ஐந்தாவது குளிர்காலம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 1,445 
 
 

வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்!

முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்… வெள்ளை வெளேர்ப் பனி.

இரைச்சல் நடுவே இருந்தவரெல்லாம் இதனை அமைதிச் சொர்க்கம் என்பார்கள்.

அழுக்குச் சாலைகளில் உழுதவர்கள், அப்பழுக்கற்ற பளிங்குப் பாதைகளே என வியப்பார்கள். மரங்களின் கொண்டை களில் வெள்ளை மல்லிக்கொத்துக்கள்… வெண்முத்துச் சாரங்கள். கொள்ளையழகு, கொள்ளையழகு!

இரண்டாவதும், மூன்றாவதும் குளிர்காலங்கள் வரும். அய்யகோ… அழகான ஊரே… எங்கேங்கும் வெள்ளைச் சேறே. குளிர் குறையும் முகூர்த்தம் எப்போ எப்போ என்ற தேடல். பழகிக் கொள்ள வேண்டும், பழகிக் கொள்ள வேண்டும். மெத்தைக்குள் அழுந்தி போர்த்திக் கிடப்பதுவே மிகவும் சுகமாயிருக்கும்.

குளிர்கால எண்ணிக்கை கூடக் கூட… வெளியே எட்டிப் பார்க்கும் ஆசைகூட விட்டுப் போகும். பளபளக்கும் பனி பேயாக பயமுறுத்தும். அமைதியை விழுங்கி தொண்டைக்குள் வைத்துக்கொண்டு அகல விழிப்பதாகத் தோன்றும்.

அசுத்தமில்லாத அழகெல்லாம் அர்த்தமில்லாது போகும்! குளுகுளு குளிர், குரல்வளையைக் கடித்துக் குதறும் கொள்ளி வாய்ப் பிசாசாக மாறும்.

வசந்தம் வரும், வசந்தம் வரும் என்ற ஒரேயொரு காத்திருப்பு மட்டும் மிச்சம் இருக்கும்.

இதுவோ ஐந்தாவது குளிர்காலம்!

சூரியாவின் கார் வீட்டின் ஓட்டுப் பாதைக்குள் நுழைவது தெரிகிறது. அரை மணி நேரப் பயணம், இரண்டரை மணி நேரத்தை விழுங்கியிருக்கிறது.

வெளியே பயங்கரமான பனிப் புயல்! இப்பொழுதே ஏன் வரவேண்டும்… தலை போகிற அவசரமென்ன, அவசியமென்ன? பிறகு வந்தாலென்ன?

இது போன்ற புயலில் வீட்டைவிட்டு வெளியே வருவது… அதனைவிட வாகனம் ஓட்டி வருவது உலக மகா மடத்தனம்! எப்படிப் புரியவைப்பது இவளுக்கு?

தொலைபேசியில் வாக்குவாதம் எல்லை மீறிப் போனதென்னவோ உண்மை. நேரில் பார்க்காமல் பேசினால் குட்டிச் சுவரிடம் வேதம் ஓதும் கதைதான் என்று கத்தி, தொலைபேசியை ஓங்கி அறைந்துவிட்டு உடனே கிளம்பி வந்துவிட்டாள். முகம் பார்த்துப் பேசினால் மட்டுமென்ன? செவிடனின் காதில் சாவுச் சங்கும் ஒன்று தான், வேத பாடமும் ஒன்றுதான்!

இவளது பிடிவாதம் அளவுமீறிப் போகின்றது. இன்று ஒரு முடிவெடுத்தாக வேண்டும்.

வரட்டும். நிஜத்தின் நிதர்சனங்களை யெல்லாம் இவளுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

“வா….”

சூர்யா பதிலேதும் பேசவில்லை. குளிரிலும் சூரியனாய்க் கொதித்துக் கொண்டிருந்தன அந்த கண்கள். வெப்பத்துக்கான மேலங்கி, பனிக் காலணி, கையுறை எல்லாவற்றையும் கழற்றி விட்டெறிந்தாள்.

நிலைமையறிந்த நித்யா, அவளே பேசத் துவங்கட்டும் என்று நிசப்தமாய் இருந்தாள்.

பனிப்பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்த சூர்யா, பழக்கூடை காலியாய் இருப்பதைக் கண்டு மற்றுமொரு கதிர் வீச்சைப் பாய்ச்சினாள்.

பிறகு, கண்ணில் தென்பட்ட பிஸ்கெட்டு ஜாடியை எடுத்துக்கொண்டு, கதகதப்பான கணப்பின் அருகே சென்று தரைவிரிப்பின் மீதமர்ந்தாள்.

“காபி போட்டுத்தரவா?”

“ம்ம்…”

கோப்பையைத் தந்துவிட்டு சூர்யாவின் தலையைக் கோதினாள் நித்யா.

வேகமாக கையைத் தட்டிவிட்டவள், “இன்னைக்கு ஒரு முடிவெடுக்காம நான் போகப்போறதில்ல தெரிஞ்சுக்கோ” என்றாள்.

“சரி முடிவெடுப்போம், காபியைக் குடி. நிதானமா நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேளு.”

“ஆமாம்… நான் சொல்வது மட்டும் உன் காதுக்குள், உன் மனதுக்குள் இறங்குவதே இல்லை. ஆனா நான் மட்டும் உன் பழைய புராணத்தைப் பத்தாயிரம் முறை கேட்டாகணும். இல்ல?”

பதிலேதும் வராமல் நிசப்தம் நிலவியதால், சற்றே இறுக்கம் தளர்ந்த சூர்யா, திரும்பி தன் தோழியைப் பார்த்தாள்.

எதிர்பார்த்தது போலவே மடக்கிய முழங்கால்களுக்கிடையே முகம் புதைத்து, கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் நித்யா. தான் உயிராக நேசிக்கும் நெருங்கிய தோழி இப்படி அழுகைக்குள்ளேயே ஆயுளைக் கரைப்பதில் சூரியாவுக்கு விருப்பமில்லை.

அழட்டும், அழுது முடிக்கட்டும். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இன்றோடு இந்த அழுகை ஓய வேண்டும் என்று எண்ணியபடி பழைய நினைவுகளில் சுவரோரம் சாய்ந்தாள்.

அது முதல் குளிர்காலம்…

சிணுங்கிய தொலைபேசியை எடுத்த ராம் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான்.

“சூ… நம்ம சீனியராகிட்டொம்டீ! இந்தியாவிலிருந்து ஈஷ்வர் பேசினான். தடியனுக்கு கல்யாணமாம்! திடீர்னு முடிவாகி போச்சுடா. ஆறாம் தேதி வருகிறோம், மரியாதையா விமான நிலையத்துக்கு வந்து அழைத்துப் போன்னு சொன்னான்”

சரியான சமயத்தில்தான் புதுப் பொண்டாட்டியோடு வர்றான் படுவாப் பய!

“சூ… செல்லம்… நினைவிருக்கா, நமக்கும் இதுதான் முதல் குளிர்காலம்.”

“ஆக சிகாகோவில் இரண்டு தேன் நிலவுகள், புதுஜோடிகள்.. ஹோய்யா!”

“அய்யே… ஆசைய பாரு! அன்புள்ள மிஸ்டர் ராம், தங்களின் மேன்மையான தகவலுக்கு…ஈஷ்வர் இப்பதான் கல்யாணம் முடிச்சி வர்றார். நமக்கு கல்யாணமாகி எட்டு மாசமாயாச்சு!”

“இருந்தா என்ன சூர்யா குட்டி… இது முதல் குளிர்காலம். இது முதல் குளிர்காலம்!”

உள்ளங்கைகளில் பளபளக்கும் மருதாணி, கண்களில் மின்னும் வெட்கம். புதிய நாடு, விளங்காத மிரட்சி. கணவனின் கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு சிறு குழந்தையைப் போல அவனோடு ஒட்டிக் கொண்டு… ஒடிசலான தேகத்துடன், ஓவியம் போன்ற முகத்துடனும் முதன் முதலில் நித்யாவைப் பார்த்த சூர்யா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனாள்.

ஈஷ்வர், தனது நண்பனையும், அவனது புது மனைவியையும் நித்யாவுக்கு அறிமுகப்படுத்தினான். தனது புதிய தோழியை ஆரத்தழுவினாள் சூர்யா. வீடு வந்ததும், இருவருக்கும் கரைத்து வைத்திருந்த ஆலத்தைச் சுற்றி, வரவேற்றாள்.

“டேய், டயர்டா இருப்பீங்க. மேசை மேல சாப்பாடு இருக்கு. சாப்பிட்டுக் களைப் பாறுங்க. நாளைக்குப் பாப்போம். உன் காரை சாயங்காலம் ஸ்டார்ட் பண்ணினேன். ஆனா, அதுக்காக வெளியே கிளம்பிடாதே. நித்யா, ·பிர்ட்ஜுல, பால், தயிர், பழங்கள், முட்டை, ப்ரெட் எல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். ஏதேனும் வேணுமின்னா ·போன் பண்ணுங்க” என்று கூறிவிட்டு, நண்பனின் கையைக் குலுக்கினான் ராம்.

“எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு சமையல் பண்ணி வெச்சிருக்கேன். திட்டாமச் சாப்பிடுங்க” என்று கண் சிமிட்டி, சிரித்தபடியே விடைபெற்றாள் சூர்யா.

முதல் வருடம் ஓடியதே தெரியவில்லை.

சூர்யா-ராம், நித்யா-ஈஷ்வர் இரு புது ஜோடிகளும் காதல் புறாக்களாய்ச் சுற்றி வந்தனர்.

மெல்ல காரோட்டப் பழகி, ஒருவருக்கொருவர் சமையல் கற்றுக்கொடுத்து இரண்டு தோழிகளும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். சூர்யா எம்.சி.ஏ படித்திருந்ததால் அவளுக்கு உடனே வேலை கிடைத்தது. தோழியுடன் ஊர் சுற்ற முடியவில்லையே என்றாலும், நித்யாவுக்கு அவளை எண்ணிப் பெருமையாக இருந்தது. டெண்டல் சர்ஜரி படித்திருந்த நித்யா, படிப்பைத் தொடருவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த குளிர்காலத்தில் சூர்யா, ராம் தம்பதியருக்கு வருண் பிறந்தான். தனக்கு இரண்டு பெற்றோர்களோ என்று குழந்தை சந்தோஷிக்கும் வண்ணம் நித்யாவும், ஈஷ்வரும் கூட வருண் மீது அன்பைப் பொழிந்தனர்.

நாட்கள் உருண்டோடின.

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நால்வரும் வருணை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஏரிக்கு கிளம்பினார்கள்.

‘ம்மா, ம்மா’ என்று வருண் நித்யாவிடம் தாவ, “சரி நீங்க கிளம்புங்க, நாங்க பின்னாடி வர்றோம்…”

இவைதான் நித்யா ஈஷ்வரிடம் பேசிய கடைசீ வார்த்தைகள்!

பிறகு நடந்ததெல்லாம் கனவு போலிருந்தது.

சூர்யா… எங்கோ யாருக்கோ இப்படி ஆயிடுச்சாம், பாவமேன்னு பேசிக்குவோமே, சில நிமிடங்கள் உச்சுகொட்டி நிறுத்திடுவோமே. இப்ப தெரியுதுப்பா… கரிசனம் காட்டுவது சுலபம், தலைமேல் இடி தாங்குவதுதான் கொடுமை.

ஈஷ்வரின் மறைவுக்குப் பிறகு, நித்யாவுக்கு அவனது கம்பெனியில் வேலை கிடைத்ததும், வருண் மட்டுமே உலகம் என்று அவள் நாட்கள் நகர்ந்ததும்…

குளிர்காலங்கள் வருவதும் போவதுமாய் இருந்தது.

காபி குடித்த கோப்பைகளை எடுத்து ஸிங்க்கில் போட்டுவிட்டு அழுது முடித்திருந்த தோழியின் அருகே வந்தாள் சூர்யா.

“சரி, என்ன முடிவெடுத்திருக்கே?”

கண்கள் காய்ந்திருந்தன…

“சூர்யா. நானும் ஈஷ்வரும் வாழ்ந்த வாழ்க்கையை, உன்னைவிட அருகே இருந்து பார்த்தவங்க யாருமில்லை. ஒத்துக்கறியா?”

“ம்…”

“இப்ப நீயே, குழப்பமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசறது எந்த விதத்துல நியாயம்? யோசிச்சுப் பாரு.”

“அதெல்லாம் சரி. நீங்க சந்தோஷமாத்தான் இருந்தீங்க. இப்போ தனியா இருக்கியே.
இன்னும் எத்தனை காலம், உனக்குச் சின்ன வயசு நித்யா..

“நீ இப்படிக் கண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை ஈஷ்வர் மட்டும் விரும்புவாரா?”

“அதையேதான் நானும் சொல்றேன்.. வயசான காலத்துல தடுமாறும்பொழுது கஷ்டமா இருக்கலாம். இப்ப எனக்கு என்ன குறை, வேலை இருக்கு, நீ இருக்கே, வருண் இருக்கான்.”

சூர்யா ஏதும் பேசவில்லை, அவளது மெளனம் ஏதோ போலிருந்தது. “நாங்க இருக்கறதாலதான் நீ அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டேன் என்றால் எங்கேயாவது போயிடறோம். அப்பவாவது ஒரு நல்ல முடிவெடுப்ப.”

தோழியின் வெடுக்கென்ற பேச்சில், ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள் நித்யா. ஆனாலும், விவேகத்தோடு பதில் சொன்னாள்.

“சூ.. நீயும், ராமும் எனக்காகத்தான் எத்தனையோ பதவி உயர்வுகளையெல்லாம் உதறிட்டு இங்கேயே இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் பரவாயில்லை, நீங்க உங்க வாழ்க்கை மேம்பாட்டை ஏன் தடுத்துக்கறீங்கன்னு நானே சொல்லியிருக்கேன்.

வருண் பக்கத்தில இல்லேன்னா என் வாழ்க்கையில அர்த்தம் ஏதுமிருக்காதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஈஷ்வரை இழந்தபோது வருண் வாழ்க்கையானான். வருண் தூரமானால் வேறு வழி கிடைக்கும்!”

இருக்கையில் இருந்து எழுந்தாள்.

“இப்ப யாருக்கு ·போன் பண்ற?”

“தீபக்குக்கு.”

“ஏன், இந்த நேரத்துல எதுக்கு அவரைத் தொந்தரவு பண்ற?”

“அது சரி, அவர் உன்கிட்ட அடிக்கடி பேசறதாலதானே என்னை இந்த பாடு படுத்தற. அதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.”

“நித்யா சொன்னாக் கேளு, இப்ப வேணாம்.”

“இல்ல. நீ சொன்னா மாதிரி இதுக்கொரு முடிவு கட்டணும் இன்னைக்கு.”

“நித்யா, அவர் ஊர்ல இல்ல.”

“இல்லையா. மத்தியானம் பார்த்தேனே.”

“ஆமாம். ஆனா, படுக்கையா இருந்த அவங்க அம்மாவுக்கு ரொம்ப முடியலையாம் ·போன் வந்தது. நான்தான் ஆறு மணிக்கு ஏர்போர்ட்டில் விட்டு வந்தேன். போகும் போது ‘சூர்யா, எங்க அம்மா, வீட்டோட இருக்கிற அத்தை பெண்ணை கையில புடிச்சுக் கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. முடியாதுன்னு கண்டிப்பா மறுத்துடுவேன். உங்க தோழிகிட்ட சொல்லுங்க’ன்னார்.”

“ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்காரு சூர்யா. எனக்குதான் இதில் விருப்பம் இல்லேன்னு சொல்லிட்டேனே.”

“அது சரி, உனக்கு வாழ ஆசை இல்லாம இல்ல. சும்மா, சமூகம், பழைய பஞ்சாங்கம்னு உன்னை நீயே ஏமாத்திக்கறே. ஈஷ்வர் நல்லவர்தான், நீங்க சந்தோசமாத்தான் இருந்தீங்க. ஆனா, இப்போ உண்மை நிலைக்கு வா நித்யா. கடந்த காலத்திலேயே இருக்க முடியாது. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கை. மறைந்துவிட்ட ஈஷ்வரையே நினைச்சிகிட்டு, நீயும் கஷ்டப்பட்டு, உன் மேல உயிரா இருக்கற தீபக்கையும் கஷ்டப்படுத்தறது எந்த விதத்துல நியாயம். பொறுமையா உட்கார்ந்து யோசிச்சுப் பார் நித்யா. அவருக்கு வாழ்க்கை கொடு.”

“சரி, நீ இப்ப கிளம்பு சூர்யா. குழந்தை தேடுவான். தீபக் ஊரிலிருந்து திரும்பட்டும். பேசி முடிவெடுப்போம்.”

“என்ன பேசப் போற. மறுபடியும் முடியாதுன்னு சொல்லப் போறியா?”

“இல்லை… பார்க்கலாம். யோசிச்சு முடிவெடுப்போம்.”

பரவாயில்லையே, இம்முறை வந்த “இல்லை” என்ற பதில் வித்தியாசப்படுகிறதே, என்று சந்தோஷித்தாள் சூர்யா.

நிச்சயமாக யோசிப்பாள், நல்ல முடிவே எடுப்பாள்.

எங்கும் பரவிக் கிடந்த வெள்ளைப் பனி, வானத்து ஒளியை உள்வாங்கி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

வரும்.. வசந்தம் வரும், சீக்கிரம் வசந்தம் வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நடை போட்டாள் சூர்யா.

– மார்ச் 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *