ஒரே பாய்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,920 
 
 

மாடசாமிக்கு தூக்கம் வரவில்லை. நடு நிசியாகியும் படுத்துத்தூங்காமல் மனைவியிடம் அவளது தாய், தந்தை, சகோதரியைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். 

“உன்ற தங்கச்சிக்கு உங்கொப்பங்கொடுத்த நாலேக்கரா சொத்த நாலு கோடிக்கு கேக்கறாங்களாமில்ல. நீ செத்தீன்னா உங்கொப்பமூட்லிருந்து பொறந்தூட்டுக்கோடின்னு கோடித்துணிதாங்கெடைக்கும். ஒரு மக்கையும், ஒரு புத்தி சாலியும் பெத்திருக்ககறா உங்கோத்தா. உம்பட தங்கச்சி வெவரமா அவ கண்ணாலத்தும்போது உம்பட நாலு பவுன வாங்கி போட்டு நடிச்சுப்போட்டு, அப்பறமா கழட்டிக்கொடுத்துப்போட்டு சொத்த எழுதி வாங்கிப்போட்டா. நாம எத்தன ஜென்மத்துக்கு பாட்டப்பட்டாலும், ஆட்ட மேச்சாலும் கோடியத்தொட முடியாது” என தனது இயலாமையையும், விவசாயத்தில் லாபம் வராத நிலையையும், பிறர் உதவியேதும் கிடைக்காத கவலையையும் மனதில் பாரமாக ஏற்றி, மனைவி அவளது தந்தை வீட்டு சொத்து வாங்காததையும் சொல்லி மனைவியைத்திட்டினார்.

பனை ஓலை போட்டு வேய்ந்த தோட்டத்து சாலையில் மாடுகளுக்கு ஒரு பக்கமும், தாங்கள் வாழ்ந்திட மறுபக்கமும் ஓலை வைத்து மறைத்து ஒரே பகுதியில் சமைப்பது, உறங்குவது என காலம் போனது. சில சமயம் படுத்துறங்கும் போது மறைத்துக்கட்டிய ஓலை சரசரக்க எழுந்து அரிக்கன் லைட்டைப்பிடித்துப்பார்த்தால் பாம்பு தனது நாக்கை நீட்டியபடி உடலை மறைத்து தலையை நீட்டுவதை ஈட்டியில் குத்தி நாகனாக இருந்தால் பாலும், வெள்ளைத்துணியும் போட்டு எரிப்பவர், வேறு பாம்புகளை அடித்து வேலியில் வீசிவிடுவார்.

“நானெல்லாம் பொறந்திருக்கவே பிடாது. பொறந்து பத்து மாசத்துல அப்பனத்தின்னு போட்டேன். அஞ்சு வருசத்துல அம்மாளையுந்தின்னு போட்டேன். பள்ளிக்கொடம் போயி படிக்கிறதுக்கும் வக்கில்லாம கல்லாங்காட்டுக்குள்ள ஆடு, மாட்ட அவுத்து உட வேண்டீதாப்போச்சு. கூடப்பொறந்த தம்பிக்காரனையும் உன்ற புடிவாதத்துனால கூட வெச்சுக்க முடியாத பாவியாயிட்டேன். கண்ணாலமானாலாவது கருமந்தொலையும்னு பாத்தா இன்னொரு கருமம் தலைல ஏறி‌ மலையாட்டா மக்கா வந்து உக்காந்து போடுச்சு” என புலம்பியதை மனைவி துளசி ரசிக்கவில்லை.

“சோத்துக்கில்லாத மனுசனுக்கு சொந்தம்னு எம்பட அம்மாக்காரி பொண்ணுக்கொடுத்தா வாரு அவளப்போடோனும் எதாச்சும் கெடந்தா எடுத்து. உன்னக்கண்ணாலம் பண்ணுனதிலிருந்து மாடாட்ட பாடு பட்டு கொறையா ஓட்டாமக்கெடந்த காட்ட முள்ள வெட்டி, கல்லப்பொறுக்கி ஓட்டி வெதச்சு வெள்ளாமையெடுத்து சோத்துப்பஞ்சத்த போக்குனம்பாரு அதுக்கு எனக்கு இதும் வேணும், ஒன்னம் வேணும். ஒம்பட தம்பிக்கு எம்பட பொறந்தவள கட்டி வெச்சுப்போட்டம்னா எம்பட அப்பஞ்சொத்த நாலு ஏக்கராவ நாம வெச்சுப்போட்டு, இந்த சொத்த அவீளுக்கு கொடுத்துப்போடலாமுன்னு நானும் நெனைச்சுப்போட்டேன். நம்ம கண்ணாலத்துக்கு முன்னால ஒருக்கா எங்க சாலைக்கு வந்த உம்பட தம்பிக்காரன் எம்பட தங்கச்சிகிட்ட சாடமாடையா தப்பான அர்த்தத்துல பேசப்போயி, அத பெரிய தப்பா நெனைச்சுப்போட்டு பொறுக்காத அந்த நாயும் மொறப்பையந்தான்னு உடாம எம்பட அப்பனாத்தா குட்ட சொல்லப்போயி, எம்பட அப்பன் அறுவாள எடுத்துட்டாரு. இந்த சம்மந்தமே எனக்கும் வேணாமுன்னு சொல்லிப்போட்டாரு. நானுங்கெஞ்சிக்கூத்தாடி உங்க காதுக்கு இந்த விசயம் தெரியாம உங்கள கண்ணாலம் பண்ணீட்டேன். தனிக்குடித்தனம் போகோணும்னு நாஞ்சொன்ன போது நீங்க கேக்குல. அத நெனைச்சே இப்பங்கூட எம்பட கூட சேந்தே ஒரே பாயில படுக்க மாட்டீங்கறீங்க. எப்படியோ எம்பட கட்டாயத்துல ரெண்டு கொழந்தீகள பெத்துப்போட்டேன். உங்க தம்பிக்காரம் மட்டுலும் எம்பட தங்கச்சிக்காரி குட்ட அப்புடி பேசாம நம்ம கண்ணாலம் முடியற வரைக்கும் பொறுத்திருந்து, அவள மொறையா பொண்ணுக்கேட்டு கட்டியிருந்தா இப்ப உங்களுக்கும் கவலையில்லாம எங்க சொத்துங்கெடைச்சிருக்கும். எனக்கும் நிம்மதியா போய் தொலைஞ்சிருக்கும். எம்பட அப்பனாத்தாளுமு நாலு பவுனு கொடி போட்டு ரெண்டு கொழந்தீகளுகளுக்குமே புள்ளப்பேத்துக்கு கூட்டீட்டு போயி ஆஸ்பத்திரி செலவு பண்ணிப்போட்டு அந்தக்கடன பத்து வருசங்கழிச்சு இப்பத்தாங்கட்டீருக்கறாங்க.

இப்ப காலம்மாறி கோடிக்கணக்குல சொத்து வெலப்போகுதுன்னா அதுக்கு நாமென்ன பண்ணிக்கிறது? அன்னைக்கு எம்பட கண்ணாலத்தப்ப நாலேக்கரா வாங்கற காசுக்கு நாலு பவுனு வித்துச்சு. பொம்பளப்புள்ளைய நகை நட்டு போடாம அனுப்புனா கேவலம்னு அத்தன சிரமத்திலீமு மாடு கன்னு, ஆடு குட்டீனு வித்து சொந்த பந்தத்துல கடன வாங்கி தோட்டத்துல பச்சப்பந்தலப்போட்டு உங்களுக்கு ஓரனா செலவில்லாம கட்டிக்கொடுத்தாங்க. இப்ப போயி சொத்துக்குடுக்கிலீன்னா என்ன பண்ணறது? எம்பட தங்கச்சி வெவரமா பவுனு வேண்டா, பாகத்த கொடுங்கன்னு சொத்த அவ பேருக்கு எழுதிப்போட்டா. கலாரு பண்ற போது காசு கீசு வாங்கித்தொலைக்காம பொறந்தவ பொளைச்சுப்போகட்டும்னு பாசங்கண்ண மறைக்க கையெழுத்தும் போட்டுத்தொலைச்சுட்டேன். சோறு தண்ணி, சொந்தந்தவுத்து சொத்துல பங்கில்லீன்னு பத்தரத்துல எழுதுனத பாத்தனில்ல. உம்பட பொறந்தவ நல்லா பொளைக்கறா, நல்லாப்பொளைக்கறான்னு எம்பட தல முடியப்புடுங்குனா நா எந்தக்கெணத்துல போயி உழுகுட்டு? ஒன்னி என்னக்கொல்லத்தா வேணும். அப்படியாச்சும் பண்ணிப்போடுங்க” என கூறியவள் அருவாமனையை எடுத்து கணவன் முன் போட்ட போது சாந்தமாகி படுத்து தூங்க பாயை விரித்தார் மாடசாமி.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வாசக்குப்பையைக்கூட்டிய போது தென்னை மரத்திலிருந்து குரும்பைகள் அதிகளவில் உதிர்ந்த கிடந்ததைக்கண்டு மயக்கமே வரும் போலிருக்க, நெஞ்சை கையில் பிடித்தவாறு திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

பக்கத்து தோட்டத்து பங்காளி ராமசாமி ‘தென்னமரத்துக்கு மரநாய் தொல்லையிருக்குது’ன்னு சொன்னது புரிந்தபோது செல்போனெடுத்து அவரை கூப்பிட்டவுடன் சற்று நேரத்தில் ஓடோடி வந்தவர் குரும்பைகளைப்பார்த்து அவரும் கண் கலங்கினார்.

“காய்கறி வெள்ளாமைய மயிலுக உடறதில்ல, கெழங்கு வெள்ளாமைய காட்டுப்பன்னிக உடறதில்ல, வாழைய காத்து உடறதில்ல, தேங்காய் போட முடியாம குரும்பைலியே மரநாய் உடறதில்ல. வெவசாயம் இந்த லட்சணத்துல இருக்கறத தெரிஞ்சு போட்டுமு ஏக்கரா கோடின்னு டவுன்ல இருந்து வாரவிய வாங்கறாங்கன்னா அவிங்களுக்கு பணம் வெளையுதோ என்னமோ?” என கூறியவர் துளசி கொடுத்த காபியை வாங்கி குடித்தார்.

“எம்பட தங்கச்சி சொத்து கோடிக்கு கேட்டுப்போட்டாங்கன்னு வெடியவெடிய தூங்காம இருந்தவரு, இப்ப வெடிஞ்ச பொறகு தென்னங்குரும்பையப்பார்த்து மயக்கம் போடறமாதர ஆயிட்டாருங்க. ஏனுங்க உருண்டுருண்டு பொரண்டாலுமு ஒட்டறதுதானுங்க ஒட்டும். அதய ரோசன பண்ணாம இப்படியிருந்தாருன்னா, உசுருக்கு சேதம் வந்துருச்சுன்னா கொழந்தைகள நா ஒருத்தியா எப்புடி கரை சேர்ப்பனுங்க? நீங்களே சொல்லுங்க” அழுதவாறு ராமசாமியிடம் பிராது கூறுவது போல் கூறினாள் துளசி.

” மனுசப்பொறப்பே ஒருக்கா நல்லாருக்கும், ஒருக்கா நல்லாருக்காமத்தா இருக்கும். அதுக்காக சோறுந்திங்காம, தண்ணீங்குடிக்காம இருந்தோம்னு வெச்சுக்கோ நோய் நொடி வந்து சீக்கிரம் போய் சேந்தரோணும். பள்ளிக்கொடத்தாமூட்டு பழனியப்பன் மாடு செத்தத தாங்கமாட்டாம தூக்கு போட்டுட்டானாமா. குரும்பை உழுந்ததுக்கு கவலைப்பட்டீன்னா ஒடம்பு கெட்டுப்போகும். மரத்துக்கு அடில கல்லாமுள்ள வெட்டிப்போட்டீன்னா மரநாய் ஏறாது. நானும் அப்படித்தாம் பண்ணுனேன்” என ராமசாமி கூறியது ஆறுதலாக இருந்தது மாடசாமிக்கு.

“அடுத்வம்பூமி எச்சு வெலைக்கு விக்கிறதுக்கும், வெள்ளாம காட்ல வெளையாமப்போறதுக்கும், நாம வாழாம இருந்தம்னா காலம்பூரா வாழாமயே தாங்கெடக்கோணும். உனக்காவது வசதியில்லீன்னுதாங்கவல. சொத்து வரலீன்னுதாங்கவல. எனக்கு பொஞ்சாதியே போயிட்டாளே. என்னைய நெனச்சுப்பாரு. காட்டுக்குள்ளயும் பாடு பட்டுப்போட்டு ஊட்டுக்குள்ளயும் அடுப்படில வேல செய்யோணும். நாம செரமப்பட்டாலுமு கொழந்தைக படிச்சு வேலைக்குப்போயி பொழைச்சுக்குட்டும்னு ஒரு வேலையும் அதுகள தொடச்சொல்லறதில்ல. சொத்தும் பணமும் நம்ம கூட ஒரு வார்த்த பேசாது. ஒத்தாசயா கூடமாட வேல செய்யாது. ஒரு வேல கஞ்சி குடிச்சாலும் பொஞ்சாதியோட கையில வாங்கி குடிக்கிறதுக்கு குடுத்து வெச்சுருக்கோணும்” என கண்ணீர் பெருக ராமசாமி சொல்வதைக்கேட்ட மாடசாமி மனம் மாறியவராய் கவலை மறந்து, மனைவியை கண்டபடி பேசுவதைத்துறந்து இரவு வந்தவுடன் மனைவியுடன் ஒரே பாயில் படுக்கத்தயாரானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *