கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 4,464 
 
 

குறையொன்றுமில்ல மறைமூர்த்திக் கண்ணா.

எம்.எஸ்ஸின் இனிய குரலில் மொபைல் அழைத்தது.

யமுனா.

எப்டி இருக்கே யமுனா?

இருக்கேன்.

நந்து எப்டி இருக்கான்?

இருக்கான்.

என்ன விட்டேத்தியாப் பேசறே யமுனா?

மெளனமாயிருந்தாள்.

ஒண்ணும் பேச மாட்டேங்குற?

என்ன பேசச் சொல்றிங்க?

குரலில் சலிப்பு.

ரெண்டு நாள் லீவ் முடிஞ்சு இன்னக்கிதான் பேங்க் தொறந்துருக்கோம். கஸ்டமர்ஸ் நிறைய பேர் இருக்காங்க.

அப்டின்னா.. என்ன பேசாதேன்னு சொல்றிங்களா?

இல்லமா.நான் அப்டிச் சொல்லலை.

பின்ன எப்டி சொல்றிங்க?

இங்க பாரு குட்டிமா. இங்க ஒரு கட்சிக்காரர் காலம்பறயே வந்து நின்னுட்டு டார்ச்சர் கொடுத்துட்டு இருக்கார். அதான்.

அப்ப நானும் டார்ச்சர் கொடுக்கறேன்னு சொல்றீங்களா? இல்லடா. சொல்லு யமுனா.

அப்பா அங்க வந்துட்டு இருக்கார்.

என்ன திடீர்னு?

உங்ககிட்டப் பேசத்தான்.

என்ன விஷயம்?

அவரே வந்து சொல்லுவார்.

வயசான காலத்துல ஏன் அவர அலைய விடறே. நான் தான் இந்த வாரம் ஊருக்கு வருவேனே.

இதயேத்தான் ரெண்டு வாரமா சொல்றிங்க?

போன வாரம் எங்க எம்டி பக்கத்து சிட்டிக்கு வந்துருந்தார்.

அதுக்கு முந்தின வாரம்?

பீஎம்ஸ் மீட்டிங்க்.

ஊரு உலகத்துல இல்லாத மேனேஜர் வேலை.கோச்சுக்காதப்பா. அப்பா எப்ப வருவார்?

வந்துடுவார்.

சரி. என்ன விஷயம்னுதான் சொல்லேன்?

நந்து விஷயம் தான்.

நந்துக்கு இப்ப என்ன?

அவனுக்கு ரெண்டரை வயசு முடியுது. இந்த விஜயதசமிக்கு அவன ஸ்கூல்ல போடணூம்ல. அந்த விசயம் தான்.

அதுக்கு தான் இன்னும் ஒரு மாசம் இருக்கே?

இல்ல.. மேபல் ஸ்கூல்ல முன்னாடியே புக் பண்ணி வச்சுக்கணுமாம்.

மேபல் ஸ்கூலா? உன் ஊர்லேயா?

ஆமா.இங்கதான்.

அதெல்லாம் வேண்டாம். இந்த ஊர்லயும் ஸ்கூல் இருக்கும்னு தெரியும்ல?

தெரியும். சிபிஎஸ்சி ஸ்கூல் இருக்கா?

நான்லாம் அதுலயா படிச்சேன்?

அதான் நான் உங்ககிட்ட மாட்டிட்டு இந்த பாடு படறேன்.

அப்டி என்ன யமுனா உன்னப் படுத்திட்டேன்?

அத நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரியுமா?

மெளனமாயிருந்தான்.

என்ன பேச்சே காணோம்?

என்ன சொன்னா உனக்குப் புரியும் யமுனா?

நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். அப்பா எல்லாம் சொல்வார்.

கெளண்டர் மூடும் போது வந்தார்.

வாங்க மாமா.

எப்டி இருக்கீங்க ரகு?

தலயசைத்தான்.

கொஞ்சம் பேசணும்.

பேசலாமே.இப்ப குளோசிங் டைம். நைட் தங்கிப் பேசலாம். பையனை அனுப்பறேன். போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க.

இல்ல ரகு. நைட்டே திரும்பணும். நான் வெயிட் பண்றேன்.

பின்னாடி ஒரு ரூம் இருக்கு. அங்க இருங்க. இங்க டிஸ்டர்பன்ஸா இருக்கும்.

அது ஒண்ணும் பிரச்சினை இல்ல. இங்கேயே இருக்கான்.

யோசித்தான்.

இருக்கலாம் தானே?

அது ஒண்ணும் பிராப்ளமில்ல மாமா. காஃபி சாப்டறிங்களா?

சரி. சக்கரை கம்மி.

இரண்டு காஃபி வந்தது.

மாமா வாட்ச்சைப் பார்த்தார்.

அக்கெளண்ட்ஸ் முடிக்க இவ்ளோ நேரம் ஆய்டுமா டெய்லி?

இன்னும் நேரமாகும். நீங்க வந்துருக்கீங்கன்னு ஏஎம்கிட்ட பாத்துக்கச் சொல்லிருக்கேன். போலாமா மாமா?

தலையசைத்தார்.

ஃபேமிலி ரூமில் கூட்டமில்லை.

என்ன சாப்டறிங்க?

சொன்னார்.

அத்தை எப்படீருக்காங்க? அவங்க கால் வலி எப்டி இருக்கு?

அது அப்டியேதான் இருக்கு. நந்து இருக்கறதால்ல அவளுக்குப் பொழுது போகுது.

யமுனாவும் தானே அங்க இருக்கா?

மாமா இவன் முகம் பார்த்தார்.

சிரித்தான்.

நந்துவை எங்க ஊர்ல இருக்கற ஸ்கூல்ல சேக்கணும்னு யமுனாவுக்கு ஆசை.

அது எப்டி முடியும்? நான் இங்கதானே இருக்கேன்?

இது ரொம்ப சின்ன ஊர்தானே. கவர்ன்மெண்ட் ஸ்கூல் மட்டும் தானே இருக்கு.

நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன்.

அது அந்தக் காலம் ரகு. இப்ப எவ்ளோ காம்பெடிஷன். உனக்கு தெரியாதது இல்லே.

அது தெரியும். அவன் சின்னக் குழந்தை. நீங்க சொல்ற ஸ்கூல் போக ஏழு கிலோமீட்டர். வர ஏழு கிலோமீட்டர். குழந்தைக்கு இவ்ளோ பெரிய டிராவல் தேவையா?

யோசித்தார்.

கொஞ்ச நாள் கஷ்டம் தான். அப்றம் பழகிக்குவான்.

இது தேவையா?

தேவைன்னு யமுனா சொல்லுதே.

பெரியவங்க நீங்க சொல்லி புரியவைக்கலாமில்ல.

அது ஆசையும் நியாம்தானே. எல்லாப் புள்ளைங்களூம் பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கறப்ப இவன் இங்க படிக்கணுமா?

எனக்கு இந்த ஊர்ல இன்னும் ரெண்டு வருஷம் தான். இப்ப இங்க படிக்கட்டும். அப்றம் சென்னைதான் கிடைக்கும். அங்க போய் பெரிய ஸ்கூல்ல சேத்துக்கலாம்.

அதுக்கு ரெண்டு வருஷம் இருக்குல்ல. உங்களுக்கு கட்டாயம் டிரான்ஸ்பர் கிடைக்கும்னு சொல்ல முடியாதுல்ல..

மூணு வருஷத்துக்கு மேல ஒரு இடத்துல இருக்க முடியாது.

அப்ப மூணு வருஷத்துக்கு ஒரு தடவை நந்துவை ஸ்கூல் மாத்தணுமா?

சீனியர் மேனேஜர் ஆய்ட்டேனா ரீஜினல் ஆஃபிஸ்ல கிடைக்க சான்ஸ் இருக்கு.

சான்ஸ்தானே?

தலையசைத்தான்.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

வெளியே நின்ற ஒரு காரின் வெளிச்சம் தடுப்புக் கண்ணாடியை மீறி இவர்கள் மேல் விழுந்தது.

ரகுவுக்குள் திடும்மென ஒரு மின்னல் அடித்தது.

மாமா.

என்ன ரகு?

உங்களுக்கு டிரைவிங் புடிக்கும் தானே?

என்ன இப்டி கேட்டுட்டிங்க? டிரைவர் வச்சுக்கவே எனக்குப் பிடிக்காது. எங்க போனாலும் நாந்தான் கார் டிரைவ் பண்ணுவேன். உங்களுக்குத் தான் தெரியுமே?

உங்களுக்கு லாங் டிரைவ்னா ரொம்ப புடிக்கும்னு யமுனா சொல்லிருக்கு. கார்ல எவ்ளோ தூரம் போயிருப்பீங்க?

அதுக்கு கணக்கே இல்லை. இருபது வயசுல அப்பா காரை ஓட்ட ஆரம்பிச்சேன். இப்ப அறுபதாகுது. பல்லாயிரம் மைல் போயிருப்பேன். அது சரி ரகு. இப்ப எதுக்கு டிரைவிங் பத்திப் பேச்சு.?

ஆச்சர்யமாய்க் கேட்டார்.

சொல்றேன். நைட் டிரைவ் பண்ணிருக்கீங்களா?

பகல்லோட நைட்ல கார் ஓட்டத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை நானும் என் ஃபிரெண்டும் பகல்ல ரெஸ்ட் எடுத்துட்டு நைட்ல மட்டும் ஓட்டிட்டு ஹிமாலயாஸ் வரைக்கும் போயிருக்கோம்.

நைட்னா என்ன ஸ்பெஷல்? டிராஃபிக் இருக்காதுன்னா?

இல்ல. ஹெட்லைட் வெளிச்சத்துல்ல இருட்டைக் கிழிச்சுட்டு போறது ஒரு ஹெவன்லி எக்ஸ்பீரீயன்ஸ். விடுங்க ரகு. இதெல்லாம் எதுக்கு?

உங்க கார் ஹெட்லைட் வெளிச்சம் எவ்ளோ தூரம் அடிக்கும்?

ஏன்?

சொல்லுங்க.

கும்மிருட்டா இருந்தா ஒரு இருபது அடிக்கு வெளிச்சம் விழும்.

இருபது அடி வெளிச்சத்தை வச்சுக்கிட்டு எத்தனை கிலோமீட்டர் டிராவல் பண்ணிருக்கீங்க. போற தூரம் முழுக்க ரோட் லைட் இருக்கணும்னு எப்பயாச்சும் தயங்கி இருக்கீங்களா மாமா?

தலையாட்டி மறுத்தார்.

அவர் கண்களில் குழப்பம்.

வாழ்க்கையும் இத மாதிரிதானே மாமா?

சந்தேகமாக தலையசைத்தார்.

இருபது வருஷத்துக்குப் பின்னால நடக்கப் போற விஷயத்துக்கு இன்னைக்கே கவலைப் பட்டு அதுக்கு பிளான் பண்றேன்னு நம்பளும் டென்ஷனாகி, நம்ம புள்ளைங்களையும் டென்ஷன் பண்ணலாமா?

யோசித்தார்.

அன்னன்னைய வேலையை ஒழுங்காச் செஞ்சா வாழ்க்கையை முழுசா நகர்த்திடலாம் தானே?

காந்தி சொன்ன இன்க்ரிமெண்டல் ப்ரொக்ரஸ் மாதிரியா ரகு?.

மாமா சிரித்தார்.

முதுகில் தட்டிக் கொடுத்தார்.

புரியுது ரகு. சின்ன வயசு. நீ சொல்றே. எனக்கும் தெரிஞ்சுருக்கணும்.

தப்பா எடுத்துக்காதீங்க மாமா.

இல்ல ரகு. சரியாத்தான் சொன்னே. நான் யமுனாட்ட பேசறேன். பட்..எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.

அது போதும் மாமா.

வெளிச்சக்கீற்று.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒளி

  1. நல்ல பன்ச். சிறப்பான விருவிருப்பான உரையாடல் வழி
    உரையாடலில் மேலும் மேலும் மெருகேருகிறது தொடர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *