ஒன்று இரண்டு நான்கு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 15,174 
 
 

தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த தோகைகள் சிறு காற்றுக்கு ஆடுகின்றன. அந்த சலசலப்பை மனதில் உணர்ந்தாள். நெளம்பி தனக்குச் சொந்தமான அந்த மூணு நாளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கேயான அந்த மூணு நாளில், கணவர் முஸ்தபா அவள் கூடவே இருப்பார். மனம் படபடத்தது. எத்தனை காலமாயிற்று! மனசுக்கு இதமான நினைவுகள். நெஞ்சுவலிக்காரி. இப்பக்கூட வலி இருக்கிறது. ரெண்டு நாளாய் கூடுதல் மருந்து எடுத்துக் கொண்டாள். குடிக்கும்போதே சுவாசம் தருகிற மருந்து.

சட்டைபட்டன்போலக் கண்கள். எம்பிராய்டரி வேலை செய்தாப் போல இமைகள். தந்தம் போன்ற விழிவெண்மை. ”என்னா விஷயம்டி நெளம்பி?” பக்கத்து வீட்டுக்காரி ஐதா. வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறாள். ”ஒண்ணில்ல” கடைசிப் பெண்ணின் ஒத்தாசையுடன் மாமிசத்தை நறுக்கிக் கொண்டே நெளம்பி பதில் சொன்னாள். ” இது உன்னோட மூணு நாளாக்கும்?” உணர்ச்சியுடன் ஐதா சொன்னாள். நெளம்பியின் பெண் குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டபடி விலாவாரியாய் அதைக் கொண்டாட முடியவில்லை. ”அந்த மனுசனை நமாஸ் பண்ண விடமாட்ட போலுக்கே!!” என்று தமாஷ் பண்ணினாள்.

”ஏய் பாத்துடி…” என்றாள் நெளம்பி சங்கடத்துடன். ஆனால் அவள் சொன்னது நிஜம்தான். கூந்தலைச் சீராய் முடித்திருந்தாள் நெளம்பி. கைகால்களில் ஹென்னா. குழந்தைகளைக் காலையிலேயே எழுப்பிவிட்டு தன் அறையைப் பெருக்கிச் சுத்தம் பண்ணினாள். அவள் வயசாளி ஒண்ணும் அல்ல, என்றாலும் பிரசவம் மாத்தி பிரசவம். அஞ்சு குழந்தைகள். நெஞ்சுவலி. மூப்பு வந்திருந்தது. ”லைத்தி கடையில் இருபது பிராங்க் எண்ணெயும், அஞ்சு பிராங்க் உப்பும் வாங்கிட்டு வா” பெண்ணிடம் நெளம்பி சொன்னாள். ”மதியவாக்கில் வாப்பா வந்ததும் பணத்தைக் குடுத்துறலாம்” மாமிசப் பாத்திரத்தைப் பார்க்க முகம் திருப்பிக் கொண்டாள் மகள். போய்க் கேட்க சங்கடம்.

குழந்தை பாட்டிலுடன் வெளியேறினாள். நெளம்பி எழுந்து கொண்டாள். சராசரி உயரம். ஒல்லி உருவம். ஒற்றை உள்ளறையில் சாமான் என்று அதிகம் இல்லை. வெள்ளையுறையுடன் ஒரு படுக்கை. மூலையில் மேஜை. சில பீங்கான் பொம்மைகள். சுவரில் சட்டமிட்ட பெரிய படங்கள். நண்பர்களின், புதியவர்களின் புகைப்படங்கள். மண்ணெண்ணெய் அடுப்பை வெளியே எடுத்து வந்து பற்ற வைக்க ஆரம்பித்தாள். அதற்குள் சாமான்களைப் பெண் வாங்கி வந்திருந்தாள். இன்னொரு வீட்டுக்காரி, அவள் வாசல் பக்கமாய் வந்து ”சமையல் ஜமாய்க்கிறே போலுக்கு?” என்றாள். ”ஆமாம்” என்றாள் நெளம்பி. ”அப்பிடியே அவர் அடிநாக்கில் இருக்கண்டாமா? அப்பதானே மத்த சம்சாரங்களோட சமையலை மறப்பார்!” ”ஹாஹா, அவர் நாக்கு இதுக்கெல்லாம் காத்திட்டிருக்குன்றே” சமையலில் என்னென்ன சேர்க்கிறாள் என்று நோட்டம் விட்டாள் அவள்.

”இப்ப உடம்பு பரவால்ல” தனக்கே பெருமிதத்துடன் நெளம்பி அவள் கையைப் பற்றி வருடியபடியே சொன்னாள். ”ஏய் நாளைக்கும் இப்பிடிச் சொல்லுவியாம்!” அந்தப் பெண் கைகொட்ட, கூட நிறையப் பெண்கள் சேர்ந்து கொண்டார்கள். ஒருத்தி கையில் ஜாடி. இன்னொருத்தியிடம் கரண்டி. தாளம் தட்டியபடி ஆட ஆரம்பித்தார்கள்.

”வணக்கோம் வணக்கோம்
உன் அழகுக்கல்லடி பெண்ணே
முதுகெலும்புக்கு”.
சேர்ந்து எல்லாரும் பாடி ஆட நிகழ்ச்சிகள் சூடு பிடித்தன. வேகம், விறுவிறுப்பு, அயர்ந்துபோய் மேமூச்சு கீமூச்சு வாங்க எல்லாரும் ஹோவென்று கும்மாளமிட்டார்கள். ஒருத்தி நெளம்பியின் அறைக்குள் புகுந்து அடுத்தவளை அழைத்தாள். ”ஏய் இந்தக் கட்டிலை வெளிய போடுங்கடி. ராத்திரி இது உடைஞ்சிறப் போவுது!”
”மாமா, நாளை இதே அறை!”
ஆளாளுக்குக் கிண்டலும் கூத்துமாய் ஒரே சிரிப்பு. பிறகு எல்லாருக்கும் வீடும், காத்திருக்கும் வேலைகளும் ஞாபகம் வர கலைந்து போனார்கள்.

நெளம்பியும் அந்தக் கேலியில் சிரிப்புடன் கலந்து கொண்டாள். அந்த காம்பவுண்டில் இது சகஜம். யாரும் கழட்டிக்கிட முடியாது. தவிர, அவர்களில் அவள் தனி மாதிரி, எல்லாருக்கும் அது தெரியும். அவளுக்கு நெஞ்சுவலி, கணவர் சீந்துவதேயில்லை. ரெண்டு வாரமாய் அவர் வந்து அவளைப் பார்க்கவேயில்லை. வந்து எட்டியாவது பார்ப்பார் என்றிருந்தாள் நெளம்பி. தாய்சேய் நல விடுதிவரை அவள் போய்வந்தபோதுகூட கடைசிப் பெண்ணை வீட்டில் இறுத்திவிட்டுப் போனாள். ஒருவேளை அவர் வந்தால், பெண்ணுடன் பேசியபடி அவர் காத்திருப்பார். இன்னிக்கு திரும்ப ஆஸ்பத்திரி வரை போக வேண்டும். இருந்த சொச்ச பணத்தை முஸ்தபாவுக்கு என்று சமையல் செய்ய வேண்டியிருந்தது. மத்த பெண்டாட்டியை விட அவள் ஒண்ணும் சோடையில்லை. தரம் தாழ்ந்தவளும் இல்லை. பெத்த தாயாக அவள் கடமைகளை ஒதுக்கி விடவில்லை. ஆனால் சந்தர்ப்பங்களில் மனைவி என்கிற ஸ்தானம் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.

வரும் மூணு நாட்கள்! மனசு பூராவும் அதே நினைப்பு. உடம்புப் பிரச்னையே மறந்திருந்தது. விதவிதமாய் ஆயிரம் யோசனைகள். திங்கள்கிழமை காலைவரை அவளை அவர் பிரியமாட்டார்! அந்த அறையில் முஸ்தபா. அவர் சகாக்கள். ரெட்டை அர்த்த நகைச்சுவை. ‘கணவருக்கு சரியான மனைவியா ஒருத்தி அமைஞ்சால்…’ என நினைத்துக் கொண்டாள். சில பொம்பளையாளுக்கு ஏனோ அமையாமல் போகுது, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்றா மாதிரி… வழக்கமான நியதியாய்க் காலை. பனை நிழலும் மனுசாள் நிழலும் நீண்டு சுருங்க ஆரம்பித்தன. உச்சிவேளை நெருங்கப் பெண்கள் சமையல் மும்முரத்தில் இருந்தார்கள். காம்பவுண்டு வாசலில் ஒவ்வொருத்தியும் தன் கணவனை வரவேற்க வந்து நின்றார்கள். குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குழந்தையை அம்மா கூப்பிடும் ஒலி. நெளம்பி குழந்தைகளைச் சாப்பிட அவசரப்படுத்திவிட்டு வெளியே அனுப்பினாள் ஜரூராக. காத்திருந்தாள், எப்ப வேணாலும் முஸ்தபா வருவார்.

ஒரு மணி கழிந்து விட்டது, வந்த ஆம்பிளைகள் திரும்ப வேலைக்குப் போனார்கள். காம்பவுண்டில் இப்போது ஆம்பிளை என்று யாருமே இல்லை. பெண்களும் ஒரு தூக்கம் முடித்துவிட்டு வெளியே மரத்தடியில் கூடினார்கள். நேரமாக ஆக அவர்களின் அரட்டைச் சத்தம் அதிகரித்தது.

அலுத்துப் போனது அவளுக்கு. தேடுவதை விட்டு விட்டாள். வெளிர் வெல்வெட் உடையில் முற்பகலில் இருந்தே அவள் சுவர்க் கடிகாரம் பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாய் இருந்தாள். ஒரு கவளங்கூட அவள் சாப்பிட்டிருக்கவில்லை, இப்ப வந்திருவார், இப்ப வந்திருவார் என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். பசி உள்ளே இரைய ஆரம்பித்தது. முன்பும் அவர் தாமதமா வந்திருக்கிறாரே. அப்பல்லாம் காத்திருக்கிறது இனிமையாய் இருக்கும். உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை அவை நீட்டிக்க வல்லதாய் இருந்தன. பயமும் சந்தேகமும் அவ்வப்போது ஊடறுக்கும்தான். அடிக்கடி, ரொம்ப அடிக்கடி அந்த எண்ணம் அவளை முகத்தில் அறையும், முஸ்தபா அவளுக்குமுன் இருமுறை கல்யாணம் முடித்தவர். இவளைத் தவிர புதிதாய் இன்னொருத்தியையும் கட்டியவர். ஆகவே காத்திருப்பதை அவள் சகித்துக் கொண்டாள். முஸ்தபா வர அந்தக் காத்திருத்தல், பொறுமை அவசியம் என அவள் உணர்ந்தாள். அப்போது மற்ற பெண்டாட்டிகளைப் பற்றி மோசமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டாள். ஒருத்தி இன்னொருத்திக்கு உரிமையான நாளில் அவரது ஆண்குறியைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள். மெல்ல ராத்திரிவரை ஆக்கி விடுகிறாள். அல்லது அவரைக் கட்டிக்கொண்டு நாள்பூரா விடுகிறதேயில்லை. அவளுக்கு அது இன்னொருத்திக்கான நேரம் என்று தெரியாதா?

ரெண்டு வாரமா மனுசனைக் காணவேயில்லை. அந்த நிஜம் மனசை இம்சித்தது. முஸ்தபா நாலு மாசம் முன்னால் இவளைவிட இளம் பெண்ணொருத்தியைக் கல்யாணம் முடித்தார். அந்த நினைப்பே சட்டென்று உள்ளே ஆழமான வலி எற்படுத்தியது. ஓய்வு கொள்ள, உறங்கக் கொள்ள முடியாத வலி. தானறியாமல் தூங்கினாலும் எழுந்தவுடன் தொடரும் வலி. மருந்து தேட வேண்டியதாகிவிடும். வழக்கமாய் ரெண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்கிறவள், மூன்றாய் ஊற்றிக் கொண்டாள். கடைசிப் பெண்ணைக் கூப்பிட்டு, பெரியண்ணன் மக்டரை உடனே அழைத்துவரச் சொன்னாள். ”போய் வாப்பாவைக் கூட்டிவாடா” என்றாள்.
”எங்கருந்தும்மா?”
”நாலுமுக்குல பார். இல்லாட்டி உன்னோட மத்த உம்மாமார் வீட்ல இருப்பாரு”
”நான் நாலுமுக்குலதாம்மா இருந்தேன். வரல்லியே”
”அட இப்ப வந்திருக்கலாம்டா, போய்ப்பாரு”
உம்மாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தலையைத் தொங்கப் போட்டான். மனமில்லாமல் கிளம்பினான் அவன்.

”வாப்பா சாப்பிட்டதும் என்ன இருக்கோ உனக்குத் தரேண்டா. வீட்ல கறிச்சோறு, ஜல்தி மக்டர்” என்றாள்.

கடுங்கோடை. உயரமோ உயரத்தில் மேகம். மக்டர் ஒருமணி நேரங்கழித்துத் திரும்பி வந்தான். வாப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெளம்பி வெளியே வந்து மத்த பொம்பளைகளோடு கலந்து கொண்டாள். எல்லாரும் வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு மரியாதைக்காக ஒருத்தி ”மாமா வந்துட்டாப்லியா?” என்றாள். ”இன்னும் இல்ல” என்றாள் நெளம்பி. பின் அவசரமாக, ”ரொம்ப நேரமாக்க மாட்டாரு. அவருக்கு என்னோட மூணு நாள்னு தெரியும்” என்றாள். மத்த மூணு பெண்டாட்டிகளைப் பத்தி அவர்கள் பேசக் கூடும் என்று அவள் வேறுபேச்சை எடுத்தாள். தானே போய் முஸ்தபாவைத் தேட மனசு அடித்துக் கொண்டது. என் மூணு நாளை யாரோ திருடிக் கொள்கிறார்கள்! மத்த மூணு சம்சாரங்களுக்கும் இது தெரியும். என்னிடமிருந்து அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள் முஸ்தபாவை. நல்லா சாப்பாடு போட்டு இடுப்புத் துணியை அவிழ்க்கிறார்கள், அவள் செய்யவேண்டிய முறை அது. நான் பேசாம இருக்க வேண்டியிருக்கு. என்னால் செய்யக் கூடுவது எதுவும் இல்லை. ஆஸ்பத்திரில சேத்துருப்பாங்கன்னோ, போலிஸ்ல அவர் மாட்டிருப்பாருன்னோ அவளுக்கு உதிக்கவேயில்லை!

சின்னச் சின்ன பதார்த்தங்கள் முஸ்தபாவுக்குப் பிடிக்கிற மாதிரிச் செய்ய அறிந்தவள் அவள். அவருக்கு இதில் அதிகச் செலவும் கிடையாது. அவரிடம் காசு என்று அவள் கேட்டதும் இல்லை. அவருக்காக அவள் கடன் வாங்கக் கூட அஞ்சவில்லை. அவர் வாய்க்கு ருசியாகப் போட வேண்டும். சில சமயம் திடுதிப்பென்று வந்து நிற்பார். அவளைப் புதுக்கல்யாணம் முடித்த காலம் அது. அப்பக்கூடச் சுறுசுறுப்பாக அவரை, அவர் வயிற்றைக் கவனித்துக் கொள்ளவில்லையா? அவர் சகாக்களே இதை அறிந்தவர்கள்.

மனசை இப்படி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தூக்கம் சொக்கியது. சாயந்தரத்துக்குள் அவர் வந்தாக வேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஒரேடியா நம்ம ஒதுக்கிருவாரோ, என்று திடுதிப்பென்று ஓர் எண்ணம். மூழ்கும் மனுசனைக் கல்லைக் கட்டிப் போட்டாப் போலிருந்தது. எல்லாம் புதுத்தண்ணியில் கசடுகளாக மனசில் ஒதுங்கியபின், உற்சாகத்துக்கு அவள் மீண்டும்சிநேகிதிகளோடு கலந்து கொண்டாள். குழந்தைத்தனமான ஆர்ப்பரிப்பு. நம்பிக்கை சார்ந்த எளிய திருப்தி. பொட்டலத்தில் அவளுடைய சாமான். எல்லாரும் பார்க்கிறார்கள், உள்ளே என்ன இருக்கும் அவர்களுக்குத் தெரியாது. அவளுக்கு மாத்திரமே தெரிந்த விஷயம் அது! அவள் கலகலப்பாக எல்லாருடனும் பேசிக் கொண்டிருந்தாள். முஸ்தபா பசியோடு வருவார்! முழுக்க அவளுக்கேயான முஸ்தபா! தூரத்தில் மர உச்சிக்கு மேலாகச் செந்தூரம் பூசிக் கொண்டு மேகங்கள் சூரியனை மறைத்தன. மாலை நமாஸ் பண்ண நேரம் கிட்ட வந்தது. பெண்கள் அறைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். மர நிழல்கள் பரந்து விரிந்து இருண்டு படர்ந்தன. இரவு இறங்கியது. இருண்ட, நட்சத்திர இரவு.

குழந்தைகளுக்காக நெளம்பி கொஞ்சம் சோறாக்கினாள். கறிக்காகக் குழந்தைகள் கூச்சலிட்டன. ”அது வாப்பாவுக்கு. பகல்ல அவர் சாப்பிடலயில்லா” என்றாள் நெளம்பி விடாப்பிடியாக. குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் சமையல் நெடி போக ஒருமுறை உடலைச் சுத்தம் செய்து கொண்டாள். கைகால் பாதம் என்று எண்ணெய்பூசி ஹென்னாவைப் பளபளவெனப் பொலியச் செய்தாள். வாசல் பக்கம் பெஞ்சு போட்டு உட்கார்ந்து கொண்டாள். அவளது சென்ட் வாசனை அறைமுழுதும் மணத்தது. மத்த பெண்களின் கணவர்கள் வர ஆரம்பித்திருந்தார்கள்.
அவள் மாமாவைக் காணவில்லை. திரும்ப அலுப்பாக உணர்ந்தாள். நெஞ்சு வலித்து. இருமல் வந்தது. உள்ளெல்லாம் எரிந்தது. அவளது மூணு நாள், ஆஸ்பத்திரிச் செலவு கட்டப்படியாகாத நிலை, கொஞ்சம் மரப்பட்டை பஸ்பம் வாங்கித் தண்ணீரில் கலந்து குடித்துக் கொண்டாள். மருந்தின் ருசி இதில் இல்லை, என்றாலும் உள் எரிச்சல் மட்டுப்பட்டது கொஞ்சம். மனசு கலவரப்பட்டது. எங்க இருப்பாரு? முதல் சம்சாரம் கூடயா? ஐய! அவள் கிழவி. ரெண்டாமத்தவள்? ஐய! அவரு அவளைத் திரும்பிப் பாக்கறதேயில்லை, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் அது. மூணாவது நாந்தான். ஆக நாலாமத்தவள் வீட்லதான் இருக்கணும். என்னென்னவோ யூகங்கள். பதில் தனக்கே நிச்சயமில்லாதிருந்தது. படுக்கைக்குப் போக முடியவில்லை அவளால். நேரம் எப்பவோ தாண்டியிருந்தது. வரேன்னு சொன்ன காதலனுக்காகக் காத்திருக்கிறாப் போல. இன்னும் பாக்கலாம், இப்ப வந்திருவார். அவநம்பிக்கையும், அசட்டுத்தனமுமாய் ஆனால் காத்திருந்தாள். தன்னைத்தானே வருத்திக் கொண்டாள். மனசு பூரா அவளது சக்களத்தி வீடுகள், உள்ளே கூட நுழைந்து தேடுகிறாள்!

அவரை அவள் அலட்சியப் படுத்துவதாக நினைத்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் அப்படியே நல்ல உடையும், அலங்காரமுமாய்ப் படுக்கையில் படுத்துக் காத்திருந்தாள். பெரு விளக்குகளை அணைத்து விட்டாள். மங்கலான விடிவிளக்கு. அவருக்காக விழித்திருக்க விரும்பியும் தானறியாமல் கண்ணயர்ந்து விட்டாள். கதவருகே அவர் வரும்போது வரவேற்க அவள் தயார் என்கிறாப் போல, கதவை நாதங்கியிட்டு எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவரது கடமை தவறாத மனைவி நான். எப்போதும் என் கடன் அவர் பணி செய்து கிடப்பதே. பகலோ இரவோ, எந்த நேரமும் அவரைப் பார்த்துக் கொள்ள முழு ஈடுபாடு காட்டுகிறேன். வருகையில் என் கையை இடுப்பில் அழுத்தி ஒயிலாய் இடுப்பு மணிகளை அசைப்பேன். சட்டென்று அவர் திரும்பி தலைமுதல் கால்வரை என்னைப் பார்ப்பார்.

வந்தது காலை. வரவில்லை முஸ்தபா. பிள்ளைகள் எழுந்ததும் வாப்பாவைக் கேட்டார்கள். மூத்தவன் மக்டர். அவனை அவள் மலைபோல் நம்பியிருந்தாள். வாப்பாவுக்காகப் படுக்கை விரிக்கப் படவில்லை என்று கவனித்து விட்டான். சாப்பாட்டுக் கிண்ணமும், ரொட்டியும் தொடப்படவில்லை. குழந்தைகளை எரிச்சலுடன் விரட்டினாள் நெளம்பி. இளையவளை, அமதெள அவள் பெயர், ”கண்ணாடி பாத்தது போதுண்டி. லைத்தி கடைக்குப் போயி அஞ்சு பிராங்க் காபிப்பொடி வாங்கியா” காலைப்பாட்டுக்குப் பிள்ளைகளுக்குப் பழைய சோற்றைச் சூடு பண்ணி நேற்றைய வெஞ்சனத்தை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பரிமாறினாள். இளையவளை வைத்துக் கொண்டு மத்தவர்களை வெளியே விளையாட அனுப்பி விட்டாள். பிள்ளைகளுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை. மருந்துக் குப்பியில் இன்னும் மூணு தேக்கரண்டி அளவே மருந்து மிச்சமிருந்தது. முந்தைய நாளே நிறையக் குடித்திருந்தாள். ம்.. என்று அரைக் கரண்டி மாத்திரம் இப்போது குடித்தாள். மீதிக்கு பஸ்பம் போதும். வலி சிறிது அடங்கியது.
”இன்னாடி நெளம்பி! காலங்காத்தாலயே ஜம்னு சீக்கிரமா எழுந்து துணியும் மணியும்! எங்கியாச்சும் ஊருக்குப் போறாப்லியா?” பக்கத்து வீட்டு ஐதா. மூணு நாள் என்றாலும் இந்த அலங்காரம் ஆளை அயர்த்தியது. இது நேற்று பண்ணிக்கொண்ட அலங்காரம், என நினைவு தட்டியதும் பேச்சை மாற்றினாள். ”அட அவரு வர்லியா இன்னும்? எல்லாரும் ஒண்ணுதாம்ப்பா இந்த ஆம்பளைங்க…”

”காலைல வந்துருவாரு ஐதா” என்றாள் நெளம்பி கணவனை விட்டுக்கொடுக்காமல். ஆனால் அது உண்மையில் சுய கெளரவப் பிரச்னையாய் இருந்தது. தன் நேற்றைய பாடுகள்! சரியான தூக்கமில்லை. சத்தம் எதும் கேட்டப்பல்லாம் முஸ்தபா வருவது போலிருந்தது. கிழட்டு முகத்தில் அசதி தெரிந்தது.

’’நிச்சயமா, நிச்சயமா…” என்றாள் ஐதா. எல்லாப் பெண்களும் இந்த வேடிக்கையை நடிக்கத்தானே செய்கிறோம்! ”முஸ்தபா நல்ல மனுசர். பண்பானவர்…” என்றாள் இன்னொரு பெண் கூடவே. ”அப்பிடி அவர் இல்லாட்டி நான் அவரைக் கட்டியிருப்பேனா?” என்றாள் நெளம்பி. அதுவும் சமாளிப்பாகவே இருந்தது.

நெளம்பியின் மூணு நாளில் முஸ்தபா வேறு வீட்டில் இரவைக் கழித்த விவரம் காம்பவுண்டுக்குள் பரவிவிட்டது. இது தப்பில்லையா? என்று மற்ற பெண்கள் அவளிடம் இரக்கப் பட்டார்கள். பலதார மணம், அதற்குரிய ஒழுங்குகள் உடையது, அதை மதிக்க வேண்டும். அவளவள் மூணு நாள் அவளவளுக்கே சொந்தமாக வேண்டும், அதுவே நாசூக்கு மற்றும் மரியாதை. ஆனால் இதில் வரப்புத் தாண்டல்கள் இல்லாமல் இல்லைதான். உதாரணமாக அந்த ஆம்பளையை முழுதும் சக்தியுறிஞ்சிக் கொண்டு, அடுத்தவள் வீட்டுக்கு அனுப்பும்போது ஒண்ணுக்கும் லாயக்கத்த சோப்ளாங்கியாய் அனுப்பி வைப்பது. பலதார மணம் பற்றிப் பேசும் பொம்பளையாள்கள், மனைவிகளையே குறை சொல்கிறார்கள். புருஷனை அவர்கள் எப்படி வசியம் பண்ணி மடியில் போட்டுக் கொள்கிறார்கள் என்று ஏசிப் பேசினார்கள். ஆம்பளைகள் பற்றி எதும் பேசுவதில்லை. அவன் அப்பிராணி, ஒருத்தி மாத்தி இன்னொருத்தி வலையில் அவன் விழுந்து சிக்கிக் கிடக்கிறான். எல்லாரும் நெளம்பியின் நாலாம் சக்களத்தியை ஏசிப் பேசினார்கள்.

நெளம்பி கணவனுக்காக காபி போட்டாள். நெஞ்சுவலி என்று அவள் காபி குடிக்கிறதில்லை. ரொட்டி பழசாயிட்டது. வந்தவுடன் காபி தரலாம். வேற ரொட்டி அவர் வந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம். நீண்ட நெடிய பொழுதுகள் கடந்து போகிறது மேலும் மேலும் கஷ்டப்படுத்தியது. இந்தாளு எங்கருக்காரு தெரியலையே என்றிருந்தது. கண்ணில் அந்தத் தேடல் பளபளத்தது. எந்த ஆம்பிளைக் குரலுக்கும் அவள் விரைத்து நிமிர்ந்து பார்த்தாள். நெஞ்சுவலி அதிகரித்திருந்தது. உடம்பில் மட்டுமல்ல மனசே வலித்தது. உடம்பு சுவாசப்பட்டால் மனசில் வலி கிளம்பியது. ரெட்டைக் குதிரைச் சவாரி போல ரெட்டை வலி.

மணி நாலு. நெளம்பி எதிர்பாராமல் அவளது ரெண்டாவது சக்களத்தி வந்து சேர்ந்தாள். நெளம்பியின் மூணுநாள் இது என அறிந்து அவள் முஸ்தபாவைத் தேடி வந்திருந்தாள். என்ன விஷயம் என்று அழுத்திக் கேட்டும் காரணத்தை அவள் சொல்லவேயில்லை. பொறாமை பிடிச்சவள், பார்க்க வந்திருக்கிறாள் என நெளம்பி நினைத்துக் கொண்டாள். ‘வீட்டை எப்பிடி சுத்தபத்தமா வெச்சிருக்கேன்’ நான் பாரடி பார். ‘என்னென்ன சாமான்லாம் அடுக்கி வெச்சிருக்கிறேன்’ பார். முஸ்தபா இவளிடம் அதிக மையலுடன் இருப்பதாக அவள் நினைக்க வேண்டும் என நெளம்பி நினைத்தாள். என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். நெஞ்சு வலி அதிகமாகியிருந்ததுஎன்றாலும் அவள் மருந்தைத் தொடவில்லை.

நெளம்பி கல்யாணம் முடித்தபோது, நல்லா ஞாபகம் இருக்கு, இவளுடைய மூணு நாளை ‘லபக்’கி விட்டாள் அப்போ இவளே ஆக இளையவள்! நாள் தவறாமல் முஸ்தபா வந்து போவார். ஒருவேளை இவளோட மூணாமத்த குழந்தை, ரெண்டாவது சக்களத்தியின் மூணு நாளில் கருத்தரித்திருக்கலாம். ஆனால் அவள் வந்ததும் அவர்கள் பேசிக் கொண்டதுமாக, ஒரு விஷயம் தெரிந்தது, நெளம்பி இப்போது முஸ்தபாவின் ஆசைநாயகி அல்ல! அது மனசில் தட்டிய கணத்தில், இவளையும் குழந்தைகளையும் பற்றிய அவளது நல விசாரிப்பும், வீட்டை இவள் வைத்துக் கொள்கிற நேர்த்தி பற்றிய பாராட்டும், இவளது உடையலங்காரம், அடடா அந்த சென்ட் எல்லாம் பற்றிய பேச்சுமே நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சியது. எதிரிகள் இருவரின் வஞ்சனையான பேச்சு வார்த்தை அது. ஐயோ! இதெல்லாம் விட்டு ஓடிட்டாத் தாவல என்றிருந்தது. நாம எல்லாரும் ஏன் இப்பிடி ஒரே ஆம்பளையின் பகடைக்காயா ஆகணும்?

ஆனா ஒண்ணு. அந்தச் சக்களத்தி நெளம்பியிடம் தன் பிள்ளைகளுடன் விளையாட இவள் குழந்தைகளை அனுப்பி வைக்கும்படி மனசாரச் சொன்னாள். ஒரு தோரணையுடன் நெளம்பி தலையாட்டினாள். தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத, விட்டுக் கொடுக்காத பந்தா அது. சகஜபாவனையில் அந்த சக்களத்தி, தான் முஸ்தபாவைத் தேடி வந்ததைத் தெரிவிக்கச் சொன்னாள். நெளம்பியின் மூணு நாளை அவள் எடுத்துக் கொண்டதாக வேறெவளாவது போட்டுக் கொடுத்தால், நெளம்பி அதை நம்பக் கூடாது, அவளேகூட அவரைப் பார்த்துப் பேச வேண்டியிருப்பதால்தான் வந்தாள்! முஸ்தபாவைக் கடைசியா எப்ப பார்த்தே என்று நெளம்பி அவளைக் கேட்க நினைத்து, தவிர்த்து விட்டாள். அவள் சிரித்தபடி ”என்னோட மூணு நாளின் கடைசி நாள்லதான்! இப்ப ஒரு அவசரம், அதான் வந்தேன்” என்றிருப்பாள்! ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’. அதற்கு நெளம்பியும் அப்பிராணி பாவனையில், ”அதில்ல, இடையில சந்தர்ப்பவசமா எங்கியும் பார்த்திருக்கலாம்லியா, அதான்” என்பாள். ‘குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர்’னு பழமொழி!

யாருமே இதில் அடிபட்டு விடவில்லை. அவரவர் யோசனையில் பேசினார்கள் அவ்வளவுதான். எல்லாருமே புருஷன் மோகவயப்பட்டதில் வாழ்க்கைப்பட்டு, அவர்களின் தாம்பத்தியம் அனுபவித்து விசிறியடிக்கப் பட்டவர்கள்தாம். அந்த ஆம்பளை, சதைகொத்திக் கழுகாட்டம், ஏமாற்றம் என்னும் விஷத்தைப் பீய்ச்சி அவர்களை விளையாட்டு பொம்மையாய் வீசியெறிந்து போய்விட்டான். அவர்கள் எல்லாவளுக்கும் தெரியும், நல்லாத் தெரியும், இதைவிட அவர்கள் கேவலப்பட முடியாது. மிச்ச சொச்சக் கெளரவத்தை அவர்கள் வாய்ச்சவடாலில் காப்பாற்றிக் கொள்ள முனைந்தார்கள். இதை அவர்களே பிடிக்காமல்தான் செய்தார்கள். மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. பொய் என்பது, கேட்கிறவளுக்கும் தெரியும், சொல்கிறவளுக்கும் தெரியும். ஆனால் அதை உடைத்து விட முடியாது. உடைத்தால் அவர்களே உடைந்து போவார்கள்.

சக்களத்தி கிளம்பிப் போனாள். சடாரென்று வாசல்வரை வந்து பார்த்தாள் நெளம்பி. இவள் எதற்கு வந்திருக்கிறாள் தெரிந்து விட்டது அவளுக்கு. முஸ்தபா இங்கே இல்லை என்றதில் ஒரு அல்ப சந்தோஷம். என்னை மட்டுமா அவரு த்ராட்டில் விட்டாரு, இதோ இன்னொருத்தி! முஸ்தபா நாலாவது சம்சாரத்துடன்தான் இருந்தாகணும் என நினைத்துக் கொண்டாள் அவள். சக்களத்தி நினைத்திருப்பாள், என்னைவிட இளையாளா, எங்க கிட்டேர்ந்து பறிச்சிக்கினியே? இப்ப பார்! உனக்கு இளையாளா உன்னைத் தண்ணி காட்டறா ஒருத்தி. இப்ப எங்ககூட நீ சேர்ந்து இதைச் சமாளிச்சாகணும் பாத்தியா! அட எழவெடுத்த கிழமே! அவன் உன்னைவிட்டு இன்னொருத்தி கூடப் படுத்துக் கிடக்கான். நாளைக்கும் அப்படித்தான் ஆகப் போவுது.
ரெண்டாம் நாளும் கடந்தது. இப்போது அதிக உக்கிரமாய்க் கழிந்தது இந்த நாள். அவள் சரியாகச் சாப்பிடவில்லை. பசிக்கு என்று ஏதோ சாப்பிட்டதாய்ப் பேர் பண்ண வேண்டியிருந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை. எல்லா ஆம்பிளைகளும் வீட்டில். சிலர் குழந்தைகளைத் தூக்கிவைத்துத் திரிகிறார்கள். சிலர் பெரிய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அறைகள் கலகலப்பாய் இருந்தன. சதுரங்கமும், சீட்டாட்டமுமாய் ஜமா சேர்ந்திருந்தது. காம்பவுண்டே சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தது. சிரிப்பும் எக்காளமுமாய் வீடுகள் நிறைந்தன. பெண்கள் வீட்டு வேலைகளில் மும்முரப் பட்டார்கள்.

ஐதா நெளம்பியிடம் வந்து, ”சில ஆம்பளைகள் கடைசி நிமிடத்தில்தான் வேறு காரியம் இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். இன்னிக்கு ஞாயிறுதானே, இன்னிக்கு வருவார்” என்றாள் ஆறுதலாய். ”ஐதா, இந்தாளு வேலை வெட்டிக்கு எதுவும் போகலியே” என்றாள் நெளம்பி. கண் வெறிக்கப் பேசினாள். இருமல் வந்தது. ”ரெண்டு முழுநாள், ரெண்டு ராத்திரி நான் காத்திருக்கேன். இது என்னோட மூணு நாள். அட பகல்ல இல்லாட்டியும் ராத்திரி வரலாமில்ல? பாத்துப் பாத்து கண்ணே பூத்திட்டது”

”நா வேணாப் போயிப் பாத்திட்டு வரட்டா?”

”இல்ல வேணாம்” என்றவள், மனதில் ‘சரி’ என்று நினைத்தாள். எதையாவது சொல்லிச் சங்கடப் படுத்தி விடுகிறாள் இவள். ஆனால் அவளுக்கு ஐதாவைப் பிடிக்கும். நேற்றைக்கு ராத்திரி நிஜத்தில் அவள் வீட்டைவிட்டு வெளியிறங்கிச் சிறிது தூரம் வரை போய்விட்டாள். பிறகு கேவலப்படக்கூடாது என்று அடக்கிக் கொண்டு திரும்பினாள். தன்னைப் பார்க்க விருப்பம் இல்லாத ஒருத்தனைப் போய்ப் பார்த்து இன்னும் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதா? என்றிருந்தது. விடிகிறவரை என்னென்னவோ யோசனைகள். முஸ்தபாவுடனான கல்யாண உறவு முடிந்து விட்டது. தலாக் சொல்லப் போகிறார். காலையில் திரும்ப நம்பிக்கை வெளிச்சம். இன்றைக்கு வருவார். இது என் ‘கடைசி’ இரவு! ஒரு ஆயிரம் பிராங்க் என்று கடன் கேட்டபோது ஐதா உடனே உதவினாள். அவள் சொல்படி குழந்தைகளை நாலாமத்தவள் வீட்டுக்கு அனுப்பினாள். ”அம்மாவுக்கு மேலுக்குச் சுகமில்லை, உடனே பாக்கணும்னு சொன்னேன்-னு வாப்பாகிட்டச் சொல்லுங்க”.

பக்கத்துச் சந்து பஜாரில் கோழியும், மசாலா சாமான்களும் வாங்கி வந்தாள் அவசரமாக. மணக்க மணக்கக் கோழிக்கறி சமைக்கும்போது முகம் பூரித்துக் களித்தது. நாக்கில் தண்ணியூற வைக்கும் சமையல் வாசம் காம்பவுண்டையே தூக்கியடித்தது. ஞாயிற்றுக் கிழமை வேறு! அறையைப் பெருக்கி, சுத்தம் பண்ணிக் கதவை, ஜன்னல்களைச் சாத்தினாள். ஆனாலும் கீறல்கள் வழியாக அறையில் தெளித்த சென்ட் வாசனை வெளியே பரவியது!

பசங்கள் திரும்பி வந்தார்கள். ”அப்பாருக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள். ”அதெல்லா ஒண்ணில்ல. வந்திட்டே இருக்கார். வெளலிமதா (நாலாம் மனைவி பெயர்) வீட்டில் கூட்டுக்காராளோட இருந்தார். உங்களைக் கேட்டாரு”
”அவ்ளதான் பேசினாரா?”
”ஆமாத்தா.”
”இந்தாங்க, பத்து பிராங்க் இருக்கு, வெளிய போய் விளையாடிட்டிருங்க.”

வருகிறார் என நினைக்க கதகதப்பான உணர்வு வந்தது. வந்தா அவரைக் கன்னாபின்னான்னு திட்டணும்னு வார்த்தை வார்த்தையாச் சேத்து வைத்திருந்தாள். போட்டுச் சாத்துவார் என்னை, அது பரவால்ல. ஆனா அந்த வார்த்தையெல்லாம் இப்ப பிரயோஜனமில்லை. விட்ட நாளுக்கு இப்ப நம்மால முடிஞ்ச நிறைவு செஞ்சனுப்பணும். அவரைப் பத்திய பிராதுகள் இப்ப வேணாம். கூட்டுக்காராளோட வர்ற வழில இருப்பாராயிருக்கும். அபாரமான ஒரு சாப்பாடு அவரைப் படுக்கைக்கு இறுத்தி விடும்!

சாப்பாட்டுக்கடை முடித்தாள். ஒரு குளியல் போட்டாள். மீதி ஒப்பனைகளிலும் இறங்கினாள். தலை வாரி, புருவம், உதடு மெருகேற்றிக் கொண்டாள். கஞ்சி போட்ட வெள்ளை இரவிக்கை. கைத்தறி ஆடை இடுப்புக்கு. கை கால்களை நோட்டம் விட்டாள். திருப்தியாய் இருந்தது. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஆளைக் காணவில்லை. காம்பவுண்டில் யாருமே அவளுடன் பேசப் பயந்தார்கள். அவளை நோகடித்துவிடக் கூடாது என்றிருந்தார்கள். வாசலில் வந்து அவள் உட்கார்ந்து கொண்டாள். மற்ற ஜனங்கள் அவள் முகத்தைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். உதட்டைக் கடித்து அழுகையை அமுக்க முயன்றாள் என்றாலும் நிறைந்த குளமாய் கண்ணில் கண்ணீர் தளும்பியது.

தூரத்தில் எதோ வண்டியின் சத்தம் காற்றில் சிதறிக் கேட்டது. நினைவுச் சின்னமாய் நிற்கும் சிலையைத் தாண்டி காலம் நகர்ந்து செல்கிறாப் போலிருந்தது அவளைப் பார்க்க. அந்தி மயங்கி இரவு வந்தது. மேஜைமேல் மூணு தட்டுகள், ஒரு நாளைக்கு ஒண்ணு. ”நான் கூட இருக்கேண்டி” என்றபடி ஐதா அறைக்குள் நுழைந்தாள். படுக்கையின் ஓரம் நெளம்பி உட்கார்ந்திருந்தாள். மற்றவர்களின் அமைதி தாளாமல் அவள் உள்ளே ஓடி வந்திருந்தாள். ”நீ மனசில் போட்டுக்காதே இவளே” என்றாள் ஐதா. ”உன் அவஸ்தை எல்லாப் பொண்ணுக்கும் இங்க உண்டு. அது நல்ல விஷயம் இல்லதான். இனியும் காக்க வைக்க மாட்டாருன்னுதான் தோணுது இவளே…”
உதட்டைக் கடித்தபடி முகம் பளபளக்க நெளம்பி நிமிர்ந்து பார்த்தாள். அவள் எதுவும் பேசும் நிலையில் இல்லை என்று ஐதா உணர்ந்தாள்.

அவள் அறைக்கதவு சாத்திக் கிடக்கிறது. எல்லாமே இருள் போர்த்திக் கிடக்கிறது. இராச்சாப்பாடு கழிந்து குழந்தைகள் கூட சத்தமாய் விளையாடுவதை நிறுத்தியிருந்தன. பெரியவர்கள் தூக்கக் கலக்கத்தில் படுக்கையைப் போட நினைக்கிற நேரம் முஸ்தபா ரெண்டு கூட்டாளிகளுடன் காம்பவுண்டுக்குள் நுழைந்தார். வெளேர் உடையில் இருந்தார். தயங்கி நின்ற மத்தாளுகளை உள்ளே வரச்சொல்லியபடியே நெளம்பியின் குடிசைக்குள் நுழைந்தார். அவள் அசையவேயில்லை.

”அடியே என்னா விளக்கேத்தல்லியா?” ”காலைலியே கிளம்பினவரு எங்க போயிட்டு வரீரு?” என்று கேட்டாள் நெளம்பி. ”எப்பிடி இருக்கே பீவி?” என்று கேட்டபடி அவரே விளக்கை ஏற்றினார். போய்ப் படுக்கையில் உட்கார்ந்தபடியே மத்தாளுகளை பெஞ்சில் அமரச் சொன்னார். ”இன்ஷா அல்லா…” என்றாள் நெளம்பி, கோபம் அடங்கிச் சுவாசம் வந்திருந்தது மெலிந்த முகத்தில்.

”பிள்ளைங்க?” ”நல்லாருக்காங்க, இன்ஷா அல்லா…”

”அத்தனை சுரத்த இல்லியே பீவி பேச்சு…” என்றான் வந்தாளுகளில் ஒருத்தன். ”எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்றாள் நெளம்பி. ”நெஞ்சுத் துடிப்பு, எப்படி இருக்கு இப்பல்லாம்?” என்று அனுசரணையாய்க் கேட்டார் முஸ்தபா.

”சரியாத்தான் ஓடிட்டிருக்கு”.

”இன்ஷா அல்லா, நாங்க கிளம்பறோம்” என்றான் ஒருத்தன் அவளது உதாசீனம் தாளாமல்.
”இரு” என்று கையமர்த்தினார் முஸ்தபா. ”ஏம்மா! இப்ப சாப்பிடலாமா, காலைல பாத்துக்கிறலாமா?”
”காலைல போறச்ச எதும் குடுத்தும் போனீங்களா என்ட்ட?” என்றாள் நெளம்பி.
”என்ன பேசற நீ? உன் பேச்சே சரியில்லையே…”
”இல்ல மாமா! சும்மாதான் கேக்கறேன். நான் கேட்டது தப்பா?”
முஸ்தபாவுக்கு மத்தாளுகள் முன்னால் அவரை எகத்தாளம் பண்ணுகிறாள் என்று புரிந்தது. ”உனக்கும் வேடிக்கை பண்ணத் தெரியுது… இது உன்னோட மூணு நாள், தெரியலியா?”
”மாமா மறந்திட்டேன். மன்னிக்கணும். எத்தனை தகுதியில்லாத மனைவியாயிட்டேன் இல்லே?” என்று அவர் முகத்தை நேரே பார்த்தாள்.
”என்னடி கிண்டல் பண்ணறியா?”

”மாமா! நான் பண்ண முடியுமா? யார் என்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பா. உருப்படியான ஒரு கணவனைத் தவிர? இந்த உலகத்திலும், அடுத்த பிறவியிலுங்கூட நான் உங்களைக் கேலி பேசலாமா?” ”எல்லாரும் அப்பிடி நினைக்கறதுதான்…”

”யாரு எல்லாரும்?” ”நான் உள்ள வர்றப்ப, எழுந்து கூட உன்னால நிற்க முடியல, அதைச் சொல்லு முதல்ல”.

”மாமா மன்னிச்சிருங்க. உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் எனக்கு எதுவும் ஓடல்ல. அப்பிடின்னாலும் அது யாரு தப்பு மாமா?”

”என்னா இது மூணு தட்டு, எதுக்கு?” என்று சங்கடத்துடன் அவர் கேட்டார்.

”இந்த மூணு தட்டா? உமக்கு சுவாரஸ்யமில்லாத விஷயம். இது என்னோட மூணு நாள்! அதுல உமக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கு மாமா?” அந்த மூணு பேரும் சுதாரித்து ஒரே சமயம் எழுந்து கொண்டார்கள். நெளம்பி வேணுமென்றே ஒரு தட்டை எறிந்தாள். ” மன்னிச்சுக்கங்க மாமா” மற்ற இரண்டு தட்டுகளையும் நொறுக்கினாள். கண் சிவந்திருந்தது. நெஞ்சில் திடீரென்று வலி. அப்படியே பாதியாக மடிந்து தரையில் விழுந்தபோது அவள் அலறிய அலறல் முழுக்காம்பவுண்டுக்கும் கேட்டது.

சில பெண்கள் அவசரமாய் ஓடி வந்தார்கள். ”என்னாச்சி அவளுக்கு?”

”ஒண்ணில்ல! நெஞ்சு வலி…” என்றார் முஸ்தபா. ”கிறுக்குப் பொம்பள, என்ன காரியம் பண்ணிருக்கா பாருங்க. மூதேவி பொறாமையிலேயே மூச்சு முட்டிச் சாகப் போறா. நான் ரெண்டு நாள் வரல்ல அவ்ளதான்… ஆ..வூ..ன்னு கத்தறா கதர்றா. கொஞ்சம் பஸ்பப்பொடி குடுங்க சரியாயிருவா…” என்று உளறியபடி முஸ்தபா வெளியேறினார். ”இந்த அம்மணிகளுக்கெல்லாம் இப்ப சங்கம் கிங்கம்னு வந்தாச்சி. இவங்க இனி நாட்டை ஆளப் போறாங்களாம்ல?” என்றான் கூட வந்தவனில் ஒருவன்.

”பமகோல (பமகோ – ஓர் ஆப்பிரிக்க நகரம்) கேள்விப்பட்டீங்களா? பலதார மணத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டாங்களாமே?” என்றான் அடுத்தவன். ”ஆண்டவரே ஒரே மனைவியிடமிருந்து எங்களைக் காப்பாற்று”

”பின்ன அவங்களே வெளிய இறங்கி வேலை கீலை பார்க்கட்டும்” என்றார் முஸ்தபா காம்பவுண்டை விட்டு வெளியேறியபடியே. ஐதாவும் கூட சில பெண்களும் நெளம்பியை எழுப்பி படுக்கையில் படுக்க வைத்தார்கள். இன்னமும் அவள் முனகிக் கொண்டிருந்தாள். ஒருத்தி பஸ்பப்பொடியையும் தண்ணீரையும் எடுத்து வந்தாள்…

(நிறைவு பெற்றது)

மூலம் : செம்பின் ஒளஸ்மேன் (தென்னாப்பிரிக்கா)
தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன் (செப்டம்பர் 2007)

Her Three Days
by Sembene Ousmane
translated in English by Len Ortzen

எழுத்தாளராகவும் திரைப்பட இயக்குனராகவும் ஒளஸ்மேன் பரவலான புகழ் பெற்றவர். ”பண அஞ்சல்” (The Money Order) என்ற அவரது திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது.

ஒளஸ்மேன் கதையை விலாவாரியாக விவரங்கள் எதையும் விடாமல் தானே வாசகனுக்கு அளிக்க முன்வருகிறார். அந்தச் சமூகச் சூழல், வாசகச் சூழல் என்று பார்த்தால் அது முறையாகவும் இருக்கலாம். தமிழ்ச் சிறுகதை உலகம் மற்றும் வாசகர் வட்டம் மேலும் ஆழமான புரிதல்களில் இயங்கி வருகிறது என்று இதை வாசிக்கையில் உணர முடியும். முக்கியமான கதை என்று உணர்ந்தேன். அந்த வாழ்க்கைச் சூழல், இதுவரை தமிழ் எழுத்து அறியாதது அல்லவா? குழந்தைகளுக்கே நல்ல உணவு தராமல், கணவனுக்கு என்று எடுத்து வைக்கும் தாய். பலதாரக் கணவனைத் தன்னுடன் இறுத்திக் கொள்ள படுக்கையிலும் அடிமைப்படத் தயாராகி, வெளி கெளரவத்துக்கு ஏங்கி, உள்ளே கேவலப்பட்டுச் சுருளும் பெண்மை. அடிமைத்தனத்தின் உச்சங்களை விரித்துக் காட்டியிருக்கிறது கதை. அந்த மூணு தட்டை மேஜையில் வைத்து, எடுத்து உடைப்பது, கொஞ்சம் அதிகப்படியான அலட்டலாய்த் தோன்றியது. சரி! திரைப்பட உத்தி, கதையில் வைத்து விட்டார். இந்த பலதாரக் கணவன், ஓசிச் சாப்பாடு என்று தான் மட்டும் வராமல் கூட ஆட்களையும் விருந்துக்கு அழைத்து வருகிறான்! கூட்டாளிகளின் தாரங்களின் வீட்டுக்கு இவனும் தின்னப் போவான் என்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *