ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 7,726 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

ரவி பெஸண்ட் நகர் வீட்டுக்குச் சென்றான். மாடிக்குச் சென்றான். பத்மினியின் அறையில் விளக்குகள் எரியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. லைட் ஸ்விட்ச்சைத் தட்டினான். பத்மினி கட்டிலில் படுத்திருந்தாள். நன்றாகத் தூங்குவது போல் காட்சி அளித்தாள். ரவி அருகில் சென்று அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். அவளைத் தட்டி எழுப்ப முயன்றான். 

”பத்மினி, எழுந்திரு! இந்த நேரத்திலே என்ன தூக்கம்? உடம்பு சரியா இல்லையா?” 

பதில் இல்லை. பத்மினி கண் திறக்கவில்லை. 

”பத்மினி! பத்மினி!” 

பத்மினி எழுந்திருக்கவில்லை. 

அப்போதுதான் ரவி அவளுடைய தலையணை அடியிலிருந்த ஒரு கவரைப் பார்த்தான். அதைத் திறந்தான். உள்ளே ஒரு கடிதம் இருந்தது. 

‘அன்புள்ள ரவி; 

இன்று உங்கள் மனைவி சாந்தா இங்கே வந்திருந்தார்.ரவி, நான் உங்கள் மீது குற்றம் சாட்டவில்லை. பாவம், நீங்கள்! எப்படியாவது எனக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என்று துடித்தீர்கள். இப்போது எனக்கு எல்லாமே புரிந்து விட்டது. யார் மீதும் குற்றமில்லை.விதி என்னோடு விளையாடி விட்டது. அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் பிரவேசிப்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? என் மீது நீங்கள் வைத்திருந்த அளவு கடந்த அன்பிற்கு என் இதயம் கனிந்த நன்றி. முறைப்படி உங்கள் மனைவியாக நான் கொடுத்து வைக்கா விட்டாலும், ஒரு நாளாவது உங்கள் மனைவியாக வாழ்ந்து விட்டேன். அந்தப் பாக்கியமே எனக்குப் போதும். அடுத்த ஜென்மத்திலாவது ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கையோடு போகிறேன். 

அபாக்கியவதி 
பத்மினி.’ 

“மை காட்! பத்மினி, என்ன காரியம் பண்ணிட்டே! அவசரப்பட்டுட்டியே பத்மினி!” அப்போதுதான் அவள் பக்கத்தில் கிடந்த காலி பாட்டிலை ரவி பார்த்தான். அது தூக்க மாத்திரை பாட்டில். “நோ. பத்மினி, நான் உன்னைச் சாக விட மாட்டேன். மறுபடியும் நீ என்னை விட்டுப் போக விட மாட்டேன்.” 

ரவி அப்படியே பத்மினியைத் தனது கைகளில் அள்ளிக் கொண்டான். அவளைத் தனது காரில் வேகமாக டாக்டர் கோபாலுடைய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றான். டாக்டர் கோபால் சிறிது நம்பிக்கை ஊட்டினார். “நிலைமை ரொம்ப அபாயகரமாகத்தான் இருக்கு! ரவி, இன்னும் அரை மணி நேரம் தாமதிச்சிருந்தா ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது. குறைந்த பட்சம், பத்மினியைக் காப்பாத்த இப்போ கொஞ்சமாவது அவகாசம் இருக்கு. ஐ வில் டூ மை பெஸ்ட்.” 

இரவு முழுவதும் பத்மினி இன்டென்சிவ் கேர் யூனிட்டில் வைக்கப்பட்டு அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு முழுவதும் ரவி அவளுடைய பக்கம் விட்டு நகரவில்லை. 


இரவு முழுவதும் சாந்தாவும் உறங்கவில்லை. அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு பெரிய திருப்பு முனை வந்து விட்டது. ‘ரவி இல்லாத வாழ்க்கை எனக்கு மட்டும் தேவைதானா?’ என்று நினைத்தாள். 

வீணாக அடம் பிடித்து, தன் பிடிவாதத்தால் கணவனை அடியோடு இழப்பதைவிட, பத்மினிக்கும் அவள் வாழ்க்கையில் இடம் அளித்து, கணவனின் அன்பில் பாதியாவது மிஞ்சினால் போதும் என்ற முடிவுக்கு வந்தாள். ரவி இனி வீட்டுக்கு வராமலேயே இருந்துவிட்டால், அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். எதிர்காலம் பயங்கரமாக சூனியமாகத் தெரிந்தது. அவன் விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்தால், அவனுடைய நன்றியும், மதிப்பும் என்றென்றும் அவளுக்கு நிலைத்து இருக்கும். கணவனே இல்லாமல் வாழ்வதைவிட, இன்னொருத்தியோடு அவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்வதே விவேகம் என்ற முடிவுக்கு வந்தாள். 


மறுநாள் காலை பத்மினி ஆஸ்பத்திரியில் கண் விழித்துப் பார்த்தாள். ரவியின் முகத்தைப் பார்த்தாள். அழ ஆரம்பித்து விட்டாள். 

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேனா? என்னை ஏன் காப்பாத்தினீங்க? உங்க வாழ்க்கையிலே எனக்கு இடமே இல்லாதபோது, நான் வாழ விரும்பலை. என்னை ஏன் சாக விடலை. ஏன் சாக விடலை?” என்று கதறினாள். 

ரவி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அதற்குள் கதவு திறந்தது. சாந்தா உள்ளே வந்தாள். ரவிக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கேயும் சாந்தா சச்சரவு செய்ய வந்திருக்கிறாள் என்று நினைத்தான். 

”சாந்தா! எதுக்காக இங்கே வந்தே? வீட்டுக்குப் போ!” சாந்தா அமைதியாகச் சொன்னாள்: “போறேன். ஆனா போறப்போ என்கூட பத்மினியையும் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலான்னு வந்தேன்.” 

ரவிக்குப் பேச்சு வரவில்லை. பத்மினியும் கேட்டதை நம்ப முடியாமல் சாந்தாவை ஆச்சரியத்தோடு பார்த்தாள். 

சாந்தா படுக்கை அருகில் வந்தாள். “பத்மினி, என்னை மன்னிச்சுடு, நேற்று பேசக் கூடாத வார்த்தைகளையெல்லாம் உங்கிட்டே பேசிட்டேன். என்னாலே தானே நீ இந்த விபரீதமான முடிவுக்கு வந்தே? உண்மை புரியாம உன்னை ரொம்பத் தவறாக நினைச்சுட்டேன். நல்ல வேளையா. ஆண்டவன் உன்னைக் காப்பாத்திட்டார். உனக்கு ஏதாவது ஆயிட்டிருந்தா, ஆயுசு முழுவதும், என் மனச்சாட்சி என்னைச் சாகடிச்சிருக்கும். என்னையே நினைச்சு நான் ரொம்ப வெட்கப்படறேன். பத்மினி, எனக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்யத் துணிஞ்சுட்டே! உன் உயிரைப் பலி வாங்கின பாவம் எனக்கு வராமல் கடவுள் என்னைக் காப்பாத்திட்டார். பத்மினி, என்னை மன்னிச்சுடு. மனசார நான் உன்னை என் சகோதரியா ஏத்துக்கறேன்.” 

“சாந்தா! இவ்வளவு பெரிய தியாகத்தை நீ செய்ய வேண்டாம். பத்மினி. நான் எங்கேயாவது போயிடறேன்,” என்றாள் 

“இல்லை பத்மினி. நான் செய்யறது தியாகம்னு நினைக்காதே. இது தியாகமே இல்லை.என் சுயநலம். நீ இல்லைன்னா. அவருக்கு வாழ்க்கை இல்லை. அவர் இல்லைன்னா, எனக்கு வாழ்க்கை இல்லை. நீ இல்லாம அவர் இல்லை. அவர் இல்லாமே நான் இல்லை! அதனாலே, இதைத் தியாகம் அது இதுன்னு சொல்லாதே. மனப்பூர்வமா நான் உன்னை என் சகோதரியா ஏத்துக்கறேன். நாம் ரெண்டு பேரும் அவரை உயிருக்கு உயிரா நினைக்கிறோம். அவரை இனிமே சந்தோஷமா வச்சுக்க வேண்டியது நம்ம ரெண்டு பேருடைய கடமைன்னு நினைச்சுக்கோ. என் கடமையை நான் செய்றேன். உன் கடமைலேயிருந்து தப்பிச்சுட்டு மறுபடியும் எங்கேயாவது ஓடிடலாம்னு நினைக்காதே!” என்றாள் சாந்தா. 

பத்மினி சாந்தாவைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். சாந்தா பத்மினியின் நெற்றி மீது முத்தமிட்டாள். 

இவ்வளவு நேரம் மெளனமாக இருந்த ரவி அப்போதுதான் பேசினான். “சாந்தா, நேற்று ஆத்திரத்திலே என்னென்னவோ பேசிட்டேன். அதையெல்லாம் மறந்து என்னை மன்னிச்சிடு,” என்றான். 

“இல்லீங்க,நீங்க அப்படி பேசினதனாலேதான் எனக்குப் புத்தி வந்தது, கண் திறந்தது. இல்லைன்னா, என் பிடிவாதத்தாலே என் வாழ்க்கையை நானே பாழடிச்சிக்கிட்டிருப்பேன்.”

“சாந்தா, யூ ஆர் கிரேட்,” என்றான் ரவி உள்ளப் பூரிப்போடு. 

“அதை நான் ஆமோதிக்கிறேன்!” என்றார் டாக்டர் கோபால் உள்ளே நுழைந்து கொண்டே. 

“எப்படியோ, உங்க விவகாரம் நல்லபடியாத் தீர்ந்து போச்சு. அப்பா ரவி, எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்டிலே நிறைய நோயாளிகள் காத்திருக்காங்க. எனக்குச் சீக்கிரம் இந்த பெட்டைக் காலி பண்ணிக் கொடு, பத்மினியை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போ. அம்மா பத்மினி, இனிமே நீ இங்கே வராதேம்மா, என்ன அப்படிப் பார்க்கிறே? நீ இந்த ஆஸ்பத்திரிக்கு நோயாளியாக இனிமே வரவே கூடாதுன்னுதான் சொன்னேன். என் வீட்டுக்கு நீ வரலைன்னா நான் சும்மா இருப்பேனா இல்லை, எங்க அம்மா தான் உன்னை விடப் போறாங்களா?” 

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிரித்தார்கள். சிரித்தார்கள், சிரித்துக் கொண்டே இருந்தார்கள். 

இன்டென்சிவ் கேர் யூனிட்டுக்கு வெளியே காரிடாரில் சென்று கொண்டிருந்த ஓர் ஆஸ்பத்திரி ஊழியர், “இத்தனை நாளா இது சாதாரண ஆஸ்பத்திரின்னு நினைச்சேன். பைத்தியக்கார ஆஸ்பத்திரி மாதிரி தெரியுதே! அதென்னப்பா அப்படி சிரிக்கிறாங்க!” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றான். 

-முற்றும்-

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *