கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,823 
 
 

விஜயவாடா ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல் இருக்கும். அந்த ராத்திரியிலும் தோசை விற்றுக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் காலாற நடக்கலாம் என்ற யோசனையில் இருக்கையைவிட்டு எழுந்தேன்.

மிக அவசரமான பயணம் என்பதால் ரிசர்வேஷன் கிடைக்காமல், ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் இருபத்தைந்து ரூபாய் போர்ட்டருக்குக் கொடுத்துப் பிடித்த இருக்கை. கிட்டத்தட்ட ஒருவர் மேல் ஒருவர் அடுக்கிவைத்த மாதிரி இருந்த நெரிசல், விஜயவாடாவில் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

சூட்கேஸை எடுத்து இருக்கையில் வைத்துவிட்டு கீழே இறங்கினேன். ஒரே பொசிஷனில் உட்கார்ந்தே வந்ததில் இடுப்பும் தோள்பட்டையும் திருகிக்கொண்டதுபோல வலி. பிளாட்ஃபாரத்தில் பக்கத்தில் இருந்த தண்ணீர் குழாயைத் தவிர்த்துவிட்டு தூரமாக இருந்த குழாயை நோக்கி நடந்தேன். நிதானமாக முகம் கழுவித் தண்ணீர் குடித்துவிட்டு, கைகால் களை உதறி சொடுக்கெடுத்துக்கொண்டு திரும்பினேன்.

இருக்கையில் என் பெட்டி மீது ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உட்கார்ந்திருந்தது. ‘பழையான கழிதலும் புதியன புகுதலும்’ போல வேறு முகங்களால் மறுபடியும் நிரப்பப்பட்டிருந்தது கம்பார்ட்மென்ட். நான் வண்டியில் ஏறி என் பெட்டி மீது இருந்த குழந்தையைக் கீழே இறக்கி விட்டுவிட்டு, பெட்டியைக் கால்களுக்கிடையே வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். குழந்தை மிக இயல்பாக என் கால்களைக் கட்டிக்கொண்டது.

குழந்தை யாருடையதாயிருக்கும் என்ற யோசனையோடு பார்வையைச் சுழலவிட்ட கணத்தில் சிறு குலுக்கலோடு வண்டி நகர்ந்தது. சட்டென்று பதற்றமாகி விட்டது எனக்கு!

கழுத்தை நன்றாக நீட்டி வாசலைப் பார்த்தேன். இறுக்கமாக இருந்த ஜனத்திரள் மெள்ள மெள்ள அசைந்து இடங்கொடுக்க, கடைந்த தயிரிலிருந்து திரண்டு வெளிவரும் வெண்ணெய் போலக் குழந்தையை நோக்கி வந்தாள் அந்தப் பெண்.

முப்பதுகளில் இருப்பவள் போன்ற தோற்றத்தில் இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி. எனக்கு மிகப் பரிச்சயமான முகம்.

வெள்ளை ரம் நிறைந்த கோப்பையில் கருந்திராட்சை மிதப்பது போன்ற கண் களும், லேசாகப் படர்ந்துகிடக்கும் நாசியும், எப்போதும் ஈரம் கசிந்து மினுமினுக்கும் உதடுகளும், அகண்டு விரிந்த தோள்களும், இடுப்புமாக எல்லா வகையிலும் இளைஞர் களின் கனவு கலைத்த சில்க் ஸ்மிதாவின் சாயலில் இருந்தாள். வறண்டுகிடந்த கேசமும் ஒழுங்கற்று உடலை மறைந்திருந்த சாதாரணப் புடவையும்தான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

யார் மீதும் இடித்துவிடாமல், வளைந்து நெளிந்து அவள் நடந்து வருவதைப் பார்க்கையில், மார்க் கச்சையும் மதுக் கோப்பையுமாக சில்க் ஸ்மிதா என்னை நோக்கி வருவது போலிருந்தது.

பெரிய கதாநாயகியாக வேண்டும் என்ற கனவு சில்க் ஸ்மிதாவுக்கு இருந்திருக்குமோ என்னவோ, எனக்கு இருந்தது. ஒரு படத்தில் இரண்டாம் நாயகி, இன்னொரு படத்தில் அண்ணி என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, கவர்ச்சி நடனத்துக்கு அவர் வந்துவிட்டதில் எனக்குப் பெரிய வருத்தம் உண்டு.

என்னை நோக்கி நடந்து வந்த அந்தப் பெண், வெகு சுவாதீனமாக என் காலடியில் உட்கார்ந்துகொண்டாள். குழந்தையை இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு, கையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து ஒரு பிஸ்கட் துண்டைக் குழந்தையிடம் நீட்டி னாள். உயரத்திலிருந்து பார்க்கும்போது செம்பட்டைத் தலைமுடியும் மங்கலான ரயில் வெளிச்சத்தில் தெரியும் வெற்றுக் கழுத்தும் தனி அழகோடு இருந்தது.

இதே போல் செம்பட்டையாக ப்ளீச் செய்யப்பட்ட தலைமுடியும் வெற்றுக் கழுத்துமாக சில்க் ஸ்மிதா இருக்கும் புகைப்படம் ஒன்று என்னிடம் இருந்தது. கல்லூரிக் காலத்தில் அதை என் ஹாஸ்டல் அறைக் கண்ணாடியில் ஒட்டிவைத்திருந்தேன். எத்தனையோ படங்கள் என்னிடம் இருந்தாலும் அந்தப் படம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன் பிறகு எத்தனையோ திரைப்படங்களிலும், போட் டோக்களிலும் நான் பார்த்த ஸ்மிதாவின் கண்களில் ஒரு மென்சோகம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

குளிர்க் காற்று முகத்தில் அறைகிறதென்று ரயில் பெட்டியின் எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருக்க, ஜன நெரிசலின் புழுக்கம் தாளாமல் குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் தலையை இடது மடியில் வைத்துக்கொண்டு லேசா கக் கால்களை ஆட்டி அதைத் தூங்கவைக்க முயற்சித்தாள் அந்தப் பெண். குழந்தை அடங்கு வதாயில்லை. மெள்ளக் குனிந்து அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டேன். என் பக்கமிருந்த ஜன்னலைப் பாதியாகத் திறந்து வைத்தேன். பனி போல லேசான வியர்வை பூத்திருந்த முகத்தில் சில்லென்று காற்றுப்பட, குழந்தை பளீரென்று சிரித்தது. பாரம் குறைந்தது போன்ற உணர்வில் அந்தப் பெண்ணும் கால்களை நீட்டி உட்கார்ந்து என் பெட்டி மீது சாய்ந்துகொண்டாள்.

ரயில் வண்டியின் தாளலயமான ஓட்டத்துக்கு ஏற்ப உடல் குலுங்கி ஒரு கட்டத்தில் என் தொடை மீது தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தாள். இப் போது அந்தப் பெண்ணின் முகத்தை இன்னும் கிட்டத்தில் பார்க்க முடிந்தது. மூடியிருந்த இமைகளுக்கு வெளியே மேடாகத் தெரிந்த கண்களும், ஒரு பக்கம் மூக்கு குத்தி அதில் குச்சி செருகி இருந்ததும், கோடாக இதழ் பிரிந்து அதில் ஒற்றைத் தலைமுடி சிக்கித் தவிப்பதுமாக கலைந்த ஓவியம் போல இருந்தாள்.

இந்த மங்கலான வெளிச்சத்தில் என் மடியில் அந்தப் பெண் உறங்கும் காட்சியைப் புகைப்படமாக எடுத்து வீட்டு ஹாலில் மாட்டிவைக்கும் ஆசை வந்தது. ஒரு யுகத்தின் கண்விழிப்பைத் தீர்க்கும் வகையில் உறக்கத்தின் ஆழத்துக்குச் சென்றுவிட்டிருந்தாள் அந்தப் பெண்.

நேரம் செல்லச் செல்ல, அந்தப் பெண் மெள்ளத் திரும்பி தன் இடது கன்னம் முழுமையும் என் தொடைகளில் அழுந்தும் படியாக என் இருக்கையின் கால்களோடு என் காலையும் சேர்த்து அணைத்துக்கொண் டாள். எந்த அசைவும் அவளது உறக்கத்தைக் கலைத்துவிடாத வகையில் உட்கார்ந்திருந்தேன்.

மெள்ள பொழுது விடியத் தொடங்கியது. சென்னை ரயில் நிலையத்தை ரயில் நெருங்கும் தருணத்தில் கண் விழித்த அந்தப் பெண், சிறு கூச்சம் கண்களில் மின்ன எழுந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். மிக நெருக்கத்தில் பார்த்தபோது அவள் முழங்கையிலும் இடுப்புப் பகுதியிலும் ரத்தக் கோடுகள் தெரிந்தன. எழுந்து போய் முகம் கழுவித் துடைத்துக்கொண்டு வந்தாள். ஒரு பயணம் நிறைவடையும் தருணத்தை உணர்த்துவது போல பெருங்கூச்சலோடு ரயில் நிலையத்தினுள் நுழைந்தது வண்டி.

வரவேற்க வந்தவர்களும் வழி அனுப்ப வந்தவர்களுமாக பிளாட்ஃபாரம் மனிதத் தலை களால் நிறைந்துகிடந்தது. இடுப் பில் இருந்த குழந்தை திடீரென ‘ம்மா… ப்பா… ப்பா…’ என்று மிழற்றிய கணத்தில், திடுக்கிட்டு நாலாபுறமும் மிரட்சியுடன் பார்த்த அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த கலவரம், எந்த சில்க் ஸ்மிதாவின் படத்திலும் நான் பார்த்தறியாததாக இருந்தது!

– 03rd செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *