(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1934-ஜூலை 11, சுலாமிமலை
இன்று அப்பாவோடு மறுபடியும் சண்டை. இந்த மாதத்தில் இது இரண்டாவது ஆண்டில் இருபதாவது.
நானும் சண்டை போடாமல் இருக்கவேண்டும் என்று தான பார்க்கிறேன். அப்பா சொல்ல, நான் சொல்கிறேன், நான் சொல்ல அப்பா சொல்கிறார். பேச்சு வளருகிறது.
எப்படியாவது ஒதுங்கிப் போய்விடத்தான் வேண்டும். இங்கு அப்பாவுடன் இருந்துகொண்டு நான் எதிர்பார்க்கிறபடி எழுத இயலாது. எப்படியோ, ஏதோ சொல்லி, மன நிம்மதியைக் கெடுத்துவிடுகிறார். ஆனால் எனக்கே தெரியவில்லை. மன நிம்மதியில்லாத போது எழுத்து ஓடுகிறதா- அல்லது மன நிம்மதி இருக்கிறபோது எழுத்து ஓடுகிறதா? நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை,
ஜூலை 13.
அப்பாவோடு சண்டை வருவதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். புரியமாட்டேன் என்கிறது.
எனக்கும் அப்பாவுக்கும் மனப் போக்கில் அதிக வித்தியாசம் இல்லை; மனப் பக்குவத்தில் தான் ஏதோ வித்தியாசம் இருப்பது போலத் தெரிகிறது. எனக்குத் தெரிந்த மற்ற தகப்பன்மார்களைப்போல அவர் ‘நீ வேலைக்குப் போ; சம்பாதித்துப் பணம் கொண்டு வந்து கொடு” என்று சொல்லவில்லை, “எழுதப் போகிறாயா? உன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக் கொள்” என்கிறார். உண்மையில் எனக்குள்ள சுதந்திரம் இந்தத் தலைமுறையில் வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம் தான். மற்றவாகள் குடும்பப் பொறுப்புகள் என்கிற சுமைக்குப் பணிய வேண்டியதாக இருக்கிறது. எனக்கு அதுகூட இல்லையே, ‘நான் சம்பாதித்திருப்பது உனக்குப் போதும். பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீ எழுதலாம்’ என்று தான் அப்பா சொல்கிறார்.
பின் என் சண்டை வருகிறது? சமீபத்தில் ஏற்பட்ட சண்டைக்குக் காரணம் ஒரு சில்லறை விஷயம். உண்மையிலேயே சில்லறை விஷயம் தான். அப்பா மாதம் பிறந்ததும் சம்பளம் வாங்கியதும் “இந்த மாதத்துக்கு உன் செலவுக்கு” என்று என் கையில் நூறோ ஐம்பதோ கொடுத்து விடுவார். இது இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பழக்கம், அன்று நண்பர்கள் கோஷ்டியுடன் கும்பகோணத்துக்கு நடந்து போய் விட்டு, ஆறேழு பேராக ஆரியபவனில் டிபன் காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பினோம். இரவு எட்டரை மணிக்கு வீதி வந்ததும் அப்பா, வாசலில் ஹரிகேன் லைட்டில், குட்யார்ட் கிப்ளிங்கின் Limits and Renewals சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருந்தவர் என்னுடன் சாப்பிட வந்தார். டிபன் பலமானதால் எனக்குச் சாப்பாடு அதிகமாகக் கொள்ளவில்லை. அது பற்றி அக்கா (அதாவது தகப்பனாரைப் பெற்ற பாட்டி) ‘ஏண்டா இப்படிக் கண்டதைத் தின்று உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டாள். உடனே அப்பா ஒன்றும் சொல்லிவிடவில்லை. வாசலில் போய்ப் புஸ்தகத்தை எடுத்து என்னிடம் தந்தவர் “இந்த கதைகள் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை” என்றார், “உனக்கு Serious விஷயங்கள் தான் பிடிக்கிறது, லேசான ஹாஸ்யமாக இருந்தாலும்கூட உனக்குப் பிடிக்கமாட்டேன் என்கிறது” என்றேன். உதாரணமாக அவரால் P.G Wodehouse புஸ்தகம் ஒன்று படிக்கவே முடியவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன், நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே படிக்க அந்த நாவலை – The Small Bachelor – அப்பாவில் பத்து பக்கங்கள் கூடப் படிக்க முடியவில்லை. அதே நான் சுட்டிக் காட்டியது தான் அப்பாவுக்குக் கோபம் வரக் காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
“இன்று கும்பகோணத்தில் ஓட்டலில் எத்தனை செலவு?” என்று கேட்டார்.
“இரண்டு மூன்று ரூபாய் ஆச்சு. ஏன்?” என்றேன், புரியாமல்.
“உன்னோடு இன்று வந்து சாப்பிட்டார்களே அவர்களில் ஒருவராவது என்றைக்காவது ஒருநாள் உனக்கு டிபன் வாங்கித்தரக்கூடிய ஸ்திதியில் இருக்கிறார்களா?” என்று கேட்டார் அப்பா.
“அப்படி நினைத்துப் பார்க்கவில்லை தான். அது அவசியம் என்றும் தோன்றவில்லை” என்று சற்றுக் கடுமையான குரலிலேயே பதில் அளித்தேன்.
“உனக்கு அவசியம் என்று தோன்றமலிருக்கலாம். ஆனால் பணம் நான் தந்த பணம், மாதம் பதினந்தேதியாகும் போது மாதப் பணம் தீர்ந்து விட்டது – மேலும் பணம் வேணும் என்று நீ என்னிடம்தானே கேட்பாய்”
உண்மை தான் என்று உணர்ந்து எனக்கும் கோபம் பிரமாதமாகத்தான் வந்தது. ஆனால் கோபத்தை அடக்கிக் கொண்டு “இந்த மாதம் கேட்க மாட்டேன்” என்றேன் அழுத்தம் திருத்தமாக.
அதோடு விட்டு விட்டு, அப்பா “கதையை மேலே படி” என்றார், உரக்க அவருக்கு நான் விரும்பிய பல விஷயங்களையும் படித்து காட்டுவது பழக்கம். அதேபோல அன்றும் Limits and Renewals நூலில் உள்ள கதையைப் படிக்க ஆரம்பித்து முதல் வரியைப் படித்திருப்பேன், அதற்குள் தான பாதித் தமிழிலும் பாதி அழுத்தமான் ஆங்கிலத்திலுமாக மேலே சொன்ன சமபாஷணை நடந்தது. கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டு,
நான் “அடுத்தமாதம் முதல் நீ பணம் தர வேண்டாம்” என்றேன்,
“இந்தப் பேச்சைத்தான் கண்டது” என்றார் அப்பா .
இப்படியாக யுத்தம் தொடங்கிவிட்டது. அவரும் ஓய்வதாக இல்லை; நானும் ஓயத் தயாராக இல்லை. அக்கிரஹாரத்து அமைதியைக் குலைத்துக் கொண்டு எங்கள் குரல் ஒலித்தது. இரவு பதினொன்றரை மணிவரை அவரவர் நியாயம் என்று மனத்தில் பட்டதை, மற்றவருக்கு அது எப்படிப்படும் என்கிற நினைப்பே இல்லாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தோம். தெருவில் யாராவது விழித்துக் கொண்டிருந்து கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்களே என்கிற நினைப்பே இருவருக்கும் கிடையாது. கேட்பினும் பாதகம் இல்லை, எங்களுக்குள் விஷயம் இது.
படிப்பு முதல் வரியோடு நின்று விட்டது. நான் படுக்க எழுந்து மாடிக்குப் போகும் போது அப்பா “புஸ்தகத்தை வைத்து விட்டுப் போ” என்றார்.
நான் கோபமாக “உன் பணத்தில் வாங்கிய புஸ்தகம் தானே” என்று சொல்லிவிட்டு, திண்ணை மேல் புஸ்தகத்தைப் படாரென்று வைத்து விட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே போனேன்.
கூடத்தில் அக்கா தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். “தூங்கவில்லையா அக்கா?” என்றேன்.
“என்னடா சண்டை , ராஜா?” என்றாள் அக்கா.
“வழக்கம் போலத்தான்,” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படி யேறினேன்.
அக்கா சொன்னாள்: “ராஜியை அழைச்சுண்டு வர நாளாச்சு. அப்பாவோடு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் எப்படி?” என்றாள்.
“அப்பா பணத்தில் அவளும் இங்குவந்து திண்டாடவேண்டுமாக்கும்” என்றேன்.
“அவள் வந்துவிட்டால் இந்த சகவாஸத்துக் கெல்லாம் இடம் இராது, எனக்கும் ஒண்டியாக வேலை செய்ய முடியவில்லையேடா ராஜா” என்றாள் அக்கா .
இதுவும் – அக்கா சொன்னதும் – நிலைமையைச் சமாளிக்க ஒரு வழியாக இருக்கலாம் என்று எனக்கு அப்போது தான் தோன்றியது. ஆனால் நிலைமையைச் சமாளிக்க நான் விரும்பவில்லை. எப்படியாவது அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிவிட்டால் போதும் என்று தோன்றியது. அப்பா சொன்னது நியாயம் தான் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. நான் சொன்னதிலும் நியாயம் இருந்தது என்று அப்பா ஏன் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்கிறார்.
ஜூலை 20.
இன்று சிதம்பரத்திலிருந்து கடிதம் வந்தது. அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் – நான் வந்து ஒரு வாரம் இருந்து விட்டுப் போகவேண்டும் என்று அப்பாவுக்குத்தான் எழுதியிருந்தார்கள்.
“போய்விட்டுத்தான் வாயேன்” என்றார் அப்பா.
ரெயில் செலவுக்கு நான் எழுதிப் பணம் சம்பாதித்துக் கொண்டுதானே மாமனார் வீட்டுக்குப் போக வேணும்” என்றேன் நான்.
“நன்னாருக்குடா இது” என்றாள் அக்கா.
“நீ சம்பாதிச்சுண்டு போறவரையில் காத்திருந்தால் அவள் கிழவியாகிவிடுவாள், கையில் நூறு ரூபாய் தருகிறேன். போய் ஒரு வாரம் இருந்து வீட்டு வா” எனறார் அப்பா.
நான் பதில் சொல்லவில்லை. “வேண்டாம் உன் பணம்” என்று சொல்லலாம் தான், ஆனால் சொல்லவில்லை.
ஆகஸ்டு 3.
அப்பா நேற்றுக் கொடுத்த நூறு ரூபாய் பணத்தை எடுத்துக்கொண் டு நான் சென்னைக்கு டிக்கட் வாங்கிவிட உத்தேசித்தேன். ஆனால் சிதம்பரத்துக்கு, மாமனார் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன். சிதம்பரத்தில் குதிரை வண்டி வாசலில் வந்து நிற்கும்போது அப்பா இன்னொரு நூறு ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார். “ஏதாவது அவள் கேட்பாளானால் வாங்கிக் கொடு, அப்பாவைக் கேட்டுப் பணம் வரவழைத்து வாங்கித் தரேன் என்று சொல்லி உன் கௌரதையைக் குறைத்துக் கொள்ளாதே!” என்றார். “பத்து நாட்களுக்கு மேல் தங்காதே – முடிந்தால் நாலைந்து நாளிலேயே திரும்பிவிடு” என்றார்.
இப்படிக் கேட்காமலே பணம் தருகிற தகப்பனாரிடம் சண்டைப் போட்டுக் கொள்கிறாயே என்று கேட்பது போல என்னை அக்கா பார்த்தாள். அவள் என்னைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் எனக்கு நிதரிசனமாகவே தெரிந்தது. நேரே சென்னைக்குப் போவது என்கிற என் தீர்மானம் தளர்ந்தது. “சிதம்பரத்திலிருந்து அப்படியே பட்டனத்துக்குப் பத்து நாள் போய் விட்டு வந்தாலும் வரேன்” என்றேன் அப்பாவிடம்.
“பணம் போதுமாடா?” என்றார் அப்பா, பின்ளை கஷ்டப் படக்கூடாதே என்று அப்பாவுக்கு அவ்வளவு கவலை. நான் சொன்னேன், “பட்டணம் போற வரையிலும் இந்தப் பணம் போதும், மேலே வேணுமானால் எழுதுகிறேன்” என்றேன்.
அக்கா இதற்குள் வாசலில் வந்து ”உன் பெண்டாட்டியை அனுப்புவார்களானால், ஒரு பத்து நாள் சுவாமிமலையில் என்னோடு இருக்கட்டும் என்று நீ திரும்பிவரபோது அழைச்சுண்டுவா ராஜா” என்றாள். நான் பட்டணம் போகிற உத்தேசத்தைக் கைவிடச் செய்ய அவள் யுக்தி அது. நான் பதில் சொல்லவில்லை.
“போய்ட்டு வரேன் அப்பா” என்றேன்.
“ஜாக்கிரதையாகப் போய்ட்டு வா” என்றார் அப்பா ..
அப்பாவோடு சண்டையையும் அதற்குப் பிறகு கத்திரித்துக்கொண்டு போய்விடலாம் என்று நான் எண்ணியதையும், எல்லோரும் மாகச் சேர்ந்து கத்திரித்துக் கொண்டு, உறவு விட்டுப் போகாமல் இருப்பதற்கு எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்றும் சிந்திக்கிறேன். ரெயிலில் என் டைரியை எடுத்துவைத்து எழுதிக்கொண்டே, குடும்பத்துக்குள் உறவுதான் எவ்வனவு Complex – ஒரு வெட்டில் அறுத்துவிடாது. அறுத்து விட்டதாக நினைத்துக் கொண்டாலும், தப்ப முடியாது. எல்லா உறவு முறைகளுமே love hate relationship ஆகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. சில சமயம் அன்பு, சில சமயம் வெறுப்பு அதிகமாகிறது. ஒரு சமயத்துக்கு ஒரு விஷயம் சரியாகப்படுகிறது. இந்தகக் குடும்பப் பிணைப்புகள், அதுவும் நம்மிடையே எவ்வளவு மெல்லியவை – அதேசமயம் எவ்வளவு பலமானவை, நாவல் எழுத இது எவ்வளவு நல்ல விஷயம். இதை வைத்து யாரும் ஏன் எதுவும் எழுதவில்லை? பெரிய விஷயங்களைத் தேடுகிறார்கள் – சிறு விஷயம், இது போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்தக் குடும்பப் பிணைப்பிலே ராஜி – புதுசாக வந்தவள், அவள் எனன மாதிரியான புதிர் போடப் பேகிறாளோ! He who has married a wife has given hostage to fortune என்று proverb சொல்லுகிறது. எழுத்தாளனா இருக்க விரும்புகிறவன், கல்யாணம் செய்து கொள்ளாதிருப்பது நல்லது. problems குறையும். ஆனால் மாமனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாமலிருந்தால் நல்லது என்று சிந்தித்து என்ன பலன்?
– கசடதபற, Jan 1971