ஒரு கோடி டொலர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,501 
 
 

தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி:

அனைத்துலகச் சுரங்க ஆபத்துதவிக் குழுவினர் இன்றைக்குச் சுலபத் தீவில் தொழிலாளிகள் சிலர் இன்னும் இருக்கும் இடத்தை அடையப் பனிரெண்டு மீட்டர்கள் இருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கையுடன் துளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை மீட்கப்பட்ட உடல்களில் இதுவரை அடையாளம் அறிய இயலாத வெளிநாட்டவர் ஒருவர், சிங்கப்பூரர் என்பது அடையாள அட்டை மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஜூன் 12 சனிக்கிழமை 2010 காலை மணி 9.

பெற்றோரை வழியனுப்பிவிட்டு சாங்கி விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முணு முணுத்தவாறு வந்தான் கணேசன். உள்ளே பூட்டிவிட்டு வீட்டுச் சாவியை வீசினான். அப்படியே அறை மேசையில் இருந்த கணினியை இயக்கினான். சட்டைப் பையில் இருந்த பர்சைக்கூட எடுத்து வெளியே வைக்கவும் வீட்டு உடைக்கு மாறவும் தோன்றாதவனாய்த் தொப் பென்று நாற்காலியில் விழுந்தான். உயிர்பெற்ற கணினி முதலில் பூரணி முகத்தைப் பளிச்சென்று காட்டியது. அவன் விரும்பி விளையாடும் இணையதளம் அவன் விரலின் தீண்டுதலைப் புரிந்துகொண்டு கடைவிரித்தது. என்ன அழகான புன்சிரிப்பு, விழுந்து விழுந்து எத்தனை இடங்களில் அவளைப் படம் பிடித்திருப்பான், இது ஒரு நள்ளிரவில் க்ளார்க் கீஇல் கடைகளின் விளக்குகள் மட்டும் எரிந்த ஓர் இரவில் நீர்நிலையோரம் பிடித்தது.

இதேபோல் நிறைந்த புன்சிரிப்புடன் திருமணநாளின் முந்தைய நாள் மாலை வரவேற்பின்போது, தான் பலமுறை ஒத்திகை செய்து தயாராகவைத்திருந்த வாக்கியத்தைக் கிடைத்த ஒரு தனித்த இடைவெளியில் சொல்லி அவளைப் பரவசப்படுத்த நினைத்து நிதானமாக அளித்தான். “உன் அம்மா, இனி என் அம்மா, உன் அப்பா இனி என் அப்பா, எனக்கு இன்றிலிருந்து இரண்டு பெற்றோர், அவர்களை நான் அப்பா, அம்மா என்று கூப்பிடத் தொடங்கிவிட்டேன்” என்று சொல்லி முடித்ததுமே, அதே மாறாத புன்சிரிப்புடன், “அதெப்படி கணேஷ், என்னால செயற்கையா எதுவும் செய்ய முடியாது, என் அம்மா அப்பாவை நீ எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக்க, ஆனா என்னால உன் அம்மா அப்பாவை அம்மா, அப்பான்னெல்லாம் கூப்பிட முடியாது, நினைக்கவும் முடியாது. சாரி” என்று சொல்லிவிட்டு “நோ சில்லி செண்ட்டிமெண்ட்ஸ், ஆனா அன்பா இருப்பேன்” என்றாள். இறுதிச் சொல்லைக் கேட்டவுடன் மலர்ந்த தன் முகத்தின் மலர்ச்சியை அப்படியே தக்கவைத்துக்கொண்டான். அவள் சொல்வது சரிதானே. அன்பாக இருந்தாலே போதுமே. திருமணம் நடந்த ஒரே வாரத்தில் சிங்கப்பூருக்கு அழைத்துவந்தான். அவளுக்கும் விரைவில் நல்ல வேலை கிடைத்தது.

அவன் எப்போதும் விளையாடும் தங்கச்சுரங்க ஆட்டத்தின் பக்கத்தைத் திறந்தான். முதல் கட்ட இலக்கு ஐந்நூறு டொலர்கள். சுட்டியால் சொடுக்கியவுடன் நேரக் கணக்குத் தொடங்கியது. இவன் சுட்டியைச் சொடுக்கச் சொடுக்க, சித்திரத்தில் உள்ள தொழிலாளி கயிறு ஒன்றை இழுக்கத் தொடங்குவார்; அறுபது வினாடிகள், இரண்டு பெரிய தங்கப்பாளங்கள், ஒவ்வொன்றும் இருநூறு வெள்ளிகள்; அவற்றுக்கு இடையில் ஏராளமான கற்பாறைகள், சில சிறிய தங்கக் கற்கள், தப்பித்தவறி அம்புக்குறியைச் சொடுக்குவதில் சிறிது பிசகிவிட்டாலும் பத்துவெள்ளிகூடப் பெறாத கற்பாறையை மூச்சிரைக்கத் திரையோரத்தில் இருந்த சுரங்கத் தொழிலாளி நீண்ட நேரம் இழுக்க வேண்டும். நேரம் கடந்துவிடும். ‘இலக்கை நீ அடையவில்லை, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கு’ என்று அறிவிப்பு வரும். இதுவரை இரண்டு மூன்றுமுறை விளையாடித் தோற்றவன், இன்று கவனமாக ஆடி எழு நூறு வெள்ளி சம்பாதித்து இரண்டாம் கட்டத்தை அடைந்தான். இதன் இலக்கு இரண்டாயிரம் வெள்ளி; கடையில் பொருள்களை வாங்குகிறீர்களா? கணினி பணிவுடன் கேட்டது. சிலநூறு வெள்ளிகளில் பழச்சாறு, பாரத்தை இழுக்கும் கயிறு மற்றும் வெடிகுண்டு கடைவிரிக்கப்பட்டது. பாரக்கயிற்றை மட்டும் தேர்ந்தெடுத்தான். பழச் சாறு வாங்கினால் பாரங்களை வேகமாக இழுக்க முடியும். எதற்கும் இருக்கட்டும் என்று பழச்சாறு போத்தல் ஒன்றையும் வாங்கிவைத்தான்.

ஒரு வாரயிறுதியில் கோல்ட் ஸ்டோரேஜில் வாங்கிய பழச்சாறு போத்தல்களைக் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்த போது பூரணி விக்கி விக்கி அழத் தொடங்கினாள். ஏதேனும் தவறாக நடந்துகொண்டுவிட்டோமா, என்ன ஏது என்று கணேசன் கலவரம் அடைந்தான். எதற்கும் பதில் சொல்லாமல், போய்ப் படுத்துக்கொண்டுவிட்டாள். பாலை எடுத்துக்கொண்டு வந்து அவளைச் சமாதானப்படுத்திக் குடிக்கவைத்தான். அம்மா அப்பா நினைப்பு வந்தது என்று சொன்னவளைக் குழந்தையைப் போல் பரிவுடன் பேசி, ஆற்றுப்படுத்தினான்.

இது நடந்து இரண்டு மாதங்கள் கழித்து ஊரில் இவன் அப்பாவுக்குக் கண்களில் அறுவைச் சிகிச்சை நடந்தபோது அருகில் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க ஊருக்குப்போக முடியாமல் போனதை நினைத்து லேசாகக் கண்கலங்கிப் பூரணியிடம் மெல்லிய குரலில் பகிர்ந்துகொண்டபோது இரவின் நிசப்தத்தைக் கிழித்தவாறு, நீ ஊரிலேயே வேலை பார்த்திருக்க வேண்டியதுதானே, எல்லாந்தெரிஞ்சுதானே இங்க ஓடிவந்த, இது என்ன பைத்தியக்காரத்தனம், என்று தொடங்கிப் பத்து நிமிடங்களில் சிலநூறு ஆவி பறக்கும் வாக்கியங்களை வெகுவேகமாக அவன் முன்வைத்தாள். கோபம் என்பது ஆண்களுக்குத்தான் வர வேண்டுமா, பெண்களுக்கு வரக் கூடாதா என்ன, நாம் அனுசரித்துப் போய்விடலாம், இதில் என்ன வந்தது, தன்னைவிட மூன்று வயது சிறியவள், நாம்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

இரண்டு, மூன்று கட்டங்களை முடித்தவன், நான்காம் கட்டத்தை அடைந்தான். பத்தாயிரம் டொலர்கள் இலக்கு, திரை காட்டியது. நூறுவெள்ளி கொடுத்து கெசினோ படத்தைச் சுட்டியால் சொடுக்கி, ஆயிரம் வெள்ளிக்கு ஆடலாம் என்று முடிவுசெய்து ஆடினான். எண்மானியின் அம்புக்குறி வேகமாகச் சுழன்றது. அம்புக்குறி கற்கள் பிரிவில் நின்றால் ஆடிய பணத்தை இழக்க வேண்டும், மஞ்சள் பிரிவில் நின்றால் இரண்டாயிரம் கிடைக்கும், வைரங்கள் பிரிவில் இருந்தால் அதிகபட்சத் தொகையான நான்காயிரம் கிடைக்கும். சொடுக்கினான்; கிடைத்தது. அடுத்த கட்டம் முப்பதாயிரம் டொலர்கள். வைரக்கற்களைச் சுத்தப்படுத்தும் திரவம் ஆயிரம் வெள்ளிக்கு இருக்கிறது, வாங்குகிறீர்களா? கணினி கேட்டது. சட்டென்று அவனுக்கு பிளட் டைமண்ட் திரைப்படம் நினைவுக்கு வந்தது. வைரம் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது. ஆசையை விட்டொழித்தால் என்ன. வைரங்கள் கதைத்தொடரில் சின்னப் பையன் சேட்டுமகனிடம் அடி வாங்கிச் சாகும் காட்சி மனத்தில் ஓடியது. பாவம் சின்னப் பையன், அவ்வளவாகத் தெரியாத ஒருத்தியைக் காப்பாற்ற ரத்தம் கக்கினான். சுத்தப்படுத்தும் திரவத்தை வாங்கினான்.

இனிவரும் ஆட்டங்களில் திரையில் தங்கப்பாறைகளுடன் ஆங்காங்கே வைரக்கற்களும் தென்படும், சாதாரணமாக அவற்றின் மதிப்பு அறுநூறு வெள்ளி. திரவத்தை வாங்கியபின் எடுத்தால் ஒவ்வொரு வைரக்கல்லுக்கும் ஆயிரம் வெள்ளி கிடைக்கும். பணம் மகிழ்ச்சியைத் தராது, மகிழ்ச்சி பணத்தைத் தராது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. பணத்தைத் துரத்துவதில் அவனுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் குறித்த காலத்தில் கொடுக்கப்பட்ட இலக்கை அடைவதில் இருந்த சவால் அவனை இந்த விளையாட்டின் கைப்பிடியில் வைத்திருந்தது. நேரமோ நாற்பது வினாடிகள்தாம். வேகவேகமாக எடுக்கத் தொடங்கினான். இடையிடையே குட்டிக்கரடிகள் குடுகுடுவென வந்து வைரக்கற்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கின; அதற்குள் அவன் அவற்றை எடுத்தாக வேண்டும். கரடிகளைக் கொல்ல வெடிகுண்டுகள் விற்கும் கடையில் அவன் எதுவும் வாங்கவில்லை. விளையாட்டில்கூட அச்செயலைச் செய்ய அவன் மனம் துணியவில்லை. நம் லாபத்திற்காக விலங்குகளைக் கொல்வது அல்லது இம்சிப்பது எத்துணை பாவச் செயல், இப்படியே விளையாடுவோம் என்று நினைத்துக்கொண்டு கரடிகளை முந்திக்கொண்டு விளையாடினான்.

விலங்கியல் பூங்காவில் நாள் முழுதும் இன்பமாகச் செலவழித்து விட்டு இரவு உணவையும் முடித்து விட்டு வீடு வந்தவர்கள், இரவு பேசிக்கொண்டே இருந்தார்கள். இடையே வேடிக்கைக்காகக் கருங் கரடிகள் வளாகத்தில் கண்ட சீன அழகியைப் பற்றி அவன் ஏதோ பேச பூரணி மிகுந்த கோபம் கொண்டு, “இரு இப்பவே உன் வீட்டுக்குப் போன் செய்கிறேன்” என்று சொன்னாள். “வேண்டாம் வேடிக்கைதான்” என்று அவன் கெஞ்ச, பூரணி மிகுந்த நிதானத்துடன் தொலைபேசியை இயக்கத் தொடங்கினாள். அரும்பாடுபட்டு நிறுத்தினான். தப்புதான், இதே போல் அவள் ஒரு சீன அழகனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தால், நான் எப்படி நடந்துகொண்டிருப்பேனோ; எல்லாப் புதுமணத் தம்பதிகள் செய்யும் தவறுகளையும் அவர்களும் செய்தார்கள். அதேபோல் சரியானவற்றையும் செய்தார்கள்; சிலவற்றிற்குத் தான் அவசரப்படுகிறோமோ என்று நினைத்துக்கொண்டான். பேசக் கூடாத வார்த்தைகளை இருவரும் பேசி விட்டோமே என்றும் வருந்தினான். ஆனாலும் ஒன்று, சம்பவங்களையும் வீசி எறியப்பட்ட சொற்களையும் தேதி வாரியாக நினைவில் வைத்துக்கொள்வதும் தேவையானபோது சரியான நேரத்தில் அவற்றை மீண்டும் கவனமாகக் கொணர்ந்து வரிசையாக நினைவுபடுத்தும் திறனும் அவளைப் போல் தனக்கு இல்லாததையும் உணர்ந்தான்.

அடுத்த கட்டத்தில் கரடிகளுக்குப் பதில் முயல்கள் கூடைகளுடன் வந்து வைரங்களை அள்ளக் குடு குடுவென ஓடிவந்தன; பாறைகளை வெடிவைத்துத் தகர்த்துதான் தங்கப்பாளங்களை அணுக முடியும், கைவசம் திரையோரத்தில் இருந்த மூன்று வெடிகளையும் பயன்படுத்தினான். சுட்டியை அங்குமிங்கும் வேகமாக நகர்த்தினான். முயல்கள் வெறும் கற்பாறையை உற்சாகமாக இழுக்கத் தொடங்கிய கணத்தில் அம்புக்குறியருகில் இருந்த பரிசுப் பையைக் குறிவைத்துப் பற்றி இழுத்தான். ஒரு வெடிகுண்டு கிடைத்தது. பாறையைத் தகர்க்க நினைத்து வெடியை இயக்கியபோது அருகிலிருந்த வைரக்கற்கள் இரண்டும் எரிந்து சாம்பலாயின. ‘சே மடையன்’ என்று தன்னையே திட்டிக்கொண்டான்.

மடையன்தான். மடையனே தான். ஒரே வாரத்தில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவது என்ன அடுத்தவீட்டுக்கு வருவதுபோலவா, ஒரு வார்த்தை, ஒரு வார்த்தைகூட இவனிடம் சொல்லாமல், இருவரின் பெற்றோரையும் கலவரப்படுத்தி வரவழைத்துவிட்டாள். ‘என்னப்பா, என்ன பிரச்சினை?’ என்றதும் உண்மையில் இவனுக்குத் தலைகால் புரியவில்லை. திருமணமான இந்த ஐந்து மாதங்களில் அலுவலக நிமித்தமாக அவன் இரண்டிரண்டு நாள்கள் அண்டை நாடுகளுக்கு நான்கைந்துமுறை போய்வந்தது உண்மைதான். அதற்குப் பூரணி பெரியவர்களிடம் கூறிய காரணத்தை மேலோட்டமாக அவன் தந்தை கூறியபோது அவன் கொதித்துப்போனான். இப்படி ஒரு மதிப்பீட்டை வைத்துக்கொண்டா இந்தச் சில மாதங்கள் பூரணி தன்னுடன் வாழ்ந்துவந்தாள். அவள் பிறந்தநாள் அன்று வைரமாலையை அவள் கழுத்தில் அணிவித்தபோது அவள் பேசிய வார்த்தைகள் அப் போது புளகாங்கிதம் அளித்ததை எண்ணிக் கூசினான். கணவனின் ஒழுக்கத்தின் மீது அடிப்படை நம்பிக்கையும் இல்லாதவளாகவா இருந்திருக்கிறாள்.

அன்பைப் பகிர்ந்துகொண்டதெல்லாம் அவ்வளவுதானா, ஸ்பேம் மின்னஞ்சல்கள்போல. இருவரின் பொருளாதார நிலையையும் இன்னும் இருபதாண்டுகளில் எப்படி ஆக்கலாம் என்றெல்லாம் திட்டம்போட்டுக் கொடுத்தாள்; ஒரு கோடி டொலர்கள். “இல்ல பூரணி ‘பணம் பணம்’னு ரொம்ப அலைய வேணாம், அவசியமானதுக்கு யோசிக்காமச் செலவழிக்கலாம்” என்று சொன்னான். உன் பெற்றோரிடமும் சொல்லியிருக்கிறேன், பாஸ்போர்ட் எடுத்துத் தயாராக இருக்க, நம் இருவரின் பெற்றோரையும் நாமே வரவழைத்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் எல்லாம் சுற்றிக்காட்ட வேண்டும் என்று தான் திருமணத்திற்கு முன்பே நினைத்திருந்ததைச் சொல்லியிருந்தான். முன்யோசனையுடன் முன்பே தன் பெற்றோருக்குக் கடப்பிதழ் எல்லாம் தயாராக வாங்கிவைத்திருந்தான். பூரணியின் பெற்றோரின் கடப்பிதழ் இப்போது தயாராக இருக்கும். ஆனால் அவளோ அவன் சொல்லியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. “அவங்க இங்க வந்து என்ன செய்யப் போறாங்க, எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல நம்ம குடும்பத்தைக் கவனிப்போம்” என்றாள். நம் குடும்பமா, எங்கள் இருவரின் பெற்றோரும் நம் குடும்பம்தானே, எப்படி இந்தச் சில மாதங்களை ஓட்டினாள், இப்படி ஒரு சந்தேகத்தை வைத்துக்கொண்டா? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரின் பெற்றோரும் எப்படி அவசரமாகப் பணத்தைப் புரட்டி விசா எடுத்து அலறிப்புடைத்து வந்திருப்பார்கள் என்று நினைக்கும்போது அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது; அவர்களோ ஏதும் அறியாதவர்களாய் அவனுக்கு மாறி மாறி புத்தி மதி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அம்மா மட்டும்தான் அவனை நன்கு புரிந்துகொண்டிருந்தாள். திருமணம் முடிந்து பூரணி சிங்கப் பூருக்கு வந்தபின் மருமகளிடம் முதல் தடவை சிங்கப்பூருக்குத் தொலைபேசியில் பேசியபோது, அம்மா, பூரணியிடம், “ஏம்மா என் பிள்ளை உன்னை அன்பா வச்சிருக்கானா?” என்று கேட்டபோது பூரணி, “ஆமா ரொம்ப அன்பு, நான் செத்துப் போனா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லியிருக்கார், என் சொத்தெல்லாம் உனக்குத்தான் அப்படின்னு சொல்லியிருக்கார்” என்றாள். இவன் பின்னொரு நேரத்தில் “இப் படி வெடுக்குன்னு பேசாத பூரணி, பெரியவங்க மனசு கஷ்டப்படும்” என்றபோது, “என்ன கணேஷ் நான் பொய் ஒன்னும் சொல்லலையே, நீ சொன்னதத் தானே சொன்னேன்” என்று வியப்பும் கோபமும் கலந்து கேட்டது நினைவுக்கு வந்தது.

பூரணி, கணவனால் ஏமாற்றப்பட்டுத் துக்கப்படும் பெண்போல் அழுதுகொண்டிருந்தாள்; அவனுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. போட்டதைப் போட்டபடி போட்டுவிட்டு வந்தவர்கள் இவனிடம் சில சத்தியங்களையும் வாக்குறுதிகளையும் வாங்கிக்கொண்டு, நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் அதுபோதும் என்று வந்த வேகத்தில் போனார்கள். அவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் உள்கதவைப் பூட்டியவுடன் சாவிக் கொத்தை வீசினான். பூரணி சலன மின்றித் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சுரங்க விளையாட்டின் இறுதிக் கட்டமான இருபதாம் கட்டத்தை அடைந்தான். இலக்கு பத்து மில்லியன், அதாவது ஒரு கோடி டொலர்கள். தங்கப்பாறைகள், கற்பாறைகள், போலி பணமுடிப்புகள், வைரங்கள் இவற்றின் இடையே ஆங்காங்கே மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று வெவ்வேறு வண்ணங்களில் நான்கு சிறு சாவிகள் ஜோதிப்புல்போல் ஒளிர்ந்து கொண்டு நொடிக்கொருமுறை தெரிந்தும் தெரியாமலும் கண்ணாமூச்சி ஆடின. அவற்றை மட்டும் ஐம்பது வினாடிகளுக்குள் எடுத்துவிட்டால் இந்த ஆட்டத்தில் வெற்றியடைந்து விடுவான். அதன் பின் இந்த ஆட்டத்தை அவன் ஆட முடியாது, ஆடவும் தேவையில்லை, தங்கமும் வேண்டாம் வைரமும் வேண்டாம், அவற்றைத் துரத்திக் கொண்டு போனால், இதனுள்ளிலிருந்தே வேறு ஒரு ஆட்டம் தொடங்கி ஆசை காட்டும்; எப்பாடுபட்டாவது சாவிகளை எடுத்துவிடுவோம் எனத் தீர்மானித்துத் தன் கவனம் முழுவதையும் ஆட்டத்தில் குவித்து வேறெததையும் நினையாது சுட்டியை இயக்கிக்கொண்டிருந்தான். அம்புக்குறி அசையும் வேகத்தைத் துல்லியமாகக் கணக்குப்போட்டான். மூன்று சாவிகளை எடுத்துவிட்டான். நான்காவதை அவன் குறிவைக்கும்போது தங்கப்பாறை, வைரங்கள், பணப்பை முடிச்சுகள் எதுவும் அவன் கண்களில் படவில்லை சாவி ஒன்றைத் தவிர. இப்படித்தான் பார்த்தன் குறிபார்த்திருப்பானோ, நான்காம் சாவியையும் லாவகமாக எடுத்துவிட்டான். கணினித் திரை இந்த விளையாட்டில் அவன் எடுத்த புள்ளியே உலகில் இந்த மாதத்தில் இதுவரை இவ்வாட்டத்தை ஆடியவர்களில் ஆக அதிகமாகச் சம்பாதித்தது இவன்தான் என்றும் இனி அவன் இந்த ஆட்டத்தை ஆட இயலாது என்றும் கூறியது.

வியர்வைக்குளத்தில் தன் உடல் இருந்ததை அப்போதுதான் கவனித்தான்.

எழுந்து நின்று தன்னைச் சுற்றிப் பார்த்தான். கணினி, நாற்காலி எதையும் காணோம், ஏன் அவன் அறை, வீடு எதுவும் தட்டுப்படவில்லை.

திகைத்துப்போனான்.

அவன் நின்றுகொண்டிருந்த இடம் கட்டுமானத்தளம்போல் காணப்பட்டது. அங்கங்கே நிலப் பகுதிகள் தோண்டப்பட்டுக்கிடந்தன. ஒரு பக்கம் மணற்குவியல்களாக இருந்தன. தொலைவில் ஏதோ வெடிமுழக்கம் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பினான். இல்லை இது என் வீட்டில் வீட்டருகில் ஊரில் இல்லை எதுவுமே இல்லைபோலிருக்கிறதே. இருபதடி தொலைவில், முகப்பில் பெரிய மண்வெட்டி பொருத்தப்பட்ட பார இயந்திர வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. இவன் நின்ற இடத்திற்குப் பின்புறம் நூறு வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் தனக்குத்தானே உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்; சுற்றுமுற்றும் பார்த்தான். இது அவன் முன்பின் பார்த்தேயிராத நிலப்பகுதிபோல் தோன்றியது.

அவர் அருகில் சென்றான். அவரை யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவர் முக அமைப்பு வேறு மாதிரி இருந்தது. வியட்நாமியரா பர்மியரா கம்போடியரா ஆனால் இவர் நிச்சயம் சிங்கப்பூரர் இல்லை, அவர் ஏதோ அவன் காதிலேயே விழுந்திராத புதிய மொழியில் ஓரிரு வாக்கியங்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். மண் ஏற்றும் பெரிய பாரவண்டியில் ஒன்றின் பக்கவாட்டில் ‘சுலபத் தீவு’ என்று ஆங்கிலத்தில் கோணல் எழுத்துகளில் மங்கிய வண்ணத்தில் எழுதியிருந்தது. அதன் அருகில் மிக எளிய உடை அணிந்த கும்பல் ஒன்றிலிருந்து ஒரு பெண், கால்மேல் கால்போட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவனிடம் ஏதோ கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். அங்கே நின்றிருந்த இளைஞன் ஒருவனிடம் ஆங்கிலத்தில் பேசிப் பார்த்தான். அவன் பதில் பேசிய மொழி இவனுக்குப் புரியவில்லை. எட்டு வயதுச் சிறுமி ஒருத்தி அந்தக் கும்பலில் ஓரத்தில் நின்றவாறு தனித்து அழுது கொண்டிருந்தாள். அப் படியே கால் மேல் கால் போட்டு நாற் காலியில் அமர்ந்திருந்தவனிடம் ஓடிவந்தாள். அவன் அவளை தடித்த குச்சியால் நகர்த்தி விட்டு ஏதோ கத்தினான். அவளருகில் மெல்ல நகர்ந்துபோன கணேசன், “பாப்பா, அழாதே” என்றான். அந்தச் சிறுமி இன்னும் உரக்க அழத் தொடங்கினாள். அவள் உடலின் சருமம் முழுதும் அங்கங்கே வெவ் வேறு பழுப்பு நிறங்களுடனும் புண்களுடனும் இருந்தது. அவள் அணிந்திருந்த உடை நைந்துபோயிருந்தது. அவள் கைகள் மிக மிக ஒல்லியாக, அவனுடைய தம்ப் டிரைவ் அகலத்தில் இருந்தன. சிறிது நேரத்தில் அந்தக் குழுவிலிருந்து சிலர் அடியாள்போல் இருந்த ஒருவன் பின் போனார்கள். மற்றவர்கள் தொங்கிய முகத்துடன் அவ்விடத்தைவிட்டுத் தயங்கித் தயங்கித் தங்களுக்குள் தாழ்குரலில் பேசியவாறு அகன்றனர்.

கணேசன், பாய்ந்து நாற்காலியில் அமர்ந்திருந்தவனை எட்டிப்பிடித்துப் படபடப்புடன் ஆங்கிலத்தில் பேசினான். அவனோ கணேசனைத் துரத்துவதிலேயே கவனமாக இருந்தான். உடைந்த ஆங்கிலத்தில் வேற்றுமொழியின் தொனியில் வேக மாகப் பேசினான். இருவரும் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார்கள்.

“இதோ பார் இந்தச் சிறுமியை விட்டுவிடு. அவளுக்கு உடனடித் தேவை சரியான சாப்பாடும் மருத்துவக் கவனிப்பும்; இங்கே மருத்துவமனை எங்குள்ளது?”

அவன் உரக்கச் சிரித்தான். அவன் சிரித்தபோது செவிமடல்கள் நாசித் துவாரங்கள் மட்டுமன்றி அவன் நெஞ்சும் தோள்களும்கூட ஆடின. “இவள் அப்பன் ஆத்தா, அண்ணன் எல்லாம் தங்கச்சுரங்க வெடிவிபத்தில் காலி, இவள் பாட்டன் முழுக்கிறுக்கன் ஆகிவிட்டான். அங்கே பார், ஒரு டன் ஒரு உயிர் ஏழு மருந்து என்பதையே நாள் முழுக்கச் சொல்லிக்கொண்டிருப்பான். இது ஒரு நாளைக்கு ஐந்து யு.எஸ். வெள்ளிக் கூலிக்கு வந்துகொண்டிருந்தது. இரண்டு நாளாய்க் காய்ச்சல் வரவில்லை. வேலைக்கு வர முடியவில்லை, இன்று சாப்பிடக் காசு தா, உடனே வேலைக்கு வருகிறேன்” என்று சொல்லுகிறது என்றவன் இருந்த இடத்திலிருந்து சில சில்லறைச் செப்புக்காசுகளை விட்டெறிந்தான். அந்தச் சிறுமி கண்கள் விரிய பாய்ந்தோடி வந்து அவற்றைப் பொறுக்கிக்கொண்டு ஓடினாள்.

ஒரு டன் ஒரு உயிர் ஏழு மருந்து என்றால் ..?

“ஹா ஹா இதுகூடத் தெரியாதா; உலகில் எல்லாச் சுரங்கங்களுக்கும் பொதுவான மொழி இது. எடுக்கப்படும் ஒவ்வொரு டன் தங்கத்திற்கும் ஒரு கூலி கட்டாயம் செத்திருப்பான், ஏழெட்டுக் கூலிகள் ஆபத்தான நிலையில் அதிகபட்சக் காயத்துடன் இருப்பார்கள். உன்னைப் பார்த்தால் படித்தவன் போலிருக்கு, 2009இல் எங்கள் தீவின் தங்க ஏற்றுமதிதான் ஆகக் கூடுதலானது தெரியுமா?”

“குழந்தையை வேலைவாங்குவது உலகெங்கும் பெரிய குற்றம் தெரியுமா; இவளை நான் மருத்துவரிடம் அழைத்துச்செல்லப்போகிறேன்”.

“இருநூற்று ஐம்பது யு.எஸ். டாலர் இவள் குடும்பம் கடன் வைத்திருக்கிறது. இவளை இவள் ஆயுள் முழுக்க விட முடியாது.”

கணேசன் வேகவேகமாகத் தன் பர்ஸைத் திறந்து, “இந்தா அதற்கீடான சிங்கப்பூர் டாலர்கள்; இந்தக் குழந்தையை என்னுடன் அனுப்பு”

“ரொம்ப உருகுகிறாயே, நீ போட்டுக்கொண்டிருக்கும் மோதிரத்திற்கு 20 டன் சுரங்கக் கழிவு ஆகிறது தெரியுமா; கடனை அடைத்துவிட்டாய், உன் காசும் தீர்ந்துவிட்டது. உன் கடன் அட்டைகளால் இங்கு ஒரு பயனும் இல்லை. இது உன் நாடு இல்லை. இங்கு நான்தான் எல்லாம். நீ கேட்டுக்கொண்டதுபோலவே இவளுக்கும் இவள் பாட்டனுக்கும் சாப்பாட்டு டோக்கன் தருகிறேன். அதற்கு இன்று மாலைவரை நீ வேலை செய்”

“ஏய் இங்கே வா” என்றவாறு வேறு ஒரு அடியாளை அழைத்துக் கணேசனை அவனுடன் அனுப்பினான். சிறிது நேரத்தில் கணேசன் சுற்றிலும் கம்பிவலை இட்ட பெருங் கூடையில் இன்னும் சிலருடன் ஒரு லோடர் உதவியுடன் தலையில் நசுங்கிய கவசத்துடன் பாதாளத்தில் இறங்கத் தொடங்கினான். =

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *