(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(இந்த கதையின் முதலில் வரும் சில பக்கங்கள் உங்களிடம் இருந்தால், தயவு செய்து எங்களது முகவரிக்கு அனுப்பவும்)
பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தயங்கித் தயங்கிப் பயந்தபடி அந்தப் பையன் வாசல் திண்ணையின் தூணைக் கட்டிக் கொண்டு உள்ளே வர மறுத்தான்.
“ஏண்டாலே! அடச் சீ…உள்ளே வாடா” என்று இரைந் தார் வாசு. செல்லம் முகத்தையே கேள்விக்குறி போல் தூக்கி வளைத்துப் பார்த்து, யார் இது?'” என்று கேட்டு வைத்தாள்.
“இதுவா? தரித்திர நாராயணன் பெற்ற செல்வம் டீ, நம்ப பையன் இனிமே. நீதான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நின்னுட்டே… நம்ப பையனுக்கு ஒரு துணை வாண்டாமா?”
விளக்கடியில் படித்துக் கொண்டிருந்த தியாகு எழுந்து வந்தான். அவனுக்கு அம்மாவிடம் பயம். அப்பாவிடம் சலுகை யும், வாஞ்சையும் அதிகம்.
“ஓ! இவனா! நம்ப அமாசியின் மகன். இவனுக்கு அப்பன் இல்லையே அப்பா, போன வருஷம் வெள்ளத்துலே காவேரி யோடே போயிட்டானாம்…”
“ஆமாம்டா, இப்ப, அம்மாவும் இல்லே. அவளும் செத்துப் போயிட்டாளாம். நான் அழைச்சிண்டு வந்துட்டேன். உன்னோடே வளரட்டும்னு…”
இப்போது தியாகு தயக்கத்துடன் அம்மாவைப் பார்த்தான். திரும்பி இரட்டைச்சாரியிலும் வீடு கள் நிறம்பிய அக்ர காரத்தையும் பார்த்தான். லாந்தர் கம்பத்தில் விளக்கு எரிந் தாலும் அது தன் அடியில் மட்டும் வெளிச்சத்தைப் பரவவிட்டுச் சுற்றுப் புறத்தை இருளிலே மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அந்த இருளில் ஒவ்வொரு திண்ணையிலும் யாரோ படுத்திருந்தார் கள். யாரோ என்ன? எதிர் வீட்டில் ஜகன்னாதாச்சாரி பன்னிரண்டு திருமண் பளபளக்கச் சுவரில் சாய்ந்தபடி சிக்குப் பலகையில் இருந்த புத்தகத்திலிருந்து பாசுரம் படித்துக் கொண்டிருந்தார். அகல் விளக்கு குளுமையாக முத்துப் போல் எரிந்து கொண்டிருந்தது.
அதற்கும் அடுத்தாற்போல் வைதீஸ்வரன் வீடு, ரொம் பவும் பழைமையில் ஊறியவர். அவர் மனைவி நெருப்பை அலம்வதாக எல்லோரும் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு ஆசாரம். இரண்டு பேரும் கோயிலுக்குப் போய்விட்டு வந்து பலகாரம் பண்ணிவிட்டு வாசல் திண்ணைக்கு வந்து விட்டார்கள்.
“அடியே அம்மாளு! வாசு ஊர்லேதானே இருக்கான்?” என்று அவர் தம் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார்;
“ஆமாம்… ஊர்லே இருந்தாலும் ஒண்ணுதான். இல்லாட் டாலும் ஒண்ணுதான்.”
“ஏண்டி அப்படிச் சொல்றே?”
“பின்னே என்னவாம்? கிழக்கு வெளுக்கறத்துக்கு முன்னாடி எழுந்திருந்து சேரிப் பக்கம் போனா…எப்பத் திரும்பி வரானோ அப்பத்தான் அவனைப் பாக்க முடியும். காந்தி சொல்றாராம் அவாதான் ஹரியோடே குழந்தைகள்னு, அந்தக் குழந்தைகளை இவன் புனருத்தாரணம் பண்றானாம்
‘‘கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கப் பாக்கறான். இல்லையா?” இருவரும் சேர்ந்தே சத்தம் போட்டுச் சிரிக்கிறார்கள். வாசுவின் செவிகளில் இச்சொற்கள் விழுந்தாலும் அவர் அதற்கு ஓர் உருவம், மதிப்பு ஏதும் கொடுக்கவில்லை. செல்லம் அப்படியில்லை. அவள் அந்த ஊரோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டும். அவள் பேச்சுப்படி இவர் ஜம்முனு வருஷத்திலே பத்துமாசம் ஜெயிலுக்குப் போயிடறார். இந்தப் பொல்லாப்பு புடிச்ச ஊர்லே நானாக்கும் குப்பை கொட்டணும்?
வைதீஸ்வரன் தம்பதியின் பேச்சைக் கேட்டவள் திரும்பி வாசல் தூணைக் கட்டிக் கொண்டு நிற்கும் அமாசியின் பையனைப் பார்த்துக் கொண்டே கல்லாக நின்றாள்.
”உள்ளே அழைச்சிண்டு போடா தியாகு. இனிமே அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தர வேண்டியது உன் பொறுப்பு…”
“அது சரி அப்பா…உங்க கொள்கை எனக்குப் புரியறது. இவன் தினம் தினம் நைட் ஸ்கூலுக்கு வேணாவரட்டும். பாடம் சொல்லித் தருவோம்… இங்கே ஆத்துலே வச்சுண்டா ஊரிலே நாலு பேர்… வாசு மகனையே உற்றுப் பார்த்தார். தன் கொள்கைகளை மனப்பூர்வமாக மனத்துக்குள் ஆதரிக்கும் மகனும், மனைவியும் இந்த நாலு பேருக்காகப் பயப்படுகிறார்கள்.
‘இங்கே வா செல்லம்! இப்ப நாலு பேரோடு சமாளிக்க முடியாத பிரச்னையை நாளைக்கு நாலாயிரம் பேரோடே சமாளிக்கணும். அப்புறமா நாலு லட்சம், நாலு கோடின்னு ஆகும். பிற்பாடு நாற்பது கோடியோடே சமாளிச்சே ஆகணும். ஒரு நல்லது நடக்கணும்னா பலரோடே மோதிண்டுதான் ஆகணும் செல்லம், மோதிண்டுதான் ஆகணும்… இதெல்லாம் உனக்குப் புரியறது. ஆனா நாலு பேருக்காகப் பயப்படறே…”
இவர்களுடைய தர்க்கமெல்லாம் அமாசியின் மகன் குமரனுக்குப் புரியவில்லை. ‘நாம் எப்படியோ போறோம்…இந்த ஐயர் எதுக்கு நம்மை இவர் வூட்டுக்கு இட்டாறணும்?’ என்று வியந்தபடி நின்றிருந்தான்.
“உள்ளே வாடா” என்று கர்ஜிப்பது போல் அழைத் தார் வாசு அவனை.
குமரன் தயங்கியபடி உள்ளே வந்தான். இடைக்கழியில் மறுபடியும் சுவருடன் ஒட்டியவாறு நின்றான். சுவரைக் கை களால் தடவித் தடவிப் பார்த்தான். கல்லும், முள்ளும், குண்டும், குழியும் சாக்கடை ஓரமுமாக அந்த ஹரிஜனச் சிறுவன் பிறந்தது முதல் இன்று வரை தன் நாட்களை ஓட்டியவன். ‘ஓ ! இந்தச் செவரு எம்மாம் நைஸாக்கீது…’ என்று திரும்பத் திரும்ப வியந்தான் அவன்.
செல்லம் ஓர் ஈயப்பாத்திரம் நிறைய சாதம் பிசைந்து எடுத்து வந்தாள். தாமரை இலையைப் போட்டுத் தயிர் சாதத்தை எடுத்து அதில் வைத்துத் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் வைத்தாள். அவள் பார்வை தெருவை அளந்தது. ஜகன்னா தாச்சாரி பாசுரம் படித்து முடித்துச் சிக்குப் பலகையை மடக்கியபடி எழுந்தார். அட ராமா! அவர் பார்த்துத் தொலைக்கப் போறார்’ என்று முணு முணுத்தபடி செல்லம் கதவை ஒருக்களித்தாள்.
வாசுவுக்குச் சிரிப்பு வந்தது.
“அடியே! இப்ப கதவைச் சாத்தறே, நாளைக்கும் சாத்து வியா? அப்புறமா மறுநாளைக்கும் சாத்துவியா? காலம் பூராக் கதவைச் சாத்திண்டு புழுங்க முடியுமா? இந்தப் புழுக்கத்தைச் சமாளிச்சுடலாம்டி, ஆனா… மனசிலே புழுக்கம் இருக்கப்படாது.”
செல்லம் அவரைவிட ஒருபடி வேதாந்தம் அதிகமாகக் கற்றவள். சட்டென்று பட்டுக்கத்தரிப்பதுபோல் கதவை அகலத் திறந்து வைத்தாள். தெரு விளக்கின் வெளிச்சம் வாசல் குறட்டைத் தாண்டியபடி மிக லேசாகத்தான் ரேழிக்கு வந்தது.
வாசுவைப் பற்றித்தான் ஊராருக்கு ஒரு மாதிரியான எண்ணம் ஆயிற்றே… ஜகன்னாதாச்சாரி தம் பார்வையை இந்தப் பக்கம் ஓட்டினார். கறுப்பாக கன்னங்கறேலென்று ஓர் பையன் சம்பிரமமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் நெஞ்சம் பட படவென்று அடித்துக் கொள்ள நாலெட்டில் வைதீஸ்வரன் வீட்டுப் படியேறிச் சுருக்கமாக ஏதோ கூறி அவரை யும் தம் வீட்டுத் திண்ணைக்கு அழைத்து வந்து இக்காட்சியைச் சுட்டிக் காட்டினார். வைதீஸ்வரனின் மனைவி அம்மாளு ஒருபடி மேலாகவே நடந்து கொண்டாள்.
“அடியே செல்லம்!” என்று அவள் அழைத்த போது செல்லத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. உடம்பு வியர்த்து விட்டது. ‘இவள் இந்த வேளையில் எதுக்குக் கூப்படறா?’ என்று நினைத்தபடி, “வாங்கோ மாமி” என்று பதில் குரல் கொடுத்தாள் செல்லம்.
”உள்ளே வரதுக்கில்லே, ரெண்டு வெத்திலை இருந்தாக் கொடேன்-.”
“உள்ளே வாங்கோ… வெறும் வெத்திலையா தரப்படாது. சீவல், மஞ்சளோடே, குங்குமத்தோடே தரேன் வாங்கோ…”
“ஊஹீம்… இந்த அகாலத்துலே யார் தீட்டுப் பட்டுண்டு குளிக்கறது?”
செல்லம் வெளியே வெற்றிலைத் தட்டுடன் வந்தபோது அம்மாளு எதிர்வீட்டு வாசலில் நின்றிருந்தாள். வாசு மனைவி யின் பின்னால் வந்து நின்று, ”ஏய் பைத்தியம் ! இங்கே நீ யாருக்குச் சாதம் போடறேன்னு பாக்க வந்திருக்கா. அவ வெத் திலை கேட்டது நெசம்னு நினைச்சுண்டு நீ தட்டைத் தூக்கிண்டு ஓடறே” என்று கடிந்து கொண்டார்.
செல்லம் தன் நெஞ்சில் யாரோ பளுவான கல் ஒன்றை ஏற்றி வைப்பது போன்ற சுமையுடன் பாதி தெளிவுடனும், பாதி கலக்கத்துடனும் குமரன் என்கிற பாரத்தைக் கணவனுக் காகச் சுமக்க இசைந்தாள்.
அடுத்த நாளே சேரிப்பையன் ஒருவன் வாசுவின் வீட்டில் வளர்வது குறித்து அந்த ஊரே அமளிப்பட்டது. அசுத்தத் தைப் பார்ப்பவர் போல் செல்லத்தை அவ்வூர்ப் பெண்கள் முகம் சுளித்தே பார்த்தார்கள். படித்துறையில் அவள் குளித்துவிட்டுக் கரையேறும்வரை பொறுத்திருந்துவிட்டு மற்றப் பெண்கள் அந்தப் படித்துறையையே மறுபடியும் கழுவி விட்டுத் தண்ணீரில் இறங்கிக் குளிப்பார்கள். இதை ஒருதரம் அவள் தன் கணவ ரிடம் கண்ணீர் பெருக வர்ணித்தபோது அவர் மறுபடியும் முதலில் அவளுக்குச் செய்த உபதேசத்தையே மீண்டும் கூறினார்.
‘ஒரு கொள்கை நனவாக வேண்டுமானால் பலருடன் மோதிக் கொண்டுதான் ஆகவேண்டும்.’
தியாகு அவ்வூரில் படிப்பை முடித்துவிட்டுச் சென்னைக்கு மேல்ப்படிப்புக்காகச் சென்றுவிட்டான். குமரனும் வளர்ந்து விட்டான். ஐயாவுக்கும், அம்மாவுக்கும் தன்னால் பெரிய சங்க டம் என்று நினைத்து அவன் வாசுவிடம் தன் கருத்தை ஒரு தினம் பணிவுடன் தெரிவித்த போது அவர் கூறிய செய்தி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. ‘நீ ஊருக்கு வெளியே ‘நைட் ஸ்கூல்’லேயே தங்கிடறேன்னு சொல்றேப்பா… நானே அங்கே வந்துவிடலாம்னு பார்க்கிறேன். இந்த வீட்டைக் காலி பண் ணிட்டு அம்மாவைத் தியாகுகிட்டே அனுப்பிடறேன். அங்கே போய் அவனுக்கு வீட்டுச் சமையலா அவளும் சமைச்சுப் போடட்டும். அவளும் இந்த ஊரிலே தாங்கமுடியாத கஷ்டத் தைச் சுமந்து சுமந்து உருமாறிப் போயிருக்கா. ஓரளவுக்கு உன்னையும், எங்களையும் ஒண்ணாவே இந்த ஊர்க்காரா நடத்த ஆரம்பிச்சுட்டா. பட்டணத்திலே இவ்வளவு மோசமில்லே. மனசுக்குள்ளே குமைஞ்சுண்டாவது வெளியிலே வேஷம் போடுவா. தாங்க ரொம்ப முன்னேறிட்டதாக அவாளுக்கு ஒரு பிரமை. உண்மை நிலையை ஜீரணிக்கிறது ரொம்பக் கஷ்டம். பிரமை நிலையை எப்படியாவது சமாளிச்சுடலாம்.”
செல்லத்துக்கு ரயில் புறப்படுகிறவரைக்கும் என்னவோ போல் இருந்தது. வயல்காடு, தோப்பு, ஆற்றங்கரை, கோயில் எல்லாம் அவளுடைய அங்கங்களைப்போல அவளிடமிருந்து பிரிக்க முடியாதவை. ரயில் மெதுவாக நகரும்போது முதலில் தென்னந்தோப்பும், வயல்வெளிகளும் பின்தங்கின. அப்புறம் ஆறு. அவள் இறங்கிக் குளித்த-ஊராரால் அசுத்தம் என்று மதிக்கப்பட்ட-படித்துறை மெல்லப் பின் தங்கியது. கோயில் கோபுரம் மட்டும் அவளுடன் ஓடி வருவது போல் இருந்தது. ஸ்டேஷனுக்கு வந்திருந்த குமரன் கூடை நிறைய வெள்ளரிப் பிஞ்சுகளைக் கொடுத்து, “அம்மா ! தியாகுதான் என்னை மறந் திடிச்சி. நான் அதை மறக்கலைன்னு சொல்லுங்க. கிராமத் துக்கு வரச்சொல்லுங்க” என்றான்.
“ஊருக்குப் போயிட்டு வா, செல்லம். நீ என்னுடைய கொள்கைளுக்குப் பணிஞ்சு, உனக்கென்று ஓர் எண்ணமும் இல்லாம ரொம்பத் தியாகம் பண்ணிட்டே. உன் பிள்ளை முன்னைப் போல இல்லே. மாறிண்டு வரான்னு தெரியறது. அந்த மாறு தல் உனக்கும் அவசியம்னு எனக்குத் தோண்றது…”
“அப்படியெல்லாம் நான் நெனச்சதேயில்லை—” என்று கரகரத்த குரலில் பதில் சொன்னாள் செல்லம். அவரை விட்டுப் பிரிவது அவளுக்கும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஊர்க்காரர்களிடமிருந்து கொஞ்ச நாளைக்காவது பிரிஞ்சு வெளியே போகணும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டாள் அவள்.
அவளுடன் ஓடி வந்த கோபுரமும் பின் தங்கி விட்டது. ஒரு கரும் புள்ளியாய் மறைந்தும் போயிற்று. செல்லம் சென்னையை வந்தடைந்தாள்.
2
எழும்பூர் ரயில் நிலையத்தில் தியாகுவைப் பார்த்தவுடன் திகைத்துப் போனாள் செல்லம். முரட்டுக் கதர் ஆடையைக் காணோம். கள்ளமற்ற முகத்தில் ஓர் இறுக்கமும், ஆணவமும் சேர்ந்து காணப்பட்டது.
”வா அம்மா…அப்பாவையும் அழைச்சிண்டு வந்துடறது தானே? அவர் மட்டும் கிராமத்துலே என்ன பண்ணப் போறார்?” என்றபடி வரவேற்றான் தியாகு.
“அவரா வரப்பட்ட ஆசாமி? அவர் நைட் ஸ்கூலை விட்டுட்டு வருவாரா என்ன? தியாகு, நீ மாறிப் போயிட் டேடா, அப்பா கூட சொல்றார் ; உன் பிள்ளை மாறிண்டு வரானாம். உனக்கும் அந்த மாறுதல் தேவை. போய் அவன் கிட்டே இருன்னு … நெசம்மா நீ மாறித்தான் போயிருக்கே.”
தியாகு அமுத்தலாகச் சிரித்தான். டாக்ஸியில் பெட்டி, படுக்கையை எடுத்து வைத்தபோது வெள்ளரிப் பிஞ்சுகள் நிறைந்த கூடையைப் பார்த்தான் தியாகு. ஐந்தாறு வருஷங் களுக்கு முன்பாக இருந்தால் வெள்ளரிப் பிஞ்சுகளைக் கூடையி லிருந்து அள்ளிக்கொண்டு உப்பைப் பொடி செய்து தோய்த்துத் தின்று கொண்டேயிருப்பான். இப்போது அவனுக்கு இந்த வெள்ளரிப் பிஞ்சுகள் லட்சியமில்லை.
“உனக்குப் பிடிக்குமேன்னு குமரன் கொடுத்தான்” என்று செல்லம் அவனுக்கு லேசாக அவனைப் பற்றி நினைவூட்டினாள்.
“குமரனா ? ஓ! அவன் எப்படியிருக்கான்? படிப்பெல்லாம் முடிஞ்சு போச்சா?”
“மேலே இங்கே வந்து படிக்கச் சொல்லி உன் அப்பா சொன்னார். அவன்தான் கேக்கலை. இவ்வளவு படிச்சதே பெரிசய்யா…’ என்று சொல்லிவிட்டான். அதுலே உன் அப்பா வுக்கு ரொம்ப வருத்தம்-”
தியாகு எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை: அவன் சிந்தனை பூராவும் எதிலோ லயித்திருந்தது. செல்லம் இளைத்துப் போயிருப்பதை அவன் கவனிக்கவில்லை. அதைப்பற்றி ஒரு வார்த்தையாவது விசாரிப்பான் என்று அவள் எதிர்பார்த்தாள்.
டாக்ஸி மயிலாப்பூரை அடைந்து பெரிய பங்களாவுக்குள் சுற்றுச் சுற்றி ‘அவுட்ஹவுஸ்’ பக்கம் போய் நுழைந்து ஒரு நின்றது.
வாசலில் அழகும்,களையும் நிறம்பிய பெண் ஒருத்தி தன் நாய்க்குட்டியைக் கையில் பிடித்தபடி புன்முறுவலுடன் நின்றி ருந்தாள்.
“ஹலோ! வஸந்தி! இதுதான் என் அம்மா…” அவள் மணியோசை போல நகைத்தாள். செல்லத்தைத் தலையிலிருந்து கால் வரை அவள் பார்த்த பார்வை வேறு விளக்கம் கொடுப்பது போல் இருந்தது. இடையில் கட்டியிருந்த முரட்டுக் கதர் புடவை, ஆடம்பர மற்ற நகைகள், ஒரு லட்சிய வாதியைக் கணவனாகக் கொண்டு அவனுடன் வாழ்க்கை பூராவும் நிறை வுடன் வாழ்ந்துவரும் கம்பீரமும், புறத்தோற்றத்தில் மனத் தைப் பறிகொடுத்து அதில் லயித்துவிடாமல் ஒதுங்கி நின்றே கவனிக்கும் ஆற்றலையும் படைத்தவள் அவள் என்று வஸந்தி புரிந்து கொள்ளவில்லை. சுருக்கமாகச் செல்லம் ஓர் ஏழை என்று நினைத்துக் கொண்டாள்.
செல்லத்துக்குத் தன் மகனைப் பற்றி உடனே புரிந்து விட்டது. தியாகுவின் கவனம் வேறு திசையில் சென்று விட்டது. அவன் இனி வாழப்போகும் உலகமும், அதற்கான பாதையும் வேறு என்பதை அவள் தெரிந்துகொண்டாள். தேச மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதோ, அதற்காக ஆயிர மாயிரமாக மக்கள் தியாகம் புரிவதோ அவன் கவனத்திலிருந்து மறைந்துவிட்டது. அவன் பகட்டும், படாடோபமும் நிறைந்த உலகத்துக்குள் நுழைய விரும்புகிறான்.
அன்றிரவு சாப்பிடும்போது வெகு நேரம் மௌனமாகவே இருந்தாள். “அம்மாவே ஏதாவது வஸந்தியைப் பற்றிக் கேட் பாள் என்று நினைத்தான். செல்லத்தின் கவனமெல்லாம் வாசுவின் பேரில் இருந்தது. வாழ்க்கை பூராவும் சுகத்தைக் காணாமல் சுதந்திரப் போர் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, காந்தியடிகளின் வேண்டுகோளின்படி ஹரிஜனச் சிறுவனை எடுத்து வளர்த்துத் தன் மகனைப் போல ஆளாக்கி, அதனால் ஊராரால் ஒதுக்கப்பட்டு ஊரின் புறத்தே வாழ்ந்து கொண் டிருக்கும் அவரை நினைத்ததும் அவள் கண்கள் பனித்தன. தியாகு அவரைப்போல் லட்சியங்களையும், கொள்கைகளையும் கடைப்பிடிக்காவிடினும் தகப்பனின் மனம் குளிர அதைப் பற்றிப் பேசுவதையும் விட்டுவிட்டான் போல் இருந்தது. மகனின் நீண்ட மெளனம் அவளைப் பொறுமை இழக்கச் செய்தது. இலையில் பரிமாறிவிட்டு அவள் எதிரில் உட்கார்ந்து, “அப்பா ரொம்ப இளைச்சுப் போயிட்டாரடா, நீ சீக்கிரம் படிப்பை முடிச்சுண்டு ஒரு உத்தியோகம் தேடிண்டா கொஞ்ச காலமாவது அவர் நிம்மதியா இருக்கமுடியும் என்று பேச்சை ஆரம்பித்தாள்.
தியாகு அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.
“அவரை யார் நல்ல நிலைமைக்குப் போகவிடாமல் தடுத்தது? எம்.ஏ.பி.எல். பாஸ் பண்ணிட்டுச் சத்தியாக்ரகமும், ஹரிஜன சேவையும் பண்ணிண்டிருந்தா வாழ்க்கையிலே சுகத்தை எப்படியம்மா காணமுடியும்? இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் இங்கே பெரிய அட்வகேட். அவர் பொண்தான் நீ பார்த்தியே, வஸந்தி. இவர்களுக்கு மட்டும் தேசபக்தியில்லையாம்மா? மனசுக் குள்ளே இவர்களும் காந்தியடிகளின் கொள்கைகளை ஆதரிக்கிற வாதான். அப்பா மாதிரி பைத்தியமாயிடலே, பிழைக்கத் தெரிஞ்சவா…அந்தக் குமரனை வளத்தாச்சு. அவனை விட்டு தொலைச்சிட்டு இங்கே வந்துடறது தானே?” என்று படபடத் தான் தியாகு.
“அவர் வரமாட்டார். அவர் நடத்தற ‘நைட் ஸ்கூல் ‘லே இப்ப எத்தனை பேர் படிக்கிறா தெரியுமா? கிட்டதட்ட நூறு பேருக்கு மேலே இருக்கும்… நம்ப ஊர்ச் சேரிப் பக்கம் நீ வந்து பார்க்கலே, கிளி கொஞ்சறது. குமரனும், அவருமாச் சேர்ந்து எவ்வளவு பண்ணியிருக்கா. அந்த ஏழைகள் எப்படி மனசு குளிரக் குளிர அவரை வாழ்த்தறா தெரியுமா?”
“வாழ்த்திண்டே இருக்கட்டும். நீ இனிமே இந்தக் கதர்ப் புடவையைக் கட்டறதை விட்டுடு…”
“ஏண்டா?”
“இங்கே அட்வகேட் வீட்டிலே உன்னை மதிக்கமாட்டா…”
“இவா மதிப்பு யாருக்கு வேணும் இங்கே?’
“நான் வஸந்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் …”
“பேஷாப் பண்ணிக்கோ, சௌக்கியமா இரு…அதுக்காக என்னுடைய லட்சியத்தை நான் விடமுடியுமா என்ன?”
“வஸந்தியோட அப்பா அவர் பெண்ணையும் கொடுத்து அவர் கிட்டே என்னை ஜூனியராவும் வச்சுக்கறாராம்…”
செல்லம் மேலும் பேசவில்லை. தியாகு வெளியே சென்ற பிறகு அவள் சுருக்கமாக அவனைப்பற்றி வாசுவுக்குக் கடிதம் எழுதினாள். அவரும் சுருக்கமாகவே பதில் எழுதினார்:
“ஓடு முற்றினால் உறவு விட்டுப் போகும். நம் கடமையை நாம் செய்து முடித்துவிட்டோம். அவன் எங்காவது நன்றாக இருக்கட்டும். இங்கே குமரன் தியாகுவைவிடப் பன் மடங்கு என்னைக் கவனித்துக் கொள்கிறான்.”
தியாகுவின் படிப்பு முடிந்தது. உடனே திருமணத்துக்கு நாளும் குறித்தார்கள். எதற்கும் பிள்ளையைப் பெற்றவர் ஒரு தரமாவது நேரில் வரவேண்டும். இல்லை, நாமாவது அங்கு போகலாம் என்று தியாகுவிடம் கேட்டார் அட்வகேட். எல்லோருமாகக் கிராமத்துக்குச் சென்றார்கள். எளிமையே உரு வான அந்தக் குடிலின் முன்பு இறங்கியவுடன் தியாகு கூனிக் குறுகிப்போனான். உள்ளே நார்க்கட்டிலில் படுத்திருந்தார் வாசு. சுவர் ஓரத்தில் கைராட்டையும், சுவரில் காந்தியடிகளின் படமும் இருந்தன. மண் கூஜாவில் நீர், கொடியில் மறுநாள் உடுத்த நாலுமுழம் கதர் வேட்டி, துண்டு. ஓர் ஓரத்தில் கள்ளிப் பெட்டியை ‘ஷெல்ப்’பாக மாற்றி புத்தகங்களை அடுக்கி வைத் திருந்தார். கார்ல் மார்க்ஸ், டால்ஸ்டாயிலிருந்து அரவிந்தர், காந்திஜி வரை புத்தக உருவில் அங்கு கொலுவிருந்தார்கள். ஒரு மனிதனின் முக்கியமான தேவைகள் எதுவோ அவை மட்டும் அங்கிருந்தன.
“வா அப்பா, தியாகு…!” என்றபடி அவர் எழுந்து உட்கார்ந் ததும் மகனே அவர் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டான். ‘அப்பா ஏனிப்படிக் கறுத்துவிட்டார் ? ஏன் அவர் உதடுகள் தடித்துவிட்டன?
செல்லத்தின் நெஞ்சு உலர்ந்துவிட்டது. “நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே- உடம்பு சரியில்லைன்னு எழுதப்படாதோ?”
அவர் சிரித்தபடி அவள் பேச்சை ஒதுக்கிவிட்டார்.
“வாசலில் யாரோ காரில் வந்திருக்கிறார்கள் போல இருக்கே…” என்று மகனைப் பார்த்துக் கேட்டார். செலலம் எல்லாவற்றையும் கூறியதும், அவர், “அப்படியா? என்னை – குஷ்டம் பிடித்தவனை – அவர்கள் பார்த்தால் உனக்குப் பெண் தரமாட்டார்கள் தியாகு. நான் போர்த்திக்கொண்டு படுத்திருக் கிறேன். எனக்கு ஜுரமென்றே இருக்கட்டும். அவர்களை உள்ளே அழைத்துவா…” என்றதும், அட்வகேட்டை உள்ளே அழைத்து வந்தான் அவன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேச்சு நடந்தது. அவருக்குத் தியாகுதான் முக்கியமே தவிர தியாகுவின் தந்தை யல்ல.
“முடிந்தால் வருகிறேன். எப்படியும் அடுத்த மாசத்தி லாவது, ஆகஸ்டிலாவது மறுபடியும் சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமாகும். இச்சமயத்தில் காந்தியடிகள் மிகத் தீவிரமாக வெள்ளையர்களை எதிர்க்கப் போகிறார். அதுலே நான் எப்படியும் கலந்துப்பேன்: தியாகுவின் கல்யாணத்துக்கு என் மனப்பூர்வ மான ஆசிகள்.” என்று உறுதியுடன் பதில் அளித்தார் வாசு.
செல்லம் மீண்டும் சென்னைக்கு மகனின் திருமணத்துக்குப் போய் வந்தாள். அதன் பிறகு அவள் எந்த ஊரைத் தன் மனத்துக்கு இனியதாக நினைத்தாளோ அவ்வூரின் மண்ணுடன் கலந்து விட்டாள்.
தியாகு வந்தான். போனான்.
வாசு விரும்பியது போல் அவரால் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. செல்லத்தின் மறைவு அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. வாழ்க்கை பூராவும் அவள் விரும் பியோ விரும்பாமலோ அவருடைய எண்ணங்களை, நினைவுகளை அவள் செயல் படுத்தியவள். அக்ரகாரத்தில் ஹரிஜனச் சிறுவனை வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டு அன்னம் படைத்து வளர்த்தவள். அதனால், ஊராரால் அவளே தீண்டப்படாதவள் போல் ஒதுக்கி வைக்கப்பட்டவள். அவள் வயிற்றில் பிறந்தவனால் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தனக் கென்று ஒரு பாதையை வகுத்துகொண்டு போய்விட்டான்.
3
அன்று அடை மழை. கார்த்திகை மாதம். தேசம் எங்கும் ஆகஸ்ட் புரட்சிக்குப் பிறகு அமைதிகுலைந்து மக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுதலைபெறத் துடித்துக்கொண்டிருந்த காலம். காந்தியடிகள், மற்ற தலைவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுத் தியாக வேள்வியில் தத்தம் ஆத்மாக்களை நெய் யாகச் சொரிந்து பாரதமாதாவின் விலங்கை அறுத்தெறியும் தபசில் ஈடுபட்டிருந்தார்கள்.
கிராமத்தில் ஜகன்னாதாச்சாரி இல்லை. அவரும் பட்டணம் போய் விட்டார். தியாகு அதிர்ஷ்டத்தில் கொழிப்பதைக் கண்டார். அப்சரஸ் போன்ற மனைவி, அந்தஸ்து, செல்வம் அவனிடம் இருப்பதைக் கண்டார். சட்ட மறுப்பு செய்து சிறை செல்லும் சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக அவன் சர்க்கார் தரப் பில் தன் கடமையைச் செய்துக் கொண்டிருந்தான்.
வைதீஸ்வரன் பெரிதும் மாறிவிட்டிருந்தார்) அவருடைய வரட்டு ஆசாரங்கள் திடீரென்று மாறின. அம்மாளு மறைந்த பிறகு அவளுடன் அவருடைய வரட்டு வாதங்களும் மறைந்தன. தாமாகவே அவர் ஒரு நாள் வாசுவைத் தேடி வந்தார்.
“ஏம்ப்பா! உன் பிள்ளை நல்ல நிலைமையிலே இருக்கானே. நீ அங்கேயே போயிடப் படாதோ?”
“இங்கே இருக்கிறதிலே இருக்கிற சுகம் அங்கே வராது, வைத்தி!”
“இந்த ‘நைட் ஸ்கூலு’க்குப் பக்கத்துலே நான் ஒரு மருத் துவ விடுதி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்—”
“பேஷாச் செய்யேன் …”
இதுவரை குமரன் மௌனமாக வாசுவின் புண்களை மருந்தி னால் கழுவி ஒற்றித் துடைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டிருந் தான்.
“உன் பிள்ளை பண்ணுகிறது அநியாயம், வாசு!”
“இல்லை, வைத்தி! அவன் பண்றதுதான்- பண்ணியிருக்கி றது – நியாயமானது. அவனும் என்னைப் போல ஒரு தொண்டனா இருந்துட்டா எனக்கு என் வாழ்க்கையிலே பிடிப்போ ருசியோ ஏற்பட்டிருக்காது. எதிலுமே எதிர் மறையாக ஒன்று இருந்தால் தான் உண்மைக்குப் பலம் ஏற்படும்…”
வைத்தீஸ்வரனுக்கு அதிகமாக ஒன்றும் புரிந்து விடவில்லை
“குமரா! ஐயா கிட்டே இத்தனை வருஷமா இருக்கே; தேசம் பூராக் கொந்தளிச்சுண்டு இருக்கு. நீயும் சட்ட மறுப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போனா உனக்கு இன்னும் கௌரவம் ஜாஸ்தியாகும்…’
குமரன் முறுவலுடன் தலையாட்டினான். அவன் அவர் கூறி யதை மறுத்தான, ஏற்றுக் கொண்டானா என்பதும் அவருக்குப் புரியவில்லை.
கார்த்திகை மாதமாதலால் பகல் பொழுது மிகவும் சுருக்க மாக இருந்தது. எத்தனையோ ஆண்டுகளாக வாசு தனிமையில் தான் இருந்து வருகிறார். என்றுமே அவர் தம் மகனைப் பார்க்க ஆசைப் பட்டதில்லை.
பகல் உணவுக்காக வீடு செல்லும் குமரனை நோக்கி, “ஒண்ணு பண்ணேன். வழியிலே தபாலாபீசுக்குப் போய் தியாகுவை வரச் சொல்லி ஒரு தந்தி கொடு. எனக்கு அவனைப் பார்க்க ஆசையா இருக்குனு கொடு. தெரிஞ்சுதா?” என்றார்.
குமரன் அவ்விதமே செய்தான்.
அன்று மாலைப் பொழுதுக்குள் வானமெங்கும் கரிய மேகங் கள் திரண்டு கர்ஜனை புரிந்த வண்ணம் மழை தாரை தாரையா கப் பொழிய ஆரம்பித்தது. தொலைவில் நெடுஞ்சாலையில் அவ் வப்போது தெரியும் கார் விளக்குகளின் ஒளியைப் பார்த்தபடி வாசு படுத்திருந்தார். தியாகு வருகிறான். வராம இருப்பானா? என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளையாச்சே… ரத்த பாசமாச்சே!” என்று எண்ணினார்.
கொட்டும் மழையில் சொட்ட நனைந்தவாறு குமரன் குடிலுக் குள் நுழைந்து விளக்கை ஏற்றி விட்டுக் கட்டிலின் அருகில் சென்று, ‘ஐயா ! காப்பி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடறீங்களா?” என்று அழைத்தான். வாசு பதிலேதும் கூறவில்லை. அயர்ந்து தூங்குகிறார் என்று நினைத்து வாயிலில் சென்று திண்ணை யில் உட்கார்ந்து நெடுஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கோ செல்லும் கார் ஒளியைப் பார்த்து, “தியாகுவாத் தான் இருக்கும்” என்று முணுமுணுப்பான். வரவரக் குறைந்து அந்தக் கார் தொலைவில் சென்றுமறையும். ஆழ்ந்த பெருமூச்சு அவன் இதயத்திலிருந்து கிளம்பும்.
மறுபடியும் மேக முழக்கம், மின்வெட்டு, மழைத்தாரைகள். கிராமமே இருளில் அமிழ்ந்து விட்ட தோற்றம்.
அடுத்தநாள் பொழுது விடிந்தது. கதிரவனைக் காணவில்லை. பகல் என்கிற பெயரில் இரவின் சாயலே உலகைப் போர்த்திக் கொண்டிருந்தது. அதிகாலையிலே குமரனுக்குத் தெரிந்துவிட்டது ஐயா வாசு போய் விட்டாரென்று. உலகத்தில் அவனுக்கு உற்ற வராய், தந்தை போன்றவராய், நல் ஆசானாக இருந்தவர் போய்விட்டார். அவர் உண்மையில் எங்கும் போய்விடவில்லை. இவனுக்குத் தேசப்பணியில் ஆர்வம் அதிகரிக்கப் புதுப்பலம் ஊட்டும் வகையில் அவனுள் உறைந்து விட்டார்.
தியாகு வந்தான். முன்பு தாயைக் கரையேற்ற வந்தவன் மீண்டும் தந்தையைக் கரையேற்ற வந்தான்.
வானத்திலிருந்து அமுதம் போல் மழைத்தாரைகள் பொழிந்த வண்ணம் இருந்தன: சட்டுபுட்டென்று அவர் உடலை மயானத்தில் வைத்துத் தீ மூட்டிவிட்டு எல்லோரும் வந்து விட்டார்கள். அப்படி ஒரு பேய் மழை. நள்ளிரவில் குமரன் நெஞ்சில் ஏதோ ஒன்று பாரமாக அமுத்திக் கொண்டிருந்தது.
குடிலில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. தியாகு தன் வீட்டுத் திண்ணையில் படுக்கப் போய்விட்டான்.
வாசலில் நனைந்தபடி வெட்டியான் வந்து நின்று, “குமரா! ஐயா உடம்பு வேகவே இல்லையப்பா…” என்று அழைத்தான்.
“அதற்கு இவன் என்ன செய்யமுடியும்?
நீர்ப்பிரவாகம் மயானத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருந் தது. குமரன் நெஞ்சில் உறுதியை வரவழைத்தவாறு வெட்டி யானுடன் மயானுத்துக்குச் சென்று தன்னை எவ்வகையிலும் மகனைப் போல் வளர்த்தவருக்கு மறுபடியும் தீ மூட்டினான்.
சிறிது மழை நின்றது. அவரின் உடலைத் தீ நாக்குகள் சுற்றிச் சூழ்வதை அமைதியுடன் பார்த்தான் குமரன். இன்னும் அரை மணிக்குள் அவர் பஞ்சபூதங்களுடன் கலந்து விடுவார்.
காலையில் வைதீஸ்வரன் குமரன் நேற்றிரவு தன்னிடம் வந்து ‘நைட் ஸ்கூல்’ பொறுப்பையும் தன்னை ஏற்றுக் கொள்ளும் படி கூறிச் சாவிக்கொத்தை ஒப்படைத்ததாகச் சொன்னார்.
குமரன் எங்கு போனான்? பாரதமக்கள் அன்னையின் விடு தலைக்காகப் புரியும் ஆத்ம வேள்வியில் தன்னையும் கரைத்துக் கொள்ளும் ஒரு துளியாக அவன் எங்கோ மறைந்து விட்டான்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.