(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மேசையிலே வெள்ளைக் கடதாசி கிடக்க, ஒரு கையிலே பேனாவைத் தயாராக வைத்துக் கொண்டு – ஆனால் ஒன்றும் எழுதாமல், மற்றக் கையால் நாடியைத் தடவிக் கொண்டு கண் பார்த்ததை மனம் பார்க்காமல் – ஆமாம், கற்பனையுலகிலே மிதந்து கொண்டிருக்கிறாரே –
இவர் பெரிய எழுத்தாளர். இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் தமது சிறுகதைகளை உலவவிட்டுப் புகழ்பெற்றவர். ‘சிற்றம்பலம்’ என்ற இவருடைய பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. இவருடைய வாழ்க்கையில் வந்து போன இந்த ‘ஒரு கண’ நிகழ்ச்சி இவருக்குப் பெருமை தரத்தக்கதல்ல; ஆதலால் இவருடைய பிரசித்திபெற்ற புனைபெயரை இங்கே உபயோகப்படுத்த நான் விரும்பவில்லை.
சிற்றம்பலம் என்ற இந்தப் பெயரும் இவருடைய சொந்தப் பெயரல்ல; இது ‘ஒரு’ பெயர்; புனை பெயரென்றே சொல்லலாம். இவர் எழுதிய ஒரு கதையில் – நூற்றுக்கணக்கான இவருடைய கதைகளில் நீங்கள் அதை எங்கே தேடிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்? – ஒரு கதையில் ‘சிற்றம்பலம்’ என்று ஒரு கதாபாத்திரம் வருகிறார். மிக நல்ல உயர்ந்த பாத்திரம். அதைப் படித்து விட்டு அந்தச் சிற்றம்பலம் இவர்தான் என்று பூவழகி-
ஓ! பூவழகியைப் பற்றி இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. பூவழகி, சிற்றம்பலம் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பவள். அழகி; மென்மையானவள்; இனிமையானவள். அதோடு குறுகுறுப்பும், குறும்புத்தனமும். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகத்தனமும் – அவளைச் சிற்றம்பலத்துக்கு மிகவும் பிடிக்கும்! – இங்கே காதல் கூதல் ஒன்றுமில்லை. சிற்றம்பலம் கல்யாணமானவர், நல்ல மனிதர்; பண்புள்ளவர். அவள் கன்னிப்பெண்; களங்கமில்லா நெஞ்சினள்.
இந்தப் பூவழகிதான் இவருக்குச் ‘சிற்றம்பலம்’ என்ற பெயரை வைத்தாள். அந்தக் கதாபாத்திரமாகத் தம்மை அவள் மதிப்பிடுவதுபற்றி இவருக்குக் கொஞ்சம் பெருமையுமுண்டு.
சிற்றம்பலம் ‘வெறும்’ எழுத்தாளரல்லர். அதாவது எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவரல்லர். இவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். எழுதுவது சொந்த மனத்திருப்திக்காக. ஆனாலும் அதன்மூலம் மாதம் ஐம்பது, ந்ய்ய்று என்று ‘அன்பளிப்பு’களாகப் பெற்றுக் கொண்டிருந்தார். – அது ஒரு கௌரவமும்.
இப்பொழுது இந்த மாலைப் பொழுதிலே இவர் நாடியைத் தடவிக்கொண்டு கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருப்பது ‘கதை’க்காகவல்ல. இங்கிருந்து இருபத்தைந்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இவர் பறந்து போய் நிற்கிறார். அங்கே ஒரு வீட்டில் இவருடைய ‘செல்லக்கிளி’ –
இவருக்கு அவள் ‘செல்லக்கிளி.’ ‘மங்கையர்க்கரசி’ என்ற அழகான பெயரை விட்டு விட்டு, ‘செல்லக்கிளி’ என்று கூப்பிடும்போது இவருடைய இதயத்தின் ஒலி அதிலே கேட்கும். ‘மனைவியைத் தலையிலே தூக்கி வைத்திருக்கிறார்’ என்று சிலர் கேலியாகச் சொன்னார்கள். ‘ஓமோம், அவள் இதற்குத் தகுதியானவள்தான்’ என்று இவர் மனதுக்குள்ளே பெருமைப்பட்டார்.
இவருடைய செல்லக்கிளிக்கு இது முதற் பிரசவம். – முதற் பிரசவமென்ன, முப்பதாவது பிரசவமாயிருந்தாலும் அவள் தாய் வீட்டுக்குப் போயிருக்க வேண்டியவள்தான். சிற்றம்பலம் அவள் மீது உயிரையே வைத்திருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் வீட்டுக் காரியமென்று ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாதவர். அவளை இங்கே வைத்துக் கொண்டு பத்திய பாகமாக எல்லாம் கவனிக்க இவருக்குத் தெரியாது. தெரிந்ததையும் உசாராகச் செய்கிற ஆளுமல்ல.
ஒரு மாதத்துக்கு முன்னால் மங்கையர்க்கரசி சுகமாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டாள். இதற்கிடையில் மூன்று நாலு தரம் சிற்றம்பலம் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை போயிருந்தபோது, விரைவில் தன்னையும் கூட்டிக் கொண்டு போகும்படி அவள் விண்ணப்பம் செய்திருந்தாள். – பேதை அந்தச் சொகுசான இடத்தை விட்டு விட்டு, இங்கே இந்த – ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாத கணவருடன் வந்துவிடவேண்டுமென்று எதற்குத்தான் துருதுருக்கிறாளோ!
சிற்றம்பலத்துக்கும் இங்கே ஒரேயடியாய் ‘வெறிச்’சென்று கிடந்தது. சில நேரங்களில் பைத்தியம் பிடித்த மாதிரியிருக்கும். இருந்தாலும் அவளுடைய நன்மையைக் கருதி இன்னும் சில வாரங்களுக்காவது அங்கே இருக்கட்டுமென்று நினைத்தார். இங்கே இவருக்குச் சாப்பாட்டுக் கரைச்சல் இல்லை. பக்கத்தில் பூவழகி வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மங்கையர்க்கரசி போனாள். மத்தியானம் அலுவலகத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ சாப்பிட்டுக் கொள்வார். காலையும் மாலையும் பூவழகி கொண்டுவந்து கொடுத்து, இவர் சாப்பிடுகிறவரையும் கூட இருந்து இலக்கிய சர்ச்சை செய்துவிட்டுப் போவாள். சில நேரங்களில் சாப்பாடு முடிந்தாலும் சர்ச்சை முடியாது.
இப்பொழுது, இந்த மாலைப்பொழுதிலே, இவர் நாடியைத் தடவிக்கொண்டு யோசித்து – ரசித்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கடிதம், – இவருடைய செல்லக்கிளிக்கு!
‘….. இங்கே வருவதற்கு என்ன அவசரம் இப்போது? என்னைப் பொறுத்தவரை ஒரு குறைவுமில்லை இங்கே. குழதையையும் வைத்துக்கொண்டு இங்கே தனியாகப் பெரிய கஷ்டமாக இருக்கும் உமக்கு! இன்னும் சில நாட்களாவது உவ்விடத்திலிருந்துவிட்டுப் பிறகு வரலாம். நாதான் வாரந்தவறாமல், வந்து பார்க்கிறேனே!…’
– இப்படி எழுதலாமா என்று மனதுக்குள்ளே சொல்லி ஒத்திகை பார்த்தார்.
‘கிளிக்!’
திடீரென்று மின்சார விளக்கின் ஒளி பளிச்சிட்டது.
சிற்றம்பலம் திடுக்கிட்டு ‘அந்த’ உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.
எதிரே –
பூவழகி!
கையில் சாப்பாட்டுத் தட்டுடன் ஒரு வானத்து மோகினிபோலச் சிரித்துக்கொண்டு நின்றாள்.
ஏனோ, அவளைப் பார்த்ததும் அவரால் உடனே ஒன்றும் பேச முடியவில்லை.
“என்ன, இருட்டியதுகூடத் தெரியாமல் ‘எழுத்து’ நடக்கிறதா?” – பூவழகி கேலியாகக் கேட்டாள்.
“இல்லை, எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்…”
“நேற்றுச் சொன்னீர்களே, அந்தக்கதை – தொடங்கி விட்டீர்களா?”
“இல்லை. இது வேறே!”
“வேறு கதையா?”
“இல்லை. வேறு விஷயம்; கடிதம் – மங்கையர்க்கரசிக்கு.”
“ஓ!”
“என்ன, ஓ?”
“ஒவ்வொரு நாளும் எழுதுகிறீர்களே பக்கம் பக்கமாக… ‘அவ’ கொடுத்து வைத்தவ; நீங்கள் சுவையாக எழுதுவீர்கள். எழுத்தாளரல்லவா?”
“உமக்கென்ன தெரியும்! அவ எழுதுகிற கடிதங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?”
“இருக்கும், உங்களுக்கு மட்டும்!”
சிற்றம்பலம் சிரித்தார்; பதில் சொல்லவில்லை.
இதற்கிடையில் சாப்பிடவும் தொடங்கி விட்டார்.
பூவழகி சொன்னாள்: “நீங்கள் ‘அகில’னின் ‘பாவை விளக்’கைக் கட்டாயம் படிக்க வேண்டும்!”
“படிக்காவிட்டால் விடமாட்டீர் போலிருக்கிறதே?”
“என் சினேகிதி ஒருத்தி ‘கல்கி’யில் வந்ததை எடுத்துக்கட்டி வைத்திருக்கிறாள். அதை இரவல் கேட்டிருக்கிறேன், உங்களுக்காக!”
“நன்றி… என் நண்பர்கள் சிலரும் அந்தக் கதையைப்பற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்தக் கதையையே எனக்குச் சுருக்கிச் சொல்லிவிட்டார்!”
“அதை ஏன் கேட்டு வைத்தீர்கள்?… பிறகு படிக்கும் போது சுவை குறைந்து போகும்!”
“திருப்பித் திருப்பிப் படித்தாலும் சுவைக்கும் என்கிறார்களே!”
“ஓமோம். என்ன அருமையாக எழுதியிருக்கிறார்…”
“அதிலே கதாநாயகனுக்கு – அவன் பெயரென்ன?…”
“தணிகாசலம்”
“அந்தத் தணிகாசலத்திற்கு மூன்று நான்கு காதலிகளாமே?”
“கதையைப் படித்தீர்களானால் இப்படித் தணிகாசலத்தைக் கேலி செய்யத் தோன்றாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆண்பிள்ளையும்…”
“ஆண்பிள்ளைகளைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறீரா…” – சிற்றம்பலம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் தெரிந்தது கேலியா, அசடா? அவர் தொடர்ந்து சொன்னார்: “அந்தப் பெண்களில் ஒருத்தி முக்கியமானவள் – ஒரு ரசிகையாமே?”
“ஓமோம், பாவம்…”
“அவளைப்பற்றி அந்த நண்பர் சொன்னபோது எனக்கு உம்முடைய நினைவுதான் வந்தது…” – இதைச் சொன்னபோது அந்தக் கதாநாயகன் – எழுத்தாளன் தணிகாசலமாகத் தம்மையே நினைத்துப் பார்த்தார் சிற்றம்பல. மறு நிமிஷம் ‘சை!” என்று உள்ளத்தை உதறி அந்த நினைவைக் கலைத்தார்.
“சும்மா போங்கள். உங்களுக்குக் கேலிதான்” என்று பூவழகி முகத்தை நெளித்தாள். சிற்றம்பலம் சாப்பிட்டு முடிந்து தட்டில் கையைக் கழுவியவர், நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அவருக்கு எதிரே மேசையில் சாடையாகச் சாய்ந்துகொண்டு அவள் நின்ற அழகு….. கதை பேசும் அவளுடைய கண்கள்; பட்டுப்போன்ற அழகிய கன்னங்கள்; இனிய உதடுகள்…. இவை இவை அவரை என்ன செய்கின்றன…?
சிற்றம்பலம் சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, வேறு ஏதாவது கதைக்கலாமென்று முயற்சித்தார். என்னவோ உடம்பெல்லாம் பதறுவதுபோன்ற ஒரு உணர்ச்சி. உடம்பல்ல, உள் மனந்தான் பதறிக் கொண்டிருந்தது…
சிற்றம்பலத்தின் இதயத்திலே இப்படி ஒரு புகைப்படலம் பொங்கி எழுந்து குமுறுவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி, தன்னுடைய தோற்றத்திலே இப்படித் திடீரென்று ஒரு ‘கவர்ச்சி’ சிற்றம்பலத்தின் கண்களுக்குத் தெரிவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி சொன்னாள்; “போன கிழமை நானும் தங்கமும் சேர்ந்து போட்டோ எடுத்தோமென்று சொன்னேனல்லவா? அந்தப் போட்டோ இன்றைக்கு வந்திருக்கிறது…”
“எங்கே பார்ப்போம்” என்று வாய் திறந்து கேட்கச் சிற்றம்பலத்தினால் முடியவில்லை. குரல் நடுங்குமோ என்ற பயம். பேசாமல் கையை நீட்டினார்.
பூவழகியும் படத்தை நீட்டினாள்.
சிற்றம்பலம் அதை வாங்கியபோது –
நிச்சயமாக அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கை பதறிக் கொண்டிருந்ததாலோ – தற்செயலாகவோ அவளுடைய விரல்களோடு அவருடைய விரல்கள் உராய்ந்தன.
அவர் கையை எடுக்கவில்லை.
அவளால் எடுக்க முடியவில்லை.
அவளுடைய முகத்தை அவர் பார்க்கவில்லை. குனிந்து அந்த மெல்லிய அழகிய விரல்களைப் பார்த்தார். அவற்றை மெதுவாகப் பற்றினார். குனிந்து முத்தமிட்டார்…
முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவர், பூவழகியின் முகத்தைச் சந்தித்தபோது –
ஐயோ!
உதயத் தாமரை இப்படி உருக்குலைந்துவிட்டதே! அந்த முகத்தில் அவர் கண்ட உணர்ச்சிகள்….
உணர்ச்சியா!
உணர்ச்சி எங்கேயிருந்தது? அதன் உயிரே போய் போய்விட்டதே!
அதைப் பார்க்கமுடியாமல் படாரென்று முகத்தை மேசைமேல் கைகளுக்கிடையில் புதைத்து விட்டார்.
பூவழகி –
அவளுடைய நிலை அசாதாரணமானது. இரத்த ஓட்டமே நின்றுவிட்டதுபோலத் தோன்றியது.
தானே தடவி வளர்த்த பசு என்றாவது ஒருநாள் புலியாகி மாறிக் கடித்துவிட முடியுமா?
என்ன இது!
அவருடைய பிடியிலிருந்து விடுபட்ட கையினால், அவருடைய கன்னத்தில் ‘ஒன்று’ வைக்க அவளால் முடியவில்லை. வைக்கக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!
‘பேயே, பிசாசே!’ என்று அவளால் ஏச முடியவில்லை. ஏசக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!
உணவு கொண்டு வந்த பாத்திரங்களை அவளுடைய கைகள் ஒன்று சேர்த்தன.
“நான் போய் வருகிறேன்” என்று அவளுடைய வாய் சொல்லிற்று.
அவருக்கு அது கேட்டதா?
அவள் போய்விட்டாள்.
***
“கதை எப்படி முடியப்போகிறதென்று எனக்குத் தெரியும்!” என்றாள் கயல்விழி. இதுவரை அவள் இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருந்தாள்.
“எப்படி?” என்று கேட்டான் இளங்கோ. அவதான் இதை எழுதிக்கொண்டிருந்தவன்.
“கு. ப. ரா. எழுதியிருக்கிறாரே ‘மோகினி மயக்க’மோ என்னவோ என்று ஒரு சிறுகதை. அதிலே ஒரு பெண். அடுத்த வீட்டுப் பையன் ஒருவன்; அவளை மாமி மாமி என்று அழைக்கிறவன். ஒருநாள் அவள் ஊஞ்சலிலே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க, அந்த இளைஞன் வந்து எதிரே இருந்த ரவி வர்மா படத்து மோஹினி போல அவள் இருக்கிறாளென்று சொல்ல, அவளுடைய உள்ளத்திலும் ஒரு சலனம் ஏற்பட்டு, ‘நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறேனா பார்’ என்று கேட்கிறாள். அவன் அவளை நெருங்கியபோது…. எப்படியோ திடீரென்று மாயை விடுபட்டு அவன் திரும்பி ஓடி விடுகிறான் – அந்த இருவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள்; சந்திக்க விரும்பமாட்டார்கள், என்ற தத்துவத்துடன் கதை முடிகிறது. உங்கள் கதைக்கும் வேறு கதி ஏது?”
“கொஞ்சம் பொறு. ‘கு.ப.ரா’ ஒரு கோணத்திலிருந்து பார்த்தார். வேறு கோணங்களும் இருக்கின்றன” என்று சொல்லிவிட்டு இளங்கோ எழுதத் தொடங்கினான்.
***
மேசைமீது விழுந்த சிற்றம்பலத்தின் தலை வெகுநேரம் அப்படியே கிடந்தது. அது கனத்து இருண்டு பெரும் பாரமாகத் தோன்றிற்று.
அவர்மீது அவரே கொண்ட வெறுப்பு ‘ச்சீ’… என்று இரண்டு மூன்று தரம் வாய்வழியே வெடித்தது. ஒவ்வொரு தரமும் தலையைத்தூக்கி மறுபடியும் மேசைமீது கிடந்த கைகள்மீது மோதிக் கொண்டார்.
வெகு நேரத்துக்குப் பிறகு எழுந்து அறைக்குள்ளாகவே அங்குமிங்குமாக நடந்தார்; மீண்டும் அறைக்கு வந்தார். எங்கெங்கே நடந்து திரிந்தாரென்பது வருக்கு நினைவில்லை.
வேதனைக் குவியல்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தார்; கால்கள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.
‘ஐயையோ, நானா இதைச் செய்தேன்! நானா? நான் தானா?…”
கைகள் தலைமயிரைப் பற்றி இழுத்துச் சிதறவிட்டிருந்தன. அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டன.
‘செல்லக்கிளி இதை அறிந்தால் –
‘அவள் என்னைத் தேவாதி தேவனாக நினைத்திருக்கிறாளே, நான் நாயினும் கேடாகி நிற்கிறேனே’
அவர் உடம்பு நடுங்கி நெளிந்தது.
பூவழகி –
‘அவள் என்னை இலட்சிய மனிதனாக எண்ணியிருந்தாளே, ஆண் குலத்தையே அவள் நம்பாதபடி செய்து விட்டேனே!…
‘ஏன் செய்தேன்?
‘அவளுடைய பெண்மையைச் சூறையாட வேண்டுமென்ற வெறி எனக்கு ஏற்பட்டதா?
‘இல்லை; ஒருபோதும் இல்லை!
‘பின்?
‘ஒரு அன்பான குழந்தையை – அழகான குழந்தையை அணைத்துக் கொள்கிறோமே, அப்படியா?
‘அல்ல; அப்படியுமல்ல!
‘பின்?
‘என்னவோ ஒன்றும் புரியவில்லை. உள்ளுணர்ச்சி எப்படியிருந்தபோதிலும் வெளிப் பார்வைக்கு…..
‘கடவுளே, நான் ஏன் அப்படி நடந்தேன்? நானா? நான்தானா…?’
நல்லவேளை; எப்படியோ கடைசியில் நித்திரை என்ற நிம்மதி உலகத்திலே சிற்றம்பலம் புகுந்துவிட்டார். இல்லா விட்டால் மூளை கலங்கியிருக்கும்!
***
அடுத்தநாட் காலை பூவழகி சாப்பாடு கொண்டுவந்தபோது –
சிற்றம்பலம் திகைத்துப் போனார். அவர் அவளைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவளுடைய முகத்தில் வழக்கமான – களங்கமற்ற அதே புன்சிரிப்பு.
சிற்றம்பலத்தினால் அவளுடைய முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு, எங்கேயோ பார்த்தபடி “என்னை மன்னித்து விட்டீரா?” என்று கேட்டார்.
“முதலில் என்னால் தாங்க முடியவில்லை. இரவு வெகுநேரம் வரை அதைப்பற்றியே மனத்தை அலட்டிக் கொண்டிருந்தேன். விடிந்து கண் விழித்தபோது மனமும் தெளிந்தது…”
நன்றிப் பெருக்காலோ என்னவோ சிற்றம்பலத்தின் கண்கள், கலங்கி நீரால் நிறைந்தன. தளதளத்த குரலில் அவர் சொன்னார்: “ஓமோம், அது நானல்ல… அந்தக் கயவனை அடுத்த கணமே கொன்று தீர்த்து விட்டேன். இனிமேல் எழுந்திருக்க முடியாதபடி!”
“நானும்… அந்த ‘ஒரு கண’த்தை என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து எடுத்துத் தார வீசிவிட்டேன்… விட்டுத் தள்ளுங்கள்; இனி அந்தப் பேச்சு வெண்டாம்; நினைக்கவும் வேண்டாம்.”
சிற்றம்பலம் நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தார். ஒளியைக் கண்டதும் ஓடிவிடும் இருளைப்போல அவருடைய உள்ளத்தில் கவிந்திருந்த இருளெல்லாம் மறைந்து ஒரு நிறைவு ஏற்பட்டது.
அன்று அவர் தமது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ‘செல்லக்கிளி, இனி என்னால் உம்மைப் பிரிந்திருக்க முடியாது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவேன்; புறப்பட்டுவர ஆயத்தமாக இரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
– தினகரன், கயமை மயக்கம், முதற் பதிப்பு: 1960, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.