ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,015 
 

கந்தசாமி பொழுது நன்றாக விடிந்து விட்ட போதும் பாயை விட்டு எழும்ப மனம் வராது, நெற்றியில் கை வைத்துக் கொண்டு குப்புறச் சரிந்து படுத்துக் கொண்டான். பக்கத்து வீட்டு மொட்டை ஜினதாசா கொழும்பு மத்திய சந்தைக்குப் போய், தேங்காய் வாங்கி வண்டியில் போட்டு விற்பதற்காக நாலரை மணிக்கே எழும்பி தன் மனைவியை எழுப்பி ஆரவாரஞ் செய்யத் தொடங்கிய போது கந்தசாமியின் நித்திரை முற்றாக முறிந்து விட்டது. அவன் கண்களை மூடிக் கொண்டு இடது காற் பெருவிரலால் பாய் விளிம்பில் மெல்லத் தட்டியபடி கிடந்தான். அவன் எழுந்து அலுவலகத்துக்குப் போக வேணும். அவன் ஓர் எழுதுவினைஞன், வேலையில் மனஞ் சலித்துப் போச்சு.

காகங்களும், குயில்களும், மைனாக்களும், குருவிகளும் புத்துணர்வுடன் சத்தமிட்டுக் கொண்டு காலை இளம் வெய்யிலில் அங்குமிங்கும் பறந்தோடித் திரிவதை அவன் குப்புறக் கிடந்தவாறு இரசித்தான். அவை அன்றைய தீனைப் – புத்துணர்வோடு, தேடித்திரிகின்றன. “அது” களுக்குத் தீனி கிடைத்துவிடும்.

“இஞ்சேருங்கோ”

அவனது மனைவி சின்னப்பொன் வந்து தலைமாட்டில் குந்தியிருந்தவாறு அவனது தோளைக் குலுக்கினாள்.

“ம் என்ன தொல்லை?” அவன் குப்புறக் கிடந்தவாறே கேட்டான்.

“பாண்காரன் மணி அடிக்கிறான். பிள்ளைகளுக்குப் பாண் வாங்க வேணும் காசு கிடக்கே ?”

“சேட்டுப் பொக்கற்றுக்கை பாரும்”

சின்னப்பொன் எழுந்து சுவரில் தொங்கிய அவனது சேட்டுப் பொக்கற்றைக் கைவிட்டுத் துளாவினான்.

“இஞ்சேருங்கோ இரண்டு ரூபா நாற்பந்தைஞ்சு சதந்தான் கிடக்கு”

“அவ்வளவுதான்”

“இஞ்சேருங்கோ ரெண்டரை றாத்தல் வாங்க இன்னும் காசு வேணுமே?”

“அந்த மேசையிலை தடவிப்பார் கிடக்கும்” அவன் பக்கீஸ் பலகை மேசை ஒன்று வாங்கி வைத்திருந்தான். பிள்ளைகள் படிக்கவுந் தன் கந்தோர் வேலை செய்யவும். மனைவி சென்று அந்த மேசையில் தடவினாள்.

“கிடக்குக் கிடக்கு பத்துச்சதங்க கிடக்கு” சின்னப் பொன்னுக்குச் சந்தோசம்.

அவள் காசுகளைத் திரட்டிப் பொத்திப் பிடித்தவாறு வீதிக்கு ஓடினாள். பிள்ளைகள் காலைக்கடன் முடிக்க கக்கூசுக்குப் போய் விட்டார்கள்.

கந்தசாமி கண்களைத் துடைத்து விட்டபடி புரண்டு நிமிர்ந்து கிடந்து முகட்டைப் பார்த்தான். பழைய ஓடுகள் உடைந்து உடைந்து வானத்தைக் காட்டின. மழை பெய்தால் ஒழுக்கு விழுமிடங்களில் பாத்திரங்கள் வைத்துத்தான் நீரைச் சேகரிக்க வேணும். அவனுடைய சிறிய வாடகைக்கு, ஒரு சிறு அறையும், குசினிக்கு என ஒரு ஓடையும் கிடைத்ததே பெருங் காரியம் என்றாலும் மழைக்காலம், வரப்போகுதென நினைக்கப் பெரும் மனவதைப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்திலே கொக்குவிலில்

அவனுக்கு நல்லதொரு வீடு இருக்கிறது.

பாண் வாங்கிக் கொண்டு சின்னப்பொன் வந்தாள். பாணை அந்த மேசையில் வைத்தாள்.

“தேய்காயுமில்லை பாணுக்குச் சம்பலாவது செய்ய வேணும், கறியும் பகலைக்கு வைக்க வேணும். ஒரு குறைப்பாதித் தேங்காய் தான் கிடக்கு” என்று கூறியவள் தலை முடியைக் கற்றையாகப் பிடித்து சொறிந்து விட்டாள்.

“ஏதோ சமாளி” –

“ம் நல்ல சமாளிப்புத்தான், ஒவ்வொரு நாளும் சமாளிப்பு” அவள் குசினி ஓடைக்குள் போனாள். அவர்களது இரண்டு பிள்ளைகளும் முகங்கழுவி வந்து பாடசாலை செல்வதற்காக தகப்பனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு உடுப்பு மாற்றின.

கந்தசாமி நிமிர்ந்து நெஞ்சில் இரு கைகளையும் கோர்த்துப் போட்டுக் கிடந்தவன், கள்ளமாகக் கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கிடந்தான்.

“மோகன், தேவி வந்து சாப்பிடுங்கோ! நேரம் போச்சு” சின்னப் பொன் குசினிக்குள் நின்று பிள்ளைகளைக் கூப்பிட்டாள்.

கந்தசாமி மனைவி பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுத்து பாடசாலைக்கு அனுப்பும் வரை பாயிலே கிடந்தான்.

“அப்பா! போயிட்டு வாறம் “விடிஞ்சுபோச்சு எழும்புங்கோ ”

“ஓம் புள்ளைகள் கவனமாக ஓரத்தால் நடந்து போக வேணும்”

“ஓமப்பா”

சின்னப்பொன் வீதிவரை பிள்ளைகளைக் கூட்டி வந்து வழி அனுப்பி விட்டுத் திரும்பி வந்தாள்.

“புள்ளைகள் கிளிஞ்ச சட்டைகளைப் போட்டுக் கொண்டு போகுதுகள்”

“அதுக்கு நான் என்ன செய்ய?”

“நீங்கள் எழும்பி முகத்தைக் கழுவுங்கோவன்”

“ஏன் வேலைக்குப் போகேல்லையோ?” –

“போகத்தான் வேணும்”

“அப்ப எழும்புங்கோவன்”

அவன் எழுந்து நின்று கைகளை அகல வீசிச் சோம்பல் முறித்துக் கொட்டா வியும் விட்டான்.

அந்தப் பாழடைந்த பழம் வீட்டிலே இன்னும் இரண்டு கிளார்க்கர் குடும்பங்கள் வாடகைக்கு இருந்தன. அவன் குசினிக்குள் சென்று பற்பொடியை உள்ளங்கையில் கொட்டி பற்களை தீட்டியவாறு, குசினிக்கு அடுத்தாற் போல் உள்ள பைப்படிக்குச் சென்றான் முகங்கழுவ . அப்போது அந்தக் கிளார்க்கர் குடும்பங்களுடன் பேசிக் கொள்வான்.

“இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ” –

“என்னப்பா?”

“சாறம் பின்னாலை நல்லாக் கிளிஞ்சு போச்சு, சாறத்தை அவிட்டு கிழியலை முன் பக்கம் மறைச்சுக் கட்டுங்கோ” கந்தசாமி அவர் சொன்னபடி செய்து விட்டு முகங்கழுவி வந்தான்.

“இந்த மாதச் சம்பளத்தில் உங்களுக்கு ஒரு சாறம் வாங்க வேணும்” அவன், சாறத்தின் முனையால் முகத்தைத் துடைத்தான்.

“அப்ப அரிசி வாங்கிறதைக் குறைப்பம்” கந்தசாமி சாறம் வாங்க முடியாதென்பதை இவ்வாறு கூறினான்.

சின்னப்பொன் அவனுக்குச் சாப்பாடு தயார் செய்தாள். அவன் அலுவலகம் செல்ல லோங்சையும், சேட்டையும் மாட்டிச் செருப்பையும் அணிந்தான்.

“உங்கடை செருப்பும் அறப்போகுது”

“அறாமல் கிடக்கிறதே ஆச்சரியம்” என்று கூறியவள், சுவரில் தொங்கிய கண்ணாடிக்குள் முகத்தைப் புதைத்து முடியைச் சீவி விட்டான்.

“சாப்பிட என்ன கிடக்கப்பா?”

“பாண்துண்டுகளும் கொஞ்சச் சம்பலும் கிடக்குச் சாப்பிடுங்கோ”

“அது போதும் உமக்கு?”

“நான் பகலைக்குச் சோறு தின்பன்?”

கந்தசாமி பிள்ளைகள் மீதியாக விட்ட பாண்துண்டுக் கருக்கல்களைச் சாப்பிட்டான். சின்னப் பொன் சீனிப் பேணியையைத் தட்டி ஒரு கடுதாசித் துண்டில் சீனி கொஞ்சம் சேர்த்து விட்டாள்.

“சீனியும் முடிஞ்சு போச்சு தொட்டுக் கொண்டு வெறும் தேத்தண்ணியைக் குடியுங்கோ”

அவன் தேனீரைக் குடித்து விட்டு எழுந்த போது சோற்றுப் பார்சலை அவனிடம் கொடுத்தாள்.

“சம்பளத்துக்கு இன்னும் பத்து நாள் கிடக்கு, கையிலை காசில்லை. அரிசியும் முடிஞ்சு போச்சு, ஆரிட்டையும் கொஞ்சக் காசு மாறிக் கொண்டு வாங்கோ”

“ஆர் தரப் போறான் பாப்பம்”

“என்ன பாப்பம் புள்ளைகள் என்ன பட்டினியே கிடக்கிறது?

“எல்லாம் வெல்லுவம்!” அவள் கந்தசாமி கூறியதைக் கேட்டுச் சிரித்தாள்.

“சரி நான் வாறன்”

கந்தசாமி அலுவலகத்துக்குப் புறப்பட்டான். “பஸ்சுக்குக் காசில்லையே நடந்தே போப் போறீங்க?”

“நடக்கிறது உடம்புக்கு நல்லம்” அவன் வீதியில் நடந்தவாறே சொன்னான். அவன் அடுத்த வீதிக்கு நடந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்று விட்டு சின்னப்பொன் உள்ளே போனாள். அவனுடைய சேட்டுக் கொலரில் ஊத்தை

எண்ணையுடன் கலந்து ஊறிக் கிடந்தது.

சின்னப்பொன் பெருமூச்சு விட்டாள்.

கந்தசாமி எலிஹவுஸ் வீதி கடந்து, அலுத்மாவத்தைப் பாதைக்கு வந்து “சிகரட்” கொம்பனி வரை நடந்து, அங்கிருந்து ஆமர் வீதி நடந்து, பஞ்சிகாவத்தை தாண்டி, “ரவர்” மண்டபத்துக்கு முன்னால் வந்து, குறுக்கு வீதியால் நடந்து அவனது அலுவலகம் அமைந்துள்ள புதிய செயலகக் கட்டிடத்தை அடைந்தான். அவன் அரை மணித்தியாலம் வரை நடந்ததால் வேர்த்துக் களைத்துப் போச்சு.

அவன் முதலாம், மாடியிலுள்ள தனது அலுவலகத்துக்குப் போய், தன் மேசை முன்னால் கதிரையில் அமர்ந்தான்.

வழிவழியே நடந்து வருகையில், இலங்கைக்கு ஒரு சனாதிபதியை மக்கள் தீர்ப்பு மூலம் தெரிந்தெடுப்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு நடக்கப் போகிறது, என்பதைச் கூறும் சுவரொட்டிகளை வாசித்துக் கொண்டு வந்தான். கந்தசாமி. ஆமர் வீதியில் சனாதிபதிக்குப் போட்டியிடும் ஜே. ஆரின் பெரியதொரு படம் குடச் சின்னத்தோடு கட்டப்பட்டிருந்தது. மருதானைச் சந்தியில் சுதந்திரக் கட்சி

வேட்பாளர் கொப்பேக்கடுவவையின் பெரிய உருவப்படம் தொங்க விடப் பட்டிருந்தது. இருவரையும் கந்தசாமிக்குப் பிடிக்கவில்லை. இவர்களில் யார் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை என்பது அவனது கருத்து. ஜனதா விமுக்திப் பெரமுனை அபேட்சகர் றோஹன விஜேவீராவை ஏனோ அவனுக்குப் பிடித்திருந்திருந்தது. றோஹனவின் தொப்பியும், மூக்குக் கண்ணாடியுந்தான் மிகப் பிடித்திருந்தது.

கதிரையிலிருந்த கந்தசாமி முக வியர்வையையும், கழுத்து வியர்வையையும் துடைத்து விட்டாலும், காலால் வடியும் வியர்வையைத் துடைக்க முடியவில்லை.

கதிரையிலிருந்தபடி குனிந்து அணிந்திருந்த சிலுப்பரைக் கலட்டிப் பார்த்த்தான். இன்னும் ஒரு கிழமை ஓட்டலாம் என்ற மனத் திருப்தியோடு மீண்டும் காலில் மாட்டிக் கொண்டான். வேலை தொடங்க மனமில்லை, “யாரிடம் கடன் கேட்கலாம்” என்ற யோசனை அவனுக்கு இப்பொழுது பெரும் பிரச்சினை.

அங்கு பியோன் காசீமும், ரத்நாயக்காவும் வந்து அவன் மேசை முன் நின்றனர்.

“சேர் “டீ குடிச்சிட்டீங்களா?”

“ஓம் காசிம் இப்போது தான் குடிச்சன்?”

“சேர் ரத்நாயக்காவும் நானும் நாலைந்து மைல் நடந்து வாறம். வீட்டிலும் தேனீர் குடிக்கேல்லை “ஒரு ரூபா தந்தீங்கண்ணா நாங்க இரண்டு பேரும்…..”

“காசிம் , சத்தியமா ஒரு ரூபா கூட என்னிடமில்லை” என்று சேட்டுப் பொக்கற்றைத் தடவிக் காட்டினான்.

“இல்லையெண்ணா பரவாயில்லை சேர்” அவர்கள் இருவரும் திரும்பி நடந்தனர்.

கொமிசனர் குமாரலிங்கத்தாரிடம் கடன் கேட்டால் தருவார் என்று அவரது அறையைப் பார்த்தான். கொமிசனர் குமாரலிங்கம் அறையில் தனியாக இருந்து வேலை செய்வதைக் கண்டு விட்டான்.

எழுந்து சென்று அவரது மேசைக்கு முன்னால் பதுங்கி நின்றான்.

“என்ன கந்தசாமி?”

“ஒண்டு மில்லை சேர் வீட்டில் சம்பளக் காசு முடிஞ்சு போச்சு. ஐம்பது ரூபா கடன் தாருங்கோ சம்பளத்துக்குத்தாரன்.”

“கந்தசாமி ஐம்பது ரூபா கொண்டு வரயில்லை. மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவன், கொண்டு வந்து தாறன்”

“சரி சேர் தங்கியூ சேர்” கந்தசாமி சந்தோஷமாகத் திரும்பி நடந்தான்.

“கந்தசாமி” கொமிசனர் குமாரலிங்கம் தான் கூப்பிட்டார்.

“இந்தா இரண்டு ரூபா! போய்த் தேய்த்தண்ணி குடி. முகத்தில் தெரியுது நீ காலையிலை “டீ” குடிக்கேல்லை”

அவன் அந்த இரண்டு ரூபாவை எடுத்துக்கொண்டு காசிமையும், றத்நாயக்காவையும் தேடிப்பிடித்து கன்டீன்குக் கூட்டிக் கொண்டு போய் தேனீரும், இரண்டு பீடியும் வாங்கிக் கொடுத்தான்.

“கந்தசாமி சேர் விஜய வீராவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“எனக்கு அவரைப் பிடிக்கும்” விபரமாகச் சொல்ல அவன் விரும்பவில்லை.

“உங்கள் வாக்கை அவருக்கு அளியுங்கோ ” காசிமும், றத்நாயக்காவும் கூறினர்.

அவன் எதுவும் கூறாது தலையை அசைத்தான்.

மூவரும் எழுந்து அலுவலகத்துக்குச் சென்றனர். கந்தசாமி தனது ஆசனத்தில் இருந்தான். பசி வயிற்றைக் கிளறியது. மணியைப் பார்த்தவாறு இருந்தான். பன்னிரண்டு மணி அடித்ததும் சோற்றுப் பாசலைத் தூக்கிக் கொண்டு கன்ரீனை அடைந்து ஒரு மேசைக்குக் கிட்ட அமர்ந்து, சோற்றுப்பார்சலை அவிழ்த்தான்.

“வெங்காயச்சம்பல், பொன்னாங்காணிக் கீரை, கத்தரிக்காய்க் குழம்பு. சோறு குறைவாக இருந்தது. தனது பேய்ப்பசிக்கு ஒரு மூலைக்கும் காணாது. அரிசி இல்லையென்று சின்னப்பொன் சொன்னவள் தனக்கும் சோறு வைச்சி ருக்கிறாளோ, பட்டினியோ தெரியல்லை என்று நினைத்தான்.

தன் சோற்றுப் பார்சலுக்குள் கை வைக்கும் போது நிமிர்ந்து பார்த்தான். அவனிருக்கும் மேசையில் அவனுக்கு முன்னால் ஊத்தைச் சேட்டும், காக்கிக் காற்சட்டையும் அணிந்து கொண்டு ஓர் இளைஞன் இருந்தான். அவன் கந்தசாமியின் சோற்றை பார்த்துவிட்டுத் தன் கையிலுள்ள சில்லறைகளை எண்ணினான்.

கந்தசாமி சாப்பிடத் தொடங்கினான். அவனுக்கு முன்னால் இருந்தவன் ஒரு சிங்களப் பையன். அவன் சென்று தேனீர் வாங்கிக் கொண்டு வந்து பழைய இடத்தில் அமர்ந்து அதைக் குடிக்கத் தொடங்கினான்.

கந்தசாமி நிமிர்ந்து பார்க்கையில் அவன் கந்தசாமியையும், சோற்றுப் பார்சலையும் வளர்த்த நாயைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

கந்தசாமி அரைவாசிச் சோறு தின்றிருப்பான், “மாத்தயா! எனக்குக் கொஞ்சச் சோறு மிச்சம் பிடிச்சு வையுங்கோ இரவும் சோறு சாப்பிடேல்லை” என்று சிங்களத்திலே கூறிய அவன் பிளேண்டியைக் குடித்தான்.

“நம மொக்கதை மல்லி” கந்தசாமி அவனிடன் கேட்டான்.

“பிரேமதாசா! நிரந்தர வேலையில்லை, வீட்டிலை குடும்பப்பொறுப்பு”. கந்தசாமியின் மனம் நெகிழ்ந்து போயிற்று. ஆனால் எச்சிச் சோற்றை அவனிடம் கொடுக்க மனம் வரவில்லை.

கந்தசாமி சாப்பிடுவதை நிறுத்தி விட்டுச் சோற்றுப் பார்சலைச்சுருட்டி வைத்திருந்தான். அவன் கந்தசாமியின் முகத்தை உற்று நோக்கினான். தலைகுனிந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு “மாத்தயா வேண்டாம்! நீங்க சாப்பிடுங்க!” என்றான்.

“ஏன் ஏன் சாப்பிடு மல்லி” என்றான்.

“இல்லை மாத்தயா உங்களுக்கே காணாது!”

“சாப்பிடு மல்லி எனக்கு அரை வயிறு நிரம்பிப் போச்சு, உனக்கு வெறும் வயிறு”

“இல்லை, மாத்தயா சாப்பிடுங்கோ, நான் பிளேன்டி குடிச்சிட்டன். நான் வாறான், வேலைக்குப் போக வேணும், அத்திவாரத்துக்கு மண் அள்ளிக் கொட்ட வேணும் “என்று கூறி எழுந்து நடக்கின்ற பிரேமதாசாவை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டு இருந்தான். மிகுதிச்சோற்றைச் சாப்பிட மனம் வரவில்லை. அதை மேசைக் காலோடு சுருண்டு கிடந்த நாய்க்கு வைத்தான். கன்ரீன் “பைப்”பில் தண்ணீ ரை வயிறு நிரம்பக் குடித்தான்.

“பிரேமதாசா வேலைக்குப் போயும் ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்கவில்லை. என் கதியும் அதுதான்.”

காசிம், றத்நாயக்கா, பிரேமதாசா, தனது நிலைமைகளைக் கந்தசாமி சிந்தனை செய்தவாறு தன் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

– தாயகம் 1984 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *