தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,297 
 

தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. “”தள்ளிப்போ… தள்ளிப்போ… பக்கத்துல யாரும் வராதீங்க…” குரலோடு அணுகுண்டு வெடியை பற்ற வைத்தான் பட்டாசுச் சங்கிலி. பட்டாசை பக்குவமாய் வெடிக்கச் செய்வதில், கில்லாடி இவன். அதனால்தான் பெயரே, “பட்டாசு சங்கிலி’ பட்டாசு வெடிக்க தனிச் சம்பளம், பாட்டில் சரக்கு, சாப்பாடு… முகூர்த்த நாட்களில் கிராக்கி இவனுக்கு. “”நல்லது – கெட்டது எதுக்குன்னாலும், ஏந்தான் இப்படி காச கரியாக்கி, ஆடு, மாடு, மனுசனையெல்லாம் பதறவைச்சு, மூச்சுவிட முடியாம செய்யிறாங் களோ,” என்றார் கூட்டத்தில் வந்த பெரியவர்.
“”விடு பெருசு… தெனமுமா செய்யுறாக… என்னைக்கோ ஒரு நாளைக்கு செய்யுறோம். காத இறுக்கி பொத்திக்க, ஒண்ணும் செய்யாது,” என்றான் ஒரு வாலிபன்.
ஒத்த வீடு!பட்டாசு வெடிக்குமிடத்திற்கு பின்னால், சற்று தூரமாய், கரகாட்டம் களைகட்டி இருந்தது. விடலைப் பசங்களின் விசிலும், ஆட்டமும் அமர்க்களமா இருந்தது. “”ம்…ம்… போங்கப்பா முக்கியமான எடத்துல மட்டும் நின்னு ஆடுங்க… நேரத்துல போயி சேரணுமில்லே,” என்றார் ஒருவர். கரகாட்டத்தின் பின்னால், வெள்ளை வேட்டி சட்டையில் பெரிய மனிதர்கள். பேன்ட், சர்ட் அணிந்த இளைஞர்கள், சிறுவர்கள் நடந்து வந்தனர். வெடியின் சப்தத்திலும், கொட்டின் சப்தத்திலும், ஆட்டுக்கிடாய் திமிறியது.
இரு கொம்பிலும் துளையிட்டு வளையம் மாட்டி, அதில் கயிறுக்கட்டி ஓடிப் போகாமல் இறுக்கி, இருவர் பிடித்து வந்தனர்.
பட்டுச்சேலை, சுங்கடிச்சேலை, சுடிதார், மிடிகளில் பெண்களின் அணிவரிசை.
ஒவ்வொருவரின் தலையிலும் தட்டு வைத்திருந்தனர். தட்டில் பழங்கள், சேலை, வளையல், பவுடர், இனிப்புகள் இடம்பெற்றிருந்தன. “”மதினி… சங்கரி கழுத்துல நகை பளிச்சின்னு இருக்கே… இப்ப எடுத்துருப்பாளோ…”
“”நீயொண்ணு… கல்யாணத்தப்ப அவ போட்டுட்டு வந்த நக பூராவும் அடகுக்கடையில. இது வெறும் கவரிங் நக… இவ போயி புது நக வாங்குறாளாக்கும்…”
“”மதினி, பேச்சைக் கொற… நாம பேசுறத பின்னால வர பொம்பளைக கேக்குறாக…” பேச்சு நின்றது. பலதரப்பட்ட பேச்சுகளும், சிரிப்புகளும் கூட்டத்தில் மாறி மாறி வந்தன.
இப்போது வெடிச் சத்தம் அதிகமாகக் கேட்டது. விசேஷ வீடு வந்தாகி விட்டது. குள்ளப்பகவுண்டன்பட்டி பெரியதேவர் ராசுவின் மகள் செல்வி, பூப்படைந்த நிகழ்வில் பங்கேற்கத் தான் இவ்வளவு பெரிய ஊர்வலம்.
“”வாங்க மாப்ள… வாங்க மச்சான்… வாங்க மதினி… வாங்கண்ணே,” என, வாய் நிறைய ராசுவும் – ராசாத்தியும் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றனர்.
“”சரிம்மா… வேலையைப் பாரும்மா நேரமாச்சு,” என்றாள் கூட்டத்தில் மூத்த பெண்.
“”ஆகட்டும்க்கா… எல்லாமே ரெடியா இருக்கு,” என்றபடி உள்ளே வந்தாள் ராசாத்தி.
“”தாய் மாமன கூப்பிடுங்கப்பா…” என்ற குரல் கேட்டவுடன், ஜீன்ஸ் பேன்ட், சட்டையணிந்த இளைஞன், தட்டுடன் வந்தான்.
தட்டில் பட்டுச்சேலை, ரவிக்கை, வளையல், சீப்பு, கண்ணாடி, 25 பவுன் மதிக்கத்தக்க, மயில் டாலர் பொறிக்கப்பட்ட, தங்க செயின் வைக்கப்பட்டிருந்தது.
ராசாத்தியை கூப்பிட்டு, அவள் கையில் தட்டைக் கொடுத்தான்.
வீடியோ, போட்டோ எடுக்கப்பட்டது, அனைவரின் கண்களும் தட்டின் மீதே பதிந்திருந்தன.
“”ஏக்கா ராசாத்தி… தங்கச்சி செவனம்மா இருக்காளே, அவ மக சமஞ்சா, இம்புட்டு சீரு செய்வாகளா?”
“”போடீ பொசகெட்டவளே… ராசாத்தி பணக்கார வீட்டுல வாக்கப்பட்டுருக்கா… அவ புள்ள லட்சணமா இருக்கா… எல்லாத்துக்கும் ஒரே மாதிரி செய்வாகளா…”
கூட்டத்தில் அமைதியாய் முனங்கியது இரு குரல்.
சிறிது நேரத்தில், தாய்மாமன் கொண்டு வந்த சீரையெல்லாம். உடம்பில் சுமந்து, தாய்மாமன் கரம்பிடித்து, குச்சைவிட்டு தங்கமாய் வெளியே வந்தாள் செல்வி.
அடுத்தடுத்து மாமன்மார் சேலை, செயின் கொடுத்தனர். கவனமாக ஓரத்தில் நின்றிருந்தவர், யார் – எவ்வளவு கொடுத்துள்ளனர் என்று கணக்கு நோட்டில் பதிவு செய்தார்.
சிலர், நேரடியாகவே மொய் நோட்டில் எழுதினர். பெண்கள் வரிசையாய் ஆசீர்வாதம் வழங்கி, போட்டோ எடுத்தனர். செல்வி, அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்கினாள்.
தாழ்வாரப் பந்தலில், விருந்து படு ஜோராக நடந்தது. ஆண்கள், பந்திக்கு முன்பாக, ராசு தோப்பில் ஒதுங்கினர். ஆளுக்கேற்ப, சரக்கு பாட்டில்கள் கொடுக்கப்பட்டன.
சாப்பிட்டு முடித்தவர்கள், வெற்றிலை பாக்குடன் அங்கொன்றும், இங்கொன்றுமாய் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர்.
“”ஏக்கா… நம்ம காலத்துல, 14 வயசுல வயசுக்கு வந்து, 15 வயசுல கல்யாண முடிச்சு, 16 வயசுல புள்ளய பெத்தோம்… கல்யாணம் முடிஞ்ச பெறகு, புருஷன் வீட்டுல சமைஞ்ச கதையெல்லாம் இருக்கு… இந்தக் காலத்துப் புள்ளைக, 10 வயசிலேயே வயசுக்கு வந்து… பாவம்க்கா, எத்தன நாளு கஷ்டப்படறது!”
“”அதாவதும்மா… இந்தக் காலத்துப் புள்ளைக நெறய, “டிவி’ பாக்குதுக… கண்டத படிக்குதுக… சாப்புடுதுக… கண்டத நெனச்சு படுத்து எந்திருச்சா இப்படித்தாம்மா…”
“”பொம்பளப் புள்ள, காலத்துக்கு முன்னாடி சமஞ்சாலும் கஷ்டம், கால காலத்துல சமையாமப் போனாலும் கஷ்டம்தான்,” பேச்சு தொடர்ந்து கொண்டேயிருந்தது.
ராசுவும் – ராசாத்தியும் சேர்ந்து வந்து, “”ஏப்பா… யாரும் சாப்புடாம போயிறாதீங்க. கொஞ்சம் முன்ன பின்ன இருந்து, சாப்புட்டு போயிருங்க,” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
சொந்த பந்தம் தவிர, துணி வெளுப்பவர், சவரம் செய்பவர், தோட்டக்காரன் குடும்பத்தோடு, கடைசிப் பந்தியில் உட்கார்ந்தனர்.
“”டேய் பசங்களா… பாத்திரத்துல சாப்பாடு எடுத்துட்டுப் போங்க… சங்கடப்படாதீங்க,” என்றார் ராசு.
“ஆகட்டுஞ் சாமி… நம்ம வீட்டுள எங்களுக்கு என்ன கூச்சம்’ என்றனர்.
ஊரின் எல்லையில் ஒரு வீடு மட்டும் தனித்திருந்தது. “ஒத்த வீடு’ என்று, ஊரில் பெயரே வைத்திருந்தனர். வீட்டைப் போலவே, அங்கிருந்த தாயும், மகளும் ஊராரோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தனர். இருவரும் விவசாய வேலைக்கு சேர்ந்தே செல்வர்.
ஊரில் நடக்கும் விசேஷங்களில், கட்டாயப் படுத்தினால் மட்டுமே கலந்து கொள்வர். எவருக்கும் இவர்களால், எந்தப் பிரச்னையும் இல்லை.
செல்வியின் விசேஷம் நடந்த நாளின், இரவில் ஒத்த வீட்டில், 15 வயதைத் தொட்ட சுமதி, அம்மாவிடம் கேட்டாள்…
“”ஏம்மா… செல்வி வீட்டுல என்னம்மா விசேஷம்?”
“”ஒண்ணுமில்லம்மா செல்விக்கு பொறந்த நாளாம்… ஊருல பெரிய வீட்டுக்காரக, அதனால, சொந்த பந்தமெல்லாம்… வந்துட்டுப் போறாக,” என்று அரைகுறையாய், சுமதியின் முகத்தைப் பார்க்காமலே சொல்லி முடித்தாள் வீரம்மாள்.
சுமதியும் கண்டு கொள்ளவில்லை.
“”விளக்கை அணைச்”டும்மா… படுப்போம்,” என்றாள் வீரம்மாள். “”ஆகட்டும்மா…” என்று சொல்லி விளக்கை அணைத்து, தாயும், மகளும் அருகருகே படுத்துக் கொண்டனர்.
நள்ளிரவு, 12 மணியிருக்கும் விம்மி விம்மி அழும் சப்தம் கேட்டது. சுமதி லேசாய் கண்விழித்துப் பார்த்தாள். பேய்… பிசாசாய் இருக்குமோ எனப் பயந்தாள். அழுகை நீடித்தது. படாரென்று எழுந்து, அம்மாவைப் பார்த்தாள். அழுது கொண்டிருந்தது அம்மா தான்.
பதறிப் போய், “”அம்மா… ஏம்மா…” என்றாள்.
சுமதியைப் பார்த்தவுடன், வீரம்மாள் பொறுக்க முடியாமல் கதறியழுதாள். சுமதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“”நான் பெத்த மகளே… சுமதி… நான் என்னத்த சொல்ல… எதச் சொல்ல… நேத்து செல்விக்கு…” என்றாள் வீரம்மாள்.
“”அம்மா… நேத்து செல்வி வயசுக்கு வந்துருச்சு, சொந்த பந்தமெல்லாம் சீர்கொணாந்துட்டுப் போனாக… அதானம்மா, எனக்குத் தெரியும்மா… நான் இன்னும் பெரிய பிள்ளையாகலன்னு வருத்தம் ஒரு பக்கம், மக சமஞ்சா, யாரு சீர்கொண்டு வருவாகன்னு ஒரு பக்கம் வருத்தப்பட்டு நீ அழுற… அழுகாதம்மா… நானு சமஞ்சு ரெண்டு வருடமாச்சு…” என்றாள் சுமதி.
“”என்னடி சொல்ற?” பதறினாள் வீரம்மாள்.
“”ஆமாம்மா… ஒன்னோட வேதன எனக்குத் தெரியும்மா… நானு ஆளானத சொல்லி, யாரையும் நீ கூப்பிட முடியாம, யாரும் நம்ம வீட்டுக்கு வராம… நீ படுற கஷ்டத்தைப் பாக்க எனக்கு விருப்பமில்லம்மா… அதனாலதான் ஒனக்கும் தெரியாம, ரெண்டு வருசத்த ஓட்டிட்டேன்,” என்ற மகளை கட்டியணைத்து கதறினாள் வீரம்மாள்.
“”ஆனாம்மா… நீ இன்னமும் இப்படியே இருக்கக் கூடாதும்மா… பங்கு பிரிச்சப்ப பெரியப்பா, சித்தப்பா கூட நடந்த சண்டையில அப்பா செத்துப் போச்சு. வாங்குன காச தரலேன்னு, மாமா கூட பிரச்னை. அப்பா செத்த பிறகு, நீ யார் கூடயும் பழகாம, தனியா ஒத்த வீட்டுல இருக்க. வேணாம்மா… சொந்த பந்தமின்னா சண்டை, சச்சரவு வரத்தாம்மா செய்யும்.
“”நீரடிச்சு நீரு விலகாதும்மா… வெலகி வெலகிப் போன ஊரு, உறவெல்லாம் நம்மளவிட்டு வெலகிப்போயிரும்மா… நீ நல்லா யோசிம்மா. எனக்காக நீ சிரமப்படவேணாம். ஒன்னோட மகமா நானு… எந்த தவறான வழியிலும், போயிற மாட்டேன். நீ தைரியமா இருக்கணும், நல்லாயிருக்கணும். அதுதாம்மா என்னோட ஆசை,” என்ற சுமதியின் வயதுக்கு மீறிய பேச்சைக் கேட்டு, என்ன செய்வதென்றறியாமல் திகைத்து, சுமதியை மடியில் தாங்கிக் கொண்டாள்.
இருவரும் நன்றாகவே தூங்கிப் போயினர்.
விடியற்காலை, வீரம்மாளின் கால்கள், தம்பியின் வீட்டை நோக்கிப் பயணமானது.

– எம்.பி. புதியவன் (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *