ஒரு கற்பக மூர்த்தியும், சில கண்ணீர்த்துளிகளும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 2,541 
 
 

கதை சொல்வதென்பது ஒரு கலை. அதை யாருக்குச் சொல்கிறோம் என்பதும், அதை எதற்குச் சொல்கிறோம் என்பதிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

‘அப்பா அடுத்த வாரம், வாணி ஸ்கூல்ல ‘கல்சுரல்’ நிகழ்ச்சி இருக்கு., அவள் மேடை ஏறிச் சொல்றா மாதிரி எதாவது பாட்டோ, இல்லே, கதையோ அவளுக்குச் சொல்லிக் கொடேன்!. புண்ணியமாப் போட்டும்!. எனக்கு வேலை இருக்கு!’ என்று சொல்லி, நழுவினாள் என் மகள்.

பேத்திக்குச் சொல்லிக் கொடுக்க கசக்குமா என்ன?! ஆனா மூன்று வயது சுட்டிக்கு சொல்லி கொடுத்துச் சொல்லச் சொல்வது சுலபமா என்ன?! எதிரில், சுவரைப் பார்க்க, காலண்டரில் கற்பக விநாயகர்…!

“குள்ளக் குள்ளனே…!

குண்டு வயிறனே!

வெள்ளிக் கொம்பனே

வினாயகப்பெருமானே..!’

இதைத்தான் மடியில் பேத்தியை வைத்துக் கோண்டு அவளுக்கு உருவேற்ற ஆர்ம்பித்தேன். ‘உர்ர்’ணு கோபம் கிளம்ப என்னைத் திட்டினாள் மகள்.

‘ஏம்ப்பா.. பிள்ளைக்கு சொல்லிக் கொடுன்னு சொன்னா.. பிள்ளையாரைப் பற்றி நல்ல கதை எதாவது சொல்லிக் கொடுப்பதுதானே?! இதெல்லாம் ஒரு பாட்டா, இதை ஸ்டேஜில் குழந்தை பாடினால், எல்லாரும் கேலி பண்ண மாட்டாங்களா!? பாட்டே, பிள்ளையாரைக் ‘கேலி’ பண்றா மாதிரி இருக்கே?!’ என்றாள்.

யோசித்தேன். நியாயமாய்ப் பட்டது. எல்லாமே யோசித்தால் உலகத்தில் நியாயமாய்ப்படும்தான். அதற்காக யோசிக்காமல் இருக்கலாமா?!

‘அப்ப, என்ன சொல்லிக் கொடுப்பதாம்?!’ மகளிடமே கேட்டேன்.

‘ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன, அந்தக் கதையைச் சொல்லிக் கொடுக்கலாம்ல..?’ என்றாள். அவள் என்ன சொல்லித்தரச் சொல்கிறாள் என்று எனக்குப் புரிந்தது. அவளுக்குப் பிடித்த கதை அது!

அது வேற ஒண்ணுமில்ல…

விநாயகர் ஒருநாள் ஒரு பூனையை மடியில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாராம். ஈர்க்குச்சியால் பூனை முகத்தில் குத்திக் குத்தி விளையாடுகையில், பார்வதி அவரைச் சாப்பிட அழைத்தாளாம். சாப்பிடப் போன விநாயகர், அம்மா முகமெங்கும். குச்சியால் குத்தப்பட்ட ரத்த காயங்களைப் பார்த்துப் பதறிப் போனாராம்!. ‘அம்மா!! என்னம்மா உன் முகத்தில் இத்தனை ரத்த காயம்?!! னு கேட்க, பார்வதி சொன்னாளாம்..’நீதானே கொஞ்சம் முன்னாடி பூனையை குத்தி விளையாடினேன்னு?!’

‘நான் பூனையைத் தானே குத்தினேன்?’ என்று விநாயகர் சொல்ல, பூனைல மட்டுமில்லே, உலகத்திலுள்ள எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்னு! பார்வதி சொல்ல, சர்வ ஜீவராசிகளிலும் அம்மா இருக்கிறாளான்னு கேட்டு, ‘தப்புப் ப்ண்ணீட்டேனேனு’ அழுதாராம் ஆனை முகன். இதுதான் அவள் சொல்லித்தரச் சொல்லும் கதை. ‘இதைச் சொல்லிக் கொடுத்து, அதை வாணி ஸ்டேஜில சொன்னா’ எத்தனை ‘இம்ரஸிவா’ இருக்கும்னு?!’ கேட்டாள் என்னை என் மகள். நான் உறுதியா மறுத்துட்டேன்.

திரும்பத் திரும்ப வற்புறுத்தினாள் .. ஏன் அதைச் சொல்லித்தர மாட்டேன்ங்கறே?! சொல்லு!’ என்றதும் நான் சொன்னேன்..

கதை அருமையான கதை. ஒரு கதையின் வெற்றி, அதை ஆரம்பிப்பதில் இல்லை..! அதன் வெற்றி அது பதியமிடும் நியதியில் இருக்கிறது என்றேன்.

‘என்ன குழப்புறே?!’ கோபமாய்க் கேட்டாள்.

‘கோவிச்சுக்காதே..! அந்தக் கதை அருமையான கதை. அதை இளைஞர்கட்டுச் சொல்லலாம். ஆனால், பிஞ்சுகளுக்குச் சொல்லக் கூடாது. அதிலும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லவே கூடாது!’ என்றேன்.

ஏன்..?? என்றாள் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி.

அந்தக் கதையின் முடிவு என்ன…? பார்க்கிற உயிர்களிலெல்லாம் பார்வதி இருக்கிறாள். எல்லாம் அன்னை வடிவம் என்றால், நான் எந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ண முடியும்?! ஆக, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்! நான் பிரம்மச்சாரியாகவே இருந்துடறேன்னு சொல்லி, பிள்ளையார் இன்னைக்கு வரை பிரம்மச்சாரியாய் இருப்பதாய் ஒரு நம்பிக்கை உண்டுதானே?!’ என்றேன்.

‘ஆமாம்!’ என்றாள் சுவாதீனமில்லாமல்.

இந்தக் கதையைச் சொல்லிக்கொடுக்கப்போக, அது குழந்தை மனதில் பதிந்து, நம் வாணியும், நாளைக்கு, அப்படி, நானும் கல்யாணம் பண்ணாம இருந்துடறேன்னு முடிவெடுத்துட்டா…???

இந்தக் காலத்துல ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்க ஆசை இருந்தும், கல்யாணமாகாம இருக்கறவா ஏராளம். வாணி மாதிரி பெண்கள் கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்துட்டா… பிரபஞ்சம் தாங்காது.

இளைஞர்களிடம். எல்லாப்பெண்களிலும் பார்வதி இருப்பதாக மனசில எண்ணத்தைப் பதிச்சுட்டா, பெண்கள் கிட்ட யாரும் தப்பா நடக்க மாட்டாங்க.. பெண்களை, அம்மாவா நெனைச்சு உயர்வா மதிப்பாங்க!

அது உலகத்துக்கு நல்லது!. பரமஹம்சர் கதை அந்த நல்ல எண்ணத்தில் சொல்லப்பட்டது!’

கதை யாருக்குச் சொல்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. என் பேத்தி மாதிரி பெண் குழந்தைகள், கல்யாணம் காட்சி பார்த்து, அவர்கள் குலம் தழைக்கணும்னு ஆசைப்படறேன்!னு நான் சொல்ல, ‘

‘சாரிப்பா!!’ என்று சொல்லிக்கண்ணீர் விட்டுக் கதறினாள் என்மகள்.

காலண்டரில் கற்பக விநாயகர் சிரித்துக் கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *