ஏன் சிரித்தார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 4,227 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர் ஏன் சிரித்தார்? அந்த நகை அறிமுகத்தினால் சாதாரண மாய் முகத்தில் பூக்கும் புன்னகை அல்ல அப்படி இருந்தால் அதைப்பற்றி யார்தாம் கவனிக்க போகிறார்கள். ஒருவேளை…..? மனத்தில் ஏதேனும் வைத்துக் கொண்டு…? சிச்சீ அப்படியிருக்காது. அப்படி நினைத்தாலே பாவம். என் நெஞ்சுதான் பாழாய்ப் போன நெஞ்சு. ஆனால், அந்தக் கண்கள்… அவைகளுமா பொய் சொல்லும்? கண்களின் கடையிலே ஒளிந்து நின்று குறும்பு செய்த பார்வை?

சின்னம்மா தோட்டத்திலே கீரைகொய்து தன் முந்தானையில் போட்டுக் கொண்டிருந்தாள். கோபாலபிள்ளை வரப்பு வழியே தன் பயிர் ளைப் பார்த்த வண்ணம் வந்தார். அப்பொழுது தான் சின்னம்மா தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவர் சிரித்தார்.

சிரித்தது இதுதான் முதல் தடவை. இன்னும் வெவ்வேறு தரு ணங்களில் கோபாலபிள்ளை அவளை மேலும் பார்த்துச் சிரித்தார். சின்னம்மாவுக்கு இது ஒரு புரியாதபுதிர் போல இருந்தது.

தோட்டக்கிணற்று நீர் போல தெளிவாக இருந்த அவள் உள்ளத்திலே சிற்றலைகள் தோன்றத் தொடங்கின. அவர் ஏன் சிரித்தார்?

தோட்டத்திலிருந்து சின்னம்மாவின் குடிசையைப் பார்க்கலாம். கூப்பிடு தூரத்திலிருந்த பனந்தோப்பை வாரி அணைத்துக் கொண்டு செல்கிறது. ஒரு வெள்ள வாய்க்கால். அதைக் கடக்க வேண்டியதுதான். அந்தப் பனந்தோப்பில் கீழே வீழ்ந்து கிடக்கும் காவோலைகளுடன் ஒரு காவோலை போல் கீழே வீழ்ந்து கிடக்கிறது அவள் குடிசை. அவ்வளவு சிறிய எளிய குடிசை அது. அதில் தான் சின்னம்மா தன் புருஷன் சின்னப்பனுடன் குடித்தனம் செய்து வருகிறாள்.

கோபாலபிள்ளைக்கு நல்ல நிலபுலங்கள் இருந்தன. அவருடைய நிலங்களில் ஒன் றைக் குத்தகை எடுத்துச் சின்னப்பன் பயிர் செய்து வந்தான். சின்னம்மா கீரை, காய்கறி வகை களை வீட்டுக்கு வீடு கொண்டுபோய் விற்று வருவாள். வரும்படியை பற்றிக் கேட்க வேண்டாம் – சின்னம்மாவின் கந்தல் புடவையும், சின்னப்பனின் உருக்குலைந்த தேகமுமே பதில் சொல்லும்.

ஏழைமையில் கிடந்து உழல்பவர்கள் செய்யும் ஒரு தொழிலும் உருப்படாது சீரழிந்து போய் விடுகிறது. இயற்கையின் சக்திகளும் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு, இருப்பதையும் சூறையாடிக்கொண்டு போய்விடுகின்றன. அவர்களின் மனக்குடம் நிறையாமல் வாழ்க்கை விரசமாகி வறண்டுபோய் விடுகிறது. இது உலக விசித்திரங்களுள் ஒன்று.

இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையிலே மலர்ச்சியும், பூரிப்பும் நிறைந்திருந்தன. சின் னம்மாவுக்கு அவள் ஏழைக கணவனும், சிறிய குடிசையும் பனந்தோப்புமே அரும் பெரு நிதியம். சின்னப்பனுக்குச் சின்னம்மாவே எல்லாம். அவர்களிடம் ஒன்றுமே இல்லாவிட்டா லும் எல்லாம் இருந்தது…..

இங்ஙனம் நீர் ஊற்றுப்போல தெளிவாய் ஓடிய அருவியிலே யாரோ ஒருவன் ஒரு கல்லை வீசி எறிந்துவிட்டான். குமுழிகளும், சிற்றலைகளும் எழுந்து கொண்டிருந்தன.

கோபாலபிள்ளைக்கு நாற்பது வயசாகியும் இன்னும் கல்யாணமாகவில்லை. வாழ்க் கைப் புயலுக்கும், சுழலுக்கும் அஞ்சி விவாகம் செய்யவில்லை என்று அவர் சினேகிதர்கள் கேலிபண்ணுவார்கள். அவர் அவைகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார், உண்மையில் அவர் வாழ்க்கையை மிகவும் நேசித்தார். திரைக்குப் பின்னால் இருந்து மதுவுண்ணும் அனுபவம் அவருக்கு நிறைய இருந்தது. சின்னம்மா அவர் வீட்டுக்கு அடிக்கடி காய்கறிச் சுமையோடு போவாள். அவருக்கு அவளைக் காணும் போது விதவித உணர்ச்சிகள் வேக மாய் சிறகடித்து வெளியில் வரத் துடித்துக்கொண்டிருக்கும்.

கோபால் தம்பலகாமத்தில் உள்ள தம்வயல்களை மேற்பார்வை பார்த்து வர ஓர் ஆளைத் தேடிக்கொண்டிருந்தார். சின்னப்பன் தான் அதற்குத் தகுந்தவன் என்று அவர் ஏன் நினைத்தார்?

சின்னப்பன் பயந்து போனான். சின்னம்மாவின் வாய் ஒரு கேள்விக் குறிபோல் திறந்து நின்றது. ஒரு நாளும் வாராத கோபாலபிள்ளை , அவர்கள் குடிசையின் முன்வந்து நின்றார்.

“சின்னப்பா, நீயும் இரவும் பகலும் மண்ணைக் கிண்டிக்கொண்டிருக்கிறாய். ஒன்றை யும் காணவில்லை. தம்பலகாமத்திலே என் வயல்களைப் பார்க்க ஒருவருமில்லை. வருகிற வர்களும் பொய் புரட்டுக்காரராய் இருக்கிறார்கள். நீ போய் சில மாசங்களுக்கு அங்கே நின் றால் நல்லது. என்ன சொல்லுகிறாய்?”

சின்னப்பனுக்கு ‘திக்’ என்றது. சின்னம்மாவைப் பார்த்தான். அவள் முகத்தைக் கவிழ் ந்து கொண்டு ஒரு சிதைந்த சித்திரம் போல் நின்றாள். கோபாலபிள்ளைக்கு விளங்கிவிட்டது.

“அவளைப் பற்றி யோசிக்க வேண்டாம் சின்னப்பா. நான் இருக்கிறேன். ஏதேனும் மாசாமாசம் கொடுத்து விடுகிறேன். அவளும் கெட்டிக்காரி. சமர்த்தாய் எல்லாம் பார்த்துக் கொள்வாள்”

கோபலபிள்ளை போய்விட்டார். இது அவரது கட்டளையா? இல்லை. சின்னப்பன் அப்படி நினைத்தான்.

ஊரிலே பெரிய பணக்காரர். அவர் வாக்கு எவ்விடத்திலும் செல்லும். குடியிருப்பது அவர் பனந்தோப்பில், தோட்டக் குத்தகைப் பணம் இரண்டு வருஷமாய் பாக்கி நிற்கிறது. அவரை எப்படிப் பகைப்பது?

சின்னப்பன் தம்பலகாமத்துக்கு புறப்படும் போது “சின்னம்மா நீதானடி எனக்கு சகல மும். உன் நினைவே எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் தாங்க முடியாத வேதனை தரும். நீ என்னை மறந்திடுவாயா?” என்று கேட்டான்.

இந்தக் கேள்வி அவன் வாயிலிருந்து தவறி வந்துவிட்டது. அதற்கு மறுமொழியை அவன் எதிர்பார்க்கவில்லை. போய்விட்டான். அத்தருணம் சின்னம்மாவினால் ஒன்றும் பேச முடியவில்லை . அவள் எலும்பும் தசையும் உருகித் தவித்தாள்.

பின்புதான் “பாவி, கேட்ட கேள்விக்கு அவர் மனம் குளிர பேசாமல் இருந்து விட்டேனே” என்று நினைத்து நினைத்து மனம் கரைந்து போனாள்.

கோபலபிள்ளையின் விருப்பப்படி சின்னம்மா தினமும் அவர் வீட்டுக்கு காய்கறி வகைகள், மற்றும் சாமான்கள் யாவும் வாங்கிக் கொண்டுபோய் கொடுத்து வந்தாள். சின் னம்மாவை ஒரு நாளேனும் காணாமல் இருக்க அவரால் முடியவில்லை. அதற்கு இதுதான் அவர் செய்த வழி.

அவர் அவளிடம் பணம் கொடுக்கும் போது சில வேளைகளில் அவர் கை, அவள் கைகளின் மீது பட்டுவிடும். கோபாலபிள்ளை சிலிர்த்துப் போவார். அவளுடன் ஒரு பரிகாசப் பேச்சு, ஒரு புன்னகை, ஒரு கண் சிமிட்டு, பிள்ளையின் மனம் பூரித்துப் புளகாங்கிதமடையும்.

சின்னம்மாவுக்கு எரிச்சலாயிருக்கும். அவர் மேலும் பேச வேண்டும் போலவும் தோன்றும்.

“மூன்று மாதமாய்ப் போச்சு. போனவர் ஒரு கடிதமாவது போட்டிருக்கலாம். காட்டூரிலே காய்ச்சலோ, என்ன கஷ்டமோ – பெருமூச்செறிவாள்.

சின்னப்பன் எழுதிய கடிதமெல்லாம், சாம்பலாகியதை, பாவம் சின்னம்மா எப்படி அறிவாள்?

தன் கணவன் கடிதம் போடவில்லையென்று சின்னம்மா பேசாமல் இருந்து விட வில்லை. யாரோ ஒருவரைக் கொண்டு இரண்டு, மூன்று கடிதங்கள் எழுதி கோலபாபிள்ளை யிடம் அவருடைய கடிதத்துடன் வைத்து அனுப்பும்படி கொடுத்திருந்தாள். ஆனால் அவர் அனுப்புவாரா?

“போனாரோ, அவளும் தனிச்சிருக்கிறாள். பெண்பிள்ளை, உற்றாரோ உறவினரோ, ஏதோ அள்ளிக்கொடுக்க வேண்டாம். எப்படி இருக்கிறாள் என்றொரு கடுதாசி போடலா மல்லவா? பிள்ளையவர்கள் இருக்கிறாரே, யாரோ பிறத்தியான். அவருக்கு என்ன கரிசனம். எவ்வளவு அன்பு? அதில் ஒரு பாதி இவருக்கு ….. இப்படிச் சின்னம்மாவின் மனம் அங்கும் இங்குமாய் ஊசலாடிக் கொண்டிருந்தது.”

சின்னப்பன் போய் ஒரு வருஷமாகப் போகிறது. அவனைப் பற்றிய தகவல் இவளுக்கு ஒன்றும் தெரியாது. தனிமையின் வெம்மை அவளைத் தாக்கியது. அவளால் எத்தனை நாட்களுக்கு இந்த ஏகாந்த வாழ்வின் கொடுமையைத் தாங்க முடியும்?

ஒரு நாள் கோபாலபிள்ளை அவளை அணுகி, சின்னம்மா நானும் இங்கே தனிமையில் கஷ்டப்படுகிறேன். நீயும் அங்கே உன் குடிசையில் தனிய எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறாய். என் வீட்டுக்காரியங்களுக்கும் துணையாய் இருக்கும். இங்கே வந்து விடேன்” என்று சாடையாய்க் கேட்டார்.

சின்னம்மா திடுக்கிடவில்லை. அவள் இதை எதிர்பார்த்திருந்தாள். ஒன்றும் பேசாமல் தன் குடிசைக்குப் போய்விட்டாள்.

தம்பலகாமத்துக்குப் போன சின்னப்பனுக்கு பெருந்திகிலைத் கொடுத்தது. சின்னம்மா வின் மௌனம். கோபாலபிள்ளை அவனுக்கு எழுதிய கடிதங்களும் அவனுக்கு சமாதானம் கொடுக்கவில்லை.

“நான் எழுதிய கடிதங்களுக்கு அவள் ஏன் மறுமொழி தரவில்லை . அவளைப் போய்க் காணலாமென்றால் கோபலபிள்ளை இன்னும் சிலமாதங் கழித்து வரலாம். அவள் நல்ல சுகமாய் இருக்கிறாள் என்று ஏன் தடுக்கிறார்? அவர் கட்டளையை எப்படி மீறுவது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னும் ஒரு வாரம் பொறுத்துப் பார்ப்பம் என்று மனசைத் தேற்றிச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

‘ஒரு நாளைக்கா, இரண்டு நாளைக்கா? எத்தனை நாட்களுக்கு நான் தனிமையில் திண்டாடுகிறது. வருஷமும் ஒன்றாய்விட்டது. அவரைப் பற்றிய தகவல் ஒன்றுமே இல்லை. ஐயோ, அவர் எங்கே? கோபாலபிள்ளை தன் வீட்டில் வந்து இருக்கும்படி கேட்கிறார். அவரு டன் நான் போய் இருந்தால் செல்வாக்கும், பவுசும். ஆனால் ஊர் சிரிக்குமே? ஓ. என வறுமைப்பிணி?

அந்த நள்ளிரவிலே சின்னம்மா தோட்ட வெளி ஊடாகப் போகும் பொழுது இந்த எண் ணங்களே அவள் மனத்தைக் கலைத்துக்கொண்டிருந்தன. அவள் கோபாலபிள்ளையின் வீட்டை நோக்கிப் போகிறாள். அவருடன் இருக்க எண்ணித்தான் வெளிக்கிளம்பினாள்.

அவள் போகும் வழியிலே தங்கள் தோட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். தோட் டத்திலே முன்னர் சின்னப்பன் வழக்கமாய்க் கஞ்சி குடிக்கும் இடத்தைத் தாண்டிக் கொண் டிருந்தாள். அத்தருணம் மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. சின்னம்மாவுக்கு அவள் கணவன் அங்கே நிற்பது போல தோன்றியது. அவள் உடல் நடுக்கமெடுத்தது. தான் ஏதோ மகாபாவத்தைச் செய்வதாயும், உலகம் முழுவதுமே தன்னைத் தூற்றிக் கேலி செய்வதாயும் உணரலானாள். இந்த உணர்ச்சி கனவு போல மறையவே, திரும்பவும் கோபாலபிள்ளை யின் தோற்றப் பொலிவு, பணம், சீர் சிறப்பு, புது வாழ்க்கை எல்லாம் கண் முன் வந்தன.

தைரியங் கொண்டு மேலும் நடந்தாள்.

ஒரு கணம் அவள் மனச்சாட்சி அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கும். துரோகமா, என்புருஷருக்கா, அவர் திரும்பி வருவாரா? சீ மானங்கெட்டவளே, அவர் முகத் தில் முழிக்கமுடியுமா? பிறகு உயிர் வாழ்ந்து தான் என்ன?’ மறுகணம், உலகம் என்ன சொன்னால் நமக்கென்ன, பயப்படவேண்டுமா, ஏன், சிலநாட்கள் வாயில் வந்தபடி பேசு வார்கள். நாளைக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும். இதுதான் உலகம். இங்ஙனம் ஓர் அலைவர, எதிரே வேறோர் அலை வந்து அதையும் அடித்துக்கொண்டு போய்விடும்.

சின்னம்மா கோபாலபிள்ளையின் வீட்டை அடைந்த போது, தூரத்திலே ஒரு நாய் குரைப்பது கேட்டது. மெல்ல ஓசைப்படாமல் படலையைத் திறந்ததும், படலை ‘கிரீச் என்றது. சின்னம்மாவின் உடல் நடுக்கமெடுத்தது. யாரேனும் கண்டுவிட்டால்….? இல்லை , யாரோ கூவி அழைப்பது போல இருந்தது. என்னை மறந்திடுவாயா?” என்று அவள் புருஷன் கேட்பது போல் உணர்ந்தாள்

சின்னம்மா அந்தக் கேள்விக்கு மறுமொழி கொடுக்கவில்லையே என்று முன்னொரு நாள் மறுகினாளல்லவா? அதே கேள்வி.

“இல்லை. என் உயிருள்ளவரையும் உன்னை மறக்க மாட்டேன், என் துரையே” என்று வாய் முணுமுணுத்தது.

இதுகாறும் கொந்தளித்துக் கொண்டிருந்த சின்னம்மாவின் உள்ளத்தில் இப்போ அலைப்பாய்ச்சல் இல்லை. மனம் தெளிந்து அமைதி பெற்றுவிட்டது.

கோபாலபிள்ளையிடம் நேரே போனாள். “எசமான் நான் என் புருஷனுக்குத் துரோகஞ் செய்யமாட்டேன். அவர் என்னைத் தொட்டு தாலி கட்டியவர். தெய்வத்துக்கு சமானம், என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தன் குடிசையை நோக்கி ஓடினாள்.

கோபாலபிள்ளை ஒன்றும் தோன்றாமல் திகைத்து நின்றார்.

சின்னம்மா தன் குடிசையை அடைந்து கீழே வீழ்ந்து புரண்டு கதறினாள்.

பொழது புலர்ந்தது. புஷ்பங்கள் குலுங்கின. “என்தாயே, பாவப்பட்டு குழியில் விழாமல் என்னைக் காப்பாற்றினாய். என் கணவரை நான் மறக்க மாட்டேன். அவர் சீக்கிரம் திரும்பி வர அருள் புரிவாய், அம்மா” என்று நிலத்தில் வீழ்ந்து வணங்கினாள் சின்னம்மா.

– கலைமகள் 1939, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *