ஏன் பெண்ணென்று…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 2,107 
 
 

அதிகாரம்-1 | அதிகாரம்-2 | அதிகாரம்-3

காலை பத்து மணி இருக்கும். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்து, அம்பாள் கோவிலைவிட்டு அவர்கள் புறப்பட்ட சற்று நேரத்தில் சாரதா விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். அம்பாளை நோக்கியபடி கைகளைக் கூப்பியவாறே மண்டபத்திற்குள் இருந்து கொண்டாள். சற்றுத்தூரத்தில் நாக்கைத் தொங்கப்போட்டபடி, மணலிற்குள் குந்தி இருந்து சாரதாவைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் வீட்டு நாய்.

சாரதாவினால் பிரச்சினை வரலாம் என நினைத்து, தந்தையார் சுந்தரம் அவளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். அம்மா எப்போதோ இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கோவிலில் திருமண வைபவம் எல்லாம் முடிந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்ட சுந்தரம் கதவைத் திறக்க, உள்ளேயிருந்து பாய்ந்து வெளியே வந்த சாரதா, அவரைத் தள்ளி விழுத்திவிட்டு ஓடிக் கோவிலுக்கு வந்திருந்தாள்.

கோவிலில் ஒருவருடனும் கதைக்கவில்லை. எவரது கேள்விக்கும் பதில் பேசவில்லை. மனதை ஒருமுகப்படுத்தி அம்பாள் மீது குவிய வைத்தாள்.

சாரதா சந்திரமோகனுக்குச் சாபம் போடுகின்றாள் என்று பலரும் நினைத்தனர். சாரதா கோவிலில் இருக்கின்றாள் எனக் கேள்விப்பட்டு, மதியம் அவளைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார் சுந்தரம். அவள் அவரின் பேச்சை செவிமடுக்கவில்லை.

இப்படியே போனால் சாரதாவுக்கு விசராக்கிவிடும் என்று பலரும் சுந்தரத்திற்கு அறிவுரை சொன்னார்கள். எப்படியாவது சாரதாவிற்கு ஒரு திருமணத்தைச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊரில் அலைந்து திரிந்தார் சுந்தரம்.

சாரதா காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. நீரும் அருந்தவில்லை. கோவில் ஐயர் பிரசாதம் அடங்கிய தட்டொன்றை எடுத்துவந்து அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, அம்மனை ஊன்றிக் கவனித்தாள். அகோரப்பசியில் இருந்த நாய், சாரதாவையும் பிரசாதத்தட்டையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தது.

நான் பிறந்தது முதற்கொண்டு உன்னையே தரிசனம் செய்கின்றேன். எனக்கொரு நீதியைச் சொல். அம்மனைக் கேட்கின்றாள்.

அவள் மனம் மெல்ல அவளைவிட்டு அகல்கின்றது. குழந்தையாய், சிறுமியாய் அம்மன் கோவில் பிரகாரம் மணலில் அவள் கால் பதிகின்றது.

அம்பாள் கோவிலில் பங்குனி மாதத்தில் பதினைந்துநாட்கள் திருவிழா வரும். திருவிழா வருவதற்கு முன்னரும், பின்பும் ஊரில் அதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருப்பார்கள். தேர், தீர்த்தம், சப்பரத்திருவிழா, பூங்காவனம் என எல்லா நாட்களிலும் சனம் நிரம்பி வழியும். கோவிலின் மூன்று பக்கங்களும் மதில் சூழ இருந்தது. மதிலுக்கு உட்புறமாக எங்குமே வெண்மணல் பரவியிருந்தது. பதினைந்து நாட்களும் பள்ளிச் சிறார்கள் பெரும்பாலும் பாடசாலைக்கு மட்டம் போட்டுவிடுவார்கள். சின்னஞ்சிறுவர்களாக சாரதாவும் சந்திரமோகனும் கை கோர்த்து, மணலிற்குள் கால்கள் புதையப் புதைய ஊர்வலம் வருவார்கள். எத்தனை கடைகள் – விதம் விதமான பொருட்கள் – தோடு, ஸ்ரிக்கர் பொட்டு, காப்பு, கொலுசு, விளையாட்டுச் சாமான்கள். அம்மம்மாக்குழல், காற்றாடி, கடலை சோளன் விற்பவர்கள், தும்புமிட்டாய்காரர்கள் என பலரை இருவரும் சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் தானே இவர்களின் உறவுக்குச் சாட்சி.

இரவு வேளைகளில் மெல்லிய குளிர்காற்று எங்குமே பரவியிருக்கும். மண்டபத்துக்குள் இருந்து கதாப்பிரசங்கள் கேட்பது, தேவாரம் பாடுவது முதற்கொண்டு இருவரும் ஒன்றாகத்தானே பயணித்தோம். எத்தனை நாயன்மார்களின் வரலாற்றைக் கேட்டிருப்போம். சாரதாவின் மனம் அல்லாடுகின்றது.

திருவெம்பாவை நாட்களில் அதிகாலை விழித்தெழுந்து, நீராடி நீறணிந்து பொட்டிட்டு, ஊர்வலமாக தேவாரங்கள் பாடிக்கொண்டு ஊருக்குள் வலம் வரும் நாட்கள்.

அப்புறம் வளர்ந்தபின்னர் கூட, தேர் முட்டியடியில் எத்தனை நாட்கள் சந்தித்திருந்தோம். வருடத்தில் ஒருமுறை உருளும் தேர் தகரக்கொட்டகைக்குள் அசைவின்றி நிற்கும் நாட்களில் அவர்களுக்கு அதுவே மறைவிடம். சந்திரமோகன் வேட்டியில் ஜொலிக்கும்போது, பாவாடை தாவணியில் மிதப்பாள் சாரதா. மேகத்தில் சித்து விளையாட்டுக் காட்டும் முகில் போல், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சித்து விளையாட்டுக் காட்டினார்கள்.

சின்ன வயதில் மச்சாள் சாரதாவைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான் சந்திரமோகன். இமைப்பொழுதும் அவளை விட்டு விலகாமல் ஒட்டியபடியே இருப்பான். உலக ஞானம் புரிபட, இரண்டு கால்களிலும் நிற்க வேண்டுமென்று மச்சாளை புறந்தள்ளிவிட்டு இன்னொருத்தியைக் கலியாணம் செய்து போய்விட்டானே!

எங்குமே இருள் கவிந்துவிட்டது. சாரதாவிற்கு ஜொலிப்பாகவிருந்த அம்மன் விக்கிரகத்தைத் தவிர வேறு ஒன்றுமே தெரியவில்லை. ஐயர் இரவுப் பூசைக்கான ஆயத்தங்களில் மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரையும் தவிர, சாரதாவின் நாயும் அங்கே இருந்தது. அதுவும் அவளைப் போல் பிடிவாதம் கொண்டு, இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

இரவுப்பூசை எல்லாம் முடிந்து நேரம் ஒன்பதைத் தாண்டிவிட்டது. சுந்தரம், சாரதாவுடன் படித்த வாட்டசாட்டமான நான்கு சிநேகிதிகளைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.

“சாரதா…. வா வீட்டுக்குப் போகலாம்” என்றார் சுந்தரம். அவள் அவர்கள் எல்லாரையும் முழுசிப் பார்த்தாள். உரு வந்த கோலம். ஒருவரின் வார்த்தைகளுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை. அம்மனுடன் இரண்டற ஐக்கியமாகிவிட்டாள். ஐயர் கோவிலைப் பூட்டுவதற்கான நேரம் வந்ததும் சுந்தரத்தை நிமிர்ந்து பார்த்தார். சுந்தரம் அந்தப் பார்வையை உள்வாங்கி சாரதாவின் சிநேகிதிகளின் மீது விட்டெறிந்தார்.

கோவில் குருஷேத்திரமாகியது. ஒரே இழுபறி. முடியாதுபோக சுந்தரம் அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். அந்த அடியின் அகோரத்தில் சாரதா அடங்க, சாமி மலையேறியது. சிநேகிதிகள் நால்வரும் சாரதாவை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள்.

எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த நாய் வீறுகொண்டு, அந்த நான்கு சிநேகிதிகளையும் சுந்தரத்தையும் துரத்திப் பின்னிப் பெடல் எடுத்தது. உடுப்புகள் எல்லாம் கிழிஞ்சு தொங்க, அம்மணமாகிப் போன நான்கு பெண்களும், சாரதாவை மணலிற்குள் தொப்பென்று போட்டுவிட்டு தலைகரணமடித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஐயர், நாய்க்கடிக்கு பயந்தாரோ அல்லது சாரதா திரும்பவும் வந்து அம்மனை முழுசிக்கொண்டிருந்தால் தான் எப்ப வீடு போய் சேருகிறது என நினைத்தாரோ… ஓடிச்சென்று, கர்ப்ப கிரகத்துக்குள் புகுந்து, கதவை உள்புறமாகத் தாழிட்டுக் கொண்டார்.

“பகலா இருந்தா நாறிப்போய் இருப்போமடி…” என்று ஓடிக்கொண்டிருந்த பெண் ஒருத்தி சொல்ல, “உவளுக்கு மாப்பிள்ளைக்கு இனி நான் எங்கே போவேன்” என உரப்பாக ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் சுந்தரம் விழுந்து கிடந்தார். அவருக்கு ஏகப்பட்ட இடங்களில் கடி. நாயோடு சாரதாவும் சேர்ந்து கடித்திருந்தாள். சாரதாவைத் தூக்க வந்த சிநேகிதிகள் இப்பொழுது சுந்தரத்தைத் தூக்கிக்கொண்டு இருளிற்குள் ஓடி மறைந்தார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *