(ஏ)மாற்ற சொன்னது நானா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 8,169 
 

முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க? எல்லாம் இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கிறதுக்கு முன்னதான். முன்ஜென்மத்து வினை தொடரும்னு அனுபவிச்சவங்க சொன்னா கேக்கணும். என்ன அனுபவம்னு பொத்தாம்பொதுவா கேட்டா நான் எதைன்னு சொல்றது? ஒண்ணா ரெண்டா இருக்கு சொல்றதுக்கு. இருந்தாலும் நீங்க கேட்ட மரியாதைக்கு லேட்டஸ்ட்டா நடந்த ஒன்றை சொல்றேன். எல்லாம் என் கணவர்னு எங்க வீட்ல ஒரு ஜீவன் இருக்குதே, அதனால வர்றதுதாங்க.

“குடிப்பாரா…? சண்டை போடுவாரா…? அடிப்பாரா…?”

இதுதான் வாழ்வின் பெரிய பிரச்சினைன்னு நீங்க நினைச்சீங்கன்னா தப்புங்க. அதையுந்தாண்டி உலகில் கொடுமைல்லாம் இருக்கு. சொல்றேன் கேளுங்க!

சிலபல காரணங்களால நாங்க வீடு மாற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சி. எங்கிருந்து எங்கே போனோம்ங்கிறதெல்லாம் நான் சொல்லப்போற செய்திக்கு கொஞ்சமும் கைகொடுக்காதுங்குறதால சுற்றி வளைக்காம நேரா விஷயத்துக்கு வர்றேன்.

முன்பிருந்த வீட்லயிருந்த பழைய பொருட்களையெல்லாம் கைகழுவிட்டுத்தான் வந்தோம். நல்லநிலையிலிருந்த டீபாயை மட்டும் வேணாம்னு விட யாருக்கும் மனசு வரல. நல்லா உழைத்த டீபாய் அது. இத்தனைக்கும் நாங்க காசுபோட்டு வாங்கியதுகூடக் கிடையாது. அப்போது நாங்க வைத்திருந்த டீபாய் சற்று மோசமான நிலையில்தான் இருந்தது. அந்தசமயம் எங்கண்ணன் வீட்லயிருந்த நல்ல மரத்திலான டீபாய், சற்று பெரிதாக இருந்ததால அது இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்ற அண்ணனுக்கு உடனே எங்க வீட்டு டீபாயின் நினைவு வர, அது எங்கள் வசமானது. அது எங்க வீட்டு கூடத்துக்கே ஒரு கம்பீரத்தைக் கொடுத்தவண்ணம் வீற்றிருக்கும். பிள்ளைங்க படிக்க வசதியாகவும், பெரும்பாலும் அதுதான் எங்களோட உணவுமேசையாகவும்கூட இருக்கும். முக்கியமா வீட்டுக்கு யாராவது வர்றேன்னு தகவல் தந்தா போதும். வீட்ல இருக்க அவலங்களை எல்லாம் எவ்விதத் தயக்கமும் காட்டாமல் தன்னுள் அடைத்துக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலா எங்கண்ணன் கொண்டுவந்தது என்பதால் அதன்மேல் எனக்கு தனிப்பட்ட கவனம் வேற இருந்தது. சரி, கதையின் மூலகர்த்தாவை அறிமுகப்படுத்தியாச்சி.

இப்படி பல அருமைபெருமை நிறைந்த அந்த டீப்பாய் எங்கள் புது வீட்டிற்கும் வந்தது. என்ன ஒரு பிரச்சினைன்னா, நாங்க புதிதாக வாங்கிய சோபாவின் நிறமோ கறுப்பு. டீபாயோ நல்ல மரநிறம். அதனால ஒன்றுக்கொன்று மேட்ச் ஆகாமல் தனித்து நின்றது (பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வைத்த மாதிரி).

“பேசாம டீபாய்க்கு கறுப்புக்கலர் அடிச்சிடுங்க” யோசனை சொன்னேன்.

கேட்பாரா என்னவர்? கேட்டுவிட்டால் அப்புறம் குடும்பத்தில் அமைதியல்லவா நிலவிவிடும்?

“முழுவதும் கறுப்பாக அடிக்காமல், மேடுபள்ளமாகத் தெரியும்படி வேறுமாதிரி செய்கிறேன்” என்றார்.

நான் மறுப்பேதும் சொல்லவில்லை. அதுக்கும் காரணம் இருக்கு. பெயிண்டிங் பண்றதுல அசாத்தியமான திறமைசாலிங்க அவரு. என்ன நீங்க? அப்படில்லாம் நம்பாம பார்க்ககூடாது. நான் சொல்வதெல்லாம் நூறுசதவீத உண்மைதாங்க. கல்லை கல்லாகவும், மண்ணைமண்ணாகவும் வரைவதில் கைதேர்ந்தவராக்கும் என்னவர். பூ வரைந்தாரென்றால், கமலஹாசனின் நாயகி வரைந்த ஓவியத்தில் வாசம் புறப்படுமோ என்னவோ தெரியாது, என்னவரின் ஓவியத்தில் தேனே வரும்னா பார்த்துக்கோங்களேன் (கொஞ்ச ஓவரா பேசிட்டமோ!). சரி கதைக்கு வர்றேன்.

ஏதோ புதுமையா பண்றேன்னு சொல்றாரே அதையுந்தான் பார்ப்போமேன்னு சம்மதிச்சேன். அந்த நேரத்துல என் நாக்குல சனி, ஞாயிறு, திங்கள்…லாம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். வாரயிறுதி உல்லாசம் கொண்டாட்டத்தைக் கேட்டபடி சமையலை முடிச்சிட்டு வெளியே போய் பார்த்து நொந்து போய்ட்டேங்க.

“என்ன இப்படி பண்ணிட்டீங்க?”

“ஏன் நல்லாயில்லையா?”

“அதை என் வாயால வேற சொல்லணுமா?”

இருந்தும் என் வார்த்தையை அவர் நம்பவில்லை. வீடு திரும்பிய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அதைக்கண்டு தங்கள் அதிருப்தியைக் காட்ட, “சரி, சரி… மாற்றி விடுகிறேன்” என்றார். அவ்ளோ சீக்கிரத்துல அந்தப் பிரச்சினைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தது என்னவோ, காபி ரொம்ப சூடாயிருப்பது தெரியாம குடிச்சிட்டா நாக்குல நெருடலாயிருக்குமே அது மாதிரி என்னுள் ஓர் உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது.

எப்படியோ மாற்றினால் சரியென்று, அதுவரை அந்தக்கொடுமையைக் காணவேண்டாமென்று நினைத்து ஒரு மேசைவிரிப்பை அதன்மேல் போட்டு வைக்க அந்த வாரம் இனிதே நிறைவடைந்தது. வழக்கம் போல வாரயிறுதி தன் கடமையை செய்யக் கண்விழித்தது. வழக்கமா வாரயிருதிகள்ல அவர் பெரும்பாலும் கணினியைவிட்டு எழுந்திருப்பதேக் கிடையாது. அப்படி என்னதான் செய்வாருன்னா கேட்கறீங்க? முதல்ல யாஹூ நியுஸ் அப்புறம் தினமணி, தினத்தந்தி, தினமலர்னு ஆரம்பிச்சி எத்தனை தின செய்தித்தாள் இருக்கோ அத்தனையும் படிப்பாரு. ஒரே செய்தியைத்தான் சற்றே மாறுதலுடன் எல்லா செய்தித்தாளும் வெளியிட்டிருக்கும் என்பது வேற விஷயம். இருந்தாலும் எல்லாத்தையும் மேய்ஞ்சுட்டு சாரி படிச்சிட்டு, பேஸ்புக் பக்கம் போவாரு. அப்புறம் ஆன்மீகம் பற்றிய விஷயங்களை ரொம்ப ஆர்வமா பார்த்துகிட்டிருப்பார். கொஞ்ச நேரத்துல அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு தாவியிருப்பார். அப்புறம் பார்த்தா அரசியல் பக்கமா சுற்றிக்கொண்டிருப்பார். இதுல கொடுமை என்னன்னா ஹெட்போனை மாட்டிக்கிட்டு, உரத்த குரல்ல பாட்டுப் பாடிவேற குடும்ப அமைதிக்கு பங்கம் விளைவிப்பார் (அதுவரை ஹால்ல இருந்த பிள்ளைகள் ரூமை நாடியிருப்பார்கள்). இப்படியாகப் போகும் வாரயிறுதியானது, டீபாயினால் மாற்றமடைந்தது.

அலாரம் அடிக்காத அற்புதமான காலை. சிறு தூறலுடன் சிலுசிலுவென்று அடித்த காற்று வேறு உறக்க கீதத்திற்கு சுதி சேர்க்க, கண்களைத் திறக்க மனமின்றி இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தேன் மணி ஒன்பதிற்கு மேலாகியும். ‘வரட்…வரட்…’ வெளியிலிருந்து வந்த சத்தம் நாராசமாய் ஒலித்தது. ‘காலங் கார்த்தால ஏழரைய கூட்டிட்டாரோ’ எனும் சந்தேகத்துடன்தான் வெளியே வந்தேன். என் சந்தேகம் ஊர்ஜிதமானது. டீபாயைத்தான் சுரண்டிக்கொண்டிருந்தார். நித்திராதேவியின் சாப பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். நல்ல க்ளைமேட்டை அனுபவிக்க முடியாதது வெறுப்பை ஏற்படுத்தியபோதும் டீபாய் ஒழுங்கானா போதும்ங்கிற நிம்மதியும் ஏற்பட்டது.

தொலைக்காட்சியில் வர்தா புயல் ஆடியக்கோரத்தாண்டவத்தை செய்தியாளினி வாசிக்கப் பார்த்துவிட்டு, கிளம்பினார். முதல் வேலையா கடைக்குப்போய் இரண்டு கறுப்புக்கலர் ஸ்பிரேபெயிண்ட் வாங்கிவந்து, டீபாயை கறுப்பு நிறத்தில் மாற்றினார். டீபாயின் தோற்றம் மாறி கனகச்சிதமா சோபாவுக்கு ஏற்றபடியாகவும் ஹாலுக்கு கம்பீரமாகவும் பழையபடி நின்றது. பிள்ளைகளும் மனதார ஏற்றுக்கொள்ள அந்த சனி இனிதே போனது, இன்னும் ஞாயிறு பாக்கியிருக்கிறதே அது சும்மா விடுமா என்ன…?

“ஒரே கறுப்பா இருக்கிறதால அதுயென்னவோ கறுங்குரங்கு மாதிரியிருக்கு, நான் கொஞ்சம் மாற்றவா?”

‘மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா…’ அதுவரை பஞ்சுமிட்டாயைப் போல இருந்த மனது பார் சாக்லேட்டைப்போல இறுகியது.

‘ஜென்மவினை தன் லீலையை ஆரம்பித்துவிட்டதே’

“நான் கேட்கிறேன், நீ பதிலே சொல்லாம முழிக்கிறே?”

“இல்லையில்லை, வேணாம், இதுதான் ரொம்ப நல்லாயிருக்கு, அந்த ஐநூறு, ஆயிரம் ரூபா நோட்டு விவகாரம் என்னாச்சின்னு நியூசைப் பாருங்க” படபடவென சொல்லிமுடித்தேன்.

கேட்டுவிடுவாரா என்ன அவர்? அப்படிக் கேட்டதா சரித்திரமோ பூகோளமோ இதுவரை இல்லையே..!

விதி வலியது, அதை என்னால் தகர்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டேன்.

வீட்டிலிருந்த எல்லா வண்ண பாட்டிலிலிருந்தும் கொஞ்ச கொஞ்சம் எடுத்து டீபாயின் மீது ஊறுகாயை வைப்பதுபோல வைத்தார்.

நல்லாயிருப்பதை இப்படி நாசமாக்குகிறாரே எனும் வெறுப்பில், அதைக் காண சகிக்க முடியாமல் நான் போய் தூங்கிவிட்டேன். எழுந்து வந்து பார்த்தால்…

என்னன்னு நான் சொல்றது…

என்னைப் பார்த்து விதி கைகொட்டி சிரித்தது. என் கண்ல இருந்து ரத்தக்கண்ணீரே வந்து விடும் போலிருந்தது.

இந்த பிள்ளைங்க தரையில ஆய் போய்ட்டா சரியா துடைத்தும் துடைக்காம அரைகுறையா இருக்கிறப்ப இருக்குமே, அதுபோல அந்த டீபாய் இருந்தது. (நாத்தம்லாம் வரலைங்க, நீங்க வேற, நேரங்காலந்தெரியாம முன்ன சொன்னத மனசுல வைச்சுக்கிட்டு கேள்வி கேட்க வந்துட்டீங்க…)

“தயவுசெய்து மேல இருக்கிறதை மட்டும் அப்படியே துடைச்சிட்டு முழுசும் கறுப்பா இருக்கிறமாதிரி வச்சுடுங்க”, அவ்ளோ பொறுமை எனக்கு எப்படித்தான் வந்ததோ தெரியலை.

“ஏன் நல்லால்லையா?”

“எப்படி இப்படியொரு கேள்வியக் கேக்குறீங்க?”

தீய்ந்துபோன தோசையைப்போல இருந்த என் வதனத்தைக் கண்டவர் என்னிடம் மறுபேச்சை வைத்துக்கொள்ளவில்லை. சென்னையை புரட்டிப்போட்ட வர்தா எங்க வீட்டுக்கும் வரக்கூடாது எனும் எண்ணம் அவருக்கு மட்டும் இருக்காதா என்ன?

வீட்டில் என்ன நடந்துகொண்டுள்ளது என்பதுகூட அறியாமல் தேர்வுக்காக மிகத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்த மூத்தமகளை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து டீபாயை காட்டி அபிப்ராயம் கேட்டார். எப்போதுமே அதிக வார்த்தைகளை விரயமாக்க விரும்பாத மகளிடமிருந்து, “கறுப்பாகவே மாத்திடுங்க” என்ற பதில் வரவும் நொந்துபோனார்.

விடுமுறையை தோழியருடன் ஷாப்பிங் என்ற பெயரில் கழித்துவிட்டு வந்த இளைய மகளோ டீபாயைக் கண்டு ஒருநிமிடம் திறந்த கதவை மூட மறந்து, “இவ்ளோ மோசமா பண்ணிட்டீங்களே? அது நல்லாத்தானே இருந்தது? எவ்ளோ பெய்ண்ட் வேஸ்ட் பண்ணியிருக்கீங்க?” என்று மைக்ரோவேவ்அவனில் வைக்கப்பட்ட பாப்கார்னாய் பொரிந்தாள். (தன்னுடைய ஓவியத் திறமைக்கான வாரிசாக அந்த பிள்ளையைத்தான் மேடையின்றி மைக்கின்றி அவர் அறிவித்திருந்தார்).

நான்தான் அவளை நகர்த்திவிட்டுக் கதவை மூடினேன். ஏதோ கலவரம்னு பக்கத்துவீட்டுக்காரங்க நினைச்சுடக் கூடாதுல்ல.

“இதுவும் நல்லாத்தானே இருக்கு”

“இதுவா…!!”

‘ஏம்மா… இப்படி…’ என்றபடி என்னை நோக்கினாள். நான் பதிலேதும் சொல்லவில்லை. என்மனம் இன்னும் சற்று நேரத்தில் காற்பந்து விளையாடிவிட்டுத் திரும்பி வரும் மகன் என்ன சொல்வானோ என்று வேறு கலக்கத்தில் இருந்தது.

“அதைக் கறுப்பாவே மாத்திடுங்க” தீர்மானமாகச் சொல்லி சென்றாள் இளையவள்.

தனக்கு டெப்பாசிட் கூட மிஞ்சாது போலிருக்கே என்ற எரிச்சலில் என்னவர் மீண்டும் அந்த வண்ணங்களை வைத்து அந்த டீபாயை மாற்றும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தனானார்.

‘டிங்…டாங்…’ கதவுமணி எனக்கு எச்சரிக்கை மணியாகக் கேட்டது.

“என்ன இது…?” மகன் பேரதிர்சிக்குள்ளானான்.

“….”

“இது சுத்தமா நல்லாவேயில்லை”

“…”

“கறுப்பு நல்லாதானே இருந்தது… ஏன் மாற்றினீங்க?”

சுடுதண்ணில போட்டக் கோழிமாதிரி துடித்தான்.

பொரித்தெடுத்த மிளகாய் பஜ்ஜி போல சிலிர்த்துக்கொண்டு அவர் இருக்கவும்,

“உங்களுக்குப் பிடிக்கலைதானே?” என்னிடம் கேட்டான்.

ஆமாம் என என் பதிலைசொல்லி எரிகிற தீயில் எண்ணையை வேற வார்க்க வேண்டுமா எனும் நல்லெண்ணத்தில்,

“நல்லாதானிருக்கு” கோபமான எண்ணையையும் அமைதியான சுவையையும் உள்ளடக்கிய வெங்காய பஜ்ஜியாய் பதிலளித்தேன். (ஏன் திடீர்னு பஜ்ஜி வந்ததுன்னு கேக்குறீங்களா? யாரும் கதை காரசாரமா இல்லைன்னு நாக்குமேல பல்லு போட்டோ அல்லது பல்லுமேல நாக்கு போட்டோ பேசிடக்கூடாதுல்ல…ஹி…ஹி…).

“அந்த டேபிள் கிளாத்தை இன்னும் தூக்கிப் போடலைதானே?” என்றான் ரகசியமாக.

மகனது கேள்வி என் இறுக்கத்தைத் தளர்த்தியது.

அவர் மறுபடியும் எல்லா கலரையும் வைத்து அகாஜுகா வேலைல்லாம் செய்ய ஆரம்பித்தார். மஞ்சள் வண்ணம் மட்டுப்படுத்தப்பட்டு (காரணந்தான் உங்களுக்கேத் தெரியுமே) மற்ற வண்ணங்கள் தலைதூக்கின. “இதனோட அருமை உங்களுக்கெல்லாம் எங்கே தெரியப் போகிறது?”

நானும் எவ்வளவோ முயற்சித்தும் அப்படி எதுவும் என் கண்ணுக்குப் படவேயில்லைங்க.

‘ம்…எந்த ஜென்மத்து வினையோ…!!’

பின்குறிப்பு: அந்த பிரசித்தி பெற்ற டீபாய் எங்கே என்று கேட்கும் சில ஆர்வக்கோளாறுகாரர்களுக்கு மட்டும், கொஞ்சம் கிட்ட வாங்களேன். “எங்க வீட்டு ஸ்டோர் ரூமுக்கு நீங்க இன்னும் வந்ததில்லையே?”.

– சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் 1/1/17 அன்று பிரசுரமான சிறுகதை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *