் வேகப் போகும் கதிரேசனை நினைத்து அவர் இதயம் வெந்து கொண்டிருந்தது. நான்கு நிமிடம்! அதன் பின்?….. வெறும் பிடி நீறு!

விழிகளில் வழிந்தோடிய நீரை மெதுவாகத் துடைத்துக்கொண்டே அவர் மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.

சில அடிகள் நடந்த அவர் பின்னால் திரும்பி மண்டபத்திற்கு மேலே நோக்கினார்.

அவர் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

– ஜூன், 1993, புதுமைதாசன் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்டு 1993, ஒக்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *