(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராஜாவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அவர் எங்கள் பெரியப்பா பிள்ளை. ராஜாவின் கல்யாணம் நிச்சயமானதில் குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். கல்யாணத்திற்கு அப்பா வருவார். ஸ்வீட்டுகள் வாங்கி வருவார் என்பதுதான் காரணம். ‘சுமி, சுமி,’ என்று என்னைக் கொஞ்சுவார்.
எங்கள் அப்பா கல்கத்தாவில் இருக்கிறார். ஒரு வருஷமாகவே அவர் அங்கே தனியாக ஓட்டலில் இருக்கிறார்.
இன்னும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ கல்கத்தாவில் இருந்துவிட்டுப் பிறகு சென்னைக்கே மாற்றிக்கொண்டு வந்து விடுவாராம். அதனால்தான் எங்களையெல்லாம் படிப்பு கெட்டுப் போகாமல் சென்னையிலேயே படிக்கட்டும் என்று பெரியப்பா வீட்டில் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். கல்யாணம் நிச்சயமானதுமே அவருக்குக் கடிதம் எழுதி விட்டாள்.
அவரிடமிருந்து உடனே பதில் வந்து விட்டது. அம்மா சாதாரணமாக அப்பாவிடமிருந்து வரும் கடிதங்களை யாருக்கும் காட்ட மாட்டாள். தானே படித்துப் பார்த்து விட்டுப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு விடுவாள். விஷயத்தை மாத்திரம் சொல்லுவாள். எனக்கு அது திருப்தியாக இருக்காது. கடிதம் நாலு பக்கம் இருக்கும். அம்மாவோ நாலே வாக்கியத்தில் விஷயத்தைச் சொல்லி விடுவாள். கடிதத்திலுள்ள விஷயம் பூராவையும் சொல்லவில்லை என்று எனக்குத் தோன்றும்.
அப்பா சில சமயங்களில் எனக்குக் கடிதம் எழுதுவார். அதை மட்டும் அம்மா என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு படிப்பாள். “நீ மாத்திரம் உனக்கு வர்ற லெட்டரைக் காட்ட மாட்டேங்கறியே. நானும் இந்த லெட்டரை உனக்குக் காட்ட மாட்டேன்,” என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். நான் நிஜமாகவே கோபத்தோடு தான் சொல்வேன். ஆனால் எல்லோரும் சிரிப்பார்கள்.
இந்தத் தடவை அதிசயமாக அம்மா அப்பாவின் கடிதத்திலிருந்து படித்துக் காட்டினாள். அப்பா எழுதியிருந்தார் – ‘ராஜாவுக்குக் கல்யாணம் நிச்சயமானது பற்றி ரொம்பச் சந் தோஷம். நான் கண்டிப்பாக வருகிறேன். இன்றைக்கே லீவுக்கு எழுதிப் போட்டுவிட்டேன்.’
பெரியப்பா பெண்களான கமலா, பாரதி இரண்டு பேரிடமிருந்தும் கடிதம் வந்துவிட்டன. தத்தம் கணவன்மாருடன் வருவதாக எழுதியிருந்தார்கள்.
கல்யாணத்திற்கு நாலு நாட்கள் இருக்கும்போது அப்பாவிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அம்மா அதை ஆவலோடு படிக்கும்போது நாங்களெல்லோரும் அவளைச் சுற்றிக் கொண்டோம். கடிதத்தை நான்கு வரிகள் படித்ததுமே அம்மா ‘ச்சு’ என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“அவர் வரவில்லையாம், அக்கா. லீவ் கிடைக்கலையாம்!” என்றாள்.
“என்னடி இது அநியாயம்! இப்படி ஒரு ஆபீஸ் உண்டா என்ன?” என்றாள் பெரியம்மா.
“அவன் அனாவசியமா ரெண்டு தடவை லீவ் எடுத்துட்டு வந்ததே தப்பு. இப்போ அவசியத்துக்கு லீவ் இல்லாமல் போய்விட்டது”, என்றார் பெரியப்பா.
“முடிஞ்சால் அடுத்த மாசம் வருகிறேன் என்று எழுதியிருக்கிறார்-” அம்மா.
“இப்ப இல்லாம அப்புறம் எப்ப வந்தா என்ன?” என்று கூறி விட்டுப் பெரியப்பா தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.
அம்மாவின் முகம் வாடிப் போய்விட்டது. நான், “வேற என்னம்மா எழுதியிருக்கார் அப்பா?” என்று கேட்டேன்.
“வேற ஒண்ணும் இல்லேடீ”, என்று வழக்கம்போலக் கூறி விட்டாள்.
எனக்கு என்னமோ அந்த லெட்டரில் வேறு சமாசாரம் ஏதோ இருக்கிறாப்போல தோன்றியது. இல்லா விட்டால் அம்மா ஏன் அவ்வளவு முகம் வாடிப் போக வேண்டும்?
அன்று ராத்திரி அம்மாவும் மற்றவர்களும் கல்யாணத்திற்கு அழைப்பதற்காகப் போயிருந்தார்கள். நான் கூடத்து அறையில் எதையோ எடுக்கப் போனவள் அம்மாவின் புடவை கீழே கிடப்பதையும், அதன் கீழிருந்து ஒரு லெட்டர் தலை நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். அதை எடுத்துப் பார்த்தேன். அப்பாவின் கடிதம்! அழைக்கப் போகிற அவசரத்தில் புடவை மாற்றிக் கொண்டவள், இடுப்பில் செருகிக் கொண்ட கடிதத்தை மறந்து விட்டிருக்கிறாள். வீட்டில் யாரும் இல்லை. பாலுவும் விச்சுவும் மாத்திரம் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஆவலிலும், பயத்திலும், படபட வென்று வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு கடிதத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். அப்பா எழுதியிருந்தார் –
அன்புள்ள கமலி,
என்னை மன்னித்து கொள். நான் கல்யாணத்திற்கு வருவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். லீவ் கிடைக்காது என்பதில்லை, லீவ் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார். கமலா பாரதி இரண்டு பேரும் அவரவர்கள் புருஷன்மாரோடு வருவதாக எழுதியிருக்கிறாய். அண்ணா வீட்டில் இருப்பதோ மூன்றே பெட்ரூம். அண்ணா எப்போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் பெட்ரூமை விட்டுக் கொடுக்க மாட்டார். பாக்கி இரண்டும் கமலாவும், பாரதியும் எடுத்துக் கொண்டு விடுவார்கள். நான் ஆறு மாதப் பிரிவுக்குப் பிறகு அங்கு வந்து இருக்கும் பத்து நாளில் நமக்கு ஒரு ரூம் இல்லா விட்டால் நாம் எங்கே படுப்பது? இங்கே கண் மறைவாக இருக்கும் போது எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி கொண்டு இருந்துவிடலாம். நேரில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட பிறகு, அதுவும் கல்யாணம் சம்பிரமத்தில் நீ புதுப் புடவையும் அலங்காரமுமாக வளைய வருவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இரவில் நெருங்க முடியாமல் இருப்பதைப் போல அவஸ்தை உண்டா? என்னால் தாங்க முடியாது. கல்யாணக் கலாட்டா வெல்லாம் முடியட்டும். கமலா, பாரதி ஊருக்குப் போயாகட்டும். பிறகு வருகிறேன். அதுவரை பொறுத்துக் கொள். உன் ஏமாற்றம், என் ஏமாற்றமும் தான்…உன் நினைவாகவே இருக்கும்,
பிரபு.
என்ன இது? இவ்வளவு பெரிய வீட்டிலே படுப்பதற்கு இடமில்லையென்பதற்காகவா அப்பா வரவில்லை? ரூம் இல்லாவிட்டால் என்ன? எவ்வளவு பெரிய கூடம் இருக்கிறது! வெராண்டா இருக்கிறது! அப்பா இப்படி எழுதியிருப்பதைச் சொல்லாமல் லீவ் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பதாக ஏன் சொன்னாள் அம்மா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
– 08-05-1975