ஒருமையின் நாயகியும் உயிர் மறந்த சடங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 1,241 
 
 

அவள் பூரணி ஒருமை நிலை பேணி நின்றிருந்த பொழுதில்தான் அவள் வாழ்க்கையில் அந்த கோர விபத்து நேர்ந்தது. அவள் சிறிதும் எதிர்பாராமல் நடந்தேறிய அந்த விபத்தில் முற்றிலும் உடைந்து சிதற வேண்டிய துர்ப்பாகிய நிலை, அவளூக்கு மட்டும் ஏன் நேர வேண்டும்? அவளின் அப்பழுக்கற்ற, தூய்மையான சத்திய இருப்புக்கே சவால் விட்டு சகதியே, குளிக்க வைக்கிற மாதிரி நேர்ந்த, அந்த வாழ்க்கையனுபவம் எத்துணை கொடூரமானது.

கல்யாணத் தேரேறி வந்த களை கூட இன்னும் போகவில்லை, பழுதற்ற அன்பிலே அவள் ஓர் ஆதர்ஸ தேவதை மாதிரி. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சகல மனிதர்களையும் ஒரே நேர் கோட்டில் வைத்து, முழுமையாக, நேசிக்கத் தெரிந்தவள் அவள். இருமையை விட்டு விலகி நிற்கிற அவளின் உயிர் பிரகாசமான ஒருமை நிலை பேணும் உள்ளுக இருப்புக்கு முன்னால் எதிர்மறை சிந்தனை கொண்ட, அன்பு வழிபாட்டு நிலையையே அறியாத ஒரு பாமரனோடு தான் அவளின் கல்யாணமென்ற வாழ்க்கை நாடகம் அரங்கேறத் தொடங்கியிருந்தது.

அதில் தான் எவ்வளவு கசப்பான அனுபங்கள். அவளுக்கு கல்யாணம் முடிந்து இன்னும் முழுசாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஆவணியில் நடந்த கல்யாணம். முதன்முறையாக, கல்யாணக் களை வடிய, பூரணி தன் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்திருந்த சமயம் மிகவும் கீழ் மட்டமான ஒரு வீடு வறுமை செல்லரித்துப் போன அவலக் காட்சிகள் தான் கண்களை நிறைக்க, அவள் கரை ஒதுங்கிப் போகிற நிலை தான் அதில் தான் எவ்வளவு கசப்பான அனுபங்கள்.

இப்படியொரு வீட்டில் வாழ்ந்தவளில்லை அவள். ஆனால் பெரிய பணக்கரியுமல்ல. ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறாள். இந்த ஏற்றத் தாழ்வுகளை, பொருட்படுத்தாமல், மனதில் அன்பு மாறாமல் அவள் சகஜமாகவே இருந்து பழகிய நேரத்தில் தான் அவன் அவளுடைய அருமைக் கணவன் புது மாப்பிள்ளையாகிய சந்துருவின் நடத்தையில். அவள் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அவளுக்கு எதிர்மறையான நிழற் கோட்டில் சஞ்சரித்தவாறே, அவளை நெருங்கி வரவிரும்பாமல், ஓர் அந்நியனாக அவன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து அவள் வெகுவாக நொந்து போனாள். ஏன் இந்த திடீர் மாற்றம் என்று புரியாமல் அவள் ஒரேயடியாய் நிலை குலைந்து போயிருந்தாள். கல்யாணமான இரண்டொரு நாட்களிலேயே, அவன் இப்படித்தான் மாறிப் போயிருந்தான், குடி முழுகிப் போன மாதிரி அவன் முகம் சந்தோஷக் களையிழந்து இருண்டு கிடந்தது. அவள் அருகில் வருவதையோ, தொட்டு மகிழ்ந்து கூடி குலாவிச் சல்லாபிப்பதையோ விரும்பாமல் அவளைப் புறம் தள்ளி அவன் நடந்து கொண்ட விதம் மிகவும் எரிச்சலூட்டக் கூட்டக் கூடிய ஒரு அசம்பாவித சம்பவமாகவே அவளை மனம் பதறி அழ வைத்தது.

ஒருமை நிலையை உணர்ந்து எல்லா உயிர்களையும் வேறுபாடின்றி நேசிக்கத் தெரிந்த அவளுக்கா இப்படியொரு சத்திய சோதனை? ஆவன் அவளை இவ்வாறு வெறுத்து ஒதுக்கி தண்டிப்பதற்கான, வலுவான காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்பதை அறிய முடியாதவளாய் அவளின் குழப்பம், அப்பா அம்மா அவர்களின் தலை தீபாவளிக்காக அன்பளிப்பு அதாவது வேட்டி சால்வை அவளுக்கு புடவை எல்லாம் எடுத்துக் கொண்டு, ஊரிலிருந்து வரும் வரை நீடித்தது. அவள் கையால், உணவு பரிமாறுவதையே விரும்பாமல் அவன் முகம் திருப்பிக் கொண்டு, ஓடுகிற நிகழ்வு ஒன்றே போதும், அவளை இவ்வாறு நிலை குலைய வைப்பதற்கு.

வாசலில் அவர்களைக் கண்டவுடன் அவள் தன்னை, மறந்து ஓவென்று பெருங்குரல் எடுத்து அழுத போது, அவன் அங்கு இருக்காமலே நழுவிட்டான். அன்றைய மனோ நிலையில் அவளென்ன, அவர்கள் கூட, வேண்டாத விருந்தாளிகள் தான் அவனுக்கு. ஆகவே அவன் சார்ந்த உறவு மனிதர்களுக்கும் கூட அவர்கள் வரவும் அவளின் உறவும் ஒட்ட மறுக்கிற, வேப்பங்காயாகவே மனதில் கசந்ததனால், யாரும் அவர்கள் முன் வராமல் போனது பெரும் அபசகுன நிகழ்வாகவே நெஞ்சை வாள் கொண்டு அறுக்க, அவளின் அழுகை சப்தத்தின் நடுவே, ஒன்றும் பேசத் தோன்றாமல் அவர்கள் வாயடைத்து போய் நின்றிருந்தனர். அவளின் அழுகைக்கான காரணம் பிடிபடாமல் அவர்கள் மனம் தீப்பற்றி எரிந்தது. அவளிடம் பதில் கேட்டு அறியக் கூடிய ஒரு விடயமல்ல இது. அவனுக்கு நேர்ந்ததென்று அவனாக, வாய் திறந்து சொல்லும் வரை குழப்பமே நீடிக்கும்.

குழப்பவாதிகள் இருக்கும் வரை, சவால்களும் வந்து கொண்டு தானிருக்கும். அவளை பலி பீடத்தில் கொண்டு வந்தல்லவா நிறுத்தி விட்டார்கள். .அதிலிருந்து மீள ஒரு வழியும் தெரியாமலே, சூனியம் வெறித்து அந்த இருளில், கொணடு வந்த அன்பளிப்புகளைக் கூட, கொடுக்க மனமின்றி, அவர்களின் வீடு திரும்பல், அவளை மேலும் குழப்ப, நாதியற்று நடுச் சந்திக்கே வந்து விட்ட மாதிரி ஒரு நிலைமை அவளுக்கு.

அவர்கள் வந்து போன மறுநாளே அவனும் அவளை அங்கு வைத்திருக்கப் பிடிக்காமல் , ஒழியட்டும் பீடை என்று கருதி, அவளை அவளின் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போய் விட்டான். இது ஒரு மறு பிரவேசம் மாதிரி அவளுக்கு போட்ட வேடம் கூட இன்னும் கலையவில்லை. அந்தக் கல்யாண நாடகத்தின் முக்கிய திருவிழாவான, கன்னி கழிதல் நேராமலே அவள் வந்து சேர்ந்திருக்கிறாள்.

வீட்டில் அப்போது அப்பா மட்டும் தனியாக இருந்தார். அவளுக்கு இரு அக்காமார் மட்டும் தான். அவர்கள் கல்யாணமாகி வேறாக இருக்கையில் அவளுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? அவள் சுமக்கிற கழுவாய் படு வலுவானது என்று போகப் போகத் தான் தெரியும். அவர்கள் வரும் போது அப்பா முன் வாசலில் தான் இருந்தார். வாய் திறந்து கேள்வி கேட்கக் கூடிய நிலையில் அவர் இருக்கும் பட்சத்தில் தான் அவன் சொன்ன ஒரேயொரு வார்த்தை அவர் காதில் வந்து நெருப்பாக விழுந்து, அவரை சுட்டெரித்தது.

கொஞ்ச நாளைக்கு இவ இஞ்சை இருக்கட்டும்.

அதென்ன கொஞ்ச நாள் கணக்கு? அப்படி இவளைக் கை கழுவி விடுவதற்கா உனக்கு இவளை நாம் கட்டி வைச்சது என்று, அவருக்கு ஆவேசம் வந்து கேட்கத் தோன்றினாலும், வாய் வராமல் அவர் மெளனித்து இருக்கும் போதே அவன் போய் மறைந்து வெகு நேரமாகி விட்டிருந்தது

அவளோ ஒன்றையும் பொருட்படுத்தாதவள் போல் சகஜமாக அவரிடம் கேட்டாள்.

அம்மா எங்கையப்பா?

ம், உனக்கு மறந்து போச்சே? இப்ப ஐப்பசி மாதமல்லே நடக்குது கொம்மா கந்தசஷ்டி விரதம். ஆக இளநீரோடு தான் இருக்கிறா.

அவள் கேட்டால் அப்ப சரி, நாளைக்கு நானும் அவவோடு கோவிலுக்குப் போக ஏலுமே அப்பா?

அவருக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை அவள் கழுத்தில் தாலி இருப்பது உண்மையானால், அவள் இரு கூறாகி வேறு[பட்டு உடைந்து வந்திருக்கிறாளே! இந்த நிலையில் அவள் இப்படி வந்து நிற்பது அறிந்தால், ஊர் என்ன சொல்லும், மடியில் தூக்கி வைத்து தாங்கவா போகிறது! நாக்கு வளைத்து பேசும், கை கொட்டி சிரிக்கும். இதையெல்லாம் அனுபவமாக உணரும் போது, இவள் பஸ்பமாகியே விடுவாள். இந்த பொட்டல் வெளி அனுபவத்திலிருந்து இவளைக் காக்க வேண்டிய தார்மீகக் கடமை ஒன்றல்லவா எனக்கு முக்கியம் என்று அவ்வாறு யோசித்துக் கொண்டு அவர் இருக்கும் போது மீண்டும் ஒன்றுமே நடவாத மாதிரி அவள் கேட்டாள்.

என்னப்பா யோசிக்கிறியள்?

முள்ளிலை சீலை விழுந்திட்டுது . அதை எப்படி எடுத்து பிழையைச் சரி செய்யிறாதென்று தான் இப்ப என் யோசனையெல்லாம் என்ற போது அவள் அழுது விட்டாள்.

எதிர்மறையான களங்கம் குடிக்க வந்த, ஒரு வாழ்க்கை நாடகம் இதில் அவளின் நிஜ இருப்பே கேள்விக் குறியாகி விடும் போலிருந்தது எதற்கும் அம்மா வரட்டுமென்று அவள் காத்திருக்கிறாள்.

வந்தது அம்மா மட்டுமல்ல, அடுக்கடுக்காய் புயலும் தான் வந்தது. அவளின் அடி வேரையே பிடுங்கி எறிகிற மாதிரி அடித்ததே ஒரு பெரும் புயல். ஆம் அவன் வீட்டிலிருந்து அவளைப் பற்றிய, தவறான புரிதலோடு ஒரு ஆவேசக் கடிதம். சந்துருவின் அப்பா தான் வக்கிரம் மேலிட ஒரு நீண்ட கடிதமே, அவளின் அப்பாவான நமசிவாயம் வாத்தியாருக்கு எழுதியிருந்தார்.

சந்துருவின் அப்பா பஞ்சபாதகங்களுக்கும் அஞ்சாத ஒரு கிரிமினல் ஒரு புகையிலைத் தரகன். வேறு எப்படி இருப்பார்? அவர் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நமசிவாயம் அப்படிப்பட்டவரல்லர். ஒரு புண்ணீய சீலன், தர்மம் நீதி இவைகளையே, தெய்வமாக நினைத்து வணங்குபவர். ஒரு பொய்யோடு மோதி சாக வேண்டிய நிலைமை இப்போது அவருக்கு.

இது ஒரு தர்மயுத்தம் பூரணி பற்றி அவளின் உண்மை நிலைக்கு மாறாக, வந்ததே ஒரு பொய்க் கடிதம். அதுவும் எழுதப் படிக்கத் தெரியாத, நல்லதம்பி தான் எழுதியிருக்கிறார். கையெழுத்து மட்டும் தான் அவர் போட்டது. அதாவது, பூரணி உடல் சுகங்களுக்கு அப்பாற் பட்ட ஒரு வெற்றுப் பாத்திரம். அவளிடமிருந்து பெற வேண்டிய , கேவலம் தசை இன்பம், அது கூட இல்லாமல் இருக்கிற அவள் மனைவி என்ற அந்தஸ்துக்கே தகுதியற்று இருக்கிற அவளை, விவாகரத்து செய்வது ஒன்றைத் தவிர வேறு வழியில்லையாம். அவர்களுக்கு அது மட்டுமல்ல. அவள் இருடி, அதாவது பருவத்துக்கு வராத, பெரியவளாகாத அவளுக்கு இது தான் தண்டனை என்பது அவர்கள் தீர்ப்பு. இதற்கு மாறாக, அவளைத் தீக்குளிக்க வைத்தே தீர வேண்டுமென்ற தன் முடிவை அப்பா அம்மாவிடம் எடுத்துச் சொன்ன போது அவளுக்கு கோபமே வந்தது.

இதற்காக குழந்தைப் பேறு மருத்துவரிடம் போய் திறந்து காட்டி இவள் மானம் கெட்டு அழிந்து போவதை விட அவனைத் தூக்கி எறிந்து விட்டு பூரணி இன்னொருவனைக் கட்டினால் என்னவென்று, கோபம் கொந்தளித்து அம்மா தன்னை மறந்து பேசிய வார்தையை, உடன் ஜீரணிக்க முடியாதவளாய் நிலத்தில் விழுந்து பூரணி, ஓவென்று கதறியழுத சப்தம் கேட்டு உலகமே அழுதது. அவளின் அப்பேர்ப்பட்ட அழுகைக்கு முன்னால் தர்மமே தலை சரிந்து கிடந்தது.

அழிந்து போகின்ற உடலை வைத்துக் கொண்டு என்னவொரு மகா அக்கிரமம் இது சந்துரு. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை நான் உடலால் வருகின்ற, சுய இன்பங்களையும் தசை உணர்வுகளையும் தாண்டி, என்னை ஒரு உயிராக உணர்வுமிக்க பெண்ணாக, அதிலும் மேலாக, ஓர் ஆத்மாவாகவே இனம் கண்டு பூரிக்க வேண்டிய நீங்களா என்னை இப்படி நீங்கள் புறம் தள்ள நினைக்கறியள்? இதை நிரூபிக்க நான் வேறு தீக்குளிக்க வேண்டுமாமே, அப்பா சொல்கிறார். இதற்கெல்லாம் காலமே பதில் சொல்லும் என்று நான் காத்திருக்கிறேன். அந்தக் காலமே பதில் சொல்லும் கடவுள் தீர்ப்பு எழுதுவார். எனது சத்திய இருப்பும் சாந்தி நிலையும் உண்மையானால், ஒரு நல்ல தீர்ப்பு எனக்கு வரட்டும்.

அவள் எண்ணம் போலவே நடந்தது. ஒரு நொடியில் சந்துரு அவளிடம் பெற்றுக் கொண்ட தசை இன்பம் காரணமாக, அதை மெய்யாக்க, கடவுளே நேரில் வந்து சாட்சி சொல்வது போல அவள் மடியில் ஒளி பிரகாசமாக, அந்தத் தெய்வம் குழந்தை. யாருக்கு வரும் இந்த பெரும் பேறு? ஓர் அவதாரக் குழந்தை. அவளுக்கு அந்த பொய்த்துப் போகாத நிஜ எழுச்சி நடுவே கனவு போல ஒரு காட்சி. சந்துரு வருவான். சத்தியம் வென்றதைக் கூட பொறுக்க மாட்டாமல் தலை கவிழ்ந்த கோலத்தில் தன் வழக்கு எடுபடவில்லையே என்ற கவலையில் முகம் இருண்டு கனத்துக் கிடக்க, அந்த ஒளித் தேவதை முன் அவன் வெறும் ஜடம் போல. உலகமே இப்படித்தான். உயிர் சடம் வெறித்துப் போனாலும், சத்திய இருப்பு என்பது சகதி குளித்து எழவே என்று அவள் பெரும் கவலையுடன் நினைவு கூர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *