ஒரு முகம், ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 10,574 
 

வெய்யில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த பாழாய்ப்போன புழுக்கம்தான் இது சென்னை என்பதை நினைவுபடுத்திகொண்டே இருக்கிறது.. எதிரில் இருந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தான். விற்பனைக்கு என்பது மாதிரியான போர்டு எதுவும் இல்லை. சொல்லப் போனால் அந்தத் தெருவிலேயே for sale போர்டுபோட்ட அபார்ட்மெண்டுகள் எதுவும் இல்லை. ஆனால் புரோக்கர் இந்த தெருவுக்குதான் வரச்சொல்லியிருந்தான்.

அழகான தெருவாகத்தான் இருக்கிறது. முக்கு திரும்பும்போது எதிர்த்தாற்போல ஒரு சர்ச் இருக்கிறது. அதிசயமாக தெருவுக்குள் ஒரு முதியோர் இல்லம் தென்பட்டது. தெருவில் இருந்து பார்க்கும்போது உள்ளே நான்கைந்து மரங்கள் வைத்து, மரத்தடியில் ஈசிசேர்கள் போடப்பட்டு அமைதியான சூழலாகத் தெரிந்தது. கிழட்டுத்தனிமையில் அழுவதற்கு அமைதி என்ன, கலவரம் என்ன..

ஊரில் நிம்மதியாக இருக்கும் அப்பாவின் நினைவு வந்தது. இப்படியொரு ஹோமில் சேர்த்துவிடுவதாகச் சொன்னால் இவன் உறவையும், கூடவே இவனையும் வெட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்க்கும் அப்பன். ஊரின் பசுமையும், குளுமையும், நிம்மதியும் ஒரு வலியைப்போல நினைவுக்கு வருகின்றன.

சம்பாதித்து நிம்மதியாக ஊரில் ஒரு விவசாயியாக செட்டிலாவதுதான் இவனது லட்சியமாக இருந்தது. இயற்கை விவசாயம், ஏற்றுமதி என்று நிறைய கனவுகள் அவனிடம் இருக்கின்றன. அந்த வேகத்தில்தான் சம்பாதித்த காசில் எல்லாம் ஊரில் நிலமாக வாங்கிப்போட்டான். அதே லட்சியத்தோடுதான் எதோ ஜெயில் தண்டனையை அனுபவிப்பது போல வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தான். மாரியம்மாவின் தொந்தரவு தாங்காமல்தான் இப்போது இந்த வீடு பார்க்க வந்திருந்தான். “மாசாமாசம் உங்காம திங்காம பன்னெண்டாயிரம் போகுதே..” என்று புலம்பிப் புலம்பியே அவனை வீடுவாங்க சம்மதிக்க வைத்திருந்தாள். “நீ வேணா பட்டிக்குப் போயிருவ. நம்ம புள்ளைக மெட்ராச விட்டு வருமா? அதுகளுக்காவது ஒரு வீடு வேணாமா? காசு இல்லன்னா பரவால்ல.. அதுதேன் இருக்குல்ல..” என்பது அவளது கடைசி அஸ்திரம்..

இப்போது இவன் நின்றிருந்த மரத்தடியின் எதிர் ஃப்ளாட் ஜன்னலில் இருந்து ஒரு முகம் இவனை சந்தேகமாகப் பார்த்துவிட்டு சட்டென ஜன்னலை மூடிக் கொண்டது. இவனுக்குள் கோபம் ஒரு கெட்ட வாசனை போல கிளம்பியது. இவன் போட்டிருக்கும் சட்டையின் விலை ஆயிரம் ரூபாய். பேண்ட் ஆயிரத்து முன்னூறு. எதனாலும் அவனது முகத்தை இன்றுவரை மாற்ற முடிந்ததில்லை.

பிறந்ததில் இருந்து இந்த முகம்தான் அவன் கூடவே இருக்கிறது. இதற்குள் அவனுக்கு எல்லாம் பழகியிருக்கவேண்டும். ஆனாலும சமீப காலமாய் இந்த அவமானங்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் கோபம் வருகிறது.

அவன் தன் முகத்தை நிதானமாக கண்ணாடியில் பார்த்து பத்துவருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. தன் முகத்தைப் பார்க்க அவனுக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

முதன் முதலில் அவமானப்பட்ட கணம் அவனுக்கு தெள்ளத்தெளிவாக நினைவில் இருக்கிறது. டென்த் முடித்து நல்ல மார்க் வாங்கிவிட்டு பக்கத்து டவுன் ஸ்கூலில் ப்ளஸ் டூ சேர்ந்திருந்தான். முதல் முதல் ஃபிசிக்ஸ் டெஸ்ட் பேப்பரைக் கொடுக்க வந்த வாத்தியார், “யாருப்பா அது முத்துக்குமாரு?” என்று கேட்டதும் இவன் எழுந்து நின்ற கணத்தில் அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி ஒரு முப்பரிமாண நிழற்படமாக இவன் மனதில் இன்னும் நிஜம்போல நிற்கிறது. முதல் டெஸ்ட்டிலேயே இவன் நூறு மார்க் எடுத்ததை அவரால் நம்பவே முடியவில்லை. “காப்பி அடிச்சியா? ஸ்டாஃப் ரூம் பக்கம் வந்து கொஸ்டின் பேப்பரை எடுத்துப் பாத்தியா?” என்று நூறு கேள்வி கேட்டுவிட்டு அப்படியும் நம்ப முடியாமல் சட்டென ஒரு பெரிய பதிலுள்ள கேள்வியை பாடத்திலிருந்து கேட்டு அவர் கண் முன்னாலேயே எழுத வைத்தார். அதைப் பார்த்த பின்னும் கூட அவனை பல நாட்கள் சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருந்தார். அரைப் பரீட்சைக்குப் பிறகுதான் உண்மையிலேயே அவன் நன்றாய்ப் படிக்கிறான் என்பதை அவரால் நம்பவே முடிந்தது.

அது ஒரு துவக்கம்தான். அதற்குப்பிறகுதான் அவமானங்கள் வரிசை கட்ட ஆரம்பித்தன. பப்ளிக் எக்சாமின்போது இவன் ஹாலுக்கு வந்த எல்லா சூப்பர்வைசர்களும் பிள்ளையார் சுழி மாதிரி இவனை சோதனை போட்டுவிட்டுதான் எக்சாமையே ஆரம்பித்து வைத்தார்கள். பின்னர் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றவனாக இவனது புகைப்படம் தந்தியில் வந்ததை அவர்கள் பார்த்திருப்பார்களோ மாட்டார்களோ தெரியவில்லை..

கல்லூரி அதைவிட மோசம்.. முதல் வருடம் முழுக்க ராகிங் என்கிற பெயரில் சீனியர்கள் இவனை மட்டுமே வதைத்து எடுத்தார்கள். போதாக்குறைக்கு இவன் சாதியை வேறு தெரிந்து கொண்டதால் ஸ்வீப்பர் என்ற பட்டப் பெயரே இவனுக்கு நிலைபெற்றுப் போனது. செத்தாலும் ஜெயிக்காமல் ஊருக்குப் போவதில்லை என்ற வைராக்கியம்தான் அனைத்தையும் தாங்கும் சக்தியையும், தற்கொலையிலிருந்து தப்பிக்கும் திடத்தையும் அவனுக்குக் கொடுத்தது. ஒவ்வொரு பரீட்சை முடிந்து வரும் ரிசல்ட்டுகளும் அவனது மரியாதையை மெல்ல மெல்ல அதிகரித்தன. எல்லாம் முடிந்து பட்டம் பெறும் நாளில் அவரும் தாழ்த்தப் பட்டவரான முதல்வர், விழா மேடையில் அறிவிக்கும்போது, “ஸ்வீப்பர் என்ற பட்டப் பெயரால் இந்த இளைஞன் பல நாட்கள் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறான். என்னிடம் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொன்னபோதும் புன்னகையுடன் மறுத்து கடந்துதான் போயிருக்கிறான். ஆனால் தனது பட்டப் பெயரை கௌரவமான பெயராக ஆக்கிகொண்ட இவனை நினைத்தால் எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. ஆமாம். இவன்தான் இந்த வருடத்தின் ஸ்வீப்பர் ஆஃப் ஆல் அவார்ட்ஸ்.” என கண்கலங்கி அறிவித்தபோது இவனுக்கு ஒரு பெருமிதமான கோபம்தான் மனதுக்குள் இருந்தது. ஒரு வன்மத்தோடுதான் மேடைக்குப் போகும்போது வேட்டி கட்டியபடி செருப்பில்லாக் காலுடன் நடந்து சென்று துணைவேந்தரிடம், யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் என்ற கோல்டு மெடல் உட்பட ஒவ்வொரு விருதையும் வாங்கினான். மொத்த கல்லூரியும் எழுந்து நின்று, அவனை அவமானப் படுத்தியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்பதுபோல, விடாமல் பத்து நிமிடம் கைதட்டிய நாள் அன்று. உண்மையில் அன்று அவன் அழவில்லை. முதல்வர்தான் கேவிக் கேவி அழுதார். அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் அந்தக் கல்லூரியில் இருந்து இதுவரை யாரும் யுனிவர்சிட்டி கோல்டு மெடல் வாங்கியதில்லை என்பது வரலாறு.

பிறகு அவன் அதிகநாள் காத்திருக்க அவசியமில்லாமல் போனது. வேலைக்காக எழுதிய முதல் தேர்விலேயே செலக்ட் ஆகி சென்னைக்கு வந்துவிட்டான். முதல் சம்பளமே மூன்றாயிரம் ரூபாய். பதினெட்டு வருடத்துக்கு முன்பு அது குபேர சம்பளம். அவனது அப்பனின் ஒரு வருட சம்பளத்தை விட மிக மிக அதிகம்.. கேள்விப்பட்டதும் அப்பன் நம்பவே இல்லை. “நல்லவழியா சம்பாதிக்கிற வேலதானய்யா? ரெண்டாம் நம்பர் தொழிலெல்லாம் இல்லேல்ல..?” என்று கேட்டுக் கேட்டு அரண்டு போனது. வேலையில் சேர்ந்தபின் மெனக்கெட்டு அவரை ரயிலில் அழைத்து வந்து ஆபீசை காட்டி, அதில் இவனது அறையைக் காட்டி, இவனுக்காக ஏவல் செய்ய காத்திருந்த அட்டெண்டரைக் காட்டியதும்தான் சமாதானப்பட்டது. அது சரி. இந்த மூஞ்சிக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று அப்பனே நம்பாதபோது உலகம் எப்படி நம்பும்?

அவன் சென்னைப் பெருநகரம் தரப் போகும் அவமானங்களுக்கெல்லாம் தயாராகத்தான் வந்திருந்தான். எப்போது மணியடித்தாலும் சாவகாசமாக உள்ளே வந்து, சார் போடாமல் வெறுமனே “என்ன?” என்று மட்டும் கேட்கும் அட்டெண்டரில் இருந்து, ஆட்டோ கூப்பிட்டால் “பணம் இருக்கிறதா? காட்டு..” என சொல்லி பணத்தைப் பார்த்தபிறகு ஆட்டோ எடுக்கும் ஆட்டோக்காரர் வரை எங்கெங்கு நோக்கினும் அவமானங்கள் காத்திருக்கத்தான் செய்தன.

தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுக்கப் பணத்தை கவுண்ட்டரில் நீட்டினால், முகத்தைப் பார்த்துவிட்டு “இது இங்கிலீஷ் படம்..” என்று பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். பஸ்களில் ஏறியதும் பெண்கள் எல்லாம் இவனைப் பார்த்ததும் சேலைத்தலைப்பால் தங்கள் நகைகளை மூடிக் கொண்டார்கள். உச்சகட்டமாக ஒரு நாள் பஸ்சில் ஒரு பெண் பர்சைக் காணோம் என்று திடீரென கத்தியதும் ஒரு மத்தியவயது ஆண், “இந்த பெர்சன் மேலதான் எனக்கு டவுட்டா இருக்கு. அந்த லேடியவே ரொம்ப நாழியா பாத்துக்கிட்டு இருந்தான்..” என இவனைக் காட்டியதும் எந்த தயக்கமும் இல்லாமல் இவனை அடிக்க துவங்கிவிட்டார்கள். கடைசியில் அந்தப் பெண்ணின் பர்ஸ் அவளது சேலைக்குள்ளேயே கிடந்ததைக் கண்டுபிடித்ததும் யாரும் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்..

அதிக பட்ச வாதை என்னவென்றால், இவன் எந்த பஸ் ஸ்டாப்பில் நின்றாலும், எந்த கோவிலில் இருந்து வெளியே வந்தாலும் ஒரு பிச்சைக் காரன்கூட இவனிடம் பிச்சை கேட்பதே இல்லை. இவனருகில் உள்ள எல்லோரிடமும் பிச்சை கேட்டாலும் இவனிடம் ஒருபோதும் ஒருவரும் பிச்சை கேட
டதே இல்லை என்பது தீரா நோவாக மனதோரம் இன்றுவரை தேங்கியே கிடக்கிறது – புறக்கணிப்பில் பெரியது பிச்சைக்காரரால் கூட புறக்கணிக்கப்படுவது…

இவன் பொறுமை இழந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவோமா என யோசித்தான்.. புரோக்கர் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக போனில் அருகில்தான் எங்கோ இருப்பதாகச் சொன்னான். ஒரு பத்து கிலோமீட்டர் சுற்றளவில் எங்கே இருந்திருந்தாலும் இந்நேரம் நடந்து கூட வந்திருக்கலாம். எதிர்வீட்டு ஜன்னல் வேறு மூன்று முறை திறந்து மூடிவிட்டது. அடுத்து போலீஸ் வந்தாலும் வரலாம். வீடு வாங்க வந்த இடத்தில் அடுத்த அவமானம் தேவையா? அந்த வீட்டை இன்னொரு முறை வந்து பார்த்துக் கொள்ளலாமே என யோசித்து வண்டியில் ஏறும்போது செல் அடித்தது. புரோக்கர்தான். அப்பாடா என மூச்சு வந்தது. செல்லை எடுக்காமலேயே சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தொலைவில் பேண்ட் சர்ட் போட்ட ஒரு மனிதன் காதில் செல்லை வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றான். இவன் அவனை நோக்கி கையசைத்தான். அதை கவனித்த போதும் அந்த மனிதன் எந்த பாவமும் காட்டாமல் சுற்றிப் பார்த்தபடியே இருக்கவும் இவன் சந்தேகத்தில் போனை அட்டெண்ட் செய்து “ஹலோ..” என்றான். அந்த பேண்ட்சட்டை மனிதன்தான்.. “நாந்தாங்க புரோக்கர் பேசுறேன். சாய்நகர் ஒண்ணாவது தெருவுல நிக்கிறேன்னீங்களே..” என்றான். இவனுக்கு கோபம் வந்தது. “ஏங்க எதித்தாப்புல நின்னு கையக் காட்டிக்கிட்டே இருக்கேன். அதை கவனிக்காம போன் பண்ணுனா என்ன அர்த்தம்?” என்றான்.

புரோக்கர் இப்போது திடுக்கிட்டு போனை கட் செய்தான். இவனையே சந்தேகமாக பார்த்தபடி அருகில் வந்தான். “த்ரீ பெட்ரூம் ஃப்ளாட்டு வாங்கணும்னு போன் பண்ணுனது…” என்றதும் இவன் கோபத்தை அடக்கிக் கொண்டு, ”நாந்தான். பேரு முத்துகுமார். சதர்ன் பெட்ரோ புராடக்ட்ஸ்ல சீனியர் எஞ்சினியர்.” என்றான். புரோக்கர் இவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, யோசித்தான். “அம்பத்தஞ்சு லட்சம் விலை ஆகும். தெரியும்ல்ல?”

இவனுக்கு சலிப்பாக இருந்தது. “தெரியும்ங்க. அம்பத்து நாலு லட்சத்து அறுபத்தஞ்சாயிரத்து ஐநூறு வரும். கால்குலேட் பண்ணிப் பாத்துட்டேன்.” என்றான்.

“ஃப்ளாட்டு உங்களுக்குத்தான?”

“ஹலோ.. உங்களுக்கு என்ன வேணும்? ஃபிளாட்டு வாங்கினா கமிஷன். அவ்வளவுதானே? தர்றேன். முதல்ல வீட்டைக் காட்டுங்க..”

“இல்லங்க. நீங்களும் புரோக்கரா இருந்தா..”

“யோவ். புரோக்கரா இருந்தா உனக்கு என்னய்யா.. காசு வந்தா பத்தாதா? இப்ப நீ வீட்ட காட்டப் போறியா இல்லையா?”

“அய்ய.. கோவப் படாதீங்க பாஸ். கொஞ்சம் இருங்க. ஹவுஸ் ஓனர் பக்கத்து தெருவுலதான் இருக்காரு. போயி சாவி வாங்கிட்டு வந்துர்றேன்..”

“சீக்கிரம் வாங்கிட்டு வாங்க. ஏற்கெனவே ஒன்னவரா வெயிட் பண்ணுறேன்..” என்றதும் புரோக்கர் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேக வேகமாக அந்த இடத்தை விடடு அகன்றான்.

வீடு வாடகைக்கு தேடும்போதெல்லாம் அவன் சந்தித்த பிரச்சினைதான் இது. இப்போது இருக்கும் வீட்டின் ஓனரிடம கூட இவனது சாலரி சர்டடிபிகேட், டிகிரி சர்ட்டிபிகேட், ப்ளஸ்டூ மார்க் லிஸ்ட் எல்லாம் காட்டவேண்டி வந்தது. அவன் முகத்தை விட மார்க்கைப் பார்த்துதான் வீட்டைக் கொடுத்தார் அந்தப் புண்ணியவான், இத்தனைக்கும் இவனது சாதியைச் சேர்ந்தவர்தான் அவர்.. கற்றவனாக மட்டும் இல்லதிருந்தால் இவனுக்கு சென்றவிடமெல்லாம் செருப்புதானாக இருந்திருக்கும்.. இப்போது வீடு விலைக்குத் தேடும் இடத்திலும் இதே இம்சை, அவமானம்..

உண்மையில் பேரை மாற்றுவது போல் முகத்தை மாற்றுவதும் எளிதாக இருந்திருக்கலாம். சில சமயம் பணம்தான் இருக்கிறதே. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் என்ன என்றும் தோன்றியிருக்கிறது. அப்படி மாற்றிக் கொள்வதுதான் ஆகப் பெரிய அவமானம் எனத்தோன்றி அந்த எண்ணத்தையும் கைவிட்டான். பிறந்ததிலிருந்து இந்த முகத்தையே அப்பாவாகப் பார்த்த பிள்ளைகள் என்ன நினைக்கும்?

சொல்லப் போனால் பேரைமாற்றுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது. இவனது அப்பன் இவனுக்காக ஆசைப்படடு வைத்த பெயர் ஐக்கோடு – ஹை கோர்ட்டுக்கு இவர்கள் தெருவில் இருக்கும் வட்டார வழக்கு. ஹியரிங்குக்கு ஈராங்கி..

அதையும் எந்த கெட்ட நோக்கத்திலும் அது வைக்கவில்லை. அதைப் பொறுத்தவரை உலகத்தில் அனைத்தையும் அனைவரையும் விட சக்தி படைத்தது ஐக்கோடுதான். கலைட்டரு, கவர்னரக்கூட நிக்க வச்சுதான் கேள்வி கேக்குமாம்.. மகனும் அந்த அளவுக்கு பெரியவனாக வரட்டும் என்றெண்ணித்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறது அப்பன். மிடில் ஸ்கூல் போனதும் பையன்களின் லந்து தாங்கமுடியாமல் போனது. சிவகுமார் சாரிடம்தான் போய் அழுதான். அவர்தான் எங்கெங்கோ பாரங்களை அனுப்பி யார்யாரிடமோ கையெழுத்து வாங்கி ஐக்கோடை முத்துக்குமாராக்கினார்.

“என்ன பேருடா வச்சுக்குற?” என்று சார் கேட்டபோது, பேரை மாற்ற வேண்டும் என்று நினைத்தோமே ஒழிய புதிதாக என்ன பெயர் வைக்கவேண்டும் என்று யோசிக்கவில்லையே என விழித்தான். சார் மறுபடி கேட்டதும் சட்டென வாய்க்கு வந்த முத்துகுமார் என்ற பெயரையே சொல்லிவிட்டான். அப்புறமாக யோசித்தான் – மாற்றுகிறதுதான் மாற்றுகிறோம் தினேஷ், ரமேஷ் கிரீஷ் என்று ஸ்டைலாக எதாவது பேரை வைத்துக் கொண்டிருக்கலாமே என்று. ஆனாலும் ஐக்கோடுகூட கம்பேர் பண்ணும்போது இது கோவிலில் வைத்து கும்பிட வேண்டிய பெயர்தான் என்று சந்தோசப் பட்டான். விசயத்தைக் கேள்விப் பட்டதும் அப்பன் கோபத்தில் சத்தம் போட்டது. “இப்புடி பேரை மாத்திக்கிட்டது முதலாளிக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ..” என்று கவலைப்பட்டது. இவனுக்கோ சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. கோவத்தில் அப்பா இவனை தூக்கிப் போட்டு ரெண்டு சாத்து சாத்தியிருந்தாலும் சிரித்துக் கொண்டேதான் வாங்கியிருப்பான். நான்குநாள் தன்னைத் தானே முத்துக்குமார் என்று கூப்பிட்டு தானே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். சொல்லப் போனால் இவனை முத்துக்குமார் என்று கூப்பிட அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒருவரும் இல்லை. பேரை மாத்தினாலும் வாத்தியார்கள் உட்பட எல்லாரும் இவனை ஐக்கோடு என்றுதான் அழைத்தார்கள். சிவகுமார் சார் மட்டும் முத்துக் குமார் என்று அழைத்தார். தேனி ஸ்கூலில் ப்ளஸ் டூ சேர்ந்தபிறகுதான் அனைவரும் இவனை முத்துக்குமார் என்று அழைத்தனர் – அங்கே இவன் புதியவன் இல்லையா.. (கொஞ்ச நாளிலேயே இவனது முகத்தை வைத்து ஆஞ்சநேயன் என பெயரிடப்பட்டு பின்னர் அது சுருங்கி ஆஞ்ச்சு என்றே இறுதிவரை அழைக்கப்பட்டான்) இன்றைக்கும் பட்டியில் இவன் ஐக்கோடு என்றே அறியப் படுகிறான்.

இப்போது தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். நிகழ்ந்த நேரத்தில் வேதனையாக இருந்த ஒரு சம்பவம், கடந்தபிறகு காமெடியாகத் தெரிவது உலகத்தின் நியமம் போலும் என நினைத்து திரும்பியவன் திடுக்கிட்டான்.

அங்கே ஒரு ஏழு வயதுப் பெண்குழந்தை சைக்கிள் ஓட்டியபடி வந்துகொண்டிருந்தாள்.
அதை இப்படி ஒரு சாதாரண வாக்கியமாக அவனால் நினைக்க முடியவில்லை.

உண்மையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தது திராவிடச் செல்வி என்ற செல்வி.. கும்பக்கரை அருவியில் கால் வழுக்கியபடி கீழே கீழே கீழே என்று ஆள்வாரிப் பள்ளத்துக்குள் செல்வது போல உணர்ந்தான். அச்சு அசலாக செல்விதான். அதே மாதிரி சுருள்முடி. அதே மாதிரி என்ன.. அவளேதான். கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்குப்பின் மறுபடியும் சிறுமியாக அவள் எப்படி..

அவனுக்கு கொஞ்சம் மூச்சுமுட்டியது. பார்த்துகொண்டு இருக்கும்போதே அந்த சிறுமி செல்வி மாதிரியே தனக்குத்தானே எதோ பாடலைப் பாடியபடி கடந்து போனாள்.. இவனுக்கு கொஞ்சம் கண்ணீர் வரும்போல இருந்தது. அவளை கூப்பிட நினைத்தான். ஆனால் முடியவில்லை. கூச்சம் தடுத்தது.

என்ன சொல்லி அழைப்பது? நிச்சயம் இவள் செல்வி இல்லை.. சாத்தியமில்லை. ஒரு வேளை செல்வியின் மகளாக இருப்பாளா? இருக்குமோ..? அப்படியென்றால் செல்வி இங்குதான் இருக்கிறாளா? அவனுக்கு படபடப்பில் லேசாக கால் நடுங்கியது. நல்லவேளை பைக்கில் செண்டர் ஸ்டாண்டு போட்டிருந்தான். அந்தச் சிறுமி ஒரு நீலவண்ண கேட்போட்ட வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டியபடி சென்று மறைந்து விட்டாள்.

இவன் அந்த வீட்டையே பார்த்தபடி திகைத்து நின்றுவிட்டான். என்ன செய்வது என்று தெரியவில்லை. முன்னம் ஒரு பெருந்துயரப் பொழுதில் இவனை ஆற்றுப் படுத்திய பாடல் ஒன்று திடுமென ஒலித்து ஓய்ந்தது போல உணர்ந்தான்..

அவன் செல்வியை மறக்கவில்லை. இத்தனை நாள் வாழ்கையில் ஒருகணம் கூட மறக்கவில்லை.. செல்வி அவனை நினைவில் வைத்திருப்பாளா? அவனுக்கு படபடப்பு கூடியது.

அவன் சின்னப் பள்ளிக்கூடத்தில் மூணாப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் வகுப்புக்குப் புதிதாக வந்து சேர்ந்தாள் திராவிடச் செல்வி. பெரியவீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பெஞ்சியில் உட்கார்ந்து இருந்தார்கள். இவனைப் போல வேற சாதிப் பிள்ளைகள் ஐந்து பேரும் தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். செல்வியை வாத்தியார் பெஞ்சியில் உட்காரச் சொன்னபோதே அவள் பெரிய வீட்டுப் பிள்ளைதான் என்பது தெரிந்துவிட்டது.

இவன் செல்வி வீட்டைக் கடந்துதான் பள்ளிக்கோடத்துக்குப் போகவேண்டும். மறுநாள் காலையில் இவன் மண் வண்ணத்துக்கு மாறிவிட்ட மஞ்சள்பையோடு பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தான். அந்த வீட்டு வாசலிலேயே ஓர் அழகான பெண்மணியோடு செல்வி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அம்மாவாக இருக்க வேண்டும். இவனைக்காட்டி அவர்களிடம் என்னவோ சொன்னாள். அவர்கள் புன்னகைத்து, “டேய் தம்பி.. இங்க வா.” என்று அழைத்தார்கள். உலகத்தில் அம்மாவைத்தவிர அதுவரை யாருமே அவனை அத்தனை அன்புடன் அழைத்ததில்லை. எல்லாமே ‘ஏலேய்’தான். சொல்லப்போனால் இவனது அப்பாவைக்கூட அந்தத் தெருவில் பெரியவர்களில் இருந்து சிறுவர்கள் வரை ஏலேய் என்றுதான் அழைப்பார்கள். அம்மா மட்டுந்தான் இவனை ‘தம்பி’ என்று அழைக்கும். இவனுக்குப் பெருமையாகவும், வெட்கமாகவும் இருந்தது. அவர்கள் அருகில் சென்று வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றுவிட்டான். அந்த பெண்மணி “உன் பேரு என்னடா தம்பி..” என்றதும் இவனுக்கு ரொம்ப வெட்கமாகிவிட்டது. தலையைக் குனிந்தபடியே “ஐக்கோடு..” என்றான். அந்தப் பெண்மணி குழம்பி “என்னது?” என்றதும் இவன் தப்பு எதுவும் செய்துவிட்டோமோ என்று திடுக்கிட்டு தலை நிமிர்ந்து “ஐக்கோடுக்கா..” என்றான்.

அவர்கள் மறுபடியும் புன்னகை மாறாமல், “அட.. நல்ல பேரா இருக்கே.. நீயும் செல்வி கிளாஸ்லதான் படிக்கிறியாமே..” என்றதும் வெட்கம் மேலிட தலையைக் குனிந்துகொண்டு ஆமாமென தலையசைத்தான். “செல்விக்கு இந்த ஊரு புதுசு இல்லையா.. அதனால தினமும் நீ ஸ்கூலுக்குப் போறப்ப செல்விய கூட்டிட்டுப் போயிட்டு, வர்றப்ப அவள கூட்டிட்டு வந்துர்றியா?” என்றார் அவர்.

இவனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. தலை குனிந்தபடியே “சரிக்கா..” என்று தலையாட்டிவிட்டு நடக்கத் துவங்கினான். செல்வி வருகிறாளா என்று திரும்பிப் பார்க்க, அவள் கையில் அலுமினியப் பெட்டியுடன் “அம்மா டாட்டா..” என்று கையசைத்துவிட்டு நடந்துவர இவனுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.. டாட்டா என்றால் என்ன என்று தெரியவில்லை..

செல்வி இவனருகில் வந்து குதியாட்டமாக நடந்துவரத் துவங்கினாள். “உம்பேரு ஐக்கோடா?” என்று கேட்டாள். இவன் அவளைப் பார்க்காமலே தலை குனிந்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆமாமென தலையசைத்தான்.

“அப்புடின்னா என்ன?” என்றாள். இவனுக்குப் புரியவில்லை. அதை வெளிப்படையாக சொல்ல வெட்கமாக இருந்தது.

“அப்புடின்னா பேரு…” என்றுமட்டும் சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினான். செல்வியும் அவன் வேகத்துக்கு நடக்கத் துவங்கினாள். தானாக ஏதோ பாட்டுப் பாடியபடி அவள் நடந்துவருவது ரொம்ப அழகாகவும் பெருமையாகவும் இருந்தது.

பள்ளிகோடத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தாள் செல்வி.

உள்ளே போனதும் நேராக இவன் அருகில் வந்து பெட்டியோடு தரையில் உட்கார்ந்துவிட்டாள்.

வாத்தியார் வந்து பதறிப்போய் அவளை மேலே உட்காரச் சொன்னதோடு அவளை தன்னருகில் உட்கார வைத்ததற்காக இவனை குண்டிபழுக்க தொளுக்கு தொளுக்கு என்று தொளுக்கிவிட்டார். அதற்கு செல்வி அழத்துவங்க பெரிய களேபரமாகிவிட்டது. அன்று சாயந்திரம் செல்வி இவனோடுதான் வீட்டுக்குப் புறப்பட்டாள். போகிற வழியில் அப்பன் மண்ணு குழைத்துக் கொண்டிருந்தது. இவனைப் பார்த்ததும், “ஏலேய்.. உங்கம்மாகிட்ட சுடுதண்ணி வைக்கச் சொல்லுடா. வீட்டுக்கு வந்ததும் வென்னித்தண்ணியில குளிக்கணும்.” என்றது. “சரிப்பேய்..” என்று இவன் நகர எத்தனிக்க, செல்வி அங்கேயே நின்றுவிட்டதைப் பார்த்தான்.

அருகில் சென்று, “போவம்..” என்று மட்டும் சொன்னான். செல்வி எதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அப்பனின் காலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இவன், “வீட்டுக்குப் போவம்..” என்று சொல்ல செல்வி கண்கள் பளபளக்க இவன் பக்கம் திரும்பி, “மண்ணு பூட்ஸ்..” என்று அப்பனின் காலை சுட்டிக் காட்டினாள். அப்பனின் காலில் குழைத்த மண், ஒரு பூட்சைப் போல அப்பியிருந்தது. இவனுக்கு சிரிப்பாக வந்தது. “அது பூட்டிசு இல்ல.. மண்ணு..” என்றான்.

செல்வி திடீரென்று, “எனக்கும் மண்ணு பூட்ஸ் வேணும்.” என்றாள்.

இவன் அதிர்ந்து போய் நிற்க, அப்பனும் அதிர்ந்து போய்ப் பார்த்தது. “யார்றா இவுக..” என்றது. “மொதலாளி வீட்டு குப்பக் கெடங்கு பக்கத்துல பெரிய வீடு இருக்குல்ல.. அந்த வீட்டுக்காரவுக. எங்கூட படிக்கிறாக..” என்றான்.

“அட கரண்டுக்காரவுகளா..” என்ற அப்பன், செல்வியிடம், “ஆத்தா.. உங்க கால்ல எல்லாம் மண்ணு படக்கூடாது. வீட்டுக்குப் போங்க சாமி.. லேய் கூட்டிட்டுப் போடா..” என்றது.

செல்வி முகம் சுருங்கிப் போய் ‘க்கும் க்கும்..’ என்று சிணுங்கவேறு துவங்கவே அப்பன் இதென்னடா வம்பு என்று திகிலடித்துப்போய் பார்த்தது.. இவனோ பயத்தில் “ஒங்க வீட்டுக்குப் போலாம் வா..” என்று பதட்டமாக அழைக்கத்துவங்க, நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து செல்வியின் அம்மா அங்கு வந்துவிட்டார்கள்.

அவர்கள் வந்ததுமே செல்வி “எனக்கு மண்ணு பூட்சு.. எனக்கு மண்ணு பூட்சு..” என சிணுங்கத் துவங்க, செல்வியின் அம்மா புன்னகைத்தபடி “அவ்வளவுதான? வா..” என்று செல்வியின் பாவாடையை இடுப்பில் செருகிவிட்டு, அப்படியே அலேக்காகத்தூக்கி குழைத்த மண்ணில் கெண்டங்காலளவு இறக்கிவிட்டு அப்படியே மறுபடியும் தூக்கி கீழே வைத்தார்.
செல்விக்கு மனம் கொள்ளாத சந்தோஷம்.. “ஐ.. மண்ணு பூட்சு.. மண்ணுபூட்சு..” என்று பாடியபடியே ஓட, அவளது அம்மா இவனிடம், “ரொம்ப தேங்க்ஸ் ஐக்கோடு.. நாளைக்கும் இதே மாதிரி செல்விய கூட்டிட்டுப் போவ இல்ல?” என்று கேட்கவும் இவன் வெட்கத்துடன் தலைகுனிந்து தலையசைத்தான்.

அவர்கள் புன்னகையுடன் “இந்தா..” என்று நீட்ட இவன் அது என்ன என்று தலை நிமிர்ந்து பார்க்க, அவர்களது கையில் தங்க கலர் கண்ணாடிப் பேப்பர் சுற்றிய சாக்லேட்டு மிட்டாய்கள் இரண்டு இருந்தன இவனுக்கு நாக்கில் எச்சில் ஊறினாலும், “அய்ய வேணாம்..” என்றான்.

“அட வாங்கிக்கடா..” என்று அவன் கையைப் பிடித்து அதற்குள் வைத்துவிட்டு நடக்க, இவனைவிட ஆச்சரியமாகப் பார்த்தபடி அப்பன் நின்றது.

அன்று இரவு இவர்களின் வீட்டில் இவனது அக்கா, தங்கை, இவன் மூவரும் காக்காக் கடியாக அந்த சாக்கலேடடுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ரொம்பநேரம் நாக்கிலேயே வைத்திருந்து ஒருவருக்கொருவர் நாக்கை நீட்டி நீட்டி காட்டி யார் கடைசியாக சாப்பிடுவது என போட்டி வைத்தபடி தூங்கிப் போயினர்.

இவன் நன்றாகப் படிப்பவன் என்றும் தெரிந்ததும் செல்வியின் அம்மா இவன் மீது பெரும்பிரியம் கொண்டவராய் ஆகிப் போனார். செல்வியின் பிறந்தநாள் என்ற ஒரு தினத்தில் இவனை சாப்பிட வீட்டுக்குள் அழைத்தார். இப்படி பெரிய வீடுகளுக்குள் எல்லாம் போய அறியாத அவன் தயங்க, செல்விதான் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். குளு குளு என்று காத்தாடி சுற்றிகொண்டிருந்த வீடாக இருந்தது. சாணித்தரை இல்லை. சிவப்பு, நீலத்தில் பூ வரைந்த சிமிட்டித் தரையாக இருந்தது. பெரிய வீட்டில் இருப்பதைப் போல சுவரில் சாமி படம் எல்லாம் இல்லை.. வித விதமாக தாடி வைத்த தாத்தாக்களின் படந்தான் இருந்தது.

செல்வியின் அம்மா ஓட்டலில் மாதிரி சாப்பாட்டு பெஞ்சி போடு அதில் தட்டுக்களை வைத்திருந்தார்.

“வா. இங்க வந்து உக்காரு. சாப்புடலாம்.” என்று அழைத்தபோது இவன் பயந்துதான் போனான். பெஞ்சியில் உட்கார்ந்து சாப்பிட்டானென்று அப்பனுக்குத் தெரிந்தால் புளியங்குச்சி பிய்ந்துவிடும் என்று தெரியுமாதலால் தனக்கு ஒதுக்கப்பட்ட தட்டை எடுத்துக் கொண்டு பிடிவாதமாக சுவரோரமாக சென்று தரையில் உட்கார்ந்து கொண்டான்.

எத்தனையோ அழைத்தும் அவன் மறுக்கவே வேறு வழியில்லாமல் செல்வி அம்மா, செல்வியையும் அவன்கூடவே தரையில் உட்கார வைத்து சோறு போட்டார்கள். சோறா அது.. அவன் வாழ்க்கையில் அதற்கு முன்பு அப்படி சாப்பிட்டிருக்காத ருசியான சோறு.. தட்டில் சோறு முடிந்ததும் அவன் ஓரக்கண்ணால் சோற்று சட்டியைப் பார்த்தாலே புரிந்து கொண்டு செல்வியம்மா புன்னகையோடு அள்ளி அள்ளி வைத்தார்கள். ஐந்து முறை சோறு வாங்கினான்.

அப்படித்தான் செல்வி அவனுக்கு நெருங்கிய ஃபிரண்டானாள். ரீசஸ் பிரியடில் எல்லாம் அவளது அம்மா கொடுத்துவிட்ட எதாவது திம்பண்டத்தை தவறாமல் அவனோடு பகிர்ந்து கொண்டாள். அதற்காக பெரியவீட்டு பையன்கள் மீசை வாத்தியாரிடம் சொல்லிக் கொடுத்து அவர் இவனை அடித்தபோது செல்வியின் அப்பாதான் ஸ்கூலுக்கு வந்து சாதி, பெரியார், பாரதி என்று ஏதேதோ புரியாமல் பேசினார். மீசை வாத்தியார் பயந்து போய் அதற்கப்புறம் இவனை ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டார்.

இடையில் மொத்தப் பிழைப்பிலும் மண்ணள்ளிப் போடுவது போல அப்பனின் முதலாளி திடுமென சீமைக் கறவை மாடுகள் இரண்டை வாங்கிவிட்டார். ராலியில் இருந்து மாடுகளை இறக்கும்போதே, “லேய் எலியா(இவனது அப்பனின் பெயர்).. பணம் பெத்த மாடுகடா.. இத தனிய்யா ஒரு ஆளப் போட்டுத்தேன் கவுனிக்கணும். நாளையில இருந்து உம்மவன மாட்ட கவுனிக்கச் சொல்லிரு.. தீவனம் போடுறது, சாணியள்ளுறது, கொட்டத்தக் களுவுறது, குளுப்பாட்டுறதுன்னு எல்லாத்தையும் வகையா சொல்லிக் குடுத்துரு.. சீம மாடு.. சுத்தமா வச்சுக்கிறணும்..” என்று சொல்லிவிட்டார்..

அப்பன் இவனை அடித்து மிதித்து என்னென்னவோ செய்து பார்த்துவிட்டது. இவன் அசையவே இல்லை. இரண்டு நாள் பட்டினியில் ஆளே தொங்கிப்போய் சீக்குக்கோழி மாதிரி கிடந்தானே ஒழிய மாடு பார்க்கப் போகமாட்டேன் என்று மறுத்துவிட்டான். புள்ளை சோறு தின்னாமல் செத்துவிடுவானோ என அம்மா அழுதபடி அப்பனிடம் இவனுக்காக வாதாடிப் பார்த்தது. “முடியாதுன்னு சொன்னா முதலாளி நம்மள குடும்பத்தோட தீவச்சு கொண்டு போட்டுருவாருடி..” என்று சொல்லி விட்டது அப்பன்.
இரண்டு நாள் பள்ளிக்கு இவன் வரவில்லை என்றதும், செல்வி அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டாள். பெரிய மனுசங்க வீடு தேடி வந்ததும் அம்மாவுக்கு பதற்றமாகப் போய்விட்டது. கண்ணீரும் ஒப்பாரியுமாக நடந்ததைச் சொல்லி “ஒத்தைக்கு ஒத்தையா பெத்தபுள்ள இப்புடி அன்னந்தண்ணி வேணாம்னு கெடக்கானே..” எனப் புலம்பலோடு முடித்தது.

செல்வியின் அப்பாதான் முதலாளியோடு சென்று பேசினாராம். முதலாளியும் கொஞ்சம் கடுமையாகப் பேசினாராம். கடைசியில் அந்தா இந்தா என்று இவனது அக்கா மாடு பார்க்கப் போவது என்றும், இவன் பள்ளிக்கே போவது என்றும் முடிவானதில் உண்ணாவிரதத்தின் மூன்றாவது நாளில் நீச்சத்தண்ணியைக் குடித்து தனது போராட்டத்தை முடிததுக் கொண்டான் இவன்.

“ஹலோ பாசு.. சாவி வந்துருச்சு வர்றீங்களா?” என்ற புரோக்கரின் குரலில் நிகழுக்கு வந்தான் இவன்.

“எந்த வீடு?” என்று கேட்டான்.

“அதோ அந்த நீலகலர் கேட்டு போட்ட ஃப்ளாட்டு..” என்றான் புரோக்கர்.

இவனுக்கு படபடப்பு கூடியது. புரோக்கர் முன்னால் நடக்க, கட்டுப்பட மறுக்கும் இதயத்தை சுமந்தபடி பின்னாலேயே நடந்து போனான்.

கேட்டுக்குள் ஒரு பக்கமாக அந்த சைக்கிள் நின்று கொண்டு இருந்தது. “மொத்தமே எட்டு ஃபிளாட்டுதான். எல்லாருமே டீசன்டானவங்க. அதோ அங்க சம்ப் இருக்கு. கார்ப்பரேஷன் தண்ணி..” என்றபடி புரோக்கர் பேசிகொண்டே நடக்க, இவன் மட்டும் மூடிக்கிடந்த ஒவ்வொரு ஃபிளாட் கதவாக பார்ததபடி, எங்காவது செல்வி வசிக்கும் சிறு சுவடாவது தெரிகிறதா என தவித்தபடி தொடர்ந்தான்.

ஃபிளாட் நன்றாக இருந்தது. நல்ல வெளிச்சம். விசாலமான ரூம்கள். அனைத்து வசதிகளும் இருந்தது. ஆயினும் இவன் மனம் செல்வி செல்வி என்றே சொன்னபடி இருந்தது. செல்வி இருக்கும் அபார்ட்மெண்ட்டின் ஒரு பகுதி என்பதால் இது இன்னும் அழகாகத் தெரிந்தது. “பிடிச்சிருக்குங்க..” என்றான் புரோக்கரிடம்.

புரோக்கர் பரபரப்பாகி, “அப்புடியா? அப்பன்னா இப்பவே ஓனர்கிட்ட பேசிறலாமா? அடுத்த தெருதான். வாங்க” என்று வேகமாக கதவுகள் ஜன்னல்களை எல்லாம் மூட ஆரம்பித்தான்.

இவன் மெதுவாக வெளியில் வந்து நின்றான். மனம் கனத்து இருந்தது. இவனது சிறு உலகத்தில் மனசுக்குப் பக்கத்திலும் பிரியமானவளாகவும் இருந்தது செல்வி மட்டுந்தான். ஆண்கள் கூட இவனது நண்பர்களாக இருக்க விரும்பாத ஒரு வாழ்நாளில் இவனக்கு நட்பென்ற வரத்தை அருளியது செல்வி மட்டுந்தான். குழந்தைப் பருவத்தில் செல்வியின் அருகிருந்த நாட்களைத் தவிர மற்றனைத்து நாட்களுமே இவனுக்கு வெற்று நாட்களாகத்தான் இருந்தன..

இவனது எல்லா துக்கப் பொழுதுகளிலும் இவன் செல்வியை மட்டுந்தான் நினைத்திருந்தான். அந்த நினைவே இவனுக்கு வழித்துணையாகவும், இளைப்பாறுதலாகவும் இருந்திருந்தது. இதோ செல்விக்கு மிக அருகில் நிற்கிறான். அவளிடம் சொல்வதற்கு ஒரு வாழ்நாளின் வேதனைகளை அவன் சுமந்து நிற்கிறான். அப்புறம் ஒவ்வொரு கணத்திலும் அவள் இவன் கூடவே இருந்த கதைகளும் ஒரு நூறு இவனிடத்தில் இருக்கின்றன. படபடப்பு கூடியது..

திடுமென எதிர் ஃப்ளாட் கதவு திறந்தது. ஒரு வேளை செல்வியாக இருக்கக் கூடுமோ என்று இவன் ஆர்வமாகத் திரும்ப…

அது செல்விதான்…

தோள்ப்பையுடன் சுடிதார் அணிந்தவளாக இருந்தாள். இப்போது அவள் ஒரு பெண்மணியாக இருந்தாள். ஆயினும் செல்வியாகவே இருந்தாள். அவளது குழந்தை, செருப்பின் வாரை மாட்டிக் கொண்டிருக்க, இவள் தனது கைப்பையில் சாவியை தேடி எடுத்துக் கொண்டு இருந்தாள்.

இவனுக்கு நா உலர்ந்து போனது. முதன் முதலில் ‘தம்பி’ என இவனை அவளது அம்மா அழைத்த கணத்தில் வந்த வெட்கமும் பயமும் இப்போது மறுபடி அவனது நாக்கில் வந்து ஒட்டிக் கொண்டது மாதிரி இருந்தது.

செல்வி கதவை பூட்டுகிறாள். இதோ போகப் போகிறாள்.

பதட்டத்தில் உலர்ந்த தொண்டை உடைந்து ஒலிக்க, “எக்ஸ்கியூஸ் மி.. நீங்க திராவிடச் செல்விதானே..?” என்று சொல்லிவிட்டான்.

செல்வி திடுக்கிட்டு நின்று இவனைப் பார்த்தாள். இவன் முகத்தைப் பார்த்ததும் தானாக அவளது கை துப்பட்டாவை சரி செய்தது.

“நாந்தாங்க.. சின்னமனூர் கோவில்பட்டி.. ஐக்கோடு.. சின்ன வயசுல ஒண்ணாப் படிச்சோம்.. ஞாபகமில்ல?” என்றான் உளறலாக.

ஒரு கணம். ஒரே கணம்… அவளது கண்கள் ஒளிர்ந்தன. அந்த ஒற்றைக் கணத்தில் பால்யம் அவளது கண்களுக்குள் குழைத்த சாந்தைப் போல நிரம்பியது. அந்த ஒற்றைக்கணத்தில் அவளது கால்களில் மண்ணூபூட்சு அப்பி மறைந்தது. அந்தக் கணத்தில் அவள் அன்போடு இவனுக்குக் கொடுத்த சாக்லேட்டுகள் சிறகடித்து சுற்றின.

அவ்வளவுதான்.

அவள் முகம் கடுமையானது. இவ்வுலகத்தின் அத்துணை சீவராசிகளும் இவனைப் பார்க்கும் அற்பப் பார்வை அவளது கண்களில் வந்து அமர்ந்தது. “ஸாரி.. யு ஆர் மிஸ்டேக்கன்..” என்று சொல்லிவிட்டு குழந்தையை இழுத்துக் கொண்டு விறுவிறு என்று சென்றுவிட்டாள்.

…………..

கதவைப் பூட்டிக் கொண்டு பரபரப்பாக வந்த புரோக்கர் திடுக்கிட்டான். அந்த குரங்குமூஞ்சி மனிதன் ஒரு குழந்தையைப் போல தேம்பியழுதபடி நின்றிருந்தான்.
…………..

– இந்த சிறுகதை கலகம் சிற்றிதழில் கடந்த 2014 ஏப்ரலில் வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *