ஒரு நாளுக்கான வேலை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 27,504 
 

செல்வி ஆனி வர்க்கி,

ஹோம் நர்ஸ்,

மைலாடும் குன்று வீடு,

குருவாயூர் (அஞ்சல்).

அன்பான ஆனி,

என் விளம்பரம் தொடர்பாகத் தாங்கள் தகவல் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு நன்றி. வேலையைப் பொறுத்து கீழ்க்காணும் விவரங்களைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எர்ணாகுளம் வைட்டிலயில் ‘ஹெவன்ஸ் கிஃப்ட்’ அபார்ட்மென்டின் 702ம் எண் பிளாட்டில்தான் நாங்கள் (இப்போது எங்களுடைய அம்மா மட்டும்) வசிக்கிறோம். நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக டெஹ்ரானில் இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நிஷா… ஒன்பது வயது. நிக்கி… ஆறு வயது. என் மனைவியின் பெயரும் ஆனிதான்.

நாங்கள் இருண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவுக்கு வருவோம். இந்தமுறை ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 14 வரைதான் எங்களுக்கு விடுமுறை உள்ளது. திரும்பப் போவதற்குள்அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்களின் விருப்பம்.

பிளாட்டின் வசதிகள்: நான்கு படுக்கையறைகளும் எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட பிளாட் இது. ஒவ்வொரு படுக்கையறையிலும் டி.வி. செட் இருப்பதோடு அம்மாவுக்காகத் தனியாக டிஜிடல் ஹோம் தியேட்டரும் உள்ளது. அம்மாவின் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. காண்டஸ் காரும் டிரைவரும் உண்டு. சமையல் செய்ய ஒரு பெண்மணியும் (அம்மு அம்மாள்) மற்ற வீட்டுத் தேவைகளுக்கு இரண்டு வேலைக்காரர்களும் இருக்கிறார்கள் (தங்கம்மா, மணியன்), அம்மாவுக்கு உதவுவதற்காக ஒரு பெண் (சோசாம்மா) இருக்கிறாள். அம்மாவின் அறைக்கு அடுத்திருக்கும் படுக்கையறை ஹோம் நர்ஸுக்கானது.

ஹோம் நர்ஸின் சம்பளமும் சலுகைகளும்:

சம்பளம்: மாதம் ரூ. 300/-. உணவும் தங்கமிடமும் இலவசம். வருடத்துக்கு ஒருமுறை 2 வார விடுமுறை. ஆனால், பதிலுக்கு ஒரு நர்ஸை எங்களுடைய அனுமதியுடன் ஏற்பாடு செய்த பிறகுதான் விடுப்பில் போக முடியும். வேலை நேரம் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும். ஆனால், சோசாம்மாவிடம் முன்னரே சொல்லிவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆறுமணி நேரமும் வேறு ஏதாவது ஒரு நாள் மூன்று மணி நேரமும் வெளியே போகலாம். ஹோம் நர்ஸுக்குப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது. டெலிபோன் வசதி அம்மாவின் தேவைகளுக்கு மட்டுமேயானது. கார் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அம்மாவின் பெயர்: எலிசபெத் கோரா பிலிப். ‘ஏலிக்குட்டி’ என்றும் அழைப்பார்கள். ‘அம்மம்மா’ என்றோ ‘அம்மச்சி’ என்றோ ஹோம் நர்ஸ் அழைக்கலாம்.

அம்மாவின் வயது 86. உயரம் 5’4. எடை 47 கிலோ கிராம்.

உடல்நிலை: நடக்க முடியாவிட்டாலும் கேள்வித் திறனிலோ, பார்வைத் திறனிலோ குறை ஒன்றும் இல்லை. குறிப்பிடும்படியான வியாதியொன்றும் இல்லை. வியாதி ஒன்றும் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் ஹோம் நர்ஸின் தலையாய பொறுப்புகளில் ஒன்று.

ஞாபகம்: பல நேரங்களில் குறைவது.

அம்மாவுக்கும் எனக்குமான உறவுநிலை: அம்மாவின் ஆறு குழந்தைகளில் கடைக்குட்டி நான். என்னுடைய ஒரு சகோதரி திருமணம் முடித்து அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வாழ்கிறாள். இன்னோரு சகோதரி கன்னியாஸ்தீரியாகவும், இமாலயத்தின் தேஹ்ரி கத்வார் பிரதேசத்தில் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியையுமாக இருக்கிறாள். எல்லோருக்கும் பெரிய அண்ணன் எகிப்தில் அலெக்ஸாண்ரியாவில் இன்ஜினியர். இரண்டாவது அண்ணன் ஆப்பிரிக்காவின் எரிட்ரியாவில் ஊழியும் செய்யும் பாதிரியார். மூன்றாமவர் சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உயர்பதவியில் இருக்கிறார். எங்கள் அப்பா இறந்து 11 வருடங்களாகின்றன. எனக்கு அம்மாவிடமும் அம்மாவுக்கு என்னிடமும் அளவற்ற நேசமுண்டு. கடைக்குட்டியான என்னை அம்மா மிகவும் செல்லமாக வளர்த்தாள். எங்களின் மதிப்பிட முடியாத சொத்து அவளே. எல்லோருக்குமாக நான்தான் அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

இனி, அம்மாவைப் பராமரிக்கும் முறை பற்றிச் சில விளக்கங்கள்:

காலை 9 மணி: அம்மாவை மென்மையான குரலில் அழைத்து எழுப்ப வேண்டும். உலுக்கி எழுப்பக் கூடாது. அதற்கு பதிலாக உள்ளங்கையிலோ, நெற்றியிலோ மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். விழித்த பிறகு அம்மா நர்ஸைப் புரிந்து கொள்ளும்போது புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளத் தாமதித்தால் புன்னகையுடனேயே சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டிலின் தலைப்பக்கத்தை சோசாம்மாவின் உதவியுடன் உயர்த்தி, அம்மாவைத் தலையணையில் சாய்த்து உட்கார வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் உள்ள பாகத்தை மெதுவாக முன்னால் கொண்டுவந்து தோளையும் முதுகையும் மென்மையாகத் தடவிவிட வேண்டும். அதற்குள் சோசாம்மா கம்மோடு கொண்டு வந்திருப்பாள். நர்ஸ் தனியாகவோ சோசாம்மாவின் உதவியுடனோ அம்மாவை எடுத்துக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் நர்ஸ் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், விழித்தவுடன் அம்மாவுக்கு அன்பான ஒரு தழுவல் கிடைப்பது என்பது அம்மாவின் தளர்ச்சியுற்ற மனதும் உடலும் புத்துணர்வு பெற அவசியமானது. அம்மா கம்மோடில் உட்கார்ந்திருக்கும்போது நர்ஸ் அம்மாவின் இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்து மிருதுவாகத் தடவுவதையோ, முதுகில் கைவைத்துத் தாங்கிக் கொண்டிருப்பதையோ செய்யலாம்.

9.20: அம்மாவைத் துடைக்க வேண்டும். இதைச் செய்யும்போது அம்மாவோடு பேசிக் கொண்டிருக்க மறக்கக் கூடாது. பேசுவதற்குத் தகுந்த சில விஷயங்கள்: நர்ஸின் வாழ்க்கையின் சில நல்ல அனுபவங்கள்; சகோதர, சகோதரிகளுண்டென்றால் அவர்களைப் பற்றிய விஷயங்கள்; முதல்நாள் வாசித்த பத்திரிகையின் மகிழ்ச்சியான செய்திகள்; மனதுக்கு ஆனந்தம் தரும் கிறித்தவ ஆன்மீகக் கதைகள் ஏதாவது தெரியுமென்றால் அவை; பிள்ளைகளான எங்களைப் பற்றியும் எங்களுடைய குழந்தைகள் பற்றியுமான அன்பான உரைகள்.

9.35: அம்மாவின் முகத்தை, அதற்காகத் தனியாக வைக்கப்பட்டுள்ள துண்டினால் மெதுவாக ஒற்றியெடுத்துப் பவுடர் போட வேண்டும். கழுத்து, கக்கங்கள், முலைகளுக்கடியில், முதுகு, பிருஷ்டம், அந்தரங்க பாகங்கள், கால் பாதங்கள் என்று எல்லா இடங்களிலும் பவுடர் போட வேண்டும். இந்நேரத்தில் நர்ஸ் ஹம்மிங் செய்வதையோ, சின்னக் குரலில் வாய் திறந்து பாடுவதையோ செய்யலாம். பழமையான ஆன்மிகக் கீதங்களாயிருந்தால் மிகவும் நல்லது. இது ஏதும் தெரியாதெனில் நர்ஸுக்கு விருப்பமான, ஆனால் இனிமையான ஏதாவது பாடல்களைப் பாடலாம். பிறகு துவைத்தெடுத்து வைத்திருக்கும் கவுனை அம்மாவுக்கு அணிவிக்க வேண்டும்.

9.45: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்ற வேண்டும். சோசாம்மா கம்மோடை உருட்டி நகர்த்தி அதன் வாளியைக் காலி பண்ணிக் கழுவிச் சுத்தமாக்கி வைக்க வேண்டும். அவிழ்த்தெடுத்த கவுனையும், நனைந்த துண்டுகளையும் அழுக்குக் கூடையில் போட வேண்டும். நர்ஸ் சக்கர நாற்காலியை அம்மாவின் மேசைக்குப் பக்கத்தில் தள்ளிக் கொண்டு போக வேண்டும்.

9.48: அம்மா மேசைக்கருகில்: அம்மா நாற்பது வருடங்கள் ஆசிரியையாயிருந்ததால் இந்த வாசிப்பு மேசைக்கு அருகில் வந்தமர்வது அவர்களுக்கு மிக விருப்பமான ஒன்று. மேசை மீது பைபிள், நிகண்டு, அம்மாவின் டைரி, இங்க் பாட்டில், பேனா, பூதக்கண்ணாடி, அம்மாவின் திருமணத்தின்போது கிடைத்த சிலுவை உருவம் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி பிள்ளைகளான எங்களை உயர்ப் படிப்பு படிக்க வைப்பதற்காக அம்மா டியூஷன் எடுத்த வருடங்களில் பயன்படுத்தியிருந்த மெலிதான பிரம்பும் மேசையின்மீது அம்மாவின் இடதுபுறமாக இருக்க வேண்டும். இந்த மேசையின் முன் அமர்ந்துதான் அம்மா உணவு உட்கொள்வார்கள். நாப்கின்கள் விரித்து அதன் மீது மேலே சொன்ன பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

9.49: சாப்பிடும் நேரம்: கட்ட வேண்டிய துவாலையை அம்மாவின் கழுத்தில் கட்ட வேண்டும். பல்செட்டை எடுத்து சுத்தமான நீரில் கழுவி வாயில் திரும்பவும் பொருத்திவிட வேண்டும். அம்மாவின் இடது கையை ஹேண்ட் வாஷ் பயன்படுத்திக் கழுவிவிட வேண்டும். அம்மா இடது கைப்பழக்கம் உள்ளவர். அவர் தன் கையாலேயே உணவு எடுத்து சாப்பிட முடியுமென்றால் அதற்கு அனுமதிக்கலாம். இல்லையென்றால் நர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம். மென்று விழுங்கிவிட்டார்கள் என்பதைத் தெரிந்த கொண்ட பிறகுதான் அடுத்த ஸ்பூன் ஊட்ட வேண்டும். முக்கியமான உணவு வகைகள்: ஓட்ஸ் கஞ்சி… நன்றாக வேகவைத்துக் குழைத்தது. நன்றாக பழுத்தப் பப்பாளிப் பழத்தின் நான்கில் ஒரு பகுதி சிறு துண்டுகளாக்கியது. மூன்று ஆரஞ்சுகளின் பிழிந்தெடுக்கப்பட்ட சாறில், மலம் இளகுவதற்கான இஸபகோல் பொடி ஒரு ஸ்பூன் மட்டும் போட்டுக் கலந்தது. ஓட்ஸ் கஞ்சியில் கொஞ்சம் வெண்ணெயும், மேப்பிள் சிரப்பும், கொஞ்சம் கல் உப்பு கலந்த தண்ணீரும் சேர்க்கலாம். இவற்றை அம்மு அம்மாள் சரியாகத் தயாரிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மா சுயமாமாகவே உணவு உட்கொள்வதானால் அந்த நேரத்தில் நர்ஸ் பைபிளிலிருந்து இப்போது வாசிக்கலாம் என்று தோன்றும் ஏதாவது ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். உணவை ஊட்டி விடுவதானால் நர்ஸ் புன்னகையுடன் அம்மாவிடம் பள்ளி, கல்லூரி கால மகிழ்ச்சியான அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அம்மா புன்முறுவல் பூக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூப்பதாக தெரிந்தால் அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே வாஞ்சையுடன் கன்னத்தில் தடவிக் கொடுக்க வேண்டும்.

10.15: அம்மாவின் உதடுகளையும் தாடையையும் துடைத்துச் சுத்தமாக்கி மேல்துண்டை எடுத்துவிட்டு, இடது கையைக் கழுவித் துடைத்துச் சக்கர நாற்காலியைக் கட்டிலுக்கருகில் தள்ளிச் செல்ல வேண்டும். அதற்குள் சோசாம்மா கட்டிலைத் தாழ்த்தி படுக்கையிலும், தலையணைகளிலும் சலவை செய்த பெட்ஷீட்டும், உறைகளும் போட்டிருப்பார்கள். போர்வைக்கடியிலுள்ள ரப்பர் ஷீட்டில் எறும்புகளோ, துர்நாற்றமோ இல்லையென்று நர்ஸ் சுயமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மாவைச் சக்கர நாற்காலியிலிருந்து கட்டிலுக்கு மாற்றிப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்திவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே மேலும் ஒருமுறை புன்முறுவல் பூப்பதும், கன்னத்தில் தடவுவதும் அவசியம்.

10.20: அம்மாவின் துணிகளும் போர்வைகளும் மற்றவையும் சோசாம்மா வாஷிங் மெஷினில் போட்டு மெஷின் ஸ்டார்ட் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

11.10: வாஷிங் மெஷினிலுள்ள துணிகளை வெளியே எடுத்துக் கொடியில் காயப்போட வேண்டும் – இதைச் சோசாம்மா செய்வார்கள்.

12.30: அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அதில் உட்கார்ந்திருக்கும்போது செய்ய வேண்டியவற்றை முன்பே சொல்லியிருக்கிறேன்.

12.40: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்றி நாற்காலியைப் பால்கனிக்குக் கொண்டு போகவேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டு முகத்தில் பொருத்த வேண்டும். பால்கனியிலிருந்து பார்க்கும்போது தெரியும் நகர பாகங்களைப் பற்றி இந்த நேரத்தில் அம்மாவோடு பேசலாம். அங்கேயிருந்து பார்த்தால் மலயாட்டூர் தேவாலயம் பார்க்கலாம் என்று எப்போதாவது சொல்லலாம். மலயாட்டூர் மலை ஏற வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. இந்நேரத்தில் கல்உப்பு கலக்கிய ஒரு ஸ்பூன் தண்ணீரை மாதுளம்பழச் சாற்றில் கலந்து, அதை அம்மாவுக்கு ஊட்டி விடலாம்.

13.30: அம்மாவை மத்தியான உறக்கத்துக்காகக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். மத்தியானத் தூக்கம் என்று அம்மாவின் காதில் சொல்ல வேண்டும்.

15.00: அம்மு அம்மாள் அம்மாவின் இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரவு உணவின் வகைகள்: குழையக் குழைய வேகவைத்த கோதுமைக் கஞ்சி, சிறிது பால் சக்கரை சேர்த்தது; தெளிவான கோழியிறைச்சி சூப்; ஒரு சிறு பழம் (முடியுமானால் பூவன் பழம் மட்டும்) மெல்லிய வட்டங்களாக அரிந்து அதில் கல்லுப்பு கரைத்துத் தண்ணீர் தெளித்தது.

16.00: அம்மாவைத் தூக்கத்தினின்று எழுப்ப வேண்டும். இந்நேரத்தில் காலையில் எழுப்பும்போது செய்ய வேண்டியது எனக் குறிப்பிட்ட காரியங்களை மீண்டும் செய்ய வேண்டும். மீண்டும் கம்மோடில், பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி மேஜைக்கருகில்.

16.20: மேல்துண்டைக் கட்டவும். இடது கையைக் கழுவவும். பல்செட்டைக் கழுவி வாயில் பொருத்த வேண்டும். இரவு உணவு அளிக்க வேண்டும்.

16.50: உணவு உண்ட அம்மாவைச் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்குச் சௌகரியமுள்ள மேற்குப் பக்க பால்கனிக்குத் தள்ளிச் செல்லவும், சக்கர நாற்காலியின் சக்கரங்களைப் பூட்டிவிட்டு அம்மா முன்பக்கமாகச் சாய்ந்து விடாமலிருப்பதற்கான கம்பியை அதனிடத்தில் பொருத்திவிட்டு அவர்களைத் தனிமையில் விடவும் வேண்டும்.

18.15: காய்ந்த துணிகளைச் சோசாம்மா மடித்து வைத்தாயிற்று என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அம்மாவை மீண்டும் உட்கார வைக்க வேண்டும். திரும்பவும் சக்கர நாற்காலிக்கு.

18.30: அம்மாவின் சக்கர நாற்காலி டிஜிட்டல் ஹோம் தியேட்டர் ஸ்கிரீனுக்கு முன்னர் இருக்க வேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டுப் பொருத்தவும். ஹியரிங் எய்டைக் காதில் பொருத்தவும். இதன் பிறகு அம்மாவுக்காகக் படம் போடலாம். அது நர்ஸும் பார்க்க விருப்பமுள்ள படமாகலாம்.

19.30: படத்தை நிறுத்த வேண்டும். ஹியரிங் எய்டையும் மூக்குக் கண்ணாடியையும் மாற்றி விடவும். அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அந்நேரத்தில் அம்மாவோடு பேச வேண்டும். வெறுப்பு உண்டாக்காத விதத்திலும் ஆவலைத் தூண்டும்படியாகவும் விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மறுநாள் பார்க்கப்போகும் திரைப்படத்தை பற்றிப் பேசலாம். இல்லையென்றால் மக்கள் பயன்படுத்தும்படி கடைத்தெருவில் புதிதாக, விற்பனைக்கு வந்துள்ள ஏதேனும் பொருட்களைப் பற்றிப் பேசலாம். (குறிப்பு: நிறுத்தி வைத்திருக்கும் திரைப்படத்தின் மீதி பாகத்தை அம்மா படுத்தபிறகு நர்ஸ் சன்னமான ஒலியில் பார்க்கலாம்).

19.40: அம்மாவின் சக்கர நாற்காலி கட்டிலுக்கருகில் அம்மா பிரார்த்தனை செய்யும்போது, நர்ஸும் பிரார்த்திக்க வேண்டும். இந்த நேரத்தில் நர்ஸ், மண்டியிடுவதோ, அம்மாவின் அருகில் நாற்காலியில் அமர்வதோ எனத் தன் விருப்பம்போல் செய்து கொள்ளலாம். நாங்கள் சிரியன் ரோமன் கத்தோலிக்கர் என்பதால் ஐம்பத்து மூன்று மணி ஜபம்தான், இரவு பிரார்த்தனைக்கு. நர்ஸும் இதே பிரிவைச் சார்ந்தவரெனில் பிரார்த்தனையைத் தாங்களே உரக்கச் சொல்லலாம். இல்லையென்றால் சோசாம்மாவும், தங்கம்மாவும் பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட பிரார்த்தனை முறையைவிடப் பழைய பிரார்த்தனை முறைதான் அம்மாவின் விருப்பம். பிரார்த்தனை முடிந்ததும் அம்மாவின் மேஜையில் இருக்கும் சின்னச் சிலுவை உருவத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவின் உதடுகளில் ஒற்றிவிட்டுத் திரும்பக் கொண்டுபோய் வைக்க வேண்டும்.

20.15: அம்மா படுப்பதற்கான ஏற்பாடுகள்: கடைசியாக ஒருமுறை கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். பல்செட்டை நீக்க வேண்டும். கிளீனிங் லிக்விட் உள்ள பாத்திரத்தில் அவற்றைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு ஹேர்பலாக்ஸ் மாத்திரையின் பாதியை ஒரு டம்ளர் தண்ணீருடன் அம்மாவுக்குக் கொடுக்கவும். படுக்கையையும் ரப்பர் ஷீட்டையும் மறுபடியும் பரிசோதிக்கவும். சுருக்கங்களை நீக்கவும்.

20.30: அம்மாவைப் படுக்கையில் படுக்க வைத்துப் போர்வையால் மூடிவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே புன்முறுவல் செய்ய வேண்டும். “குட்நைட். ஸ்வீட் டிரீம்ஸ்” என்று சொல்ல வேண்டும். அம்மா புன்முறுவல் கொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூத்தாலும் இல்லையென்றாலும் அம்மாவின் நெற்றியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் ‘என் பிரியமான அம்மச்சீ’ என்று சொல்லிக்கொண்டே எங்கள் ஆறு பேருக்காகவும் ஒவ்வொரு இனிமையான முத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவும் செய்தால் நர்சின் அன்றைய நாளின் வேலை முடிவடைகிறது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதானால் நேர்காணலுக்கு வருவதற்குச் சௌகரியமான ஒரு தேதியைக் குறிப்பிட்டு உடனே பதில் அனுப்புங்கள்.

நன்றியுடன்

பிரியமான

கோராபிலிப் ஜான்.

– பால் சக்காரியா (தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ)

***

கே.வி.ஜெயஸ்ரீ

மொழிபெயர்ப்பில் தீராத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர். மூல மொழியின் அனைத்துத் தரவுகளோடு முழுமையாக, அதே நேரத்தில் வாசிப்பு சலித்துவிடாதபடியும் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்ற முனைப்புள்ளவர். எழுத்தாளர் பால் சக்காரியாவின் ‘இதுதான் என் பெயர்’, ‘இரண்டாம் குடியேற்றம்’, ‘அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’, ‘யேசு கதைகள்’, ‘பால் சக்காரியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ (சாகித்ய அகாடமி வெளியீடு) ஆகிய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த மலையாள கவிஞர் ஷ்யாமளா சசிகுமாரின் ‘நிசப்தம்’ தொகுதிக்கு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்திருக்கிறது. மேலும், அந்த நூல் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பில் பாட நூலாகவும் உள்ளது. இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான ஏ.அய்யப்பனின் ‘வார்த்தைகள் கிடைக்காத தீவில்’ கவிதைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்திருக்கிறது. இவர் மொழிபெயர்ப்பில் சந்தோஷ் ஏச்சிகானத்தின் சிறுகதைகள் ‘ஒற்றைக்கதவு’ என்ற மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி, நல்லி திசையெட்டும் விருதைப் பெற்றிருக்கிறது. ஷௌக்கத் எழுதிய பயணக்கட்டுரை தொகுப்பை ‘இமாலயம்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு சிறந்த பெண் எழுத்தாளருக்கான ‘அங்கம்மாள் முத்துசாமி நினைவு இலக்கிய விருது’ கிடைத்திருக்கிறது. தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *