திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான்.
“”என்ன திவாகர் படிச்சாச்சா… சாப்பிட வர்றியா?” என்று, கேட்டபடி அங்கு வந்தாள் திலகா.
“”இப்ப என்ன மணியாச்சு… அதுக்குள்ள புத்தகத்தை மூட்டைக் கட்டி வச்சுட்டானா… இன்னும் கொஞ்ச நேரம் படிச்சா குறைஞ்சா போயிடும்?”
அப்பா சரவணன் சொல்ல, ஒன்றும் பதில் சொல்லவில்லை திவாகர்.
மகனுக்கும், கணவனுக்கும் திலகா பரிமாற, சாப்பிட்டுக் கொண்டிருந்த சரவணன், “”திலகா… உனக்கு விஷயம் தெரியுமா? எதிர் வீட்டு ராமு தான், இந்த ரிவிஷன் எக்சாமிலும் பர்ஸ்ட் மார்க் எடுத்திருக்கானாம். அதுமட்டுமல்ல, ஸ்கூலில் நடந்த கட்டுரை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியிருக்கானாம். அவங்கப்பா பெருமையா சொன்னாரு!”
சொன்னவர், மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனை பார்த்தார்…
“”திவாகர்… அவனும் உன்னை போலத் தானே பிளஸ் 2 படிக்கிறான். எல்லா விஷயத்திலும் எவ்வளவு சூட்டிகையாக இருக்கிறான். நீ ஏன், அவனைப் போல வர முயற்சிக்க கூடாது. உனக்கு படிப்பில் இன்னும் கவனம் தேவை. அவனைப் போல், முதல் மார்க் வாங்க முயற்சி பண்ணு… புரியுதா?”
பதில் பேசாமல் தலையசைத்தான்.
திவாகரின் முகம் சோர்ந்து போவதை கவனித்தாள் திலகா.
தனிமையில் கணவரிடம், “”என்னங்க… எதுக்கு எதிர் வீட்டு பையனை பத்தி அவன் கிட்டே உயர்வாக பேசறீங்க. இவனும் படிக்கத்தானே செய்யறான். அவனுக்கு நேரா அடுத்தவனை புகழ்ந்தா மனசு கஷ்டப்படாதா?”
“”படட்டும்ன்னு தான் சொன்னேன்… இப்படி அசமந்தமாக இருந்தால், எப்படி இவனால் முன்னுக்கு வர முடியும். நல்லா படிக்கணும்ன்னு தான் அப்படி பேசினேன்.”
“”என்னமோங்க… நீங்க, அவனை அளவுக்கு அதிகமாக கண்டிச்சு கடுமையாக பேசறதா தோணுது. அவனும், எதற்கும் வாய் திறக்க மாட்டேங்கிறான்; எது சொன்னாலும், “சரிப்பா…’ன்னுதான் அமைதியாக சொல்றான். அவனை, எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க…”
“”சரி… சரி. நீ போய் வேலையை பாரு. அவனை எப்படி வளர்க்கணும்ன்னு எனக்கு தெரியும்.”
அதற்கு மேல் பேசினால், நிச்சயம் கோபிப்பார் என்று, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
திவாகர், காலையில், 5:00 மணிக்கு அலாரம் வைத்து, எழுந்து படிக்க, எட்டி பார்த்தார் சரவணன்.
“”என்னப்பா… என்ன வேணும்?”
“”ஒண்ணுமில்ல… நீ எழுந்துட்டியா, இல்லை தூங்கறியான்னு பார்த்தேன். உனக்கு தான் எதிலும் அக்கறை கிடையாதே… சரி, சரி படி. அம்மாவை காபி கலந்து தரச் சொல்றேன்.”
ஆபீசிலிருந்து திரும்பிய கணவனிடம், “”என்னங்க… இன்னைக்கு சேலத்திலிருந்து போன் வந்தது. அம்மாவுக்கு திரும்பவும் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகி, முடியாம இருக்காங்களாம். மும்பையிலிருந்து என் தங்கை யாமினி வந்திருக்காளாம்; அவதான் சொன்னாள். நாம போயி பார்த்துட்டு வருவோங்க!” என்றாள் திலகா.
“”எனக்கு ஆபீசில் வேலை அதிகமாயிருக்கு திலகா… இப்ப என்னால வர முடியாது. நீ, உன் மகனை அழைச்சுட்டு போய், இரண்டு நாளில் திரும்பிடு!”
“”என்னங்க சொல்றீங்க… இப்ப அவனுக்கு படிக்கிறதுக்கு லீவு விட்டிருக்காங்க. பரிட்சைக்கு படிக்கிற அவனை எப்படி கூட்டிட்டு போறது?”
“”இங்க பாரு… இரண்டு நாள்ல வர்றதில் அவன் படிப்பு ஒண்ணும் குறைந்து போயிடாது. உன் மகன் அப்படியே தீவிரமாக படிக்கிறதாக நினைக்கறியா… என்னமோ படிக்கிறான்; அவ்வளவு தான். கூப்பிட்டு பாரு… நிச்சயம் வருவான்.”
திவாகரி டம் விஷயத்தை சொல்ல, “”சரிம்மா… போயிட்டு வருவோம். பாட்டியையும் பார்த்துட்டு, அப்படியே மும்பை யிலிருந்து சித்தி வந்திருக்காங்கன்னு சொல்றீங்க… அவங்களையும் பார்த்த மாதிரி இருக்கும்!” என்றான்.
திவாகர், உடனே, “வருகிறேன்’ என்று சொன்னது, சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது திலகாவுக்கு.
ஊருக்கு கிளம்பிய திவாகரிடம், “”கையிலே புத்தகங்களை எடுத்துட்டு போ… அங்கு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். அம்மாவுக்கு துணைக்கு போனேன்னு, ரெண்டு நாள் பொழுதை வீணாக்க வேண்டாம்; புரியுதா?”
“”சரிப்பா… எடுத்துட்டு போறேன்!”
திலகாவுடன் ஊருக்கு கிளம்பினான் திவாகர்.
படுக்கையிலிருந்த பாட்டியின் அருகில் அம்மாவுடன் அமர்ந்து, பாட்டியின் உடல் நலனை விசாரித்து, அடுக்களைக்கு வந்தான் திவாகர்.
அங்கே சித்தி யாமினி, சமையல்காரரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, “”வா திவாகர்… நல்லா இருக்கியா? நீ பாட்டிகிட்டே பேசிட்டிருந்தேன்னு தொந்தரவு பண்ணலை. படிப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”
கேட்டபடி அவனுடன் தோட்டத்திற்கு வந்தாள்.
“”சித்தி… உங்களை பார்த்து எவ்வளவு நாளாச்சு… சித்தப்பா, நகுலன் எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“”ம்… இருக்காங்க… அப்புறம் சொல்லு, எனக்கு தான் ரொம்ப தூரத்தில் இருப்பதால், உங்களையெல்லாம் அடிக்கடி பார்க்க முடியாம போகுது!”
அவள் குரலில் உண்மையான வருத்தம் இழையோடியது. சமையல்காரர் கொண்டு வந்த காபியை வாங்கி, அவனிடம் கொடுத்தாள்.
“”நகுலன் தான் படிப்பில் கவனமில்லாமல் இருக்கான் திவாகர். உன் சித்தப்பா அவனுக்கு அளவுக்கதிகமா செல்லம் கொடுக்கிறாரு. பத்தாவது படிக்கிறவனுக்கு, பைக் வாங்கி கொடுத்திருக்காருன்னா பாரேன்…
“”நான் அவர்கிட்டே எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன். “படிக்கிற பையனை அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க; கண்டிக்கிற வயசில் கண்டிக்கணும்…’ன்னு… உங்கப்பாவை பத்தி கூட சொன்னேன். “அவர் எப்படி திவாகரை கண்டிப்புடன் வளர்க்கிறாருன்னு பாருங்க. அப்படி வளர்த்தால் தான், இவன் உருப்படுவான்…’ன்னு. இவர் கேட்க மாட்டேங்கிறாரு… உங்கப்பா தான் திவாகர், எல்லா விஷயத்திலும் சரியாக இருக்காரு. சித்தப்பாவுக்கு புரிய மாட்டேங்குது; என்ன செய்யலாம் சொல்லு?”
“”கவலைப்படாதீங்க சித்தி… நகுலனுக்கு எல்லாம் தெரியும். நிச்சயம் அவன் வாழ்க்கையை நல்ல விதமாக தீர்மானிப்பான். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே சித்தி?”
“”என்ன திவாகர்… சொல்லு!”
“”தயவு செய்து நீங்க சித்தப்பாவை தப்பு சொல்லாதீங்க. அவர் சுபாவம் அப்படி. அன்பை, பாசத்தை வெளிப்படையாக காட்டறாரு; ஆனா, எங்கப்பா அப்படி இல்லை. நான் நல்லா வரணுங்கிறதுக்காக கண்டிப்பை மட்டும் என்கிட்டே வெளிப்படுத்தறாரு. அவரும், சித்தப்பா நகுலன் மீது வச்சிருக்கிறதை போல, என் மேல் அன்பும், பாசமும் வச்சிருக்காரு; ஆனா, அதை வெளிப்படுத்தாம இருக்காரு. அவ்வளவுதான்! அவங்கவங்க தனி தன்மையோடு தான் அவங்கவங்க இருக்க முடியும். அதனால, தயவு செய்து, ஒருத்தரோடு ஒருத்தரை ஓப்பீடு செய்யாதீங்க. சித்தப் பாவை பொறுத் தவரை அவரது அணு குமுறை சரியா இருக்கலாம்; அப்பாவை பொறுத் தவரைக்கும் அவரது அணுகு முறை தான் பலனை கொடுக் கும்ன்னு நம்பறாரு… அதே போல, நகுலனுக்கும் சில திறமைகள் நிச்சயம் இருக்கும். எல்லாரும் ஒன்று போல கிடையாது சித்தி. நானும், நகுலனும் எங்களுக்கான பொறுப்புகளை உணர்ந்து, நிச்சயம் உங்க நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நல்லா படிச்சு, முன்னுக்கு வருவோம். கவலைப்படாதீங்க!”
அங்கு வந்த திலகா, எது சொன்னாலும், பதில் பேசாமல் மவுனமாக இருக்கும் திவாகர், தெளிவாக, விளக்கமாக, தன் மனதிலிருப்பதை தன் தங்கை யாமினியிடம் எடுத்து சொன்ன பாங்கு மனதை தொட, பெருமிதம் பொங்க புதிய பரிமாணத்துடன் மகனை பார்த்தாள்.
– லாவண்யா பாலாஜி (ஜூலை 2011)