ஒரு வீட்டுக்கு இரண்டு கிழவிகள் அதிகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 5,584 
 
 

அன்று Herzogin-Luisehaus என்கிற அம் முதியவர்கள் இல்லத்துக்குப் போயிருந்தேன். அவர்களோடு நட்பாகப்பேசி, அவர்களின் குறைகளைக்கேட்டு அவற்றுக்கு ஆவன செய்யவேண்டியதுதான் என் ஊழியம். அவர்களின் பிரச்சனை என் இயலுமைக்கும் மேற்பட்டதென்றால் மேலிடத்துக்குத் தெரிவிக்கவேண்டும்.

அன்றைய நாளில் நான் கவனிக்க வேண்டியிருந்தவர் எனக்குப் புதியவரல்ல. 72 வயது,. மிகவும் வசதியான அப்பெண்மணியின் பெயர் Monika Ahlemann (விலாங்கு என்று பொருள்) அவர் பாவித்த Mercedes C – Class Luxury Coupe ரக சீருந்து இன்னும் அவர் வீட்டுத்தொழுவத்தில் நிற்கிறதாம். வெகு அழகான கிழவி, எபோதும் தன்பளபளக்கும் வெண்கேசத்தை அழகாகச்சீவிக் கொண்டைவைத்து அதில் முத்துக்கள் பதித்த Hair Clamps / Claw Clips களை மாட்டிக்கொண்டு பழைய ஆங்கிலப்படங்களில் வரும் ராணிகளைப்போல தோரணையாக இருப்பார். சதா ஸ்டைல் பண்ணிக்கொண்டிருப்பது மாத்திரமல்ல, எப்போதும் ஒரு குழந்தையைப் போலப் புத்துணர்ச்சியாகவும் இருப்பார். இளசுகளைப்போல வாரத்துக்கொருமுறை அழகுநிலையம்போவதையும் அவர் இன்னும் நிறுத்தவில்லை. வீட்டுக்குள் இருக்கும்போதுகூட அணிந்திருக்கும் சப்பாத்தின் நிறத்திலேயே கேசத்தின் இறப்பர் பட்டியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார் என்றால் பாருங்களேன். அவர் காலத்தில் நிச்சயம் (இப்போதைய) தாத்தாக்கள் பலரைச் சுழன்றடிக்க வைத்திருப்பார்! இன்னமும் கண்ணாடியில்லாமலே பத்திரிகைகள் சஞ்சிகைகள் எல்லாம் வாசிப்பார். அவ்வில்லத்தின் சமையற்காரர்கள், பராமரிப்பாளர்கள், செவிலியர்கள் எவரிடமும் அதிகம் பேசமாட்டார், ‘ரிசேவ்ட் டைப்பான’ கிழவியென்று அவரை யாரும் அனாவசியமாய் நெருங்கவும் மாட்டார்கள்.

நான் அவருக்கு மனசறிந்து ‘அநியாயம்’ பண்ணுவதால் என்னிடம் மட்டும் சிரித்துப்பேசுவார் நேசமாயிருப்பார். அதாவது அவருக்கு மிக மோசமான சர்க்கரைவியாதி, சமயங்களில் சர்க்கரையினளவு 300, 400 என்றெல்லாம் அவ்வப்போ எகிறிவிடும். ஆனாலும் விலையுயர்ந்த Lindt Praline சொக்களேட்டை கால்மேசுக்குள் சொருகி ஒளித்துவைத்துச் சாப்பிடுவார்.

‘இன்னொரு ஸ்லாப் சாப்பிட்டாயானால் செத்துப்போய்விடுவாய் கிழவி’ என்று டாக்டர் எச்சரித்தாலும் ‘அதனாலென்ன சாப்பிட்டிட்டுச் சந்தோஷமாய்ச் சாவேனே’ என்பார் துடுக்குடன். ஒரு சாண்நீளத்திலான சொக்களேட் பாளமொன்றாவது இறங்காதவொரு நாள் அவருக்கு நாளேயல்ல.

அவரது சொக்களேட் ஆசைப்பார்க்க எனக்குக் கல்லூரிக்காலத்தில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வரும்.

ஊரில் சர்க்கரைப் பிரியரான ஒரு தாத்தாவுக்குக் கடுமையான சர்க்கரை வியாதி. வீட்டில் அவருக்கு இனிப்புப்பண்டம் சாப்பிட அனுமதியில்லை. ஆனால் அவர் வீட்டில் கிருஷ்ணஜெயந்திக்கு ஜிலேபியும் லட்டுந்தான் பண்ணுவார்கள். அதன் வாசம் சுழன்றடிக்கும் கணங்களில் தாத்தா லட்டுச்சாப்பிட வாயூறி அங்கலாய்ப்பார். அதைப்பொறுக்க முடியாமல் அவர் பெயரன் லட்டொன்றை இரகசியமாக நகர்த்திவந்து அவரிடம் கொடுக்க அவரும் அதைச் சமயம்பார்த்துச் சாப்பிட ஒளித்து வைத்திருப்பார். அடுத்த தெருவிலிருக்கும் இவர்களுக்குத் தெரிந்த கிச்சாமி என்கிற வேறொரு தாத்தாவுக்கும் இவரைப்போலவே சர்க்கரைவியாதி. ஒரு வாரத்துக்கு முன்னம் சர்க்கரையளவு எகிறி அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். வீட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்த ஒரு வேளையில் இந்தத்தாத்தா ஒளித்துவைத்திருந்த லட்டை இரகசியமாக எடுத்து ஒரு கடிகடிக்கவும் வீட்டின் விறாந்தையில் யாரோ ‘ கிச்சாமித்தாத்தவுக்கு ஒரு கால் கழற்றியாயிற்றாம்’ என்று கதைப்பது கேட்கவும். ‘தாத்தா கடித்த லட்டு வெளியேயும் போகாமல், தொண்டையிலும் இறங்காமல் இடையில் நின்று கரையும்’ என்று கதை முடிந்திருக்கும்.

வாரத்தில் ஒருமுறை Monika Ahlemann ஐ அவரது உருளியிருக்கையில் வைத்து வெளியே (MALL) அங்காடிகளுக்குக் கூட்டிப்போவேன், அங்கு போனால் நிறைய ஜெர்மன் சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சிச் சஞ்சிகைகள், கையடக்க நாவல்கள் புத்தகங்கள் எல்லாம் வாங்குவார். STARBUCK, COFFEE BONAZA, COFFEE FELLOWS போன்ற விலையுயர்ந்த கோப்பி அருந்தகங்களுக்குப் போய் எனக்குக் கோப்பியும் கேக்கும் வாங்கித்தருவார். என்ன அவர் தனக்கான சொக்களேட் பார்களை வாங்கும்போது நான் கண்டுகொள்ளக்கூடாது. நான் ஒன்றும் ஆட்சேபிக்காவிட்டால் என்னிடம் புன்னகைப்பார், கண்டித்து ஒரு வார்த்தை சொன்னால் என்னிடமும் ‘டூ’ விட்டுவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார். பார்க்கச் சகிக்காது.

சிலவேளைகளில் ‘உன் அழகான நாட்டைவிட்டுவிட்டு எதுக்காக இங்கிருந்து காயுறே…….’ என்றும் என்னிடம் தமாஷ் பண்ணுவார். அவர் கூலாக இருந்த ஒருநாளில் அவர் குடும்பப்பின்னணியை மெல்ல விசாரித்தேன். அவர் தன் கணவனைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, ஒரு வேளை இதுவரை திருமணம் பண்ணிக்காதவராகக்கூட இருக்கலாம், நானும் அதுபற்றிக் குடையவில்லை. ‘தனக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்’ என்றார். மகள் ஜெர்மனியின் தெற்கு மாநிலமொன்றில் பல்மருத்துவராக இருக்கிறாளாம். மகன்தான் என்னுடன் (பெர்லினில்) இருந்தான், அவன் ஒரு மென்பொருள் மேம்பட்டாளன். சொந்தத்தில் சிறிய மென்பொருட்குழுமம் வைத்திருக்கிறான்.’

‘அவனுக்குத் திருமணமாகிவிட்டதா……?’

’பிரச்சனை அங்கிருந்துதானே ஆரம்பம்,’ என்றவர் மௌனமாக நிலத்தைப் பார்த்தபடி இருந்தார்.

“ஏன் அவனது மனைவியை உங்களுக்குப் பிடிக்கவில்லையா” என்றேன்.

“அவனுக்கு இபோதுதான் 29 வயது, அவனது கடைகெட்டகூத்திக்கு 47 வயது, எப்படிப் பிடிக்கும்? அவளை விட்டிவிடு என்றேன், அவன்தான் விட்டாலும்……… அவளுக்கு விறைப்பாகக் கேட்குதாக்கும்…… அவள் விட்டால்த்தானே?”

“அவளைத்தான் கட்டப்போறேன்” என்றான்,…அடே அவளை நீ தெருவில்கூட்டி வரும்போது ‘இவள்தான் MONIKA வோவென்று ஆட்கள் உன்னைக் கேட்பாங்களடா’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். பயல் கேட்டானில்லை. அவளையே ஒருநாள் திருமணம் செய்துகூட்டிவந்தான். நான் அன்றே புறப்பட்டு இந்த இல்லத்துக்கு வந்துவிட்டேன். ஒருவீட்டுக்கு 2 கிழவிகள் அதிகம்” என்று புன்னகைத்தவர் உதடுகளைமூடி மௌனமாக நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். பின் என்னைப்பார்க்க நிமிர்ந்தவரின் கண்கள் பொலுக்கென்று சொரிந்தன. சில பிள்ளைகள் தம் சந்தோஷத்துக்காக எடுக்கும் முடிவுகள் பெற்றவர்களின் மனங்களை அந்திமத்தில் எப்படி வருத்துகின்றன…எனக்கும் அவரைச் சமாதானம் செய்யத்தெரியவில்லை.

சிலவேளைகளில் ஆழ்மனப்படிவுகளிலிருந்து ஏதாவது விஷயத்தை எடுத்துவைத்துக் கதைப்பார். ஒருநாள் “நான் இன்னும் Hassel Nuss விற்கவில்லையே…பப்பாவுக்கும் அதைப்பற்றிக்கவலையில்லை…நீயும் அதையிட்டு ஒரு சிரத்தையுமில்லாமல் இருக்கிறாய்………..என்னமாதிரி.” என்று குறைப்பட்டுக்கொண்டார்.

(Hassel என்பது பாதாமை ஒத்த ஒரு பருப்புவகை) அவரது வளவில் Hassel மரங்கள் நிற்கின்றனவோ, இல்லை தனியான தோப்புத்தான் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

“ இப்போ என்ன அவசரம்……… MONIKA இன்னும் கொஞ்சம் விதைகள் விலையேறட்டுமேன்” என்றேன் அதே வீறமைவான பாவத்துடன்.

“ஆமோ…அப்பச்சரி” என்றார்.

சிலசமயங்களில் பேச்சிடையே மேற்கே பார்த்து தலையையாட்டி “அவள் என்னவாம்…”. என்பார், நான் புரியாது குழம்ப

“அவ Euro Union இல் இருக்கப்போகிறாவாமோ இல்லை கிளம்பப் போறாவாமோ” என்பார் அப்போதுதான் அவரது ‘அவ’ Theresa May என்பது எனக்குப் புரியும்.

பின் கிழக்கே பார்த்து “இவள் என்னவாம்…?” என்பார். அவர் Angela Merkel ஐ விசாரிக்கிறார் என்றறிய ஏகப்பட்ட புத்திசாதுர்யம் வேண்டும். ஏதோ நான் என்றபடியால் சமாளிக்கிறேன் போங்கோ…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *