ஒரு கூழாங்கல் எப்போது அழகாக இருக்கிறது? கூழாங்கல்லாக இருக்கையில்! ஒரு பறவை எப்போது அழகாக இருக்கிறது? அது ஒரு பறவையாகப் பறந்தபடி இருக்கையில்! ஜூலை மாதத்தின் எல்லா தினங்களின் மேலும் கொத்துக் கொத்தாக உதிர்ந்து அதை ஆரஞ்சு மாதமாக்குகிற குல்மொஹர் எப்போது அழகாக இருக்கிறது? அது குல்மொஹர் வசந்தமாக இருக்கையில்!
இது எவ்வளவு எளிய உண்மை! அருவிகளைப் பற்றிய ஒரு பாடல் செய்வதைவிட, ஒரே ஒருமுறை அருவியின் அருகில் சாரல்-தெறிக்க நிற்பது செய்துவிடாதா? ஒரு வானவில்லைக் காட்டிய பிறகு, குழந்தைக்கு வானவில்லின் நிறங்களைச் சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வானம் போலத்தானே இந்த வாழ்வு!
என்னுடைய பாட்டி எவ்வளவு அழகாக இருந்தாள்! பாட்டி என்பதைவிட ‘அம்மாச்சி’ என்று சொன்னால்தான் நெருக்கமாக இருக்கிறது. தாத்தா இறந்து சரியாக ஒரு மாதத்தில் ஆச்சி இறந்துபோனாள்.
தாத்தாவுக்குக் கொள்ளிவைத்துவிட்டு வந்து வீட்டுக்குள் போய் ஆச்சியைப் பார்க்கிறேன். ‘ஐயா, எல்லாருமாச் சேர்ந்து நல்லபடியா அனுப்பிவெச்சுட்டீங்களா?’ என்று என் கையைப் பிடிக்கிறாள் ஆச்சி.
எண்பது எண்பத்தோரு வருடச் சுருக்கங்கள் நிரம்பிய அந்த விரல்களுக்குள் என் விரல்கள் இருக்கின்றன. அப்படியே இருக்கிறோம். அவளும் அழவில்லை. நானும் அழவில்லை. இத்தனை வருடங்கள் ஒரு வாழ்வை முடித்து நிற்கிறபோது, அழுவதற்கு எதுவு மில்லை. அழவும் செய்யாத, சிரிப்புக்கும் அப்பால் சென்றுவிட்ட அந்த நேரத்து அம்மாச்சி முகம் போல, எந்த அம்மன் முகமும் அழகாக இருந்ததில்லை!
ரொம்ப காலத்துக்குப் பிறகு, ஒரு வெளியூர் கல்யாணத்தில் வைத்து, ‘ஏய்! அந்த வாகையடி முக்கு கல்பனா ஸ்டுடியோ இப்போ இருக்கா?’ என்று அவன் என்னிடம் கேட்டான்.
‘எதுக்குக் கேட்கிற திடீர்னு?’
‘உங்க ரெண்டு பேரு போட்டோ ஒண்ணு அந்த ஸ்டுடியோல வெச்சிருப்பாங்க. ரொம்ப நல்லாருக்கும்!’
சிநேகிதன், ‘உங்க ரெண்டு பேரு’ என்று சொன்னது என்னை யும் என் மனைவியையும்! கல்யாணமாகி ஆறு ஏழு மாதத்தில் எடுத்தது அந்த போட்டோ. தலைப் பிள்ளை உண்டாகியிருந்த நேரம். தலைப்பிள்ளை சூலிகளுக்கே உண்டான அழகு அதில் இருந்தது. அந்த அழகுதான் வருஷம், மாதம், உள்ளூர், வெளியூர் எல்லாம் தாண்டி என்னைப் பார்த்தவுடன் கல்பனா ஸ்டுடியோவைத் தேட வைத்திருக்கிறது அவனை.
தேவதேவன் ஒரு கவிதை எழுதியிருப்பார். ‘இந்த மரத்தின் கீழே நிற்கும்போது, நீ ரொம்ப அழகாகிவிடுகிறாய்’ என்று ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிற மாதிரி. குறிப்பிட்ட மரத்தின் கீழ், குறிப்பிட்ட கட்டடங்களில், குறிப் பிட்ட வெயிலில்கூடப் பெண்கள் அழகாகத் தோன்றுவதுண்டு. அதைவிட அவர்கள் அழகாக இருப்பது பிறந்த ஊர்களிலும், பிறந்த வீடுகளிலும்தான்.
பிறந்த ஊர் செழிப்பாக தோப்பும் துரவுமாக இருக்க வேண்டும், பிறந்த வீட்டில் காரும் வண்டியு மாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அது பிறந்த ஊர், பிறந்த வீடு, அதுபோதும்!
கி.ராஜநாராயணன் மாமா வீட்டுக் கணவதி அத்தை புதுச்சேரி லாசுப்பேட்டையிலும் அழகாக இருந்தார்கள். ஆனால், இடைசெவலில் பார்க்கும்போது இதைவிடவும் அழகுதான்!
வீட்டுக்கு வேலைக்கு நிற்கிற பெண் பிள்ளைகள் கோயில்கொடைக்கு ஊருக்குப் போகும். இரண்டு நாளில் திருப்பிக் கொண்டுவந்து விட்டு விடுவதாகத்தான் கூட்டிக்கொண்டு போவார்கள். அநேகமாக எட்டாம் பூசை முடிந்துதான் அம்மாவோடு அந்தப் பிள்ளையும் வரும்.
‘என்ன… எட்டு நாளைக்கு நீ பாட்டுக்குப் போய் உட்கார்ந்துகிட்டே?’ என்று முதலில் ஒரு சண்டை நடக்கும். அப்புறம் ராசியாகி அம்மாவை யும் வேலைக்கு வந்த பிள்ளையையும் சாப்பிடச் சொல்வார்கள். சாப்பிடும்போது பேச்சில் ஒரு அருமை வந்துவிடும் அல்லவா… ‘என்னட்டி பேச்சி, எட்டு நாளில ஆளே அழகாயிட்ட! ஆடு கோழின்னு வெட்டிட்டியா நல்லா?’ என்ற கேள்வி வரும்.
சாப்பிடுகிற பிள்ளை வெறுமனே சிரிக்கும். ஒண்ணும் சொல்லாது. அம்மாக்காரி பதில் சொல்வாள். ‘சாப்பாடு, துணிமணியில என்னம்மா இருக்கு. சின்னஞ் சிறு புள்ள. மக்கமனுஷாளோடு நாலு நா ஒண்ணா இருந்தாலே குளுச்சிதானே.’ இதற்குள் பாதிக் கண் நிரம்பி, பாதிச் சொல் வாய்க்குள்ளேயே நின்றுவிடும். ஆமாம். சந்தோஷம்தான் ‘குளுச்சி.’ குளிர்ச்சிதான் அழகு!
பிறந்த ஊரில் மட்டும்தான் என்று சொல்ல முடியாது போல, சில பேர் எந்த ஊரிலும் அழகாக இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக் கிறார்கள். ஏதோ வடக்கத்தி ஆட்கள். கூட்டம் கூட்டமாக ரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுக்கொண்டு, பேசி, சிரித்து, படுத்து… வீட்டில் இருக்கிறது மாதிரி இருக்கிறது பார்க்க. வசதியான முகங்களுமில்லை. அங்கே விவசாயம் செய்து பாடுபடுகிற வர்களாக இருக்கும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி என்று தெற்கே வந்திருப்பார்கள்.
ஒரு அம்மாக்காரி சாப்பாடு கொடுத்துக்கொண்டு இருக்கிறாள். ஆண் குழந்தை, வெற்றுடம்பு. சாப்பிடாமல் ஓடி ஓடிப் போகிறான். தூரத்தில் தண்டவாளத்துக்குள் வளர்ந்திருக்கிற புல்லை மூன்று பழுப்பு நிறக் குதிரைகள் மேய்ந்து நிற்கின்றன. குதிரைகளைக் காட்டிக் காட்டி அவள் ஊட்டிவிடுகிறாள்.
அந்தப் பையன் குதிரைப் பக்கம் ஓடுகிறான். இவள் பிடிக்கிறாள். அடுத்த வாய் வாங்குவதற்குள் மறுபடி பிள்ளை ஓடுகிறான். எட்டிப் பிடிக்கிறாள். பிடியிலிருந்து உருவிக்கொண்டு போகிற குழந்தை பின்னால் இவளும் ஓடுகிறாள். வெறும் பிள்ளையைத் துரத்துகிற காரியம்தான். அப்படியரு சிரிப்பு அந்த முகத்தில். திட்டுகிற மாதிரி கொஞ்சிக்கொண்டே சிரிக்கிறாள். அந்தச் சிரித்த முகத்தின் அழகை எந்த பாஸஞ்சர் ரயில் ஏற்றிக்கொண்டு போயிற்றோ?
சிநேகிதனின் தங்கைக்கு மூக்குக் குத்துகிறார்கள். சின்னப்பிள்ளை இல்லை. அதனால், வலிக்கும் என்று தெரியும். அழக் கூடாது என்று பல்லைக் கடித்து உட்கார்ந்திருக்கிறது. ஆசாரிக்குத் தெரியாத வித்தையா..? ரொம்பவும் வலிக்காமல், பேச்சுக் கொடுத்துக்கொண்டே பூப்போல மூக்குக் குத்துகிறார்.
அந்தப் பெண் சத்தம் போடவில்லை. வலியே ஒரு சொட்டுக் கண்ணீர் மாதிரி திரண்டு நிற்கிறது. அப்படியே அந்தச் சொட்டை உறையவைத்து மூக்குத்திக் கல்லாக மாட்டிவிட முடியும். வலியைப் பொறுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த முகம் இன்றைக்கு வரை ஒரு அழகான ஓவியம் போலத் தொங்கிக்கொண்டே இருக்கிறது ஞாபகத்தில்.
‘லட்சுமி வந்திருக்கா!’ & வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் ஒரு தகவல் வரும். அதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாதபடி முகத்தில் சிரிப்பு மினுங்கும்.
இந்த லட்சுமிகள், காந்திகள், கீதாக்கள், ஜோதி அம்மாக்கள் எல்லாம் அப்படி என்னதான் வைத்திருப்பார்களோ! அவர்கள் வரும்போதே கூடவே ஒரு வெளிச்சம் வந்திருக்கும். வந்த கொஞ்ச நேரத்தில் எல்லோருமாகக் காணாமல் போய்விடுவார்கள். இதுவரை புழங்காத இடங்களில் ஸ்டோர் ரூம், புறவாசல் நடை அல்லது பூஞ்செடிகள் பக்கமிருந்து பேச்சு கேட்கும். உபயோகிக்கிற வார்த்தைகள் மாறிப் போகும். செல்லமாக வசவுகூட விழும். திடீரென்று பேசிக்கொண்டே இருக்கும்போது, சத்தமே கேட்காது. கிணற்றுக்குள் விழுந்துவிட்ட மாதிரி கல்லாகக் கிடக்கும். எண்ணி மூன்று நிமிடம்தான். அதற்கப்புறம் வெடி போட்ட மாதிரி ஒரு சிரிப்புச் சத்தத்தில், ஜன்னல் நாதாங்கி எல்லாம் குலுங்கும். சிரிப்புக்கு முந்திய அந்த அந்தரங்கமான மௌனத்தைச் சிநேகிதிகள் மட்டுமே தர முடியும். தலைகீழாக நின்றாலும், ஆண்களால் தர முடியாது.
மகள் வந்து நம்மிடம் சொல்லும் – ‘அம்மா அவங்க ஃப்ரண்ட்ஸ்கூட ஜோரா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க.’ அழகாக என்கிறதைத்தான் ஜோராக என்று சொல்கிறதே தவிர, வேறென்ன?
நம்மால் என்ன செய்ய முடியும்? செல்ல மகளை அப்படியே சேர்த்து நம் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டியதுதான்!
– 22nd ஆகஸ்ட் 2007