ஒரு சத்திய தேவதையின் தரிசன ஒளியில் சரிந்த நிழற் கோலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 12,159 
 

புதிதாக ஓரு கல்யாணக் காட்சி நாடகம், சாரதா பார்த்துக் கொண்டிருக்க அந்த வீட்டில் களை கட்டி அரங்கேற இருந்தது இதற்கு முன் பெரியக்காவின் கல்யாணத்தையே முதன் முதலாகப் பார்த்த ஞாபகம் அலைகழிக்கும் ஒளிச் சுவடுகளோடு ஒரு மாயக் கனவின் நிழல் வெளிப்பாடுகளாய் அடிக்கடி அவளுள் வந்து போகும் அதை நிஜமென்றே நம்ப முடியாத நிலையில் மீண்டும் மனதை ஊடறுக்கும் துருவப் போக்கான ஒரு காட்சி நிழல் இரண்டாவது அக்கா மஞ்சரியின் இந்தக் கால் விலங்குக் கல்யாணம்

மிகவும் நம்பகத் தன்மையோடு சாரதா நினைவு கூர்ந்தாள் உயிரின் இருப்பிலிருந்து விழிப்புணர்வு பெற்று எண்ணங்களால் சூழ்ந்த மனமே இல்லாதொழிந்தது போல் பார்க்கும் போது இந்தக் கல்யாணச் சிறை வருவதையொட்டி இவ்வளவு களிப்புக் கடலில் மிதக்கிற தேவை அக்காவுக்கு ஏன் வந்ததென்று புரியாமல் அவள் மிகவும் குழம்பிப் போனாள்

பாவம் இந்த அக்கா எனக்கு மறு துருவம் அவள் சுயாதீனமாக அவளுக்கு ஒன்று மட்டும் தான் பிடிபடும் புற அழகின் ஒளிர்விலேயே அதிக பிரமை கொண்டு அலைகிற வெளிப் போக்கு மனச் சிந்தனை வட்டத்தின் சிறைக் கைதி போன்ற துருப் பிடித்த இருப்பு நிலை அவளுடையது அவள் தான் என் செய்வாள்? வாழ்க்கை அவளை வளர்த்த விதம் அப்படி

வாழ்க்கையென்று சொல்வதும் தப்பு. நானும் அதன் நிழலைக் குடித்து அல்லது கண்டு வாழ்பவள் தானே. அந்த நிழலோடு ஓடாமல் நான் மட்டும் சிதாகாச ஒளியில் கரைந்து போவது போல, விழிப்பு நிலை கண்டு தேறிய உயிர் தரிசன உண்மையொளி கண்டு கரையொதுங்கி நிற்க முடிந்ததே இது எதனால் வந்தது? ஒரு வேளை அப்பா அடிக்கடி ஆத்மார்த்தமாகச் சொல்லி வருகின்ற வேத வார்த்தைகளை ஆழமாக மனம் கிரகித்துக் கேட்டதன் பலனோ இது? நான் அறிவுக்கு இல்லை உயிர் வெளிச்சமான அன்புக்கு அதை முன்னிலைப் படுத்தி வாழ்கிற அழியாத பெருமை எனக்கு அக்கா நீ எதற்கு? கொஞ்சம் வாய் திறந்து தான் சொல்லேன்

ஊகும் அவளிடம் பேச்சையே காணோம் எதனால் இந்தத் தொலைதல்? ஓ! கல்யாணம் பற்றிய அதீத கனவு மயக்கம் மட்டுமல்ல அவளுக்கு. தான் மிகப் பெரிய அழகியென்ற தற்பெருமித தலைக் கனமும் அவளுடமுண்டு. தான் நடிகை பத்மினி மாதிரி என்று யாரோ சொன்னதாக அடிக்கடி கதை அளப்பாள். உண்மையில் அவ்வளவு அழகு தான் அவள். தங்கப் பதுமை மாதிரி உடலளவில் பூரண ஒளி கொண்டு பிரகாசிக்கும் தன்னை மணப்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு தேவர்களே வானில் கண் விழித்துக் காத்திருந்து தவம் கிடப்பதாக அவள் நினைப்பு . அந்த அழகுக்காகவே அவளின் இருப்பு நிலையெல்லாம். இருக்கட்டும் அவள் பெருமையுடன் வீற்றிருக்கிற அந்த சிம்மாசனம் அவளுக்கு வெற்றியைக் கொண்டு வர வேண்டுமென சாரதா பிராத்தித்தாள்

சாரதாவுக்குத் தெரியும் அக்கா மஞ்சரி மனசளவில் ஓர் ஆணோடு இணைகிற மிதமான சுகத்தை மட்டுமே அளிக்கிற அதீத கற்பனை மயக்கமான காட்சிகள் குறித்து இன்பமயமன கனவுகளைக் காண நேர்ந்தது, உண்மையில் அவள் தவறல்ல அவர்களுக்கு மிக நெருக்கமான ராதையின் கண் நிறைந்த காட்சி தரிசனமான கல்யாணத் திருவிழாவைக் கண்டதன் மிக மோசமான ஒரு பின் விளைவே இது. ராதைக்கும் அவள் வயது தான்.நெருங்கிய உறவும் கூட. பருவம் வந்த பிறகு அவர்களுக்கு வீட்டில் கட்டுப்பாடு அதிகம் உறவினரிடையே நடக்கும் பெரும்பாலான கல்யாணங்களுக்குப் போய் மகிழ்ச்சி கொண்டாட அப்பா என்றைக்குமே அவர்களை அனுமதித்ததில்லை.

மாறாக ராதையின் வீடு பக்கத்தில் இருந்ததால் அவளின் கல்யாணம் நடக்கும் போது அப்பாவின் மனப்பூர்வமான சம்மதத்துடன் அவர்களும் வர நேர்ந்தது. அதைப் பார்ப்பதில் அதிகளவு மகிழ்ச்சி கொண்டாடியவள் மஞ்சரி ஒருத்தி மட்டும் தான். பார்க்க நினைத்தாளோ? தன்னைக் காட்ட நினைத்தாளோ/ பார்ப்பதை விட சிதறிய அவள் மனக் கோலம் ஒரு அழகு தேவதையாகத் தன்னைக் காட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே அதிக முனைப்போடு செயல்படத் தொடங்கியிருப்பதாய், சாரதா தனக்கேயுரித்தான அறிவு விழிப்புடன் கூடிய இயல்பான கருணை மனதுடன் நினைவு கூர்ந்தாள்

அன்றைக்கு அவள் அலங்கார ஒப்பனைகள் ஒரு சினிமா நடிகையின் பாணியிலேயே நிலை கொண்டு மிளிர்வதாக சாரதா உணர்ந்தாள். இந்த அழகு மட்டும் தான் வாழ்க்கையை உச்சத்துக்குக் கொண்டு போய் தன்னைக் களிப்புக் கடலில் மிதக்க வைக்கப் போதுமானதாய் அவளுக்குப் பட்டிருக்க வேண்டும். அதன் பொருட்டு அந்த அழகை ஆராதனை பண்ணித் தன்னை வழிபட்டு வணங்க, ஒரு மனிதனல்ல ஒரு தேவ புருஷனே தனக்கு வந்து மாலையிட விண்ணிலிருந்து இறங்கி வரப்போவதாய் அவள் கனவுகள் காண்பதை அவள் உயிரின் ஒளி வெளிப்பாடாய் முகமெங்கும் களை கட்டி நிற்பதை, நிஜம் மறந்து போன ஒரு காட்சி வெறுமையாகவே சாரதாவால் உணர முடிந்தது

அக்காவுக்கு வாழ்க்கையை மேலோட்டமாகக் கனவு காண்பதற்கு இது தான் உகந்த தருணம். ஏனென்றால் அவள் கண் முன்னால் அப்படியான காட்சி நிழல்கள். உணர்ச்சிகளைச் சிதறடிக்கும் இந்தக் கல்யாண மேடை இதில் ஒளி கொண்டு மிளிரும் ராதையின் முகம். ஓர் ஆணின் அருகாமையில் அவள் என்னமாய் பிரகாசிக்கிறாள். அது மட்டுமா? அவள் கண் கொண்டு பார்த்திருக்கப், பூட்டிய அறைக்குள் உலகையே மறந்து அவர்கள் சல்பாப லீலை புரிவதை நேரில் கண்ட பிறகு அவள் நிலை என்ன? அப்போதெல்லாம் அவர்களுடைய காலத்தில் கல்யாணமென்றால் நாலைந்து மாதங்களுக்கு முன்பே வீடு களை கட்டத்தொடங்கிவிடும் அதுவும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் நடக்கிற கல்யாணமென்றால் பெரிய எடுப்பில் வீடே விழாக் கோலம் கண்டிருப்பதாய் மனம் பிரமை கொள்ளும். இந்த நிழல் விட்டுத் தெறிக்கும் நிகழ்காலச் சங்கதிகள் குறித்து ,சாரதாவைப் பொறுத்தவரை உணர்ச்சி பங்கமுற்றுத் தடுமாறும்,சலன மனம் என்றைக்குமே அவளுக்கு வந்ததில்லை.

மஞ்சரியோ தனது இந்த உண்மை இருப்பு நிலைக்கு மாறாக சலன அலைகளினுள் அள்ளுண்டு போகும் சிறு துரும்பு போல இப்போது ராதையின் கல்யாணதிற்குப் பிறகு இன்னும் மனம் அடங்காதவளாய் உணர்ச்சி கொந்தளிக்கும் அகவிழிப்பு முற்றாகவே சிதைந்து தடுமாறும் அவளின் நிலை உயிர் ஒழிந்து போன இருட்டு ஜடமாய் அதை எதிர் கொள்ள நேர்ந்த பாவத்தை மனம் வருந்தி உள் வாங்கியவாறே, சாரதா அவள் தோளில் கை போட்டு அணைத்தவாறே குரலில் சூடேறாமல் மிருதுவாக அன்பு குழைந்து கேட்டாள்

“மஞ்சரியக்கா நான் ஒன்று கேட்பன் கோபிக்க மாட்டியே?”

“நீ அப்படியென்ன புதிசாய்க் கேக்கப் போறாய்? நான் ஏன் உன்னைப் போல இல்லை உன்னை மாதிரி சாமியார் வேஷம் போட நான் ஆளில்லை அதுக்கு வேறை ஆளைப் பார் இப்ப அதைத் தானே நீ கேக்க வாறாய்?”

“நான் அதைக் கேக்க வரேலை. நான் நானாகவே இருந்திட்டுப் போறன். என்ரை கவலை இப்ப அதில்லை உனக்குளே ஏதோ சங்கதி வெறிச்சோடியிருக்கு. ஏதோ ஒன்று உன்னைக் கடுமையாய் பாதிச்சிருப்பதாய், என்ரை உள்ளுணர்வு சொல்லுது அது என்ன என்று தான் இப்ப நான் கேக்கிறன்.”

“ஐயோ சாரு அதை என்னெண்டு நான் வாய் திறந்து சொல்லுறது? ஆனால் சொல்லாமல் இருக்க முடியேலை, ராதையின் நாலாஞ் சடங்குக்குப் போய் வந்த பிறகு எனக்கு மனசே சரியில்லை. ராதை மாதிரி எனக்கும் வேணும். அவ மட்டும்அறைக்குள் அந்த ஆளோடு கதவைப் பூட்டிக் கொண்டு சரச லீலை புரிகிறதைப் பாக்க, இல்லை அவையள் காதல் ரசம் தளும்பிச் சிரிக்கிறதைக் கேக்க எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்யுது.. கை கோர்த்துக் கொண்டு றோட்டிலை வெட்கமில்லாம் ஜோடி போட்டுக் கொண்டு அவையள் போறதைப் பார்த்தால் எனக்கு வயிறு பற்றி எரியுது போய் அப்பாட்டைச் சொல்லு. இது ரொம்ப அவசரமாய் வேணும் எனக்கு”

“இப்ப என்ன வேணுமென்று சொல்ல வாறாய்?

“சீ இது கூட நான் சொல்லித் தான் உனக்குத் தெரிய வேணுமே>” கொஞ்சம் யோசிச்சுப் பார் விளங்கும்”

“உன்னைப் போல எனக்கு இந்த மாதிரியெல்லாம் புத்தி தடுமாறி யோசிக்க வராது. உன்ரை மனசிலை ஓடுறதை ஒரு கற்பனைக் காட்சியாய்க் கூடப் பாக்கிற நிலைமை எனக்கு வராது. வாய் திறந்து நீ தான் சொல்ல வேணும். இப்ப என்ன கேக்க வாறாய்>”

“என்ரை பொங்கிச் சரியும் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய், நான் வானத்திலே இறக்கை முளைச்சுப் பறப்பதற்கு இப்ப என்ரை கழுத்திலே ராதை மாதிரி, ஓரு தாலிக் கொடி அது தான் ஓர் ஆம்பிளைத் துணை” இப்ப வேணும் எனக்கு இது மிக அவசரம் என்னாலை இருக்க முடியேலை ஓடிப் போய்க் கேள் அப்பாட்டை”

“என்ன விளையாடிறியே? மஞ்சரியக்கா இதை நான் போய் எப்படிக் கேக்கிறது?”

“நீ கேக்காட்டால் போ. எனக்கும் பேசத் தெரியும்”

அதன் பிறகு நடந்ததெல்லாம் நம்பவே முடியாத வெறும் கனவு போல் பட்டாலும் கசப்பான அந்த உண்மையை ஜீரணிக்கவே சாரதாவுக்கு வெகு நாள் பிடித்தது. மஞ்சரி ஆசைப்பட்டதெலாம் வெறும் உணர்வு பூர்வமான தொடுதல் ஸ்பரிசங்களுக்கு மட்டுமல்ல வெளிப்படையாக ஓர் ஆணோடு ஜோடி சேர்ந்து கொண்டு உலா வருகின்ற மேல் போக்கான திருமண சுகங்களை எதிர்பார்த்துந்தான் அவளுடைய இந்த அசட்டுக் கனவுக் கோலம்.. அதோடு முடிந்து போகிறது தான் வாழ்க்கையென்று நம்பினாளே அவள். அது யார் விட்ட தவறு? அவளாகத் தேடிக் கொண்ட முடிவல்லவா இது.

அப்பாவின் கழுத்தில் கயிறு போட்டு அவள் வாங்கிய வரம். இது. வரமா சாபமா என்று புரியாத கேள்விக் கலக்கத் தீ சாரதாவினுள் நெருப்பாய் பற்றியெரியத் தொடங்கிய காலம்.

“ வாழ ஆசைப்பட்டதெல்லாம் ,போதும் வெளியே வந்து விடு” என்று கூப்பிடுகிற நிலைமையா மஞ்சரிக்கு. அவள் ஆசைப்பட்டது போல் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது என்னவோ உண்மை தான் ஆகா !அன்றைக்கு அவளைப் பார்க்க வேண்டுமே திருமணக் கோலத்தில் அழகுக் களை கொண்டு பிரகாசிக்கும் ஒரு தேவதை போல் அவள். அவளை மணந்தவன் பெரிய ராஜ வம்ச இளவரசன் மாதிரி. கை நிறையக் காசு வரும் பணக்காரப் பெரும் புள்ளி.. தூரத்து உறவும் கூட அவன். பார்ப்பதற்கு மன்மதன் மாதிரி இருந்தாலும் குணத்தால் அன்பு நிலை வரண்டு போன உயிர் வதை கொள்ளும் காட்டு மிருகம் மாதிரி அவன் என்பது அவனோடு வாழத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே மஞ்சரிக்குத் தெரிய வந்த கசப்பான உண்மை அதுவும் வட்டிக் கடை நடத்தி ஈவு இரக்கமின்றிப் பணம் வசூலிக்கும், ஒரு மனித மிருகம் அவன் அவன் வேறு எப்படி இருப்பான்? . அவன் காலடிக்கு வந்து சேர்ந்த புழு மாதிரி அவள் நிலைமை. அவள் பெரிதாகக் கொண்டாடடிய அழகு கூட அங்கு அவன் வழியில் எடுபடாமல் அவளைத் தோலுரித்து மாலை போடவே அவன் விசுபரூபம் கொண்டு வந்து நிற்பதாய் சாரதாவுக்கு உறைக்கும் போதெலாம் அவள் மஞ்சரிக்கு ஆறுதலாக உயிர் வேதம் கூறித் தேற்றும் வழியறியாது அந்த வாயடைத்த மெளனத் தீயில் தானே கருகி ஒழிவது போல எல்லாம் ஒழிந்து போன அச்சூனிய இருப்பு நிலை அவளுக்கு மட்டும் தான் அதுவே சாசுவதமாகி விட்ட நிலையில் ஒரு சமயம் மஞ்சரி கல்யாணக் களை கலையாத நிலையிலேயே புகுந்த வீட்டிலிருந்து அழுத முகமாய் அதுவும் ஒற்றை மரமாகத் திரும்பி வந்த நிழற் கோலம் பொறி தட்டும் ஒரு சாபத் தீட்டாக, அவர்கள் மீது வந்து கவிந்தது . அவளை அந்த நிலையில் எதிர் கொள்ளும் திராணியற்றவர்களாய் , அவளைப் பெற்றுப் போட்ட பாவத்தை எண்ணி இருளில் திரை போட்டு மறையும் பெற்றோர் போலன்றி, அவள் கண்ணீரைத் துடைக்கும் உயிர் அழியாத ஒரு தெய்வீக தரிசனமாக சாரதா ஒளி கொண்டு அவள் அருகே போனாள்

“என்ன மஞ்சரியக்கா இந்தக் கோலம்? அது தான் நான் சொன்னதைக் கூடக் கேக்காமல், கல்யாணம் வேணுமென்று நீ அப்பாவுக்குக் குடுத்த கரைச்சலை நானும் தான் பார்த்தேனே. அதுக்குத் தண்டனையா உன்ரை இந்தக் கோலம்? ஏன்? உனக்கு என்னவாச்சென்று இப்படி வந்து நிக்கிறாய்?”

“அதை எப்படியடி சொல்லுறது சாரு? என்னாலை தாங்க முடியேலை மனசாலை மட்டுமில்லை உயிராலை உணர்வுகளாலை, என்னை அவர் நெருங்கி வாறதேயில்லை. என்ரை வெறும் உடம்பு தான் அவருக்கு வேணும். இரவிலை மட்டும் படுக்கைச் சுகம் தருகிற ஒரு வேசி கணக்கில் தான் நான் அவருக்கு. அவர் வீட்டிலை நான் ஒரு விலங்கு பூட்டின அடிமை மாதிரி யாரும் என்னை ஒரு பெண்ணாய்க் கூட மதிக்கிறேலை .அன்பு இல்லாமல் அவரோடு சேர்ந்து அவையள் செய்கிற கொடுமைகளே போதும் என்னை உயிரோடு சமாதி வைக்க இப்ப எனக்கு வாழவே பிடிக்கேலை அது தான் பிரிஞ்சு வந்திட்டன்.. என்ன சொல்லுறாய் சாரு? என்னைத் திரும்பப் போகச் சொல்ல மாட்டியே?

“இதுக்கு பேசாமல் நான் சொன்னபடி கேட்டு நீ இஞ்சேயே இருந்திருக்கலாம்.. அப்படி நான் சொல்கிறபோதெல்லாம் எதிர்மறையாய் உன்னிடமிருந்து வாற பதில்களை இப்ப நான் நினைச்சுப் பார்க்கிறன் ஏனக்கா? அப்ப நான் கூறினது இவ்வளவும் ஆன பிறகு இந்த நிலையிலை உனக்குச் சரியென்று படுகுதா? எப்பவும் உனக்கு மறுப்புக் கூறுகிற அல்லது உன்ரை உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற உன்ரை புருஷன் மாதிரி வேறுபட்ட மனோ நிலைக்கு நான் வந்ததேயில்லை இன்னும் விளக்கமாய்ச் சொன்னால் என்னை ஒரு வரட்டுச் சாமியார் என்பாயே. அது கூடப் பொய். இப்படி என்னைப் போல் இருந்தாலே வாழ்க்கையனுபவங்கள் எதிர்மறையாய் வரும் சமயம் சரிந்து போகாமல் நின்று பிரகாசிக்க முடியுமென்று நம்பித் தான் என்னால் இப்படியெல்லம் பேச மட்டுமல்ல என்ரை வாழ்க்கையே இப்படியொரு தெளிவோடு தான் போய்க் கொண்டிருப்பதாய் நான் நம்புறன் உண்மையாய்ச் சொல்லப் போனால் வாழ்க்கை குறித்து நான் எதுக்குமே ஆசைப்பட்டதில்லை பட்டிலோ பொன்னிலோ ஆசை வந்ததில்லை இதுக்கு மேலே போய் நீ ஆசைப்பட்ட மாதிரி உன்ரை அழகை ஆராதனை செய்யக் கூடிய ஒரு மன்மதனை எதிர்பார்த்து நீ தவம் கிடந்தியே. அது போல ஒரு பெண்னுக்கு வரக் கூடிய கனவுக் கோட்டை கூட எனக்குள் வந்ததில்லை இதெல்லாம் சொன்னால் நீ சாமியாரென்பாய் இப்ப என்ன சொல்கிறாய்>? சொல்லக்கா”

“சாரு என்னை மன்னிச்சிடு உன்னைப் புரிஞ்சு கொள்ளாமல் போனதற்காக இப்ப நான் வருந்திறன் ஒரு வேளை அப்ப நீ சொன்னதெல்லாம் எனக்குள் பிடிபட்டிருந்தால் இவ்வளவு படு மோசமாய் சாத்தான் வாய்க்குள் விழுந்து செத்தொழிஞ்ச மாதிரி இப்ப நான் வந்து நிக்கிறேனே அது நேர்ந்திராதென்று சத்தியமாய்ச் சொல்லுறன் இப்ப நான் நம்புறன்””நீ சொல்லுறதையெல்லம் கேக்கிற நிலைமை தான் இப்ப எனக்கு{“

“இது போதும் மஞ்சரியக்கா உன்னைப் பீடித்து வருத்தும் வாழ்க்கை பற்றிய விழுக்காடுகளிருந்து, நீ வெளியேறுவதற்கு இது போதும். இப்பவும் இதை ஒரு சாமியார் நிலையிலிருந்து நான் சொல்ல வரேலை. துக்கங்களிலிருந்து விடுபட எல்லோருக்கும் இது ஒரு வழி . என்ன மஞ்சரியக்கா நான் சொல்வது சரிதானே””

சாரதாவின் அந்த வாய் மொழி வேதத்திற்கே தலை அசைக்கிற வேகம் மஞ்சரிக்கு. அப்படி அவள் தன்னை மறந்து தலை ஆட்டும் போது அவளைச் சூழ்ந்து வருத்தும் அகண்ட வாழ்வு பற்றிய அந்தகார இருளே அவளை விட்டு முற்றாகவே விட்டொழிந்தது போல ஒளி சூழ்ந்த அந்த ஒரு கணம் சாரதாவின் உண்மையொளி அறிந்த இருப்பு நிலைக்கே அது , மகுடம் சூட்டி வணங்குவது போல , அவளை மெய் சிலிர்க்க வைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *