ஒரு மரம் பூத்தது

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,641 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

மாலை ஆறு மணி! 

மந்திரவாதி ஜெபத்தை ஆரம்பித்து விட்டான். வடக்கு நோக்கி அவன் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே வெறும் தரையில் பாபு கிடத்தப்பட்டிருந்தான். மந்திரவாதிக்கு வலது புறத்தில் ஒரு தூணோடு சாய்ந்து தேவகி உட்கார்ந்திருந்தாள். 

பக்கத்தில் மந்திரவாதியின் சூலாயுதம் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. சூலாயுதத்தின் மூன்று முனைகளிலும் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழங்கள் குத்தப்பட்டிருந்தன். மந்திரவாதிக்கு எதிரே வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டிருந்தது. சூடம் எரிந்து கொண்டிருந்தது, சாம்பிராணி புகைந்து கொண்டிருந்தது. 

மந்திரவாதியின் இடதுகை சூலத்தைத் தொட்டிருக்க, வலதுகை கழுத்தில் கிடந்த உருத்திராட்ச மாலையை தடவிக் கொண்டிருந்தது. அவனது வாய், ‘ஜெய் பவானி, ஜெய் பவானி’ என்று மெதுவாக முணு முணுத்துக் கொண்டிருந்தது! 

கண்களைத் திறந்து பார்ப்பதும், மூடிக்கொள்வதுமாக ஒரு வித பயத்துடன் படுத்திருந்தான் பாபு. 

அடிக்கடி ஜன்னல் பக்கம் திரும்பித் திரும்பிப் பார்த்து, பன்னீர்மரக்கிளையிலிருந்து பூக்கள் விழாமல் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி. 

மணி பத்து! 

புகைந்து கொண்டிருந்த சாம்பிராணியில் மேலும் எதையோ போட்டான் மந்திரவாதி. புகை இன்னும் அதிகமாகியது. பாபு, தூங்கிப் போய்விட்டான் 

மந்திரத்தை முணுமுணுத்துக் மந்திரவாதி திடீர் என்று கண்களை அகலமாக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். சாம்பிராணித் தட்டில் இன்னும் கொஞ்சம் எதையோ போட்டான். புதை பெருகியது. அப்படியே திரும்பி தேவகியைப் பார்த்தான். 

அவள் தூணில் சாய்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள். 

மூச்சுவிடும்போது ஏறி இறங்கிய அவளது தசை மேடுகளையும், வாடிப்போயிருந்தாலும் வனப்புமிக்க கன்னக்கதுப்புகளையும் எச்சில் ஊறப் பார்த்துக் கொண்டிருந்தான் மந்திரவாதி. 

தன்னை நோக்கிக் காற்றை வீசிக்கொண்டிருந்த மின்விசிறியை, தேவகியின் பக்கம் திருப்பி வைத்தான். 

மின்விசிறிக் காற்றில் படபடத்த அவளது மார்புச்சேலை, கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கீழே விழுந்தது. 

தேவகியின் உருண்டு திரண்ட மார்பகங்களின் வாளிப்பை முழுமையாகவும், வழ வழப்பைப் பாதியாகவும் பார்த்துக் கொண்டே இருந்தான் மந்திரவாதி. இரண்டு சிறு மடிப்புக்களுடன் இருந்த அவளது வயிறு அவனைக் கிறங்க வைத்தது. 

‘ஜெய்பவானி’ என்று முனகிய அவன் வாய் இப்போது ‘ஏய் தேவகி’ என்று கூறியது. மெள்ள எழுந்து தேவகியை நெருங்கி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

தூக்கம் கலைந்து, துள்ளி எழுந்த தேவகி, மந்திரவாதியின் வெறிச் செயலை அறிந்து அலறினாள். அருகே கிடந்த மணைப்பலகையை எடுத்து அவன் முகத்தில் ஆத்திரத்துடன் அடித்தாள். 

முகத்தில் காயம்பட்ட அவன், அவளை மூர்க்கத்தனமாக நெருங்கினான். பின்வாங்கிச் சென்று கொண்டே தன் கைக்குக் கிடைத்த எல்லாப் பொருட்களையும் எடுத்து அவன் மீது எறிந்தாள். 

மேலே மாடியில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதை, அங்கிருந்துவந்த சத்தங்களால் அறிந்த ரகு. அவசரமாக போலீசுக்குப் போன் செய்தான். வீட்டு விலாசத்தைப் போலீசாரிடம் கூறிய கையோடு வேகமாக மாடிக்குப் பாய்ந்தான். 

கதவை உடைத்துக்கொண்டு அவன் உள்ளே வருவதற்கும், தேவகியைக் கீழே தள்ளி அவள் மீது மந்திரவாதி விழுவதற்கும் சரியாக இருந்தது. 

ஒரே பாய்ச்சலில் மந்திரவாதியிடம் வந்த ரகு, தேவகியிடமிருந்து அவனைப் பிரித்தான். 

மந்திரவாதியும், ரகுவும் மிருகத்தனமாக மோதினார்கள். இருவரும் சண்டை போட்டுக் கொண்டே சமையலறையை நெருங்கி மாடிப்படிகளில் இறங்கினார்கள். மாடிப்படி ஒன்றில் வழுக்கிக் கீழே விழுந்த ரகுவை குத்துவதற்காக மந்திரவாதி தனது சூலத்தை ஓங்கினான். அதே சமயம் அவனுக்குப் பின்புறம், கையில் அம்மிக் குழவியுடன் நின்ற தேவகி, மந்திரவாதியின் தலையில் அம்மிக் குழவியால் ஓங்கி அடித்தாள். 

‘அம்மா’! என்ற பயங்கர அலறலுடன் படிகளில் விழுந்து விட்டான் மந்திரவாதி. படிக்கட்டுகள் முழுவதும் ரத்தம் பெருகியது. கண்கள் மேல்நோக்கிக் குத்திட்டு நிற்க கைகளையும், கால்களையும் பரப்பி வைத்த நிலையில் மரணத்தைத் தழுவிக் கொண்டான் மந்திரவாதி! 

கோரமாகக் கிடந்த மந்திரவாதியை பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ரகுவும், தேவகியும். பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் சில வினாடிகள் பார்த்துக் கொண்டனர். இருவரது இதயத் துடிப்பும் வெளியே கேட்கும் அளவுக்கு பலமாக இருந்தது. 

“கொலை… கொலை…!” என்றான் ரகு மெதுவாக! 

“அய்யோ…இப்ப நான் என்ன செய்வேன்?” என்று அழுதாள் தேவகி! 

“போலீசுக்கு ஏற்கனவே போன் பண்ணிட்டேன் அவங்க வேற இப்போ வந்துடுவாங்களே……!” – பதட்டத் துடன் கூறினான் ரகு! 

“எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?” அழுதபடியே கேட்டாள் தேவகி. 

“என்ன?”

“என்னைப் போலீஸ்காரங்க பிடிச்சிட்டுப் போறதப்பத்தி நான் கவலைப்படலே… பாபு… என் பாபுவைத் தனியா விட்டுட்டு போறனேன்னுதான் வருத்தமா இருக்கு…” – மேற்கொண்டு பேச முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள் அவள். 

பிறகு மீண்டும் சொன்னாள்.

“இருக்கறதை வச்சி தயவு செய்து என் பாபுவைக் காப்பாத்தி வாழவையுங்க… ப்ளீஸ்… இந்த நேரத்திலே உங்களை விட்டா எனக்கு நாதியில்லீங்க…!” -அழுதாள் அவள். 

இதைக் கேட்டு பலமாகச் சிரித்தான் ரகு. கற்பைக் காணிக்கையாக்காததற்கு இப்போது இவன் வஞ்சம் தீர்க்கப் போகிறானோ என் எண்ணி பயந்தாள் தேவகி. ரகு சொன்னான்: 

“நான் அவ்வளவு கல்நெஞ்சக்காரன் இல்லே. இந்தக் கொலைக்காக வேற யாரும் ஜெயிலுக்குப் போக வேணாம்… நானே போறேன்!” 

“நீங்… நீங்க என்ன சொல்றீங்க?” – பதறினாள் தேவகி! 

“இப்போ போலீஸ் வரும். இந்தக் கொலையைச் செய்தது நான் தான்னு அவங்ககிட்டே சொல்வேன். நீங்களும் ஆமா போடணும். ஏன்னா.. இந்தக் கொலைக்கு கண்கண்ட சாட்சி நீங்கதான்!” 

“நான் செய்த கொலைக்கு நீங்க ஏன்…?” 

”உஷ்…! விவாதிக்க நேரமில்லே! பாபு காப்பாத்தப்படணும், அது முக்கியம். அதுக்கு நீங்க இருந்தாத்தான் முடியும்!” 

-ரகு சொல்லி முடித்தபோது, போலீஸ் லாரி ஒன்றும், ஜீப் ஒன்றும் வந்தது. 

ஒரு இன்ஸ்பெக்டர் முன்னேவர, அவரைத் தொடர்ந்து போலீஸ்காரர்களும், போட்டோகிராபர் ராதாவும் வந்தனர். 

இன்ஸ்பெக்டரிடம் சென்றான் ரகு. 

“சார், இவனை நான் கொன்னுட்டேன்!” – நிதானமாகச் சொன்னான் 

”வாட்? மர்டரா?” என்ற இன்ஸ்பெக்டர் மாடிப்படி அருகே சென்று, அங்கு கிடந்த மந்திரவாதியின் பிணத்தைப் பார்த்தார். 

“ஏய்…போட்டோ!” – இன்ஸ்பெக்டர் அழைத்ததும் கேமிராவுடன் வந்தான் ராதா. அவர் சொன்னபடியெல்லாம் போட்டோ எடுத்தான். அப்போது அவனது கைகள் நடுங்கின. மனசு படபடத்தது. 

பிணம், படிக்கட்டுகளில் பெருகி காய்ந்திருந்த ரத்தம், சண்டை நடந்த ஹால், சிதறிக் கிடந்த சாமான்கள் அனைத்தும் புகைப் படங்களாக எடுக்கப் பட்டன. 

பிணத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு, ரகுவைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டனர். ஜீப்பும். லாரியும் மறைந்தன. அவைகள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்ற தேவகி, அவை மறைந்தவுடன் ‘கோ’ என்று கதறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள். 

மாடிக்கு ஓடி வந்த தேவகி; தானும் தனது கணவனும், கைக்குழந்தையாக பாபுவும் உள்ள படம் வைக்கப் பட்டிருந்த மேஜைமீது முட்டி மோதி அழுதாள். 

“ஆண்டவனே, எனக்கு ஏன் இப்படிச் சோதனை மேல் சோதனையாகக் கொடுக்கிறாய்?” என்று கூறியவாறே மேஜையின் கால்களில் தலையை மோதி, மோதி அழுதாள். ‘தடால் தடால்’ என்ற சத்தத்தைக் கேட்டு – தூக்கம் கலைந்தவனாக அப்போது தான் கண்விழித்தான்பாபு. தன்னுடைய அம்மா அழுவதைப் பார்த்ததும் அவனுக்கும் அழுகை வந்தது. 

குரல் கம்மிய நிலையில் “அம்மா!” என்று அழைத்தான். 

பாபுவுன் குரல் கேட்டுத் திரும்பிய தேவகி, அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் விழித்திருந்தான்.

அழுகையை அடக்கிக் கொண்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெதுவாக அவனருகே வந்து உட்கார்ந்தாள். அன்னையின் கரத்தை ஆதுரமாகப் பிடித்துக் கொண்டான் பாபு! 

“அழுதியாம்மா..?” அவனே அழுது விடுவான் போலிருந்தது! 

“இல்லே ராஜா…ஏதோ ஒரு கெட்ட கனவு” – மனதாரப் பொய்சொன்னாள் தேவகி! 

“ஒன்னோட கனவிலேயும் தேவதை வந்தாங்களாம்மா…?” பீதியுடன் கேட்டான் பாபு! 

“இல்லே கண்ணு… உன் அப்பாதான் வந்தார்!” 

இதைக் கேட்ட பாபு… தனக்கு எதிரே இருந்த சுவரில் ‘கோட்’டும், ‘சூட்’டும், ‘டை’யுமாக படத்தில் கம்பீரமாக நின்றிருந்த தனது அப்பாவையே சிலவினாடிகள் பார்த்துக்கொண்டிருந்தான். 

அவர், இவனைப் பார்த்துச் சிரிப்பது போலவும், இவனைக் கண் சிமிட்டி அழைப்பது போலவும் அவனுக்கு ஒரு பிரமை! 

“அம்மா…அப்பா என்னைக் கூப்பிடறாரம்மா….!” – என்று கூறினான் பாபு! 

அவனை அணைத்துக்கொண்ட தேவகி, “உன்னை மட்டும் தனியாக அவர் கூப்பிடமாட்டார்டா…. என்னையும் சேர்த்துத்தான் கூப்பிடுவார்…அப்படிக் கூப்பிட்டா நாம ரெண்டு பேருமே அவர்கிட்ட போயிடலாம்…” இதைச் சொல்லி, கேவிக்கேவி அழுத தேவகி விருட்டென்று எழுந்து திவாகர் படத்தருகே சென்றாள். 

“ஏங்க… என்னையும், பாபுவையும் இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்களே… நாங்க படற தொல்லையைப் பார்த்தீங்களா?”. என்று கூ திவாகர் படத்தின் அடிப்பாகச் சுவரில் தலையை மோதிக் கொண்டு அழுதாள். தனது அம்மா சுவரில் மோதிக் கொள்வதையும் அவள் அழுவதையும் பார்த்த பாபுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தனது இடது கையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மூக்கை ஒரு முறை உறிஞ்சிக்கொண்டு, ‘அம்மா’ என்று அழைத்தான்.

பாபுவின் குரல் கேட்டு அழுகையை நிறுத்தி விட்டுத் திரும்பிய தேவகி, தன்னிடம் வரும்படி அவன் சைகை செய்ததைப் பார்த்து அவனருகில் வந்து உட்கார்ந்தாள். 

தேவகியின் கையைப் பிடித்துக் கொண்டு விக்கி விக்கி அழுதான் பாபு. 

“பாபு… நீ ஏம்பா அழறே?” அவனது கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள் தேவகி! 

“நீ ஏம்மா அழறே?” பதிலுக்குக் கேட்டான் பாபு! 

“நான் அதுக்குன்னே.. அழறதுக்குன்னே பொறந்தவடா…!” 

“நானும் உன் வயிற்றில் பிறந்தவன் தானேம்மா?” – வயதுக்கு மீறிய அவனது புத்திசாலித்தனமான இந்தப் பேச்சை வேறு சமயங்களில் கேட்டிருந்தால். தேவகி நிச்சயம் பூரித்துப் போயிருப்பாள். இப்போது மேலும் அவளுக்கு அழுகை பீறிட்டுக் கிளம்பியது! 

திடீர் என்று ஏதோ நினைப்பு வந்தவனாக பாபு கேட்டான். 

“அம்மா…பொழுது விடிஞ்சுதாம்மா…? அடுத்த பூ விழுந்ததாம்மா? இன்னும் எனக்கு எத்தனை நாள் இருக்கம்மா?” 

‘ஓ’வென்று அழுதாள் தேவகி! “பூ விழலேடா.. கிளையிலே இப்போ நிறைய பூக்கள் இருக்கு…!”

அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.

“எங்கே…ஜன்னலைத் திறந்து காட்டு”

என்ன செய்வதென்று புரியவில்லை தேவகிக்கு! 

“உள்ளே வரலாமா?” என்று கேட்டபடியே வந்த டாக்டரைப் பார்த்ததும் அவளுக்கு தெம்பு வந்தது!

“வாங்க டாக்டர்!” என்று எழுந்து நின்றாள்.

பாபுவைத் தொட்டுப்பார்த்த டாக்டர், “வெரி குட்! காய்ச்சல் ரொம்ப குறைந்து விட்டதே” என்றார் சந்தோஷத்துடன்! 

“ஆமா டாக்டர் ஆனா… பயம் அதிகமாயிடுச்சி” என்றாள் நா தழுதழுக்க தேவகி! 

‘என்ன செய்கிறான்…?” 

“அடிக்கடி அந்தப் பன்னீர் மரத்தைப் பார்க்கிறான்… பூக்களை எண்ணிப் பார்த்துட்டு, ‘நான் இனி இத்தனை நாள் தான் இருப்பேன்’னு சொல்றான்!” 

“ஏம்மா… இந்த வீடு, சூழ்நிலைகளை மாற்றி வேறு எங்காவது போய் கொஞ்ச நாள் இருக்கலாமே?” 

“எங்கே டாக்டர் போறது? எங்களிடம் அன்பு, ஆதரவு காட்டத்தான் இந்த உலகத்திலே யாருமே இல்லியே…!” 

“த்ச்சொ த்ச்சொ…! என்னோட வீடு ரொம்ப சிறிசு… இல்லேன்னா நானே உங்களை அழைச்சுட்டுப் போயிடுவேன்!” 

“ஒங்க நல்ல மனசுக்கு நன்றி டாக்டர்!”

“எனக்கு ஒரு யோசனை தோணுது! கொஞ்சம் பணம் செலவானாலும் பரவாயில்லேன்னு.. குற்றாலம் மாதிரி ஏதாவது ஒரு ஊருக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வாங்களேன்!” 

“வேண்டாம் டாக்டர்…வேண்டாம்! அப்படி இருக்கிற எடத்துலே ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சின்னா…. ‘ஏன்’னு கேட்கக் கூட நாதியிருக்காது டாக்டர்… எனக்கோ… என் மகனுக்கோ எது ஆனாலும்……’அவர்’ கட்டிய இந்த வீட்லே… அவர் படத்துக்கு முன்னாலேயே ஆகட்டும்!” 

உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதால் தேவகியின் தொண்டை அடைத்தது. 

அவள் சொன்னதைக் கேட்ட டாக்டர் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு கூறினார். 

“இந்த அறையை, இந்த ஜன்னலை;அதற்கு அப்பால் இருக்கிற பன்னீர் மரத்தை இவன் மறக்கணும்கிறதுக்காகத்தான் சென்னேன்… ஆனா அது முடியாது போலிருக்கு சரி… இந்தாம்மா தூக்கமாத்திரைகள் நாலு இருக்கு! பாபு, பன்னீர் மரத்தைப் பார்த்து எப்போ பேசினாலும் அப்போ மட்டும் கொடு. ஒரு நாளைக்கு ஒரு மாத்திரைக்கு மேலே கொடுக்காதே!” 

டாக்டர் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொண்ட தேவகி, “சரி டாக்டர்” என்றாள். 

டாக்டர் போய்விட்டார். அவரை வாசல் வரைபோய் வழியனுப்பிவிட்டு வந்த தேவகி, பாபுவின் விசும்பல் குரல் கேட்டுப் பதறிப்போய் அவனருகே வந்தாள். 

“ஏண்டா கண்ணா அழறே?” – அவன் தலையை வருடினாள் அவள்!

“என்னால் ஒனக்கு எத்தனை கஷ்டம்மா?”

அவளது கையைப் பிடித்துக் கொண்டான் பாபு! 

“பேசாம தூங்கு கண்ணா, சமர்த்துல்லே நீ?”

அழுகையை மறைத்துக் கூறினாள். 

“எனக்குத் தூக்கம் வரலியேம்மா…?”

டாக்டர் கொடுத்த மாத்திரையில் ஒன்றை அவன் வாயில் போட்டு, வெந்நீர் தந்தாள் தேவகி. 

மாத்திரையைச் சாப்பிட்டதும் ஒரு உற்சாகம் பாபுவுக்கு! 

“அம்மா… இப்படி வாயேன்!” – அவனை நெருங்கி உட்கார்ந்தாள் தேவகி.

அவளது கன்னத்தைத் தொட்டு இதமாகத் தடவினான் பாபு!  

“அம்மா…நீ ஒரு பாட்டுப் பாடுவியாம். அதைக் கேட்டு நான் அப்படியே தூங்கிடுவேனாம்!” 

“என்ன பாட்டுடா நான் பாடுவேன்?” 

“ஏதாவது பாடும்மா…!”

“என்பாடே பெரும்பாடா இருக்கேடா…?”

“அம்மா… இப்போ நீ பாடப்போறியா இல்லே…?”

இந்த வார்த்தையைக் கேட்ட தேவகியின் மெய் சிலிர்த்தது! கருமேகக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வெளிக்கிளம்பும் வெள்ளி நிலா போல, அவளது துயரங் களைத் துளைத்துக்கொண்டு ஒரு நிகழ்ச்சி அவளது நினைவுக்கு வந்தது! அடுத்த வினாடியே பாபுவின் கையைத் தேடினாள். அவனது வலதுகை அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது! அவளது உடல் மேலும் புல்லரித்தது! ஏதோ ஒரு நினைவு மயக்கத்தில் அப்படியே மெய்மறந்து இருந்தாள் தேவகி! 


அது அவளது கல்லூரிப் பருவம்! பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள் அவள். அப்போதுதான் அவளுக்கும் திவாகருக்கும் காதல் ஏற்பட் டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்படிச் சந்திக்கின்ற நேரத்தில் ஒரு நாள்…

தேவகிக்காக குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தான் திவாகர். சற்று தாமதமாக வந்தாள் தேவகி. கோபமடைந்திருந்த அவன், அவளுடன் பேசவில்லை! 

அவளே வலியப் போய் பேச்சுக் கொடுத்தும் அவன் கேளாக் காதினனாகவே இருந்தான். 

சிறிது நேரம் சென்று, அவனே அவளது கையை எடுத்துத் தன்மார்பில் வைத்துக் கொண்டான். அவளும் மனம் குளிர்ந்தாள். பேச்சு தொடர்ந்தது. 

“தேவகி…!”

“ஊம்…!” 

“இப்படியே.. நாம ரெண்டுபேரும் வாழ்நாள் பூரா இருந்தா…” 

“இருந்தா?” 

“புராணக் கதையின்படி சொன்னா அதுதானே சொர்க்கம்!” 

-கலகலவென்று சிரித்தாள் அவள். 

“ஏன் சிரிக்கிறே…?” சற்றுக் கோபத்துடன் கேட்டான் திவாகர்! 

“என் கூட இருக்கறதுதான் சொர்க்கம்னா.. நான் இல்லாதபோது நீங்க நரகத்திலேயா இருக்கிறீங்க?” 

“அதில் என்ன சந்தேகம்?”

-அவன் கூறியதைக் கேட்ட தேவகி பூரித்துப் புளகாங்கிதம் அடைந்துவிட்டாள். 

அவளது கையை எடுத்துத் தனது கைக்குள் அடக்கிக்கொண்ட அவன், மெதுவாக அவளது கன்னத்தைத் தொட்டான்… அப்புறம் லேசாக வருடினான்… அவள் சிணுங்கினாள்.. அவன் நெருங்கினான்! 

கன்னத்தை வருடியபடியே அவன் கேட்டான்; 

“தேவகி… ஒரு பாட்டுப் பாடேன்..!” 

“எனக்குப் பாடத் தெரியாது!”

“பொய் சொல்றே…உன்னோட ‘செட்’லேயே, நீதான் நல்லா பாடுவியாமே?”

“தப்பு. தப்பு… தப்பு.. எனக்குப் பாடத் தெரியாது!” 

“ஏய்… என்ன பிகுபண்றே? இப்போ நீ பாடப் போறியா… இல்லே…?”

-அவன் கோபித்துக்கொள்வானே என்ற பயத் தில் பாட ஆரம்பித்தாள் தேவகி. 

அந்தப் பழக்கம், அவர்களுக்குக் கல்யாணமாகி பாபு பிறக்கும் வரையில் தொடர்ந்தது. 

தேவகியின் கன்னத்தை வருடிக் கொண்டே, ‘பாட்டுப்பாடு’ என்பான் திவாகர். முதலில் அவள் மறுப்பாள். ‘நீ பாடப்போறியா… இல்லே?’ என்று மிரட்டுவாள். உடனே அவள் பாடிவிடுவாள். 


தந்தைக்கிருந்த அதே சாகசம், தனயனுக்கு மிகுந்ததைக் கண்டுதான் புல்லரித்து நின்றாள் தேவகி! 

திவாகரைப் போலவே பாபுவும் அவளது கன்னத்தை வருடிக்கொண்டு, “அம்மா… இப்போ நீ பாடப் போறியா இல்லே?” என்று மிரட்டினான். 

திவாகர் இப்படி கோபத்தில் கூறும் போது அவள் என்ன பாட்டுப் பாடுவாளோ…அதே பாட்டைத்தான் இப் போது பாபுவுக்கும் பாடினாள். 

“பூப்போல கன்னம் 
பொன்போல மின்னும்
எனைப்பார்த்த பின்னும்
ஏன் கோபம் இன்னும்..” 

-பாட்டின் இனிமையோ, அல்லது மாத்திரையின் மகிமையோ தெரியவில்லை; பாபுவைத் தூக்கம் அரவணைக்கத் தொடங்கியது. அந்த நேரத்திலும் கூட அவன் சொன்னது: “அம்மா… நீயும் பூவைத்தான் நினைச்சுப் பாடறே… நானும் அந்தப் பூக்களையே நினைச்சுட்டிருக்கேன், இன்னும் எத்தனை பூக்கள் விழணும்மா?'” 

-பாபு. இப்படிக் கேட்டதும்தான், தான் செய்த தவறு சுருக்கென்று குத்தியது தேவகிக்கு. 

பன்னீர்ப் பூக்களை அவன் மறந்து தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் அவள் பாட்டே பாடினாள். ஆனால், அந்தப் பூக்களையே நினைவூட்டும் வகையில் பாடி விட்டாளே…!
 
இனி இந்தப் பாட்டைப் பாடுவதே இல்லை என்று மனதுக்குள்ளே சபதம் எடுத்துக் கொண்டாள் தேவகி. அதற்காக – தனது கணவனுக்குப் பிடித்த பாட்டைப் பிள்ளை நலன் கருதி பாடாமல் இருப்பதற்காக மானசீகமாக திவாகரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். 

பாபு தூங்கிவிட்டான்! 


நான்கு நாட்கள் ஓடிவிட்டன. இந்த நான்கு நாட்களில் பெரும்பாலான நேரத்தைத் தூக்கமாத்திரையின் துணையுடன் தூங்கியே கழித்து விட்டான் பாபு. 

அவன் விழித்திருந்த சொற்ப நேரங்களில் அவனுக்குப் பன்னீர்ப் பூக்களின் நினைவே வராமல் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டாள் தேவகி. அவன் விழித்திருக்கும் அத்தனை நேரங்களிலும் அவனுக்குப் பிடித்ததைத் தந்து, பிடித்ததைப்பேசி அவனது கவனத்தை திசை திருப்புவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். 

ஐந்தாம் நாள் பொழுது விடிந்தது. அன்று அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் பாபு விழித்துக்கொண்டான்.  படுக்கையிலிருந்து அவன் எழுந்து பார்த்தபோது தேவகி தூங்கிக்கொண்டிருந்தாள். 

கட்டிலைவிட்டு இறங்கிய பாபு, முதல்வேலையாக ஜன்னலுக்குச் சென்று கதவைத் திறந்து, அப்பாலிருந்த பன்னீர் மரக்கிளையைப்பார்த்தான் அதிலிருந்த பூக்களை எண்ணினான். 

இரண்டே இரண்டு பூக்கள் தான் இருந்தன. பாபு மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தான். 

‘மொத்தம் இருந்தது எட்டு. இரண்டு நாளில் இரண்டு பூக்கள் விழுந்ததை நாம் பார்த்தோம். அதற்குப் பிறகு நேற்றுவரை நான்கு நாட்களாக பூ விழுவதை நாம் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த நான்கு நாட்களிலும் நான்கு பூக்கள் விழுந்திருக்கின்றன. மீதி இருப்பது இரண்டே பூக்கள்!’ 

திரும்பவும் கட்டிலில் வந்து படுத்துக் கொண் டான் பாபு. அடுத்த அரை மணி நேரத்தில், அவசர அவசரமாக எழுந்தாள் தேவகி. கண் விழித்தபடியே பாபு கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தாள். 

“அடடே… பார்த்தியா அசந்து தூங்கிட்டேனே…!” என்றாள் ஆதங்கத்துடன். 

“நீ இன்னிக்கு ஒரு நாள் தானேம்மா அசந்து தூங்கினே… நான் நாலு நாளா தூங்கியிருக்கேனே…?” வறட்டுப் புன்னகையுடன் கூறினான் பாபு. 

“நீ என்னடா சொல்றே…?” 

“சந்தேகமா இருந்தா போயி பூவை எண்ணிப் பாரும்மா… நாலு பூ விழுந்திருக்கு!” 

அப்போதுதான் அவள் அந்த சன்னல் கதவு திறந்திருப்பதைப் பார்த்தாள். நாம் எழுவதற்கு முன் அவன் எழுந்து போய் பார்த்திருக்கிறான் என்று அறிந்த தேவகி அசட்டுத்தனமாகத் தூங்கியதற்காக தன்னையே நொந்து கொண்டாள். 

“பூவை எண்ணினாயா பாபு?”- கலவரத்துடன் கேட்டாள் தேவகி! 

“ஆமாம்மா… இன்னும் ரெண்டு நாள்தான் நான் இருப்பேன்!” 

“பாபு……!” 

“ஆமாம்மா… அதிலே இன்னும் ரெண்டே ரெண்டு பூதான் மிச்சமிருக்கு!” 

கடந்த ஓரிரு நாட்களாக சற்று அமைதியடைந்திருந்த தேவகியின் நெஞ்சு மீண்டும் பதற ஆரம்பித்தது. கடந்த ஓரிரு நாட்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கொஞ்சம் அடங்கிக் கிடந்த அழுகையும் கண்ணீரும் மீண்டும் கொட்ட ஆரம்பித்து விட்டன. 

“ஏம்மா… அழறே…?”- பாபு கேட்டான்! 

“இல்லே ராஜா… நான் அழலே… நாள் அழலே…!” கண்களைத் துடைத்துக்கொண்டாள் தேவகி!

“அம்மா… எனக்கு ஒரு ஆசை…!”

“என்னப்பா?” 

“என் கூடப் படிக்கிறவங்களையெல்லாம் பார்க்கணும்போல தோணுதும்மா…!”

“….”

“என்னம்மா பேசாம இருக்கே? அவங்களோட தான் எப்படியெல்லாம் விளையாடுவேன் தெரியுமா?” 

இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தபோதிலும் பாபுவின் சிந்தனை விரிகிறது. அவனுடன் படிக்கும் பையன்களைக் கற்பனையிலேயே சந்திக்கிறான்.. பேசுகிறான்… 

“டேய்… சோமு! நான் போயிட்டு வர்றேண்டா! நீ நல்லா படிச்சு பெரிய பதவிக்கு வாடா!” 

“ஏய்… பாலாஜி! நீ கிரிக்கெட்ல பெரியபேட்ஸ் மேனா வருவே… நான் அப்பாகிட்ட போறேன்.. நீங்க எங்க அம்மாவைப் பார்த்துக்கங்க!”

கண்களை மூடியவாறே இவ்விதமாக பாபு முணு முணுத்ததைக் கேட்ட தேவகிக்கு நெஞ்சு ‘பகீர்’ என்றது. ‘அப்படி’ ஏதாவது ஆகிவிடுமோ என்று அவள் நினைத்தபோது அவளது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது! 

இந்தச் சமயத்தில் அங்கு வந்த ராதா, தேவகி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அவளை நெருங்கி வந்தான். 

“என்னம்மா நீ? எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டு, கண்ணீரை விட்டுகிட்டு, மூக்கைச் சிந்திக்கிட்டு.. ஊம்?” என்றான் பச்சாதாபமாக! 

“என்னங்க செய்யறது? என்னவர் போனதுக்கப்புறம் நான் சிரிக்கவே கூடாதுன்னு என் தலையிலே எழுதியிருக்கே?” – விரக்தியுடன் கூறினாள். 

“அந்தத் தலையெழுத்தையே மாத்திடலாம் கவலைப்படாதே!” – உறுதி தொனிக்கக் கூறினான் ராதா. 

“நீங்க என்ன சொல்றீங்க?” சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள் தேவகி! 

“தேவகி…! ஏழு கடலுக்கு அப்பாலிருக்கிற நம்ம சுகத்தைக்கூட, ஏழே நொடியிலே கொண்டுவந்து நம்மகிட்டே சேர்க்கறதுக்குன்னு ஒருவன் இருக்கான்.. ஏழுமலையான்னு பேரு. அவனுக்கு ஒரு வேண்டுதல் பண்ணிக்கோம்மா…!” 

“எப்படி?”

“பாபு நல்லபடியா எழுந்துட்டான்னா, ஏழுமலையான் உண்டியல்லே ஐநூறு ரூபாய் போடறதா வேண்டிக்கோயேன்…!” 

“சரிங்க!” என்று கூறிய தேவகி, உடனேயே தனது இரு கைகளையும் கூப்பி, கண்களை மூடி, “ஏழுமலையானே… என் பாபு நல்லபடியா பொழச்சு எழுந்தான்னா.. உன் உண்டியல்லே ஐநூறு ரூபாய் போடறேம்பா!” என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள். 

“தேவகி அந்த ஐநூறு ரூபாயில் நூறு  ரூபாயை அட்வான்சா கொடு… இன்னிக்கே ஏழுமலையானுக்கு மணி ஆர்டர் பண்ணிடறேன்…!” என்று ராதா கேட்டான். 

உள்ளே சென்ற தேவகி, நூறு ரூபாயை எடுத்து வந்து ராதாவிடம் கொடுத்தாள். கோவிந்தா கோவிந்தா என்று கூறியவாறே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டான் ராதா. 

“தேவகி, எனக்கு இன்னொரு யோசனை தோணுது!” 

“என்ன?” 

“நம்ப ஊரு அம்மன் கோயில்லே போயி ‘அங்கப்பிரதட்சணம்’ பண்ணிட்டு வாயேன்!” 

“போகலாம்… ஆனா…?”

“ஏம்மா…?” 

“பாபு தனியா இருப்பான், இந்த நெலைமையிலே அவனை அழைச்சிட்டுப் போக முடியாது!” 

“இதுக்காகவா தயங்குறே? தைரியமா போயிட்டுவா. நீ வர்றவரைக்கும் பாபுவை நான் பார்த்துக்கறேன்!” 

எப்படியாவது பாபு குணமாகி எழுந்தால் போதும்; அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தாள் தேவகி. அருமை மகனுக்காகத் தன் அங்க அவயவங்களையே ஏன்! உயிரையே இழக்கத் தயாராக இருக்கும் அவளுக்கு அங்கப் பிரதட்சணம் செய்யவா கஷ்டம்? 

புறப்பட்டு விட்டாள் கோவிலுக்கு! 

– தொடரும்…

– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *