ஒரு ரூபாய் நோட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 4,265 
 
 

பதில் சொல்லத் தெரியாமல் சிவாவுக்கு வாய் அடைத்துப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். பிறகு தன்அறைக்குப் போய் பத்திரமாய் வைத்திருந்த சின்னப் பெட்டி ஒன்றை எடுத்து வந்தான். அதை எடுத்தபோதுஅவனுக்குக் கைகள் சற்று நடுங்கின மாதிரி தோன்றியது. அது பெட்டியைத் தொடும் போதெல்லாம் ஏற்படும்அநுபவம்தான். சிவா பெட்டியைத் திறந்தான். அதில் –

ஒரு ரூபாய் நோட்டு!

சிவாவைப் பொறுத்தவரை அந்த ஒரு ரூபாய் நோட்டு அவன் வாழ்க்கையில் விலை மதிப்பேயில்லாத மிகப்பெரிய பொக்கிஷம்தான்! அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு கண்கள் பனித்துவிடும். வாய்விட்டு சிறிதுஅழலாம்போல மனம் தவிக்கும்.

அந்த ஒரு ரூபாய் நோட்டை வேறு யார் பார்த்தாலும் அவர்கள் கண்களில் எகத்தாளம்தான் மிஞ்சும். ‘என்னஇது…சே…மதிப்பில்லாத ரொம்ப பழைய ஒரு ரூபாய் நோட்டு இது…ஓரத்தில் எண்ணை கறை…கையால்தொட்டாலே வாடிப்போன பூப்போல உதிர்ந்துவிடும்போல கிடக்கு…இது ஒரு பொக்கிஷமா? சிரிப்புதான்வருது…’ என்றுதான் தோன்றும். ஆனால், அந்த ஒரு ரூபாய் நோட்டு விஷயத்தில் மட்டும் சிவா யார்சொல்வதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டான்.

சிவா பதில் சொல்லத் தெரியாமல் தவித்த காரணம் – காலேஜில் முதல் ஆண்டு படிக்கும் அவனுடைய மகன்விமல் பணம் கேட்கும் போதெல்லாம் சிவாவுக்கு சட்டென்று பதில் கிடைக்காது. சில நேரங்களில்இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவர் கோபத்துடன் போய்விட, மற்றவர் முகத்தை எள்ளும் கொள்ளும்வெடித்த மாதிரி வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். சிவாவின் மனைவி கல்பனா நடுவராக வந்து ஓரளவுசமாதானம் செய்வாள்.

செங்கல்பட்டில் பிறந்து வளர்ந்த சிவா, அமெரிக்காவில் தங்கி, படித்து, வேலை, குடும்பம் என்று, காற்றையும்குளிரையும் தாங்கிக் கொண்டு சிகாகோ நகரில் வாழ்க்கையை நகர்த்துகிறான். ஒவ்வொரு நவம்பர் மாதமும்கல்பனாவின் நச்சரிப்பு ஆரம்பித்துவிடும். சிகாகோவில் முதல் பனித்தூறல் விழும் நாளன்று சிவாவுக்குமனைவியின் அர்ச்சனையும் கூடவே விழும் ‘சென்னைக்கு நாம எப்பதான் திரும்பப் போறோம்?’ என்றகல்பனாவின் சீற்றத்துக்கு ‘விமல் மேல் படிப்பு படிக்கணுமே…’ என்று அணை போடுவான்.

விமல் நல்ல பையன்தான். ஆனால், காலேஜ் சேரந்து வாடகை அறையில் இன்னொரு பையனுடன் தங்கஆரம்பித்த சில மாதங்களிலேயே தன் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டான். செலவுக்கு அடிக்கடி பணம்கேட்டான். சிவாவும் கல்பனாவும் கவனமாக போட்ட பட்ஜட் பஞ்சாய் பறக்குமளவு விமல் சிலசமயம்செலவுக்குத் திட்டம் போடுவான். ஒரே வாரிசு என்பதால் விமலுக்கு எந்த குறையும் கூடாது என்று நினைத்து செய்ததின் விளைவோ என சிவா – கல்பனா தம்பதி விவாதிப்பதுண்டு.

சற்றுமுன் விமலுக்கும் சிவாவுக்கும் நடந்த வாக்குவாதத்தில் விமலுக்கு ஓரளவு வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். விமல் பேசிய ஆங்கிலத்தை தமிழாக்கினால் இப்படித்தான் ஒலிக்கும் –

“நீ செங்கல்பட்டுல வசதி குறைச்சலாலே சிக்கனமா வாழறதுக்கு கத்துக்க வேண்டியதாச்சு. இதுஅமெரிக்கா, அப்பா! இந்த கலாச்சாரத்தை சரியா புரிஞ்சுக்காமே சிகாகோவை செங்கல்பட்டுன்னு நீநினைக்கிறயா? உனக்கும் அம்மாவுக்கும் வருமானம் நல்லாதானே இருக்கு…நாம வசதியாதானே இருக்கோம்? என்னை படிக்க வைச்சு கஷ்டமில்லாம பாத்துக்கறது உங்க பொறுப்புதானே?”

“நீ சொல்றது எல்லாம் சரிதாண்டா விமல்..ஆனா…” சிவாவை முடிக்கவிடாமல் விமல் தொடர்ந்தான்.

“ஆனா நான் ரொம்ப பணம் செலவு செய்யறேன்னு நீங்க ரெண்டு பேரும் நினைக்கறீங்க…. இதானே?”

“செலவு அதிகமா அல்லது கொறைச்சலான்றது எதுக்காக செலவு அப்படிங்கறதை பொறுத்தது இல்லையா? சில செலவுகளை தவிர்ககவே முடியாது, சிலதை தவிர்ககணும். பணக்காரனுக்குக் கூட பணத்தோட மதிப்புதெரியணும்…”

“அதான் உனக்கு தெரிஞ்சிருக்கே…அதுவே போதும்…”

அப்பாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் விமலுக்கு‘சுவாமிநாதன்’ என்ற பெயர் வைத்திருக்கலாம்! கோபத்தில் விமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

***

பெட்டியத் திறந்தவாறு உட்கார்ந்திருந்த சிவா பழைய நினைவுகளில் தன்னை இழந்து கண்களை மூடியிருந்தான். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தானோ, சத்தம் கேட்டதும் சட்டென கண் விழித்தபோது எதிரேவிமல் உட்கார்ந்திருந்தான்.

“அப்பா…” விமலின் குரலில் இப்போது சூடு இல்லை… சிகாகோ குளிர் அவனுடைய கோபத்தைத்தணித்திருக்கலாமோ?

‘உம் …. இப்ப என்ன?’ என்பதைப்போல் சிவா ஏறெடுத்துப் பார்த்தான்.

“மறுபடியும் அந்த ஒரு ரூபாய் நோட்டை பாத்தபடி வெளி கிரகத்துக்கு போயிட்டியா? அப்படி அதுலஎன்னதான் பெரிய விஷயம்?”

“நீ சின்ன பையனா இருந்தப்போ ‘இது இந்தியா பணமாச்சே. இதுக்குப் போய் என்ன மதிப்பு? இதை ஏன் நீஇன்னும் வைச்சிருக்கே? அப்படின்னு கேட்டிருக்கே.

‘இப்ப சொன்னா உனக்கு புரியாது, விமல்…நீ கொஞ்சம்பெரியவனானப்பறம் சொல்றேன்…’ னு நான் பதில் சொல்வேன். நான் சொல்லவேண்டிய நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்”

சிவா பெட்டியிலிருந்த ஒரு ரூபாய் நோட்டை பார்த்தபடியே மேலே தொடர்ந்தான்.

“அப்போ எனக்கு பதினாலு வயசு இருக்கும். செங்கல்பட்டுல கணபதி சினிமா டாக்கீஸ் இருந்தது. அதுலநடிகர் திலகம் நடிச்ச புதுப்படம் வந்து மூணு நாள் ஆகியிருந்தது. என் சினேகித பசங்க எல்லாருமே முதல்நாளே அந்த படத்தை பாத்துட்டாங்க…”

விமல் கவனமாகவே கட்டுக் கொண்டிருந்தான்.

“உன் தாத்தா ஓட்டல்ல மேஸ்திரி வேலை செஞ்சார்னு உனக்கு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்…படத்துக்குப் போகணும்னு எங்கப்பாகிட்ட காசு கேட்டேன்…அப்பவும் அவருக்கு வழக்கம்போல பணத்தட்டுப்பாடு. ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் படம் பாக்க காசு கேட்டபோது, என்னை ஓட்டலுக்குவரச்சொன்னார். நான் போனபோது, என் அப்பா அடுப்படியிலே பஜ்ஜி போடறதை நேர்ல பாத்ததுமேதிடுக்கிட்டுப் போயிட்டேன். மேஸ்திரின்னுதான் பேரு…ஆனா, பலகாரம் போடற ஆளு வராதபோது அப்பாதான் அந்த வேலையை செய்வாராம்…அடுப்புப் புகையும் எண்ணைப் புகையும் சேர்ந்து கொள்ள அப்பா கண்ணைக்கசக்கிக் கொண்டே வேலை செய்த காட்சி இன்னும் மனசிலேயே தெரியுது…”

சிவாவின் குரல் கம்மியது… இளைஞன் விமல் சற்று தடுமாறினான். சிவா மேலே பேசினான்.

“என்னடா, சிவா…படத்துக்கு போக காசு கேட்டியே அவர் கையிலிருந்த கரண்டியை மேடைமேல் வைத்தார். சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் நோட்டை எடுத்தார்; வாணாயிலிருந்து அதில் ஒரு துளிஎண்ணை தெறித்தது. அதை சட்டென்று கையால் துடைத்துவிட்டு என்னிடம் நீட்டி, சினிமா பாத்துட்டுஜாக்கிரதையாய் வீடு திரும்புடா என்றார். என் கையில் ஒரு ரூபாய் நோட்டு வந்ததும் என் முகம் மலர்ந்ததைஅவர் பார்த்தார். அவருடைய முகத்தில் ஓர் அலாதியான திருப்தி தெரிந்தது… இந்த பெட்டியிலிருக்கறது…அதேஒரு ரூபாய் நோட்டு, விமல்…”

“அப்படின்னா…நீ அன்னக்கி சினிமாவுக்கு போகலையா…?”

“சினிமா தியேட்டர் வரைக்கும் வேதனையோடதான் போனேன். என் அப்பா சூடான எண்ணைச் சட்டியின்பக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு, வியர்வையை துடைத்தபடி, சட்டைப் பையிலிருந்து எடுத்துக்கொடுத்த ஒரு ரூபாய் நோட்டுக்கு மதிப்பு – ஒரு ரூபாய் மட்டுமா? அது அவர் தன் பிள்ளைமேல் வைச்சிருந்தபாசத்தோட சின்னம்னு என் மனசு சொல்லிச்சு…அடுப்படியிலே அப்பா உழைச்சது அவரோட குடும்பத்துக்காகன்னு நினைச்சப்போ, அப்பா தந்த எண்ணைக் கறை படிந்த ஒரு ரூபாய் நோட்டை எப்பவுமே செலவு பண்ணக்கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன்…இதோ…இன்னமும் இந்த பெட்டிக்குள்ளேயே…”

பெருமூச்சு விட்ட சிவா, பெட்டியை மெல்ல மூடியபின் விமலை ஏறிட்டுப் பார்த்தான்.

“பணத்தோட மதிப்பு இப்போ கொஞ்சம் புரியது அப்பா…” என்று சொல்லிக் கொண்டே சிவாவை இறுகத்தழுவிக் கொண்டான்.

இனி பணம் பற்றின விவாதம் சிவாவின் வீட்டில் இருக்காது என்று நம்பலாம். வேறு எந்த விவாதமும் தொடங்காது என்பதை யார் சொல்ல முடியம்?

– 2012ம் ஆண்டு ‘கலைமகள்’ தீபாவளி மலரில் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *