வாழ்க்கையில் நான் ஐந்து வருடங்கள் பின்தங்கியுள்ளதாய் உணர்கிறேன்…. இவ்வளவு நாளும் அதனை நான் புரிந்துகொள்ளவில்லை..
அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்த நாள் முதல் இதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கினேன்..
எனது பெயர் ரஹீம்.. நான் பிறந்து வளந்த ஊர் ஒரு காலத்தில் முத்தூர் என்றழைக்கப்பட்ட மூதூர். என் வாழ்வின் கடந்தகாலம் எதுவுமே நானாக தேர்ந்தேடுத்தது கிடையாது…
எனக்கென நடந்துமுடிந்த ஒவ்வொரு கட்டங்களும் யாரோ ஒருவரால் எனக்காக தெரிவுசெய்யப்பட்டு திணிக்கப்பட்டது..
அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தானாக பிணைந்துகொண்டது..
நான் கற்ற பாடசாலை, எனது கல்வி, தொழில், துணை எதுவுமே நானாக சரிபிழை பார்த்து விரும்பி சிந்தித்து தெரிவுசெய்தவை அல்ல.
என்னில் சார்த்தப்பட்டவற்றை நான் விரும்பியோ விரும்பாமலோ சேர்த்துக்கொண்டேன் அவ்வளவுதான்.. அவை குறித்து இன்று வரை நான் ஆழமாக சிந்தித்தது கூட கிடையாது..
அனைவரும் சொல்வார்கள்.. நான் சிறுவயதிலிருந்து இயற்கையாகவே கெட்டித்தனமானவன் என்று… மூதூரிலே சிறந்த பாடசாலை மூதூர் மத்திய கல்லூரி…
அந்தப்பாடசாலையில் சேர்ப்பதற்கான அத்தனை வசதிவாய்ப்புகளும் எனது பெற்றோருக்கு இருந்தது.. ஆனாலும் எனது வாப்பா அதிபராக இருக்கிற பக்கத்திலிருந்த சிறிய பாடசாலையான முதூர் ஆண்கள் மகாவித்தியாலயதிலேயே அவர்களின் வசதிக்காக என்னை சேர்த்தார்கள்…
என்னுடன் படித்த பலர் ஐந்தாம் ஆண்டிலேயே மத்தியகல்லூரிக்கு சென்றார்கள் ஆனால், நான் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தும்கூட என்னை தொடர்ந்தும் அந்த சிறிய பாடசாலையிலேயே வைத்திருந்தார்கள்..
அங்கு எனக்கு போட்டி போட்டு படிக்க யாரும் இருக்கவில்லை.. எல்லா பாடங்களிலும் நான் தொண்ணூறு மாக்ஸ் எடுத்து முதலாவது வந்தால்.. இரண்டாவது வருபவன் நாப்பதுதான் எடுத்திருப்பான்.. எனவே எனக்கு போட்டி போட்டு படிக்க வேண்டிய தேவை இருக்க வில்லை..
பதினோராந்தர ஓ. எல் பரீட்சையிலே என்னை அறியாமலே எட்டு பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியெய்திருந்தேன்…
என் உம்மாவின் ஒரே தம்பி எக்கவுண்டன்.. வத்தளையில் டொயோடா கம்பனியில் இருபது வருசமாக இருக்கிறார்..
ஓ-எல் பரீட்சையின் பின் நான் வத்தளையில் மாமா வீட்டில் மூன்று மாதங்களை கழித்தேன்.. அப்போது இங்க்லீஷ் கோஸ்- கொம்பியுடர் கோஸ் என மாமா சேர்த்துவிட்டார்.. நானாக விரும்பி சேரவுமில்லை, விரும்பி படிக்கவுமில்லை.. அனாலும் அந்த கோஸ்களிலும் வகுப்பிலேயே திறமையாக சித்தியடைந்திருந்தேன்…
நான் டொக்டர் ஆகவேண்டுமென்பது வீட்டில் எலோருடையதும் ஆசையாம் என்னை முதூர் சென்றல் காலேஜ் இலே சையன்ஸ் இல் சேர்த்துவிட்டர்கள்… ஆனால், எனக்கோ நான் என்னவாக வேண்டும் என்றொரு திட்டமும் இருக்கவில்லை கனவுமிருக்கவில்லை.. பாடசாலைக்கு சேருவதற்கு முன்னைய நாள் வரை கணிதப் பிரிவா – விஞ்ஞானப்பிரிவா என்ற குழப்பம் என்னுள் இருந்தது.. எல்லோரும் டாக்டர் ஆவது சிறந்தது என்று சொன்னார்கள்…அப்படியானால் நல்லம் தானே என்று சொல்லிவிட்டு நானும் ஸ்கூலில் சேர்ந்துவிட்டேன்…
அங்கே பயோலோஜி – கெமிஸ்ட்ரி – பிசிக்ஸ் எந்தப்பாடத்திற்கும் நிரந்தர நல்ல ஆசிரியர் இல்லை… கிளாசிலுள்ள எல்லோரும் றின்கோவுக்கு கிளாஸ் போனார்கள்… நான் கடல் வழியே பாதை கடந்து கருவாட்டு வாசத்துடன் ரோசா பஸ்ஸிலே அலைக்களிவதை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை..
ஆறு மாதங்களில் ஸ்கூலிலும் எந்தப்பாடமும் சரியாக படித்துத்தரவுமில்லை.. எனவே என்னை கம்பளை சாகிரா கொலீஜ் இல் சேர்த்தார்கள்… அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்று இன்றுவரை எனக்கு நினைவில்லை… ஒருவேளை யாரோ சொல்லக்கேட்டு நானாக கூட எடுத்திருக்கலாம்.. அதற்க்கு முன்னர் கம்பளை வாசனைகூட எனக்கு தெரியாது.. எனது மாமா அதே சாகிராவில் படித்ததாகவும் தொண்ணூறாம் ஆண்டு யுத்தத்தில் சில காலம் எனது குடும்பம் அங்கு போய் இருந்ததாகவும் சொல்வார்கள் அப்போது எனக்கு மூன்று வயதுதான்.. அதன் பின்னர் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் நான் கம்பளைக்கு போன நினைவில்லை.
என்னை கம்பளையில் செர்த்துவிட்டதன் பின்னர்.. ஒரு புதிய ஊர் – புதிய பாடசாலை – புதிய கலாச்சாரம் என்னை கொஞ்ச நாட்கள் கண்ணை கட்டி விட்டது போல் ரூமிலும் பாடசாலையிலும் மட்டுமே அடைந்துகிடக்க விட்டது..
எந்தப் பாடசாலைக்கு போனாலும் சையன்ஸ் படிப்பது டியூசனில் தான் பாடசாலையில் அல்ல.. என்பதை கம்பளைக்கு போன மூன்று மாதங்களிளே புரிந்துகொள்ளமுடிந்தது..
கிளாசிலுள்ள அனைவரும் கண்டிக்கு டியூசன் போகிறார்கள்..எனவே அவர்களை பின்தொடர்ந்து நானும் போனேன்… பகுமுடீன் சேர் கெமிஸ்ட்ரி ஸ்பெசலிஸ்ட் – மௌலானா சேர் பயலாஜி வித்துவான் – தவா சேர் பிசிக்ஸ் கிங்.. இவர்களின் நூற்றுக்கணக்கான மாணவர்களை கொண்ட அந்த வகுப்பறையிலே.. அதனை வகுப்பறை என்று சொல்ல முடியாது.. வகுப்பு ஹோலிலே.. அவ்வளவு பெரிதான ஹோல்..மைக் போட்டுதான் கிளாஸ் நடக்கும்.. அந்த நூற்றுக்கனக்கனோரில் நானும் ஒருவன்..
அவர்கள் படிப்பிப்பது எனக்கு நன்றாக புரியும்.. கிலாசிலே கேள்வி கேட்கும்போது நூற்றுக்கணக்கான மாணவர்களில் முதலிலே விடை சொல்லும் ஓரிரு மாணவர்களுள் நானுமொருவன்..
ஆனால், பரீட்சை நெருங்கியபோது பாஸ்ட் பேப்பர் செய்ய ஆரம்பித்தபோதுதான் ஒரு முக்கிய விடயத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது… நான் இங்கே இடையிலே வந்து சேர்ந்தவன்.. நான் வருமுன்னர் சிலபஸில் பாதி முடிந்துவிட்டது… முக்கியமான அடிப்படை பகுதிகள் ஏற்கனவே படிப்பிக்கப்பட்டு முடிந்துவிட்டன.. எனக்கு இருப்பது பாதி அறிவுதான்… இவ்வளவு நாளும் இதனை நான் புரிந்துகொள்ளவில்லையே… அவ்வளவு கவனயீனமாகவா இருந்தேன்..? சரிதானே.. நானாக விரும்பி டாக்டராக வேண்டும் என்ட ஆசையில வந்திருந்தா கொஞ்சம் கவணமா தேடிப்பார்த்து படிச்சிருப்பேன்..
விடுபட்ட பாடங்களை படிக்க என் ரூமிலே தனியாக இருந்து சாத்தியப்படாது… எனவே கிளாஸ் பொடியன்கள் இருந்த இன்னொரு ரூமுக்கு மாறி வரும்படி என்னையும் அழைத்தார்கள்.. அவர்களுக்கு நான் போனால் வகுப்பிலே கொட்டிக்கார பொடியனான என் மூலம் அவர்களும் ஏதாவது படித்துகொள்ளலாம் என்ற எண்ணம்… மாமாவின் எதிர்ப்பையும் மீறி உடுப்பெல்லாம் தூக்கிக்கொண்டு ரூம் மாறிவிட்டேன்.. என் மூலம் கிடைத்துகொண்டிருந்த நாலாயிரத்து ஐநூறு ரூபா நிண்டுபோன கவலையில ரூம் ஆண்டி கொபிச்சும்கொண்டா…
அந்த புதிய ரூம் ராத்தா கம்பளையிலுள்ள பெரிய பெண்கள் மதரசாவுக்கு வார அரேபியர்களுக்கு சமையல் செய்து கொடுப்பா… அவ சவூதியிலே நீண்டநாள் இருந்தவ.. ஒரு வயசான வாப்பா..சின்ன பிள்ளைகள் ரெண்டு பேர் மட்டும்தான் அவக்கு.. கணவர் இன்னும் சவூதியிலே.. ரூம்ல இருந்த நாலு பேரையும் அவட கூடப்பொறந்த தம்பிமார் மாதிரியே கவனிச்சா.. சாப்பாடு எப்போதும் விஷேசம்… அரபியாவில சமைச்ச ஐட்டங்களையே எங்களுக்கும் செஞ்சு தந்தா… அவ காலையில செஞ்சு தார சிக்கன் பன்ஸ் சுவை இன்னமும் நாக்குல இருக்கு… நான் முந்தியிருந்த வீட்ல லேவரியா எண்டு சொல்ற இடியாப்ப கொலகொட்டையும் டீயும் தான் அநேகமான நாட்களில் காலைச்சாப்பாடு.. இரவு பான்.. பகல் வழமையான சோறு.. பாதி பீங்கான் சோற்றுக்கு அளவான கறி.. அப்படி பழகின எனக்கு ராத்தா வீடு சாப்பாடு, கலர் ரீவி, அவ வெளிநாட்டுல இருந்து கொண்டுவந்த பெரிய சவுண்ட் செட் எல்லாம் நான் சொந்த வீட்டில இருக்கிற அனுபவத்தையே தந்திச்சு.. அவ்வளவு நாளும் இந்த ரூம்ல இவனுகள் இப்படித்தானே வாழ்ந்திருக்கானுகள் எண்டு ரூம்மேட்ஸ்சைப் பார்த்து பொறாமையும் பட்டுக்கொண்டேன்…
ஆனால், அவர்கள் அனைவரும் வகுப்பிலே படிக்கிறது போதாதுண்டு சேர்ட வாயால ஏச்சு வாங்குறதுக்கு இந்த ராத்தா வீட்டு சுகபோகங்கள் தான் காரணம் என்பதை உணர எனக்கு சில மாதங்கள் கடந்துபோகின.. ஏலெவல் எக்ஸ்சாம் நெருங்கியபோது நானும் அவர்கள் லெவலுக்கு இறங்கியிருந்தேன்… மனசிலே ஒரு அழுத்தம்.. இவ்வளவு நாள் எனக்கு தோல்வி என்றால் என்ன என்று தெரியாது.. ஆனால் முதல் தடவையாக எக்ஸ்சாம் போவதற்க்கு பயந்தேன்..
ஏதோ தைரியத்தில் போய் எழுதினேன்… ஆனாலும் மனதில் எந்த கவலையுமில்லை… நான் டாக்டராகவேண்டும் என்று எனது குடும்பம் தான் விரும்பியதே தவிர நான் ஆசைப்படவில்லையே..
எக்ஸ்சாமின் பின் மூன்று மாதங்கள் வத்தளையில் … மாமா எனக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து தரவேண்டும் என ஆசைப்பட்டார்… நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலசிப் பாஸ் பண்ணியதற்காக உம்மாவின் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் அப்போது எனது சிறுவர் சேமிப்பு அக்கவுண்டிலே பத்தாயிரம் ரூபா போட்டு வைத்தார்கள்.. இப்போது பதினெட்டு வயதாகி விட்டதால் அதை எடுக்கும் படி பேங்க் கடிதம் அனுப்பியிருந்தது.. அந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து வத்தளையிலே இருந்த அத்துல லேனர்ஸ் போய் டிரைவிங் பழகினேன்.. இரண்டாவது நாளே நான் திறமையாக வேண் ஓட்டுவதை கண்ட அத்துல, நான் ஏற்கனவே டிரைவிங் பழகியிருக்கேன் என்று உறுதியாக சொன்னான்.. ஆனால், நான் டிரைவர் சீட்டிலே முதன்முறை அமர்ந்தது அவனின் அந்த எல் போர்ட்டு வாகனத்தில்தான்.. லைசன்ஸ் எழுத்துபரீட்சையில் நூற்றுக்கு நூறு மாக்ஸ், ட்ரையலும் ஒரே தடவையில் பாஸ்…
மூன்று மாதங்களின் பின்னர் ஏலெவல் ரெசல்ட் அவுட்.. கெமிஸ்ட்ரி பயோலாஜி சி.. பிசிக்ஸ் எஸ்.. சாதாரண சித்திகள்.. இந்த ரெசல்டுடன் பலகலைகழக வாசலுக்கு கூட போக முடியாது… அரைகுறையாக படித்த நான் இதனையும் விட குறைவாகவே எதிர்பார்தேன்… கிளாசிலே ஆரம்பம் முதல் விழுந்து விழுந்து படித்த பலர் மூதூரிலும் சரி கம்பளையிலும் சரி என்னைவிடமும் மிகக்குறைவான றிசல்டையே எடுத்திருந்தனர்.. அப்படி சொல்லிக்கொள்வதில் ஒரு திருப்தி..
எனக்கு அது ஒரு தோல்வியாகவே தெரியவில்லை.. ஏனெனில் நான் எதிர்பர்த்ததை விட அது அதிகம்..
இருந்தாலும் எனது குடும்பம் இதைவிடவும் அதிகமாக எதிர்பார்த்திருந்தது என்று அறிந்தபோது உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.. இதுவரை எல்லாமே நான் மற்றவர்களுக்காகவே செய்தேன்.. என்னை சுற்றியிருந்தவர்களின் சந்தோசத்தையே பார்த்து மகிழ்ந்தேன்.. இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து ஊண்டிப்படித்திருக்கலாம்… என்னைகொண்டு குடுப்பம் பெருமைப்பட்டிருப்பார்கள்… ஆனாலும் நான் கம்பளையில் படிக்கும் போது மாசாமாசம் தவறாது பணம் அனுப்பிய மாமா உள்ளுக்குள் அடைந்த வருத்தத்தை உணர்ந்தபோது நான் இன்னும் வேதனையடைந்தேன்.. ஆனால் அந்த வருத்தத்தை ஒரு துளியளவும் அவர் என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை.. அவருக்காகவாவது இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாம்..
இரண்டாவது சை படிக்க வேண்டும் என்று அனைவருமே ஆசைப்பட்டார்கள். ஒரே விடயத்தை மீண்டும் திரும்பிசெய்ய வேண்டும்.. அதே பாடங்களை திரும்ப படிக்க வேண்டும் என்று எண்ணியபோது.. என்னாலே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை..
எல்லோரும் சொல்கிறார்கள் என கொஞ்ச நாள் கொழும்பில் கிளாஸ் போய் பார்த்தேன்… முடியவில்லை.. இரண்டு வருடங்கள் அதே நிலையிலே படிப்புமின்றி எந்த முன்னேற்றமும் செயல்பாடுமின்றி கடந்தது… இனி இவன் டாக்டர் ஆகமாட்டான் என எல்லோரும் முடிவெடுத்து என்னையும் சையன்ஸ் கதையையும் விட்டுவிட்டார்கள்… அப்போதுதான் நான் பெருமூச்சு விட்டேன்.. மெல்லியதாய் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக உணர்ந்தேன்..
வாழ்வில் ஏதோ ஒன்றை அடைய வேண்டும், அதிகாரம் கொண்ட பெரிய நிலையில் இருக்க வேண்டும்.. என்னால் பலர் பலனடைய வேண்டும்.. என்று உள் மனசு சொல்லிக்கொண்டே இருக்கும் ஆனால், அது என்ன என்ற முடிவு மட்டும் இல்லாமலே இருக்கும்..
காலம் அதன்போக்கில் சென்றுகொண்டே இருந்தது… நானும் நண்பன் ஒருவன் சொன்னான் என்பதற்காக கொஞ்ச நாள் எச்.ஆர்.எம் படித்தேன்… அதன்பின்னர் மாமா சொன்னார் என்று கொஞ்ச நாள் சீமா படித்தேன்… இவ்வளவுநாளும் என்னை ஒரு டாக்டராக பார்த்த எனது குடும்பம் என்னை ஒரு எச்.ஆர்.மேனேஜராக, ஆக்கவுண்டனாக கனவுகாணவில்லை. ஏனேனில் டாக்டர் என்ஜினீயர் போல அத்துறைகள் பற்றி அவர்களுக்கு அவ்வளவு தெரியாது… குறித்த கோஸ்கள் இடையிலே விடுபட அதுவும் ஒரு காரணம்..
என்னைப்போல் ஒருவர் நீதிச்சேவை ஆணைக்குழுவில் உள்ள ஒரு முஸ்லிம் செயலாளருக்கு தேவையாம் என தெரிந்தவர் ஒருவர் சொல்லி கொஞ்சா நாள் அங்கே வேலை செய்றிங்களா என கேட்டார்… புது அனுபவமா இருக்குமே என அங்கே போனேன்.. மூன்று நீதிபதிகள் மாறி மாறி கேள்விகேட்டனர்.. இண்டர்வியுவிலேயே என்னை சிறப்பாக பாராட்டினர்… ஜுடிசியல் கொமிசன் செயலகத்தில் தான் வேலை என்று சொன்னார்கள்… ஆனால்.. ஏதோ காரணத்தினால்.. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நியமனம் தந்தார்கள்… வேண்டா வெறுப்பாக சென்றேன்…அங்கே நீதமன்ற வேலைகள் பெரிதாக எதுவும் இல்லை.. நீதிபதி தந்த அத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்தேன்.. நீதிபதிக்கு மிகவும் பிடித்த ஒரு உத்தியோகத்தராக இரண்டுவருடங்கள் கழிந்தன. அப்போது எம்பியாக இருந்த பெரியப்பா அமைச்சரானார்.. அவருக்கு நான் தேவை என்று என்னை கோட்டிலிருந்து ரெலீஸ் பண்ணி அவருடன் எடுத்துக்கொண்டார்… அவரின் அரசியலில் நேரடி பங்காற்றாவிட்டாலும் கொழும்பிலிருந்து அவரின் அத்தனை பிரத்தியோக விடயங்களையும் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுத்தேன்..
ஊரிலுள்ள பலர் என்னையே அவரின் அடுத்த அரசியல் வாரிசாக பார்த்தனர்.. எனது குடும்பமும் இப்போது என்னை ஒரு அரசியல் வாதியாகவே பார்த்தனர்.. மூதூரின் அரசியல் எதிர்காலமாக என்னை கனவுகண்டனர்.. ஆனால், எனக்கோ நான் என்னவாக வேண்டுமென்ற எந்த முடிவும் இதுவரை இல்லை.. அதிலே இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன..
இதற்கிடையில் யாரோ ஒரு நண்பனுக்கு ஓபன் யுனிவர்சிட்டியில் சட்டமானி என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதிக்கொடுக்க போய்.. அதிலே நான் பாஸ் பண்ணிட்டேன்.. அவன் பெயில் ஆகியிருந்தான்.. பார்த்தடிச்சும் சரியா எழுததெரியாதவனுக்கு எதுக்கு சட்டம் என ஏசிவிட்டு நான் போய் யுனிவேர்சிடியில் சேர்ந்தேன்..
நாட்டு ஜனாதிபதி திடீரென நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நானாவின் அமைச்சர் பதவியும் இல்லாமல் போனது. மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு கடமைக்கு அறிக்கையிடும்படி ஆடர் வந்தது.. போய் சேர்ந்துவிட்டேன்..
இவற்றுக்கெல்லாம் நடுவிலே. எனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்ற எனது உம்மாவின் ஆர்வம்.. மாமாவின் அழுத்தம்.. குடும்பத்தின் விருப்பம்.. ஊரில் வீடு தேடி வந்த சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்தது..
திருமணம் சம்பந்தமான எந்த சிந்தனையிலும் நான் அப்போது இருக்க வில்லை.. ஆனாலும் எனது திருமண பேச்சே வீட்டில் அதிகமாக ஒலித்தது.. ஏனெனில் அத்தனை கடமைகளையும் நிறைவேற்றிவிட்ட எனது பெற்றோருக்கு இறுதிக்கடமையாக அவர்களின் கடைசி பிள்ளையான எனது திருமணமே இருப்பதாக எண்ணினர்..
அடிக்கடி வீடு தேடி வந்த சொந்தத்தின் அன்பில் மயங்கி அவர்களின் வீட்டுக்கு பெண் பார்க்க சென்றனர். அங்கு அவர்களின் கண்களில் பட்ட அனைத்தும் போசிடிவ் திங்கிங் என்று சொல்வதை போல அவர்களின் எண்ணங்களுக்கு பொருத்தமாகவே இருந்தது போலும்…
அவர்கள் அங்கு பார்த்த அத்தனை நல்ல விசயங்களை மட்டும் என்னிடம் கூறி உனக்கு விருப்பமா என கேட்டனர்.. எனது விருப்பம் என்று எனக்கு எப்போது இருந்தது இதை மட்டும் விரும்புவதற்கு..?. உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கும் சம்மதம்.. ஆனால், நான் நேரடியாக அவளை பார்க்கவுமில்லை யாரோ எனக்கு அனுப்பிய அப்பெண்ணின் புகைப்படத்தை உற்று உற்று நோக்கவுமில்லை.. பெண்ணை நேரடியாக பார்க்காமலும் அதிகமாக பேசாமலும் திருமணமும் நடந்துவிட்டது.. என்னால் முடிந்தவரை அந்ததிருமனைத்தை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.. குடும்ப வாழ்வும் அதன்போக்கிலே ஆரம்பித்தது.. அவளை முடியுமான வரை சந்தோசமாக கவனித்துகொண்டேன்.. திருமணமாகி இரண்டு வாரத்தில் மீண்டும் கொழும்புக்கு.. வேலைக்கு போக வேண்டும்.. சனி ஞாயிறு தினங்களில் வீடு வரும்போதெல்லாம் அவளுக்கென கண்ணில் படுவதையெல்லாம் வாங்கி வந்தேன்.. அவள் மீது இரக்கம் இருந்தது..இப்போதும் இருக்கிறது.. இரண்டாவது குழந்தையையும் எதிர்பார்த்து காத்திருக்கிறாள் அவள். சொந்தத்தில் திருமணம் முடித்ததால் வீட்டிலே அனைவரும் விழுந்து விழுந்து கவனிக்கும் போது ஒரு பெருமையுமிருந்தது..
அன்று ஓய்வு பெரும் நிலையிலிருந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்னைக்கேட்காமலே எனக்கு நல்லது செய்வதாக என்னி எனக்கு ஊரில் அருகிலுள்ள நீதிமன்றம் மூதூர் நீதிமன்றம் என தெரிந்து கொண்டு இங்கே ட்ரான்ஸ்பர் எடுத்து தந்துவிட்டார்.. அந்த இடமாற்றம் என் வாழ்வின் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது..
இதுவரை நான் காணாத புது அனுபவம்.. ஊரிலே வேலை.. நீதிமன்றம் என்று சொல்லிகொள்வதில் நான் வேலைக்கு சேர்ந்த கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத ஒரு கௌரவம்.. இவ்வளவு காலமும் அரசியல் வாதியுடன் போடிக்காட்டுகளுக்கு மத்தியில் செல்லும்போதும்.. மினிஸ்டரின் ஆளில்லாத வெறும் வாகனத்துக்கே போலீசார் சலூட் அடிப்பதை பார்த்துப் பழகியதாலும் சட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.. எது செய்தாலும் அரசியல் பவர் முன்னே எந்த போலிசும் செல்லாது என்ற சிந்தனை… மூதூர் நீதிபதியுடன் நெருங்கி பழக ஆரம்பித்தபோது சட்டத்தின் மீது ஒரு பெரும் மரியாதை வந்தது… அதன் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்ததது.. நோயாளிக்கு வைத்தியம் செய்ய ஒரு டாக்டரரின் சேவை எவ்வளவு முக்கியமோ, அதே போலவே அநீதியால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு சட்டத்தால் வழங்கும் நிவாரணமும்… வாழ்க்கையின் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட , அநீதியிளைக்கப்பட்ட மக்கள் தமது இறுதி நம்பிக்கையாக நீதிமன்றம் முன்னே வந்து நிற்கும் போது அவர்களின் கண்ணிலே இருக்கும் ஏக்கம் என் நெஞ்சில் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.. நலிவுற்றவனுக்கு நிவாரணமும் .. சீரளித்தவருக்கு சிறைத் தண்டனயும் வழங்கும் அந்த நீதிபதி .. கறுப்புக் கோட்டுக்குள்ளே ஒரு கடவுளாக தரிந்தார்..
ஓரிரு மாதங்களிலே எனது நேர்த்தியை அடையாளம் கண்டுகொண்ட நீதிபதி நீதிமன்றத்திலே எனக்கு பொறுப்பு வாய்ந்த கடமைகளை ஒப்படைத்தார்.. எனது செயல்பாட்டிலே திருப்திகண்டவர் என் மீது தனது நம்பிக்கையை அதிகரித்கொண்டு எனது கடமைகள் சம்பந்தமான அனைத்து விடயங்களிலேயும் சட்டத்திற்கு இணங்க சரியாக முடிவெடுக்கும் திறனை என்னில் உருவாக்கினார், கற்பித்தார்….
நான் இதுவரை காலம் கணக்கிலெடுக்காத இந்த சட்டத்தை நன்றாக படிக்கவேண்டும்.. என்ற ஆர்வம் முதன் முதலாக எனக்குள் தோன்றியது.. ஏற்கனவே பதிவு செய்த, மூன்றுவருடமாக படிக்காத ஓபன் யுனிவெர்சிட்டி சட்டமானியை மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்.. மூன்று வருடங்கள் எந்தபாடத்திலும் பெயிலில்லை. திறமைச்சித்தி.. இறுதியாண்டு.. இபோதும் ஆர்வத்துடன் தொடர்கின்றது… என் வாழ்கையில் நானாக விரும்பி ஆசைப்பட்டு செய்யும் முதாவது விடயம்.. அதனை முழுமையாக அடையவேண்டும் என்ற ஆர்வம்.. பல தடங்களையும் மீறி தொடர்கின்றது… அந்த நீதிபதி இடமாற்றம் பெற்று செல்லும்போது நான் அவருக்கு கூறிய வாழ்த்து… சேர் நீங்கள் ஹைக்ஹ்கோர்ட் ஜட்ஜ் ஆக இருக்கும் போது நான் உங்கள் ஜுடிசியல் சோனில் ஒரு மஜிஸ்ட்ரேட் ஆக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.. அவரும் தன் புன்னகையால் என்னை வாழ்த்திச்சென்றார். என் வாழ்வில் எனக்கென ஒரு எதிர்கால இலட்சியத்தை முதலாவதாக தேர்ந்தெடுத்துகொண்டேன்.. அதனை அடையும்வரை பயணிப்பேன்..
இவற்றுக்கெல்லாம் நடுவிலே உள்ளத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் இலேசான வலி… ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவரை கண்டிருக்க கூடாதா..???
வாழ்வின் அர்த்தத்தை,வாழ்ந்து கொண்டிருக்கும் கதையை,உண்மையை சொல்கிறது கதை. சிறப்பு 🙂 பாராட்டுக்கள்!