ஒரு நாள் ஒரு பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 2,001 
 

(1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு சாம்ராச்சியம்! ஆமாம் எழுத்தாளனின் சாம் ராச்சியம்!

மக்கள் மனதை மாபெரும் மாற்றங்ளுக்குள்ளாக்கும் ஆற்றல் படைத்த எழுத்தாளனுக்கு சாம்ராச்சியம் ஒன்று தேவைதான். அவ்வாறான ஒரு சாம்ராச்சியத்தின் அதிபதி யாக இருந்தவர் தாம் திருவாளர் பரப்பிரம்மம்.

கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் இடையே உள்ள மேடு பள்ளங்களை கற்பனை மெருகோடு எவன் சமப்படுத்துகிறானோ அவனே எழுத்தாளன் என்பது அவருடைய கொள்கை.

உண்மைக்கும் அறிவு பூர்வமான சிந்தனைக்கும் இடையே நின்று தார்மீக அடிப்படையில் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்குபவன் எவனோ அவன் எழுத் தாளன்.

சத்தியத்தை எழுதுபவன் மட்டுமல்ல, அந்த சத்தியம் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் எவனிடம் இருக்கிறதோ அவன் எழுத்தாளன்.

இந்த ஆற்றல் நிறைந்த வெளிப்பாட்டிலேதான் மங்கள ஒலியின் மத்தியிலே மரண ஓலத்தையும், மரண ஓலத்தின் மத்தியிலே முதல் இரவின் வளையோசையையும் எழுதிக் காட்ட முடிகிறது.

இத்தகைய ஒரு நெஞ்சழுத்தம் தான் ஒரு எழுத்தாளனுக்குத் தேவை. அதுதான் அவனுடைய ஆயுதம்!

இக்கோட்பாடுகளையெல்லாம் ஒரு வெள்ளைத்தாளில் – எழுதிவிட்டு நிமிர்ந்தார் பரப்பிரம்மம்.

அவ்வேளை வாசலிலே பெண்கள் பேசும் குரல் கேட்டது. பரப்பிரம்மம் மெதுவாக எட்டிப் பார்த்தார். அங்கே வாசலிலே மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

எழுத்தாளர் பரப்பிரம்மம் தமது பார்வையை சமய லறைப் பக்கம் திருப்பி,

“டேய்…!” என்றார் – மனைவியை இப்படித்தான் அவர் அழைப்பது.

அந்த “டேய்’ முந்தானையில் கையைத் துடைத்துக் கொண்டு .. என்ன வேணும்?” என்று கேட்டது.

“அங்கே வாசலில் யாரோ வந்து நிற்கிறார்கள்: யாரென்று பாரேன்?” என்றார்.

சிறிது நேரத்துக்குப் பின் மூன்று பெண்கள் எழுத்தாளர் மனைவியைப் பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்களின் வருகையை அத்தர் வாசனை கட்டியம் கூறியது.

“இவங்க ஒங்களப் பாக்க வந்தாங்களாம்”, என்று கூறிவிட்டு மனைவி போய்விட்டாள்.

“வணக்கம் சார்!” என்று கூறி அங்கே வந்த மூன்று பெண்களும் கை குவித்தனர்.

அவருடைய அந்த சாம்ராச்சியத்தில் ஒரு நாற்காலி தான் உண்டு! எனவே வீட்டுக்குள் புகுந்து ஒரு பக்கீஸ் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தார், அது சங்கப் பலகை; மூன்று பெண்களையும் ஏற்றுக் கொண்டது.

“கலைமகள் அலைமகள், மலைமகள் போன்று மூவர் வந்திருக்கிறீர்கள் உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“நாங்கள் பல்கலைக்கழக மாணவிகள் சார்! லீவில் வந்திருக்கிறோம். அப்படியே உங்களையும் பார்த்துக் கொண்டு போகலாம் என்று வந்தோம்.”

“மிக்க மகிழ்ச்சி! என் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?” எழுத்தாளர் கேட்டார்.

“என்ன சார்! அப்படிக் கேட்டு விட்டீர்கள்? உங்கள் கதைகளைப் படித்த பிறகு தான் மற்ற விசயங்கள்” என்றாள் ஒரு பெண்.

எழுத்தாளர் பரப்பிரம்மத்தின் நெஞ்சு கொஞ்சம் நிமிர்ந்தது.

“சார்! எங்களுக்குச் சில சந்தேகங்கள்; அவற்றை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்.”

“தாராளமாகக் கேளுங்கள்” என்று தன்னம்பிக்கையோடு கூறினார் பரப்பிரம்மம்.

“எழுத்தாளர் ஆவதற்கு என்ன சார் முக்கியம்!” கேட்டாள் ஒரு பெண்.

“பிறவி!”

ஒரே வார்த்தையில் பதில் கூறினார் பரப்பிரம்மம். பெண்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தனர்.

விசயத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளர் மேலும் கூறினார்.

“எழுத்தாளனை உருவாக்க முடியாது. அவன் பிறக்க வேண்டும்!” என்று கூறினார்.

“அப்படியென்றால்?” மற்றொரு பெண் கேட்டாள்.

“பூமிக்கடியில் கிடக்கும் கற்களையெல்லாம் எடுத்து மாணிக்கக்கல்லாக மெருகேற்ற முடியுமா?”

“உற்பத்தியிலேயே அது மாணிக்கக் கல்லாக இருக்க வேண்டும்; இப்பொழுது உங்களுக்குப் புரியும்” என்று நினைக்கிறேன்.

புரிந்து கொண்டது போல் மூவரும் தலையசைத்தனர்.

“பத்திரிகையாளனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சொல்லுங்க சார்!”

பரப்பிரம்மம் தனது குரலைக் கொஞ்சம் சரிப்படுத்திக் கொண்டார்.

“நாட்டின் செய்திகளுக்கு அழுத்தம் கொடுப்பவன் பத்திரிகையாளன், மக்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் தருபவன் எழுத்தாளள்.”

“பத்திரிகையாளன் தொழிலுக்கு உழைக்கிறான். எழுத்தாளன் புகழுக்காக எழுதுகிறான்.”

“ஏன் சார்? உங்களுடைய சிறுகதை ஒன்றில் தமிழ் நாகரீகம் பற்றிக் கூறியிருக்கிறீர்களே? அது பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்” ஒரு பெண் கேட்டாள்.

“நாகரீகம் என்பது காரை முள்ளில் துணியைப் போட்டு விட்டு இழுத்துப் பிய்க்கும் முயற்சியல்ல! மென்மையான மன உணர்வுகளின் வெளிப்பாடு” – இப்படி எழுதியிருக்கிறேனே! அதைத்தானே கேட்கிறீர்கள்?”

“ஆமாம் சார்! அதைத்தான் சொல்லுங்கள்.”

“நாகரீகம் என்றால் என்ன?” பரப்பிரம்மம் இப்படி ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“நாகரீகம் என்பது ஒழுக்கம், அழகு, மரியாதை நளினமான மனிதத் தன்மையின் வெளிப்பாடு, பிறர் மனம் புண்படாமல் வாழும் வாழ்க்கை முறை! இவைகள் தாம் நாகரீகம்!”

“இன்று நேற்றல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் பாதுகாத்து வரும் மரபு இது”

“பண்டைக் காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, இந்தக் காலத்து வாழ்க்கை முறையோடு இசைந்து செல்வதே அதன் வெற்றி! இது தான் தமிழ் நாகரீகம்; புரிகிறதா உங்களுக்கு?”

“புரிகிறது சார்! சொல்லுங்கள்” என்றாள், மற்றொரு பெண்.

எழுத்தாளர் பரப்பிரம்மத்தின் சிந்தனை பெருக்கெடுத்தது. இனி அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர் அந்தப் பெண்களை ஒரு முறை பார்த்து விட்டுப் பேசத் தொடங்கினார்.

“எதைப் புரிந்து கொண்டீர்கள்? சதை பிளந்து இரத்தம் வடிவது போன்ற உதடுகள்! நெற்றியிலே நெருப்புத் துண்டை ஒட்டி வைத்தது போன்று பொட்டு! உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் திறந்து காட்டுகின்ற ஆடையலங்காரம்! இவைகள் தாம் நாகரீகம் என்று நம் தமிழ்ப் பெண்கள் கருதுகிறார்கள்.”

“தமிழ் இனத்திற்குத் தீவினை வேறெங்குமிருந்து வரவேண்டியதில்லை, இன்றயை மனப்பான்மையே போதும் நம்மைச் சாகடிக்க!”

“ஒரு இனத்தின் பண்பாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்ணிடம் தான் இருக்கிறது. பண்புள்ள ஒரு பெண் தான் பயனுள்ள ஒரு பிள்ளையைப் பெற முடியும்.”

“கவர்ச்சிதான் நாகரீகம் என்றால் நம் பெண்கள் இருக்க வேண்டிய இடம் புடவைக் கடை கண்ணாடிப் பெட்டிகள் தாம்!”

பரப்பிரம்மம் பேச்சை நிறுத்தி விட்டு மேசை மேல் இருந்த செம்பை எடுத்து நீர் பருகினார்.

மூன்று பெண்களின் முகங்களும் வியர்த்துக் கொட்டின. ஒருத்தி மற்றவளின் காதுக்குள் போவோமா?” என்று கிசுகிசுத்தாள்.

“இதற்குள் மற்றொரு பெண் ‘ஏன் சார்! தமிழ்மொழி பற்றி உங்கள் கருத்தென்ன?’ என்று பேச்சைத் தொடக்கி விட்டாள்.

பரப்பிரம்மம் வாயைத் துடைத்து விட்டுப் பேசலானார்.

“தமிழ் மிகத் தொன்மையானது. அழிக்க முடியாத அரும்பெரும் காப்பியங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது. இந்தத் தமிழ் மொழி! பல ஆயிரம் வருடங்களுக்கு மூன் தோன்றி வளர்ந்து, வாழ்ந்து உலகெலாம் வேரூன்றி நிலைத்து நிற்கும் இந்தத் தமிழ் மொழி பெற்றிருக்கும் இலக்கியச் செல்லங்கள் ஏராளம்.”

“அந்தப் பண்டைய இலக்கியங்கள் காலத்தை வென்று இன்றைய சமுதாயத்தின் உள்ளத் துடிப்புகளை வெளிப் படுத்துகின்றனவே? இது ஒன்று போதும் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழ்வதற்கு”

“தமிழ் சாகிறது என்று கூச்சல் போடுகிறார்களே? அவர்களை நாம் மன்னித்து விடுவோம்! ஆனால்! தமிழ் நாகரீகம் பண்பாடு இவைகள் புதை குழியில் வைக்கப்படுகிறதே? இது பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?”

“பண்டைய காலத்தில் இருந்தே இறுக்கமான மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து வந்தவர்கள் நாம், பல நூறு ஆண்டுகளாக ஆத்ம சோதனை என்ற மயான பூமி யிலே தங்களைச் சாம்பலாக்கிக் கொண்ட நமது அறிஞர்கள் இலக்கியப் படைப்பாளிகளின் அரும்பெரும் சாதனைகளை யெல்லாம் அழித்து ஒழித்த பிறகு தமிழுக்கு என்ன வேலை இருக்கிறது? என்று கேட்கிறேன்.”

இப்படியொரு கேள்வியோடு எழுத்தாளர் பரப்பிரம் மம் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

மூன்று பெண்களும் வாயடைத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் எழுத்தாளர்.

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் சார்” என்றாள் ஒருத்தி.

“சிலம்பம் விளையாடுவது போல் பிரச்சினைகளை நன்றாகச் சாடுகிறீர்கள் சார்!” என்றாள் மற்றொருத்தி.

இந்தப் பாராட்டுகள் எழுத்தாளர் நெஞ்சை நிமிர்த்தியது.

இந்தச் சமயத்தில் ஒரு பெண் மற்றவளின் காதுக்குள் “மணி பத்துடி” என்றாள். இதையடுத்து அந்த மூன்று ‘டி’க்களும் எழுந்து நின்றனர்.

“வணக்கம் சார்! உங்களைச் சந்தித்ததில் எவ்வளவோ விசயங்களைத் தெரிந்து கொண்டோம் சார்! நாங்கள் வருகிறோம்.”

மூவரும் வணங்கி விடை பெற்றனர். எழுத்தாளர் பரப் பிரம்மம் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார், அந்த நடையிலே ஒரு ராஜ கம்பீரம், மிடுக்கு இருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் மனைவி எதிர்ப்பட்டாள்.

“என்ன? உங்கள் இலக்கிய சபா மண்டபம் முடிந்து விட்டதா? இனி நம்மட சமையல் சபா மண்டபத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றாள்.

அவளுடைய இலக்கியச் செரிவான பேச்சைக் கேட்டு அவர் மனம் பெருமிதம் கொண்டது. மாபெரும் எழுத்தாளரின் மனைவியல்லவா? அப்படித்தான் பேசுவாள், என்று நினைத்தபடி தமது பொக்கிஷப் பெட்டி – அது தான் அவருடைய சட்டைப்பையைத் துளாவினார். அங்கே இருந்து ஒரு இரண்டு ரூபாய் நோட்டும் இரண்டு ஐம்பது சதக் குத்தியும் வெளியே வந்தன. அதை அவர் தன் மனைவியின் கையில் கொடுத்தார்.

இந்தச் சமயத்தில் பாட சாலைக்குப் போற அவர் மகன் வந்து நின்றான்!

“ஏன் தம்பி பள்ளிக் கூடம் போக வில்லையா?” என்று கேட்டாள் எழுத்தாளர் மனைவி.

“தவணைப் பணம் கட்டல்ல வெளிய அனுப்பிட்டாங்கம்மா” என்றான் அவர் மகன்.

எழுத்தாளரை நிமிர்ந்து பார்த்தாள் அவர் மனைவி, நிமிர்ந்து நின்ற எழுத்தாளர் நெஞ்சு அந்தப் பார்வையில் உள் வாங்கியது.

தன் கையில் இருந்த காசைத் தன் மகன் கையில் கொடுத்து “தவணைப் பணத்தை கட்டிட்டு மிச்சக் காசிக்கு, பாலும் வாழைப்பழமும் வாங்கி வா தம்பி?” என்றார்.

இப்பொழுது மாபெரும் எழுத்தாளர் பரப்பிரம்மம் தமது சாம்ராச்சியத்தின் சிம்மாசனத்தில் இருந்து இறங்கிப் பூமிக்கு வந்திருந்தார்.

தலையணைக்குப் பதிலாக தமது இரு கரங்களையும் தலைக்குக் கீழே அணை கொடுத்துக் கூரை முகட்டைப் பார்த்தபடி படுத்திருந்தார் எழுத்தாளர்:

பண்டைய நாகரீகமும் பழம்பெரும் இலக்கியங்களும் அவர் சிந்தனையை விட்டு மறைந்து விட்டன. தமிழையும் தமிழன் நாகரீகத்தைப் பற்றிய கவலையும் இப்பொழுது அருக்கில்லை.

இருந்த கவலை ஒன்றுதான். இன்றையப் பொழுது எப்படிக் கழியும்?

– 1981, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *