ஒரு மணி நேரம் முன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 367 
 
 

உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தரவேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ’ஓடு ஓடு’ என்று விரட்டினான்.

நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்து தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்கு போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய் கிடந்தது. கண்களிலே கறுப்புக் கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவதுபோல வட்டமான ஒரு கொண்டை. கல்வீட்டுக்காரர் மகள் கல்யாணத்துக்கு ஒருமுறை இப்படி உடுத்திப் போயிருக்கிறார். ஆனால் கைப்பை அப்போது இல்லை. உன்னுடைய பள்ளிக்கூட விழாவுக்கும் இதையே அணிந்தார். நீ மேடையில் பரிசு வாங்கக்கூடும் என்று நினைத்து ஆடையணிந்து வந்திருந்தார்.

நீ அம்மாவிடம் என்ன உடுப்பு அணியலாம் என்று ஆலோசனை கேட்டாய். பள்ளிக்கு தினம் அணியும் கறுப்பு கால்சட்டையா அல்லது வெளியே போகும்போது அணியும் நீலமா? உன் அம்மா நீலத்தை தெரிவு செய்தார். வெள்ளை சேர்ட்டை அணிந்துகொண்டாய். அம்மா தலையை வாரிவிட சீப்பை எடுத்தார். நீ மறுத்தாய். வலோத்காரமாக உன் கன்னங்களை அழுத்திப் பிடித்து வாரி விட்டார். கண்ணாடியில் உன் முகம் மோசமாகத் தெரிந்தது. நீ ஒன்றும் பேசவில்லை. உப்பில்லாத கஞ்சியை அவசரமாகக் குடித்தாய்.

அம்மா சாப்பிடவில்லை. தரையிலே உட்கார்ந்து உன் சான்றிதழ்கள், பரீட்சை முடிவுத் தாள்கள் பத்திரிகைத் துணுக்குகள் எல்லாவற்றையும் சரிபார்த்தார். பின்னர் தேதி வாரியாகப் பிரித்து ஓர் ஒழுங்கில் அவற்றை அடுக்கினார். கடைசியாக தலைமையாசிரியர் எழுதிய கடிதத்தை உறையில் இருந்து வெளியே எடுத்து முதல் முறை வாசிப்பவர்போல உன்னிப்பாகப் படித்தார். பின்னர் உறையிலே இட்டு எல்லாவற்றையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்தார். சிறிது நேரம் கழித்து இடமும் வலமும் திரும்பிப் பார்த்தார். பின்னர் பிளாஸ்டிக் பையில் இருந்து எல்லாப் பேப்பர்களையும் வெளியே எடுத்து இன்னொரு முறை சரிபார்த்த பின் மறுபடியும் அவற்றை பையினுள் நுழைத்து கையில் தூக்கிக் கொண்டார்.

’புறப்படு, புறப்படு’ என்று அவசரப்படுத்தினார். நீ எப்பவோ தயாராகி வாசலில் நின்றாய். வாசலில் எட்டி சகுனம் பார் என்றார். பார்த்துவிட்டு தலையாட்டினாய். அவர் வெளியே வந்து கண்ணைக் கூசிக்கொண்டு சூரியனை நிமிர்ந்து பார்த்தார். கதவை இழுத்து மூடி பூட்டி சாவியை கைப்பையை திறந்து வைத்தார். ’சரி போ’ என்றார். உனக்கு சிரிப்பு வந்தது. இதுதான் முதல் தடவை உன் அம்மா சாவியை கைப்பையில் வைப்பது. நீ முன்னே நடக்க அவர் பின்னே தொடர்ந்தார்.

பஸ் வருவதற்கு பத்து நிமிடம் பிடித்தது. உன் அம்மா பிளாஸ்டிக் பையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடி நின்றார். பஸ் வந்ததும் ஏறி அம்மா இடது பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டு உன்னையும் பக்கத்தில் இருக்கச் சொன்னார். 45 நிமிடம் எடுக்கும் என்று நடத்துனர் நீ கேட்டதற்கு பதில் சொன்னார். உன் அம்மா பரபரவென்று பிளாஸ்டிக் பையை இன்னொரு முறை திறந்து தலைமையாசிரியருடைய கடிதத்தை உறையிலிருந்து வெளியே எடுத்துப் படித்தார். பின்னர் மறுபடியும் உறையிலிட்டு பிளாஸ்டிக் பையில் இருந்த இடத்தில் வைத்துவிட்டு பையை மடியில் வைத்து இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தார். திடீரென்று ஏதோ யோசித்து படபடப்புடன் எழுந்து மணியை அடித்து பஸ்ஸை நிற்பாட்டினார். நீ ஏதும் புரியாமல் அவர் பின்னால் இறங்கினாய். அவர் விறுவிறென்று மறு பக்கம் வீதியை கடந்து எதிர் பக்கம் போகும் பஸ்ஸில் ஏறினார். நீ ஒன்றுமே பேசாமல் பதுங்கியபடி அவர் பின்னால் நடந்தாய்.

சாவியை சேலை முடிச்சில் தேடினார். பின் ஞாபகம் வந்து கைப்பையை திறந்து சாவியை எடுத்து வீட்டுப் பூட்டைத் திறந்து உள்ளே போய் அவசரமாக எதையோ தேடினார். நீ எட்டு வயதில் வரைந்து பரிசு பெற்ற ஓவியத்தை எடுத்து அதையும் பிளாஸ்டிக் பையில் வைத்தார். ’பார்த்தாயா மறந்துவிட்டேன்’ என்று உன்னைப் பார்த்து சிரித்தார். உனக்கு பெருமூச்சு விடத் தோன்றியது. மறுபடியும் பஸ் எடுத்து பயணம் செய்தபோது அம்மா நடத்துநரிடம் ’லோரன்ஸ் சந்தி’, ’லோரன்ஸ் சந்தி’ என்று கத்திக்கொண்டே வந்தார். அவன் எரிச்சலுடன் திரும்பி பார்த்தான், பதில் சொல்லவில்லை. அம்மா மடியிலே பிளாஸ்டிக் பையை வைத்து அதன் கைப்பிடியில் கையை நுழைத்து பிடித்துக்கொண்டே பயணம் செய்தார்.

லோரன்ஸ் தரிப்பில் அம்மா இறங்கி எதிரில் வருகிறவர்களிடமெல்லாம் வழிகேட்டு, வழிகேட்டு நடந்தார். அவர் தேடிய இடம் வந்ததும் திகைத்துப்போய் நின்றார். உனக்கு மூச்சு நின்றுவிட்டது. அம்மா மேலும் இரண்டு பேரிடம் விசாரித்தபோது அவர்களும் அதுதான் கட்டடம் என்பதை உறுதி செய்தனர். கட்டடம் ஒரு குன்றின் மேல் நின்றது. தூரத்தில் நின்று பார்த்தபோது அது வெய்யிலில் சற்று நெளிந்தது. முகிலுக்குள் மறைவதும் வெளியே வருவதுமாக இருந்தது. அத்தனை பிரம்மாண்டத்தை நீ பார்த்தது கிடையாது. அம்மா தயங்கி தயங்கி முன்னேறினார். உனக்கு திகைப்பு அதிகமாகிக்கொண்டு வந்தது. உன் வயது மாணவர்கள் மடிப்புக் கலையாத சீருடைகளில் காட்சியளித்தனர். பளபளக்கும் காலணிகளை நீ எதிர்பார்க்கவில்லை. உன் இருதயம் கீழே போகத் தொடங்கியது. உனக்கு திரும்பி ஓடிவிடலாம் என்று பட்டது.

அவசரமாக நேரே பார்த்தபடி நடந்த சிலர் கழுத்தில் கட்டித் தொங்கிய அட்டைகளில் அவர்கள் படம் இருந்து. பெயரும் காணப்பட்டது. அவர்கள் கெட்ட அதிகாரம் கொண்டவர்கள். உன் அம்மா அவர்களைத் தவிர்த்து வேலைக்காரர்களிடம் வழி விசாரித்தார். பச்சை புல்தரையை உன் அம்மாவும் நீயும் கடக்க முற்பட்டபோது தோட்டக்காரன் ஓடிவந்து விரட்டினான். சிவப்புக் கால் புறாக்கள் புல்தரையில் துள்ளித் துள்ளி பறந்தன. அவற்றை அவன் விரட்டவில்லை.

உன்னைக் கடந்த மாணவர்கள் பார்க்க மிடுக்காக இருந்தனர் ஆனால் சாதுவான முகத் தோற்றம். கிராமத்தில் உன்னுடைய வகுப்பர்கள் முரடர்கள். பிணக்குகளை அடிபிடிபட்டுத்தான் தீர்ப்பார்கள். உன்னுடைய புத்தகத்தை அடிக்கடி பறித்து எறியும் வகுப்பு முரடன் புள்ளிகள் போட்ட முகத்துடன் இருப்பான். ஒரேயோர் அடியில் உன் உடம்பு எலும்புகளை முறித்துவிடப் போவதாக பயமுறுத்தியிருக்கிறான். செய்யக்கூடியவன். வாத்தியார் பார்க்காத நேரங்களில் உன் காதை திருகியபடி சொல்வான் ’எந்த நேரமும் படிக்காதே. உன் மூளை வளர்ந்து மண்டையை உடைத்து வெளியே வந்துவிடும்.’ அவனுடையதுபோல சேதமடைந்த முரட்டு முகம் ஒன்றைக்கூட நீ இங்கே காணவில்லை.

நடைபாதை முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. உன் உருவம் கீழே உன்னுடன் நடந்தது. வாழ்நாளில் இப்படியான பெரிய கட்டடத்தையும், பெரிய பெரிய தூண்களையும், வழுக்கிவிடும் போன்ற நீளமான நடைபாதையையும் நீ பார்த்ததே கிடையாது. ’அதிபர்’ என்று எழுதிய அறை வாசலில் உன் அம்மா நின்றதும் நீயும் நின்றாய். அங்கே பலர் நின்றார்கள். சிலர் இருந்தார்கள். அம்மா நாற்காலியின் நுனியில் அமர்ந்து நிலத்தை பார்த்தார். அவர் உதடுகள் மெல்ல அசைந்தன.

சூரியகாந்தி நிற ஆடை அணிந்த ஒரு சிறுமி குளுகுளுவென்று காலுக்கு மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்தாள். சாப்பிடுவதிலும் பார்க்க அதிகமான உணவை அவள் பிளேட்டில் மிச்சம் விடுவாள் என்று உனக்குத் தோன்றியது. பக்கத்தில் ஒப்பனை செய்த முகத்துடன் ஒரு பெண் அமர்ந்திருந்தார். தாயாராக இருக்கலாம். தாயுடன் அந்தச் சிறுமி ஆங்கிலத்தில் பேசியது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பயம் பிடித்தது. சொக்கலட் வெய்யிலில் உருகுவதுபோல மினுங்கிய உதடுகள் அவளுக்கு. அழகு என்றால் என்னவென்று உனக்குப் புரிந்த நாள் அது. இன்னொருமுறை திரும்பிப் பார்க்கத் தோன்றினால் அது அழகு. ஒரு விநாடி உன்னை அவள் மேல் கண்ணால் பார்த்தாள். பின்னர் தாயாரின் மேல் தலையை சாய்த்தாள்.

ஒவ்வொருவராக அறையின் உள்ளே போய் வந்தனர். அவர்கள் முறை வந்தபோது சேவகன் வந்து அழைத்துப் போனான். அம்மா தயக்கத்துடன் நுழைய நீ பின்னால் போனாய். அந்த அலுவலக அறை பிரம்மாண்டமானதாக இருந்தது. செம்பு நிற தரைவிரிப்பு; செம்பு நிற திரைச்சீலைகள். முழு அறையும் பொன்மயமான ஒளியில் நிறைந்து கிடந்தது. புத்தக அலமாரியில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்கள். அலமாரியின் மேலே பெரிய பரிசுக் கிண்ணம் ஒன்று காணப்பட்டது. ஆள் உயர மணிக்கூடு ஒன்றும், உலக உருண்டையும் மூலையில் நின்றன.

பளபளக்கும் நீள்மேசை. அதற்குப் பின்னால் வேலைப்பாடுகள் செய்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் ஆங்கிலேயர்போல உடை தரித்திருந்தார். முன் நீட்டிய தாடை. புன் சிரிப்புடன் வரவேற்றார். அந்தச் சிரிப்புபோல நீயும் சிரிக்க பழகவேண்டும் என்று நினைத்தாய். அமரச் சொல்லியும் அமராமல் அம்மா நின்றார். நீயும் பக்கத்தில் நின்றாய். அம்மா பிளாஸ்டிக் பையை திறந்தபோது அது கீழே விழுந்துவிட்டது. அம்மா முழங்காலில் அமர்ந்து கையை நுழைத்து தலைமையாசிரியருடைய கடித உறையை எடுத்து உறையுடன் அப்படியே கொடுத்தார். அவர் அதை திறந்து மேலோட்டமாகப் பார்த்தார். நீ ஒரு காலை மாற்றி நின்றாய்.

பின்னர் அதே சிரிப்புடன் ’நீங்கள் ஒரு மணிநேரம் முன்பு வந்திருக்கவேண்டுமே’ என்றார். அம்மா பிளாஸ்டிக் பையில் கொண்டுவந்த அத்தனை பேப்பர்களையும் அவர் மேசையில் குவித்தார். இதுதான் பரிசு வாங்கிய ஓவியம் என்று எட்டு வயதில் வரைந்த ஓவியத்தை காட்டினார். அதிபர் ஒன்றையுமே பார்க்கவில்லை. ’குறிப்பிட்ட நேரத்துக்கு நீங்கள் வரவில்லை. உங்கள் இடத்தை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டோம்’ என்றார். அவர் குரல் ரேடியோவில் ஒலிப்பதுபோல கரகரவென்று இருந்தது.

தலைமையாசிரியர் உன்னிடம் சொல்லிவிட்டது நினைவுக்கு வந்தது. ‘மரியாதை இருக்க வேண்டும். ஆனால் தலை குனியாதே. குனிந்தால் உன் வாழ்க்கை உன்னை தாண்டிப் போய்விடும்.’ கப்பல் மூழ்குவதுபோல உன் அம்மாவின் உயரம் குறைய ஆரம்பித்தது. அடுத்த கணம் முழங்காலில் விழுந்துவிடுவார் போல பட்டது. அம்மா மன்றாடியதை நீ பார்த்ததில்லை. உனக்கு அவமானமாக இருந்தது. நடுங்கும் ஒருகையை அவருடைய மற்றக் கை பிடித்து நிறுத்தியது. அவர் வார்த்தைகள் குளறல்களாக வந்தன. உயிர் எழுத்துக்கள் ஒன்றையொன்று சுற்றின. அம்மா இன்னும் தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை.

எப்படி சேவகன் சரியான நேரம் உள்ளே வந்தான் என்று தெரியவில்லை. அவன் வந்து அம்மாவை அழைக்க அவர் தடுமாறியபடியே வெளியேறினார். நீ பின்னால் போனாய். அப்போதும் விடாமல் அம்மா திரும்பிப் பார்த்து ’தயவுசெய்து தலைமையாசிரியருடைய கடிதத்தை படியுங்கள். அவன் மாகாணத்தில் முதலாவதாக வந்திருக்கிறான், அவன் மாகாணத்தில் முதலாவதாக வந்திருக்கிறான்’ என்று கத்தினார். பாதிக் குரல் உள்ளேயும் பாதிக்குரல் வெளியேயும் கேட்டது.

அம்மா அப்படி அழுததை முன்பு ஒருமுறை நீ பார்த்திருக்கிறாய். உன் தங்கை ஆஸ்பத்திரியில் இறந்தபோது. அவளுக்கு பிராணவாயு கொடுத்தார்கள். வேறு பணக்காரன் ஒருவன் ஆஸ்பத்திரியில் சின்ன நோயுடன் வந்து அனுமதிக்கப்பட்டபோது அவளுடைய பிராண வாயு டியூபை பிடுங்கி அவருக்கு கொடுத்தார்கள். அவர் பிழைத்தார். உன் தங்கை இறந்துவிட்டாள்.

அம்மா பஸ்சில் உன்னுடன் ஒன்றுமே பேசாமல் பயணம் செய்தார். பிளாஸ்டிக் பை கீழே சரிந்து கிடந்தது. ஓட்டுநர் டிக்கட் காசுக்காக வந்தார். அம்மா இருக்கிறதை பொறுக்கிக் கொடுத்தார். அவர் குறைகிறது என்றார். அம்மா கீழே பார்த்தபடியே இருந்தார். உனக்கு அவமானமாகப் போனது. சிறிது நேரத்தில் அவர் போய்விட்டார். நீ அம்மாவின் கைகளைத் தொட்டாய். அவை குளிர்ந்துபோய் கிடந்தன. உனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. நீயும் அழவேண்டுமா? அல்லது ஆறுதல் படுத்த வேண்டுமா? அம்மா கண்களில் பூசிய மை கரைந்து கன்னத்தில் ஒழுகியது.

இரண்டு முழங்கால்களையும் மடித்து உன் குதிக்கால்களின் மீது நீ உட்கார்ந்திருந்தாய். 12 மணி நேரம் நீ சாப்பிடவில்லை. அழும் அறைக்குள் போன அம்மா இன்னும் வெளியே வரவில்லை. வெளியே மெல்லிய சத்தம் உனக்குக் கேட்டது. அழுவது போலவும் இருந்தது. சிரிப்பது போலவும் இருந்தது. நீ உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து சமையல்கட்டைப் பார்த்தாய். காலையில் காய்ச்சிய கஞ்சியின் மீதம்தான் கிடந்தது. வேறு ஒன்றுமே சமைப்பதுபோல அன்று தெரியவில்லை.

அம்மா கழுத்தை கையினால் அழுத்திக்கொண்டு வெளியே வந்தபோது அவர் கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. ’அம்மா, அந்தப் பள்ளிக்கூடத் தூண்களைப் பார்த்தீர்களா? நான் கட்டிப் பிடிக்கவே முடியாது’ என்றாய். அம்மா உன்னை ஆச்சரியமாகப் பார்த்தார். ‘அம்மா, அது டவுண் பிள்ளைகளுக்கு கட்டிய பள்ளிக்கூடம். அதைப் பார்க்கவே அருவருப்பாயிருக்கு. எனக்கு பிடிக்கவில்லை’ என்றாய். ’உனக்குத்தான் இடம் கிடைக்கவில்லையே.’ ’அம்மா, பக்கத்து கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதுதானே. அங்கே எவ்வளவு சொல்லித் தருவார்களோ அவ்வளவையும் நான் படிப்பேன். மாகாணத்தில் முதலாவதாக வருவேன்’ என்று சொன்னாய். அம்மா ஒன்றுமே சொல்லாமல் புகை மணக்கும் கையினால் உன் முடியை கலைத்தார்.

நீ தின்று பசியை அடக்குவாய். இப்பொழுது பசி உன்னைத் தின்றது. சிறுவயதில் அம்மா உனக்கு சோறு பிசைந்து ஊட்டுவார். கடைசி வாயை உருட்டி ‘சாப்பிடு. எல்லாச் சத்தும் இதில்தான் இருக்கு’ என்று கெஞ்சுவார். அது எல்லாம் உன் அப்பா ஓடிப்போக முன்னர். நீ அம்மாவை பசிப் பார்வை பார்த்தாய்.

’சரி, போய் உப்பு வாங்கி வா’ என்றார். நீ அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்தாய். ‘அவன் தர மாட்டான். உனக்குத் தெரியும்’ என்று சொன்னாய். ‘அது காலையில். இது மாலை. நீ போ’ என்றார்.

நீ வெளியே வந்தாய். மிச்சம் இருந்த மாலை வெளிச்சம் சட்டென்று மறைந்தது. உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து பல்லைக் காட்டி, நாய் உறுமுவதுபோல உறுமினான். நீ பேசாமல் நின்றாய். ’என்ன?’ என்றான். நீ பேசவில்லை. ’உப்பா?’ அவனே கேட்டான். நீ தலையாட்டினாய். சிரித்தான். அவன் சிரிப்பிலே பற்கள் அதிகமாக இருந்தன. ஒரு கை நிறைய உப்பை அள்ளி உன்னிடம் நீட்டினான். காலைக்கும் மாலைக்கும் இடையில் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? நீ திகைத்துப்போய் நின்றாய்.

– December 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *