ஒரு செல்ஃபிக்காரனின் குறிப்புகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 546 
 
 

அவனது பெயர் சேகர் என்பதாக இருக்கலாம். பெயர் முக்கியமில்லை. பதினாறாவது வயதில் அவனுக்கு மெல்லிய மீசை முளைத்திருக்கிறது. அதைத் தடவி விட்டுக்கொள்ளும்போதெல்லாம் மெல்ல ஒரு கிளர்ச்சி அவனுக்குள் பரவுகிறது. அதற்காகவே அவன் மீண்டும் மீண்டும் மீசையைத் தடவி விட்டுக்கொள்கிறான். அவனது அந்த மெல்லிய மீசையை நிரடும்போது தன் வயதுள்ள ஒரு பெண்ணின் காலில் உள்ள மென்மையான முடிகளை வருடுவதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஏன் இப்படித் தோன்றுகிறது என்று ஒரு நாளும் யோசித்ததில்லை.

அதுவாகவே தோன்றுகிறது. அதற்காகவே அடிக்கடி மீசையை வருடிக் கொண்டான். தேதிவாரியாக தான் மீசையை வருடும்போதான ஒரு செல்ஃபியை தனது விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைலில் சேமித்து வைத்திருக்கிறான். தினமும் காலை எழுந்திருக்கும்போதே உடலெல்லாம் ஏனோ விறைப்பாக இருப்பது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இரவெல்லாம் புரண்டபடியே இருந்தது, அரைத் தூக்கத்தில் உளறியது, மொபைலில் கண்ட வீடியோக்களில் வரும் நிர்வாண உடல்களில் இருக்கும் தினவை நினைத்துக் கிடந்தது என எது காரணம் என்பதை அவனால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.

எழுந்ததும் முதல் வேலையாக சிறுநீர் கழிக்காமல் எவ்வித வேலையும் செய்யமுடியவில்லை என்பது வழக்கமாக இருக்கிறது. முன்பெல்லாம் அம்மா கத்த கத்த அப்படியே அரை மயக்கத்தில் படுக்கையில் கிடப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. இப்போதெல்லாம் விழிப்பு வரும்போதே பாத்ரூமுக்கு ஓடவேண்டி இருக்கிறது. இதனால் தேதி வாரியாக படுக்கையில் படுத்துக் கிடக்கும் செல்ஃபிக்களை எடுக்கமுடியாதது குறித்த வருத்தம் இருக்கிறது அப்பாவும் அம்மாவும் அவனுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டது போல உணர்கிறான். கிட்டத்தட்ட பேசுவதே இல்லை.

கைலி கட்டத் துவங்கியது, தனியே படுத்து உறங்கத் துவங்கியது, இவற்றுக்குப் பின்னர்தான் இப்படிப் பேச்சு குறைந்துள்ளதோ என்று யோசித்திருக்கிறான். அல்லது, தான் அவர்களுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டோமோ என்றும் யோசித்துப் பார்த்தான். பெருங்குழப்பம் வந்ததை அடுத்து இது வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்தான். எது காரணமோ பேச்சு குறைந்துவிட்டது என்பதை மட்டும் புரிந்துகொள்வது நல்லது என்ற எண்ணம் மேலிட்டது. பள்ளிக்குக் கிளம்பும்போது ஷூவுக்கு பாலிஷ் போடுவது, உணவு மேஜையில் உணவைத் தயாராக வைத்திருப்பது,

‘சாமிய கும்பிட்டுப் போடா’ என்ற குரல், ‘பஸ்ஸுக்கு காசு எடுத்துக்கிட்டியா’ என்ற அப்பாவின் சத்தம் எல்லாமே ஏனோ கனவில் நடப்பது போலவே இருந்தது அவனுக்கு. அத்தனை விலகியா போய்விட்டோம் என்று யோசித்திருக்கிறான். அப்படியெல்லாம் இல்லை என்று அவன் சித்தி அவனுக்கு விளக்கினாள். சித்தி அழகானவள். அவள் அழகில் அவளுக்குப் பெருமை உண்டு என்பது சேகருக்குத் தெரியும். கண்ணாடி முன்பு நின்று அரை மணி நேரம் அவள் என்ன பார்க்கிறாள் என்றெல்லாம் சேகர் யோசித்திருக்கிறான்.

தான், பாத்ரூமில் குளிக்கும்போது இப்போதெல்லாம் அப்படியே நின்றுகொள்ள ஏன் பிடிக்கிறதோ அதே காரணமாக இருக்கும் என்று பதில் சொல்லிக்கொண்டான். சித்தி மிக நன்றாகச் சமைப்பாள். சித்தியின் சமையல் அம்மாவின் சமையலைவிட ஒரு படி மேல் என்ற சொன்ன நொடியில் அம்மாவின் முகம் இருளவும் சித்தியின் முகம் பிரகாசமடைவதையும் பார்த்தான். அப்பா பொதுவாக ‘‘அவளை கட்டிக்கப் போறவன் கொடுத்து வெச்சவன்…” என்பார். ஆனால், அவரும் அன்று அதைச் சொல்லவில்லை. சித்தியைக் கட்டிக்கொள்ளப் போகிறவர் நிச்சயம் கொடுத்து வைத்தவர்தான். ஏனென்றால் சித்தி அழகானவள். கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துக்கொள்பவள்.

சித்தப்பாவின் உருவமும் கம்பீரமானது. அவர்கள் இருவரையும் ஒருசேர நினைத்தபோது மெல்லக் கிளர்ந்த நினைவுகளை இறுக்கிப் பூட்டினான் சேகர். அன்று மேஜையில் இருந்த டிஃபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஷூ போட்டுக்கொண்டே சித்தியையும் அம்மாவையும் அழைத்து, செல்ஃபி எடுத்துக்கொண்டான். சித்தி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்லப் புன்னகைத்தான். அம்மாவைக் ‘கோயிலில் ட்ராப் செய்யவேண்டுமா’ என்று கேட்டான். பதிலுக்குக் காத்திருக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றான். பைக்கின் மீது கால் போட்டுக்கொண்டு அமர்வது அவனுக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தது.

பைக்கின் ஹெட் லைட்டில் இருந்து அதன் நுனி வரை தடவிக் கொடுத்துவிட்டுத்தான் பைக்கில் ஏறி அமர்ந்துகொள்வான். பைக்குடன் அவன் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களுக்கு அளவே இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் பைக்கில் செல்ஃபி எடுப்பது அவனுக்கு விருப்பமானது. எத்தனையோ முறை அவனது அம்மாவும் அப்பாவும் அதைக் கண்டித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணின் மீது காலைப் போட்டுக்கொண்டு செல்ஃபி எடுப்பதற்கு ஒப்பான வெறியை அவனால் விடவே முடியாது. அழகான சிவப்பு நிறமான பைக். பெட்ரோல் டேங்க்கின் மேடு மிக வசீகரமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு சிறுத்தையைப் போல.

அவன் அன்று எடுத்த ஒரு செல்ஃபியில், காற்றில் சீறிப் பறக்கும் சிறுத்தை ஒன்றின் மீது ஒரு காகிதத்தைப் போல ஒட்டிக் கிடந்தான். அவன் உடல் ஏன் வெடவெடவென்று எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறது என்று பலமுறை யோசித்திருக்கிறான். அவனை சில நண்பர்கள் வெட சேகர் என்று சொல்லும்போது உடன்சேர்ந்து சிரித்திருக்கிறான். ஒல்லியாக உயரமாக என்னவோ போலிருந்தவனுக்கு கொஞ்சம் மீசை முளைக்க ஆரம்பிக்கவும் தன்னைப் பிடித்துப் போக ஆரம்பித்தது. அங்கங்கே சதை போட ஆரம்பிப்பதைப் பார்க்கவும் சித்திக்கான சித்தப்பா போன்ற உருவம் வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

‘அதெல்லாம் ட்ரெஸ்ல இருக்குடா’ என்று சித்திதான் சொல்லிக்கொடுத்தாள். அம்மாவும் அப்பாவும் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. சித்தி அந்த இடத்தை எடுத்துக்கொண்டாள். அவளாகவே சென்று அழகழகான டீ ஷர்ட்டும் பேண்ட்டும் வாங்கிக் கொண்டு வந்தாள். அன்று அந்தக் கடையில் எடுத்திருந்த செல்ஃபியை அவனுக்குக் காட்டினாள். அதில் சித்தப்பாவும் சித்தியும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அம்மா அப்பாவிடம் சொல்லமாட்டேன் என்று அவன் சொன்னதை சித்தி வினோதமாகப் பார்த்தாள். அவன் தலையைக் கோதிவிட்டாள். யாராவது தலையைக் கோதினால் அவனுக்குப் பிடிக்கும்.

சின்ன வயதில் அப்பா அவரது தலையை நூறு தடவை கோதச் சொல்லி, அவன் கோதி முடித்ததும் ஐந்து ரூபாய் தருவார். சிரித்துக்கொண்டே அவனை வாரி அணைத்துக் கட்டிக்கொள்வார். அப்போதெல்லாம் இப்படி ஸ்மார்ட் போன் இருக்கவில்லை. இருந்திருந்தால் அதையெல்லாம் புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கலாம். பள்ளியில் நடந்தவற்றையெல்லாம் அப்பாவும் அம்மாவும் அவனிடம் தினமும் கேட்ட காலங்கள் எல்லாம் உண்டு. பள்ளி பாத்ரூமில் பையன்கள் கிண்டல் செய்துகொள்வது, ஒண்ணுக்கு அடிக்கும்போது உலக உருண்டையை வரைவது, வெளியில் இருந்து ஆயா திட்டுவது என்று கொஞ்சம் நடந்ததையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டிச் சொல்வான்.

கற்பனை என்றுமே அவனுக்குப் பிடித்தமானது. என்னவெல்லாமோ கற்பனை செய்திருக்கிறான். வானத்தின் மேகத்தில் மிதந்து கடவுள் வாழும் இடத்துக்குச் சென்று கடவுளைக் கேள்வி கேட்பது, அழகான பெண்ணுடன் பகலிரவு எனக் கணக்கில்லாமல் பிணைந்து கிடப்பது, ஊழல் செய்யும் ஆட்களையெல்லாம் தூக்கில் போடும் பதவியும் அதிகாரமும் தனக்கு இருப்பது, தன்னை மிரட்டும் சக பையன்களை ஆளை வைத்து அடிப்பது என அவன் கொண்ட கற்பனைகளைத் தனியே எழுதி வைக்க நினைத்திருக்கிறான். இந்தக் கற்பனைகளே அவனது பலம், நம்பிக்கை, வாழ்க்கை.

முதல்நாள் இரவு சித்தியுடன் உறங்கியபோது சித்தியைக் கட்டிக்கொண்டது, அவள் மெல்லச் சுழிப்புடன் விலகிக் கொண்டது, இவன் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தது என எல்லாமே கற்பனைதான் என்று கற்பனை செய்திருந்தான். காலையில் சித்தியின் மொபைலில் மெசேஜ்களை வேக வேகமாகத் திருட்டுத்தனமாகப் பார்த்தது மட்டும் உண்மை என்றும் கற்பனை செய்துகொண்டான். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சித்தி காலையில் செல்ஃபி எடுக்கும்போது எந்த முக வேறுபாடும் இல்லாமல்தான் இருந்தாள் என்று நம்பினான். சட்டென்று ஏதோ தோன்றவும் சித்தப்பாவுக்கு என்னவோ மெசேஜ் அனுப்பினான். சித்தப்பாவிடம் இருந்து ஒரு ஸ்மைலி பதிலாக வந்தது.

அவனது உடலெங்கும் பாம்புகள் சிக்கிக் கிடந்தன. பாம்புகள் ஒன்றையொன்று தின்னும்போது இவனையும் சேர்த்துத் தின்றன. சில பாம்புகள் அவன் தலைக்குள் ஊடுருவிக் கொண்டன. அங்கே அவனது அப்பாவும் அம்மாவும் சிக்குண்டு கிடந்தார்கள். சித்தியும் சித்தப்பாவும் வெளியே நின்று ஏதோ சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் திடுக்கிட்டு விழித்தான். அன்றைய கனவு அது என்பதை உணர்ந்தான். கடந்த சில மாதங்களாகவே கனவுகள் துரத்துகின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாததால் அவற்றை ஏற்றுக்கொண்டான்.

தன் தலைக்குள்ளே இருந்து ஒரு பாம்பை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றான். அது சிரித்துக்கொண்டே செத்தது. அங்கிருந்து ஆயிரம் பாம்புகள் வரவும், செய்வதறியாமல் திகைத்து நின்றான். அப்போதும் சித்தியும் சித்தப்பாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பள்ளி விட்டதும் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது சித்தி விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். அம்மா அப்பாவின் சுவடே இல்லை. சித்தி விளக்கை ஏற்றிக்கொண்டே ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் நிறுத்தியவள், ‘கை கால் கழுவிட்டு டிஃபன் சாப்பிடு’ என்று சொன்னாள்.

தன் அறைக்குள் சென்றவன் கதவை அடைத்துக்கொண்டான். அப்படியே அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தான். அம்மா அப்பா இருந்திருந்தால் இந்நேரம் பெரிய பூகம்பமே வெடித்திருக்கும் என நினைப்பு ஓடியது. இல்லாததும் நல்லதாகப் போயிற்று என்ற எண்ணம் வரவும், என்னவோ யோசித்தவன் அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு, பள்ளிப் பையில் இருந்த ஸ்மார்ட் போனை உயிர்ப்பித்தான். அன்று இரவு எப்போதும்போல் சித்தி வந்து உடன் படுத்துக்கொண்டாள். அவனுக்கு விபூதியைப் பூசிவிட்டு, காதில் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

சித்தியை செல்ஃபி எடுக்க அழைத்தான். அவள் சிரித்தாள். அவன் தலையைக் கோதிவிட்டாள். போர்வையை முழுக்கப் போர்த்திக்கொண்டு தன் மொபைலில் இருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தான். ஒருவருடமாக எடுத்த புகைப்படங்கள் ஓட ஆரம்பித்தன. அவன் அப்பா அம்மா ஓடினார்கள். மெல்ல மறைந்தார்கள். இரண்டு மூன்று மாதங்களாக எதிலும் அப்பா அம்மாவின் படம் இல்லை. இன்று காலையில் சித்தியுடன் எடுத்த போட்டோவிலும் அவனும் சித்தியும் மட்டுமே இருந்தார்கள்.

கண்ணீர் துளிர்த்து கண்ணில் இருந்து சொட்டும் ஒரு செல்ஃபியைப் பார்த்தபோது அமைதியில் உறைந்தான். ஏன் தன்னை இப்படி எடுத்துக்கொண்டோம் என்று யோசித்தபோது எந்தக் காரணமும் அவனுக்கு அகப்படவில்லை. தானும் சித்தியும் எடுத்துக்கொண்ட செல்ஃபியை, ஸாரி என்ற தலைப்பில் சித்திக்கு அனுப்பினான். இரண்டு நிமிடங்களில் அவனது சித்தி ஒரு பதில் போட்டோ அனுப்பி இருந்தாள். அவன் குழந்தையாக இருக்கும்போது அவள் சின்னஞ் சிறுமியாக அவனைக் கையில் ஏந்தியிருக்கும் புகைப்படம் அது.

– Mar 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *