ஒரு குட்டித் தீவின் வரைபடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 4,183 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நோன்புப் பெருநாள் நெருங்கும்போதுதான், ஊருக்குள் தலைச்சுமை ஜவுளி வியாபாரி நாராயணன் வருவது வழக்கம். சட்டை வேஷ்டி நிக்கர் என்று விளித்துக் கூவாமல், நுகர்வோரைக் கவரும்படி வசப்படுத்திய விசித்திரமான ஒரு குரலை நீட்டி எழுப்பிக் கொண்டு சந்து பொந்து களில் திரிவான். துணி அளந்து கொடுக்க, கையில் ஒரு கெஜக்கோல் இருக்கும்.

நோன்பு பிறை பத்து ஆனதும் நாராயணன் ஜவுளி மூட்டையுடன் ஊருக்குள் நுழைந்துவிடுவான். அவனுக்குத் தெரியும், செல்வந்தர் களின் பணப்பெட்டிகள் திறப்பது நோன்பு பத்துக்குப் பிறகுதான் என்று. பத்துக்குப் பிறகு சக்காத்து வாங்க வருவோரை வீட்டு முற்றத்தில் கூடச் செய்து சக்காத்து பணம் வழங்காத சுபாவம் வாப்பாவுடையது. இந்தச் சுபாவம் எனக்குப் பிடிக்காது. எங்கள் வீட்டு முற்றத்தில் சக்காத்து வாங்க மக்கள் திரண்டு நிற்பது பார்க்கப் பெருமையாக இருக்கும். வீட்டை விட்டு வெளியே வராத ஏழைப் பெண்கள், வாய் திறந்து கேட்க வெட்கப்படக்கூடிய மானிகள், விதவைகள், அவதிப்படும் நோயாளிகள் போன்றோர்களின் பெயர் அடங்கிய பட்டியல் வாப்பாவிடம் உண்டு. பட்டியலில் பெயர் உள்ள நபர்களுக்கு அவர்களது வீடுதேடிச் சென்று சக்காத்து கொண்டு கொடுப்பதுதான் போரிசை(நன்மை)யானது என்பார் வாப்பா, வீட்டில் வருவோருக்கும் வாப்பா கொடுக்காமல் இருப்ப தில்லை. ஆனால் சில இடிதடியர்கள் வந்தால், ‘போய் வேலை செய்து திண்ணுங்கடா’ என்று ஓங்கி அடிப்பார்.

வாப்பாவின் சுபாவம் இப்படித்தான் என்று தெரியும். இருந்தாலும் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், ஒரு கல்சான் (நிக்கர்) வாங்கித் தராத வாப்பாவின் மனசு கல்லேயாகும். மத விதிக்கு எதிரானது என ஒரு பதிலைக் கொண்டு என் வாயை மூடித் தைத்து விடுவார்.

‘முஸ்லிம் பிள்ளைகள் கல்சான் போடப்படாதடா, தொடையைக் காட்டி நடக்கூது ஹராம்பீல.’

நாராயணன் ஜவுளி மூட்டையை வீட்டுத் திண்ணைகளில் இறக்கி வைத்துத் துணிகளைப் பரப்பிப் போட்டு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி விலை சொல்வான். இப்படிப் பரப்பிப் போட்டிருந்த போதுதான் ஒருமுறை நாராயணன் கண்ணில் மண்ணள்ளிப்போட்டு கள்ளி சிலையா இரண்டு சாரத்தை(லுங்கி) லாத்திப் போட்டாள். வரி முறிஞ்ச கள்ளி!

நான் எடுக்கலேன்னு நூறு பள்ளி மேல ஆணை போட்டு சாதித்து விட்டாள்.

‘அவள் விளங்காமல் போவ’ நாராயணன் சாபம் போட்டான்.

அவன் சாபம் போட்ட அடிக்கு, அவளுடைய புருஷன் ஆற்றில் முங்கிச் செத்து அவள் தாலி அறுத்து அறுதலியானாள்.

‘உம்மா, எக்கு ஒரு கல்சான் வாண்டி தா உம்மா’

உம்மாவிடம் எப்பவும் போல் கேட்டு அழுதேன்.

‘முஸ்லிம்கள் கல்சான் போடப்படாதுடா. கல்சான் போட்டு நின்னுட்டு மோளுது பாவம்பிலே.’

பக்தியுள்ள உம்மாவிடமும் எந்த எசக்கமும் காணவில்லை.

நெஞ்சில் அறைந்து அழுதாலும் கிடைக்கப்போவகில்லை. உறுதி. பெருநாளுக்கு ஒரு காசா முண்டும் அரைக் கைச் சட்டையும் வாங்கித் தந்து என் அழுத வாயை அடைப்பார் வாப்பா. இன்னும் கொஞ்சம் சிணுங்கினால் ஒரு தோர்த்தும் (துண்டு) வாங்கிக் கிடைக்கும். மொட்டைத் தலையில் தலைப்பா கட்டித் தொழுவதற்கு அதுவும் இல்லையானால், உரிஞ்ச நிலையில்தான் குளிக்கவும் வேண்டும்.

ஒரு சிவப்பு கல்சான் வாங்கிக் கிடைக்காத கவலை, வெகு நாளாக மனசில் வீசிக் கொண்டிருந்தது.

சுப்பையா பணிக்கர் மகன் நமச்சிவாயமும், வீட்டில் மீன் விற்க வரும் காக்கை முக்குவத்தியின் மகன் பிராஞ்சீஸும் கல்சான் போட்டுக் கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கு வருவது, பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். போட்டு நடக்க மூக்களவு ‘கொதி.’

இடுப்பிலிருந்து கழண்டு விடாதபடி தோளில் மாட்டக் கூடிய ‘வள்ளி நிக்கர்’. சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் செடிக்குத் தண்ணீர் விடக்கூடிய செல்லையா போட்டிருப்பது காக்கி கல்சான்.

‘ரண்டு ரூபா.’

விலை கேட்டபோது நாராயணன் இரண்டு விரலைக் காட்டினான். எங்கே போக இவ்வளவு ரூபாய்க்கு?

எனக்குள்ள பெருநாள் கச்சாத்து என்பது, ஒரு எம் எஸ் காசா முண்டு – நாலுமுழம் ஒண்னே கால் ரூபாய். ஒரு சட்டைத் துணி-ரண்டு முழம் ஒண்ணரை ரூபாய். கண்ணன் மேஸ்திரிக்கு ‘அடிகூலி’ கால் ரூபாய். எனக்கு ஒதுக்கினது மூணு ரூபா என்று இருக்கையில் கல்சான் வாங்க ரண்டு ரூபாய்க்கு எவனைப் போய் வாப்பானு கூப்பிட?

போன பெருநாளுக்கு ஆண்மக்கள் இல்லாத குட்டி வாப்பாவிடம் ஒரு கல்சான் வாங்கிக் கேட்டபோது போடப்படாதுடான்னு சொல்லி விரட்டியடித்தார்.

வேறு ஊர்களுக்குப் போய் ஆள் தெரியாமல் கூட்டத்தோடு கூட்டம் சக்காத் பணம் வாங்கினாலோ? அந்த வழிக்கு ஆலோசனை திரும்பியது. ஆனால் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து வாப்பாவின் காதில் ஊதினால் அவ்வளவுதான். வீட்டு வாரியில் சொருவி வைத்திருக்கும் புளியம் மாறில் என் தொடைத் தோல் ஒட்டிவிடும்.

தனவான்கள் நோன்பு காலத்தில் சக்காத் கொடுப்பது கட்டாயம். கள்ளத்தனமாக சக்காத் வாங்குவோரும், சக்காத் கொடுக்காத கருமி களும், சக்காத் பணத்தைக் கையாடல் செய்பவரும் பாவிகள். இவர் களுடைய வயிறுகள் ஊதிப் பெருகி வெடிக்கும். கபரில் (புதைகுழி) இவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். பிறகு பெரிய தண்டனை கிடைக்கும். சொல்ல முடியாத தண்டனை-தாங்க முடியாமல் அழுது அழுது தொண்டை வறண்டு பசியாலும் தாகத்தாலும் துடியாய்த் துடிக்கும்போது குடிப்பதற்கு நரக நெருப்பில் சுடவைத்துக் கொதித்து நுரைக்கும் தண்ணீர்தான் இருக்கும். பசிக்கு, திங்க மலைபோல் குவித்துப் போடப்பட்டிருக்கும் தீங்கங்குகள். இறப்பில்லாத உலகத்தில் ஆனதால், கொதித்துப் பதைக்கும் தண்ணீர் குடித்தாலும் தீக்கங்குகள் அள்ளிச் சாப்பிட்டாலும் இறப்பே வராது. சீழ் வடியும் காயங்களில் கொதிக்கும் எண்ணையை விட்டுத் தாரை வார்ப்பதற்கென தலையில் பூ வளர்ந்த கொடிய விஷப் பாம்புகள் உள்ளன. கடற்கரை ரோட்டில் பலசாக்கு மொத்தக் கடை நடத்தி வந்த பிசுக்கினி நைனாம்மதை அடக்கம் செய்து விட்டு, சொந்தபந்தங்கள் வீடு திரும்புவதற்கிடையில் அவருடைய கபருக்குள்ளிருந்து புகை கிளம்பியதை ஊர்ஜனம் பார்த்து அதிர்ந்து விட்டார்கள். தொழுகையும் நோன்பும் இல்லாத, நோன்பு காலத்தில் கூட ஏழை எளிய ஜனங்களுக்கு அஞ்சு காய் ஈயபாயாச் செய்யாத பாவிக்கு ரப்பு தம்பிரான் வழங்கிய வெளிப்படையான தண்டனையை மக்கள் கண்ணால் கண்டனர். செய்துவிட்ட பாவங்களுக்கு உடன் தொழுது தௌபா (மன்னிப்பு) கேட்டு, சொர்க்கம் கிடைக்க துஆ (வேண்டுதல்) செய்தனர்.

கபரிலிருந்து புகை வருவதைப் பார்த்ததாகச் சொல்லிப் பரப்பியவர்கள் யாரும் புகையைப் பார்க்காதது, பாவிகள் எரியும் புகை நல்லவர்கள் கண்களுக்குப் புலப்படாது என்று மோதினார் விளக்கம் சொன்னார். அந்த வார வெள்ளிக் கிழமை தொழுகைக்கு முன் சொற்பொழிவு ஆற்றிய மவுலானா மௌலவி அசதுத்தீன் மன்பஈ, மைய்யவாடிக்கு நேராக விரல் சுட்டி எச்சரிக்கை செய்தார்.

‘சகோதரர்களே, பார்த்தீர்களா, கபரிலிருந்து நெருப்பு வந்ததைஉங்கள் கபர்களுக்கு இப்படி நேராமலிருக்கத் தொழுது நோன்பு வைத்து கணக்குப் பார்த்து சக்காத் கொடுங்கள்.’

வெள்ளிக் கிழமை மதியத் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த வாப்பா நோன்பு வைத்திருந்த வாயுடன் இருகையேந்தி துஆ கேட்டது.

‘அல்லா! என் கபரை விசாலமான பூங்காவாக்கித் தா.’

கொஞ்ச நேரம் ஏந்திய கையோடு கண்மூடி இருந்து விட்டு முன் வருடங்களைப் போல் அந்த வெள்ளிக் கிழமையே வாப்பா சக்காத் கொடுக்கத் துவங்கியது. பெயர், வீட்டுப் பெயர் அடங்கிய நீண்ட பட்டியல் வாப்பா தயார் செய்து கொண்டிருக்கையில், நாராயணன் குரல் தோப்புப் பள்ளி மினாரத்தில் மோதியது.

‘வாப்பா ஒரு கல்சான்.’

கேட்க எடுத்த என் நாவை, உள்ளிருந்து ஏதோ ஒரு கை உள்ளே இழுத்துப் பிடித்தது. நோம்பிருக்கும்போது வாப்பாவுக்கு எங்குமில்லாத வேகாரி பீறிட்டு எழும். இதக் கேடாய் போய் விழுந்து கொடுத்தால் வந்த வாக்கில் அறைவிழும். நோன்பு வைத்திருப்பதால் பகல் நேரம் வெற்றிலை போடாத வாப்பாவின் முகம், கோபக் கொந்தளிப்பாக இருக்கும். நாளை இந்தக் கோப முகங்கள்தான் சொர்க்கத்தில் ஜொலிக்கும்.

கல்சானின் இரு பக்கவாட்டிலுமுள்ள ஜேப்பில் கொண்டைக் கடலை போட்டுக் கொறித்துக் கொண்டு ஆசை காட்டி நடக்கும் நமச்சிவாயம் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு வரமாட்டான். சார் போடு போடுனு போடுவார். மீன்பாடுள்ள நாட்களில், பிராஞ்சீஸ் கல்சான் ஜேப்பில் ஆலங்காயும், அச்சு வெல்லமும் போட்டுத் தின்பான். கல்சான் மீது சட்டை யைப் போட்டுக் கொண்டால் ஜேப்பில் இருப்பது வெளியே தெரியாது.

‘இத்திப்போல தாடேய்’ எவனும் கைநீட்ட மாட்டான். கடந்த மூளை பயக்களுக்கு!

வாப்பா பெயர் எழுதிக் கொண்டிருக்கையில் நாராயணனுடைய குரல் கேட்ட திசைக்கு ஒரே பாய்ச்சல்.

சொகறா மாமி வீட்டுத் திண்ணையில் நாராயணன் ஜவுளி மூட்டை அவிழ்த்துக் காட்டிக் கொண்டிருந்தான். கல்சானை கட்டை அவிழ்த்துக் காட்டவில்லை. ‘துலுக்கப் புள்ளியோ கல்சான் போடமாட்டாங்களே.’ அழகழகான கட்டம் போட்ட, புள்ளிகள் போட்ட, கோடுகள் போட்ட சட்டைகளும் கல்சான்களும் இருந்தன. ஒரு சிவப்புக் கல்சானைத் தொட்டுக் கொண்டு விலை கேட்டேன்.

இப்பவும் இரண்டு விரலைக் காட்டினான். எதை எடுத்தாலும் ரண்டு ரூபாய்தானா? உம்மாவிடம் கேட்டு அழுது பயனில்லை.

வாப்பாவுக்கு உம்மாவிடம் ரூபாய் கொடுத்து வைக்கும் பழக்கமும் இல்லை. வருஷத்துக்கு ஒரு உடுப்புதான் எனக்கு. பெருநாளைக்கு மட்டும் ஒரு எம் எஸ் காசா முண்டு. அதை வைத்து ஒரு வருஷத்தை ஓட்ட வேண்டும். சட்டையிலும் முண்டிலும் தோர்த்திலும் எப்பவும் கொல் லண்டிக் கறை படிந்திருக்கும். வண்ணாக்குடிக்குப் போடுவ தில்லை. போனால் கிழிந்துதான் வரும். கண்ணன் மேஸ்திரியிடம் கொடுத்து காக்கத் தொள்ளாயிரம் தையல்கள் போடணும். உம்மாவின் கைத் தையல் வேறே.

சொகறா மாமி, அவுங்களுக்கும் குஞ்சு குறுமால்களுக்கும் துணி மணிகள் வாங்கி முடியும் வரை, நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தேன். நாராயணன் ஜவுளி மூட்டையைக் கட்டி தோளில் எடுக்கும் வரை பார்த்து நின்ற என் கால்கள் களைக்கவில்லை. பள்ளிப் பிடாகைக்குப் போற முடுக்கு திரும்பும் வரை அவனைப் பின் தொடர்ந்தேன். அவன் குரல் விலகி விலகிச் சென்று சந்து பொந்தில் மூச்சடங்கியது.

வாப்பா சக்காத் பணம் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென்ற பட்டியல் தயார் செய்து வைத்திருந்தது. பட்டியலில் உள்ள நபர் பெயரும், வீட்டுப் பெயரும் வாசித்துக் காட்டி ‘தெரியுமா? தெரியுமா?’ என்றார். தெரியும் என்று தலையை அசைத்தேன். ஒருரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்கு ஒரு ரூபாய் நோட்டுகள் தனியாகவும், இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்கு இரண்டு ரூபாய் நோட்டுகள் தனியாகவும் தந்து, சதுரமாக வீடு வீடாகக் கொண்டு கொடுக்கச் சொன்னார். நாராயணனின் நெடிய குரல் தோப்புப் பிடாகைக் காற்றில் மிதந்து வரவில்லை. தோப்புப் பிடாகையில் உள்ள அறுதலியான சைனபா மாமிக்கு முதல்ல சக்காத் பணம் கொடுத்து, ‘வாப்பா தந்து விட்டது’ என்றேன். தலையில் கவிணி தூக்கிப் போட்டுக் கொண்டு இரு கைகள் நீட்டி வாங்கிவிட்டு, ‘அல்லா தடி (உடம்பு)க்கு ஆபியத்தும் யாவாரத்தில் பரக்கத்தும் தருவான்’ என்று வாழ்த்தினாங்க. அங்கிருந்து தட்டாக்குடிச் சந்திலுள்ள மைதீன் பீவி பெத்தாம்மா வீட்டுக்குச் செல்லும் வழியில், முத்துசாமி ஆசாரியின் மகன் அய்யப்பன் பயலைப் பார்த்தேன். பின்பக்கம் கிழிஞ்ச கல்சான் போட்டிருந்தான். நின்ற நிலையில் அவன் செத்தை வேலியில் பாய்ச்சிவிட்ட சிறுநீரின் சூடு தட்டியதும் செத்தையிலிருந்த பல்லி அரவம் காட்டாமல் ஓட்டா ஓட்டம். அது ஓடுவதைப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. செத்தையிலும் கல் மதிலிலும் மரத்திலும் அப்பியிருக்கும் பல்லி, பாச்சான்களின் மீது சிறுநீர் பாய்ச்சி விடும்போது, அவை பதறி ஓடுவது பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கும். சிலந்தி ஒடுவதைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.

‘இன்னா, வாப்பா தந்துட்டுது’ என்று சக்காத் பணத்தைக் கொடுக்கும் போது ‘நீ ஆரு மக்கா?’ என்று விசாரிப்பார்கள்.

‘தோப்புல குட்டிக்கண்ணு மகன்.’

‘என் ஓடயக்காரனில்லையா! வருசா வருசம் உள்ள ஹக்கை மறக்காம குடுத்து உடுவான். நல்லாயிருப்பான்.’

வலியாற்றிலிருந்து ஈரம் நக்கி வந்த காற்றில் நாராயணன் குரல் ஊடுருவியது. என் வெளுத்த உடம்புக்குச் சிகப்பு கல்சான் இணக்கமாக இருக்கும். போன பெருநாளுக்கு எடுத்த சிகப்புச் சட்டையைப் போடும் போதெல்லாம் வலியாத்தா சொல்வாள் ‘பயலுக்கு சொவப்புச் சட்டை நல்ல இணக்கம்.’

ஞானி வீட்டுத் திசைக்குச் செல்லும்போது நாராயணன் குரல் அந்தச் சுற்றுவட்டாரக் காற்றைப் பிளந்தது.

பெயர் பட்டியலில் கண்கள் தேடின. பிள்ளைகளுக்குக் குர்ஆன் பாடம் ஓதிக் கொடுக்கும் காது கேளாத நொண்டி கண்ணும்மாவுக்கு இரண்டு ரூபாய் என்றிருந்தது. பெயர்ப் பட்டியலில் ஞானி வீட்டு எலப்ப மாமி என்று மதிப்பாக வாப்பா எழுதியிருந்தது. தள்ளாத வயது. படுக் கிழடு. வெளு வெளுவெனக் கோழியைத் தோல் உரித்து வைத்தாற் போல். ரூஹை(உயிரை)ப் பிடிக்கும் இஸ்ராயில், மணி அடித்து ஆட்களை விலக்கிக் கொண்டு, சைக்கிள் மிதித்து ஞானி வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார். அவருடைய நீண்டு கூரிய நகம் கிழவியின் சங்கு வளையத்தில் துளைபோட்டு குருவிக் குஞ்சை நுள்ளி எடுத்து உயரப் பறப்பதற்கு, ஆற்றுப் பள்ளி முட்டியில் காணிக்கை போடுவதாக வீட்டிலிருந்து இறங்கும் போது மனசில் ஒரு நேமிதம் இருந்தது.

வறட்ச நோயாளி சாலியாளுக்க வீட்டுப் போற வழியில், பாம்பேக் காரன் வீட்டுத் திண்ணையில் நாராயணன் துணிகளைப் பரப்பிக் காட்டிக் கொண்டிருந்தான். ஒரு சிகப்புக் கல்சானைத் தொட்டபோது, தொடாதடா என்று கையை எடுக்கச் சொன்னான். கரண்டு அடிச்சது போலிருந்தது சொன்னது.

‘ஒரு கல்சான்.’

காசுக்காக நாராயணன் நீட்டிய கைக்கு இரண்டு ரூபா நோட்டு, கண்கட்டு வித்தையில் கைமாறியது. கட்டிலிருந்து உருவித் தந்த சிவப்புக் கல்சான் எனக்கு இணக்கமாக இருந்தது.

மடித்து கக்குமடியில் போட்டிருந்த கல்சானை, உம்மாவோ வாப்பாவோ காணவில்லை. வாப்பாவிடம் கணக்கு ஒப்புவித்த நேரம், நோன்பு வைத்திருந்த வாப்பாவின் சுருங்கிப் போன முகம் மலர்ந்தது. ஒப்படைத்த வேலையை நம்பிக்கையுடனும் கனகச்சிதமாகவும் முடித்து விட்டு வந்த கண்ணான மகனின் தலையில் தடவும்போது வாப்பா கேட்டார். ‘ஞானி வீட்டு எலப்ப மாமி கையில்தானா கொடுத்தாய்?’

‘ஓ! புள்ளிகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்துட்டுருந்தாங்க.’

நமச்சிவாயத்தையும் பிராஞ்சிசையும் போல கல்சானின் முன்பக்க முள்ள ஓட்டை வழியாகக் கொடி விளாகத்துக் குளத்துங்கரையில் நின்ற நிலையில் சிறுநீர் பெய்வதாகவும், இரண்டு பக்கவாட்டு ஜேப்பிலும் வறுத்த பட்டாணிக் கடலை போட்டுத் தின்பதாகவும் அன்று இரவு கனவு கண்டு கிடந்தேன்.

பெருநாளுக்கு கல்சான் போட்டுப் பெருமை அடிக்கலாம் என்றால் கால் மூட்டு தெரிவதால் பள்ளிவாசலுக்குள் நுழைய விடமாட்டார் தின்னி லெப்பை.

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் செல்ல புதிய சிகப்புக் கல்சான் தூக்கி மாட்டும் போது உம்மா கண்டுவிட்டாள். மூக்கில் விரல் வைத்துக் கொண்டு கேட்டார். ‘இது ஏதுடா?’ ‘குட்டியப்பா வாண்டித் தந்தது.’ உம்மாவின் பார்வையில் நம்பிக்கையில்லாமை தெரிந்தது. தாங்க முடியாத வெறுப்பும் கலந்திருந்தது. என்னை வழிகெடுத்த குட்டி யாப்பா மீது, அடக்க முடியாத கோபம்.

‘புள்ளியள நாசப்படுத்துதுக்கா, குட்டியப்பா கூதற புள்ளியோ போடுத இந்தக் கல்சான் வாண்டித் தந்து செல்லம் காட்டினாரு.’

வாப்பாவின் கண்ணில் அகப்படாமல் சிலேட்டும் குச்சியும் எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம் பள்ளிக்கூடத்துக்கு.

பள்ளிக்கூடத்தில் எல்லாப் பயல்களும் என்னை அதிசயமாகப் பார்த்தார்கள்.

சோக்கு திண்ணி சார் பாராட்டினார். ‘பேஷ் கொள்ளாண்டேய்.’

ஒண்ணுக்கு விட்ட போது ஒருபோதும் கூப்பிடாத நமச்சிவாயம் கூப்பிட்டான்.

‘நமக்கு மோளப் போவுமாடேய்.’

பிராஞ்சீசும் ஒட்டிக் கொண்டான். ‘நானும் வாரேண்டேய்.’

பள்ளிக்கூடத்தின் பின்பக்கம்தான் எல்லாரும் ஒண்ணுக்குப் போற கொடி விளாகத்துக் குளம். தண்ணீர் இல்லாம முன்னமே மணல்மூடி தூர்ந்துவிட்டிருந்தது. வெற்றிலைக் கொடிக்கு நனைக்கத் தோண்டப் பட்டது. வெற்றிலைக் கொடி பட்டுப்போனதற்குப் பிறகு வறண்ட குளத்தின் கரை மணலில், பிள்ளைகள் வாளி (கடற்சிப்பி) ஓட விட்டு விளையாடி, குளத்தை நிரப்பினார்கள்.

‘மத்திரம் வச்சு பாய்ச்சுவோமா?’

‘ஆருக்கு சிறுநீர் நீளமா போவுதுணு பாப்பமே?’

கல்சான் போட்ட நாங்க மூவரும் ஐக்கியப்பட்டு குளத்தங்கரை யில் வரிசையாக நின்று கல்சானின் முன்பக்கமுள்ள வாசல்களைத் திறத்தோம்.

அடக்கித் தேக்கி வைத்திருந்ததை, சர்ர்ர்ர்னு தட்டி விட்டேன். வில் போல் வளைந்து, மற்ற இரு வில்களை விடவும் முந்தும்படித் தொலைவில் பாய்ச்சிவிட மணலில் ஒரு குட்டித் தீவின் வரைபடம் வரைந்து ரசிக்கையில் விழுந்ததப்பா, பிட்டத்தில் ஓங்கி ஓர் அறை.

தரையில் விழுந்து அட்டைபோல் சுருண்டு துடியாய்த் துடிக்கையில் நிமிர்ந்து பார்த்தேன்.

வாப்பா! நோன்பு வைத்திருந்த வாப்பாவின் வெற்றிலை போடாமல் வெளிறிச் சுருங்கிப் போயிருந்த முகத்தில், கோபக்கனல் – கையில் அடுத்த அறை தருவதற்காக ஓங்கி உயர்ந்த புளியம்மாறு!

இதையெல்லாம் நினைத்து நடுங்கிய போது சிறுநீர் முட்டியது. கட்டிலிலிருந்து எழுந்து, தொள்ளாயிரம் ரூபாவின் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த மகனின் கைப்பிடித்து, மெல்லப் படி இறங்கிக் கழிவறைக்குச் சென்றேன். உட்கார்ந்து சிறுதீர் பெய்ய முடியாத நிலை. சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றபடி சிறுநீர் பெய்து கொண்டிருந்த என் பிட்டத்தில், ஓங்கி ஓர் அறை விழுந்ததும் வெடுக்கெனத் திரும்பினேன். ஞானி வீட்டுக் காது கேளாத நொண்டிக் கண்ணும்மா, பாடம் சொல்லாத பிள்ளைகளை அடிக்க வைத்திருந்த புளியம்மாறு குளியலறைக் கதவு இடுக்கு வழியாக வேகமாக வெளியேறி, ஆகாய வீதியில் பறந்து போனது என் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *