ஒன்றை இழந்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 1,176 
 
 

“இந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம் யாருக்காவது கிடைக்குமா அதுவும் வீடு தேடி வந்திருக்கிற பேரதிர்ஷ்டம்? பேசாம உங்க பொண்ணை இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லுங்கப்பா” என்று அழுத்தம் திருத்தமாய் சொன்ன நவநீதனை ஏறிட்டார் பக்தவத்சலம். இப்போதைக்கு அவரால் தீனமாய் ஓரளவு பார்க்கத்தான் முடியும், வாயைத்திறந்து பேசினால் யாருக்கும் புரியாது.

பள்ளிஆசிரியராகப்பலகாலம் பணியாற்றி குறளையும் , நாலடியாரையும் போதித்த நாக்கு  பக்கவாதத்தில் இழுத்துக்கொண்டுவிட்டது. கூடவே இடது கையும் இடது காலும் செயலிழந்துவிட்டன.

அப்பா நன்றாக இருந்த நாட்களிலேயே தனக்கு சொத்து சேர்த்துவைக்காத காரணத்திற்காக நவநீதன் தினசரி சாடிக்கொண்டிருப்பான். ஒருவருடமாக பக்தவத்சலத்திற்குப்பக்கவாதம் வந்து இடது கையும் காலும் இழுத்துக்கொண்டு போய்விடவும் அவரைக்கண்டு கொள்வதையே தவிர்த்தான். நான்கு தெருக்கள் தள்ளி தனிக்குடித்தனஜாகைக்கு மனைவி குழந்தைகளுடன் எப்போதோ போய்விட்டான்.இத்தனைக்கும் பக்தவத்சலத்தின் மூன்று குழந்தைகளில் மூத்தவன் நவநீதன். வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற மாதிரி அவனுக்குப்படிப்பே ஏறவில்லை.. அப்படி இப்படி பத்தாவது முடித்தவனை தெரிந்தவர்களிடம் சிபாரிசு கேட்டு ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் உதிரிபாகங்கள் செய்யும் பணியில் அமர்த்தினார். வேலைபார்க்கும் இடத்தில் அவனை விட வயதில் மூத்த வேற்று ஜாதிப்பெண்ணை ஒருநாள் பதிவுத்திருமணம் செய்துகொண்டுவந்து நின்றவனை அதட்டிக்கேட்டதால் தனிக்குடித்தனம் போய்விட்டான்.

அண்ணனைப்பார்த்து அடுத்தவன் அஞ்சன வண்ணனும் படிப்பில் நாட்டமின்றி கெட்ட சகவாச நட்பில் தகாத காரியங்கள் செய்துவருவதைக்கேள்விப்பட்டு அதில் ரத்தம் கொதிக்க ஆரம்பித்ததில் தான் ’ ஸ்ட்ரோக்’ வந்துவிட்டது பக்தவதசலத்திற்கு.

ரம்யா தான் துடித்துப்போய்விட்டாள். “ஐயோ அப்பா, அண்ணன்களுக்காக உங்க உடம்பைக்கெடுத்துக்கிட்டீங்களேப்பா! “என்று அழுதாள்.

பக்தவத்சலத்தின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருப்பவள் அவள் தான்.

‘நான் பார்த்த ஆசிரியர் பணியை என் வாரிசுகள் யாராவது விரும்பி ஏற்கணும்” என்ற தன் அப்பாவின் விருப்பத்தை ரம்யா தான் பூர்த்திசெய்து இரண்டு வருடங்களாக பள்ளியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை ஆகப்பணி புரிகிறாள்.

’ப்ளஸ் டூ’வில் மாநிலத்திலேயே முதன்மையாய் வந்தவளை நல்லா படிச்சி ‘டாக்டராகணும் ரம்யா அல்லது ஒரு கலெக்டராகணும்’ என்று நவநீதன் தங்கையை வாழ்த்தியபோது,.

“இல்லண்ணா என் லட்சியம் அப்பாவின் விருப்பத்தை பூர்த்திசெய்வது தான்”

என்ற ரம்யாவை சுட்டுவிடுவதுபோலப்பார்த்தான்.

“லூசு. எங்களூக்கு படிப்பு வரல . உனக்குத்தான் மண்டை முழுக்க மூளையாய் இருக்கே. அப்பா எங்காவது கடனை உடனை வாங்கி உன்னை மேலப்படிக்கவைப்பார். அதனால இந்தப்பள்ளிக்கூட டீச்சர் வேலைக்கெல்லாம் நீ போகக்கூடாது.’என் தங்கை ஒரு கலெக்டர்! என் தங்கை ஒரு டாக்டர்’ அப்படீன்னு நான் பெருமையடிச்சிக்கிர மாதிரி எதிர்காலத்தில் நீ பேரும் புகழுமாய் வரணும் “

“இல்லண்ணா.. எனக்கும் டீச்சர் ஆகிறதுதான் கனவு ,,பாரதி சொல்வாரே

’அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’  என்று? அதனால் தான் எனக்கும் இந்த ஆசை வருகிறது”

“ஐயோ! அப்பா உன்னை இப்படி ஒரு மூளைச்சலவை செய்வாரென்று நான் எதிர்பாக்கவே இல்லை. உன்னைத்திருத்த அம்மாவும் இல்லை, நீ பொறந்ததும் போய்ச்சேர்ந்துட்டாங்க..ரம்யா! உனக்கு அழகு அறிவு ரெண்டும் இருக்குடி. நீ சினிமா ஸ்டாராப்போகலாம் இல்லேன்னா நல்லா படிச்சி டாக்டராகவோ கலெக்டராகவோ ஆகலாம் நம்ம குடும்பத்து பொருளாதார நிலைமையும் உன்னால் உயர்ந்துபோகும்.”

‘ இல்லை அண்ணா.. என் உலகம் தனி. பாரதி, கம்பன், ரஸ்கின், வால்டேர் என்று  பெரிய சிந்தனையாளர்களுடன் நான் வளர்ந்துகொண்டுவருகிறேன். காலடியில் ரோஜாப்பூக்கள் மலர்ந்திருக்கிறபோது கைக்கு எட்டாத நட்சத்திரப்பூக்களைப்பறிக்க எனக்கு விருப்பமில்லை. என் சிந்தனையை என் லட்சியத்தை மதிக்கிற மனிதருடன் தான் என் எதிர்காலமும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்”

“புரட்சி செய்வதாய் நினைப்பு! இதுல ஒரு புண்ணாக்கும் கிடைக்காது, பைத்தியக்காரி”

நவநீதனுக்கு பதிலடி கொடுத்த மகளை அன்று சபாஷ் என்று முதுகில் தட்டிக்கொடுத்தார் பக்தவத்சலம். ரம்யா தன்னுடன் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர் அரவிந்தனை காதலிப்பதாய் சொல்லி அவனை வீட்டிற்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியபோது மிகவும் மகிழ்ந்துபோனார்.ஏனென்றால் அரவிந்தனும் நோயாளித்தாயார், புத்தி சுவாதீனமில்லாத தங்கை. ஜாயிண்ட் கையெழுத்துபோட்டதால் பணமெல்லாம் இழந்து வருமானத்திற்கு வழி இல்லாத அப்பா என்று பொறுப்புகளை சுமக்கும் குடும்பத்தில் இருப்பதில்

தங்கள் குடும்பத்துடன் நேர்க்கோட்டில் நிற்பதாக அவருக்குப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் கலெக்டரின் உதவியாளர் பக்தவத்சலத்திடம் ஒரு அணுகுண்டை வீசிப்போட்டுவிட்டுப்போய்விட்டார்.

. மாவட்ட கலெக்டர் , ரம்யாவின் பள்ளிக்கு ஆண்டுவிழாவிற்கு தலையேற்கப்போனபோது ரம்யாவைப்பார்த்து ஆசைப்பட்டுவிட்டாராம். தெரிந்தவரை ரம்யாவின் வீட்டிற்கு அனுப்பி விஷயம் தெரிவித்திருக்கிறார். அந்த நேரம் நவநீதன் தன் மனைவி விரட்டினாள் என்று நான்கு பழைய வெண்கலப்பாத்திரங்களை எடுக்க வந்தவனுக்கும் இது தெரிந்துவிட்டது.

“அப்பா..உங்களைத்தான் கேக்கறேன்..பள்ளிக்கூடம் விட்டு ரம்யா வந்ததும் ஒழுங்கா மரியாதையா அந்த இளம்வயசு கலெக்டருக்கு கழுத்தை நீட்டச்சொல்லுங்க.எனக்கும் ஒருத்தன் கீழ வேலைப்பார்க்கவே பிடிக்கல. ஆட்டோமோபைல் கோர்ஸ் படிச்சி சொந்தமா நானும் தொழில் செய்யப்பாக்கறேன். புதுவிதமான கார்ப்பரேட்டர் டிசைன் செய்துவச்சிருக்கேன் டூ வீலருக்கு! அது சரியாவேலை செஞ்சதுன்னா வண்டி லிட்டருக்கு நூறுகிலோம்மீட்டர்மேலப்போகிற மாதிரி பைக் இஞ் சின்கள் தயாரிக்கலாம்.இதுக்கெல்லாம் முதல் வேணும். அதை நீங்க தரமுடியாது வரப்போகிற மாப்பிள்ளையாவது தரட்டுமே?”

“ழேய் அழு தப்பு.. ழம்யா அழவிந்தனை விழும்பழா.. அவன் ஏழைன்னாலும் ழல்ல பையன்.. கழெக்டர் இடம் நமக்கு சழிப்படாது பெழிய இடம்”

பக்தவத்சலம் சிரமப்பட்டு பேசினார்.

“ஐயோ அப்பா!.இந்த தரித்திர நிலைமைலயே நாம் இருக்கணுமா? அந்தக் கலெக்டருக்கு ரம்யா மேல ஆசை வந்திருக்குன்னு தெரிஞ்சவுடனேயே ஒரேடியாஅமுக்கணும். கலெக்டர் ஆபீசுல வேலை செய்றாங்கன்னாலே ஒரு மதிப்பு. இதுல கலெக்டரே நம்ம வீட்டு மருமகனாகிறது நினச்சிப்பார்க்க முடியாத விஷயம்!!கலெக்டர் சிபாரிசுல அஞ்சனவண்ணனையும் ஒரு இடத்துல பொருத்தி உக்காரவைக்கலாம்.. உங்க பக்கவாதத்துக்கும் வைத்தியம் செய்ய பண உதவி கிடைக்கும். எனக்கு சொந்ததொழில் ஆரம்பிக்க கலெக்டரே உதவுவார் ஆஹா!”

“ழம்யா ஒத்துக்கமாட்டாப்பா”

“அவளை சம்மதிக்கவைக்கிறது உங்க பொறுப்பு .. நான் வீட்டுக்குபோயிட்டு என்பொண்டாட்டி கேட்ட இந்தப்பாத்திரங்களை கொடுத்திட்டு சாய்ந்திரமாய் திரும்பவரேன்”

நவநீதன் சென்றதும் பக்தவத்சலம் அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

மாலையில் பள்ளிவிட்டு ரம்யா வந்தாள். பக்தவத்சலம் தனது இயலாமைக்குரலில் எப்படியோ கலெக்டரின் உதவியாளர் வந்து சொன்ன விஷயத்தை அவளிடம் தயங்கிதயங்கி சொன்னார்.

”ரம்யா இது உன் வாழ்க்கைப்பிரச்சினை. …நீ உன் அண்ணன்களுக்காக அசட்டுத்தனமான முடிவெடுக்காதே” என்று அவர் மொழியில் தட்டுதடுமாறி கூறினார்.

ரம்யா நீண்டநேரம் அமைதியாக இருந்தவள் பிறகு,”சம்மதம் சொல்லிவிடலாம் அப்பா” என்றாள்.

பக்தவத்சலம் அதிர்ந்துபோனவராய்” எ..என்னம்மா ழம்யா? யோசிச்சியா நல்லா?” என்று கேட்டார்.

“ஆமாம்ப்பா.. முதலில் வேண்டாம்னு சொல்லதான் நினைத்தேன் கலெக்டர் மனைவியானால் அரசுப்பள்ளி ஆசிரியை வேலையை நான் விடவேண்டி இருக்கும். பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஒரு பொம்மையாக வீட்டிற்குள் இருக்கவேண்டும் .அதனால்  முடியாதென்ற பதிலைத்தான் முதலில் யோசித்தேன்,ஆனால்.. என் லட்சியம் என் கனவு என்கிற சுயநலத்தில் உங்களை நான் இழக்கவிரும்பவில்லை அப்பா. . ஆமாம்! நான் அரவிந்தனைக்கல்யாணம் செய்துகொண்டால் அவர் வீட்டில் உங்களையும் அழைத்துக்கொண்டு போய் காப்பாற்ற முடியாத நிலைமையில் அரவிந்தன் இருக்கிறார். அவர் உள்ளம் பெரிதாக இருக்கலாம் இல்லம் சிறிது. அதைவிட நம் இரண்டுபேரால் அவருக்கு குடும்பச்சுமை கண்டிப்பாக ஏறித்தான் போகும். என்அண்ணன்கள் இரண்டுபேருக்கும் உங்களைப்பற்றிய கவலை என்றைக்குமே கிடையாது. அதனால் கலெக்டரை நான் கைபிடித்தால் அண்ணன்கள் இரண்டுபேருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கலாம்; உங்களுக்கு சிறப்பான வைத்தியம் செய்துபார்த்து கை கால்களில் மீண்டும் வலிமைவரச்செய்யலாம். ஒன்றை இழந்து ஒன்றைப்பெறுவதுதான் வாழ்க்கை என்று முன்பு எப்போதோ நீங்கள் சொல்லியதை நினைத்துப்பார்க்கிறேன் அப்பா!”

தெளிவாகவும் , உறுதியாகவும் சொல்லி முடித்த மகளைப்பெருமையுடன் பார்த்தார் பக்தவத்சலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *