அன்புள்ள ஸ்நேகிதிக்கு,
நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா ? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது?
ஒரு சமயம் அம்மா,உடனே சகோதரி, சில சமயம் என் குழந்தை, என் பாட்டி என ஏதேதோ சொல்லத் தெரிந்த தெரியாத உறவுகள்.
உண்மை எப்போதுமே பழத்துள் விதை.
சில சமயங்களில் ஒரு வாக்கியமோ, வார்த்தையோ அதன் வேளைக்கு முன் முளைத்துவிட்டால் அதன் பொருள் விளங்காது.
முதலில் நீ என்னிடம் பேசிய வாக்கியம் “உம், வாங்க நீங்களும் எங்களோட சேர்ந்தாச்சு.”
ஒரு புருவ உயர்த்தல், உதட்டில் ஒரு குழிவு, திடீரென கூசவைக்கும் பற்களின் ஒளி, விரல் நுனி அசைவுகள் என அதனுடன் சேர்ந்த அநுஸ்வரங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை என்னை
ஊடுருவும்போது, அந்த வேகத்தை நான் தொடுகையில் அல்லது அவை என்னைத் தொடும்போது என்னை நான் அச்சொற்களின் ஸ்வரங்களாக மாற்றிவிடுகிறேன். உன் செயல் என்னவோ ஒன்றுதான்.
ஆனல் அதன் மொழிபெயர்ப்புகள் தனித்தனி.
தரிசனம் என்பது ஒரு அனுபவம். விவரிப்பது அனுபவ ருசிக்கு ஈடாகுமா?
வாழ்க்கைக்குத் தனியாக அர்த்தம் தேடுவதில் அர்த்தமில்லை. நாம் கொடுப்பதுதான் அர்த்தம். ஆனல், வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை. இப்போது நம்மிடம்
நேர்ந்துகொண்டிருப்பது என்னவென்று உனக்குத் தெரியுமா? சாகாவரம் அடைவது போல நாம் புதியதாய் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் வேறு வேறு திசை நோக்கி.
ஒருவரை ஒருவர் துறந்துவிட்டதால் மட்டும் தனிமை வருமா?
ஒன்றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிதாக இட்டு நிரப்ப வந்துவிடுகிறது.
சகலமும் துறந்தவர்க்கு உலகம் உடைமை.
வாழ்க்கையின் பெரிய அதிசயம் சகல உயிர்களும் அதன் பிறப்புக்கும், பிழைப்பிற்கும், முடிவிற்கும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து இருப்பதே. சம்பவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றவையாகத்
தோன்றினாலும் எல்லாவற்றிலுமொரு காவியத்தொடர்பு மறைந்துள்ளது.
ஆனால் மன ஓட்டத்தைத் தடுக்க முடியவில்லையே !
ஏலி ஏலி லாமா சபக் தானி ?
இப்படிக்கு,
உன் நினைவில் என் குரல் சதா ஒலித்துக்கொண்டிருக்க விரும்பும் –
நீ வீட்டுப்போகும் அடிச்சுவடுகளைத் தாங்கும் மணல்.