ஓடிப்போனவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 2,343 
 
 

டேய் எந்திரிடா மரகதம் பரபரத்தாள்.

ராத்திரி முழுவதும் மொபைல் பார்க்க வேண்டியது அப்புறம் லேட்டாக எந்திரிக்க வேண்டியது படிச்சி முடிச்சிட்டு ஒரு வேலையை தேடிக்கடா என்றால் காதுல வாங்குறானா?

பெரிய கொட்டாவியை விட்டபடியே சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த திரு, என்னம்மா காலங்காத்தாலையே?

காலங்காத்தாலையா, காலை உடைச்சிடுவேன் மணி 10 ஆயிடுச்சி இன்னும் தூங்குறே..

என்னாச்சுமா?

பக்கத்து வீட்டு ஹேமாவை காணோமாம் யார் கூடவோ ஓடிப்போயிட்டாளோ என்று பேசிக்கிறாங்க.

ஓடிப் போயிட்டாளா! அப்போ அவ என்னை காதலிக்கலையா?

அடிங் அப்படி ஒரு எண்ணம் வச்சிறிக்கியா?

என்னம்மா உனக்கே தெரியும் எங்கூட அவள் நல்லா பேசினா,பழகுனா நீங்கூட அடிக்கடி உனக்கு ஹேமாவையே கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் என்று சொல்லுவியே அப்போது கூட அவள் அழகான கன்னக்குழி தெரிய சிரிப்பாளே..

ஆமாம் சொன்னேன் அவள் இப்படி பண்ணுவாள் என்று எதிர்பார்த்தேனா! நல்ல பொண்ணுதான் ஆனா அவங்க வீட்டுல அவளுக்கு பெரிய இடமாவுல பாக்குறாங்க வேலை இல்லாத உனக்கு எப்படி பொண்ணு தர்றதுன்னு யோசிக்கிறாங்க போல.

ஹேமாவுடைய அப்பா குடிப்பழக்கத்தால் இறந்ததுனாலே அவளோட அம்மா மகளுக்கு மாப்பிள்ளை பாக்குறதுல ரெம்ப கவனமாக இருக்கா அதுவும் சரிதான். இப்போ கூட யாரோ தாசில்தார் வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிட்டு இருந்தாங்க.

இப்போ என்னம்மா பண்றது?

நீ போய் உன் முகத்தை அவங்க வீட்டுல காட்டு நான் அங்கே நின்னு திரு திருவென்று முழிச்சிக்கிட்டு இருந்ததை பார்த்துட்டு உன் மகன் திருவோடுதான் என் பொண்ணு ஓடிப்போயிட்டாளோ? என்று அவ அம்மா கேட்குறா.நான் அதிர்ச்சியாகி என் பையன் வீட்டுல தூங்கிட்டுல இருக்கான் என்று சொல்லிட்டு வந்தேன்.

இதோ போறேன்.

திருவும் அவன் அம்மாவும் ஹேமாவோட வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேமாவோட அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். திரு, பார்த்தியாப்பா என்ன காரியம் பண்ணிட்டு போயிட்டா சிறுக்கி?

இருங்க நீங்களா எப்படி அவள் ஓடிப்போயிட்டாள் என்று முடிவுக்கு வந்தீங்க?

அவளோட பேக் மற்றும் டிரஸ் கொஞ்சம் எடுத்துட்டு போயிருக்காளே.

அப்படியா?

திரு, அவள் உன் கூடவாவது ஓடிப்போயிருக்கலாம் எந்த கழிசடையோட போயிருக்காளோ? தெரியலையே என்றாள் ஹேமாவோட அம்மா.

அதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள். திருவுக்கோ ரெம்ப பெருமிதம் காலரை தூக்கி விட்டுக்கொண்டே தன் அம்மாவை பார்த்தான்.

ஓடிடுவியா நீ என்று நாக்கை மடித்துக்காட்டி முறைத்தாள் அவன் அம்மா.

ஆமாம், இன்னைக்கு ஹேமாவை பொண்ணு பார்க்க வர்றதா எங்க அம்மா சொன்னாங்க ஒருவேளை அது பிடிக்காமல் தான் போயிட்டாளோ!?

ஆமாம் பொண்ணு பார்க்க வர்றது அவளுக்கு பிடிக்கலை என்று சொன்னாள் ஆனால் இப்படி பண்ணுவாள் என்று நினைக்கலையப்பா அவங்க வேறு இப்போ வந்துடுவாங்க தாசில்தார் வீடு ரெம்ப பஞ்சாங்கம் பார்ப்பாங்க அவங்ககிட்ட எப்படி சொல்வது என்று சொல்லும்போதே வெளியே கார் சத்தம்.

மாப்பிள்ளை சகிதம் எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

வாங்க வாங்க எல்லோரும் உட்காருங்க என்று பாயை விரித்து போட்டாள் திருவோட அம்மா.

பொண்ணு வீடு இதுதானே என்றார். மாப்பிள்ளையோட தாத்தா.

ஆமாம்.

கன்ஃபர்ம் பண்ணிக்கணும் பாருங்க ராகு காலம் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே பொண்ணை பார்த்துடலாம் என்று வந்தோம் பார்த்தால் இங்கே காலையிலேயே ராகுகாலம் ஆரம்பிச்சிடுச்சு போல.

பொண்ணை இப்போ பார்க்க முடியாது நாங்க பக்கத்துல வரும்போதே உங்க வீட்டை விசாரிக்கும்போது சொல்லிட்டாங்க எல்லா விசயத்தையும்.. இருந்தாலும் வீடு வரை வந்துட்டோம் உங்ககிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம் என்று வந்தோம் சரி சரி பொண்ணை கண்டுபிடிச்சு அவள் விருப்பத்தை நிறைவேற்ற பாருங்க நாங்க வர்றோம்.

ரெம்ப சந்தோஷங்க அய்யா இருந்து டீ சாப்பிட்டு போங்க என்றாள் திருவின் அம்மா.

பரவாயில்லீங்க.

அதுசரி அய்யா ராகு காலத்தை எப்படி கணக்கு போடுறீங்க? என்றான் திரு.

தாத்தா மறுபடியும் உட்கார்ந்து ஆர்வத்தோடு சொன்னார்.

திங்கள் சந்தையில் வெண் புட்டு விற்று சென்றாள் ஞானம். இதான்பா சார்ட் கட்.

அப்படின்னா?

தி -திங்கள், ச -சனி, வெ -வெள்ளி, புட்டுன்னா நிறைஞ்ச புதன்.

திங்கட்கிழமை 7:30 to 9.

சனிக்கு 9 to 10:30.

வெள்ளி 10:30 to 12.

இன்னைக்கு புதன் 12 to 1:30 இப்படித்தான்பா கணக்கு பண்ணனும்.

இப்போ ராகுகாலம் ஆரம்பிக்க இன்னும் அரைமணி நேரம் இருக்கு அதுக்குள்ளே ஏதாவது நல்லது நடக்கணும் என்றார் தாத்தா.

அப்போது ஹேமாவோட அம்மாவின் ஃபோன் சிணுங்கியது.

மறுமுனையில் ஹேமா.

எங்கடி போய் தொலைஞ்சே? இந்த கேள்வியில் மற்ற எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

நான் என் ஃபிரண்டு வீட்டுக்கு வந்துட்டேன் என்னை யாரும் பொண்ணு பார்க்க வர்றது எனக்கு பிடிக்கலை எனக்கு திருவைத்தான் பிடிச்சிருக்கு இதை சொன்னால் நீ காது கொடுத்து கேட்க மாட்டேங்கிற நான் இரண்டு நாள் இங்கே இருந்துட்டு வர்றேன் பயப்படாதே ஆமாம் என்னை பொண்ணு பார்க்க வர்றவங்க வந்துட்டாங்களா?

ஹேமாவுடைய அம்மா திருவையும் அவங்க அம்மாவையும் சிரித்த முகத்தோடு பார்த்துவிட்டு,

திருவும் அவன் அம்மாவும் உன்னை பொண்ணு பார்க்க வந்துருக்காங்க வேகமாக வா என்றாள்.

திருவுக்கும் அவன் அம்மாவுக்கும் முகமெல்லாம் மகிழ்ச்சி.

ஹேமாவுடைய அம்மா திருவை பார்த்து கேட்டாள் ஏன் மாப்பிள்ளை உங்களுக்கு குடிப்பழக்கம் எல்லாம் இல்லையே?

அய்யோ அத்தை நான் ஒரு டீ டோட்டலர்.

என்ன டீ ஓட்டல் அது?

அய்யோ அம்மா அது டீ டோட்டலர் எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு அர்த்தம்.

அதைக் கேட்ட எல்லோரும் சிரித்தார்கள்.

மறுமுனையில் ஹேமா கன்னக்குழி தெரிய சிரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *