(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
அம்மன் கோயில் குளத்தில் மூழ்கி எழுந்தாள் தேவகி. அவ்வப்போது கைகளை மேலே தூக்கிக் கும்பிட்டுத் தன் வேண்டுதலை அம்மனிடம் தெரிவித்தாள்.
கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட ஈர உடை களுடன் குளத்தைவிட்டு வெளியே வந்த தேவகி, அம்மன் கோயில் பிரகாரத்துக்கு வந்து ‘அங்கப் பிரதட்சணம்’ செய்தாள்.
அம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்த வந்த சில பக்தர்கள் ஈர உடையுடன் அவள் உருளும் காட்சியைக் கண்டு, அம்மனை மறந்து விட்டார்கள்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் வயது வித்தியாசமே இல்லை. இருபதிலிருந்து எழுபதுவரைக்கும் உள்ளவர்கள் அதில் இருந்தார்கள். இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் வயது வித்தியாசம் இருக்காது போலும். அவர்கள் தன்னை வேறு கோணத்தில் பார்ப்பதை அறிந்த தேவகிக்கு வயிறு எரிந்தது.
அங்கப்பிரதட்சணத்தை முடித்துக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து, உண்டியலில் பணமும் போட்டுவிட்டு அவள் திரும்பி வரும் போது, அவளது அங்கப் பிரதட்சணத்தை ரசித்தவர்களில் சிலர் இவளைப் பின் தொடர்ந்து சிறிது தூரம் வந்தனர்.
“என்ன குறையோடா இதுக்கு, பாவம்?” என்று கிண்டலாக கேட்டான் ஒருவன்.
“காதல் தோல்வியா இருக்குமோ?” கேட்டுச் சிரித்தான் இன்னொருவன். மற்றவர்களும் சிரித்தனர்.
இந்தப் பேச்சு காதில் விழுந்ததும், கோபக் கனல் வீச அவர்களைத் திரும்பிப்பார்த்தாள் தேவகி. அவள் தங்களைப் பார்ப்பதை அறிந்ததும், அந்த விடலைகள் தங்கள் பார்வைகளை வெவ்வேறுடத்துக்கு மாற்றிக் கொண்டன.
‘பேடிகள்’ என்று முணுமுணுத்தவாறே கோவிலை விட்டு வெளியேறினாள் தேவகி. அவர்களும் பின்தொடர்ந்து வந்தனர்.
“டேய் இன்னிக்கு கோவிலுக்கு வந்ததுக்கு ‘அம்மன் தரிசனம்’ ரொம்பக் குளிர்ச்சியா கிடைச்சுதுல்லே?” என்றான் ஒருவன்.
“ஆமாண்டா! இதேபோல தினமும் கிடைச்சா நான் தினமும் கோவிலுக்கு வருவேன்!” என்றான் இன்னொருவன்.
“தினமும் வர்றதா…? அம்மன் இப்படி தினமும் காட்சி தர்றதா இருந்தா நான் இருபத்துநாலு மணி நேரமும் கோவிலிலேயே இருப்பேன்” என்றான் மூன்றாமவன்.
தான் அங்கப்பிரதட்சணம் செய்ததைத்தான் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்பதையறிந்த தேவகி பற்களைக் கடித்தாள்.
கோவிலுக்கு வெளியே வாசலில் காலணிகளை விட்டிருக்கும் இடத்துக்குச் சென்று தனது காலணிகளை எடுத்தபோது தற்செயலாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த வம்புக் கூட்டம் அவள் பின்னால் நெருங்கி நின்றிருந்தது.
அவளுக்கு எதிரே ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு காலணியை எடுத்த தேவகி, “ஏதாவது குரைச்சே ராஸ்கல் செமத்தியா வாங்குவே ஜாக்கிரதை!” என்று அந்த நாயைச் சொல்வதுபோல் சொன்னாள். அடுத்த நிமிடம் அந்த வம்புக் கூட்டம் மறைந்து விட்டது.
வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் வேகமாக நுழைந்த தேவகி, பாபுவிடம் சென்று அவனது நெற்றியில் அம்மன் குங்குமத்தைப் பூசினாள். “அம்மன் அருளால் எல்லாம் சரியாயிடும்!” என்று ஆறுதலாகக் கூறினான் ராதா.
“ரொம்ப நன்றிங்க…!” என்று மனம் நிறைந்து சொன்னாள் தேவகி.
“இதுக்கென்னம்மா நன்றி?” என்று கேட்டவாறு ராதா புறப்படத் தயாராக எழுந்து நின்றபோது டாக்டர் வந்தார். அரைகுறைத் தூக்கத்திலிருந்த பாபு டாக்டர் வந்திருப்பதை அறிந்ததும் கண்களை விழித்துப் பார்த்தான்.
“வாங்க டாக்டர்…!” என்று வரவேற்றாள் தேவகி.
“என்னம்மா? பாபு எப்படி இருக்கிறான்?”
-டாக்டர் கேட்டார்.
“நீங்க கொடுத்த நாலு மாத்திரையினாலே நாலுநாளா நல்லா தூங்கினான். இன்னிக்கு காலையிலே சீக்கிரமா எழுந்து அந்த பன்னீர்ப் பூக்களை எண்ணியிருக்கான். அதிலே ரெண்டு பூ தான் இருந்தது. ‘நான் இனி ரெண்டு நாள் தான் இருப்பேன்’னு சொல்றான் டாக்டர்……!”
இதைச் சொல்லி முடிப்பதற்குள் தேவகிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
“அப்படியா…!” புருவத்தை மேலேற்றிக் கேட்டார் டாக்டர்.
“ஆமா டாக்டர்…!”
“தேவகி…இனிமேலும் இவனுக்கு தூக்க மாத்திரை கொடுக்கறது நல்லதில்லே… அது அவன் உடம்பு – வேற வழியிலே பாதிக்கும்னு தோணுது…!” என்று கூறி நிறுத்திய டாக்டர், தொடர்ந்து, “இப்போ ஒரு இஞ்ஜக்ஷன் போட்டுட்டுப் போறேன்!” என்றார்.
இதைக் கேட்ட ராதா துள்ளிக் குதித்தான்.
“அபச்சாரம்… அபச்சாரம்! அம்மன் குங்குமம் பூசியிருக்கிறப்போ ஒரு நோயாளிக்கு ஊசி போடறதா? அபச்சாரம்!” – என்று கத்தினான்.
“என்ன மிஸ்டர்! அம்மன் குங்குமத்துக்கும், என் ஊசிக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் டாக்டர்.
“என்ன சம்பந்தமா? – பாபுவோட நோய் குணமாகணும்னு வேண்டிக்கிட்டு அம்மனுக்கு ‘அங்கப் பிரதட்சணம்’ செய்து, அவள் குங்குமத்தைப் பூசியிருக்கு, இந்த நேரத்துல ஊசி வேற போட்டா.. அம்மன் மேல் நம்பிக்கை இல்லாம செய்யறதாத்தான் அர்த்தம். இதனாலே அம்மன் கோவிச்சுக்கிட்டா என்ன ஆகும்…?” இரைந்து பேசினான் ராதா.
அவன் பேசியதைக் கேட்ட டாக்டர் சிரித்தார். தேவகி மவுனமாக இருந்தாள்.
“சரி… ஊசிபோடலே… இந்த மாத்திரையை கொடுங்க!” என்று சொல்லி தேவகியிடம் சில மாத்திரைகளைக் கொடுத்துப் புறப்பட்டார் டாக்டர். வாசல்வரை சென்றவர், ஏதோ நினைத்துக் கொண்டவராக திரும்பி வந்தார்.
“என்ன டாக்டர்?” தயங்கியவாறு கேட்டாள் தேவகி.
“ஒண்ணுமில்லேம்மா! பாபுவோட கட்டிளை அந்த ஜன்னலுக்குக் கொஞ்ச தூரத்துல தள்ளிப் போடேன்… அவன் கண்ணில் அந்த மரக்கிளை படாம இருக்கட்டும்!” – என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாபு எழுந்து உடகார்ந்து கொண்டு, “முடியாது… முடியாது! என்னை ஏமாத்தாதீங்க… நான் அந்த பூவைப் பார்த்துட்டே இருக்கணும்!” என்று படபடப்போடு கூறினான்.
“இல்லே ராஜா… வெயில் படுமேன்னுதான் கட்டிலைத் தள்ளிப்போடச் சொன்னேன்!” -என்றார் டாக்டர்.
“இல்லே… இல்லே என் பார்வையிலிருந்து அந்தப் பூவை மறைக்கப் பார்க்கிறீங்க… மாட்டேன்… நான் வேறு இடத்துல படுக்க மாட்டேன்!” என்று கூறிக் கொண்டு அழ ஆரம்பித்தான் பாபு!
“சரிப்பா இஷ்டப்படியே படுத்துக்கோ!” என்று கூறிவிட்டு டாக்டர் புறப்பட்டார். அவருடன் ராதாவும் புறப்பட்டான். அவர்களை வழியனுப்ப தேவகியும் சென்றாள்.
டாக்டரைப் பார்க்கப் பார்க்க இப்போது பாபுவுக்கு எரிச்சல் வந்தது. ‘கட்டிலைத் தள்ளிப் போடணுமாமே தள்ளி’ என்று கருவியவாறு அவர் கொடுத்துச் சென்ற மாத்திரைகளைத் தூக்கி ஜன்னல் வழியாகக் கோபத்துடன் வீசி எறிந்தான்!
அன்று இரவு!
திவாகரின் படத்துக்கு பூ வைத்து வணங்கி விட்டு பாபுவின் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள் தேவகி. அவளது நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பாபு மெல்லச் சிரித்தான். அவன் சிரிப்பதைக் கண்ட தேவகிக்கு என்னவோ போலிருந்தது.
இந்த ஒரு வாரகாலமாக அவன் முகத்தில் சிரிப்பையே பார்க்காதவள் அவள். வாடிய முகம். வெடிப்பு விழுந்திருந்த உதடுகள், விரக்தியான தோற்றம். விவரம் புரியாத பேச்சு இவற்றைத்தான் கடந்த ஐந்தாறு நாட்களாக அவ்னிடம் அவள் கண்டிருக்கிறாள்.
ஆனால், இப்போது.. வெள்ளை மலராகச் சிரிக்கிறானே… ஒருவேளை இது… இறுதி நேரத்துத் தெளிவா? அணையப்போகும் விளக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்குமாமே. அதுபோலவா பாபுவின் இந்தச் சிரிப்பு?
இப்படியெல்லாம் அந்த ஓரிரு வினாடிக நினைத்த தேவகிக்கு வயிற்றைக் கலக்கியது! ‘இறைவா… என் பாபுவை என்னை விட்டுப் பிரித்து விடாதே’ என்று கண்களை மூடியபடி பிரார்த்தித்துக் கொண்டாள்.
அவள் கண்களைத் திறந்த போது, மீண்டும் சிரித்தான் பாபு. அவளுக்கு பயமும் பதட்டமும் அதிகமாகியது.
“என்ன பாபு சிரிக்கிறே?” – பயத்தை மறைத்துக் மறைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.
“ஒண்ணுமில்லேம்மா…!” சிரித்தபடியே பதில் கூறினான் அவன்.
“இல்லே…ஏதோ நினைக்கிறே…!”
“அப்பாவை நினைச்சேன்…!”
“என்ன நினைச்சே?”
“இந்த அப்பா ரொம்ப மோசம்மா!”
“பாபு…!”
“ஆமாம்மா! இந்த ஒரு வாரமா நான் பார்க் கிறேனே… சதா நீ அழுதுகிட்டே இருக்கே… நீ அழறதப் பார்த்து நான் அழறேன்.. இப்படி நாம ரெண்டு பேரும் அழுதுட்டிருக்கறப்போ… இந்த அப்பாவைப் பாரேன்… எப்ப பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கார்…!”
-அப்பாவின் படத்தைச் சுட்டிக் காட்டினான் பாபு. அவன் காட்டிய இடத்தில், சுவரில் சிரித்த முகத்தோடு படத்தில் இருந்தான் திவாகர்.
பாபுவின் பேச்சைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை தேவகிக்கு.
”சேச்சே… அப்படியெல்லாம் சொல்லாதே கண்ணா. உன் அப்பா ரொம்ப நல்லவர். அவர் மாதிரி. நல்லவங்களை பார்க்கறதே அபூர்வம்… நமக்குத் தான் அவரோட சந்தோஷமா இருக்கக் கொடுத்து வைக்கலே!” என்றாள் உணர்ச்சி வசப்பட்டவளாக.
இதைச் சொன்னபோது தேவகியின் மனத் திரையில் பழைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வந்து தோன்றி மறைந்தன.
கல்லூரியில் முதன்முதலில் திவாகரை அவள் சந்தித்தது – இலக்கியக் கூட்டங்களில் அவளும், அவனும் பேசியது — அப்புறம் காதல் ஏற்பட்டது தனிமையில் சந்தித்தது பூப்போல கன்னம் பாட்டுப் பாடியது – எதிர்ப்பைத் தூளாக்கித் திருமணம் செய்தது – பாபு பிறந்தது – திவாகர் விபத்தில் இறந்தது;
இப்படி ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்த தேவகியின் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டன. அதில் ஒன்று பாபுவின் மணிக்கட்டில் விழுந்து தெறித்தது!
“ஏம்மா அழறியா…?” பாபுவின் குரல் கேட்டு, பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட தேவகி, அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு, “இல்லே கண்ணா!” என்றாள்.
“அழாட்டிக் கூட ஒனக்கு கண்ணீர் வருமாம்மா?” – என்று கேட்டவாறே, தேவகியின் கண்ணீரைத் தன் மணிக்கட்டிலிருந்து துடைத்தான் பாபு!
இப்படித்தான் சில நேரங்களில் தன் வயதுக்கும், அறிவுக்கும், அனுபவத்துக்கும் அப்பாற்பட்டு சில வார்த்தைகளை பாபு பேசுகிறான். அந்த நேரத்திலெல்லாம் தேவகி எவ்வளவு குளிர்ந்து போயிருக்கிறாள்! இப்போதும் அப்படித் தான்! பூரித்துப்போன தேவகி, கையை எடுத்து ஒரு முத்தமிட்டாள்.
“அம்மா!”
“என்ன ராஜா?”
“அப்பா ஏம்மா, நம்மை விட்டுட்டு தனியா போயிட்டாரு…?”
“ஹூம்! போயிடடாரேடா… போயிட்டாரே…?’
“நம்மை ஏம்மா கூட்டிட்டு போகலே?”
“கூட்டிட்டு போற எடத்துக்கு அவர் போகலேப்பா… நம்மை கூட்டிட்டு போக முடியாத இடம் அது!”
“நாமே அப்பாகிட்டே போயிட்டா என்னம்மா?’
பாபு இப்படிக் கேட்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்டுவிட்டானே! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு வெகுளித்தனமாகக் கேட்கிறான்?
“நாமும் ஒரு நாளைக்கு அவர் கிட்ட போவோம் ராஜா!” – அவனை அணைத்துக்கொண்டாள் தேவகி.
“என்னிக்கும்மா?” – அவன் விடவில்லை. அவனது இந்தக் கேள்விக்கு தேவகி என்ன பதில் சொல்வாள்?
பேசாமல் இருந்தாள்.
“என்னிக்கும்மா போவோம்?” – மீண்டும் கேட்டான்.
பாபுவின் இந்தக் கேள்விக்கு தேவகியிடம் ஏற்கனவே பதில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே அந்தபதிலை அவள் தயார் செய்துதான் வைத்திருக்கிறாள். பாபுவுக்கு ஏதாவது ஆகி, அவன் அவளைவிட்டு அவனது அப்பாவிடம் என்றைக்குப் போகிறானோ… அன்றைக்கே அவளும் ஏதாவது செய்து கொண்டு திவாகரின் காலடிக்குப் போய் விடுவது என்று தீர்மானம் செய்து வைத்திருக்கிறாள். ஆனால் அதை இப்போது எப்படி பாபுவிடம் சொல்வாள்? சொல்லக்கூடிய சங்கதியா இது?
“பாபு அதெல்லாம் இருக்கட்டும், பேசாம தூங்குடா நேரமாயிடுச்சி…!” என்று சொல்லி அவனுக்கு அருகில் படுத்துக் கொண்டாள்.
“சொல்லமாட்டியாம்மா..?” – பரிதாபமாகக் கேட்டான் பாபு.
“நேரம் வரும்போது சொல்றேண்டா.. இப்ப நீ தூங்கு!” அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். சிறிது நேரத்தில் அவனும் தூங்கிவிட்டான், தேவகியும் தூங்கி விட்டாள்.
தூரத்தில் ரயில் ஓடுகின்ற சத்தம் தாள லயத்தோடு கேட்டது. அருகாமையில் சென்று கொண்டிருந்த ஒரு வண்டியின் சத்தம் ‘கட் கட’ என்றும், வண்டியை இழுத்துச்சென்ற மாடுகளின் கழுத்து மணியின் ‘கண கண’ என்ற சத்தமும் தெளிவாக வந்தது. வீட்டுக்கு எதிர்த் தெருவில் உள்ள பொது தண்ணீர்க் குழாயில் கூட்டம் கூடிவிட்டது என்பதை அங்கிருந்து எழுந்த ‘சள சள’ பேச்சுக்கள் காட்டின. குடங்களைத் தேய்க்கும்போது ஏற்படும் ‘கர், கர்’ என்ற சத்தமும், அவற்றைத் தூக்கி வைக்கும் போது ஏற்படும் ‘ணங்’ என்ற சத்தமும் துல்லியமாகக் காதில் விழுந்தது. அவ்வப்போது அறைக்குள் வீசிய குளிர் காற்றும், பொழுது புலர்ந்துவிட்டது என்பதை உணர்த்தியது.
பின்னிரவு நேரத்திலேயே தூக்கத்துக்கு விடை கொடுத்தனுப்பியிருந்த தேவகி; மெள்ளப் படுக்கையி லிருந்து எழுந்து மணியைப் பார்த்தாள்.நாலு.
அருகே படுத்திருந்த பாபுவைப் பார்த்தாள். கழுத்துவரையில் போர்வையால் மூடி, கன்னத்தில் கை வைத்தபடி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். மூச்சு விடும்போது அவன் நெஞ்சு ஏற்படுத்தும் அசைவைப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் தேவகி. அந்த அசைவு நீடிக்கத்தானே அவள் அத்தனை பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள்?
இன்றைய விடியல் நல்லதாக இருக்கட்டும் என்று எண்ணியவளாகக் கட்டிலைவிட்டு இறங்கிச் சென்றாள் தேவகி..
குளித்து முடித்து வந்து பூஜை அறையில் தேவகி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது பாபு விழித்துக் கொண்டான். கட்டிலில் தன்னருகே படுத்திருந்த அம்மாவைக் காணோமே என நினைத்து ‘அம்மா!’ என்று குரல் கொடுத்தான்!
“என்ன பாபு?” என்றவாறே பூஜை அறையினின்றும் வெளியே வந்தாள் தேவகி.
குளித்து முடித்த கோலத்தில் பளிச்சென்று அந்த அதிகாலை நேரத்தில் வந்து நின்ற தேவகியைப் பார்த்துக் கொண்டே இருந்தான் பாபு!
“என்ன பாபு?” – மீண்டும் கேட்டாள் அவள்!
“ஜன்னலைத் திறம்மா!” – கையைக் காட்டினான் அவன். ‘பக்’ என்று ஆகிவிட்டது அவளுக்கு! “காலையிலேயே என்னப்பா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு!” போர்வையை அவன் மீது நன்றாகப் போர்த்த முயன்றாள் தேவகி!
ஆனால் பாபு. எழுந்து உட்கார்ந்து கொண்டான்!
“ஏம்மா…ஜன்னலைத் திறக்க மாட்டேங்கறே…?”
“அப்புறமா திறக்கிறேண்டா!”
-அவள் சொல்வது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் முகம் கோணலானதிலிருந்து தெரிந்தது. சிறிதுநேரம் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தான் பாபு.
பிறகு, அவனாகவே கீழே இறங்கிச் சென்று ஜன்னலைத் திறந்தான். வெளியே பன்னீர் மரக்கிளை பனித்துளிகளால் நனைந்து நின்றது.பாபு கூர்மையாகப் பார்த்தான். அவன் முகத்தில் சிறிதுமாற்றம்!
“அம்மா… இதப்பார்த்தியா…?”
-அசைவற்று நின்றிருந்த தேவகி, பாபுவின் குரல் கேட்டு அவனருகில் சென்றாள்.
“இதோ… பாரும்மா.. ஒரே ஒரு பூ தான் இருக்கு…!” -பாபு விரக்தியாகக் கூறினான். ஜன்னல் வழியாக அந்தப் பன்னீர் மரக்கிளையை தேவகியும் பார்த்தாள். ஒரே ஒரு மலர் தான் இருந்தது. அவள் மனம் தத்தளித்தது.
பாபு சொல்வதுபோலவே இந்தப் பூக்களும் உதிர்ந்து வருகின்றனவே… இறுதிமலர் உதிரும் போது என் பாபுவும் இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துவிடுவானோ என்று நினைத்து நெஞ்சு நடுங்கினாள் அவள்.
”ஏம்மா, அப்படியே நிக்கிறே…?” – அவள் கையைப் பிடித்தான் பாபு!
“எனக்கு ஒண்ணுமே புரியல்லேடா… !”
“எதும்மா புரியல்லே? இன்னுமா புரியலே உனக்கு? – இதோ பார்… இந்தக் கிளையிலே ஒரே ஒரு பூதானே இருக்கு? எனக்கும் இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு….!”
”பாபு…!” – அலறினாள் தேவகி!
“ஆமாம்மா! ஒரேநாள்… இன்று பகல், இன்று இரவு … அவ்வளவு தான் நாளை காலையில் நான் இருக்க மாட்டேன்…!”
“ஐயோ பாபு…என்னைக் கொல்லாதேடா!” என்று கூவியவாறு பாபுவைத் தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி.
“இன்னிக்கு காலையிலே நீ தூக்கறே…நாளைக்கு காலையிலே அந்தத் தேவதை வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிடும்…!”
மேற்கொண்டு பேசவிடாமல் பாபுவின் வாயைத் தனது கையால் பொத்திக் கொண்டாள்.
பாபுவின் உடலில், அப்போது காய்ச்சல் சற்று அதிகமாக இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவனைக் கொண்டு வந்து கட்டிலில் படுக்கவைத்து, சட்டைக்குள் கை விட்டு தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல கடுமையாகத் தான் இருந்தது. ‘இன்று ஒரு நாள் தான்’ என்று பாபு சொன்னதையும், அவனுக்கு திடுமென்று காய்ச்சல் அதிகரித்திருப்பதையும் முடிச்சுப் போட்டுப் பார்த்த அந்த அப்பாவியின் இதயத்தில் ஆயிரம் இடிகள் விழுந்தது போன்ற அதிர்ச்சி! வேகமாகக் கீழே ஓடிச் சென்று டாக்டருக்கு போன் செய்தாள்.
மீண்டும் அவள் மேலே ஓடி வந்த போது கட்டிலில் படுத்திருந்த பாபு முனகிக் கொண்டிருந்தான். அவனருகே வந்து உட்கார்ந்த தேவகி, “என்ன பாபு… உடம்புக்கு என்ன செய்யுது?” என்று அழுதுகொண்டே கேட்டாள்.
“ஒண்ணுமில்லேம்மா…!” – அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டான் அவன்.
உடனேயே, மீண்டும் தேவகியின் பக்கம் திரும்பி அவளைப் பார்த்தான்.
“என்னடா கண்ணா?”
“அம்மா… ஆர்டிஸ்ட் மாமா… ரகு மாமாவைப் பார்க்கணும்போல ஆசையா இருக்கும்மா…!”
“அவர் இங்கே இல்லியேடா…!”
“எங்கே இருந்தாலும் கூட்டிவாம்மா… நான் கண்டிப்பா அவரைப் பார்க்கணும்மா…!” – என்ன செய்வதென்று புரியாமல் அவள் தவித்துக்கொண்டிருக்கும்போது டாக்டர் வந்தார்.
பாபுவின் உடலைத் தொட்டுப் பார்த்த டாக்டர் சிறிது நேரம் சிந்தனை செய்கிறார். அவரது சிந்தனையைக் கண்ட தேவகி பதறுகிறாள்.
“என்ன டாக்டர் என்ன யோசிக்கிறீங்க…?”
பதட்டத்துடன் கேட்கிறாள்.
“ஒண்ணுமில்லேம்மா காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகியிருக்கு… அவ்வளவுதான். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லே…!” – என்று கூறிய டாக்டர், பாபுவின் நாடித் துடிப்பைப் பார்க்கிறார்.
பிறகு தேவகியை அழைத்துக் கொண்டு, தனியே வருகிறார்.
“ஏம்மா பாபு பயந்திருக்கான் போல தெரியுதே…!”
”எனக்கு ஒண்ணும் தெரியலே டாக்டர்… காலை யிலே எழுந்து இந்தக் கிளையிலே பூவை எண்ணிப்பார்த்தான். அதுலே ஒரே ஒரு பூதான் இருந்தது. அதைப் பார்த்ததிலிருந்து, ‘இன்னும் ஒரு நாள் தான் இருப்பேன் … ஒரே நாள் தான் இருப்பேன்’னு சொல்லிகிட்டிருந்தான்!” கலக்கத்துடன் கூறினாள் தேவகி.
“ஓ…அப்படியா…?” என்று கேட்ட டாக்டர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.
பாபு கனவு கண்ட விஷயத்திலிருந்து பூக்கள் உதிர்வது வரை எல்லாவற்றையும் தான் ஏற்கனவே டாக்டரிடம் தேவகி சொல்லியிருக்கிறாளே!
கொஞ்சநேரம் கழித்து டாக்டர், “தேவகி…! பாபுவுக்கு இருப்பது உடல் நோயே அல்ல! மன நோய்தான் இருக்கு, ஏதேதோ நினைச்சு பயந்துக்கிட்டே இருக்கான். அவனுக்கு மருந்து தேவையில்லே… மன தைரியம் தான் வேண்டும்…அதனாலே அடிக்கடி அவனுக்குத் தெம்பு ஊட்டிக் கிட்டே இருந்தா சரியாகும்னு நினைக்கிறேன்…” என்றார்.
“நான் என்ன செய்யணும்?” ஆர்வத்துடன் கேட்டாள் தேவகி.
அவளது காதோடு காதாக ஏதோ ஒன்றை ரகசியமாகக் கூறினார் டாக்டர். அவர் கூறியதைக் கேட்டதும், வாட்டத்திலேயே மூழ்கிக் கிடந்த தேவகியின் வதனத்தில் ஒரு சிறு மலர்ச்சி!
கட்டிலில் கிடந்த பாபு, கண்களை மூடிய நிலையிலேயே “ரகு மாமா, ரகு மாமா” என்று புலம்புவதை டாக்டரும் தேவகியும் கவனித்தனர்.
“நீ போயி… ரகுவைக் கூட்டிவாம்மா… அது வரையில் பாபுவை நான் பார்த்துக்கிறேன்!” என்றார் டாக்டர்.
பாபு தூங்குவதற்காக ஒரு ஊசியும் போட்டார்.
“டாக்டர்… இதுதான் நீங்க எனக்குப் போடுற கடைசி ஊசி! நாளைக்கு நீங்க எனக்கு ஊசிபோட முடியாது. ஊசி போடாமலே நான் தூங்குவேன்!”’- என்றான் பாபு.
இதைக் கேட்ட தேவகி, “ராஜா, என் கண்ணே! அப்படியெல்லாம் சொல்லாதேடா” என்று கூறினாள்.
“ரகு மாமாவை எங்கேம்மா…?”
-ஆசை பொங்கக் கேட்டான் பாபு!
“இதோ போயி கூப்பிட்டு வர்றேம்பா…!” என்று கூறிப்புறப்பட்டாள் தேவகி!
– தொடரும்..
– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.